Advertisement

     விபத்தில் அடிபட்ட ராஜாராமையும் மயங்கி விழுந்த வசுந்தராவையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். ஆனால் விதி அங்கே சதி செய்துவிட்டது.
     ஆம் ராஜாராம் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க, வசுந்தரா வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
     அதில் கொடுமை என்னவென்றால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே ராஜாராமின் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்து சென்றிருந்தது.
     அதை அறியாத வசுந்தராவோ இன்னும் மயக்கத்திலேயே இருக்க, அதற்குள் ராஜாராமின் அடையாள அட்டையை வைத்து அவன் வீட்டிற்கு தகவல் சென்றுவிட்டது.
     சென்னையில் அருணாசலம் தன் செல்ல மகன் இறந்த செய்தியை கேட்டு தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்துவிட்டார்.
     சின்ன மகனும் அங்கே இல்லாது போயிருக்க, கதறி அழுத மகள்கள் இருவரையும் தேற்றி அதன்பின் ராஜாராமின் உடலை கோயம்புத்தூருக்கு சென்று பெற்று வந்து அனைத்து சடங்குகளையும் முடித்தார் அருணாசலம் தனியாளாக.
     இப்படி இருக்கும் போது அவருக்கு வசுந்தரா என்றொரு பெண் தன் மகன் வாழ்வில் வந்தது தெரியாமலே போனது.
     தெரியப்படுத்த வேண்டிய வசுந்தராவோ ராஜாராமின் உடல் எரியூட்டப்பட்ட நேரத்திற்கு பின்னரே கண்விழித்து பார்த்தாள். அதாவது ராஜாராம் இறந்து முழுதாக ஒரு நாள் சென்றபின்.
     அவனின் விபத்தை கண்டதற்கே ஒரு நாள் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த வசுந்தராவிற்கு ராஜாராமின் உடலை கூட இனி காண முடியாது என தெரிந்தால் என்ன ஆகுமோ என அவள் நண்பர்கள் தோழிகள் பயந்து போயினர்.
     அவர்கள் பயந்தபடியே கண் விழித்த வசுந்தரா “நான் என் ராம பார்க்கனும்” என அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.
     அவளை சமாதானம் செய்வதற்கு அங்கிருந்த யாராலும் முடியாமல் போனது‌. கொஞ்ச நேரம் சமாளித்த தோழிகள் தங்கள் மனதை கல் ஆக்கிக் கொண்டு உண்மையை போட்டு உடைத்துவிட்டனர்.
     “உன்னோட ராம் இந்த உலகத்தை விட்டு போய் ஒரு நாள் ஆச்சுடி” என வசுந்தராவின் தோழி ராகினியும் அழுதபடி சொல்லிவிட்டாள்.
     “ஏய் ஏன்டி பொய் சொல்ற. என் ராம் என்னை விட்டுட்டு போக மாட்டார். நீங்க எல்லாரும் சேர்ந்து அவரை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்க” என கத்தியபடி அவள் தோழிகளை போட்டு அடித்தாள் வசுந்தரா.
     ஒரு கட்டத்தில் ராம் இந்த உலகில் இல்லை என்பதை உணர்ந்த வசுந்தரா
     “என்னை விடுங்க நான் என் ராம் கிட்ட போறேன். நானும் செத்துப்போறேன்‌. என்னால இனிமே வாழவே முடியாது” என கதறியபடி ஓட முயன்ற வசுந்தராவை பிடித்து வைத்த தோழிகளுக்கும் அழுகை தான் வந்தது‌.
     இவ்வளவு சிறிய வயதில் கணவனை இழந்து அவள் படும் வேதனையை தோழிகளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
     அவளது ரகளையில் அவளை அடக்கமுடியாது தோழிகள் திணற, அங்கே கேட்ட சத்தத்தில் அந்த அறைக்கு வந்தாள் வசுந்தராவிற்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சுபத்ரா.
     “என்னம்மா என்ன பிரச்சினை?” என்று கேட்ட சுபத்ராவிடம்
     “என்னை கொன்னுடுங்க. நான் செத்துப் போறேன். நான் என் ராம் இருக்க இடத்துக்கே போறேன். எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கலை” என கதறினாள் வசுந்தரா.
