Advertisement

     ஹர்ஷா வசுந்தராவை திரும்பியும் பார்க்காது மேலே அவன் அறைக்கு செல்வதை வலியோடு பார்த்திருந்தாள் வசுந்தரா.
     தன் பிள்ளை தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்வானா என அந்த தாயுள்ளம் தவித்து தான் போனது.
     ஹர்ஷா அவன் அறைக்கு சென்று கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து அனு கீழே வந்தாள். எல்லோரும் அவள் மேலே போகும் போது எந்த நிலையில் இருந்தார்களோ அப்படியே இப்போதும் இருந்தனர்.
     “என்னாச்சு அண்ணி” என்று அனுவிடம் அபிமன்யு கேட்க “அவர் தூங்கிட்டு இருக்கார் அபி” என்க, அபி ‘அதுக்குள்ள அண்ணா தூங்கிட்டாரா. அதுக்கு வாய்ப்பே இல்லையே’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டான்.
     ஆனால் அனு அறியாதது, அவள் அங்கே இருக்கும் நேரம் கண்ணை மூடி படுத்திருந்த ஹர்ஷாவை தூங்குவதாக தவறாக எண்ணியே அவள் கீழே வந்தது.
     இவ்வளவு கலவரங்கள் நடந்த பின் எப்படி அவனுக்கு தூக்கம் வந்தது என அனுவும் யோசிக்கவில்லை.
     இங்கு நடந்த சம்பவத்தில் யாருக்கு என்ன புரிந்ததோ அனுவிற்கு தன் தந்தை தங்களிடம் ஏன் அவ்வளவு கடுமையாக நடந்துக் கொண்டார் என்று புரிந்தது.
     எங்கே தாங்களும் வாழ்வில் வழித் தவறி போய் விடுவோமோ என்றே அவர் எண்ணி இப்படி நடந்திருக்கிறார் என மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அனு.
     “நாங்க கிளம்பறோம் சம்மந்தி. இப்போ பேச யாருக்கும் மனசுல திடம் இல்ல. அதோட இப்போதைக்கு இதை பத்தி பேசறதும் சரியா இருக்காது. இதுக்கு மேலையும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்தா அது தர்மசங்கடத்தை தான் தரும். அதுனால நாங்க போய்ட்டு வரோம்ங்க”
     விஸ்வநாதன் பொதுவாக அனைவரையும் பார்த்து கூறியவர் “வா வசும்மா. நாம வீட்டுக்கு போகலாம்” என வசுந்தராவையும் எழுப்பினார்.
     வசுந்தராவிற்கும் அதற்கு மேல் அங்கிருக்க மனம் வரவில்லை. சரி என அவரும் தன் அண்ணன் அண்ணியோடு கிளம்பி விட்டார்.
     விஸ்வநாதன் வசுவை தனியே விடாமல் தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அவரை அதற்கு மேல் தனியே விட விஸ்வநாதனும் தயாராக இல்லை.
     இவர்கள் அனைவரும் கிளம்பியதும் “பசங்கலா ஏன் இப்படியே உக்காந்து இருக்கீங்க. போங்க போய் கொஞ்ச நேரம் எல்லாரும் ரெஸ்ட் எடுங்க” என்று அருணாசலம் சொல்லியவர் தளர்ந்து போய் அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
     அவர் கூறியதை கேட்டு மற்றவர்களும் தங்களின் அறைகளில் தஞ்சம் அடைந்தனர்.
     பார்வதியின் அறையில் அவர் வேதாசலத்தின் அணைப்பில் அழுதுக் கொண்டிருந்தார் என்றால், ராஜசேகரின் அறையிலே அவர் மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்கிய அவர் இன்று தான் சற்று நிம்மதியாக இருந்தார்.
     அருணாசலம் தளர்ந்து போய் துவண்டிருந்தாலும் அவர் மகன் ராஜாராமின் புகைப்படத்தை அவர் கைகள் வருடியடி இருந்தது.
     அவர் மனமோ ‘இந்த அப்பாவ விட்டுட்டு போறோம்னு உன் பிள்ளைய என்கிட்ட அனுப்பிட்டு போனியா ராஜா’ என்று தன் போக்கில் எண்ணி நின்றது.
