Advertisement

     “ஹலோ டாக்டர் ஹர்ஷவர்தன்?” என்ற கம்பீர குரலை கேட்டு ஒரு நொடி யோசித்த ஹர்ஷா “யெஸ் நான் டாக்டர் ஹர்ஷவர்தன் தான். சொல்லுங்க யார் நீங்க?” என்றான் தானும் கம்பீரமாக.
     “நான் ஏ.சி கதிர்வேல். அன்னைக்கு வேதாசலம் மாமாவோட வந்து கம்ப்லைன் தந்திருந்தீங்க. ஞாபகம் இருக்கா?” என்று ஏ.சி கதிர்வேல் கேட்டான்.
     அப்போது தான் கடந்து வந்த பிரச்சினைகள் குறித்து நினைவு வந்தது ஹர்ஷாவிற்கு. “ஹான் நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க எப்படி இருக்கீங்க சார். அண்ட் இந்த இஸ்யூ எந்த அளவுல இருக்கு? ஆள் யார்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?” என ஆர்வமாக கேட்டான்.
     “ஐம் பைன் ஹர்ஷா. ஓரளவு நாங்க அவரை நெருங்கிட்டோம்னு நினைக்கிறேன் டாக்டர். அதோட நீங்க சொன்ன ஆள் குடுத்த டீட்டெய்ல்ஸ் ரொம்பவே உதவியா இருந்தது.
     அன்ட் இதுல உங்ககிட்ட இருந்து ஒரு சில டீடெயில்ஸ் வேணும். அதான் அது சமந்தமா உங்ககிட்ட பேசனும்னு கால் பண்ணிருக்கேன்.
     பட் விஷயத்தை நேர்ல பேசினா பெட்டர். நீங்க இப்ப பிரீயா இருந்தா ஆபிஸ் வாங்களேன். பேசலாம்” என்று கதிர்வேல் அவன் அழைத்ததன் நோக்கத்தை‌ கூறினான்.
     “ஓஓ… அப்படியா சார். பட் இன்னைக்கு வீட்ல அம்மாக்கு திதி பண்றோம். சோ இப்போ என்னால வர முடியும்னு தோனலை. நான் வேணா நாளைக்கு வரட்டுமா சார்.
     இல்ல உங்களுக்கு நாளைக்கு எதாவது வொர்க் இருக்கா?” என ஹர்ஷா தன்னுடைய நிலையையும் எடுத்து கூற, சிறிது நேரம் யோசித்த கதிர்
     “உங்க சிட்டுவேஷனும் புரியுது ஹர்ஷா. அன்ட் இங்க சஸ்பெக்ட் யாருன்னு கிடைச்ச க்ளூலாம் வச்சு பார்த்ததுல…” என்று ஆரம்பித்த கதிர்
     “அதை நேர்ல சொல்லிடுறேன் ஹர்ஷா. நீங்க நாளைக்கு கால் பண்ணிட்டு வாங்க. நான் என் வொர்க்க கொஞ்சம் பிரீ பண்ணிக்கிறேன்” என்று வாக்குறுதி அளித்தான்.
     அதில் நிம்மதி அடைந்த ஹர்ஷாவும் “ஓகே சார் அன்ட் தேங்க் யூ சோ மச்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான். அதன்பின் ‘குற்றவாளி யாரா இருக்கும்? ஏ.சி ஏன் பேர சொல்ல இவ்ளோ தயங்குறாரு?’ என யோசித்த ஹர்ஷா ‘சரி நாளைக்கு அங்கே போனா தெரிஞ்சிடும்’ என எண்ணிக் கொண்டான்‌.
—————————————
     “சங்கவி இந்த அம்முவ காணோம்மா. ரூம்ல போய் எதாவது பண்ணிட்டு இருப்பா. இவளோட இதே பிரச்சினைமா.  கொஞ்சம் போய் அவள கூட்டிட்டு வரியாடா” என்று பார்வதி கேட்க
     “சரிங்க அத்தை” என்று ஒத்துக் கொண்ட சங்கவியும் அம்முவை எண்ணி சிரித்துக் கொண்டே அவள் அறை நோக்கி சென்றாள். மாடிப் படியில் ஏறி செல்லும் சங்கிவியை கண்கள் ஒளிர பார்த்தான் விக்ரம்.
