Advertisement

     வசுந்தரா தேவி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க “ஹலோ! என்ன உளறீட்டு இருக்கீங்க. அவரு என் அண்ணன். இந்த வீட்டு வாரிசு. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க” என்று பொங்கி எழுந்து விட்டான் அபிமன்யு.
     “ஆமா வசும்மா மாப்பிள்ளை இந்த வீட்டு பையன். உன்னோட மூத்த குழந்தை இறந்து போய்ருச்சுமா. அதுமட்டும் இல்லாம அந்த குழந்தை, பெண் குழந்தைமா அதை நீ மறந்துட்டியா?” என்று விஸ்வநாதன் தன் பங்கிற்கு பேசினார்.
     அப்போது தான் கணபதிக்கும் அது நினைவு வந்தது. எனவே “ஆமா வசுமா. நானும் இதை மறந்தே போய்ட்டேன் பாரு. உனக்கு முதல்ல பிறந்தது பெண் குழந்தை தான் அதை மறந்துட்டியா?” என்று  தன் பங்கிற்கு சமாதானம் செய்ய முயன்றார்.
     ஆனால் எதுவும் பேசாத வசுந்தராவோ ஹர்ஷாவின் கையை இன்னும் பிடித்து நின்றிருந்தார். ஹர்ஷவர்தனுக்கோ இது பெரிய அதிர்வை தரவில்லை.
     ஏனெனில் வசுந்தரா ஏதோ தவறாக புரிந்து கொண்டு இப்படி கூறுகிறார் என்று எண்ணியதால் ஹர்ஷா பொறுமையாகவே அவரிடம் பேசினான்.
     “நீ டென்ஷன் ஆகாத அபி. நீங்க எல்லாரும் சைலண்டா இருங்க. நான் பேசுறேன்” என்று அபிமன்யு மற்றும் மற்றவர்களை சமாதானம் செய்த ஹர்ஷா மெதுவாக தன் கையை வசுந்தராவிடம் இருந்து பிரித்துக் கொண்டான்.
     “இங்க பாருங்கமா, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசுறீங்க. நான் உங்க புள்ள கிடையாது. அண்ட் எல்லாரும் சொல்றாங்களே, உங்களுக்கு பிறந்து இறந்துப் போனது பெண் குழந்தை தான்னு.
     சோ உங்களை போட்டு நீங்க குழப்பிக்கிட்டு மத்தவங்களையும் குழப்பாதீங்க” என்று பொறுமையாக எடுத்து கூறினான் ஹர்ஷா‌‌.
     ஆனால் அதை ஏற்று கொள்ளாத வசுந்தராவோ “இல்ல எனக்கு பையன் தான் பிறந்தான். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்று கத்தியவர் அவர் பக்கம் தெரிந்த விஷயங்களை கூறினார்‌.
     “டாக்டர் சுபத்ரா தான் என்னை ஆரம்பத்தில இருந்து செக் பண்ணி பிரசவமும் பார்த்தாங்க. அந்த நாட்கள்ல எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை.
     அந்த குழந்தைய பெத்துக்கறதுல நிறைய சிக்கல் இருந்தது. ஏன் அந்த குழந்தை வேண்டாம்னு கலைக்க கூட நினைச்சேன்.
     ஆனா சுபத்ரா டாக்டர் குடுத்த ஊக்கத்துல தான் என் மூத்த பிள்ளைய நான் பெத்து எடுத்தேனு செல்லலாம்.
     அப்படி பிறந்த அந்த குழந்தையை நான் எப்படி மறப்பேன். அதுவும் பிறந்த உடனே சுபத்ரா டாக்டர் ‘உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் பாருங்கனு’ என்கிட்ட காட்டிட்டு தான் போனாங்க.
     அது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு” என்று பேசிய வசுந்தராவின் விழிகள் அந்த நாட்களை எண்ணி கண்ணீர் வடித்தது.
     தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்ட வசுந்தரா “இங்க சுபத்ரா டாக்டரோட போட்டோ பார்த்த உடனே எனக்கு ரொம்பவே அதிர்ச்சி தான். அதுமட்டும் இல்லாம ஒரு சில விஷயங்களை வச்சு நான் யோசிச்சு பார்த்ததுல எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது. அது இவன் என் பையன் தான்னு” என்று உறுதியாக கூறினார்.
     எல்லாவற்றையும் கேட்ட  ராஜசேகர் மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போனார். ஒரு வேளை வசுந்தரா கூறியதை கேட்டு ஹர்ஷா தன்னிடம் வந்து கேட்டுவிடுவானோ என்று உள்ளுக்குள் பயந்து போய் நின்றிருந்தார்.
     ஆனால் அவர் மகன் ஹர்ஷாவோ தன் தந்தையை திரும்பி சந்தேகப் பார்வை கூட பார்க்கவில்லை. ஏன் சிறிதும் குழப்பம் கூட அடையவில்லை. அந்த மட்டும் ராஜசேகர் சற்று ஆசுவாசம் அடைந்தார்.
     இங்கே ‘இதென்னடா புது தலைவலி’ என்று சலிப்பாக எண்ணிய ஹர்ஷாவிற்கு, வசுந்தராவிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெருமூச்சு எடுத்துக் தன்னை சமன் செய்து கொண்டு பேச துவங்கினான்.
     “இங்க பாருங்க, எங்க அம்மா உங்களை மாதிரி பல பேருக்கு பிரசவம் பார்த்திருக்காங்க. டெலிவரி டைம்ல நீங்க மயக்கத்தில இருந்திருப்பீங்க.
     அண்ட் அப்போ உங்க மென்டல் ஹெல்த் கூட சரி இல்லைன்னு இப்போ நீங்க தானோ சொன்னீங்க. சோ என்னோட அம்மா சொன்னதை அப்போ நீங்க சரியா கவனிக்காம இருந்திருக்கலாமே” என்று ஹர்ஷா நியாயமாக கேட்டு வைக்க சற்று யோசித்தார் வசுந்தரா.
     அதை கண்ட மற்றவர்களுக்கும் சற்று நிம்மதி ஆனது. அவர் யோசிப்பதை கண்டு சிறிது புன்னகைத்த ஹர்ஷாவும் ‘அவர் புரிந்து கொள்வார்’ என்றே எண்ணினான்.
     ஆனால் “இல்லை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சுபத்ரா டாக்டர் எனக்கு பையன் தான் பிறந்திருக்கான்னு சொன்னாங்க” என்று சிறு பிள்ளை போல் அதே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறினார்.
     ஆரம்பத்தில் இருந்தே வசுந்தரா பேசுவதை கோபத்துடன் பார்த்திருந்த பார்வதி “இங்க பாருங்கமா எங்க ஹர்ஷா குட்டி இவ்ளோ தூரம் பொறுமையா சொல்றான்.
     நீங்க என்னடான்னா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க. என்னம்மா நினைச்சுட்டு இருக்கீங்க. நாங்க அமைதியா இருந்தா நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போவீங்களா?” என்று தன் பங்கிற்கு தன் கோபத்தை காட்டினார்.
     அதில் பார்வதியிடம் நகர்ந்த ஹர்ஷா அவரை தோளோடு அணைத்து சாந்தப்படுத்தியவன், “அத்தை காம்டௌன். அவங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இப்படி எல்லாம் உளறீட்டு இருக்காங்க.
     நீங்க ஏன் அதை இவ்ளோ போட்டு திங்க் பண்ணி கன்பியூஸ் பண்ணிக்கிறீங்க. நான் அவங்க டௌட் எல்லாத்தையும் தெளிவா பேசி சால்வ் பண்ணிடுறேன்” என்றான் அமைதியாக.
     இதை எல்லாம் பார்த்து கலவரம் அடைந்த அனு “அத்தை என்னாச்சு அத்தை? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. அவர் இந்த வீட்டு பையன். அதை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகனும்” என்று தன் பங்கிற்கு பேசினாள்.
