Advertisement

      எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்று வந்த ஹர்ஷா, அபி, விக்ரம் மூவரும் தங்களை சுத்தம் செய்து, உடை மாற்றி, மாலை சிற்றுண்டிக்கு வந்தனர்.
     இதுவும் சுபத்ரா ஹர்ஷாவிற்கு சொல்லி தந்த பழக்கம். அதை அவன் தன் தம்பிகளுக்கும் சொல்லி கொடுத்து, பின்பற்றவும் வைத்தான்.
     தனது ஒவ்வொரு செய்கையிலும் நேர்த்தியை கடைப்பிடித்தான் ஹர்ஷவர்தன். அதையே தன் தம்பிகளிடமும் எதிர்ப்பார்த்து கடைபிடிக்க செய்தான்.
     இவர்கள் மாலை சிற்றுண்டியை உண்ணும் போது அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார் பார்வதி. பார்வதிக்கு இப்போது ஒன்பதாம் மாதம் நடந்துக் கொண்டு இருக்கிறது.
     எனவே அவரை இன்னும் கவனத்துடன் பார்த்துக் கொண்டனர் குடும்பத்தினர். வேலைக்கு ஆட்கள் இருக்கவே பார்வதிக்கும் பெரிதாக வேலை எதுவும் இருக்கவில்லை.
     பார்வதி வந்து அமரவும் “ஹாய் அம்மு குட்டி. சாப்டீங்களா! சமத்தா அத்தைய டிஸ்டர்ப் பண்ணாம இருந்தீங்களா!!” என இன்னும் வெளியே வராத குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
     உடன் விக்ரம் அபியும் சேர்ந்து கொண்டனர். பார்வதி வளைகாப்பின் போது வளையல் எதற்கு என்று வளைத்து வளைத்து கேள்வி கேட்ட ஹர்ஷாவிடம் “வயிற்றில இருக்க குட்டிப் பாப்பாக்கு நாம பேசுறது அப்படியே கேக்கும்.
      அதுக்கு இந்த சவுண்ட் கேட்டா ரொம்ப ஹாப்பியா பீல் ஆகுமா. அதான் ஹார்ஷா குட்டி இந்த வளையல் எல்லாம்” என்று விளக்கி இருந்தார் பார்வதி.
     அன்றிலிருந்து ஹர்ஷா, வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் தினமும் ஒரு முறையாவது பேசி விடுவான். அண்ணன் பேசுவதை பார்த்து அபியும் பேச அவனுடன் போட்டி போடவே விக்ரமும் பேசுவான்.
     அதுவும் வயிற்றில் இருப்பது கண்டிப்பாக பெண் குழந்தை என நம்பும் ஹர்ஷா அம்முவென தான் அழைப்பான். மொத்தத்தில் அந்த மாலை வேளை குழந்தைகளின் குதூகலத்தில் புன்னகையுடன் நகரும் பார்வதிக்கு.
     தன் பேரப்பிள்ளைகள் பேசுவதை அருணாசலமும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தார். பார்வதிக்கு பிரசவ நாட்கள் அருகே வர வர அருணாசலம் வீட்டில் இருப்பதை தன் வழக்கமாக்கி கொண்டார்.
     அந்நேரம் பார்வதிக்கு வயிற்றில் சுருக்கென்று வலித்தது. முதலில் சாதாரண வலி தான் என்று நினைத்த பார்வதி அமைதியாக இருந்தார்.
     சிறிது நேரத்தில் வலி அதிகமாகவும் அருகே அமர்ந்திருந்த தன் தந்தை அருணாசலத்தின் கையை அழுத்தி பிடித்தார். அவர் பிடியின் வித்தியாசம் உணர்ந்த அருணாசலத்திற்கு ஏதோ தவறாக தோன்றியது.
     “என்ன பண்ணுது பார்வதி?” என்றார் பதட்டத்துடன். “அப்பா வலிக்குது பா…” என்றார் பார்வதி அவர் கையை இன்னும் அழுத்தமாக பிடித்து.
     ஒரு நிமிடம் என்ன செய்வதென்று அருணாசலத்திற்கு புரியவில்லை. அருகில் இதை பார்த்து கொண்டிருந்த பத்து வயது ஹர்ஷாவிற்கு நிலைமை ஓரளவு புரிந்துவிட்டது.
     அவன் சிறிதும் தாமதிக்காமல் தன் தந்தை சொல்லியிருந்த அவர்கள் மருத்துவமனை எண்ணிற்கு அழைத்து விட்டான் “அப்பா அத்தைக்கு வயிறு வலிக்குதாம்” என்ற தகவலோடு.
     ராஜசேகரும் விரைந்து ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பார்வதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்.