     வசுந்தராவின் நிலை அவளை பார்த்த சுபத்ராவிற்கே வேதனையை தந்தது. சில மாதங்களுக்கு முன் தான் வசுந்தராவிற்கு திருமணம் ஆகி இருந்ததை தோழிகள் கூறியிருந்தனர்.
     அதோடு அவள் கண் முன்னே கணவனை இழந்து தவிப்பதை காணும் போது மனம் வலிப்பதை தவிர்க்க முடியவில்லை.
     “இங்க பாருமா உன் மனநிலை எனக்கு நல்லா புரியுது. ஆனா நீ சாகனும்னு நினைக்கிறது ரொம்ப தப்புமா”
     “இல்ல என்னால என் ராம் இல்லாத உலகத்தில ஒரு நிமிஷம் கூட வாழ முடியலை. பிளீஸ் டாக்டர் விஷ ஊசி இருந்தா போட்டு என்னை கொன்னுருங்க” சுபத்ரா என்ன சொன்னாலும் செத்துப் போகிறேன் என்றே நின்றாள் வசுந்தரா.
     “இங்க பாருங்க வசுந்தரா. நீங்க சாகலாம். ஆனா உங்களால இன்னொரு உயிர் போகவே கூடாது. நீங்க செத்தா போகப்போறது ஒரு உயிர் இல்ல ரெண்டு உயிர்”
     என சுபத்ரா கோபத்தில் கத்த, வசுந்தரா அவர் என்ன சொன்னார் என புரியாது முழித்தாள்.
     வசுந்தரா குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு புரியாமல் முழிப்பதை கண்டு இரக்கம் சுரந்தது சுபத்ராவிற்கு. எனவே பொறுமையாக அவள் நிலையை எடுத்துக் கூறினாள்.
     “இங்க பாருமா நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்க. ஆனாலும் நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.
     உன் வயித்துல ஒரு குட்டி பாப்பா வளருது. அது இப்போ நாலு மாச கருவா உன் வயித்துக்குள்ள இருக்கு. நீ அந்த குழந்தைய நல்லபடியா பெத்து எடுத்து வளர்க்க வேணாமா”
     சுபத்ராவின் வார்த்தைகளில் “என் ராம் பாப்பா என் வயித்துல இருக்கா?” என்று அப்பாவியாய் கேட்டு வைக்க, சுபத்ராவிற்கு மேலும் கஷ்டமாகி போனது.
     எனவே ‘ஆம்’ என தலை அசைத்தாள். உடனே குனிந்து தன் வயிற்றை தடவி பார்த்த வசுந்தரா “என் ராமோட பாப்பா” என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டாள்‌.
     “என் ராமோட பாப்பா டாக்டர்” என அழுதபடி வசுந்தரா கூறுவதை கண்டு அவள் தோழிகள் இன்னும் அழுதனர். சிறு வயதில் ஒரு குழந்தையோடு கணவனும் இல்லாமல் தங்கள் தோழி இனி என்ன செய்ய போகிறாளோ என எல்லாவற்றையும் எண்ணி அழுதனர்.
     “ஐயோ என் ராம்! என் குழந்தை!” என அங்கிருந்த நாட்கள் முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தாள் வசுந்தரா.
     அவளை காணும் போது தன் சிறு தங்கையை போல உணர்ந்த சுபத்ரா தன்னாலான ஆறுதலை மறக்காமல் தந்தாள்.
     அதன்பின் வசுந்தரா கல்லாரி செல்லவில்லை. ராமுடன் அவள் இருந்த வீட்டில் தோழியுடன் தங்கிக் கொண்டாள். ராம் அந்த வீட்டை வாங்கும் போது என்ன நினைத்தானோ அதை வசுந்தராவின் பெயரிலே வாங்கி இருந்தான்.
     அருணாசலத்திற்கு கூட இது தெரியாது. அதேபோல் வசுந்தரா இங்கே நடந்ததை எல்லாம் தன் தந்தை அண்ணன் என இருவருக்கும் தெரியப்படுத்தவே இல்லை.
