Advertisement

     “வசுந்தரா எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனா நீ அந்த லிமிட் தான்டி போய்ட்டு இருக்க. நான் சொல்றத கேட்டு என்கூட வருவியா மாட்டியா?” என்று பொறுமை இழந்து விஸ்வநாதன் கத்தினார்.
     அவரை இயலாமையுடன் பார்த்து வைத்த வசுந்தரா, கணபதியை திரும்பி பார்த்தார். ஆனால் எப்போது விஸ்வநாதன் வசுந்தராவிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும் துணை நின்று கண்களாலே ஆறுதல் சொல்லும் கணபதி,
     இன்று விஸ்வநாதன் கூறுவதை ஆமோதிப்பது போல் நின்றது வசுந்தராவிற்கு கடைசி நம்பிக்கையும் போனது போல் தோன்றியது.
     ராஜசேகருக்கு பயம் என்னவென்றால் ஹர்ஷா அவரை பார்த்து ‘இவங்க சொல்றது உண்மையா?’ என கேட்டு விடுவானோ என்பது தான்.
     ஆனால் அவர் மகனோ அந்த துன்பத்தை கூட தன் தந்தைக்கு தராது ‘இவங்க சொன்னா நான் நம்பீடுவேனா’ என்று சொல்லாமல் உணர்த்தியதில் ராஜசேகர் மன நிம்மதி அடைந்தார்.
     அனைவர் கூறியும் அசையாது நின்ற வசுந்தராவை கண்டு கடுப்புடன் தலையை பிடித்து அமர்ந்து விட்டான் ஹர்ஷா.
     அதில் இவ்வளவு நேரம் பயத்தில் நின்றிருந்த ராஜசேகர், இப்போது தைரியம் வரப்பெற்று எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று வாயை திறந்தார்.
     “சம்மந்தி நான் பேசிக்கிறேன்” வசுந்தராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த விஸ்நாதனை பார்த்து கூறிய ராஜசேகர் இப்போது வசுந்தராவை பார்த்து நேரடியாக பேசினார்.
     “நீங்க இவ்ளோ நேரம் பேசுனதுல இருந்து உங்களுக்கு இறந்து போன உங்க மூத்த பிள்ளை மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு எனக்கு புரியுதுமா.
     ஆனா நீங்க நினைக்கிற மாதிரி என் பையன் உங்க பையன் கிடையாது. அது மட்டும் உறுதி. நீங்க ‘முடியாது நம்ப மாட்டேன்’ அப்படின்னு சொன்னாலும், நான் அதுக்கும் ஒரு வழி வச்சிருக்கேன்”
     ராஜசேகர் இடையில் நிறுத்தவும் அனைவரும் அவர் என்ன சொல்ல போகிறார் என ஆர்வமாய் பார்த்தனர். அதில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்த ராஜசேகர்
     “ஒரே ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதும். அவன் என் பையன், இந்த வீட்டு பையன்னு புரூப் பண்ண. என்ன சொல்றீங்க டெஸ்ட் எடுக்கலாமா?
     டெஸ்ட் ரிசல்ட்ல கண்டிப்பா ஹர்ஷா என் பையன்னு வந்தா நீங்க இப்படி அர்த்தமில்லாம பேசறத விட்டுடனும். புரியுதா”
     ராஜசேகர் பேசிய விதம் சாதாரணமாக இருந்தாலும், அதில் இருந்த உறுதி அமைதியாக ஒளித்த அதிகாரம் சொல்லாமல் சொல்லியது ஹர்ஷாவை அவர் யாருக்கும் விட்டு தர மாட்டார் என.
     அவர் கேட்ட கேள்வியை உணர்ந்த அனைவருக்கும் திக்கென்றது. வசுந்தரா தான் எதோ தெரியாமல் பேசுகிறார். சொல்லி புரிய வைத்தால் அவர் புரிந்துக் கொள்வார் என நம்பினார்கள்.
     எனவே ராஜசேகரின் இந்த பேச்சை கேட்ட ஹர்ஷா “அப்பா என்ன இது. அவங்கதான் ஏதோ புரியாம பேசிட்டு இருக்காங்கனா, நீங்களும் டி.என்‌.ஏ டெஸ்ட் அது இதுன்னு உளறீட்டு இருக்கீங்க. இதை இப்படியே விடுங்கப்பா” என்றான்.
