Advertisement

     “சேகரா…!” என்ற அருணாசலத்தின் குரல் அவ்வளவு அதிர்வுடன் ஒலித்தது. ராஜசேகருக்கு அவன் தந்தை மற்றும் தங்கைகளை பார்க்க பார்க்க குற்ற உணர்ச்சி எழுந்தது.
     ஆனால் அவன் அருகில் நின்றிருந்த சுபத்ராவை எண்ணி அதை முகத்தில் காட்டாமல் நின்றிருந்தான்.
     “அப்பா இவ சுபத்ரா. இவளுக்கு அவங்க வீட்ல கல்யாணம் முடிவு பண்ணீட்டாங்க. அதனால அவ என்னைய மட்டுமே நம்பி அவ வீட்ட விட்டு வந்துட்டா.
     அப்படி வந்தவள என்னால எப்படிபா விட முடியும். அதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அண்ணா தங்கச்சி எல்லாரும் இருக்கும் போது நான் என்னோட வாழ்க்கைய மட்டும் நினைச்சது சுயநலம்னு புரியுது பா.
     ஆனா எங்களுக்கு வேற வழியும் இல்ல. இது சம்பந்தமா நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் ஒத்துக்கிறேன்”
     ராஜசேகர் கண்ணை மூடி கொண்டு தன் தரப்பில் நடந்ததை அப்படியே ஒப்பித்து, அருணாசலம் பேசுவதற்கு தனக்கு தரும் தண்டனையை ஏற்பதற்கு தயாராக நின்றிருந்தான்.
     அருணாசலத்திற்கு ராஜசேகரின் சூழ்நிலை ஓரளவு புரிந்தது. ஆனால் வீட்டில் இருக்கும் மற்ற பிள்ளைகளின் முகம்‌ அவர் எடுக்கும் முடிவுகளை அப்போது தீர்மானித்தது.
     “நீ உன் தரப்பு நியாயத்தை சொல்லிட்ட. ஆனா நீ என்ன தான் சொன்னாலும் இப்படி என்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறது எனக்கு மனசு ஒப்பலை.
     எனக்கு இனிமே நாலு பிள்ளைங்க இல்ல, மூனு பிள்ளைங்க தான்னு முடிவு பண்ணிட்டேன். உன் பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு இந்த நிமிஷமே வீட்டை விட்டு வெளிய போ!”
     அருணாசலத்தின் குரல் உயரவில்லை. ஆனால் வார்த்தைகள் கணமாக, அழுத்தமாக வெளிவந்தது.
     இனி யார் பேசினாலும் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என புரிந்து கொண்டான் ராஜசேகர்.
     தன் தந்தை கூறியபடி தன் பொருட்களை எடுத்து கொண்டு அந்த வீட்டை விட்டே தன் மனைவியுடன் வெளியேறினான்.
     “அண்ணா போகாத பிளீஸ்!” என்று கெஞ்சியபடி வந்த அவன் தங்கைகளை பார்த்து புன்னகைத்து
     “நம்ம அண்ணா இருக்காருடா. அவன் உங்களை பார்த்துப்பான். நீங்க என்னை பத்தி கவலைப்படாதீங்கடா. நான் சீக்கிரம் உங்க அண்ணியோட திரும்ப வருவேன்” என்று சமாதானம் செய்தவன் சுபாவோடு கிளம்பியே விட்டான்.
     “சாரிங்க! என்னால தானே உங்களையும் வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. எல்லாம் என்னால தான்”
     சுபத்ரா இதோடு பத்தாவது முறையாக தலையில் அடித்து கொண்டு அழ, போவோர் வருவோர் எல்லோரும் அவர்களையே பார்த்து சென்றனர்.
     அவர்கள் இருந்தது மத்திய ரயில் நிலையத்தில். அருணாசலமும் வெளியே அனுப்பிய பிறகு இனி இந்த ஊரிலே இருக்க கூடாது என முடிவு செய்தனர் தம்பதியர்.
     எனவே வெளியூரில் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டு,
     அந்த ஊருக்கே போகும் பொருட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர் இருவரும். எப்போது ராஜசேகரை அவன் தந்தை வெளியேற்றினாரோ அப்போது இருந்து சுபத்ரா இதையே எண்ணி புலம்பி கொண்டு இருக்கிறாள்.
