Advertisement

     “நானா இப்படி நடந்துக்கிட்டேன். ஐயோ விக்ரம் என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க. அவ என்னை பத்தி என்ன நினைப்பா. போச்சு என் மானமே போச்சு!” என்று தன் அறையில் குறுக்கும் நெருக்குமாக நடந்த வண்ணம் புலம்பி தள்ளினான் விக்ரம்‌.
     எல்லாம் காலையில் அவன் அலுவலகத்தில் சங்கவியிடம் அவன் நடந்துக் கொண்ட நிகழ்வை நினைத்து தான் இந்த புலம்பல் எல்லாம்.
     ‘காலையில் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டோம், அவள் யாரிடம் பேசினால் நமக்கு என்ன. இப்படி தான் ஒரு பெண்ணிடம் நடந்துக் கொள்வதா?’ என தன்னையே பலவாறு கேள்வி எழுப்பி பார்த்தான்.
     ஆனாலும் அவன் மனது அவள்பால் சாய்ந்துவிட்டதை மட்டும் அவன் மூளை ஒத்துக் கொள்ளவில்லை. பலவற்றை யோசித்து யோசித்து “ஆண்டவா!” என தலைப் பிடித்து கொண்டு அமர்ந்தான்.
     “நான் ஏன் இப்படி ஆகிட்டேன்” என மீண்டும் மீண்டும் யோசித்தபடி விட்டத்தை பார்த்து படுத்துவிட்டான் விக்ரம். இப்படியே ஒரு வாரம் ஓடியது. விக்ரம் தயங்கி தயங்கி சங்கவியிடம் பேசி நாட்களை நகர்த்த,
     அடுத்த நாள் அபியின் பிறந்தநாள் என வந்து நின்றது. ஹர்ஷா யூகித்தது போல் அபி சோகமே உருவாக சுவற்றை வெறித்துபடி அவன் அறையில் அமர்ந்திருந்தான்.
     அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தாள் அம்மு. அங்கே எதையோ இழந்தது போல் அமர்ந்திருந்த அபியை கண்டு அவள் மனது பதறியது.
     கலகலப்பாக பேசிக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் அபியை தான் இதுவரை அம்மு பார்த்திருக்கிறாள். இப்படி சோகமாக எல்லாம் அமர்ந்து பார்த்தது இல்லை.
     தங்கள் காதலை பகிர்ந்த பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அம்மு அனைவருக்கும் முன்னர் தன்னுடைய வாழ்த்தை பகிர வந்தவள் அபியின் இந்த நிலையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவன் விழிகளின் ஓரம் இருந்த கண்ணீர் சுவடுகளில் அதிர்ந்து நின்று விட்டாள் அம்மு.
     “அபி அத்தான்!” என்றாள் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து. அம்முவின் குரலே அவ்வளவு நடுங்கி வெளிவந்தது. திடீரென வந்த அம்முவின் ஸ்பரிசத்தில் திரும்பி பார்த்த அபி என்ன நினைத்தானோ “அம்முமா” என்று அழைத்தவாறே அவளை இழுத்து அணைத்து கொண்டான்.
     அவன் அணைப்பின் இறுக்கத்தில் இருந்து அபியின் மன இறுக்கத்தை உணர்ந்த அம்மு “என்னாச்சு அத்தான்” என்றாள் பரிவாக. அதற்கு பதில் ஒன்றும் கூறாத அபி “உன் மடியில படுத்துக்கட்டா அம்மு” என்றான் ஏக்கமாக.
     அவன் கேட்ட பாவத்தில் அம்முவிற்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது. “ஐயோ! என்ன அத்தான் நீங்க பர்மிஷன் எல்லாம் கேக்குறீங்க. வாங்க வந்து படுத்துக்கோங்க” என்று அவனை மடி தாங்கினாள் நல்ல காதலியாக.
     சிறிது நேரம் கழித்து தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் அம்மு. அதில் “அத்தான்” என்று அதிர்ந்து போய் அழைக்க, அபி இன்னும் அம்முவோடு ஒன்றினான்.
     அவன் தலையை தடவிக் கொண்டே தன்னிடம் இருந்து மெதுமெதுவாக பிரித்தெடுத்த அம்மு “ஏன் அத்தான் அழற?” என்றாள் குரல் கம்மி.