     ஆனால் ஹர்ஷாவின் கூற்றை மறுத்து அவன் தந்தையின் கூற்றை ஆமோதித்த அபிமன்யு பேசினான்.
     “நீ சும்மா இருண்ணா. இவங்க எதுவேணா பேசுவாங்க, நாம கேட்டுட்டு இருக்கனுமா?
     ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதும் நீ என் அண்ணா தான்னு எல்லாத்துக்கும் காட்ட. இவங்க இன்னும் இப்படியே பேசிட்டு இருந்தா நாம அதை தான் செய்யனும் ண்ணா”.
     காட்டமாகவே பதில் வந்தது அபியிடம் இருந்து‌. அவன் கோபம் வசுந்தராவின் மேல் என புரிந்த ஹர்ஷாவும்
     “டோன்ட் வொர்ரி டா. நாம அந்த அளவு போக வேண்டிய அவசியம் இல்லை. அவங்க புரிஞ்சிப்பாங்க. புரிஞ்சு தான் ஆகனும்” என்றான் அழுத்தமாக.
     சுற்றி இருப்பவர்கள் அவ்வளவு தூரம் பேசியும் மாறாது நின்றிருந்த வசுந்தரா, ராஜசேகர் டி.என்.ஏ டெஸ்ட் என்று ஆரம்பித்ததில் குழம்பி விட்டார்.
     அதன் பிறகே ‘ஒருவேளை இவர்கள் சொல்வது உண்மை தான் போல. இல்லை என்றால் எப்படி டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கும் படி சொல்லுவாங்க’ என்று யோசித்தார்.
     ஆனால் ராஜசேகர் இவ்வாறு கேட்பதில் இருந்த உள்குத்தை யோசிக்காது விட்டார் அவர். வசுந்தரா தீவிரமாக யோசிப்பதை கண்டு மற்றவர்கள் சற்று ஆசுவாசம் அடைய, அவர்கள் மனம் மகிழும்படி
     “எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் தான் எதோ தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல‌. எல்லார் மனசையும் ஹேர்ட் பண்ணிட்டேன். அதுக்கு ரொம்ப சாரி” என்றார்.
     வசுந்தரா அனைவரின் முன் கைக் கூப்பி நிற்க, அனைவருக்கும் அவர் நிலையை காண பாவமாய் போனது.
     “அதான் உங்களுக்கே ஹர்ஷா இந்த வீட்டு பையன் தான்னு புரியுதுலமா. அப்புறம் எதுக்கு கையை எல்லாம் கூப்பிட்டு இருக்கீங்க. கைய கீழே போடுங்க” என பார்வதி வந்து சமாதானம் செய்தார்.
     அதன் பின்னரே நிலவரம் சற்று தெளிந்து சுமூகம் திரும்பியது. ‘ஹப்பாடா பிரச்சினை இதோட முடிஞ்சது’. இப்படிதான் அனைவரின் மனதிலும் எண்ணம் வந்தது.
     விஸ்வநாதன் மீனாட்சி என அவர்களும் தங்கள் பங்கிற்கு மன்னிப்பை வேண்டிட, பின்னர் சிறிது நேரம் கழித்து விஸ்வநாதன் குடும்பம் கிளம்பி விட்டனர்.
     “சரி இதையே யாரும் நினைக்காம உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க” என ஹர்ஷா அனைவரையும் அவர்கள் அறைக்குள் அனுப்பி வைத்தவன் விக்ரமை பார்த்து
     “விக்ரம் சங்கவிய அவ வீட்ல கொண்டு விட்டுட்டு வாடா. அவளை தனியா அனுப்பாத” என சொல்லி தானும் செல்ல விக்ரமும் சரி என்று அழைத்து சென்றான்.
     செல்லும் முன் பார்வதியை பார்த்து அவன் தந்தை அறையை கைகளால் காட்டி பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி நகர்ந்தான் ஹர்ஷா.
     காரில் செல்லும் போது காலை போல் அல்லாமல் முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்திருந்தான்‌ விக்ரம்.