     தன் ராமின் நினைவோடு அவன் குழந்தையை சுபத்ராவின் உதவியோடு பார்த்துக் கொண்டாள்‌.
     அப்படி ஒரு நாள் மருத்துவமனைக்கு செல்லும் போது யாரோ ஒரு பெண் வசுந்தராவை பார்த்து
     “அந்த குழந்தை வந்த நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். அதான் அது வந்த உடனே அப்பாவ முழுங்கிடுச்சு” என்று இரக்கமே இல்லாமல் பேச எல்லாவற்றையும் வசுந்தரா கேட்டு விட்டாள்.
     அதிலிருந்து ‘இந்த குழந்தை தான் ராம் இறக்க காரணமா’ என தேவையில்லாமல் யோசித்து வைப்பாள்.
     சில நேரம் நன்றாக இருப்பவள் பல நேரம் ராமை எண்ணி வெறிப்புடித்தவள் போல் நடந்துக் கொள்வாள். அந்த நேரம் எல்லாம் “இந்த குழந்தை எனக்கு வேணாம்” என கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள்.
     அப்போது எல்லாம் சுபத்ராவே அவளை தேற்றி சமாதானம் செய்வாள். வசுந்தராவே சிறு குழந்தை போல் நடந்து கொள்ள அவள் மீதும் அவள் குழந்தை மீதும் தானாகவே ஒரு பற்று வந்துவிட்டது சுபத்ராவிற்கு.
     அதன்பின் அதை ராஜசேகரிடமும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்‌. இப்படியே வசுந்தராவின் நாட்கள் குழப்பத்துடன் செல்ல அவளின் பிரசவ நாளும் வந்தது‌.
     அதே நேரம் இன்னொரு பெண்ணும் அதே மருத்துவமனையில் பிரசவ வலியில் வந்து சேர்ந்தாள்‌. அங்கே தான் விதியின் அடுத்த விளையாட்டு ஆரமபமானது.
     இவ்வளவு நாட்கள் ராகவன் விஸ்வநாதனிடம் கூறாத உண்மையை அன்று வசுந்தரா அழைத்து கூறானாள் பயத்துடன்.
     அவர்கள் அதிர்ந்து போய் அங்கே வந்த நேரம் அவளை திட்டக்கூட முடியாதபடி அவள் அங்கு பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்‌.
     பிரசவம் பார்ப்பதற்கு சுபத்ராவிற்கு தகவல் சென்றது‌. அவளும் விரைந்து வந்து சேர்ந்தாள். அந்த இரவு வேளையில் வசுந்தராவின் வலி கதறல்கள் என ரணகளமாய் நேரம் செல்ல,
     வசந்தரா அழகானதொரு ஆண் மகவை பெற்றெடுத்தாள். அதை மகிழ்வுடன் சுபத்ரா அவளிடம் காட்டி சென்றாள்.
     அதன்பின் என்னவானதோ தெரியவில்லை, காலை வந்த விஸ்வநாதன் “உனக்கு பிறந்த குழந்தை இறந்து போச்சுமா” என கூறினார்.
     இதற்கு மேலும் ஆண்டவன் எதற்கு என்னை சோதிக்கிறான் என்ற விரக்தி நிலைக்கே சென்ற வசுந்தரா, அந்த குழந்தையை ‘நீயும் என்னை விட்டு போய்ட்டியா’ என உணர்வற்று பார்த்தார்.
     அங்கே கோயம்புத்தூரில் குழந்தையை அடக்கம் செய்ய என தடுமாறும் போது தான் கணபதியின் நட்பு விஸ்வநாதனுக்கு கிடைத்தது.
     அவர் உதவியுடன் குழந்தையை அடக்கம் செய்தவர்கள் கோயம்புத்தூரை மொத்தமாக காலி செய்துவிட்டு சென்னை சென்றனர்.
     அதன்பின் தான் கணபதி அந்த குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார். எப்போதும் சூன்யத்தையே வெறித்தபடி இருப்பார் வசுந்தரா.
     அதை கண்டு ராகவன் விஸ்வநாதனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். தன் மகள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் தன் மகன் அவளை வெளியூருக்கு படிக்க அனுப்பியதே என்று நம்பினார்.