     அவள் கணவனும் சலிக்காது அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்.
     “சுபா! போறவன் வாரவன் எல்லாம் நம்மல தான்டி ஒருமாதிரி பாத்துட்டு போறானுங்க. ஏன்டி இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்க.
     இப்படியே நல்லா அழு. என்னமோ நான் உன்னை மிரட்டி கடத்திட்டு போறேன்னு எவனாவது போய் கம்ப்ளைன்ட் பண்ண போறான் பாருடி.
     ஒரு டாக்டர் மாதிரியா நடந்துக்குற. இப்படியே அழுதுட்டு இருந்த இங்கையே உன்னை கலட்டி விட்டுட்டு போக போறேன் பாரு” என கோபமாக கத்திவிட்டு
     “வெளியே போக சொன்னதுக்கு நானே பீல் பண்ணல. இவ உக்காந்து ஓன்னு அலறா” என்று வேறு ராஜசேகர் கோபமாக முணுமுணுத்தான்.
     எல்லாம் கேட்ட பின்னரே அழுகாமல் சுபத்ரா அமைதி ஆனாள். அதிலும் ராஜசேகர் கோபமாக பேசியது ஏன் இதுவரை பார்த்தது கூட இல்லை.
     அதனால் கோபமாக பேசிய ராஜசேகரை ஆச்சரியமாக பார்த்து வைத்தாள் சுபத்ரா. அவள் அப்படி பார்க்கவும்
     “என்னடி? ஏன் அப்படி பாக்குற. என் முகத்துல அப்படி என்ன தெரியுது” என கடுப்புடன் கேட்டான் கணவன்.
     “உங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா?” என்று ஆச்சரிய பாவனையில் கேட்க, சிரித்து விட்டான் ராஜசேகர்.
     “ஏன்டி என்ன பாத்தா எப்படி தெரியுது. நானும் மனுஷன் தான்டி. எனக்கும் கோவம் எல்லாம் வரும்” என்று கூறிய ராஜசேகர்
     “இங்க பாரு சுபா. நான் உனக்கு இப்ப சொல்றது தான் எப்பவும். நல்லா கேட்டுக்கோ. உன் வீட்ல இனிமே நம்மல ஏத்துக்கிறது ரொம்ப கஷ்டம்.
     என்னோட வீட்ல என் அண்ணன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாம நம்மல வீட்டுக்குள்ள உன் மாமனாரு சேத்துக்கமாட்டாரு.
     ஆனா நாம நல்லா இருக்கனும்னு தான் என் வீட்ல இருக்க எல்லாரும் ஆசைப்படுவாங்க. சோ நீ இப்படி அழுது உன் ஹெல்த்த கெடுத்துக்கிறதுல நோ யூஸ்.
     அதனால நீ என்ன பண்றனா உன் புருஷன் என்ன மட்டும் நல்லா பாத்துக்கிட்டனா போதும்” என நீளமாக பேசி முடிக்கும் நேரம் அவர்கள் ரயிலும் வந்தது.
     ராஜசேகர் பேச்சில் முகம் சிவந்தது சுபத்ராவிற்கு. அவள் முகத்தை கண்டு தானும் மகிழ்ந்தார் ராஜசேகர்.
     தங்கள் புதியதொரு வாழ்விற்கு நல்ல தொடக்கமாக எண்ணிய தம்பதியர், அந்த ரயிலில் தங்களின் முதல் அடியை அவர்களின் வாழ்வின் முதல் அடியாக எண்ணி வைத்தனர்.
     அந்த இரவு நேர நீண்ட ரயில் பயணத்தை ராஜசேகரின் தோல் வளைவில் நன்றாக சாய்ந்து ரசித்தபடி வந்தாள் சுபத்ரா.
     காலை விடியல் நேரம் அந்த ரயில் கோயம்புத்தூரை போய் சேர, அந்த சூரிய உதயம் அவர்கள் வாழ்வையும் அழகாய் தழுவி சென்றது.
     கோயம்பத்தூர் சென்ற ராஜசேகர் சுபா இருவரும் அவர்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்த நண்பனின் வீட்டிற்கு சென்று, அவன் மூலமாக அங்கிருந்த மருத்துவமனையில் பணியில் சேர்ந்துக் கொண்டனர்‌.
