Advertisement

     “வாப்பா கதிர்” வாசலில் வந்து நின்ற ஏ.சி கதிர்வேலை முதலில் பார்த்த வேதாசலம் வீட்டிற்குள் வர அழைத்தார்.
     அவரை பார்த்து புன்னகைத்த கதிரும் “வரேன் அங்கிள்” என்றவாறு உள்ளே வந்தான்.
     ஒரு வாரம் முன் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து அப்போது தான் மெல்ல மெல்ல அருணாசலம் இல்லம் வெளியே வந்து கொண்டிருந்தது.
     இந்நேரம் பார்த்து கதிர் வரவை வேதாசலம் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை‌ என்பதை அவர் பார்வையே காட்ட, அதை கதிர் பார்க்காமல் மறைத்தவர்
     “என்ன கதிர் சாப்பிடுற. டீயா இல்ல காபியா?” என வீட்டு ஆளாக கதிரை உபசரித்து காபி கொண்டு வர செய்து கொடுத்தவர் பேச தொடங்கினார்.
     ஹர்ஷாவிற்கு நடந்த கொலை முயற்சி சம்மந்தமாக பேசுவதற்கே கதிர் இங்கே வந்துள்ளான் என்று யூகித்த வேதாசலம் கதிரிடம்
     “கதிர் நீ பேச வேண்டிய விஷயத்தை நாம தனியா ரூம் உள்ள போய் பேசிக்கலாம். இங்க நடு விட்டூல வேண்டாம் பா. நடந்தது வீட்ல யாருக்கும் தெரியாது.
     தெரிஞ்சா எல்லாரும் மனசு சங்கடப்படுவாங்கபா. அதான் சொல்றேன்” என்றார்.
     கதிரும் எதுவும் பேசாது வெறுமனே தலை அசைத்தான் சம்மதமாக. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹர்ஷா கீழே இறங்கி வந்தான்.
     அப்போது வேதாசலத்துடன் அமர்ந்திருந்த கதிரை கண்டவுடன் தான் ஹர்ஷாவிற்கு கதிரிடம் பேசியதே நினைவு வந்தது.
     ‘ப்ச் நடந்த கலவரத்துல நான் இதை மறந்தே போய்ட்டேன். கதிரே இங்க வந்துட்டாரு’ என மனதில் நினைத்தபடி கீழே வந்துவிட்டான் ஹர்ஷா.
     “ஹலோ கதிர் எப்படி இருக்கீங்க. அண்ட் ரொம்ப சாரி கதிர் வீட்ல ஒரு சின்ன பிராப்லம்‌. சோ அதான் உங்கள பார்க்க வர முடியலை‌”
     கதிரிடம் மன்னிப்பு கேட்டபடி அவன் அருகில் வந்தமர்ந்தான் ஹர்ஷா. “தட்ஸ் ஓகே ஹர்ஷா. ஆனா நான் இப்போ பேச வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். நாம தனியா பேசலாம்னு வேதாசலம் அங்கிள் கூட சொன்னாரு.
     சோ நாம தனியா பேசலாம்‌. அதோட கூட உங்க அப்பா இருந்தா பெட்டரா இருக்கும்” என கதிர் தனியாக பேச வேண்டியதின் அவசியத்தை கோடிட்டு காட்டினான்.
     அதை புரிந்து கொண்ட ஹர்ஷா “புரியுது கதிர். இன்னைக்கு சண்டே சோ எல்லாருமே வீட்ல தான் இருக்கோம். இருங்க அப்பாவ ரூம்லையே நாம் போய் பேசிக்கலாம்” என்றான்.
     உடனே அபிமன்யுவை அழைத்த ஹர்ஷா விக்ரமை அழைத்து கொண்டு ராஜசேகரின் அறைக்கு வரும்படி கூறி கதிர் மற்றும் வேதாசலம் இருவரோடு அவன் தந்தையின் அறைக்கு சென்றான்‌.
