Advertisement

     ராஜசேகரின் பதிலில் குழம்பி அனைவரும் நிற்க “என்ன மச்சான் சொல்றீங்க. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களே” என்று இடைப்புகுந்தார் வேதாசலம்.
     “சொல்றேன் மச்சான். இந்த விஷயம் தெரிய வந்தப்ப எனக்கும் ரொம்பவே அதிர்ச்சியா தான் இருந்தது. ஒரு நிமிஷம் இதை பாருங்க நான் சொல்றது என்னன்னு உங்களுக்கு புரியும்”
     ராஜசேகர் பேசிவிட்டு அவர் அலமாரியில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வந்து நீட்ட அனைவரும் அதை வாங்கி பார்த்து அதிர்ந்தனர்.
     “அப்பா என்னப்பா இது. எனக்கு சுத்தமா புரியலை. நீங்க அண்ணாவோட பையலஜிகல் பாதர் இல்லனு சொன்னீங்க. ஆனா இந்த டி.என்.ஏ டெஸ்ட் பாஸிட்டிவ்னு இருக்கு. இது எப்படிப்பா”
     அபி குழம்பிப் போய் கேட்க, மற்றவர்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் முகமும் அந்த கேள்வியையே தாங்கி இருந்தது.
     “உண்மையாவே எனக்கும் தெரியலை அபி. ஹர்ஷா எங்க கைக்கு வந்த அப்புறம் அவனை வேறையா நினைச்சது இல்ல.
     ஆனா ஒரு நாள் நம்ம வீட்டு விருந்துக்கு வந்த அனுவோட அத்தை ஹர்ஷா அவங்க பையனு சொல்லவும் எனக்கு ரொம்ப பயமாகி போச்சு. எங்க என் பையனை என்கிட்ட இருந்து யாராவது பிரிச்சிடுவாங்களோனு தினம் தினம் அவஸ்தைல இருந்தேன்”
     ராஜசேகரின் முகம் அந்த வேதனையை இப்போதும் பிரதிபலித்தது.
     “அப்பா கண்ட்ரோல் யுவர்செல்ப்” என அபி ஆறுதலாக தோளை பிடித்துவிட, மெலிதாக புன்னகைத்த ராஜசேகர் தொடர்ந்தார்.
     “அப்போ தான் ஒரு நாள் பசங்க எல்லாம் யாரை மாதிரி இருக்கோம்னு விளையாட்டா பேசிட்டு இருந்தாங்க” என அந்த நாளை நினைவு படுத்தினார்.
     அருணாசலம் அப்போது தான் ஹர்ஷா தன் அன்னை மற்றும் மூத்த மகனை உரித்து வைத்திருப்பதாக கூறி சென்றார்.
     அன்றே அருணாசலம் மயங்கி விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அதில் தான் அண்ணனின் நினைவு வந்தது ராஜசேகருக்கும். அந்த நினைவில் அவரிகளின் வாலிப வயதில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருந்தார்.
     அவர் அண்ணன் முகம் ஹர்ஷாவை நினைவுப்படுத்த, ஹர்ஷாவின் புகைப்படத்தை தன் அண்ணனின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்த ராஜசேகர் அதிர்ந்து போனார்.
     ஏனெனில் அவரின் அண்ணனின் உருவத்தை அப்படியே கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அதன்பின் வந்த நாட்களில் ராஜசேகர் ஹர்ஷாவின் ஒவ்வொரு செய்கையையும் உன்னித்து கவனிக்க தொடங்கினார்.
     அப்படி கவனிக்குப் போது அவரே ஆச்சரியம் கொள்ளும் வகையில் ஹர்ஷா ராஜசேகரின் அண்ணனை ஒவ்வொரு நொடியும் நினைவுப்படுத்தினான்.
     ஹர்ஷாவின் கையை பிடித்து அமர்ந்துக் கொண்டு தான் பேசிக் கொண்டிருந்த ராஜசேகர் அவனின் கண்ணத்தை தடவிக் கொடுத்தார்.
     “என் ஹர்ஷா என் அண்ணன் பையன்னு நான் முடிவுக்கு வந்ததுக்கு  ஒரு முக்கியமான காரணம் இவனோட சிரிப்பு தான். அப்படியே என் அண்ணனோட சிரிப்பு.
     என் அண்ணன் சிரிச்சா அதுல ஒரு உயிர்ப்பு இருக்கும். அவன் சிரிச்சாலே எங்க கவலை காணாம போயிரும்‌. அது மட்டும் இல்லாம அவன் அவனை பத்தி நினைச்சதை விட எங்களை பத்தி நினைச்ச நாட்கள் ரொம்ப அதிகம்.
