Advertisement

     “ஹர்ஷா நடந்ததை யாராலும் மாத்த முடியாது. அதனால எல்லாரும் மனசை தேத்திக்கோங்க. இதை தவிர என்ன சொல்றதுனும் எனக்கு தெரியலை. நான் வரேன்” என்றான் கதிர்.
     அவனுக்கு நிஜமாகவே அதை தவிர வேறு என்ன கூற வேண்டும் என்று தோன்றவில்லை. கணபதியை அழைத்து சென்றதும் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கதிரும் கிளம்பிவிட்டான்.
     விஸ்வநாதன் தன் தங்கை வாழ்வில் கணபதி எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறான் என கோபத்தில் இருந்தாலும், தன் தங்கை மகனே தன்னுடைய மாப்பிள்ளையாக வந்ததில் சற்று மனம் மகிழ்ந்தார் என்றே சொல்லலாம்.
     அருணாசலத்தின் வீட்டினரில் சிறியவர்கள் ஹர்ஷாவை எண்ணி கவலையில் இருக்க, பெரியவர்கள் ராஜாராமை எண்ணி வருத்தத்தில் இருந்தனர்.
     அதில் வசுந்தராவின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவரால் ஹார்ஷாவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை எனலாம்.
     இத்தனை வருடங்கள் தன்னால் தன் மகன் உயிரோடு இருந்தும் அவனோடு இருக்க முடியவில்லையே என மனதிற்குள் புழுங்கி கொண்டிருந்தார்‌.
     ஒருவேளை குழந்தை உயிருடன் உள்ளது என அப்போது ஹர்ஷாவை அவர் கையில் தந்திருந்தால் ராமின் நினைவோடு அவருடன் வாழ்ந்த அந்த வீட்டிலேயே தன் காலத்தை கழித்திருப்பார் வசுந்தரா.
     அவரின் எண்ணமும் அப்போது அதுவாக தான்‌ இருந்தது. ஆனால் குழந்தை இறந்து விட்டது என்றதில் மொத்தமாக நொறுங்கி போயிருந்தார்.
     எனவே தான் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் தன் தமையனின் மகிழ்விற்காக அந்த திருமணத்தை செய்ய சம்மதித்திருந்தார்.
     ஆனால் அதில் கணபதி இப்படி திட்டம் போட்டு காய் நகர்த்தி இருப்பார் என கிஞ்சிற்றும் எண்ணாது போனார்.
    கணபதியுடன் ஒரு வருடம் இரண்டு வருடம் வாழ்கையை வாழவில்லையே வசுந்தரா. நீண்ட இருபத்தி ஆறு ஆண்டுகள் பிடிக்காமல் வாழ்க்கையை துவங்கி இருந்தாலும்
     சில வருடங்களில் கணபதியின் நடவடிக்கையில் தானும் உடன்பட்டே இந்த வாழ்வை வாழ்ந்த வசுந்தராவிற்கு தற்போது நடந்த நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள மனம் முரண்டியது.
     ஹர்ஷாவிற்கோ தன் மனம் எதை நினைத்து வருத்தம் கொள்கிறது என்று அறிய முடியாத நிலை.
     பெற்ற தாய் தந்தையின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்க, சட்டென்று அவனால் வசுந்தராவிடம் பேசவும் மனம் வராது போனது.
     இந்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இரு நபர்கள் வசுந்தராவும் ஹர்ஷவர்தனும். எனவே மற்றவர்கள் இவர்களை பாவமாய் பார்த்திருக்க
     “ஹர்ஷா உனக்குள்ள இருந்தது என் புள்ளைக்கு தெரியுமாமா?” என்று அருணாசலம் வாய் திறந்தார்.
     “இல்ல அவருக்கு தெரியாது. அவருக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு தான் எனக்கே தெரியும்” என்றார் வசுந்தரா மெதுவாக. அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியாத ஹர்ஷா
     “அப்பா ஐ’ம் டோட்டலி எக்ஸாஸ்டட். ஐ நீட் ரெஸ்ட் பேட்லி. சோ நான் போகட்டா” என்றான்.
     ஹர்ஷாவின் குரலே அவ்வளவு சோர்ந்து போய் வெளிவர அனைவருக்கும் புரிந்தது ஹர்ஷாவிற்கு சோர்வு உடல் அளவில் அல்ல மனதளவில் தான் என்று.
     எனவே “சரிடா கண்ணா நீ போ” என்று விட்டார். அதற்கு மேல் என்ன சொல்வது என அவருக்கும் தெரியவில்லை.