     விக்ரம் அபிமன்யு அனு மற்றும் அம்மு நால்வரும் மாடியில் இருந்த ஹாலில் ஒன்றாக அமர்ந்து கொண்டு அவரவர் நினைவில் உழன்றனர்.
     அனு கூட ஹர்ஷாவை தொந்தரவு செய்யாமல் இவர்களுடன் இருக்க ஹர்ஷா அவன் அறையில் படுத்திருந்தவன், அனு கூறிய வார்த்தைகளை மீண்டும் மனதிற்குள் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
     ‘இங்கு நடந்த கெட்டதிலும் நம் வாழ்க்கையில் உண்மையான சொந்தங்களே கிடைத்திருக்கிறது. நாமும் வருந்தி ஏன் அவர்களையும் வருத்த வேண்டும்’ என்று தான் எண்ணி கொண்டிருந்தான்.
     அதோடு அவன் மனதில் தோன்றிய ‘தான் முறை தவறி பிறந்தவனோ?’ என்ற பயம் அவனை விட்டு மொத்தமாக நீங்கியது. வாழ்வில் ஒழுக்கம் என்பதை உயிரென எண்ணும் ஹர்ஷாவிற்கு,
     அவன் தாய் தந்தை முறையாக திருமணம் செய்த பின்னரே அவன் பிறந்தான் என்ற செய்தி எவ்வளவு மன நிம்மதியை தந்தது என்று அவன் மட்டுமே அறிவான்.
     அதன்பின் ஒவ்வொரு நாட்களும் அமைதியாக தான் கழிந்தது. கணபதி ராமின் கேஸ் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க ஓரளவு சகஜ நிலைக்கு அருணாசலம் இல்லம் திரும்ப துவக்கியது.
     அன்று அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த நேரம் ஹர்ஷா பேச்சை ஆரம்பித்தான்.
     “அத்த மாமா நம்ம விக்ரம் கல்யாணத்தை சீக்கிரமே நடத்தலாம்னு தோணுது‌. நீங்க என்ன சொல்றீங்க”
     ஹர்ஷா கேட்டதும் விக்ரம் “என்ன ஹர்ஷா நாம இருக்க மனநிலைல இப்போ இது எல்லாம் தேவையா மச்சான்” என்றான்.
     விக்ரம் பேசியதும் அவனை மறுத்து பேசிய ராஜசேகர் “ஹர்ஷா சொல்றது சரிதான் விக்ரம். இப்போ நாம இருக்க நிலைல இந்த பங்சன் நடந்தா எல்லாருக்கும் கொஞ்சம் ரிலீப்பா இருக்கும்” என்றார்.
     மற்றவர்களும் அதை ஆதரிக்க “விக்ரம் இந்த சன்டே சங்கவி வீட்டுக்கு போய் பேசிட்டு வரலாம். நீ சங்கவிட்ட இன்பார்ம் பண்ணிடு” என்று ஹர்ஷா கூறியவுடன்
     “ஹேஏஏஏ…! விக்ரம் அத்தான் சூப்பர் உனக்கு கல்யாணமா செம. நல்லா ஜமாய்ச்சிடலாம்” என்று ஆர்ப்பரித்தான் அபிமன்யு.
     அவன் குதூகலத்தில் மொத்த குடும்பமும் மகிழ்ந்தது. அந்த வீட்டில் காணாமல் போன சிரிப்பு சத்தம் மெல்ல எட்டிப் பார்த்தது. அதற்காக தான் ஹர்ஷாவும் இந்த பேச்சை எடுத்ததும்.
     ஹர்ஷா கூறியதை போலவே அந்த வாரம் சங்கவியின் வீட்டிற்கு சென்று திருமணத்தை பேசினர். திடீரென சங்கவியை பெண் பார்க்க அதுவும் அவள் முதலாளி குடும்பம் வரவே ஒன்றும் ஓடவில்லை அவளின் பெற்றோருக்கு.
     அவர்களின் பதற்றத்தை குறைத்தது பார்வதியின் பேச்சு. விக்ரம் அவர்கள் மகளை விரும்பவதாக கூறி பெண் கேட்க முழுமனதுடன் சம்மதித்தனர்.