     அதன்பின் அவர்களுக்கு ஏற்றவாறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்களின் வாழ்வை அழகாக தொடங்கினார்கள்.
     இவர்கள் வாழ்க்கை சுமூகமாக ஆனந்தமாக செல்ல, அதை கலைக்கும் வண்ணம் புயல் ஒன்று அவர்கள் வாழ்வை நெருங்கியது.
     ஒரு நாள் சுபா அதீத வயிற்று வலியின் காரணமாக வேலையை விட்டு பாதியிலே வீட்டிற்கு வந்து விட்டாள். எப்போதும் மாதவிடாய் நாட்களில் சுபாவிற்கு வயிறு வலி கொஞ்சம் இருக்கும்.
     ஆனால் இன்றோ அளவுக்கு அதிகமான உதிரப்போக்கும் அதீத வயிற்று வலியும் அவளை துவண்டு போக செய்தது. எனவே வலியில் துடித்தவள் சாப்பிடாமல் கூட படுத்துவிட்டாள்.
     ராஜசோகரோ அன்று முழு நாளும் மருத்துவமனையில் வேலை செய்துவிட்டு வந்தவர், சுபா உறங்கி கொண்டிருப்பதை கண்டு யோசனையுடன் புருவத்தை சுருக்கி அவள் அருகில் சென்றான்.
     “சுபா என்னம்மா இந்த டைம் தூங்குற.‌ என்னாச்சு என்னடா செய்யுது”
     ராஜசேகர் பரிவுடன் கேட்டு அவள் தலையை கோதி விட, தூக்கத்தில் இருந்து விழித்தாள் சுபத்ரா. அவள் விழிகளில் அவ்வளவு சோர்வு.
     அதில் பதறிப்போன ராஜசேகரோ என்னவென்று விசாரிக்க அவளும் சற்று நேரம் தயங்கியவள், பின் ஒருவாறு தன் நிலையை அப்படியே கூறினாள்‌.
     “என்னடி ஓவர் பிளீடிங்னு இவ்ளோ கேர்லசா சொல்ற. இது எவ்ளோ டேஞ்சர்னு தெரியாதா. வா ஹாஸ்பிடல் போகலாம். உன் சீனியர் டாக்டர் சாந்தா மேம் அவங்ககிட்ட காட்டலாம் வாடி‌”
     ராஜசேகர் சுபத்ராவை வற்புறுத்தி அவள் சீனியர் டாக்டரிடம் அழைத்து சென்று அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டான்.
     சோதனைகளின் முடிவு அடுத்த நாள் வந்து சேர்ந்தது. அதோடு மிக பெரிய இடியும் ராஜசேகர் சுபத்ரா தலையில் விழுந்தது. சோதனைகளின் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை பார்த்த டாக்டர் சாந்தா ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் முன்னே அமர்ந்திருந்த இருவரையும் பாவமாக பார்த்து வைத்தார்.
     “என்னாச்சு மேம்?” என்ற ராஜசேகரின் குரலே அவ்வளவு பயந்து வெளியே வந்தது.
     “நான் சொல்றத கேட்டு ரெண்டு பேரும் பயப்பட வேண்டாம்” என முன்னெச்சரிக்கையாக கூறியவர் இருவரையும் பார்த்து
     “சுபத்ரா உனக்கு கர்ப்பப்பைல ஒரு கட்டி இருக்குமா. அதான் இந்த ஓவர் பிளீடிங். அதை ஆப்பரேட் பண்ணி சரி பண்ணிடலாம்” என கூற இருவருக்கும் ‘அப்பாடா’ என்றிருந்தது.
     ஆனால் அதற்கு மேல் தான் அவர் அந்த விஷயத்தை பகிர்ந்தார். “அதோட சுபாக்கு யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அதுக்கு ஒரு பேபிய தாங்குற அளவுக்கு சக்தி இல்ல. அதையும் மீறி பேபி வந்தா சுபத்ராவோட உயிருக்கு ஆபத்து”.
     சாந்தா அனைத்தையும் கூறிவிட சுபத்ரா வெடித்து அழ, ராஜசேகர் சிலையென அமர்ந்து விட்டான்.
