Advertisement

     “என்ன கண்ணா சொல்ற” அதிர்வாய் வார்த்தைகள் வெளிவந்தது பார்வதியிடம் இருந்து.
     அங்கு நிலவும் சூழ்நிலையை கண்டு வருத்தமடைந்த கதிர் தானே இதுவரை ராஜசேகர் ஹர்ஷா அவரிடம் எப்படி வந்து சேர்ந்தான் என்று பகிர்ந்தவற்றை ஒரே மூச்சில் கூறி வைத்தான்.
     எல்லோரும் அமைதியாய் இருக்க “அவன் எப்படி இங்க வந்திருந்தாலும், அவன் இந்த வீட்டு ரத்தம் இல்லைனாலும், அவன் என்னோட, இந்த அருணாசலத்தோட பேரன் தான்” என்று தழுதழுத்தார் அருணாசலம்.
     அதையே பார்வதியும் கூற, இந்த வீட்டினர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை மெய்மறந்து பார்த்திருந்தான் ஹர்ஷா.
     “தாத்தா நான் சொல்ல வரதை முழுசா கேளுங்க. ஹர்ஷா ராஜசேகர் அங்கிளுக்கு பிறந்த பையன் இல்ல, ஆனா அவர் இந்த வீட்டு ரத்தம் தான்” என்ற கதிர் பேச அவனை அனைவரும் புரியாது பார்த்து வைத்தனர்.
     “கொஞ்சம் புரியும்படி சொல்லேன் தம்பி” என பார்வதி மற்றவர்கள் நினைத்ததை கேட்டுவிட, கதிர் தொடர்ந்தான்.
     “ஆமா ஆன்டி. ஹர்ஷா ராஜசேகர் அங்கிள் பையன் இல்ல பட் அவரு உங்க மூத்த அண்ணன் ராஜாராமோட பையன்”
     கதிர் இவ்வாறு கூற அருணாசலம் மற்றும் பார்வதி இருவருக்கும் இந்த செய்தி பேரதிர்ச்சியே. அவர்கள் அதிர்வில் இருந்து மீண்டு வருவதற்குள் கதிர் ராஜசேகர் ஹர்ஷாவை பற்றி கணித்தது, டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தது என்று அனைத்தையும் கூறிவிட்டான்.
     இப்போது அருணாசலம் ஹர்ஷாவை அடைந்தவர் “என் செல்லம் நீ என் ராஜா மாதிரி இருக்கன்னு ஒவ்வொரு நாளும் பெருமைப்பட்டிருக்கேன் கண்ணா.
     என் பிள்ளை சொல்லுவான் “நான் உங்கள விட்டுட்டு போகமாட்டேன் ப்பானு”. ஆனா அவன் என்னை விட்டு நிரந்தரமா போய் கூட உன்னை எனக்கு குடுத்த அவன் வாக்கை காப்பாத்திட்டான்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி கொண்டிருந்தார்.
     பார்வதியோ தன் மூத்த அண்ணன் ராஜாராமே அவர் எதிரே அமர்ந்திருப்பதை போல் பரவசத்துடன் ஹர்ஷாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
     இவர்கள் இப்படி இருக்க அனுவோ தன் கணவனை தான் ஒரு வித பதற்றத்துடன் கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
     இவ்வளவு பெரிய உண்மை இத்தனை வருடத்திற்கு பிறகு அறிந்த தன் கணவனின் மனநிலை எப்படி இருக்கும் என அவள் மனம் தவித்தது.
     சூழ்நிலை இப்படி இருக்க ஹர்ஷா கதிரை பார்த்து “கதிர் நான் கேட்ட விஷயம் என்னாச்சு சொல்லுங்க” என்றான்.
     அருணாசலம் “என்ன கண்ணா கேட்ட?” என்று கேட்க சற்று யோசித்த ஹர்ஷா “தாத்தா என்னோட பயாலஜிகல் மதர் யார்னு கதிர் சொல்றேன்னு சொன்னார். அதை தான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன்” என்றான்.
     “சொல்றேன் ஹர்ஷா. ஆனா அதுக்கு முன்னாடி இன்னும் சிலரை நீங்க இங்க கூப்பிட வேண்டி இருக்கு”
     ஹர்ஷா கேள்வியாய் புருவம் உயர்த்த, “உங்க‌ வொய்ப் பேமிலிய வர சொல்லனும். மெயினா அவங்க அத்தை வசுந்தரா அன்ட் அத்தை ஹஸ்பண்ட் கணபதி ராம் இவங்க இருக்கனும்.
     அப்புறம் தாத்தா அவங்க வந்தா நான் நிறைய பேசுவேன். நீங்க அதிர்ச்சி ஆகவே கூடாது. இப்பவே சொல்லிடறேன்” என்றான்.