     அந்த குணம் அது அப்படியே என் ஹர்ஷா கிட்ட இருந்தது. அதான் என் சந்தேகத்தை உறுதி பண்ணிக்க அவனுக்கே தெரியாம நான் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செஞ்சேன்”
     ராஜசேகர் பேச பேச அவர் முகத்தில் தோன்றிய பூரிப்பு சொல்லியது அவரின் அண்ணன் மேல் அவருக்கு இருக்கும் பாசம் எப்படிபட்டது என.
     டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்த ராஜசேகர் ஹர்ஷா ஒரு நோயாளிக்கு ரத்தம் தரும் நேரம் அவனே அறியாது அந்த மாதிரியை எடுத்துக் கொண்டார்.
     அதோடு தன் ரத்த மாதிரியையும் எடுத்து அவரே சென்று பரிசோதனை செய்ய சென்றார். அந்த மாதிரிகளை தனியாக ஒரு லாக்கரில் வைத்து பூட்டியவர் ஒரு நாள் முடிந்த பின்னர் வந்து எடுத்தார்.
     அந்த ஒரு நாள் முடியும் முன் இரவு உறக்கம் தொலைத்து விட்டார் மனிதர். அடுத்த நாள் விடிந்தவுடன் மருத்துவமனை சென்று அந்த மாதிரிகளை சோதனை செய்தார்.
     முடிவு வருவதற்குள் வேர்த்து விறுவிறுத்து போய்விட்டது. அந்த இயந்திரம் முடிவை காட்ட அதை பார்ப்பதற்குள் கை கால்கள் எல்லாம் நடுங்கியது.
     இத்தனை வருட மருத்துவ அனுபவத்தில் நடுக்கம் கொள்ளாத அவர் இதயம் இப்போது தாறுமாறாக நடுங்க, அதே நடுக்கத்தோடு முடிவை பார்த்தவர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.
     மகிழ்ச்சியில் அவருக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. ஏனெனில் அந்த முடிவு ஹர்ஷா அவரின் ரத்தம் என வந்து நின்றது.
     “எனக்கு அந்த நிமிஷ சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியலை. அவ்ளோ நாள் என் மனசுல இருந்த பயம் இன்செக்யூரிட்டினு எல்லாமே காணம போன பீல்.
     ஏன்னா நம்ம வீட்ல விருந்து நடந்தப்பவே அனுவோட அத்தை ஹர்ஷாவ அவங்க பையனு அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.
     அப்போல இருந்தே நான் எவ்ளோ பயத்துல இருந்தேன் தெரியுமா கண்ணா. அந்த டி.என்.ஏ டெஸ்ட் எனக்கு ஆயிரம் யானை பலம் தந்தது தெரியுமா”
     ராஜசேகர் பேச்சில் இருந்தே அவர் இத்தனை நாட்கள் மனதிற்குள் எவ்வளவு தவித்து போய் இருந்திருப்பார் என மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.
     “இந்த டெஸ்ட் ரிப்போர்ட் வச்சு பார்த்ததுல எனக்கு ஏற்கனவே இருந்த சந்தேகம் உறுதியாச்சு. அது என்னன்னா என் ஹர்ஷா குட்டியோட பயாலஜிக்கல் பாதர் என் அண்ணன் ராஜாராம் தான்னு”
     ராஜசேகர் சொல்லி முடிக்கவும் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு பாவனையை காட்டியது. வேதாசலம், அபி, விக்ரம் மூவருக்கும் ஹர்ஷா இந்த வீட்டின் வாரிசு தான் என்பதில் அப்படியொரு மன நிம்மதி.
     கதிரின் முகமோ இது ஒன்றும் எனக்கு புதிய தகவல் இல்லை என்பது போல் இருந்தது‌.
     இவர்கள் அனைவரும் இப்போது திரும்பி ஹர்ஷாவின் முகத்தை காண, அதில் எந்த பாவமும் இல்லை. நீண்ட முப்பது வருடங்களாக இவர்களே என் தாய் தந்தை என எண்ணி இருந்த வேலையில்,
      அவர்கள் உன் பெற்றோர் இல்லை என்று கூறினால் அவன் மனநிலை எப்படி இருக்கும் என அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை.
     ஹர்ஷாவின் மறுபுறம் அமர்ந்திருந்த அபி “அண்ணா” என்று அழைக்க, ஹர்ஷா எதுவும் பேசாமல் அவனை வெறுமனே பார்த்து வைத்தான்‌.