     அருணாசலத்தை தன் தம்பிகளுக்கு துணைக்கு இருத்தி விட்டு ஆம்புலன்சில் தான் பார்வதிக்கு துணையாக ஏறிக்கொண்டான் ஹர்ஷா.
     அருணாசலம் பயத்தில் இருந்து தெளிவதற்குள் அந்த சூழ்நிலையை அழகாக கையாண்டு மருத்துவமனைக்கே வந்து விட்டான் ஹர்ஷவர்தன் அருணாசலம்.
     பார்வதியுடன் தன் மகன் ஹர்ஷா மட்டும் தனியே வருவதை கண்டு புருவம் உயர்த்திய ராஜசேகர், அதை பிறகு கேட்டு தெரிந்து கொள்வோம் என தன் தங்கையுடன் சென்றார்.
     சிறிது நேரத்திலே வேதாசலமும் வந்துவிட்டார் அருணாசலம் தெளிந்து அளித்த தகவலால். அரை மணி நேரத்தில் பார்வதி அழகான ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார் நல்லபடியாக.
     இப்போது தான் அனைவருக்கும் நிம்மதி. அதே நேரம் அருணாசலத்தின் மூலம் ஹர்ஷா கண நேர செயல்பாட்டை அறிந்த ராஜசேருக்கு தந்தையாய் தன் மகனை எண்ணி பெருமையாக இருந்தது.
     வேதாசலத்திற்கு ஏற்கனவே ஹர்ஷாவை பிடிக்கும், இப்போது இன்னும் நிறைய பிடித்தது. வாழ்வில் அவன் பெரிய உயரம் அடைய மனதார கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.
____________________________________________
     “ஹர்ஷா குட்டி நீ சொன்ன மாதிரி பாப்பா தான் பிறந்திருக்கா. நீயே பேர் செலக்ட் பண்ணு” என்று ஹர்ஷாவின் முன் வந்து நின்றது வேதாசலமே. பார்வதி நல்லபடியாக வீடு வந்து ஒரு மாதம் ஆகிறது.
     இப்போது பெரிய மனித தோரணையில் நின்ற ஹர்ஷா “ம்ம் ஓகே மாமா. நான் ஏற்கனவே பாப்பாக்கு நேம் செலக்ட் பண்ணிட்டேன்.
     பேர் என்னன்னா…. ” என்று நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் “ஆதிரா” என்றான் தனக்கு உரித்தான குரலில்.
     அந்த பேரே பிடிக்கவும் ஒரு மனதான அதையே எல்லோரும் தேர்வு செய்தனர். ஹர்ஷாவிற்கு தன்னை விட பத்து வயது சிறிய குழந்தையை பார்க்கும் போது என்ன தோன்றியதோ அதை தன் குழந்தையாகவே பாவித்து கொண்டான்.
     அந்த வீட்டின் ஒரே பெண் குழந்தையாக போகவும் ஆதிராவே இப்போது அனைவரின் செல்லமாகி போனாள். அப்படி இருக்க தன் அன்னையின் சாயலை அவளிடம் கண்ட ஹர்ஷாவின் நிலை சொல்லவும் வேண்டுமா.
     நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவனின் பொழுது ஆதிராவுடனே கழிந்தது. அருணாசலம் இல்லமும் எப்போதும் மகிழ்ச்சியை தத்தெடுத்து இருந்தது.
     ஆண்டுகள் சில கடந்தது. அன்று பள்ளி விட்டு வரும் போதே அவனிடம் கேட்டுவிட வேண்டும் என்று வாசலிலே அமர்ந்திருந்தார் ராஜசேகர். இதை பார்த்த பார்வதி அமைதியாக சிரிப்புடன் கடந்து சென்றார்.
     நடந்தது இதுதான். நேற்று பள்ளி சென்ற அபிமன்யு தன் உடன் பயிலும் மாணவனுடன் சண்டையிட்டு உள்ளான். அதில் அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு விட்டது.
     இதை அறிந்த பள்ளி தாளாளர் இருவரையும் வரவழைத்து அடுத்த நாள் பெற்றோருடன் வரவேண்டும் என சொல்லி அனுப்பி இருக்கிறார்.
     ஆனால் அதை ராஜசேகரிடம் கூறவில்லை அபி. அந்த பள்ளி தாளாளர் ராஜசேகருக்கு தெரிந்தவரே. அவர் இன்று மதியம் அழைத்தவர் நடந்ததை கூறி
     “ராஜசேகர் உன் பெரிய பையன் தான் பா வந்தான். உன் பையன் அந்த பையனோட பேரன்ட்ஸையே நிக்க வச்சி கேள்வி கேக்குறான் பா. என்னாலையே ஒன்னும் பேச முடியலைனா பாத்துக்கோயேன்” என்று ஆச்சரியத்துடன் முடித்திருந்தார்.
