Advertisement

     “என்ன கதிர் சொல்றீங்க?” என்ற விக்ரமிற்கே பேச்சு வரவில்லை என்றால் மற்றவர்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா.
     “இருங்க விக்ரம். நான் இங்க சொல்ல ஒன்னுமே இல்ல. சம்மந்தப்பட்ட எல்லாரையும் எதுக்கு இங்க வரவச்சிருக்கோம். அவங்கள அவங்க வாயாலேயே சொல்ல வைக்க தானே” என்று விக்ரமிடம் பேசியவன்
     “நீங்க சொல்லுங்க கணபதி சார். உங்க வீர தீர சாகசங்களை” நக்கலாகவே கேட்டு வைத்தான் கதிர்வேல்‌.
     ஆனால் கணபதி எதுவும் பேசாமல் அமைதி காத்தார். “என்ன கணபதி சார் பேசாம அமைதியா இருந்தா எப்படி. நீங்க ராஜாராம் அங்கிள என்ன என்ன செஞ்சீங்க, அப்புறம் எதுக்கு ஹர்ஷாவ கொல்ற அளவுக்கு போனீங்க.
     இதை எல்லாத்தையும் அப்படியே பாய்ண்ட் பாய்ண்டா எடுத்து வைங்க பாக்கலாம்”.
     “தம்பி நீ என்னப்பா சொல்ற. இவரு எதுக்கு என் பையன கொல்லனும். என் பேரனை கொல்ல பாக்கனும். கொஞ்சம் புரியிர மாதிரி சொல்லுப்பா”
     அருணாசலம் கதிரின் பேச்சில் அதிர்ந்து போய் அவனிடம் கிட்டத்தட்ட கெஞ்சினார்‌. கதிருக்கு எனன்வோ போல் ஆகிவிட “இருங்க தாத்தா சொல்றேன்” என்றான்.
     “முதல்ல ஹர்ஷா விஷயத்தில என்ன நடந்ததுன்னா” என ஆரம்பித்தவன் ஹர்ஷாவிற்கு நடந்த அனைத்தையும் கூறினான்.
     “இது உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும். ஆனா நான் சொன்னது உண்மை தான். வேதாசலம் அங்கிள், ராஜசேகர் அங்கிள் அப்புறம் ஹர்ஷா எல்லாருமே வந்து என்கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் தந்திட்டு போனாங்க.
     ஆரம்பிக்கிரப்ப கூட இது இவ்ளோ பெரிய கேஸ்னு எனக்கு தெரியலை” என்ற கதிர் தான் சேகரித்த தகவலை கூறினான்.
     “எங்கிருந்து இந்த கேஸை ஆரம்பிக்கிறதுனு நான் யோசிசிட்டு இருந்தப்ப தான் ஹர்ஷாவே அவர் ஃபிரண்ட் டாக்டர் அகிலன எனக்கு இன்ட்ரோ பண்ணிவிட்டாரு”
     டாக்டர் அகிலன் என்ற பெயரை கேட்டு ஜெர்க் ஆகி திரும்பி பார்த்த கணபதியை ஒரு நக்கல் சிரிப்புடன் பார்த்த கதிர், ஏதோ ஒரு மாத்திரை டப்பாவை எடுத்து காட்டி
     “இது என்ன டேப்லெட்னு தெரியுதா கணபதி ராம் சார்?” என்றான்.
     கணபதி எதுவும் பேசாமலே இருக்க கதிர் தொடர்ந்தான். “நீங்க டாக்டர் அகிலன் கிட்ட கேட்டு ஹர்ஷாவுக்காக வாங்கி தந்த ஸ்லோ பாய்சன்‌. இப்ப ஞாபகம் வருதா?”
     ஹர்ஷாவுக்கு ஸ்லோ பாய்சன் தரும் அளவு என்ன வன்மம் இவருக்கு என அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க ஹர்ஷா இது தனக்கு தெரிய வந்த நாளை எண்ணி பார்த்தான்.
     டாக்டர் அகிலன் என்னதான் ஹர்ஷாவின் மீது கோபத்தில் இருந்தாலும், அவன் என்றுமே ஒரு நல்ல மருத்துவரே. அவனால் ஒரு உயிர் போவதை என்றும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்.
     அவன் ஹர்ஷாவின் மீதுள்ள கோபத்தை போக்கிக் கொள்ள ஹர்ஷாவை அவமானப்படுத்த மட்டுமே எண்ணியிருந்தான். அதனாலே அந்த போதை மாத்திரையை தந்துவிட்டான்.