     ஏதும் பேசாத அபியிடம் “ஏன் அத்தான் என்கிட்ட சொல்ல மாட்டியா. நான் தான் உனக்கு எல்லான்னு நான் நினைச்சேன்‌. ஆனா என்னை நீ அப்படி நினைக்கலையா” என்றாள் பாவமாக.
     அம்மு கூறியதை கேட்டு அவள் வாயை தன் கையால் மூடிய அபி “நீதான்டி அம்மு எனக்கு எல்லாமே. இப்படி பேசாதடி கஷ்டமா இருக்கு” என்றான் வருத்தத்துடன். “அப்போ என்கிட்ட சொல்லலாமே அத்தான்” என்று ஊக்கினாள் ஆதிரா.
     “உன்கிட்ட சொல்லாம யார்ட்ட அம்மு சொல்லப்போறேன். நாளைக்கு எனக்கு பர்த்டே உனக்கு ஞாபகம் இருக்காடி” என்றவனின் கேள்விக்கு ‘ஆம்’ என தலையசைத்தாள் ஆதிரா.
     “ஆனா அதுவும் இல்லாம அது இன்னொரு நாளும்டி‌. அது எங்க அம்மா எங்களை விட்டுட்டு போன நாள்‌. என்னை இந்த உலகத்துக்கு தந்துட்டு எங்க அம்மா அப்பா அண்ணாவ விட்டுட்டு போன நாள்” என்ற அபியின் குரல் வெறுமையாக வெளிவந்தது.
     “அப்போ நீங்க அத்தான். உங்களையும் தானே அத்தை விட்டுட்டு போன நாள்” என அம்மு நியாயமாக கேட்டு வைக்க, அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான் அபிமன்யு.
     அவனை அதற்கு மேல் பார்க்க முடியாமல் “என்ன அத்தான்” என்று கேட்டவாறு அபியை இழுத்து தன் மார்போடு அணைத்து கொண்டாள் அம்மு.
     “உண்மை தான் அம்மு. ஆனா நான் வராம இருந்திருந்தா அப்பா அண்ணா ரெண்டு பேரும் அம்மா கூட சந்தோஷமா இருந்திருப்பாங்கல” என கூற
     “ஏன் அத்தான் இப்படி லூசு மாதிரி பேசுறீங்க. அத்தையோட லைஃப் ஸ்பேன் அவ்ளோ தான். அவங்க இறக்கனும்னு இருந்திருக்கு. அதுக்கு நீங்க ஒரு ரீசன். இதே நீங்க பிறக்காம இருந்திருந்தா கூட அவங்க இறந்திருக்கலாம்.
     ஆனா அத்தை உங்கள தந்திட்டு போய் ஹர்ஷா அத்தானையும் பெரிய மாமாவையும் உயிர்ப்போட வச்சிருக்காங்க. நீங்க இப்படி யோசிச்சு பாருங்க. ஒருவேளை நீங்களும் இல்லாம அத்தையும் இல்லாம இருந்திருந்தா என்ன ஆகிருக்கும்.
     இந்த வீட்டுல ஹர்ஷா அத்தான் ஒரு பக்கமும் மாமா ஒரு பக்கமும் இருந்திருப்பாங்க. நீங்க தான் அவங்கல ஏன் இந்த குடும்பத்தையே சந்தோஷமா வச்சிருக்கீங்க. ஏன் அத்தான் நீங்க இல்லாம போனா நான் என்ன ஆவேன்னு யோசிச்சீங்களா.
     இப்பக் கூட ஹர்ஷா அத்தான் தான் என்னை இங்க அனுப்பி விட்டாரு. ‘என் தம்பி தனியா கஷ்டபடுவான். அவனை கொஞ்சம் போய் பாரு அம்முன்னு’. இப்படி ஒரு அண்ணன் கிடைக்க தான் அத்தை உங்கள விட்டுட்டு போனாங்கன்னு நினைச்சுக்கோங்க அத்தான்.
     இவ்ளோ தூரம் நீங்க இங்க இருக்குற எல்லாருக்கும் தேவைபடுறப்ப ஏன் அத்தான் இப்படி பேசுறீங்க” என்று தன் நீண்ட பேச்சை முடித்தபோது அபி ஓரளவு தெளிந்தான்‌.
