Advertisement

     “விக்ரம் அத்தான் அப்புறம் மெதுவா நீ உன் ஆள சைட் அடிச்சுக்கலாம், இப்ப வா வந்து அந்த கதவுக்கு பூ போட ஹெல்ப் பண்ணு வா” என்று சங்கவியை சைட் அடித்துக் கொண்டிருந்த விக்ரமை கஷ்டப்பட்டு இழுத்து சென்றான் அபிமன்யு.
     அன்று அபியின் பிறந்தநாள் விழாவில் நடந்த நிகழ்விற்கு பின் விக்ரம் பகிரங்கமாக சங்கவியின் பின் சுற்ற துவங்கிவிட்டான்.
     அதுவும் அவன் காதல் சொன்ன லட்சனத்தை இப்போது நினைத்தாலும் சங்கவிக்கு வெட்கம் வந்துவிடும். விக்ரமின் பெர்பார்மன்ஸ் அந்தளவு இருந்தது.
     காதலை புரிந்து கொள்ளும் வரை தத்தியாய் இருந்த விக்ரம், உணர்ந்த பின்னர் அவனின் அவதாரம் அதிரடியாக மாறியது. அன்று அவளை வீட்டிற்கு அழைத்து சென்றது விக்ரம் தான்.
     சங்கவியின் வீடு வரும் வரை காரில் அமைதியே நிலவியது. அதில் சங்கவி கடுப்பாகிவிட்டாள். ‘இவரு சரியான லாந்தர் விளக்கு தான்’ என மனதில் எண்ணி நொந்த படி வர, வீட்டை அடைந்தனர்‌.
     சங்கவி இறங்கப்போகும் தருணம் அவள் கையை பிடித்து கொண்ட விக்ரம் “கொஞ்சம் பேசணும்” என்றான். ‘என்னவா இருக்கும்?’ என்று யோசித்தாலும் “சொல்லுங்க சார்” என்றாள் கவி.
     அவள் சார் என்றதில் அவளை ஒரு மாதிரி பார்த்த விக்ரம் “கவி இப்ப நான் சொல்றது தான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் நல்லா கேட்டுக்கோ.
     நாம தனியா இருக்கும் போது இப்படி சார் மோர்னு நீ என்னை கூப்பிட கூடாது. போடா வாடா கூட போட்டுக்கோ, பட் இந்த சார் மட்டும் வரக்கூடாது புரியுதா” என்றான் கண்டிப்பான குரலில்.
     “சார்னு கூப்பிட வேண்டாம்னா நான் உங்களை வேற எப்படிங்க கூப்பிடறது?” என்று தயங்கியபடி கேட்டாள் சங்கவி.
     சங்கவியின் தயங்கிய முகத்தை பார்க்க விக்ரமிற்கு சிரிப்பு தான் வந்தது. முதல் நாள் காலை அவனிடம் சண்டை இட்ட கவிக்கும், தற்போது வெட்கத்துடன் கன்னம் சிவந்து அமர்ந்திருக்கும் கவிக்கும் நூறு வித்தியாசங்கள்.
     அவள் தாடையை தொட்டு நிமிர்த்தியவன் “என்னடி இப்படி வெக்கப்படுற. நீ உண்மையாவே என் கவி தானா” என்று கிண்டல் செய்துவிட்டு
     “அதான் சொன்னனே பேபி, நீ என்ன போடா வாடான்னு கூட கூப்பிட்டுக்க. இல்ல மாமா அத்தான் இப்படி எப்படி கூப்பிட்டாலும் ஓகே தான்” என கூறி கண்ணடித்து வைத்தான்.
     “ம்ம்” என்று இழுத்தவள் “என்னவோ பேசனும்னு சொன்னீங்க” என்று நினைவுப்படுத்தினாள். “அது பேபி நீ இனிமே இந்த விக்ரமோட பிராப்பர்டி‌.‌ சோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிகலாம்.
     நேத்து தான் என்னோட லவ் எனக்கு புரிஞ்சுது. பட் உன்னை இப்போ இங்க விட்டுட்டு போக எனக்கு பிடிக்கலை. நான் கூட ஹர்ஷாட்ட சொன்னேன் ஒன் இயர் கழிச்சு மேரேஜ் பண்ணிக்கிறேன்னு‌.