     “என்னப்பா பேஸ் ரொம்ப டல்லா இருக்கு. இன்னும் வீட்ல நடந்ததையே நினைச்சிட்டு இருக்கீங்களா. அந்த அம்மா தான் சாரி கேட்டுட்டு போய்ட்டாங்கல. இதை அப்படியே விடுங்கப்பா” என சமாதானம் செய்தாள் சங்கவி.
     அவளும் வசுந்தரா பேச ஆரம்பித்தது முதல் பதறி போய் விக்ரம் முகத்தை தான் பார்த்திருந்தாள். எப்போதும் விளையாட்டாய் பேசும் விக்ரம் முகம் இன்று அதீத கோபத்தை சுமந்திருந்தது.
     அதிலே அவன் நடந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டதை உணர்ந்த கவி தற்போது தனிமை கிடைக்கவும் ஆறுதல் படுத்துகிறாள்.
     “எப்படிடி டென்ஷன் ஆகாம இருக்க முடியும். அந்த அம்மா பேசுன பேச்சுக்கு அது வாய நான் கிழிக்காம விட்டதே பெரிய விஷயம் தான்” இதுவரை கோபத்தில் பேசிய விக்ரமின் குரல் கம்மியது.
     “அவன் இல்லாம எங்க வீட்ல நாங்க யாருமே இல்லடி. அவன் தான் எங்க குடும்பத்துக்கே ஆணிவேர். அதை எப்படி சொல்றதுனு கூட தெரியலைடி. ஆனா அந்த அம்மா…” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினான் விக்ரம்.
     அவனை புரிந்தது போல் “கூல்பா அந்த அம்மாவும் ஏதோ அவங்க குழந்தை மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிட்டாங்க. இதை இப்படியே விட்டுருங்க ப்பா” என ஆறுதலாக அவன் தோளை பிடித்தாள்.
     இங்கே இப்படி செல்ல அபியின் அறையிலோ அபி பயங்கரமான கோபத்தில் இங்கும் அங்கும் நடந்தபடி இருக்க, ஹர்ஷா தன் தம்பியின் மனநிலை புரிந்தார் போல் அவன் அறைக்குள் வந்தான்.
     “அபி” ஹர்ஷாவின் ஒற்றை வார்த்தையில் தன் சக்தி எல்லாம் வடிந்தார் போல் வேகமாக வந்து ஹர்ஷாவை அணைத்துக் கொண்டான் அபிமன்யு.
     “ஒன்னும் இல்லடா. அதான் நான் இருக்கேன்ல. நான் இருக்கும் போது என் தம்பி நீ எப்பவும் கவலைபடவே கூடாது புரியுதா”.
     ஹர்ஷாவின் இந்த வரிகளில் உடைந்தே விட்டான் அபி. “அண்ணா” என தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டான். அழுத அபியை தேற்றுவதற்குள் ஹர்ஷாவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது.
     “என்னடா அபி இது. குழந்தை மாதிரி இப்படி அழற. விக்ரம் விஷயத்தில நீ மெச்சூர்டா நடந்ததை பார்த்து நான் கூட என் தம்பி வளந்துட்டான் போலன்னு எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா.
     நீ என்னடான்னா இதுக்கே மூக்க உறிஞ்சிட்டு இருக்க. யார் என்ன சொன்னாலும் ஹர்ஷா தான் என் அண்ணன்னு தைரியமா நிக்கிறத விட்டுட்டு இது என்ன சின்ன பையன் மாதிரி அழற. உன்னை நான் இப்படி தான் வளர்த்தனா”
     ஹர்ஷா எவ்வளவு கூறினாலும் அபிமன்யு ஹர்ஷா என வரும் போது அவன் ஒரு வளர்ந்த சிறுவன் போல தானே. எனவே இன்னும் ஹர்ஷாவை ஒட்டிக் கொண்டான்‌.
     அதில் புன்னகைத்த ஹர்ஷா “சரிடா அபி குட்டி ஒன்னும் இல்ல. நீயே இப்படி அழுதா அம்முவ யாரு சமாதானம் செய்வா. எனக்கு அப்புறம் நீதானேடா‌ நம்ம வீட்ல பொறுப்பான பையன்.