     தன் வாழ்வில் என்ன நடந்தது என வசுந்தராவும் தன் வீட்டினரிடம் கூறவில்லை. ஒருமாதிரி நாட்கள் கனமாகவே நகர்ந்தது.
     இரண்டு மூன்று வருடங்கள் இப்படியே செல்ல இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று எண்ணிய விஸ்வநாதன் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
     அதை பற்றி எண்ணும் போதே ஏனோ கணபதி தான் அவரின் நினைவிற்கு வந்தார்‌. இந்த சில வருடங்களில் அவர் விஸ்வநாதனுடன் துணைக்கு நின்றதால் இருக்கலாம்.
     வசுந்தராவிடம் செத்து விடுவேன் என பலவாறு மிரட்டி உண்ணாவிரதம் இருந்து அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் விஸ்வநாதன்.
     கணபதியை பிடிக்காமல் திருமணம் செய்த வசுந்தராவை அவர் தொந்தரவு செய்யவில்லை. மாறாக காத்திருக்க தொடங்கினார்.
     ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல முழுதாக நான்கு வருடங்கள் மனிதர் வசுந்தராவிற்காய் காத்திருந்தார். அவரை கண்டு ஆச்சரியமடைந்த வசுந்தரா அதன்பின்னரே அவரின் மனைவியாக மாறினார்.
     பின்னர் சுமூகமாக சென்ற வசுந்தராவின் வாழ்வில் நுழைந்தான் ஹர்ஷா. அன்று ஒருநாள் துணிக்கடையில் ஹர்ஷாவை கண்டு ராஜாராமோ என ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டார் வசுந்தரா.
     ஆனால் அதற்கு வாய்பில்லை என உணர்ந்த போது ஒருவேளை தான் பெற்றே பிள்ளையாக இருக்குமோ என சந்தேகித்தார்.
     ஹர்ஷாவை மீண்டும் ஒருமுறை பார்க்கமாட்டோமா என்றிருந்த வசுந்தராவிற்கு அனுவின் மூலம் அவன் அருகே இருக்கும் சந்தோஷம் கிடைத்தது.
     “அன்னைக்கு திதி தந்தப்போ என் ராமோட போட்டோ பாத்து தான் இவன் என்னோட பையன்னு சொன்னேன். டி‌.என்.ஏ டெஸ்ட் அது இதுன்னு நீங்க சொல்லவும் நானும் அப்போ குழம்பிட்டேன்.
     ஆனா அவர் பிள்ளை இந்த வீட்டு ரத்தம் தான்னு எனக்கு சுத்தமா மறந்துப்போச்சு”
     வசுந்தராவின் பேச்சை கேட்ட எல்லோருக்கும் வலி வேதனை தான் மிஞ்சியது. அருணாசலத்திற்கு தன் மகன் ஒரு மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து தான் இறந்தான் என மகிழ்வதா
     இல்லை அவனால் அந்த வாழ்க்கையை காலம் முழுவதும் வாழ முடியாது போனதை எண்ணி நொந்து கொள்வதா என தெரியவில்லை.
     தன் தங்கை வாழ்வில் நடந்ததை முதன்முறையாக கேட்ட விஸ்வநாதன் மனதிற்குள் உடைந்து விட்டார். வசுந்தராவிற்கு ஆறுதலாக இருக்கும் நேரத்தில் தான் கோபத்தை காட்டியது அவரை இன்னும் பாதித்தது.
     அப்போது “ஒரு நிமிஷம்” என மீண்டும் கதிர் அனைவரையும் தன்னை பார்க்க செய்தான்.
     “இந்த நேரத்தில உங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்காதீங்க. ஆனா இதை இப்பவே பேசி முடிக்கனும்” என்ற கதிர்
     “மிஸ்டர்.கணபதி ராம் அப்படியே நீங்க ஏன் ஹர்ஷாவை கொல்ல பாத்தீங்கன்னும், ராஜாராம் அங்கிள ஏன் கொன்னீங்கனும் சொல்லிடுங்க” என கூறி அனைவரின் தலையிலும் மேலும் ஒரு இடியை இறக்கினான்.

Advertisement