Advertisement

     அருணாச்சலத்தின் இல்லம் பலதரப்பட்ட ஆட்களால் நிரம்பி வழிந்தது‌. எல்லாம் அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த கூட்டம் தான் அது.
     அங்கே ஒரு ஓரமாக சேரில் பயங்கரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள் சங்கவி. தன் நண்பர்களிடம் பேசி முடித்த அபிமன்யு அங்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்த சங்கிவியை கண்டு புருவம் சுருக்கியவன், அவள் அருகே சென்றான்‌.
     “என்ன சிஸ்டா தனியா உக்காந்திட்டு எதோ பலமான யோசனை பண்ணிட்டு இருக்க. அப்படி எந்த கோட்டைய பிடிக்க பிளான் பண்ற” என்று விளையாட்டாக கேட்டபடி அருகே அமர்ந்தான்‌.
     அதில் தன்னிலை அடைந்த சங்கவி “ஏன் ண்ணா அந்த சோக கதையை கேக்குறீங்க. எல்லாம் உங்க வீனா போன அத்தானால தான் எனக்கு இந்த நிலைமை” என்றாள் சோகமாக.
     சங்கவி கூறிய விதத்தில் சிரித்த அபி “இனன்னைக்கு என் அத்தான் என்ன செஞ்சான்?” என்றான் அவளிடள். சங்கவியும் காலையில் நடந்தவற்றை கூற தொடங்கினாள்.
     காலை அலுவலகம் வந்த சங்கவி எப்போதும் போல் விக்ரமிற்கு காலை வணக்கத்தை வைத்துவிட்டு தன் வேலையை துவங்கினாள். அவள் வந்தது முதல் விக்ரம் எதுவோ சொல்ல வருவது போல் தோன்றியது சங்கவிக்கு.
     ‘எதுவா இருந்தாலும் அவர் வாயில இருந்தே வரட்டும்’ என்றிருந்த சங்கவியும் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திலே அவளை அழைத்த விக்ரம்
     “கவி உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்” என ஆரம்பிக்க “ம்ம் சொல்லுங்க சார்” என்றாள் சங்கவி. “அது… அது வந்து… சாரி கவி” என்றான் திணறலாக.
     அவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கியவாறு “எதுக்கு சார்” என்றாள் கவியும் புரியாதது போல். “கவி நேத்து நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கே சுத்தமா புரியலை.
     நான் யூஸ்வலா இப்படிலாம் நடந்துக்குறவனே கிடையாது. அப்புறம் நான் நேத்து உன்கிட்ட கொஞ்சம் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். ரொம்ப சாரி மா” என்றான் அவள் முகத்தை பாவமாக பார்த்து.
     கவியும் பெரிய மனதுடன் “அது பரவாயில்லை விடுங்க சார். அதை நான் அப்பவே மறந்துட்டேன். இந்தாங்க சார் நீங்க கேட்ட பைல்” என்று ஒரு கோப்பை நீட்டினாள்.
     அவள் கூறியதை புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்ட விக்ரம் அந்த பைலை வாங்கி பார்க்க ஆரம்பித்தான்.
     ‘அபி அண்ணா சொன்னது நூறு பர்சண்ட் உண்மை தான் போல. இவருக்கு இப்ப கூட என்மேல லவ்னு புரியலை. இவரை வச்சுட்டு நான் என்ன பண்ண போறனோ’ என்று மனதில் அவனை நினைத்து நொந்தவள்
     ‘இவரை இப்படியே விட்டா நமக்கு அறுபதாம் கல்யாணம் தான். இதுக்கு எதாவது பண்ணியே ஆகனுமே’ என தீவிரமாக யோசித்து ஒரு முடிவு செய்தவளாக விக்ரம் பார்க்காத நேரம் அபியின் எண்ணிற்கு ஒரு மிஸ்ட் கால் விடுத்தாள்.
     சங்கவியின் அழைப்பை பார்த்த அபி உடனே அவளுக்கு அழைப்பை விடுத்தான். விக்ரம் சங்கவி கொடுத்த கோப்பை பார்த்துக் கொண்டிருந்த நேரம் சங்கவியின் கைப்பேசி அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான்.
     விக்ரமை ஓர விழியில் பார்த்தபடி அழைப்பை ஏற்ற சங்கவி “ஹான் சொல்லுங்க அபி சார். என்ன இந்த டைம் கால் பண்ணியிருக்கீங்க” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல்.
     சங்கவியின் திட்டம் புரிந்த அபி “என்ன சிஸ்டா, உன் ஆள் பக்கத்துல இருக்கானா?” என்றான் குதூகலமாக. அபிக்கு தான் விக்ரமை கிண்டல் அடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போலல்லவா.
     சங்கவி “ஆமாம் சார்” என்றாள் மெதுவாக. “ஓஓ… அதான் ஐயாவை வெறுப்பேத்த எனக்கு கால் பண்ணுனியா” என்ற அபியிடம் “ம்ம் ஆமாம்” என்றாள்.