     என்னதான் வசுந்தரா அனுவின் பாசமான அத்தையாக இருந்தாலும், அனுவிற்கு தெரியுமே இந்த வீட்டில் ஹர்ஷாவை சார்ந்து தான் அனைவரும் இருப்பது‌.
     வசுந்தரா இப்படி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் எனும்போது அதை எப்படி அனு தொடர விடுவாள்.
     ஆனால் இவர்கள் ஒருவரின் வார்த்தை கூட வசுந்தராவின் காதில் ஏறவில்லை என்பது போல் “இல்லை இல்ல இவன் என்னோட பையன் தான்” என்றார் மீண்டும்.
     வசுந்தராவின் கூற்றில் வீட்டினர் அனைவருக்கும் அவர் மீது கோபம் அதிகமாகவே வந்தது. ஆனால் அனுவின் முகத்திற்காக பல்லை கடித்து கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.
     ஹர்ஷாவிற்கும் கோபம் வந்தது தான். அப்போதும் அவன் வார்த்தைகளில் நிதானத்தை கொண்டு வந்து
     “இங்க பாருங்க நீங்க அனுவோட அத்தைன்றதால தான் நான் ரொம்பவே பொறுமையா இருக்கேன். நீங்க என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க” என்றவன்
     “ஓகே அதை விடுங்க. நான் கேக்குற கேள்விக்கு பர்ஸ்ட் பதில் சொல்லுங்க. உங்க மேரேஜ் முடிஞ்சு எத்தனை வருஷம் ஆகுது, அதை முதல்ல சொல்லுங்க?” என்று கேட்டு நிறுத்தினான் ஹர்ஷா.
     ஹர்ஷா கேட்டவுடன் கணபதி “அது இருபத்தி ஆறு வருஷம் ஆகுது தம்பி” என்று அவர்கள் திருமணம் ஆன ஆண்டையும் கூற அங்கே இருந்த பலர் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
     ஹர்ஷாவும் புன்கைத்தவன் “கேட்டீங்களா உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகி இருபத்தி ஆறு வருஷம் ஆகுது. பட் என்னோட வயசு முப்பது ஆகப்போகுது.
     அது மட்டும் இல்லாம என் அம்மா டெலிவரி பார்த்தாங்க அப்படின்ற ஒரே காரணத்துக்காக நீங்க இப்படி பேசுறது ரொம்ப தப்பு. நீங்க உங்க பிடிவாதத்தால இங்க இருக்க என் ஃபேமிலி மெம்பர்ஸ் மனசை காயப்படுத்துறீங்க.
     அது எனக்கு சுத்தமா பிடிக்கல. அண்ட் இது ஜஸ்ட் ஒரு மிஸ் அண்டர்ஸ்டேன்டிங். அதை புரிஞ்சுக்கிட்டு இதை இப்படியே விடுங்க” என ஹர்ஷா அவன் வீட்டினரின் வேதனை படிந்த முகத்தை கண்டு இப்படி கூறினான்.
     அதுவும் அபிமன்யு மற்றும் விக்ரம் இருவரும் விட்டால் இப்போதே வசுந்தராவை பிடித்து வெளியே தள்ளி விடுவேன் என்பது போல் நின்றிருந்தனர்.
     அருணாசலம் மற்றும் ராஜசேகரின் முகங்களில் இருந்த பாவத்தை காண சகியாமலும் இவ்வாறு கூறினான் ஹர்ஷா.
     அதுவும் ராஜசேகரகன் வேதனையான முகத்தை கண்டு அவரை ஆதரவாக அணைத்த ஹர்ஷா “அப்பா அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க. அதுக்காக நீங்க பீல் பண்ணாதீங்க” என்று ஆறுதல் அளித்தான்.