     ஆனால் கணபதியின் ஆட்கள் ஹர்ஷாவின் மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி வைத்து மக்கள் உயிருடன் விளையாட பார்த்ததில் அதிர்ந்து போய் விட்டான்.
     எனவே இனிமேல் இவர்களுடன் சேரக்கூடாது என முடிவு செய்த நிலையில், கணபதியின் ஆட்கள் ஹர்ஷாவிற்கு கொடுக்க ஸ்லோ பாய்சன் கேட்டு வர பயங்கரமாக கோபம் கொண்டுவிட்டான்.
     “ஒருவேளை தான் மறுத்தால் வேறு யாரிடமாவது விஷத்தை வாங்கி ஹர்ஷாவிற்கு தந்துவிட்டால் என்ன செய்வது” என யோசித்த அகிலன் அவர்களிடம் ‘சிறிது யோசிக்க நேரம் வேண்டும்’ என்று அவகாசம் கேட்டான் புத்திசாலித்தனமாக.
     அவர்கள் சென்றவுடன் அகிலன் செய்த முதல் வேலை ஹர்ஷாவை அழைத்தது தான். நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிய அகிலன்
     “உங்க மேல எனக்கு கோபம் இருந்தது ஹர்ஷா. நான் ஒத்துக்கிறேன். ஆனா நான் செஞ்சதும் தப்பு தான். அது எனக்கு இப்ப தான் புரியுது.
     இந்த ஆளுங்க ரொம்ப மோசமானவனுங்க ஹர்ஷா. இதை அப்படியே போலீஸ்கிட்ட சொல்லிடலாம். நான் அப்ரூவராகி சாட்சி சொல்றேன்”
     அகிலன் தந்த சுய வாக்குமூலத்தில் என்ன செய்வது என குழ்மபிய ஹர்ஷா அவனை அப்படியே கதிரிடம் கூட்டி சென்றுவிட்டான்.
     அகிலன் கூறியதை கேட்ட கதிர் “நான் இன்வஸ்டிகேஷன் முடிக்கிற வரை நீங்க அவங்க கூட கான்டேக்ட்லையே இருங்க அகிலன்.
     அதே சமயம் அவனுங்களுக்கு உங்க மேல சந்தேகம் வராத மாதிரியும் நடந்துக்கனும்” என்ற கதிர் வேறு மாத்திரைகளை தந்து அதை வைத்து அவர்களை நம்ப வைக்க கூறினான்.
     அதை ஏற்றுக் கொண்ட அகிலனும் சத்து மாத்திரைகளை தந்து அந்த ஆட்களை ஏமாற்றினான். அந்த ஆட்களின் எண்களை கதிரிடம் பகிர்ந்தவன் அதன்பின் அவன் உண்டு அவன் வேலை உண்டென இருந்துக் கொண்டான்.
     கதிர் அந்த எண்களை வைத்து கணபதியை பிடித்தார். ஒரு பக்கம் அந்த மாத்திரை இவர்கள் கம்பெனியில் உருவானது என விஸ்வநாதன் மேல் அவன் சந்தேகிருந்த நேரம் அது.
     அந்த நேரம் அகிலன் தந்த எண்களை வைத்து பார்த்ததில் கணபதியை குற்றவாளி என முடிவு செய்து விட்டான் கதிர்வேல்‌.
     “என்ன கணபதி ராம் சார் நான் சொன்ன விஷயமெல்லாம் கரெக்டா. எல்லாமே சொல்லிட்டேன். ஆனா உங்களுக்கு ஏன் ஹர்ஷா மேல. இவ்ளோ கோபம் கொலைவெறி?” என கேட்டு நிறுத்தினான்.
     “என்ன சார் எதுவும் பேசாம இருந்தா நீங்க தப்பிச்சு போயிடலாம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா. அதுலாம் நடக்காது சார்.
     அது இருக்கட்டும். சரி இந்த கதிர் எப்படி உங்க கதைக்குள்ள வந்தேன்னு இன்னும் நான் சொல்லவே இல்லையே. அதை முதல்ல சொல்லிடறேன்” என்றான்.
     கதிர் ஹர்ஷாவிடம் பேச வேண்டும் என கூறிய அந்த நாள் இங்கே வசுந்தராவால் வந்த பிரச்சினையை வேதாசலம் கதிரிடம் பகிர்ந்துக் கொண்டார்.
     அதை முதலில் கதிரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம் கணபதியை பற்றிய தகவலும் முழுதாக அவனுக்கு கிடைக்காமல் போனது.