     அப்படி என்ன தான் நடந்தது, தன் மூத்த மகன் என்ன செய்தான் என கேட்க தான் இன்று மருத்துவமனையில் இருந்து சீக்கிரம் வந்து அமர்ந்திருந்தார் ராஜசேகர்.
     எப்போதும் வரும் நேரம் சரியாக வந்து சேர்ந்தனர் ராஜசேகர் மகன்களும் அவர் தங்கை மகனும். “ஹர்ஷா இங்க வா கண்ணா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா” என்றார் ராஜசேகர் கொஞ்சம் கண்டிப்பான குரலில்.
     “இருங்க ப்பா நான் போய் ப்ரஷ் ஆகிட்டு ஃபைவ் மினிட்ஸ்ல வந்தர்ரேன்” என்று எப்போதும் போல் முகத்தில் உறைந்த புன்னகையுடன் கூறி நேராக தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான் ஹர்ஷா.
     ஹர்ஷாவிற்கு தன் தந்தை எதற்கு இப்படி நேரமே வந்து தன்னை அழைக்கிறார் என ஓரளவு புரிந்து விட்டது. தன் தந்தையை எண்ணி சிரித்துக் கொண்டவன் சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் அபியையும் அழைத்து கொண்டு வந்தான்‌.
     “என்ன ஹர்ஷா குட்டி இது. ஸ்கூல்ல இருந்து எனக்கு போன் வருது. அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்ன பண்ணீங்க. நீ எப்பவும் தப்பு செய்ய மாட்டனு நான் நினைச்சேன் ஹர்ஷா.
     இப்ப என்னப்பா இது” என அவர்கள் இருவரும் அமர்ந்தவுடன் ஆரம்பித்தார் ராஜசேகர். அவரை பொருத்த வரை ஹர்ஷா எந்த தவறும் செய்ய கூடியவன் இல்லை.
     ஆனால் தன் தம்பிக்கு என்றால் எதுவும் செய்பவன் தான் அதே ஹர்ஷா. எனவே தான் கண்டித்தால் தன் மகன் தவறு செய்ய மாட்டான் என்ற எண்ணம் அவருக்கு.
     ராஜசேகர் பேசுவதை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு. ஏனெனில் இந்த பிரச்சினைக்கு மூல காரணி அவனே. ஆனால் ஹர்ஷா ஒரு சிரிப்புடன் கேட்டு கொண்டான்.
     ராஜசேகர் பேசுவதை தடை செய்யாமல் முழுவதும் கேட்ட ஹர்ஷா இப்போது நடந்ததை சொல்ல துவங்கினான் “அப்பா என்ன நடந்தது அப்டின்னு நான் சொல்றேன்.
     அதை கேட்டுட்டு ஃபைனலா எங்க மேல மிஸ்டேக் இருந்தா நீங்க சொல்லுங்க. அபியோட பிரண்ட் கொஞ்சம் மிடில் கிளாஸ் பையன் பா. அவன கிளாஸ்ல இருந்த வேற பையன் அவன் ஸ்டேட்ஸ் வச்சு கிண்டல் பண்ணி இருக்கான் ப்பா.
     அதான் நம்ம அபி குட்டி போய் இது தப்பு நீ சாரி கேளுன்னு சாதாரணமா தான் சொல்லிருக்கான். ஆனா அந்த பையன் சண்டைய பெருசு பண்ணி அபிய அடிச்சிட்டான்.
     அதனால தான் அபியும் அந்த பையன தள்ளி விட பெஞ்ச்ல இடிச்சுக்கிட்டான். இது தான் ப்பா நடந்தது. நம்ப அபி அவன தள்ளி விட்டது தப்பு தான்.
     அதுக்கு நானே அவங்க பேரன்ட்ஸ் கிட்ட சாரி கேட்டுட்டேன். பட் அந்த பையன் ஸ்டேட்ஸ் பத்தி எட்டு வயசுலையே பேசுறது ரொம்ப ராங் தானே ப்பா.
     சோ அதான் நான் அவங்ககிட்ட பர்ஸ்ட் உங்க பையனுக்கு மேனர்ஸ்ச சொல்லி கொடுங்கன்னு சொன்னேன். இதுல நான் செஞ்சது எதாவது தப்பா அப்பா” என்று தான் செய்ததில் தப்பில்லை என்பதை சுட்டிக் காட்டினான்.