     அப்போது ராஜசேகர் ஹர்ஷாவை திரும்பி பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று ஹர்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
     அதை நிம்மதி என்பதா இல்லை தன் மகன் தனக்கு மட்டும் தான் என்று புதிதாக வந்த தைரியம் என்பதா. ஆனால் ஏதோ ஒன்று ராஜசேகரை நிமிர்ந்து நிற்க செய்தது.
     அதே நிம்மதியோடு “ம்ம் புரியுதுபா. அப்பா ஒன்னும் கவலைபட மாட்டேன்டா. எனக்கு தெரியும் நீ என் புள்ளைடா” என்று உணர்ந்து கூற நிறைவாய் புன்னகைத்தான் ஹர்ஷா.
     ஆனால் வசுந்தராவோ எதையோ மனதில் நினைத்து மெல்லவும் முடியாது சொல்லவும் முடியாது பரிதவிப்புடன் அனைவரையும் பார்த்து நின்றார்.
     கணபதியோ இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாலும், இதுதான் தக்க நேரம் என நினைத்து
     “வசும்மா அதான் எல்லாரும் இவ்ளோ சொல்றாங்களே இந்த பையன் உனக்கு பிறக்கலமா புரிஞ்சுக்க. இதுக்கு மேலையும் நீ இதையே சொல்லிட்டு இருக்காம கிளம்புமா, நாம வீட்டுக்கு போகலாம்” என்று நைச்சியமாக பேசி அழைத்தார்.
     கணபதியை தொடர்ந்து மற்றவர்களும் இதையே கூற “ஆஆ…!” என தலையை பிடித்து கொண்டு கத்திய வசுந்தரா “இல்ல இல்ல…” என்று புலம்பி தவித்தார்.
     வசுந்தராவின் நிலையை கண்டு விஸ்வநாதன் உட்பட அவர்கள் குடும்பமே வேதனை கொண்டனர். அந்த சம்பவத்தை இப்படி தன்னுள்ளே போட்டு இத்தனை நாட்கள் வசுந்தரா எவ்வளவு வருந்தி இருப்பார் என்று தான் விஸ்வநாதன் கவலை கொண்டார்.
     “அம்மா ஏன்மா இபப்டி செய்ற. இது அனு அக்கா வீடு இங்க வந்து நீ இப்படி பிரச்சினை செய்யலாமா? வாமா நாம வீட்டுக்கு போகலாம்” என்று வசுந்தராவின் மகள் ரித்து அழுது கொண்டே கூறியும் அசையவில்லை அவர்.
     ‘எல்லாரும் இவ்ளோ சொல்றாங்க, இந்தம்மா என்னனா இடிச்சபுளி மாதிரி அசராம நிக்குது. இப்படியே விட்டா இந்தம்மாவுக்கு பாவம் பார்த்து உங்க புள்ளை தான்னு நம்ம வீட்டு ஆளுங்க சொன்னாலும் சொல்லிடுவாங்க.
     எதாவது நடக்கிறதுக்கு முன்னாடி கூட்டத்தை கலச்சு விடுடா அபி’ என அபி தனக்குள் யோசித்த நேரம்,
     “என்னம்மா நீங்க இப்படி செய்றீங்க. நாங்க இவ்ளோ பேர் இவ்ளோ தூரம் பேசியும் நீங்க சொன்னது தான் சரின்னு நின்னா என்ன அர்த்தம். உங்க வீட்ல இருக்க பெரியவங்களே சொல்றாங்க உங்களுக்கு பிறந்து இறந்தது பெண் குழந்தைனு.
     ஆனால் நீங்க ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க” என்று பொறுமையாக எடுத்து சொல்ல ஆரம்பித்தான் விக்ரம்‌.
     விக்ரம் கூறியதை கேட்டு “இல்ல இறக்கல. இவன் தான் என் பையன்” என மீண்டும் கூறியபடி நின்றார் வசுந்தரா.
     யார் சொன்னாலும் நான் சொல்வது மட்டுமே சரி என எண்ணும் வசுந்தராவை எப்படி மாற்றுவது என அனைவருக்கும் ஆயசமாக வந்தது.

Advertisement