     அபி என்றும் தன் மனதில் இருப்பதை யாரிடமும் பகிர்ந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த அபியின் முகம் ஹர்ஷா மட்டுமே அறிந்த ஒரு முகமும் கூட.
     இந்த நேரத்தில் மற்ற யாரையும் நெருங்கவிடவும் மாட்டான் அபிமன்யு. ஆனால் வாழ்வு முழுவதும் இனி ஆதிரா என்றான பின்பு அவளும் அபியின் சுக துக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று எண்ணியே அம்முவை இங்கே அனுப்பி வைத்தான் ஹர்ஷா.
     ஹர்ஷா ஒரு அண்ணனாக ஆதரவாக பேசினாலும் வாழ்க்கை துணையின் ஆதரவு என்பது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்பது அபிக்கு இப்போது நன்றாக புரிய அம்முவோடு ஒன்றி கொண்டான்.
     ஒருவாறு அபியை சமாதானம் செய்த அம்மு மணியை நோக்க அது பன்னிரெண்டு தாண்டிவிட்டது என்று காட்டியது. “ஐயோ!” என்று தலையில் அடித்து கொண்ட அம்மு
     “ஹாப்பி பர்த்டே அபி அத்தான்” என்று கூறி அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து அவனை அணைத்து கொண்டாள்.
     அம்முவின் செய்கையில் புன்னகைத்த அபி “தேங்கியூடி செல்லம்” என தானும் அவளை இறுக்கி அணைத்தவன், தன் மனதை மாற்றும் பொருட்டு அம்முவிடன் பேச தொடங்கினான்.
     “அம்மு நாம லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வர என்னோட பர்ஸ்ட் பர்த்டே. அத்தானுக்கு என்ன கிப்ட் வச்சிருக்க?” என்றான் புன்னகையுடன்.
     “ஒரு நிமிஷம் அத்தான்” என எழுந்து தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தாள். “என்னடி இது” என்றான் அபி ஆர்வத்துடன்.
     “வெய்ட் பண்ணுங்க அத்தான்” என சிணுங்கியபடி அதை திறந்தாள். திறந்த மறுநிமிடம் அதை மூடிவிட்டு “அத்தான் பர்ஸ்ட் நீங்க கண்ணை மூடுங்க” என்று சிறு கட்டளை போல் கூறினாள்.
     “ப்ச் என்னடி இது ஒரு கிஃப்ட் தர இவ்ளோ பில்டப் பண்ற” என சலித்து கொண்ட அபி மறக்காது அவன் கண்களையும் மூடிக் கொண்டான்.
     “உங்க லெஃப்ட் ஹேண்ட காட்டுங்க” என்று அடுத்ததாக அம்மு கூற அபி கையை நீட்டினான்.
     கை மணிக்கட்டில் ஏதோ ஊர்வது போல் தோன்ற “என்னடி இன்னும் என்ன செய்ற” என்ற அபிக்கு பதிலளிக்காது “ஆன்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க அத்தான்” என்றாள்.
     கண்களை திறந்த அபியின் கைகளில் மினுமினுத்தது அந்த தங்க பிரேஸ்லெட். அதை உற்று பார்த்த அபியின் கண்கள் ஒளிர்ந்தது‌. ஏனெனில் அந்த பிரேஸ்லெட்டில் இரண்டு ‘ஏ’க்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தது.
     “இந்த ரெண்டு ‘ஏ’ல ஒன்னு ஆதிரா இன்னொன்னு அபிமன்யு. எப்படி இருக்கு அத்தான்” என்றாள் ஆவலே உருவாக.
     அபி எதுவும் பேசாமல் அம்முவையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். “என்ன அத்தான் பிடிக்கலையா” என அபியின் அமைதியில் அம்முவின் ஸ்ருதி குறைந்தது.
     அம்மு எதிர்பாராத நேரம் அம்முவின் கையை பிடித்து இழுத்த அபி அவள் இதழ்களை எடுத்துக் கொண்டான்.
     அதிர்வில் அம்முவின் கண்கள் இரண்டும் பெரிதாய் விரிய, அபி கண்களை மூடுமாறு செய்கை செய்தான். அம்முவின் கண்களும் அதன்பின் தானாக மூடியது.
     இதழ் யுத்தம் நெடுநேரம் செல்ல அம்முவின் விடாத கைப்பேசி அழைப்பில் தான் இருவரும் தங்கள் நிலையில் இருந்து வெளிவந்தனர். அம்மு அழைப்பை எடுத்து பார்க்க அழைத்தது ஹர்ஷா தான்.