     “அண்ணா நீ எப்படி இருந்தாலும் என் அண்ணன் தான். அதோட இந்த வீட்டு பையன் தான். நீ எப்படி யாரா இருந்தாலும் நாங்க கவலைப்பட போறதில்ல. தயவு செஞ்சு நீ மட்டும் இப்படி இருக்காத ண்ணா கஷ்டமா இருக்கு”
     அபி ஹர்ஷாவின் கையை பிடித்து கொண்டு அழுக ஹர்ஷாவின் கை அந்த நேரத்திலும் அபியின் தலையை தடவிக் கொடுத்தது.
     சிறிது நேரம் அபியின் அழுகுரல் தவிர வேறு எதுவும் அந்த அறையில் கேட்கவில்லை.
     “அப்பா உங்க அண்ணாக்கு யாரோட கல்யாணம் ஆகி இருந்தது. என்னோட பயாலஜிக்கல் மதர் யாரு?”
     இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஹர்ஷாவிடம் இருந்து இந்த கேள்விகள் தான் வந்தது. பெயருக்கு கூட தான் பிறக்க காரணமானவர்களை ஹர்ஷா அப்பா அம்மா என்று கூறவில்லை.
     அதை அவன் மனது ஏற்றுக் கொள்ளவில்லையா இல்லை அவன் தந்தையின் மனதை நோக செய்ய ஹர்ஷாவின் மனது ஒத்துக் கொள்ளவில்லையா என்பதை அவனே அறிவான்.
     ஆனால் அவன் விளிப்பில் ராஜசேகர் உயிர்த்தார் என்றால் அது மிகையல்ல. அதன்பின் சற்று யோசித்த ராஜசேகர் ஒரு பெருமூச்சுடன் கூறினார்.
     “எனக்கு தெரிஞ்சு என் அண்ணாக்கு கல்யாணம் ஆகலை கண்ணா. அப்பா அண்ணாக்கு தீவிரமா பொண்ணு பார்த்துட்டு இருந்தார்.
     அது எனக்கு நல்லா தெரியும். எனக்கும் உங்க அம்மாவுக்கும் கல்யாணம் ஆன ஒரு நாலு மாசத்துலையே என் அண்ணா ஆக்சிடென்ட்ல இறந்து போனதா அப்பா சொன்னாங்க.
     ஏன்னா அந்த டைம் அப்பாவால என்னை காண்டேக்ட் பண்ணவும் முடியலை. அப்போ மொபைல் போன்லாம் கிடையாது. அதுமட்டும் இல்லாம நான் கோயம்புத்தூர்ல இருக்கோம்னு அப்பாக்கு தெரியாது.
     நம்மல இங்க தாத்தா கூட்டிட்டு வந்தப்ப தான் தாத்தா எல்லா விஷயத்தையும் சொன்னாரு. உன்னோட பயாலஜிகல் மதர் யார்னு தெரியாது கண்ணா”
     இதை கேட்ட பின் ஹர்ஷா “நான் உங்க கைக்கு வந்து சேரும் போது உங்க அண்ணா உயிரோட இருந்தாரா?” என்று கேட்க, சற்று யோசித்த ராஜசேகர்
     “இல்ல ஹர்ஷா கண்ணா. உங்க தாத்தா சொன்னது நாங்க கோயம்புத்தூர் போய் நாலு மாசத்துல அண்ணா இறந்துட்டார்னு.
     அப்படி பார்த்தா என் அண்ணா இறந்து ஐஞ்சு மாசம் கழிச்சு தான் நீ எங்களுக்கு கிடைச்சடா குட்டி” என்று வருத்தத்துடன் கூறினார்.
     அதற்கு சரி என்பது போல் தலை அசைத்த ஹர்ஷா இதுவரை எல்லாத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு ராஜசேகரிடம் திரும்பி கேட்ட கேள்வியில் அனைவரும் அதிர்ந்தனர்.
     “அப்போ நான் பை பர்த் ஒரு இல்லீகல் சைல்ட் இல்லப்பா”
     அவன் குரலில் இருந்த ஆதங்கம் வெறுமையை உணர்ந்த ராஜசேகர் துடித்துவிட்டார். அவர் இதுவரை இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை.
     இப்போது மகன் கூறியது புரிந்ததும் தான் அவன் தந்தைக்கு ஹர்ஷாவின் குணமே நினைவு வந்தது.
     வாழ்வின் சிறு விஷயத்தில் கூட ஒழுக்கத்தை உயிராக கருதும் ஹர்ஷாவிற்கு தன் பிறப்பு குறித்து எவ்வளவு வேதனை எழும் என்று யோசித்த ராஜசேகர் வருத்தம் கொண்டார்.