     மற்றவர்களுக்கு எதற்கு என புரியவில்லை என்றாலும் ஹர்ஷாவிற்கு கதிர் அனைத்தையும் யோசித்தே கூறுவான் என தோன்றியது.
     எனவே ஹர்ஷா அனுவை பார்த்து “அனு உன் பேமிலி மெம்பர்ஸ வர சொல்லு” என்றான். உடனே அவளும் தன் தந்தைக்கு அழைத்து அனைவரையும் முக்கியமாக அவள் அத்தை மாமாவையும் உடனே அழைத்து வருமாறு கூறிவிட்டு வைத்தாள்.
     அனு திடீரென அழைத்து இப்படி சொல்லவும் அங்கு எதாவது பிரச்சினை வந்து விட்டதோ என விஸ்வநாதன் பயந்து விட்டார். எனவே சிறிது நேரத்திலே தன் வீட்டினரை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் அவர் சம்மந்தி வீடு நோக்கி.
     விஸ்வநாதன் குடும்பம் உள்ளே நுழைய, அங்கிருந்த அசாதாரண சூழல் அவர்களுக்கு நன்றாக புரிந்தது.
     கணபதி ‘எதுக்கு நம்மல வர சொன்னாங்க’ என குழம்பி போனாலும், விஸ்வநாதனின் அழுத்தமான அழைப்பில் வந்திருந்தவர் அங்கிருந்தவர்களை கண்டுக் கொள்ளாது, எப்போதும் போல் சென்று அமர்ந்து கொண்டார்.
     ஆனால் அவர் தான் ஹர்ஷாவை கொல்ல முயன்றது என தெரிந்த நபர்கள் அவரை கொலை வெறியுடன் பார்த்து வைக்க, அதையும் அவர் கவனிக்காது இருந்தார்.
     “என்னாச்சுங்க சம்மந்தி உடனே வர சொல்லி போன் பண்ணி இருக்கீங்க. எதாவது முக்கியமான விஷயமா?”
     விஸ்வநாதன் ஒருவித பதட்டத்துடனே கேட்டு வைக்க, யாரும் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்‌. இப்போதும் கதிரே ஆரம்பித்தான், ஆனால் வசுந்தராவிடம் இருந்து.
     “வசுந்தரா தேவி மேடம் உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கனுமே”
     கதிர் ஏன் அவரிடம் பேச ஆரம்பிக்கிறான் என யாருக்கும் புரியாத போதும் அனைவரும் மௌனமாக பார்த்திருந்தனர்.
     “என்ன தம்பி கேக்கனும்” என வசுந்தரா கேட்க
     “இங்க ஹர்ஷா வீட்ல லாஸ்ட் டைம் நீங்க வரும் போது ஏன் ஹர்ஷாவ உங்க பையன்னு சொன்னீங்க” என கேட்டான்.
     வசுந்தரா அமைதி காக்கவும் “உங்களுக்கு பிறந்து இறந்ததா சொன்ன குழந்தை எந்த வருஷம் பிறந்தது?” என அடுத்த கேள்விக்கு தாவினான்.
     தன் இறந்த குழந்தையை பற்றி பேசவும் ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த வசுந்தரா “முப்பது வருஷம் ஆச்சு தம்பி” என்று தழுதழுத்தார்.
     “ஓஓஓ… சரிமா. ஆனா உங்களுக்கும் உங்க ஹஸ்பண்ட் கணபதி ராம் சார்கும் மேரேஜ் ஆகி இருபத்தி ஆறு வருஷம் தான் ஆகுது அப்படிதானே” என கதிர் நிறுத்த
     அங்கிருந்தவர்களில் யார் அதிகம் அதிர்ந்தனர் யார் குறைவாக அதிர்ந்தனர் என அனுமானிக்க முடியாது போனது.
     கணபதி ராம் தான் இடையில் புகுந்து “அப்படிலாம் இல்ல. வசு ஏதோ குழப்பத்துல அப்படி சொல்லிட்டா” என சமாளித்தார்.
     “என்ன வசுந்தரா மேடம் நீங்க எதுவும் பேச மாட்டேங்குறீங்க. உங்க முதல் குழந்தை பிறந்தது எப்போ? நீங்க மறந்துட்டீங்களா இல்ல தெரியாம உளறீட்டீங்களா?”
     கதிரோ மர்மமாக புன்னகைத்தவன் தொடர்ந்தான். “உங்க முதல் குழந்தை பிறந்தது கோயம்புத்தூர்ல ஆம் ஐ ரைட்” என்ற கதிர் கேள்வியாய்‌ நிறுத்த ஆம் என்பது போல் தலை அசைத்தார் வசுந்தரா.