     ஹர்ஷாவிற்கு வரும் நன்மை தீமை என்பது அவன் மட்டும் அன்றி அவன் குடும்பத்தினரையும் சேர்ந்தே பாதிக்கும் என்பதால் ஹர்ஷாவிற்கு இப்போது சற்று பதற்றமாகவே இருந்தது.
     ஏனெனில் வசுந்தரா ஏற்படுத்திய பிரச்சினை ஒரு வாரம் ஆகியும் இப்போது வரை அவர்கள் இல்லத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்று உணர்த்தி சென்றுள்ளதே.
     எனவே அபி மற்றும் விக்ரம் வரும் வரை ராஜசேகரின் நலத்தை விசாரித்த கதிர் அவர்களின் வருகைக்காக காத்திருந்தான். அவர்கள் வந்த பின் கதவை அடைத்த வேதாசலம் பேசினார்.
     “கதிர் நீயே இவ்ளோ தூரம் இங்க வந்துருக்கனா பிரச்சினை எதோ பெருசா தெரியுது பா. எங்க ஹர்ஷாவுக்கு இப்படி அடிக்கடி தொந்தரவு தரது யாரு?”
     வேதாசலம் கேட்ட கேள்வியில் அதிர்ந்த ராஜசேகர் “ஏம்பா எங்க மாப்பிள்ளை சொல்றது உண்மையா? என் புள்ளைக்கு யாரால இவ்ளோ பிரச்சினை?” என்று கலக்கமான குரலில் கேட்டார்.
     விக்ரமும் அபியின் முகமும் அதே கேள்வியை தாங்கி இருக்க கதிர் இப்போது துவங்கினான்.
     “நான் சொல்றது உங்களுக்கு கண்டிப்பா அதிர்ச்சிய தரும். சோ நான் என்ன சொல்ல போறேனு கேட்டுட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஒரு முடிவு நீங்க தான் எடுக்கனும்.
     ஹர்ஷாக்கு முதல்ல நடந்த கொலை முயற்சிய கண்டுபிடிக்க எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல. அண்ட் ரெண்டாவது அவர் மேரேஜ் அப்போ நடந்த இண்சிடெண்ட்.
     உங்களுக்கே தெரியும் அதுலையும் எங்களுக்கு எந்த எவிடென்சும் கிடைக்கலை.
     பட் மூனாவதா உங்க ஹாஸ்பிடல்ல அந்த மாத்திரை வந்த இன்சிடென்ட். அதுல இருந்து எதாவது கண்டிப்பா குளூ கிடைக்கும்னு தோனுச்சு.
     ஏன்னா இப்படி போலி மாத்திரை வேணும்னா ஒரே வழி அதை தப்பான பார்மேட்ல உற்பத்தி செய்யறது. அதை வச்சு தான் நாங்க விசாரிக்க ஆரம்பிச்சோம்.
     அப்படி விசாரிச்சப்போ தான் நாங்க கண்டுபிச்சோம்‌ அது எல்லாம் உங்க மாமனார் கம்பெனில இருந்து வந்திருக்கிறதை”
     கதிர் இடையில் நிறுத்திய நேரம் அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். “என்ன கதிர் சொல்றீங்க?” என்று விக்ரம் கேட்க
     “லெட் மீ கம்ப்ளீட் விக்ரம். நாங்களும் முதல்ல அவரை டவுட் பண்ணி, அவரோட எல்லா ஆக்டிவிட்டீசையும் கவனிக்க ஆரம்பிச்சோம்.
     பட் அவர் மேல சந்தேகப்படற மாதிரி எதுவும் நடக்கல. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அந்த பாரமெட்டிகல் இன்டஸ்டிரி உங்க மாமனார் விஸ்வநாதனோட சிஸ்டர் வசுந்தராவோட ஸேர்னு.
     அதை கவனிச்சிட்டு இருக்கிறது அவங்க ஹஸ்பண்ட் கணபதி ராம்னு தெரிஞ்சுது. நாங்க அதுக்கு அப்புறம் கணபதிய பாலோ பண்ணினோம். ஆனா அவர்கிட்டயும் தப்பு இருந்த மாதிரி தெரியலை.