     ம்ம் நீயே இப்படி ஒடிஞ்சு போன எப்படி. தைரியமா இருக்கனும் என்ன. போ போய் அம்முவ பாரு” என்று பேசி அவனை சமாதானம் செய்து அபியை திசை திருப்பிய பினன்ரே வெளியேறினான் ஹர்ஷா.
     இதையெல்லாம் கதவின் அருகே நின்று பார்த்த அனுக்ஷ்ராவிற்கு மனது பாரமானது‌.
     இந்த நிகழ்வுகள் எல்லாம் நடப்பதற்கு மூலக்காரணம் அவளின் அத்தை வசுந்தரா என்பதில் இன்னும் குற்றவுணர்வு உண்டானது.
     அதே யோசனையில் தங்களின் அறைக்கு சென்று அமர்ந்து விட்டாள் அனு. அபியை சமாதானம் செய்து விட்டு வந்த ஹர்ஷா கண்டது சோகமாக அமர்ந்திருந்த அனுவை தான்.
     “என்னடி என்னாச்சு ஏன் இப்படி உக்காந்து இருக்க?” என்ற ஹர்ஷாவின் கேள்விக்கு பாவமாக அவனை பார்த்து வைத்தாள் அனு. அவள் முகத்தை பார்த்து சிரிப்பு வந்தது ஹர்ஷாவிற்கு.
     “சாரி ஹர்ஷா அத்தை இந்த மாதிரி எல்லாம் நடந்துப்பாங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல. வீட்ல இருக்க எல்லாரும் எவ்ளோ ஹர்ட் ஆகிருக்காங்கனு அவங்க எல்லார் முகத்தை பாக்கும் போதே தெரியுது. எல்லாம் என்னால தான். என்னை நீங்க மேரேஜ் செஞ்சதால தான்”
     ஹர்ஷா உள்ளே வந்ததும் அனு தன்போக்கில் புலம்ப தொடங்கிவிட, ஹர்ஷாவின் சிறு சிறு சமாதானங்கள் வேலைக்காக வில்லை.
     ‘இது சரிப்படாது’ என யோசித்த ஹர்ஷா அனு பேசிக் கொண்டிருக்கும் போது அவளை இழுத்தவன் இதழோடு இதழ் பொறுத்திவிட்டான்.
     சில நிமிடங்களில் மூச்சுக்காக பிரிந்தாலும் மீண்டும் அவள் இதழில் கவிபாடினான் ஹர்ஷா. இதற்கு பிறகு நடந்தது எதுவும் அனுவின் நினைவில் இல்லை.
     ஹர்ஷாவும் அவளை தன்னை தவிர வேறு எதுவும் நினைக்காத அளவு பார்த்துக் கொண்டான். அப்புறம் என்ன அவள் நினைவு கனவு எல்லாம் ஹர்ஷா ஹர்ஷா மட்டுமே.
     ஹர்ஷாவின் மனதும் வசுந்தராவின் பேச்சில் நன்றாக காயப்பட்டிருந்தது. எங்கே தான் சோர்ந்து அமர்ந்தால் வீட்டினர் அதற்கு மேல் ஒடிந்து போய்விடுவரோ என்று எண்ணிய ஹர்ஷா தன் மனதை மறைத்து அனைவரையும் தேற்றினான்.
     அதன் பொருட்டே விக்ரமை சங்கவியோடு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு வந்து அபியை சமாதானம் செய்தான்‌. அவனை அம்முவிடமும் அனுப்பி வைத்தான்.
     பின் அனுவிடம் வந்து தன் மனதை சொல்லும் பொருட்டு வந்தால், இங்கே அனுவோ அவர்களுக்கு மேல் இருக்க அவளை முத்தமிட்டு சமாளித்து, தானும் சமாதானம் அடைந்தான்.
     இந்த நிகழ்வின் தாக்கத்தில் ஒரு வாரம் சென்றுவிட, ஹர்ஷா கதிர் அவனை அலுவலகத்திற்கு அழைத்திருந்ததை சுத்தமாக மறந்திருந்தான்.
     கதிரும் ஒரு வாரம் பார்த்தபின் தானாகவே ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்துவிட்டான் மிகப்பெரிய குண்டை தாங்கிக் கொண்டு.
-மீண்டும் வருவான்

Advertisement