     அதன்பின் என்ன விக்ரமின் கல்யாண வேலைகள் ஜரூராக துவங்கியது. அதோடு சேர்த்து அபியின் கிண்டல்களும் அதிகரித்தது.
     ஹர்ஷாவின் தாய் தந்தை யார் என்று தெரிந்த பின்னரும் அந்த வீட்டில் எதுவும் மாறவில்லை. அந்த செய்தி அதிர்ச்சி தான். ஆனால் அது அவர்களுக்கு ஹர்ஷா மீதிருந்த பாசத்தையோ அபிமானத்தையோ எள்ளளவும் மாற்றவில்லை.
     “விக்ரம் அத்தான் கிளம்பு கிளம்பு வெளிய போகலாம்” போனில் சங்கவியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்த விக்ரமின் காதில் கத்தினான் அபி.
     அதில் காதை தேய்த்துக் கொண்ட விக்ரம் அபியை பார்த்து முறைத்து விட்டு “ஏன்டா ஒரு கர்ட்டசிக்காகவாவது கதவை தட்டிட்டு வர மாட்டியாடா” என கடுப்பாக கேட்டு வைக்க
     “ஏன் உனக்கு என்ன அதுக்குள்ள கல்யாணமா ஆகிருச்சு. இப்ப தானே நிச்சயம் பண்ணிருக்காங்க. உன் கல்யாணம் முடிஞ்சு கவி சிஸ்டா நம்ம வீட்டுக்கு வரட்டும் அப்புறம் நாங்க டீசென்டா இருந்துக்குறோம்.
     இப்பலாம் அது முடியாது மகனே. சரி அதை அப்புறம் பேசிக்கலாம். இப்ப நீ கிளம்பு நாம வெளிய போறோம்” என்று நக்கலாக பதில் அளித்தான் அபிமன்யு.
     ஆம் ஒரு வாரத்திற்கு முன்பே நம் விக்ரமிற்கும் சங்கவிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது.
     அந்த பக்கம் அழைப்பில் இருந்த கவியோ வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து “விக்ரம் நீங்க அபி அண்ணா கூட போய்ட்டு வாங்க. நாம நைட் பேசிக்கலாம்” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.
     “ஏய் ஏய் கவி வச்சிராதடி” என விக்ரம் கத்த கத்த வைத்து விட்டாள் சங்கவி.
     அதில் கடுப்பான விக்ரம் அபியை முறைத்து “ஏன்டா ஏன் இப்படி என் உயிரை வாங்குற. மனுசன நிம்மதியா  ஒரு போன் பேச விடுற” என கத்தினான்.
     விக்ரம் கத்தியதில் காதை குடைந்து கொண்ட அபி “சும்மா கத்தாத உன் மேரேஜ்கு நீ கொஞ்சமாவது பளிச்சுன்னு தெரிய வேண்டாமா. அதுவும் கவி சிஸ்டா இருக்க அழகுக்கு அவ பக்கத்துல நிக்கிற அளவாவது நீ இருக்க வேண்டாம்.
     அதான் உன்னை ஸ்பாக்கு கூட்டிட்டு போய் பட்டி டிங்கரிங் பாக்கலாம்னு வந்தேன். நீ ரொம்ப தான் சலிச்சுக்கிற. வேண்டாம்னா போ” என கொஞ்சம் பிகு செய்தான்.
     “என்ன ஸ்பாக்கா. அய்யோ அபி செல்லக்குட்டி உன் நல்ல மனச புரிஞ்சுக்காம நான் தான்டா தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுடா. வா வா நாம உடனே கிளம்பலாம்”
     விக்ரம் அந்தர் பல்டி அடித்து அபியை தாஜா செய்து, அவனை கிளப்பிக் கொண்டு சென்றான்.
     விக்ரம் திருமண பேச்சு ஆரம்பித்தது முதல் இப்படி தான் அருணாசலம் இல்லமே மகிழ்ச்சியுடன் இருக்கிறது.
