Advertisement

     “நானும் உங்க அம்மா சுபத்ராவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் ஹர்ஷா குட்டி. அவ எனக்கு ஜூனியர். அப்போ எல்லாம் இந்த மாதிரி புக் நிறைய கிடைக்காது.
     கிடைச்சாலும் நிறைய பேருக்கு வாங்க வசதி பத்தாது. அதுனால சீனியர்ஸ்கிட்ட பாதி புக் வாங்கி தான் படிப்பாங்க. அடுத்த வருஷம் அந்த புக்க அவங்க ஜூனியர்க்கு தந்து ஹெல்ப் பண்ணுவாங்க.
     அப்படி தான் உங்க அம்மா எனக்கு பழக்கம். அவ அவ்ளோ பொறுமைசாலி. அவ்ளோ அழகு” என்று பேச ஆரம்பித்த ராஜசேகர் அந்த நாட்களுக்கே சென்று விட்டார்.
     சுபத்ரா ஒரு மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவள். எனவே அவளால் அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியாது போகவே இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் உதவி கேட்க வந்தாள்.
     அந்த வகுப்பில் ராஜசேகரும் இருக்க, தயங்கி தயங்கி வந்த சுபத்ரா முதல் பார்வையிலே அவனை ஈர்த்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
     அவளின் தயக்கத்தை புரிந்தபடி ராஜசேகர் தானே முன் வந்து அவளுடைய தேவை உணர்ந்து தன்னுடைய புத்தகங்களை தருவதாக கூறி அவள் மனம் குளிர செய்தான்.
     இப்படி இவர்களின் முதல் சந்திப்பு நிகழ, கல்லூரியில் எதேர்ச்சியாக இருவரும் அடிக்கடி சந்திக்க தொடங்கினர். இயல்பிலே நன்றாக படிக்க கூடிய ராஜசேகரிடம் படிப்பு சம்பந்தப்பட்ட சந்தேகம் கேட்கவும் வருவாள் சுபத்ரா.
     இப்படி இவர்களின் பிணைப்பு நாளுக்கு நாள் அதிகமாக ஒரு கட்டத்தில் சுபத்ரா இல்லாமல் தான் இல்லை என்று உணர்ந்த ராஜசேகர்,
     அவனின் காதலை சுபத்ராவிடம் சொல்ல நல்லதொரு சந்தர்பத்திற்காக காத்திருந்தான். அந்த நாளும் விரைவில் வந்தது.
     ஒரு நாள் சென்னை கன்னிமாரா லைப்ரரிக்கு ஒரு புத்தகம் எடுக்க ராஜசேகர் வந்திருந்தான்.
     அவன் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கொண்டு வந்து ஒரு இடத்தில் அமர அவனுக்கு எதிரே அமர்ந்து மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் சுபத்ரா.
     சுபத்ராவை அங்கு கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் அவளை ஆவலுடன் அழைக்க, அவளும் ராஜசேகரை கண்டு மகிழ்ந்து கை அசைத்தாள்.
     அதன் பின் இருவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை எழுதிக் கொண்டிருக்க, ராஜசேகர் இன்று எப்படியும் தன் காதலை சுபத்ராவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்தான்.
     அதே போல் சுபத்ரா வெளியே கிளம்பும் வரை அவனும் தனக்கு வேலை இருப்பது போலவே புத்தகத்திற்குள் தலையை புதைத்து அமர்ந்து, சுபத்ராவை ஓரவிழியால் நோட்டம் விட்டான்.
     மதிய நேரம் கடந்த பின்னரே சுபா தலை நிமிர்ந்த, அதற்கு பின்னரே இருவரும் லைப்ரரியை விட்டு வெளியே வந்தனர்.
     “என்ன சுபா ஒரு வருஷத்துக்கு தேவையான நோட்ஸ ஒரே நாள்ல எடுத்துட்ட போல”
     ராஜசேகர் கிண்டலாக கேட்க சிரித்து வைத்த சுபத்ரா “அதெல்லாம் ஒன்னும் இல்ல சீனியர். நாளைக்கு ஒரு டாப்பிக் செமினார். அதான் நோட்ஸ் எடுத்தேன்” என்றாள் அப்பாவியாக.