     பட் கொஞ்ச நேரம் உன்னை விட்டு இருக்க முடிலடி. அதான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம். ஓகேவா பேபி” என்றான் அடாவடியாக.
     எல்லாவற்றையும் கேட்ட கவி “நான் போய்ட்டு வரேன்ங்க. ஆபிஸ்ல பாக்கலாம்” என்று மட்டும் கூறி வீட்டிற்குள் போக பார்க்க அவளை போக விடாது கையை பிடித்து கொண்டான் விக்ரம்,
     “என்னடி எதுவுமே சொல்லாமா கூப்பிட்டா விட்டுருவனா. மாமானு சொல்லுடி” என்று வம்பிடியாய் பேசினான்‌. விக்ரமின் விருப்பம் அதுதான். எனவே போனவளை பிடித்து வைத்தான்‌.
     “ஐயோ பிளீஸ் விக்ரம்! நான் வேணா உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன். தயவு செஞ்சு விட்டுருங்கபா” என்று கவி கெஞ்சிவிட
     “அப்போ நீ என்னை மாமான்னு கூப்பிட மாட்ட அப்படிதானே” என அது தான் இப்போது பெரிய பிரச்சினை என அதை பிடித்து கொண்ட விக்ரம், அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தான்.
     “இது தப்புல்ல பேபி. அப்போ இதுக்கு பனிஸ்மெண்ட் தந்தே ஆகனுமே” என்று பேசியபடி அவள் முகத்தை கையில் ஏந்தினான் அவன்.
     விக்ரம் அருகே நெருங்க நெருங்க சங்கவியின் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. “வேணாம் விக்..” என்ற சங்கவியின் வார்த்தைகள் விக்ரம் அவள் நெற்றியில் தந்த முத்தத்தில் அப்படியே நின்றது.
     மென்மையாக மிக மெதுவாக ஒரு நெற்றி முத்தம். அப்படியே அவள் கன்னத்தை கடித்து வைத்த விக்ரம் “இறங்கி போயிருடி” என்றான் கிறக்கமான குரலில்.
     ஆனால் விக்ரமின் இந்த அவதாரத்தில் வாய் ஓயாது பேசும் சங்கவியே வாயடைத்து நின்றாள். பின்னே அவள் என்ன கனவா கண்டாள் காதலை இனம் காணாது தத்தியாய் சுற்றிக் கொண்டிருந்த விக்ரம் இப்படி ரொமோ அவதாரம் எடுப்பான் என.
     பாவம் கவி அறியாதது, விக்ரமிற்கு எப்போதும் ஆரம்பம் தான் கோளாறு. அதாவது ஸ்டார்டிங் டிரபில். ஆனால் ஆரம்பித்து விட்டால் அவன் வேகத்தை தாங்கவே முடியாது.
     அவன் தொழிலில் அவன் செலுத்தும் ஆதிக்கமே சொல்லும் அவன் விரும்பி செய்யும் செயலை எந்த அளவு ஈடுபாட்டுடன் செய்வான் என.
     அதன்பின்னர் மந்திரித்து விட்டது போல தான் சங்கவி அவள் வீட்டிற்கு சென்றாள். அதற்கு பிறகு வந்த நாட்கள் எல்லாம் விக்ரம் ஒரு ரோமியோ போல் கவியையே சுற்றி வர வெட்கி போய்விடுவாள் கவி.
     “ஏன் விக்ரம் இப்படி செய்றீங்க” என சுகமாய் அலுத்துக் கொண்டாலும் கவிக்கும் விக்ரம் அவள் பின்னால் சுற்றுவது பிடித்து தான் இருந்தது. இப்படி தான் இந்த ஒரு மாதமும் ஓடியது.
     ஹர்ஷாவின் அம்மா மற்றும் பெரியப்பா என இருவருக்கும் இன்று திதி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒரு மாதத்தில் நல்ல நாள் எதுவும் சரியாக இல்லாத காரணத்தால் இப்போது நடக்கிறது.
     அந்த நிகழ்வுக்காக தான் சங்கவியும் இன்று அருணாசலம் இல்லத்திற்கு வந்துள்ளாள்‌. அவள் வந்த நேரம் முதல் விக்ரம் எப்போதும் போல் அவள் பின்னே சுற்றிக் கொண்டிருக்க,
     அவனை பார்த்து கடுப்பான அபிமன்யு தான் அவனை இழுத்துக் சென்று வேலை வாங்கி கொண்டிருக்கிறான். இங்கே இப்படி வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்க ராஜசேகரோ எதையோ எண்ணி கவலையில் இருந்தார்.