     ஹர்ஷா வசுந்தராவை திரும்பி பார்க்காது அவன் அறைக்கு செல்ல, அனுவை பார்த்த அபி “அண்ணி நீங்களும் போங்க. அண்ணாவ தனியா விடாதீங்க” என்றான்.
     ‘எப்போதடா நேரம் கிடைக்கும். நாம் ஹர்ஷாவிடம் தனியே பேசுவோம்’ என்று நின்றிருந்த அனு, அபி கூறியவுடன் ‘சரி’ என்றவள் வேக வேகமாக தங்கள் அறையை நோக்கி சென்றாள்.
     மெதுவாக கதவை திறந்து உள்ளே பார்க்க, ஹர்ஷா தலையை கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தான். அவனின் அந்த அநாதரவான நிலையை கண்டவுடன் அனுவின் மனம் ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது.
     “ஹர்ஷா” என மெதுவாக அழைத்தபடி அவன் அருகே சென்ற அனு அவன் தலையை தடவிக் கொடுக்க
     அதில் அவளை நிமிர்ந்து பார்த்த ஹர்ஷா அப்படியே அமர்ந்தவாறு அவளின் இடையை கட்டிக் கொண்டான்.
     ஹர்ஷாவை தானும் அணைத்த அனு அவனின் கவலை புரிந்தது போல் எதுவும் பேசாமது அவன் தலையை மேலும் தடவிவிட, அவ்வளவு தான் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையையும் வெளியேற்றினான் ஹர்ஷா.
     ஹர்ஷா அழுக துவங்கியதும் பதைபதைத்து போன அனு “என்னங்க இது” என்றவாறு அவன் அருகில் அமர்ந்து அவனை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.
     அனுவின் ஆறுதலான அணைப்பில் தானும் அவளை இறுக்கி அணைத்து கொண்ட ஹர்ஷாவிற்கு இன்னும் அழுகை தான் வந்தது.
     “ஹர்ஷா அழாதீங்க பிளீஸ். என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி அழறீங்க. ஹர்ஷா இங்க பாருங்க. ஐயோ என்னப்பா இது”
     அனு எவ்வளவு கெஞ்சியும் கொஞ்ச நேரம் சென்ற பின்னரே தன் அழுகையை நிறுத்தினான் ஹர்ஷா. அதன்பின் தான் அனுவுக்கும் சற்று ஆசுவாசம் ஆனது.
     இப்போது ஹர்ஷா அனுவின் மடியில் படுத்திருக்க, அவள் கைகள் அவன் தலையை வருடுவதை இன்னும் நிறுத்தவில்லை. இவ்வளவு நடந்தும் இருவருக்கும் இடையே மௌனம் தான் நிலவியது‌.
     “கஷ்டமா இருக்குடி” என மெதுவாக கரகரத்த குரலில் இவ்வளவு நேரம் மனதிற்குள் வைத்திருந்ததை கொட்ட ஆரம்பித்தான் ஹர்ஷா.
     “முப்பது வருஷமா உன்னோட அப்பா அம்மா இவங்க தான். இவங்க தான் உன் குடும்பம்னு இருந்துட்டு, இப்போ திடீர்னு வந்து நீ வேற யாருக்கோ பிறந்தன்னு சொல்றப்ப உடைஞ்சிட்டேன்டி…
     அப்போ கூட என் அப்பா தம்பினு யாரும் வருத்தப்பட்டுட கூடாதுன்னு அழுகைய அடக்கிட்டு மனச கல்லாக்கிட்டு உக்காந்துட்டு வர எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா.
     மனசு வலிக்குதுடி. அதை எப்படி சொல்றதுன்னு கூட தெரியலை. ஒருபக்கம் என் அப்பான்னு நினைச்சவரு என்னை பெத்தவரோட தம்பி.
     நான் அவர் பையன்னு ஏன் அவர் அண்ணன் பையன்னு தெரியவர முன்னாடியே நான் தான் உலகம்னு இருந்தாரு.
     இன்னொரு பக்கம் என்னை பெத்தவரை கொலை பண்ணிருக்காங்க. அது மட்டும் இல்லாம என்னையும் இல்லாம ஆக்க பாத்திருக்காங்க.
     எல்லாத்தையும் தெரிஞ்சு என்னோட சுபத்ரா அம்மா அவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாத்தி உயிருக்கு உயிரா வளத்திருக்காங்க. அவங்க இரண்டு பேரோட அன்பும் பொய் இல்ல தானடி.