     “ரைட்டு விடு. அவனை வெறுப்பேத்திடலாம். சரி நீ அப்படியே அவனை பார்க்காம வெக்கப்படுற மாதிரி சிரிச்சு வை பார்க்கலாம்” என்றவுடன் விக்ரமை பார்க்காது வெட்கத்துடன் சிரிக்க,
     “என்னமா எதாவது ரியாக்ஷன் வருதா?” என்று எதிர்ப்பார்ப்போடு அபி கேட்க விக்ரமை லேசாய் திரும்பி பார்த்த கவி “ம்ஹூம் இல்லை” என்று உதட்டை பிதுக்கினாள்.
     ஆனால் அவள் எங்கே அறிய போகிறாள்‌, விக்ரம் கவியின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக் கொண்டிருப்பதை.
     “டோசேஜ் பத்தலை போலையே. சரி சிஸ்டா நீ இப்படி பண்ணு ‘என்ன சார் நீங்க’ அப்படின்னு கொஞ்சம் சிணுங்கு பாக்கலாம்” என்று அபி கவியை இன்னும் ஏற்றிவிட்டான்.
     விக்ரமை எப்படியாவது தன்னிடம் காதலை சொல்ல வைக்க முடிவு செய்த சங்கவியும் அதே போல் சிரித்து சிரித்து பேச, அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே விக்ரமிற்கு கோபம் சுல்லென்று ஏறியது.
     ‘இவ எதுக்கு அவன்கிட்ட பல்லை காட்டிட்டு சிணுங்குறா. இவ மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கா. அவன் போன் பண்ணுனா இவ உடனே சிரிச்சு பேசிடுவாளா?’ என்று புசுபுசுவென மூச்சு வாங்கியது விக்ரமிற்கு‌.
     அதை உணர்ந்த கவி ‘ஆஹா ஒர்க்கவுட் ஆகுது போலையே’ என மகிழ்ந்து மேலும் பேச்சை வளர்த்து அவனை வெறுப்பேற்றினாள்.
     அதற்கு மேல் அவள் அபியிடம் பேசுவதை பொருத்துக் கொள்ள முடியாத விக்ரம் சட்டென அவள் கையில் இருந்த கைப்பேசியை பறித்து தன் காதுக்கு கொடுத்தான்.
     “ஹலோ அபி!” என்ற விக்ரமின் குரலை கேட்டு புன்னகைத்த அபி “என்ன விக்ரம் அத்தான் நீ பேசுற. நான் கவிட்ட தானே பேசிட்டு இருந்தேன். ஏன் கவிக்கு என்னாச்சு” என்றான் ஒன்றும் அறியாதவன் போல்.
     “இங்க பாரு அபி இது ஆபிஸ் டைம். நீ சும்மா அவளுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத. எனக்கு வேலை கெடுது” என்று விக்ரம் சமாளிப்பாய் கூற
     “ஓஓ… நான் பேசனதுனால உன்னோட வேலை கெட்டுப்போச்சா. சரி சரி அத்தான். இனிமே வொர்க்க அவர்ஸ்ல நான் கவிக்கு கால் பண்ணலை.
     ஆனா அவ வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கால் பண்ணி பேசிக்கிறேன்” என்றான் நல்ல பிள்ளையாக.
     அபி கூறியதை கேட்டு அதிர்ந்த விக்ரம் “இல்லை அதெல்லாம் ஒன்னும் நீ அவக்கிட்ட பேச தேவையில்லை. என் பி.ஏ கிட்ட உனக்கு என்னடா பேச்சு வேண்டி இருக்குது.
     உனக்கு பொழுது போகலைனா என் தங்கச்சி தான் இருக்காளே‌, அவகிட்ட பேசு. கவிகிட்ட பேசுற வேலை வச்சுக்காத புரியுதா. மீறி பேசுன அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்” என கத்தி அழைப்பை அணைத்தான் விக்ரம்.
     விக்ரம் வைத்தவுடன் தன் காதை குடைந்த அபி “ஷப்பா.. இவன லவ் பண்ண வைக்கிறதுக்குள்ள என் காது செவிடா போயிரும் போலையே” என்று அலுத்துக் கொண்டான்.
     இங்கே அலுவலகத்திலோ கவி விக்ரமையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்தாள். ‘இவருக்கு இவ்ளோ பொசசிவ்நெஸ் வருதா. மனுஷன் நம்மகிட்ட தான் வாய திறக்கமாட்டேங்குறார் போல‌’ என நினைத்து சிரித்தாள்.
     சரியாக அபியிடம் பேசி முடித்த விக்ரம் கவி சிரிக்கும் நேரம் அவளை பார்த்தான். “ஏய் என்னடி சிரிக்கிற. நான்தான் அவன்கிட்ட பேசக்கூடாதுனு நேத்தே உன்கிட்ட சொன்னேன்ல.
     அப்புறம் என்ன அவன் போன் பண்ணவும் அப்படி பேசுற. என்ன என்னைய பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி இருக்கா. சொல்லுடி”
     என கத்தியபடி அவளை நெருங்க, காலையில் அவன் மூளை அவளை நெருங்காதே என கட்டளை போட்டதை மனம் அழகாக மீறியது.