     ஆனா ஹர்ஷா நீங்க ஒரு ஆள எனக்கு இன்ட்ரோ தந்தீங்களே. அவர் தந்த டீட்டெய்ல்ஸ் வச்சு தான் இப்படியெல்லாம் செஞ்சது யாருன்னு தெரியவந்தது”.
     கதிர் இவ்வாறு கூறவும் அனைவரின் பார்வையும் கதிரை ஆர்வமாய் பார்த்தது. கதிர் மேலே தொடர்ந்தான்.
     “அது வேற யாரும் இல்ல அந்த கணபதி ராம் தான் இதையெல்லாம் செஞ்சது. அந்த ஆள் குடுத்த நம்பர் வச்சு நாங்க டிரேஸ் பண்ணுனதுல கடைசிய வந்து நின்ன ஆளும் இவரு தான்.
     அதை பத்தி பேசுறதுக்கு தான் ஹர்ஷாவ ஆபிஸ் வர சொன்னேன். ஆனா ஹர்ஷா வரலை. அதான் நான் வேதாசலம் அங்கிள்கு கால் பண்ணி கேட்டேன்.
     அப்போ அவர் இங்க வசுந்தராவால நடந்த பிரச்சினை எல்லாத்தையும் சொன்னாரு. அதுக்கு அப்புறம் தான் எனக்கு வேற மாதிரி ஒரு சந்தேகம் வந்துச்சு.
     அது என்னன்னு தெரிஞ்சுக்க நானே கணபதியோட சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு போனேன். அங்க தான் எனக்கு நிறைய விஷயம் எல்லாம் தெரிய வந்தது.
     ஆனா அதை நான் சொல்றதுக்கு முன்ன ராஜசேகர் அங்கிள் நீங்க ஒரு உண்மைய சொல்லனும்”
     கதிர் பேசி முடித்தவுடன் அனைவரும் அவன் பேச்சில் சுத்தமாக குழம்பி போய் நிற்க, ராஜசேகர் மட்டும் அதிர்ச்சியாகி நின்றுவிட்டார்.
     “என்ன அங்கிள் சைலண்ட்டா நிக்கிறீங்க. உங்களுக்கு தெரிஞ்ச உண்மைய நீங்க சொல்லுங்க அங்கிள்.
     ஹர்ஷா யாருன்னு உங்களுக்கு தெரிஞ்ச உண்மைய மட்டும் சொல்லுங்க” என்று கதிர் கூறியபின் அனைவரும் புரியாது பார்த்து வைத்தனர்.
     ஆனால் ராஜசேகரோ இதுநாள் வரை எது நடக்க கூடாது என்று எண்ணி இருந்தாரோ அது தன் கண் முன்னே நடப்பதில் வேரறுந்த மரமாக அமர்ந்திருந்தார்.
     அந்த இடமே அவ்வளவு அமைதியாக இருக்க அனைவரும் ராஜசேகர் என்ன சொல்ல போகிறார் என்று அவரையே பார்த்திருக்க
     தன் மனதை சற்று திடப்படுத்திக் கொண்ட ராஜசேகர் நிமிர்ந்து ஹர்ஷாவை பார்த்து அவன் அருகே சென்றார்.
     “ஹர்ஷா கண்ணா நான் இப்ப சொல்ல போறத கேட்டா உனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கலாம். ஏன் கண்டிப்பா அதிர்ச்சியா தான் இருக்கும்.
     ஆனா நீ எப்பவும் என் புள்ளை தான்டா‌ கண்ணா. அப்பா சொல்லப்போறதை கேட்டு என்னை வெறுத்துடாத கண்ணா.
     என்ன நடந்து இருந்தாலும் நான் மட்டும் தான் உன்னோட அப்பா. நீ எனக்கு மட்டும் தான் பையன். புரியுதா ஹர்ஷா குட்டி”.
     ராஜசேகரின் குரல் கரகரத்து ஒலித்தாலும் அவர் குரலில் இருந்த உறுதி சொல்லியது அவர் ஹர்ஷாவை யாருக்கும் விட்டு தர மாட்டார் என.