     அந்த அன்புக்கு நான் என்னடி கைமாறு செய்ய போறேன். இப்பக்கூட பாரு அந்த மனுஷன் என்னை யாருக்கும் விட்டு தர மனசில்லாமா,
     எனக்கு எல்லாம் தெரிய வந்திருச்சேன்னு எவ்ளோ பதறி போய் இருக்காரு பாத்தியா. எனக்கு இந்த சிட்டுவேஷன்ல என்ன பண்றதுன்னு கூட தெரியலை டி”
     ஹர்ஷா மனதில் இருந்த குழப்பம் வலிகள் அனைத்தையும் சொல்ல அவனின் ஒவ்வொரு வலிக்கும் மருந்தாக அனுவின் வருடல் இருந்தது.
     “ஹர்ஷா எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. இங்க நடந்த எதுக்கும் நீங்க காரணம் இல்ல புரியுதா” என மெதுவாக ஆரம்பிக்க
     ‘என்ன சொல்ல போகிறாள்’ என அவளின்‌ முகத்தையே பார்க்க ஆரம்பித்தான் ஹர்ஷா.
     அவன் பார்வையில் மெல்ல சிரித்தவள் அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து “நீங்க நடந்த விஷயத்துல பாதிக்கப்பட்டிருக்கீங்கன்றது எவ்ளோ உண்மையோ,
     அதே போல நம்ம ரெண்டு பேர் குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.‌ அதுவும் அருணாசலம் தாத்தாவ நினைச்சு பாருங்க.
     எத்தனை வருஷம் உயிருக்கு உயிரா‌‌ வளத்த பையன். அவரே கொள்ளி வச்சுருக்காரு. இப்போ அவர் கொல்லப்பட்டார்னு கேட்டு எவ்ளோ உடைஞ்சு போய் இருப்பார்.
     ஆனா நீங்க அந்த பையன் வழி வந்த பேரன்னு தெரிஞ்சு அவர் மனசை கொஞ்சம் தேத்திப்பாரு. இப்படி நடந்த விஷயத்தை பத்தி யோசிக்காம அந்த தப்பால நமக்கு கிடைச்ச நல்லத மட்டும் மனசுல வச்சுக்கோங்கபா.
     உங்க மனசுல இருக்க கஷ்டம் எல்லாம் சீக்கிரம் உங்கள விட்டு ஓடி போயிடும்” என சொல்லி முடித்தாள்.
     “அப்புறம் வசுந்தரா அத்தைய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” மெதுவாக கேட்டு வைத்தாள் அனு.
     ஏனெனில் ஹர்ஷா இவ்வளவு நேரம் புலம்பும் போது கூட வசுந்தாரவை பத்தி ஒரு வார்த்தை கூட பேசாததை குறிந்து கொண்டிருந்தாள் அனு. அதை வைத்தே அவரை பற்றி ஹர்ஷாவின் எண்ணம் என்னவென்று அறிய கேட்டாள்.
     அனு கேட்டபின்‌ சிறிது நேரம் யோசித்த ஹர்ஷா “அவங்கல நினைச்சா தான்‌ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அனு.
     நீ சொன்ன மாதிரி நான் என்னை பெத்தவங்கல பிரிஞ்சு வந்தும் ஒரு நல்ல அப்பா அம்மா, பாசமான தம்பி, உயிரையே வச்சிருக்கிற குடும்பம் எல்லாமே எனக்கு கிடைச்சிருக்குடி.
     ஆனா அவங்க நிலைமை…” என்று நிறுத்திய‌ ஹர்ஷா வேதனையுடன் எச்சிலை விழுங்கிக் கொண்டான்.
     “உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணுன புருஷன் கண்ணு முன்னாடியே இறந்து போனதை பார்த்து,
     சரி இனி நமக்கு ஒரு குழந்தை வரப்போகுது. அதோட நம்ம வாழ்க்கையை வாழலாம்னு இருக்கப்ப, அந்த குழந்தையும் செத்துப் போயிடுச்சுன்னா எப்படி இருந்திருக்கும்.
     ஆனா அதோட அண்ணனுக்காகனு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிட்டு, இத்தனை வருஷம் அந்த வாழ்க்கைய வாழ்ந்திருக்காங்க. இப்போ அந்த வாழ்க்கையே துரோகத்தால வந்ததுன்னு தெரியும் போது எப்படி இருக்கும்.
     எனக்கு யோசிச்சு பார்க்க கூட முடாயலைடி. அவங்க தான் இங்க எல்லாத்தை விடவும் ரொம்பவே அதிகமா‌ பாதிக்கப்பட்டிருக்காங்க. அதை கண்டிப்பா ஒத்துக்கனும்டி”
     இதுவரை தன் மனது மற்றும் தன் குடும்பத்தினரின் கஷ்டத்தை பற்றி மட்டுமே யோசித்த ஹர்ஷா இப்போது வசுந்தராவின் மனதின் வலியை பற்றியும் யோசித்தான்.