     “என்ன அம்மு ரொம்ப அழுதானாடா. அவன் இப்போ என்ன பண்றான்” என்று வருத்தத்துடன் கேட்டான். “ஆமா அத்தான். ஆனா இப்போ ஓகே தான். நார்மல் ஆகிட்டாரு” என அம்மு அங்கே வந்த போது அபி இருந்ததை கூறினாள்.
     “அப்போ ஓகேமா. கீழ எல்லாம் ரெடி அவனை கொஞ்சம் கூட்டிட்டு வா அம்மு” என்று ஹர்ஷா வைத்துவிட “என்னடி அண்ணா என்ன பத்தி விசாரிச்சாரா” என புன்னகையுடன் வினவினான் அபி.
     அப்போது தான் தான் இன்னும் அபியின் அணைப்பில் இருப்பதை உணர்ந்த அம்மு “ஐயோ விடுங்க அத்தான். வாங்க வெளியே போலாம்” என இழுத்து சென்றாள்.
     கீழே ஹாலில் அனைவரும் கேக்குடன் தயாராக இருக்க “ஹேப்பி பர்த்டே அபி” என ஹர்ஷா வாழ்த்து கூறி அணைத்து கொண்டான்‌. அதன்பின் அனைவரும் தங்கள் வாழ்த்தை கூறினர்.
     இனிதாக பிறந்தநாள் விழா முடிய ஹர்ஷா தன் தம்பியின் தோளை பற்றி அழுத்தியவன் “என்னடா கண்ணு எல்லாம் வீங்கி இருக்கு. ஏன்டா இப்படி அழுது உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற.
     அபி எப்பவும் சிரிச்சா தான் நல்லா இருக்கும். அண்ணா சொன்னா கேப்பல்ல. நீ இனிமே எதுக்கும் அழக்கூடாது. இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும்‌. அம்முவையும் நல்லா பாத்துக்கனும். இந்த வருஷம் நல்லா போக வாழ்த்துகள் அபி” என அபிக்கு வாழ்த்தை கூறி அவன் கையில் தான் எடுத்த உடையை கொடுத்தான்.
     “ஓகேடா நீ ரூம் போய் நல்லா தூங்கு. குட் நைட்” என்ற ஹர்ஷா தன் அறைக்கு அனுவுடன் சென்றான். எல்லோரும் சென்ற பின்னர் அபியும் அம்முவும் மட்டுமே தனித்திருந்தனர்.
     “ஹேய் அம்மு குட்டி! நீ வளந்துட்டடி செல்லம். அத்தானுக்கு கிஃப்ட்லா வாங்கிட்டு வந்திருக்க. அப்புறம் உன்னோட இந்த லிப்ஸ் வாவ்டி. இன்னொரு தடவை கிடைக்குமா” என்று கள்ளப் பார்வை பார்த்து வைத்தான் அபி.
     அபியின் எண்ணம் உணர்ந்த அம்மு “ஐயோ அத்தான்! போங்க போங்க அதுலாம் முடியாது. நான் போறேன்” என சினுங்கிக் கொண்டு ஓடப்பார்க்க, அபி அவளை விடாது பிடித்து இழுத்தான்.
     சிறிது நேரம் கெஞ்சிய அம்மு திடீரென “ஐயோ ஹர்ஷா அத்தான்” என அலற அபி அவள் கையை விட்டு திரும்பி பார்க்க அங்கே யாரும் இல்லை.
     “என்ன நம்பிட்டீங்களா! சும்மா உல்லுலாய்க்கு. போய் தூங்குங்க அத்தான். பாய்!” என பழிப்பு காட்டி ஓடினாள் அம்மு. சிறிது தூரம் சென்ற பின் திரும்பி பார்த்து “இப்போ நீங்க ஓகே தானே அத்தான்” என்று வினவினாள் அம்மு.
     “மச் பட்டர் செல்லம்” என்றான் அபி உளமார. “லவ் யூ அத்தான்” என கத்திக் கொண்டே தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் அம்மு. அதை மகிழ்வுடன் பார்த்த அபி அதன்பின் தன் அறைக்கு சென்றான்.
-மீண்டும் வருவான்

Advertisement