     ‘வாவ் சூப்பர் சான்ஸ் விக்ரம்’ என மகிழ்ந்தான் விக்ரம். பின்னே அபி அசால்ட்டாக ஆபிசில் ரொமான்ஸை வைத்து கொள் என கூறிவிட்டானே. ஆனால் நம் விக்ரமோ வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் தான் அலுவலகத்தில் வேலையில் இருந்து சிறிதும் தன் எண்ணத்தை திருப்பமாட்டான்.
     இதில் சங்கவியை எங்கே காதல் செய்வது. கடந்த ஒரு மாதமும் இப்படியே சென்றிருக்க, தன் வீட்டிற்கு வந்திருந்த சங்கவியிடம் எப்படியாவது ஒரு முத்தம் பெற வேண்டும் என துடித்து கொண்டிருக்கிறான் விக்ரம்‌.
     “மச்சான் என் மொபைல ரூம்லையே வச்சிட்டு வந்துட்டேன்டா. போய் எடுத்துட்டு வந்திடுறேன்” என்று அபியை சமாளித்த விக்ரம் மாடி ஏறினான்.
     விக்ரமை சந்தேகமாய் பார்த்தாலும் இருந்த வேலையில் ‘இவன் முழி ஒன்னும் சரியில்லையே. போகட்டும் எப்படியும் நம்ம ஆளு அவ்ளோ வொர்த்லாம் இல்ல’ என்று நினைத்த அபி விக்ரமை விட்டுவிட்டான்.
     ‘ஹப்பா ஒருவழியா ரூம்க்கு வந்தாச்சு. இனி நம்ம பெர்பார்மன்ஸ ஆரம்பிக்க வேண்டியது தான்’ என நிம்மதி பெருமூச்சு விட்ட விக்ரம் கதவுக்கு பக்கத்தில் நின்றுக் கொண்டான்.
     சங்கவி வந்தால் அப்படியே அமிக்கி அறையினுள் இழுத்து தான் எண்ணியதை நிறைவேற்ற தயார் ஆனான். ஏனெனில் இவன் அறையை கடந்த பின்னரே அம்முவின் அறை வரும்.
     ‘நீ நினைக்கிறது எப்பவும் நடக்காது மகனே. நான் நடத்தவும் விட மாட்டேன்’ என்று மர்மமாய் இயற்கையும் புன்னகைத்துக் கொண்டு நடக்க போவதை பார்க்க தயாரானது.
     அப்போது சரியாக யாரோ வரும் அரவம் கேட்க தன்னை தயார்படுத்திக் கொண்டான். சட்டென அவன் கரத்தை வெளியே நீட்டி யாரையோ பிடித்து உள்ளே இழுத்தும் விட்டான்.
     அவரை அப்படியே அணைக்க போக “ஐயையோ! எருமைமாடே என்னை விடுடா” என்ற பார்வதியின் குரலில் அடித்து பிடித்து கையை விட்டான் விக்ரம். பின் பாவமாக தன் அன்னையை பார்த்து அசடு வழிந்தான்.
     “என்னடா ஆச்சு. எதுக்கு என் கையை புடிச்சு இப்ப உள்ள இழுத்த” என்று பார்வதி கத்த, விக்ரம் திருதிருவென முழித்து நின்றான்.
     எதுவும் சொல்லாமல் நின்ற விக்ரமை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்ட பார்வதி “சரியான பைத்தியத்தை பெத்து வச்சிருக்கேன். ச்சே” என முணுமுணுத்து சென்றார்.
     விக்ரம் ‘நம்ம நேரம் சரியில்லை’ என்று விதியை நொந்தபடி நின்றான். அவன் எங்கே அறிவான் முதலில் அம்முவின் அறைக்கு சங்கவியை போக சொன்ன பார்வதி, அவளுக்கு வேறு வேலையை தந்துவிட்டு தானே அம்முவின் அறைக்கு வந்ததை.
     பின் ‘இது எப்பவும் நமக்கே நடப்பது தானே’ என தன் மனதை சமாதானம் செய்துக் கொண்டு வெளியே சென்றான் விக்ரம்.
     அதே போல் கீழே சென்று திதிக்கான ஏற்பாடுகளை பார்வதி செய்து முடிக்க சடங்குகள் தொடங்க இருந்தது. அப்போது சரியாக விஸ்வநாதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிட்டனர் ராஜசேகரின் அழைப்பின் பேரில்.