      “அப்போ ஏன்டா என்கிட்ட சொல்லலை அப்பா அம்மா யாரையாவது தானே கூப்டு வர சொன்னாங்க” என்ற தன் தந்தையின் கேள்விக்கு
     “அப்பா நீங்க ஆல்ரெடி பிஸியா இருந்தீங்க. அது மட்டும் இல்லாம இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் உங்கள, அத்தையைலாம் டிரபில் பண்ண வேணாம்னு நானே டீல் பண்ணிட்டேன்”
     என இதெல்லாம் ஒரு விஷயமா என்று பேசி சென்றான் ஹர்ஷா. ஆனால் அவன் தந்தைக்கு தான் தன் பிள்ளையின் மேல் பெரும் மதிப்பு வந்துவிட்டது.
     அப்படி தான் ஒரு நாள் அருணாசலம் தன் மகன் ராஜசேகர் மற்றும் மகள் பார்வதி வேதாசலம் என மூவரையும் அழைத்து தன் சொத்துக்களை பிரிக்கப்போவதாக கூறினார்.
     இதை கேட்டு அதிர்ந்த அவர்களின் பிள்ளைகள் அதிர்ந்தனர். ஏன் என கேட்டதற்கு அருணாசலம் எதுவும் சொல்லாது அமைதி காத்தார்.
     அப்போது இதை எல்லாம் கேட்டு அங்கே வந்த ஹர்ஷா “தாத்தா நீங்க ஆசைப்படுறது மாதிரி சொத்தை பிரிச்சுருங்க. ஆனா கோமதி அத்தை ஷேர மட்டும் அசட்ஸ்ஸா குடுத்துடுங்க.
     அப்பா பார்வதி அத்தை ஷேர் அப்படியே இருக்கட்டும். அன்ட் இந்த வீடு மூனு பேருக்கும் காமனா இருக்கட்டும். என்ன சொல்றீங்க தாத்தா” என்றான் அதை ஒத்துக் கொண்டு ஆக வேண்டும் என்ற தினுசில்.
      அவன் கோபமாக கூறுவதை போல் தெரிந்தது. அதை கேட்ட அருணாசலத்திற்கு ஆச்சரியம் ‘இவனுக்கு எப்படி தெரியும் என’.
     அவன் கூற்றை கேட்ட மற்ற மூவருக்கும் எதுவோ புரிவது போல் இருந்தது அவனின் கோபத்தால். ஏனெனில் ஹர்ஷா அவ்வளவு எளிதில் கோபம் கொள்பவனும் இல்லை.
     எனவே தங்கள் சகோதரி கோமதி தான் சொத்தை பிரித்து கேட்டிருக்கிறார் என்று ஹர்ஷாவின் கூற்றில் புரிந்தது.
     “அப்பா உங்க இஷ்டம் ப்பா. எனக்கு ஹாஸ்பிடல் போதும் ப்பா. மீதிய தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் பிரிச்சு கொடுத்துருங்க” என்று தன் முடிவை சொல்லி விட்டார் ராஜசேகர்.
     அண்ணன் கூறியதை கேட்ட பார்வதி “அப்பா எனக்கு எதுவும் வேணாம். கோமதி அக்காக்கு என்ன வேனுமோ அதை கொடுத்துருங்க.
     எனக்கு கடைசி வரைக்கும் உங்க கூடவும் அண்ணே கூட இருக்கிறதே போதும் ப்பா” என்றுவிட்டார் பார்வதி. உண்மையில் கோமதி தான் சொத்தை பிரித்து கேட்டிருந்தார்.
     அதனாலே அருணாசலம் இந்த பேச்சை ஆரம்பித்தார். எப்படி தன் மற்ற இரு பிள்ளைகளிடம் சம்மதம் வாங்க போகிறோம் என குழம்பிய அருணாச்சலத்திற்கு அந்த வேலையை சுலபமாய் முடித்து கொடுத்து விட்டான் ஹர்ஷவர்தன்.
      முதல் நாள் கோமதியிடம் பேசும் போது அருணாசலத்திற்கு மாத்திரை கொடுக்க வந்த ஹர்ஷா கேட்டு விட்டான்.
     நேற்றிலிருந்து கோபத்தில் இருந்தவன் இன்று அருணாசலம் விஷயத்தை பேசவும் தன் எண்ணத்தை கூறி விட்டான்.
     தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளையை எண்ணி பூரித்துப் போன அருணாசலம் தன் பேரனின் முடிவையே உறுதி செய்து கொண்டார்.
     மொத்தத்தில் ஹர்ஷா மூத்த மகனாக அந்த குடும்பத்தில் தன் தம்பி தங்கை மட்டும் அல்லாது, தன் தந்தை தாத்தா மாமா அத்தை என எல்லோருக்கும் யோசனை கூறும் அளவு வளரும் போதே தன் ஆளுமையையும் வளர்த்துக் கொண்டவன் அனைவருக்கும் ஆச்சரியக்குறியாகி நின்றான்!!
-மீண்டும் வருவான்

Advertisement