     “சுபத்ரா ஆன்டியும் ராஜசேகர் அங்கிளும் கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல தான் கொஞ்ச நாள் வேலை பார்த்தாங்க. அதுவும் முப்பது வருஷத்துக்கு முன்னாடி. சரிதானே அங்கிள்”
     கதிர் இப்போது ராஜசேகரை பார்த்து கூற அவரும் ஆம் என தலை அசைத்தார்.
     கணபதி புசுபுசுவென மூச்சு வாங்க பார்த்திருந்தார் கதிரை. “இதெல்லாம் கேக்க நீங்க யாரு தம்பி. என் மனைவியே இப்பதான் எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்சம் நார்மல் ஆனா.
     நீங்க அது இதுன்னு பேசி அவளை கஷ்டப்படுத்துறீங்க. எங்க குழந்தை ஒன்னும் கோயம்புத்தூர்ல பிறக்கலை. நாங்க உடனே கிளம்பறோம்” என நிற்க கதிர் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.
     “உங்க ஹஸ்பண்ட் சொல்றாரே அது உண்மையா மேடம். எதாவது பேசுங்க” என வசுந்தராவை பார்த்து பேசிய கதிர் இப்போது தன் பையில் இருந்து ஒரு பைலை எடுத்து டேபிலில் போட்டான்.
     “முப்பது வருஷத்துக்கு முன்னே நீங்க செக் அப்கு போன கோயம்புத்தூர் ஹாஸ்பிடல்ல தந்த பைல் தான் இது”
     கதிர் இப்போது கணபதியை பார்த்து ‘இப்ப என்ன சொல்லப் போறீங்க’ என பார்த்து வைக்க அவர் வசுந்தராவிடம் தான் பேசினார்‌.
     “வா வசுமா நாம போகலாம். இங்க வேண்டாம்” என்றிட அசையாமல் அந்த பைலையே வெறித்து பார்த்திருந்தார் வசுந்தரா.
     “பொறுங்க கணபதி சார். நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல. அதுக்குள்ள போறேன்னு சொன்னா எப்படி”
     கணபதியை பார்த்து நக்கலாக கேட்ட கதிர் “பேசுங்க வசுந்தார மேடம். இவன் ஏன் இப்படி திடீர்னு வந்து கேள்வி கேக்குறான். இவன் யாரு அப்படின்னு தோனுதா.
     நான் ஏ.சி கதிர்வேல். ஹர்ஷாவோட சொந்தகாரன் தான். சரி இப்ப சொல்லுங்க. உங்க குழந்தை பிறந்து முப்பது வருஷம் ஆச்சு. ஆனா குழந்தையோட அப்பா உண்மையாவே இந்த கணபதி ராம் தானா என்ன?”
     கதிர் பேசி முடித்த நேரம், அவன் சட்டையை பிடித்துவிட்ட கணபதி ராம் “அது என்னோட குழந்தை தான். என் பொண்டாட்டிய பத்தி இனி தப்பா பேசுனீங்க மரியாதை கெட்டுடும்”
     என சீற விஸ்வநாதக்கும் தன் தங்கையை பேசியதில் கோபம் வந்துவிட்டது. ஆனால் கணபதி பேசும் போது இடையே பேசவில்லை ‌
     “இப்ப என்ன உண்மை என்னன்னு தெரியனும் அப்படிதானே. சொல்றேன் நானே சொல்றேன். நானும் வசுவும் கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ்ல தான் படிச்சோம்‌.
     ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா லவ் பண்ணுனோம். அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகலை. ஆனா குழந்தை வந்திருச்சு.
     அவ அண்ணனுக்கு ரொம்ப பயந்தா. ஆனா‌ நாங்கலாம் எப்படியோ அவளை தேத்தி குழந்தைய பெத்து எடுக்க வச்சோம்.
     ஆனா எவ்ளோ முயற்சி செஞ்சும் எங்க குழந்தை எங்களை விட்டு போய்ட்டா” என உணர்ச்சி பூர்வமாக பேசி முடித்தார்.
     கணபதியை பார்த்து பாராட்டாய் புருவம் உயர்த்திய கதிர் “வெல் மிஸ்டர் கணபதி ராம் உங்க கதை ரொம்பவ டச்சிங்கா இருந்தது. நானே ஒரு நிமிஷம் உருகிட்டேன்னா பாருங்க” என்றான்.
     அவன் பேச்சில் இருந்த நக்கலில் கணபதி தன் பற்களை கடித்தான். “என்ன கணபதி எவ்ளோ அழகா கதை சொல்றீங்க. சூப்பர் சூப்பர் சார்” என போலியாக பாராட்டிய கதிர்
     “என்ன வசுந்தரா மேடம் உங்க ஹஸ்பண்ட் மட்டுமே பேசிட்டு இருக்காரு. நீங்க என்ன இவ்ளோ அமைதியா இருக்கீங்க.