     அவர் மனது முழுவதும் சஞ்சலமாக இருக்க, அது சுபத்ராவிற்கு திதி கொடுப்பதால் என்று வீட்டினர் எண்ணி இருந்தனர்‌. ஆனால் அவர் மனது ஏதோ தவறாக நடக்கப் போவதாக அடித்து கூறியது‌.
     எனவே அவர் யோசனையோடு தன் அறைக்குள் அடைந்து கிடந்தார்‌. அருணாசலமோ தன் மூத்த மகனின் நினைவில் அவர் புகைப்படத்தை அணைத்தபடி பழைய எண்ணங்களில் மூழ்கி இருந்தார்.
     பார்வதிக்கு தன் அண்ணன் மற்றும் அண்ணியின் நினைவு மனதை வருத்தினாலும் சூழ்நிலை கருதி அங்கே அனைவருக்கும் வேலைகளை சொல்லியபடி தானும் செய்துக் கொண்டிருந்தார்.
     அறையில் அமர்ந்திருந்த ஹர்ஷாவிற்கும் இன்று எதுவோ தவறாக நடக்கப்போவது போல் தான் தோன்றியது. எதனால் தன் மனதிற்குள் இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறதோ என்று யோசித்தபடி இருந்த ஹர்ஷாவை அனுவின் குரல் கலைத்தது.
     “ஹர்ஷா பார்வதிமா உங்களை கீழ கூப்பிட்டுட்டு இருக்காங்க. நீங்க இங்க உக்கார்ந்து என்னப்பா செய்றீங்க?” என்றவாறு உள்ளே வந்தாள் அனு.
     ஆனால் ஹர்ஷா பேசாது இருந்ததை பார்த்து ‘இவருக்கு என்ன ஆச்சு?’ என்று நினைத்தவாறு அவனை பிடித்து உலுக்கினாள். “ஹான் என்னம்மா?” என்றான் தூக்கத்தில் இருந்து விழித்தது போல்.
     “என்னங்க ஏதோ பெருசா யோசனை பண்ணிட்டு இருகீங்க. என்னாச்சு‌? பார்வதிமா வேற உங்களை காணோம்னு கேக்குறாங்க. நீங்க தானே அங்க சடங்கு எல்லாம் செய்யனும்.
     நீங்க என்னடான்னா இங்க இப்படி உக்காந்துட்டு இருக்கீங்க” என தான் கூற வந்ததை கூறி முடித்தாள். அதன் பின்னரே தன் கடமையை உணர்ந்த ஹர்ஷா “ஒன்னும் இல்ல அனு. இதோ வந்துட்டேன்” என்றவாறு வெளியே சென்றான்‌.
     அவன் விசித்திரமான செய்கையில் குழம்பிய அனு ‘சரி திதி எல்லாம் முடியவும் என்னன்னு கேட்டுக்கலாம்’ என நினைத்துக் கொண்டு வேலையை பார்க்க சென்றாள்.
     இங்கே இப்படி செல்ல சங்கவி எப்போது தனியே மாட்டுவாள் என கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு லட்டாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.
     “கவிமா அந்த பின்பக்க தோட்டத்தில கொஞ்சம் பூ பறிச்சிட்டு வாடா” என்று ஒரு கூடையை தந்தார் பார்வதி. “சரிங்க அத்தை” என்ற சங்கவியும் பின்பக்கம் நகர,
     அவளை பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் அபிமன்யுவிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவள் பின்னாடியே பதுங்கி பதுங்கி சென்றுவிட்டான்.
     கவி ஏதோ ஒரு பாட்டை வாய்க்குள் முணுமுணுத்தபடி அந்த பூக்களை பறித்து கூடையை நிரப்பிக் கொண்டிருந்தாள். ‘ஐயோ செல்லக்குட்டி இப்படி வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டியேடி’ என மகிழ்ச்சியாய் எண்ணியபடி சுற்றும் பார்த்தபடி அருகில் சென்றான்.