     ஆனால் இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் ஒரே விஷயம் கோயம்புத்தூர் என புரிந்தது. அங்கே செல்லலாம் என முடிவெடுத்தான்.
     அப்போது எதேச்சையாக அவன் பார்வை டேபிலின் மேல் இருந்த கணபதியின் போன் ஹிஸ்டரியில் விழ அதை எடுத்து பார்த்தான்.
     அந்த விவரம் வந்த போதே அதை நன்கு ஆராய்ந்திருந்தான். சில மாதங்களாக கணபதி அடி ஆட்களுக்கு பேசி இருப்பது அதில் இருந்தது‌.
     ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியிடம் அவர் பேசி இருந்தார். அதை கதிர் அப்போது கவனித்தும் பெரிதாக எடுக்காமல் விட்டிருந்தான்.
     ஆனால் தற்போது ‘இவரு எதுக்கு டிடெக்டிவ் ஏஜன்சிக்கு கால் பண்ணி இருக்காரு? அதுவும் ஒரு மாசம் முழுசும்’ என்ற சந்தேகம் வந்தது.
     அந்த எண்ணை வைத்து அது எந்த டிடெக்டிவ் ஏஜென்சி என அறிந்துக் கொண்ட கதிர் தானே நேரில் சென்று அங்கே விசாரித்தான்.
     அங்கே அவர்கள் தந்த பதிலின் மூலமே ஹர்ஷா யார் எதற்கு கணபதி அவனை கொல்ல பார்த்தார். அது மட்டும் இல்லாமல் ராஜாராமிற்கு என்னவாயிற்று என்பது முதற்கொண்டு தெரிந்தது.
     அந்த டிடெக்டிவ் நிறுவன ஆட்கள் ஹர்ஷா யார் என கண்டறிய சென்று அவன் தந்தைக்கு என்னவானது என்று வரை கண்டுபிடித்து விட்டனர்.
     கதிர் போலீஸ் அதிகாரி என்பதால் அவன் கேட்டவுடன் அனைத்து தகவல்களையும் தந்துவிட்டனர் டிடெக்டிவ் ஏஜென்சி ஆட்கள். அதில் இருப்பது சரிதானா என கதிர் தானும் கோயம்புத்தூர் சென்று பரிசோதித்தான்.
     அங்கே அனைத்தும் உண்மை என அறிந்த கதிர் அடுத்த நாளே ஹர்ஷாவின் இல்லத்திற்கு வந்து இப்போது வரை பேசிக் கொண்டிருக்கிறான்.
     “நீங்க ஹர்ஷா ராஜாராம் அங்கிளோட பையன் தானானு தெரிஞ்சுக்க டிடெக்டிவ் கிட்ட போனீங்க. ஆனா பாருங்க அதுவே உங்களுக்கு ஆப்பா வந்து நின்றுடுச்சு. ச்சுச்சு” என்று நக்கலாக பரிதாபப்பட்டான் கதிர்.
     கணபதியோ தன்னால் இயன்ற அளவு பற்களை கடித்தபடி அமர்ந்திருந்தார்.
      “என்ன சார் இப்ப நீங்க சொல்லப் போறீங்களா இல்ல நானே சொல்லட்டா?” என கதிர் நிறுத்த கணபதியே பேசினார்.
     “ஆமா நான் தான் ஹர்ஷாவ கொல்ல ஆள் வச்சேன் போதுமா” என கத்தினார். தன் வேலை முடிந்தது என்பது போல் கதிர் அமைதி காத்தான்.
     கதிர் பேசும் போது கூட கணபதியை ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு பேசுகிறான் என்றிருந்த வசுந்தரா வீட்டினரின் அதிர்ச்சிக்கு இப்போது அளவே இல்லை.
     “ஆமா நான் தான் அவனை கொல்ல பார்த்தேன். நான் ஒத்துக்கிறேன். ஏன்னா அவன் அப்படியே அந்த ராஜாராம் மாதிரியே இருந்தான்‌. அதான் கொல்ல பார்த்தேன்‌” என்ற கணபதி வசுந்தராவை பார்த்து இத்தனை வருடம் அவர் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டினார்.
     “வசுமா நீ காலேஜ்கு முதல் நாள் வந்திருந்த ஞாபகம் இருக்கா. நீ மறந்திருப்ப ஆனா என்னால அதை மறக்க முடியாது. அவ்ளோ அழகா இருந்த.
     உன்னை பார்த்த நாள்ல இருந்தே உன்னை நான் விரும்ப ஆர்மபிச்சேன். ஆனா நீ அந்த ராஜாராம் அவனை போய் லவ் பண்ணுற. எனக்கு எவ்ளோ கோபம் தெரியுமா.