     நீங்க மத்தவங்கள வேணும்னா ஏமாத்தலாம் மேம். ஆனா என்னை யாரும் ஏமாத்த முடியாது. அங்க கோயம்புத்தூர்ல உங்களுக்கு என்ன நடந்ததுனு எல்லாமே எனக்கு தெரியும்”
     கதிர் அழுத்தி கூறியதில் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்த வசுந்தராவை ஒர பார்வை பார்த்தவாறே அனைவரிடமும் பேசினான்.
     “வசுந்தரா மேம் கோயம்புத்தூர்ல ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சாங்க. அங்க படிப்பு காலேஜ்னு இருந்தவங்கள ஒரு ஆள் லவ் பண்ண சொல்லி விடாம டார்சர் பண்ணியிருக்கான்.
     கொஞ்ச நாள் பொறுத்து பார்த்தவங்க நேரா அந்த ஆள்கிட்டையே போய் ‘இது தப்பு எனக்கு நீங்க பின்னாடி வரது பிடிக்கலை. இப்படி பண்ணாதீங்னு’ சொல்லி பாத்திருக்காங்க.
     ஆனா அந்த ஆள் இன்னும் கூட கொஞ்சம் டார்சல் தந்திருக்கான். ஒரு நாள் வசுந்தராவ கை பிடிச்சு இழுத்து அந்த ஆள் ரகளை பண்ண, இவங்க அந்த ஆளை எல்லார் முன்னாடியும் வச்சு அடிச்சிட்டாங்க.
     அது அவனுக்கு அவமானமா போயிருச்சு. சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவனுக்கு அந்த சந்தர்ப்பமும் ஒரு நாள் கிடைச்சது.
     ஒரு நாள் வசுந்தரா அவங்க பிரண்ட்ஸோட வெளிய போனப்ப இவங்கள கடத்திட்டு போய் அடைச்சு வச்சுட்டார். அதோட தன்னை அடிச்சு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தின வசுந்தராவ பழிவாங்க அவங்கள ரேப் பண்ணிட்டாரு.
     அந்த இன்சிடென்ட்ல தான்‌ வசுந்தரா பிரக்னென்ட் ஆனாங்க. சோ அந்த குழந்தைய பெத்துக்கலாமா வேண்டாமானு ஒரே குழப்பத்தில இருந்த வசுந்தராவ சுபத்ரா ஆன்டி தான் பேசி பேசியே அந்த குழந்தைய பெத்துக்க வச்சாங்க.
     அப்படி பிறந்த அந்த குழந்தை தான் ஹர்ஷவர்தன். வசுந்தரா மேடம ரேப் செஞ்சவரு ராஜசேகர் அங்கிளோட அண்ணன் ராஜாராம்”
     கதிர் கூறியவற்றை அதிர்ச்சியாக அனைவரும் கேட்டு நிற்க, ‘என் பையன் அப்படி கிடையாது’ என்று அருணாசலம் கூறுவதற்கு முன் “இல்ல” என்று வசுந்தரா கத்தி விட்டார்.
     “இல்ல இல்ல. நீ பொய் சொல்ற. என் ராம் ஒன்னும் அப்படிப்பட்டவர் கிடையாது” என கத்த “இல்லையா அப்போ என்ன நடந்ததுன்னு நீங்களே சொல்லுங்க” என கதிர் ஊக்கினான்.
     “சொல்றேன் சொல்றேன்” என்ற வசுந்தரா கணபதியை திரும்பி கூட பார்க்காது பேசினார்.
     “ராஜாராம், என்னோட ராம்” எனும் போதே அவர் குரல் அவ்வளவு உருகியது. “நான் கோயம்புத்தூர்ல படிக்கும் போது அந்த காலேஜ கட்ட வந்தாரு தான் ராம்.
      அப்படி தான் அவரை எனக்கு தெரியும். அவரோட சிரிப்பு அது அப்படி இருக்கும். அந்த சிரிப்பு நாம எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் அதை அப்படியே போக்கிடும்.
     எப்பவும் நாங்க எங்க ஹாஸ்டல் மரத்தடில தான் நின்னு பேசுவோம். அவரை ஒரு நாள் பார்க்கலைனாலும் அந்த நாள் என்னவோ போல இருக்கும்.
     அப்படி அவரை பார்த்த கொஞ்ச நாளுளையே அவர் என்கிட்ட அவரோட காதலை சொன்னாரு.
     எனக்கும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நானும் அவரும் அவ்ளோ உயிரா காதலிச்சோம்” என்ற வசுந்தரா தன் வாழ்வில் நடந்த உண்மைகளை பகிர்ந்தார்.
     கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போய் கேட்க வசுந்தரா யாரையும் கண் எடுத்து பார்க்காது தன் கடந்த காலத்திற்கு சென்றுவிட்டார்.

Advertisement