     “இங்க பாரு நான் மட்டும் தான் உனக்கு முதல்ல. என்னை விட்டுட்டு வேற எவன் கூடையாவது பேசுன, தொலைச்சிடுவேன்” என்று மிரட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.
     விக்ரம் பேசிய அதிர்வில் இருந்த கவி ‘இவரும் லவ்வ சொல்லமாட்டாரு. வேற யாரையும் நெருங்கவும் விடமாட்டாரா? இது எந்த ஊரு நியாயம்’ என மனதில் திட்டியவள் அவனை நோக்கி சென்றாள்.
     “விக்ரம் சார்! ஒரு நிமிஷம். இதெல்லாம் நீங்க எதுக்கு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? இல்லை எனக்கு புரியலை. நான் யார் கூட பேசுனா உங்களுக்கு என்ன.
     அது என்னோட பர்ஸனல். நீங்க எப்படி அதுலை தலையிடலாம். நீங்க தான் எனக்கு முதல்லன்னு சொல்றீங்க. நீங்க யாரு எனக்கு. வெறும் பாஸ் தான். என் லவ்வரோ ஹஸ்பண்டோ இல்ல.
     என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது ஹான்! உங்ககிட்ட வேலை பார்க்குறேன்ற ரீசன்காக என்ன வேணும்னாலும் பேசுவீங்களா” என்று சங்கவியும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி சென்று அமர்ந்து கொண்டாள்.
     இப்போது விக்ரம் சிலையாக அமர்ந்திருந்தான். ‘அவ சொல்றதும் உண்மை தானே. நான் யாரு அவளுக்கு. என் மனசு ஏன் அவ மேல இவ்ளோ உரிமை காட்டுது.
     ஒருவேளை நான்.. நான்” என்று யோசித்து கொண்டே சென்றவன் அவன் மூளை கூறிய பதிலில் அதிர்ந்தான்‌.
     அதே அதிர்வில் திரும்பி சங்கவியை பார்த்தவனுக்கு ஏதோ புரிய ‘அப்போ இது தான் லவ்வா…!” என்று ஆச்சரியபட்டான் விக்ரம்.
     இவனை காதலில் விழ வைக்க இத்தனை நாட்கள் மாடாக உழைத்த கியூப்பிட்டோ ‘ஹப்பாடா இவனுக்கு ஒரு வழியா பல்ப் எரிஞ்சிருச்சுடா எப்பா. இவனை லவ்ல விழ வைக்கிறதுக்குள்ள என் ஜீவனை வாங்கிட்டானே பாவி பைய’ என புலம்பி நின்றது.
     விக்ரம் மனதின் மாற்றம் அறியாது இங்கே கணினியை தட்டி உடைத்துக் கொண்டு, அவனை திட்டி தள்ளி கொண்டிருந்தாள்.
     அவளை திரும்பி பார்த்த விக்ரம், கவியின் இதழ் அசைவை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான். அதோடு விடாமல் அவளின் தலை முதல் பாதம் வரை, ஏன் அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தான்.
     “இது தான் ண்ணா நடந்தது‌. காலையில செமையா கோபம் வந்திருச்சு. அதான் புடிச்சு திட்டிவிட்டுடேன். இவரை என்ன பண்ணறதுன்னே தெரியலை ண்ணா.
     நீங்க எவ்ளோ பிளான் போட்டாலும் அவர் வந்து என்கிட்ட லவ்வ சொல்றது எல்லாம் நடக்கவே நடக்காதோன்னு தோனுது ண்ணா.
     அதான் உங்க அத்தான எப்படி கரெக்ட் பண்றது மசியலனா கலட்டி விடலாமானு யோசிக்கிறேன்” என்று குறும்புடன் முடித்தாள் சங்கவி.
     “இவன் தேறமாட்டான் போலையே. பேசாமா கலட்டி விட்டுறு சிஸ்டா. உனக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று அபிமன்யு விளையாட்டாக கூற “என்ன ண்ணா” என்றாள் கவி பாவமாக.
     “பின்ன என்ன சிஸ்டா. டுயூப் லைட்டா இருந்தா கூட எரிய வச்சிடலாம் போல‌, இவன் அருத பழைய லாந்தர் விளக்கா இல்ல இருக்கான்.
     சரி விடு சிஸ்டா அவனை எப்படி கவுக்குறதுன்னு இன்னொரு பிளான் போடறேன்” என்று கூறிய அபி யாரோ அழைக்கவும் “இதோ வந்திடுறேன் சிஸ்டா” என கிளம்பினான்.
     அவன் அந்த பக்கம் நகர்ந்த பின் சங்கவி எழுந்து அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்‌. அப்போது ஏதோ ஒரு கையை அவள் கையை பிடித்து ஒரு கையால் வாயை பொத்தி இழுத்து மறைவிடம் சென்றது.

Advertisement