     அவள் பின்னே சென்றவன் மெதுவாக அவன் கைகளை அவளின் இடையை சுற்றி அணைத்தான். திடீரென ஒரு கரம் பின்னால் இருந்து அணைக்கவும் பயந்த கவி கத்தப்போக
     “ஏய் கத்தீடாதடி. நான் தான்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறியவன் இன்னும் நெருக்கினான். “என்ன செய்றீங்க. யாராவது வந்திட போறாங்கா” என்றாள் கவி உள்ளே சென்ற குரலில்.
     “இந்த டைம் யாரும் இங்க வரமாட்டாங்கடி செல்லம்” என்ற விக்ரம் கவியை தன்னை நோக்கி திருப்பியவன் கவியின் முகத்தையே ரசனையாய் பார்க்க ‘என்ன’ என்று விழியை உயர்த்தி கவி கேட்டாள்.
     “காலைல இருந்து நானும் பார்க்குறேன். மேடம் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க. அதுவும் இன்னைக்கு வேற செமையா இருக்கடி” என்றவனின் கைகள் அவள் இடுப்பை இன்னும் அழுத்தின.
     அதில் சிவந்தாள் கவி. “அதான் உன்னை எப்படிடா தனியே தள்ளிட்டு வரலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்‌. என் மம்மியே அதுக்கு ரூட் போட்டு தந்த அப்புறம் எப்படிடி சும்மா இருப்பேன்” என்றான் கிறக்கமாக.
     “ப்ச் விடுங்க விக்ரம். இதெல்லாம் மேரேஜ்க்கு முன்னாடி தப்பு. சோ போங்க. அத்தை வேற பூ கேட்டுருக்காங்க. நான் அதை கொண்டு போய் கொடுக்கனும். பிளீஸ் விக்ரம் விடுங்கப்பா” என கவி கெஞ்சி பார்த்தாள்.
     அவளை பார்த்து ஒரு மார்க்கமாய் சிரித்த விக்ரம் “விட முடியாது செல்லம். இன்னும் விக்ரம்னு தான் கூப்பிடுற. மாமா வரமாட்டேங்குதே. எப்போடி உன் வாய்ல இருந்து அந்த வார்த்தை வரும்” என்றான்.
     அவன் குரலே அவனின் ஆசையை அப்பட்டமாக காட்ட “ஏன்ப்பா நான் மாமான்னு கூப்பிடறது உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா?” என்று ஆர்வமாக கேட்டாள்.
     அதற்கு விக்ரமும் வேகமாக தலையை ஆட்ட சங்கவிக்கு உள்ளே உருகிற்று. விக்ரமும் இந்த ஒரு மாதமாக ‘மாமா’வென அழைக்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறான்.
     கவி தான் கூப்பிடாது ஏமாற்றி கொண்டிருக்கிறாள். இன்று அவன் இவ்வளவு ஆசையாக கேட்கவும் சங்கவியும் ‘சரி இனி அப்படியே கூப்பிடலாம்’ என மனதில் முடிவு செய்து கொண்டாள்.
     எனவே “ம்ம்” என வெட்கத்துடன் சம்மதமாக தலையசைத்த கவி வாயை திறந்த நேரம் “டேய் விக்ரம் எருமைமாடே” என்ற குரலில் கவி அடித்து பிடித்து விலகினாள்.
     அங்கே அபி தான் விக்ரமை முறைத்தபடி நின்றிருந்தான். “சிஸ்டா வேலை முடிஞ்சு போச்சுனா நீ உள்ள போ” என்று கவியை பார்த்து அபி கூறவும் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிவிட்டாள் சங்கவி.
     அதில் கொலை வெறியான விக்ரம் “ஏன்டா?” என்றான் இயலாமையில். விக்ரமை நக்கலாய் பார்த்த அபி “ஏன்டா வீட்ல என்ன நடக்குது, நீ இங்க என்ன வேலைய பாக்குற.
     உன் ரொமேன்ஸ் எல்லாத்தையும் ஆபிஸ்லையே வச்சுக்கோ என்ன. இப்ப வா இன்னும் டெக்கரேஷன் வேலை இருக்கு‌. அதை முடிக்கனும்” என்று வீட்டிற்குள் சென்றான். விக்ரமும் தன் நிலையை நொந்தவாறு அபியை பின் தொடர்ந்தான்.

Advertisement