     இப்படியே பத்து நிமிடம் ஏதேதோ பேசியபடி வந்த ராஜசேகர் “சுபா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பேச்சுவாக்கில் கேட்டுவிட்டான்.
     சுபத்ராவிற்கு ராஜசேகர் கேட்டது புரியவே சில நிமிடம் எடுத்தது. அதன்பிறகு அங்கே நிற்காமல் ஓடி விட்டாள் சுபா.
     அதற்கு பின் வந்த நாட்களிலும் அதேபோல் ராஜசேகரை கண்டால் எதோ பேயை பார்ப்பது போல பார்த்து ஓடி ஒளிந்து கொள்வாள் சுபா.
     இதை கொஞ்ச நாட்கள் சுவாரஸ்யமாக பார்த்த வந்த ராஜசேகர், அதன் பின் கடுப்பாகி விட்டான். இனி பொறுக்க முடியாது என ஒரு நாள் சுபாவை வழி மறித்து பேச சுபத்ரா பயத்தில் அழுதே விட்டாள்‌.
     ராஜசேகருக்கோ என்னவோ போல் ஆகிவிட “சாரி சுபா அழாத பிளீஸ்” என கெஞ்சியவன் அதன்பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
     எப்போதும் பின்னால் சுற்றிய ராஜசேகர் இப்போது எல்லாம் கண்ணிலே தென்படாமல் இருப்பதை சுபா கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை முதலில்.
     கொஞ்ச நாட்கள் செல்ல செல்ல ‘அவன் தன் பின்னால் வர வேண்டாம் என கூறிய மனது இப்போது ஏன் இவ்வளவு நாள் வரவில்லை.
     அவன் என்னை மறந்து விட்டானா?’ என சஞ்சலம் அடைய தொடங்கியது. என்னதான் இருந்தாலும் பருவ வயதில் வரும் முதல் காதலுக்கு சக்தி அதிகம் தான் போல.
     அந்த காதலை கூட கண்ணியமாக ‘திருமணம் செய்துக் கொள்ளளாமா?’ என தன்னிடம் கேட்ட மாயவனின் பின்னால் அவளின் மனமும் சரிய தொடங்கிற்று.
     இரண்டு மாதங்கள் பொறுத்து பார்த்த சுபத்ரா, ஒரு நாள் கல்லூரி மரத்தடியில் தனியே அமர்ந்திருந்த ராஜசேகரை கண்டவள், தானே நேரில் சென்று பேசினாள்.
     “ஏன் சீனியர் இப்ப எல்லாம் உங்கள அடிக்கடி பாக்கவே முடியலை. ரொம்ப பிசியா?”
     சுபா நேரில் வந்து பேசியதில் திகைத்து போய் அமர்ந்திருந்த ராஜசேகர் அவளின் கேள்வியில் இருந்த ஏக்கத்தை துள்ளியமாக கண்டுக் கொண்டான்.
     அதில் களிப்படைந்தாலும் வேண்டும் என்றே அவளை வெறுப்பேற்றும் வண்ணம் பேசினான் ராஜசேகர்.
     “அதெல்லாம் ஒன்னும் இல்ல சுபா. உனக்கு தான் என்னை பாத்தாலே பிடிக்க மாட்டேங்குது. நான் பேச வந்தா ஓன்னு அழற‌.
     வேற என்ன நான் செய்றது சொல்லு. அதான் உன் கண்ணுல படாம ஒதுங்கி நிக்கிறேன்”
     அவனின் பதிலில் சுபாவின் மனதில் மழைச்சாரல் தான். ‘தனக்காக பார்த்தே ஒதுங்கி நின்றானா?’ என மகிழ்வுடன் எண்ணிய சுபா
     “அது… அது நீங்க வந்து திடீர்னு கல்யாணம் பண்ணிக்கலாமானு கேக்கவும் கொஞ்சம் பயந்துட்டேன். நீங்க வேற பணக்காரங்க. அதான் என்னை போய் எப்படின்னு…”
     சுபா தயங்கி நிறுத்திய நொடி “என்ன சுபா என்ன பார்த்தா டைம் பாசுக்கு உன் கூட பழகி கலட்டி விட்டுட்டு போறவன் மாதிரியா இருக்கு?” என்று ராஜசேகர் வேதனையுடன் கேட்டான்.