     அதை பிடித்து கொண்ட அனு “அப்போ உங்க அம்மாவ நீங்க ஏத்துக்குவீங்களா ஹர்ஷா” என்று தயக்கத்துடன் கேட்டு விட்டாள்.
     அதில் வெடுக்கென திரும்பி பார்த்த ஹர்ஷா “நான் அவங்க கஷ்டப்பட்டாங்கன்னு தான் சொன்னேன். அதனால அவங்க என்னோட அம்மாவா ஆகிட முடியாது.
     ஆனா நல்லா
ஞாபகம் வச்சுக்கோ அனு சுபத்ரா அம்மா தான் எப்பவும் என்னோட அம்மா” என்றான் கோபமாக.
     இது ஒருவிதமான பாதுகாப்பில்லா நிலை என்று கூறலாம். ஒரு பொருள் நம்முடையது என்றால் அதை யார் உபயோகப்படுத்தினாலும் அது அப்போது பெரிதாக தெரியாது‌.
     ஆனால் அந்த பொருள் தனக்கு சொந்தமானதில்லை என்று தெரிந்தால், அது தரும் பாதுகாப்பின்மை மிக கொடுமையாக இருக்கும். அதை தான் தற்போது ஹர்ஷாவும் உணர துவங்கினான்.
     தன் தாய் தந்தை தன்னை பெற்றவர்கள் இல்லை என தெரிந்தது முதல் அவர்களை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் தானாகவே வந்து விட்டது ஹர்ஷாவிற்கு. ராஜசேகர் இத்தனை நாட்கள் உணர்ந்த அதே நிலை.
     அந்த கோபத்தில் சட்டென்று வாயை மூடிக் கொண்ட அனு “சரிங்க நான் அத்தைய பத்தி இனிமே பேசவே மாட்டேன். நீங்க மட்டும் இப்படி கோபப்படாதீங்க ஹர்ஷா” என்றாள்.
     “ம்ம்” என்று முனகிய ஹர்ஷா “அனு குட்டி சாரிடி உன்னையும் போட்டு படுத்துறேன்ல” என்று பாவமாக கேட்க உருகி விட்டாள் அனு.
     “ப்ச் என்னங்க இது. என்னை படுத்தாம வேற யாரை படுத்துவீங்களாம்‌. நான் தானே உங்க பொண்டாட்டி. வேற யார்கிட்டயாவது போங்க அப்புறம் இருக்கு”
     அனு போலியாக மிரட்ட “ஏன்டி என்னை பார்த்தா வேற ஆள தேடி போற மாதிரியா இருக்கு” என அவள் கண்ணத்தை வலிக்காது கிள்ளினான்.
     “ஐயோ! வலிக்குது” என அனு மெல்ல சிணுங்கி “ஆனாலும் இந்த ஆம்பளைங்கல நம்ப முடியாது பா. எப்ப எப்படி இருப்பாங்கன்னு. நான் தானே உஷாரா இருக்கனும்” என உதட்டை சுழித்து வேண்டும் என்றே ஹர்ஷாவை வம்பிலுத்து பேச்சை மாற்றிட எண்ணினாள்.
     “நச்சுன்னு பக்கத்துலையே செமையா நீ இருக்கப்ப நான் எதுக்கு வேற ஆள தேடப் போறேன். அப்புறம் ஏன்டி செல்லம் அந்த உதட்டை போட்டு இந்த சுழி சுழிக்கிர” என்றவாறு சிணுங்கிய அவள் உதடை கடித்து வைத்தான்.
     “சரியான கேடி ஹர்ஷா நீங்க. கிடைக்குற கேப்ல எல்லாம் எதாவது செய்றது. அப்புறம் பாவமா பேசி ஆக்ட் விடுறது…” என தன் போக்கில் அனு ஏதேதோ பேசி ஹர்ஷாவையும் பேச வைத்தாள்.
     இப்படி பேசி பேசியே அனு வெற்றிகரமாக ஹர்ஷாவின் மனநிலையை வேறுபுறம் தற்காலிகமாக திருப்பி விட்டதாக எண்ண,
     தன் மனைவியின் மனதை புரிந்து ஹர்ஷா அவன் மனதை மறைத்து கொண்டு அவளோடு வம்பு பேசி அவள் மனதை தான் திசை திருப்பி இருந்தான். ஆனால் மனதின் காயங்கள் அவ்வளவு எளிதில் மறைய கூடிய ஒன்றா என்ன!

Advertisement