     அதை அவரின் குரலில் இருந்து புரிந்து கொண்ட ஹர்ஷாவிற்கு புன்னகை வந்தாலும் அவன் தந்தை ஏதோ பெரிய விஷயத்தை கூறப் போகிறார் என்று உணர்ந்து குழப்பமும் வந்தது.
     அதே குழப்பம் தான் மற்றவர்களுக்கும். எனவே ராஜசேகர் கூற வருவதை கவனிக்க தொடங்கினர் மற்றவர்கள்.
     ராஜசேகர் தன் மனதை கல்லாக்கி கொண்டு அடுத்து வந்த வார்த்தைகளை தொடுத்தார். “ஹர்ஷா குட்டி நீ என்னோட புள்ளை, இந்த குடும்பத்தோட மூத்த வாரிசும் நீதான் கண்ணா.
     ஆனா நீ… நீ  எனக்கு…” என்று திணறியவர் “நான் உன்னோட பயலாஜிக்கல் பாதர் இல்ல குட்டி” என்று சொல்லியே விட்டார்.
     முதலில் கேட்ட அனைவருக்கும் அவர் சொல்லிய வார்த்தைகளின் அர்த்தம் புரியவே சில நிமிடங்கள் ஆனது. புரிந்தது ஒன்றும் அவ்வளவு உவப்பாகவும் இல்லை.
     மற்றவர்களுக்கே இந்த நிலை என்றால் ஹர்ஷாவின் நிலை அதைவிட மிக மோசமாக இருந்தது. ஆனால் ராஜசேகர் கோர்த்து கூறிய வரிகள் அந்த சூழ்நிலையின் தாக்கத்தை குறைத்து கூறியது என்றால் அது மிகையல்ல.
     அப்போது “அப்பா” என்று அதிர்வாய் அபி அழைக்க ராஜசேகரோ எதுவும் பேசாமல் ஹர்ஷாவையே தவிப்புடன் பார்த்திருந்தார்.
     அபியின் குரலில் ஹர்ஷா தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன் அவன் தந்தையின் தவிப்பை பார்த்து தன் மனபாரத்தை மறைத்தவாறு “அப்பா” என்றான்.
     அந்த “அப்பா”வில் உயிர்த்த ராஜசேகர் “ஹர்ஷா குட்டி நான் மட்டும் தான் கண்ணா உன்னோட அப்பா. அது எப்பவும் மாறாது” என்று அவனை அணைத்து கொண்டார்.
     “அண்ணாக்கு யாரு வேணா பயலாஜிக்கல் பாதரா இருக்கட்டும். ஆனா எபப்வும் அவன் என்னோட அண்ணன் தான்”.
     அபிமன்யுவும் தவிப்புடன் ஹர்ஷாவை அணைத்து கொள்ள, அவனின் மனநிலை புரிந்தது போல் ஹர்ஷா அவனையும் சேர்த்து அணைத்து கொண்டான்.
     அந்த நிமிடத்தில் கூட தன் தந்தை மற்றும் சகோதரனுக்காக பார்க்கும் ஹர்ஷாவை கண்டு வேதாசலம் விக்ரமிற்கு தொண்டையே அடைத்தது.
     சில நிமிடங்கள் அந்த இடத்தில் கணமான அமைதி நிலவ அபிமன்யு ஹர்ஷாவின் அணைப்பை விட்டு விலகவேவில்லை.
     ஆனால் எவ்வளவு நேரம் அப்படியே இருப்பது. எனவே அந்த அமைதியை கலைத்தான் கதிர்.
     “ஹர்ஷா உங்களுக்கு பிறக்கலைன்ற உண்மைய சொன்ன நீங்க, அவரு எப்படி உங்ககிட்ட வந்தாருனும் நீங்களே சொல்லிடுங்க அங்கிள்” என்றான்.
     முழுதாக வெள்ளம் போனபின் இனி மறைக்க என்ன இருக்கிறது என்று ராஜசேகரும் நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.

Advertisement