     அவன் வேதனை அவளையும் தாக்க அவனிடம் தன் மனதை பகிர்ந்தாள் சுபா.
     “ஐயோ அப்படி இல்லங்க. ஆனா கொஞ்சம் பயத்துட்டேன்‌‌. ஆனா இந்த ரெண்டு மாசமா உங்கள பாக்காம பேசாமா எதோ ரொம்ப டௌனா பீல் பண்ணுனேன்.
     உங்களை மனசு ரொம்ப தேடுச்சு. ஆனா நேரில் வந்து பேச தயக்கமா இருந்துச்சு. ஆனா இவ்ளோ நாள் ஆகியும் நீங்க என்கிட்ட பேசவே இல்லையா, அதுக்கு மேல பேசாம இருக்க மனசு கேக்கலை. அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்‌”
     சுபத்ரா சடசடவென கூறியதை உள்வாங்கிய ராஜசேகர் “சரிமா இனிமே நான் உன்கிட்ட எப்பவும் போல நல்லா பேசறேன் ஓகேவா” என்று புன்னகைத்தான்.
     “அது மட்டும் இல்ல.. அது வந்து… நாம கல்யாணம் பண்ணிகலாமானு கேட்டீங்கள்ள” என்று மெதுவாக சுபா கேட்க
     “ஆமா ஆனா உனக்கு அது இஷ்டமில்லனு ஆகிருச்சு. அதனால அதை விட்டுருமா” என்றார் ராஜசேகர் தடாலடியாக சுபாவின் எண்ணம் என்னவென்று அறியும் பொருட்டு.
     அதில் அதிர்ந்த சுபா “இல்ல அது இல்ல. எனக்கு சம்மதம்” என்றாள் அவசரமாக.
     அவள் கூறிய வேகத்தில் சிரிப்பு வந்தது ராஜசேகருக்கு “என்னம்மா எதுக்கு சம்மதம்” என்றான் புன்னகையுடன்.
     அவனை பார்த்து தானும் சிரித்த சுபா “எனக்கும் உங்களை கல்யாணம் பண்ணிக் சம்மதம்” என வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லிவிட்டு எப்போதும் போல் ஓடிவிட்டாள்.
     அதற்கு பிறகு வந்த நாட்கள் இவர்களின் காதலின் நினைவு சின்னங்களே!
     சுபாவிற்கு பாடத்தில் சந்தேகம் தீர்ப்பது, தினமும் ஒரு முறையேனுபம் சந்தித்து கொள்வது. பார்வையிலே தங்கள் காதலை தன் இணைக்கு உணர்த்துவது‌ என இவர்கள் காதலும் கவிதையே!
     அதிகபட்சம் கைக்கோர்த்து கொள்ளும் நொடிகள் இவர்கள் காதலின் தனிமை பொழுதை இன்னும் சுவைக்கூட்டி சென்றன.
     இப்படியே நாட்கள் கடக்க ராஜசேகர் அவனின் இளங்கலை மருத்துவத்தை நல்லபடியாக முடித்து, முதுகலை பொது மருத்துவமும் படித்து முடித்தான்.
     ஆனால் சுபா இளங்கலை பட்டம் மட்டும் பெற்றுவிட்டு ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து விட்டாள்.
     அந்த நாட்களில் இளங்கலை பட்டம் பெறுவதே பெரிதாக தான் பார்க்கப்படும். இதில் ராஜசேகரின் குடும்பம் சற்று செல்வ வளம் பெற்றமையால், அவன் முதுகலை பட்டமும் பெற்று ஒரு மருத்துவமனையில் வேலைக்கு அமர்ந்தான்.
     இங்கே சுபாவின் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்த, அவள் ராஜசேகரை விரும்பும் விஷயத்தை கூறி, அவனை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என திடமாக கூறினாள்.