     உன் மனசுல எப்படியாவது இடம் பிடிக்கலாம்னு நானும் என்னென்னவோ செஞ்சேன். ஆனா நீ ராம் ராம்னு அவன் பின்னாலேயே சுத்துன. அதை கூட பொறுத்துகிட்டேன்.
     ஆனா உன்னை அவனோட மாலையும் கழுத்துமா பார்த்தேன் பாரு. எனக்கு எவ்ளோ கோபம் வந்துச்சு தெரியுமா. அப்போ முடிவு செஞ்சேன் அவனை கொன்னாவது உன்னை கல்யாணம் பண்ணனும்னு.
     அப்படி காத்திருக்கப்ப தான் ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தது. அதான் உன் கண் முன்னாடியே லாரிய வச்சு தூக்குனேன். ஒரேதா போய்ட்டான்ல” என்ற கணபதியின் முகத்தில் இருந்த கொடூர சிரிப்பை பார்த்து அனைவருக்கும் சற்று பயம் கூட வந்தது‌.
     “அப்புறம் தான் தெரிஞ்சது நீ கர்ப்பமா இருக்கன்னு. குழந்தைய அழிக்க முடியுமான்னு பாத்தேன். ஆனா அது உனக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சது.
     அதான் அந்த குழந்தை பிறந்த உடனே கொல்லனும்னு ஹாஸ்பிடல்லையே காத்திருந்தேன். ஆனா எப்படியோ அந்த சுபத்ரா டாக்டர் இதை தெரிஞ்சுக்கிட்டு வேற ஒருத்திக்கு செத்து பிறந்த குழந்தைய உன்னோட குழ்நதைனு சொல்லி ஏமாத்தி இருக்கா. ச்சே..
     இல்லனா அப்பவே இவனை கொன்னுருப்பேன்” என்ற கணபதியின் விழிகள் ஹர்ஷாவின் மீது அப்பட்டமாக வன்மத்தை காட்டியது.
     “ஆறு வருஷம் வசுமா. முழுசா ஆறு வருஷம் உன் மனசு மாற காத்திருந்து நான் உன்னோட வாழ ஆர்மபிச்சேன். எல்லாம் நல்லா போன நேரம் இவன் வந்து நிக்கிறான்.
     அப்படியே ராஜாராமை உரிச்சு வச்சு. எனக்கு எப்படி இருந்திருக்கும். அதான் அவனையும் கொன்னுட்டா நீ எனக்கு மட்டும் தானே. உன் காதல் எனக்கு மட்டுமே கிடைக்கும்ல
     கணபதி பேசி முடித்தும் ஹர்ஷாவை முறைத்து நிற்க, சுற்றி இருந்தவர்களுக்கு கணபதியை கண்டு கோபம் கோபமாக வந்தது.
     “நீ விரும்புன பொண்ண கல்யாணம் பண்ண என் அண்ணன ஏன்டா கொன்ன” என ராஜசேகர் கோபத்தில் கணபதியின் சட்டையை பிடித்து கேட்டார்.
     ஆனால் கணபதி அவரை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் நின்று வசுந்தராவை தான் பார்த்தார். வசுந்தராவோ மொத்தமாக உடைந்து போய் அமர்ந்திருந்தார்.
    ‘என்னால் தானா. எல்லாமே என்னால் தானா‌. என் ராம் என்னை விட்டு போனது, என் பிள்ளை என்னைய விட்டு போக காரணம் எல்லாம் நான் தானா’
     இது மட்டுமே அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்க கதிர் தந்த தகவலின் பேரில் அவன் டீம் ஆட்கள் வந்து சேர்ந்தனர் கணபதியை கைது செய்ய.
     ஆனால் போகும் நேரம் கூட “வசுமா என்ன பாருடா. என் மேல தப்பு இல்ல. எல்லாம் அந்த ராம் மேல தான் தப்பு. அவன் எதுக்கு உன்னை லவ் பண்ணுனான். அதான் அவனை கொன்னேன்” என நியாயம் பேச
      கணபதிக்கு மனநிலை தான் எதாவது பாதிப்படைந்து விட்டதா என மற்றவர்கள் பார்த்திருந்தனர். அவர் வசுந்தராவை அழைக்க அழைக்க போலீஸ் அவரை இழுத்து சென்றது.
     ஆனால் வசுந்தரா கணபதியை திருப்பியும் பார்க்கவில்லை. அவர் மனதில் தன் ராமோடு பேசிக் கொண்டிருந்தார் போல்.
-மீண்டும் வருவான்

Advertisement