     “நீங்க ரெண்டு பேருமே டாக்டர்ஸ். நான் சொல்லனும்னு இல்ல. உங்களுக்கே புரிஞ்சிருக்கும் சுபாவோட ஹெல்த். பாத்து நடந்துக்கோங்க” என்று முடித்துவிட்டார்.
     வெளியே வந்த தம்பதியரில் முதலில் சுதாரித்தது ராஜசேகர் தான். “இங்க பாரு சுபா. நமக்கு குழந்தையே இல்லைனாலும் பரவாயில்லைடி. நீ என்கூட காலம் முழுக்க இருந்தனா அதுவே போதும்டி” என்றுவிட்டார்.
     ஆனால் சுபத்ரா ஒருவார்த்தை கூட பேசவில்லை. அவளின் அமைதி ராஜசேகரை என்னவோ செய்ய அவளை முடிந்த அளவு சமாதானம் செய்தார்.
     இப்போது ராஜசேகர் தொடர்ந்தார். “இப்படியே கொஞ்ச நாள் எங்க வாழ்க்கை போய்ட்டு இருந்தது. அப்ப தான் ஒரு பொண்ணு சுபத்ராக்கிட்ட டிரீட்மென்ட்க்கு வந்தா.
     அந்த பொண்ணு யாரு என்னன்னு எனக்கு தெரியலை. ஆனா அந்த பொண்ணு உங்க அம்மாட்ட டிரீட்மென்ட்கு வந்த நாள்ல இருந்து சுபா அந்த பொண்ண பத்தி தான் நிறைய பேசுவா.
     என்னவோ அந்த குழந்தைய அவளே சுமக்குற மாதிரி அவ ஒவ்வொரு தடவையும் செக்கப் வரப்போ அவ்வளவு எக்சைட் ஆவா.
     ஆனா அந்த பொண்ணு அவ குழந்தைய பெத்துகிறதுல ரொம்ப குழப்பத்துல இருக்கிறதா அவ சொல்லுவா. எதோ பிராப்லம் இருந்தது. ஆனா சுபாக்கும் அது என்னன்னு தெரியலை.
     இப்படி போய்ட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் எமர்ஜென்சினு ஹாஸ்பிடல் போன சுபா வரும்போது ஹர்ஷா குட்டிய தூக்கிட்டு வந்தா. எனக்கு ஒன்னும் புரியல.
     வந்தவ இவன் இனிமே நம்ம குழந்தைனு சொன்னா. அதோட ஹர்ஷாவ குழந்தைனு கூட பார்க்காம யாரோ கொல்ல பார்த்ததா சொன்னா. அதனால அவன பாதுகாப்பா தூக்கிட்டு வந்துட்டேனு சொன்னா.
     சின்ன குழந்தையை போய் கொல்ல பாத்திருக்காங்கன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.
     அது என்னமோ ஹர்ஷா குட்டிய பார்த்தப்ப எனக்கு என்னவோ நெருக்கமான ஒரு உறவா தான் தெரிஞ்சான்.
     அதுக்கு அப்புறம் நாங்க கோயம்புத்தூரை விட்டு உடனே கிளம்பி சென்னை வந்துட்டோம். இங்க வந்து எங்க சேவிங்ஸ் வச்சு புதுசா ஒரு ஹாஸ்பிடல் நாங்களே கட்டி அதுக்கு அப்பா பேரை வச்சு பாத்துக்கிட்டோம்.
     ஆனா ஹர்ஷா நீ வந்த நாள்ல இருந்து தான் நாங்க இழந்த எங்க சந்தோஷம் எங்கிட்ட வந்தது கண்ணா.
     முதமுதல்ல எங்களை அப்பா அம்மாவா ஆக்குனது நீதான்டா குட்டி” என்ற ராஜசேகர் இப்போது உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
     ஹர்ஷாவும் அவருக்கு குறைவில்லாமல் பலவித உணர்ச்சியின் பிடியில் இருந்தான்.
     ராஜசேகர் சுபத்ரா ஹர்ஷா என்று மூன்று பேரும் அழகிய குடும்பமாக மகிழ்வுடன் இருந்தனர். அப்போது ஹர்ஷாவிற்கு மூன்று வயது.