     அதோடு வசுந்தரா தேவி மற்றும் கணபதி ராமையும் அழைத்து வந்திருந்தனர். விஸ்வநாதன் கணபதியை தானும் வர சொல்லி அழைத்தார்.
     ஆனால் அவர் வரமாட்டேன் என்று தீட்சண்யமாக மறுத்து நிற்க, அதற்கு விஸ்வநாதன் அங்கேயே அவரிடம் சண்டைக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்த அனுவின் தாய் மீனாட்சி தான் பேசி பேசியே கணபதியை வர சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தார்.
     ஆனால் இந்த விழா நிறைவு பெறுவதற்குள் ‘ஏன் இவங்கல கூட்டிட்டு வந்தோம்’ என்று கவலை கொள்ள போகிறார் அவர்.
     ஐயர் சரியான நேரத்திற்கு வந்துவிட, அனைத்தையும் சரியாக தயார் செய்துவிட்டார் பார்வதி. வீட்டின் மூத்த வாரிசு மற்றும் சுபத்ராவின் மகன் என்ற முறையில் ஹர்ஷா ஐயரின் முன் சடங்குகளை செய்ய அமர்ந்தான்.
     அங்கே இருந்த தன் பெரிய தந்தை புகைப்பத்தை கண்ட ஹர்ஷாவின் மனம் ‘தாத்தா எப்போதும் சொல்வது போல பெரியப்பா மாதிரி தான் நாம இருக்கோம்.
     ஆனா பாவம் ரொம்ப சின்ன வயசுலையே இறந்து போய்ட்டார்’ என்று வருந்தியது. அதன் அருகே கொஞ்சம் தள்ளி இருந்த தன் தாய் சுபத்ராவின் புகைப்படத்தை கண்டு கண்களில் நீர் கோர்த்து விட்டது ஹர்ஷாவிற்கு.
     என்னதான் அவன் தாய் அவனுடைய ஐந்து வயது வரை மட்டுமே உடன் இருந்திருந்தாலும், அந்த ஐந்து வருடமும் உலகில் உள்ள அவ்வளவு பாசத்தையும் அவன் மீது பொழிந்தவர் சுபத்ரா.
     அந்த நாட்கள் தெளிவாக ஞாபகத்தில் இல்லையென்றாலும் புகைமூட்டமாய் மனக்கண்ணில் எழ கண்களில் இருந்து நீர் தானாகவே கீழே சிந்தியது.
     அப்போது இருந்த சுபத்ராவின் முகம் நினைவில் இல்லை தான். ஆனால் அவர் நினைவாக மனதில் எப்போதும் நிற்கிறார். அப்போது ஆறுதலாக ஒரு கரம் அவன் தோளை தொட, திரும்பி பார்த்தான் ஹர்ஷா.
     அவன் தோளில் இருந்த கரம் ராஜசேகர் உடையது தான். ஆனால் அவரை சுற்றி அவன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நின்றிருந்தனர்.
     அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் சொல்லியது ‘உனக்கு நான் என்றும் பக்கபலமாக இருப்பேன்’ என.
     அவர்கள் அனைவரையும் பார்த்து மென்னகை புரிந்த ஹர்ஷா “ஐம் ஓகே ப்பா” என்று ராஜசேகரின் கரத்தை அழுத்தி கொடுத்தான். இதுவரை மன சஞ்சலத்துடன் சுற்றிக் கொண்டிருந்த ராஜசேகர் தன் மகனின் கண்ணீர் கண்டு அவனை ஆறுதல் படுத்த வந்தார்.
     ஆனால் மகன் தனக்கு ஆறுதல் கூறியதில் உண்மையாகவே சற்று மனம் நிம்மதி அடைந்தார். பின் அவரும் அமைதியாக பின்னே நகர்ந்தார்.
     வீட்டினர் அனைவரும் இவனை சுற்றி அமர்ந்திருக்க விஸ்வநாதன் குடும்பத்தினர் சற்று தள்ளி அமர்ந்து இருந்தனர். எனவே முன்னால் இருந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று சரியாக தெரியவில்லை.
     இதில் இங்கே இஷ்டமில்லாது வந்திருந்த கணபதியை சொல்லவே வேண்டாம். வேண்டா வெறுப்பாக அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து படி தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தார்.
     எல்லாம் நல்லபடியாகவே முடிய, “தம்பி பித்ருக்கு சாதம் வச்சிட்டு வாங்கோ. திவசம் நல்லபடியா முடிஞ்சிடும்” என்று ஐயர் முடித்தார்.