     அவளை திட்டி அடித்து கெஞ்சி என அவள் குடும்பத்தினர் எவ்வளவோ செய்து பார்த்தும் அவள் மனசு மாறவில்லை.
     தன் வீட்டில் நடப்பதை சுபா அப்படியே ராஜசேகரிடம் கூறிவிட, இதற்கு மேல் தாமதிக்கக்கூடாது என முடிவு செய்த ராஜசேகரும் தன் தந்தை அருணாசலத்திடம் வந்து அனைத்தையும் கூறிவிட்டான்.
     ஆனால் வீட்டில் ராஜசேகரின் அண்ணன் மற்றும் தங்கைகள் என யாருக்கும் திருமணம் நடக்காத போது இப்படி தன் இளைய மகன் காதல் என வந்து நின்றது அருணாசலத்திற்கு பெரிய அதிர்ச்சி தான்.
     “இங்க பாரு சேகரா உன் அண்ணன் தங்கச்சினு யாருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை‌. இந்த நேரத்தில உன் கல்யாணம் நடந்தா எல்லாரும் தப்பா பேசுவாங்க பா.
     இன்னும் கொஞ்ச நாள் காத்திரு உன் அண்ணன் கல்யாணம் முடிஞ்சு உடனே உன் கல்யாணத்தை நான் செஞ்சு வச்சிடுறேன்”
     அருணாசலம் கூறியதை கேட்டு அமைதியாக சென்ற ராஜசேகர், அதை அப்படியே சுபாவிடம் கூறி அமைதி காக்க வேண்டினான்.
     ஆனால் சுபாவின் பெற்றோர்களோ சுபாவுக்கு வேறு மாப்பிள்ளையே அவர்களின் சொந்தத்தில் பார்த்துவிட்டனர்.
     இப்போது ஹர்ஷா மற்றும் தன்னை சுற்றி இருந்த தன் குடும்பத்தாரை பார்த்த ராஜசேகர் தொடர்ந்தார்.
     “உங்க அம்மாக்கு கல்யாண தேதியே முடிவு பண்ணிட்டாங்க. அவளும் அவங்க வீட்ல போராடி பார்த்தா. ஆனா அவ பேச்சை யாரும் ஏத்துக்கவே இல்ல.
     என்ன பண்றதுனு தெரியாம கல்யாணத்துக்கு முன்னையே வீட்டை விட்டு என்னை மட்டும் நம்பி வெளிய வந்தாபா”
     இதையெல்லாம் கூறும் போதே அவர் கண்ணில் அவ்வளவு காதல் நேசம் தெரிந்தது. அதை கேட்டவர்களுக்கும் அவரின் காதல் அப்பட்டமாக தெரிந்தது.
     அப்படி சுபத்ரா வீட்டை விட்டு வந்தபின் ராஜசேகராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன்னை நம்பி வந்த பெண், இனி அவள் என் பொறுப்பு என்றே உறுதிக் கொண்டான் ராஜசேகர்.
     என்வே நண்பர்களின் உதவியோடு ஒரு கோவிலில் தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டனர் அந்த தம்பதியர்.
     திருமணம் முடிந்த கையோடு சுபாவின் வீட்டுக்கு சென்றால், இவர்களை வீட்டின் உள்ளே கூட விடாது தடுத்து திட்டி அனுப்பி விட்டனர்.
     அருணாசலமும் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டார் என யூகித்தே அவன் இல்லத்திற்கு சுபாவுடன் சென்றான் ராஜசேகர்.
     அன்றைக்கு என பார்த்து ராஜசேகரின் அண்ணன் வீட்டில் இல்லை. அருணாசலம் மற்றும் அவர் மகள்கள் இருவர் மட்டும் இருந்தனர்.
     அப்போது வீட்டினுள் ஒரு பெண்ணுடன் மன கோலத்தில் வந்து நின்ற ராஜசேகரை எல்லோரும் அதிர்ந்து போய் பார்த்தனர்‌.
-மீண்டும் வருவான்

Advertisement