     தன் மூத்த மகனை நான்கு வருடத்திற்கு முன் பறிகொடுத்திருந்த அருணாசலம் ஒரு வருடம் கழித்து தன் சின்ன மகனை தேட துவங்கினார்.
     ஆனால் மூன்று வருடம் சென்ற பின்னரே இவர்களை கண்டு பிடித்தார். சிறிதும் தாமதிக்காமல் தன் மகன் மருமகள் பேரன் என அனைவரையும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.
     அதனால் ஹர்ஷாவை பற்றி வீட்டினருக்கு தெரியாமல் போனது. தன் வீட்டினருடம் மீண்டும் சேர்ந்த ராஜசேகர் மகிழ்ச்சியாக இருக்க,
     சுபத்ராவோ தன்னால் அவருக்கு ஒரு குழந்தையை பெற்று தரமுடியவில்லையே என்று மனதிற்குள் மறுகி தவித்தாள்.
     அதை ராஜசேகரிடம் கூறினால் “நமக்கு ஹர்ஷா மட்டும் போதும் டி” என்று விடுவார்.
     அதனால் ராஜசேகர் சுபத்ராவிற்கு குழந்தை வராமல் இருக்க மிகவும் கவனமாக இருக்க, ஆனால் இறைவனின் கணக்கு வேறாகி போனது.
     ஹர்ஷாவின் நான்காவது வயதில் சுபத்ரா கருவுற்றாள். எங்கே ராஜசேகரிடம் கூறினால் கலைக்க சொல்லிவிடுவாறோ என்று பயந்த சுபத்ரா நான்கு மாதங்கள் வரும்வரை மறைத்து விட்டார்.
     ராஜசேகருக்கு தெரிய வந்த போது தங்கள் மருத்துவமனையில் இருந்த மருத்துவரை அவளுக்கு சாதகமாக பேச வைக்க, அவள் நிலை என்னவென்று ராஜசேகருக்கு தெரியாமலே போனது.
     மீதம் நடந்தது நாம் அறிந்ததே. ஒருவழியாக தன் கணவன் சாயலில் தன் இரண்டாம் மகன் அபிமன்யுவை தன் உயிர் தந்து ஈன்று அவன் கையில் தந்து சென்றாள் நிம்மதியோடு.
     “நான் ஹர்ஷா குட்டி மட்டும் போதும்னு இருந்தேன். ஆனா ஏன் அவ உயிரை தந்து அபியை என்கிட்டா தந்தான்னு எனக்கு தெரியலை‌.
     ஆனா என் ரெண்டு புள்ளைங்க இருக்கிறதால தான் என் வாழ்க்கை சுபா போனதுக்கு அப்புறமும் இன்னும் உயிர்ப்பா இருக்கு”
     ராஜசேகர் அவர் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அண்ணன் தம்பி இருவரும் சொல்லொண்ணா தவிப்புடன் அமர்ந்திருந்தனர்.
     ஒரு மனைவி என்றும் தன் கணவனுக்கு தன்னால் ஒரு குழந்தை வர வேண்டும் என ஆசை கொள்வாள் என்று ராஜசேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
     “எல்லாம் ஓகே அங்கிள். அதோட என்னோட இந்த கேள்விக்கும் பதில் சொல்லிடுங்க”
     அந்த அறையில் இருந்த நிசப்தத்தை கலைத்தது கதிரின் குரல். அதில் நிமிர்ந்த ராஜசேகர் ‘என்ன’ என்பதை போல் அவனை பார்த்தார்.
     “இல்ல அங்கிள். ஹர்ஷா உங்களுக்கு பிறந்த பையன் இல்ல. அது உங்களுக்கே தெரியும்.
     ஆனா ஒன் வீக் முன்னே நடந்த பிரச்சினைல எந்த தைரியத்தில டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கலாம்னு சொன்னீங்க”.
     கதிரின் கேள்வியில் பெருமூச்சு விட்ட ராஜசேகர் “ஹர்ஷா குட்டி எனக்கு பிறக்காம இருக்கலாம். ஆனா அவன் இந்த வீட்டு மூத்த வாரிசு தான்” என்று கூற கதிரை தவிர்த்து மற்றவர்கள் குழம்பி போய் நின்றனர்.

Advertisement