     இதற்கு அவர் என்ன பதில் சொல்வது. எதை கூறினாலும் அது ஒரு சமாதானமாக தான் இருக்குமே தவிர உண்மையை மாற்ற முடியாதே.
     “ஹர்ஷா நான் சொல்லி உனக்கு தெரியனும்னு இல்ல மச்சான். நாம எப்படி பிறந்தோங்கறது முக்கியமே இல்ல. நாம வாழுற வாழ்க்கையில எப்படி இருக்கோங்கறது தான் முக்கியம்.
     இதை கூட நீதான்டா சொன்ன. அப்படிப்பட்ட நீயே இப்படி பேசுலாமா மச்சான்” விக்ரம் ஹர்ஷா கூறியதை தவறென சுட்டிக் காட்டினான்.
     ஆனால் அவனுக்கும் ஹர்ஷாவின் மனதின் கஷ்டம் புரியத்தான் செய்தது. நேரம் இப்படி செல்ல கதிர் “நான் கொஞ்ச பேசலாமா?” என்றான் இடையே.
     “ஹர்ஷா உங்க மைன்ட் செட் இப்ப எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது‌. ஆனா நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இன்னும் நிறைய இருக்கு‌.
     இந்த ஒரு வாரம் நான் கணபதிய பத்தி விசாரிக்க அவர் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு போயிருந்தேன். அங்க எனக்கு கிடைச்ச நிறைய விஷயம் ரொம்பவே அதிர்ச்சி தந்தது.
     அன்ட் இதையெல்லாம் கேட்டா நீங்க எப்படி எடுத்துக் போறீங்கனும் எனக்கு தெரியலை. அதோட நான் சொல்லப்போற விஷயம் அருணாசலம் தாத்தாக்கும் தெரிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுது”
     கதிர் பேசி முடித்தவுடன் “அப்பா என்னை பத்தின டீட்டெய்ல்ஸ் நம்ம வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரியனும்” என ஹர்ஷா அழுத்தி கூறி நிறுத்தினான்.
     மற்றவர்கள் எவ்வளவோ வேண்டாம் என எடுத்து கூறியும் ஹர்ஷா தன் பிடியிலே நிற்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வெளியே வந்தனர்.
     “அபி விக்ரம் வீட்ல இருக்க எல்லாரையும் வர சொல்லுங்க” என்ற ஹர்ஷா தன் தந்தை மாமா மற்றும் கதிருடன் சென்று சோஃபாவில் நடுநாயகமாக அமர்ந்துக் கொண்டான்.
     அபியும் விக்ரமும் ‘வேணாம்’ என எவ்வளவோ கொஞ்சியும் ஹர்ஷா அசைந்துக் கொடுக்காமல் இருக்க, வேறு வழி இல்லாமல் அனைவரையும் அழைக்க சென்றனர்.
     இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தத்தில் பார்வதி வந்து என்னவென கேட்க “நம்ம வீட்ல இருக்க எல்லாரும் வரட்டும் அத்தை” என்றுவிட்டான் ஹர்ஷா.
     அங்கு அமர்ந்திருந்த அனைவரின் முகத்தையும் கண்டு பார்வதிக்கே அச்சம் வந்தது. விஷயம் பெரியது என புரிந்தவர் தானும் அமர்ந்துக் கொண்டார்.
     சிறிது நேரத்தில் அருணாசலம், அம்மு, அனு என அனைவரும் வந்துவிட, எதற்கு அனைவரையும் ஹர்ஷா வரச் சொன்னான் என ஒருவரும் புரியாது குழம்பி நின்றனர்.
     ஹர்ஷா இப்போது ராஜசேகரை திரும்பி பார்க்க, அவரோ விட்டால் இப்போதே அழுது விடுபவர் போல் இருக்க அவரை சோதிக்க விரும்பவில்லை ஹர்ஷாவும்.
     அவரும் எத்தனை தடவை தான் மனதை கல்லாக்கிக் கொண்டு ஹர்ஷாவை தன் மகன் இல்லை என கூறுவார். அதை புரிந்தபடி ஹர்ஷா தானே பேச தொடங்கினான்.
     “நான் ராஜசேகர் அப்பாவோட பயாலஜிகல் பையன் இல்ல”
     ஹர்ஷா ஒற்றை வரியில் முடித்துவிட்டான். ஆனால் அந்த ஒற்றை வரி அந்த குடும்பத்தின் அனைவரின்‌ மனதிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி சென்றது என்பதை சொல்வதிற்கு வார்த்தைகள் இல்லை.
-மீண்டும் வருவான்

Advertisement