     எனவே வீட்டு உறுப்பினர்கள் காக்கைக்கு சாதம் வைத்து விட்டு திதியை நிறைவு செய்தனர்‌. இப்படி அனைத்து சடங்குகளும் முற்று பெற இப்போது விஸ்வநாதன் குடும்பத்தினர் புகைப்படத்தின் முன்னர் வந்து வணங்கினர்.
     கடைசியாக வந்த வசுந்தரா மற்றும் கணபதி ராம் கையை கூப்பி வணங்கியபடி அங்கிருந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்தனர்.
     முதலில் அதிர்வில் இருந்து வெளிவந்த கணபதி திரும்பி வசுந்தராவை பார்க்க அவரின் நிலைக்குற்றிய பார்வையில் பெரிதாக அதிர்ந்தார் அவர்.
     எது நடக்க கூடாது என்று எண்ணியிருந்தாரோ இன்று அது தன் கண் முன்னே நடக்கப் போகுதோ என்று பதறிய கணபதிக்கு அடுத்து என்ன செய்வது என்று கூட புரியவில்லை.
     வசுந்தராவோ கணபதியை கவனிக்காது தன் மன போராட்டத்தில் மூழ்கி இருந்தார். ஏதேதோ எண்ணங்கள் அவர் மூளையை ஆக்கிரமிக்க வசுந்தரா இந்த உலகிலே இல்லை.
     வசுந்தரா அங்கிருக்கும் புகைப்படத்தை கண்டு இப்படி சிலையாக நிற்பதையும், அவரை கணபதி உலுக்கிக் கொண்டிருப்பதையும் பார்த்த அனைவரும் குழம்பினர்.
     வீட்டில் இருந்த அனைவரும் வந்து அவரை அழைத்து பார்க்க அசையவில்லை வசுந்தரா. கடைசியில் விஸ்வநாதன் வசுந்தராவை நெருங்கி “வசும்மா” என்று அவரை உலுக்கினார்.
     அவரின் செயலுக்கு கொஞ்சம் தெளிந்தார் வசுந்தரா. “என்னம்மா ஆச்சு. ஏன் இப்படி நிக்கிற” என்று அவர் பதற்றத்துடன் கேட்க வசுந்தராவிடம் இருந்து கதறல் வெளிப்பட்டது.
     “அண்ணா” என்று விஸ்வநாதனை அணைத்த வசுந்தரா தேம்பி தேம்பி அழுதாரே ஒழிய எதுவும் பேசவில்லை. அவரும் வசுந்தராவை முடிந்தளவு சமாதானம் செய்தார்.
     இதை எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்த்தனர். அவர்களுக்கும் என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை. ஆனால் ராஜசேகரின் மனம் மட்டும் தாறுமாறாக அடித்துக் கொண்டது.
     சிறிது நேரம் கழித்து சற்று அழுகை மட்டுப்பட “என்ன ஆச்சு வசுமா. ஏன் அழுத?” என்று கேட்டார் விஸ்வநாதன். இப்போது ஏதோ யோசித்த வசுந்தரா ஒரு முடிவு எடுத்தவராக
     “அண்ணா என் மூத்த மகன் இறந்து போனதா தானே நாம நினைச்சிட்டு இருக்கோம். அவன் சாலை ண்ணா. உயிரோட தான் இருக்கான்” என்றார்.
     இதை கேட்டு விஸ்வநாதனுக்குள் பதற்றம் தொற்றியது. கணபதிக்கோ பயமே வந்து விட்டது. “என்னம்மா சொல்ற?” என்ற விஸ்வநாதனின் குரல் அவருக்கே சரியாக கேட்கவில்லை.
     “ஆமா ண்ணா. அது யாருன்னு கூட எனக்கு தெரியும்” என்றவர் தற்போது ஹர்ஷாவை பார்த்து அவனை நோக்கி சென்றார். ஹர்ஷாவின் கையை பிடித்து கொண்ட வசுந்தரா “இவன் தான் என் மூத்த மகன் ண்ணா” என்று கூற அங்கே எல்லாரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.
     இத்தனை நாள் எது நடக்க கூடாது என்று ராஜசேகர் எண்ணியிருந்தாரோ அது தன் கண் முன்னே நடப்பதில் விக்கித்து நின்றார் அவர்.
-மீண்டும் வருவான்

Advertisement