     “ஹர்ஷா அந்த மண்டப விஷயம் என்னாச்சு கண்ணா. ஓகே பண்ணிட்டியா”
     “ம்ம் ஓகே பண்ணிட்டேன் மாமா. நாம சொன்ன டேட் அவெய்லபிலா தான் இருந்தது. சோ நோ பிராப்ளம்”
     வேதாசலம் கேட்டதற்கு பதில் அளித்தவாறே பெயர் எழுதிய பத்திரிகைகளை ஹர்ஷா அடிக்கிக் கொண்டிருந்த நேரம்
     “கண்ணா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா” என்று தயங்கியபடி பேச வந்தார் பார்வதி. “சொல்லுங்க அத்த” என்றவுடன்
     “அது ஹர்ஷா கண்ணா…” என பேச தயங்கியே நின்றார் பார்வதி.
     அவர் திணறலில் அதுவரை குனிந்திருந்த ஹர்ஷா நிமிர்ந்து “என்ன அத்த எதுக்கு இப்படி தயங்கிட்டு இருக்கீங்க. சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க” என்று ஊக்கினான்.
     “அது வந்து ஹர்ஷா” என்று மீண்டும் இழுத்த பார்வதி கண்ணை மூடிக் கொண்டு தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.
     “உன் அம்மாகிட்ட நீ பேசு ஹர்ஷா குட்டி. அவங்க பாவம் கண்ணா. என் அண்ணன் இறந்து நீ இல்லைன்னு ஆகி‌. ப்ச் அது அவங்களுக்கு எவ்ளோ வேதனை கண்ணா.
     அதுவும் அவங்க ஹஸ்பண்ட் கணபதி செஞ்ச துரோகம்னு அவங்க ரொம்ப பட்டுட்டாங்க. அவங்களுக்கு நீ பேசுறது ரொம்பவே மனசுக்கு ஆறுதலா இருக்கும்டா கண்ணா.
     சுபத்ரா அண்ணி கண்டிப்பா உன் அம்மா தான் கண்ணா. அதை யாரும் இங்க மறுக்க போறது இல்ல. அதே சமயம் உன்ன பெத்த வசுந்தராவையும் நீ பாக்கனும்பா.
     நம்மலாள ஒருத்தர் வாழ்க்கைல நிம்மதியா இருக்காங்கன்றது தானே நமக்கு பெருமை. அவங்கல நீ அம்மானு கூப்பிட்டு நாலு வார்த்தை பேசிட்டு வந்தா அவங்க மனசு நெறஞ்சு போகும்பா.
     என் ஹர்ஷா குட்டியால யாரும் கஷ்டபட்டதா இருக்க கூடாதுடா”
     பார்வதி பேசி முடிக்கும் நேரம் அவ்வளவு அமைதி நிலவியது அந்த இடத்தில். இதையெல்லாம் அங்கு அமர்ந்திருந்த அனைவரும் கேட்டபடி தான் இருந்தனர்.
     “பார்வதி சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு கண்ணா. அந்த பொண்ணு வாழ்க்கைல ரொம்ப அடிபட்டுருச்சுடா. நாமலும் அந்த பொண்ணு மனசை காயப்படுத்த வேண்டாம் கண்ணா‌. நீ போய் பேசுப்பா”
     இதை கூறியது அருணாசலமே. தன் பேரனை யாருக்கும் விட்டு தராதவர் அவனை அவன் தாயோடு சேர வற்புறுத்தி சொன்னார்.
     ராஜசேகரும் தற்போது அவருக்கு பரிந்து பேசினார். இதுநாள் வரை தன்னை பற்றி மட்டுமே யோசித்த ராஜசேகரின் மனதை வசுந்தராவின் வாழ்க்கையின் சோகம் மாற்றியிருந்தது.
     ஹர்ஷாவிற்கு திடீரென அனைவரும் வசுந்தராவின் சார்பில் பேசியது மனதை குழப்பியது. அதே நேரம் வசுந்தராவிடம் பேசலாமா வேண்டாமா என்ற எண்ணம் முதன்முதலில் தோன்றியது.
     ஆனால் யாருக்கும் பதில் தராது ஹர்ஷா எழுந்து தன்னறைக்கு சென்றான். அவனுக்கு யோசிக்க சற்று தனிமை தேவைப்பட்டிருந்தது.
-மீண்டும் வருவான்

Advertisement