Advertisement

     ஒரு அறையின் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான்‌ அவன். அந்த அறைக்கதவை திறந்து சென்ற அருணாசலம் அவனை கண்டு பதறி துடித்தார்.
     “கண்ணா” என்று பாசமாக அழைத்துக் கொண்டே அருகில் செல்ல, அவரை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
     “அப்பா!” என்று அவன் உதடுகள் தானாக உச்சரித்தது. “அப்பா தான்டா கண்ணா” என்று கூறியபடி நெருங்கினார் அருணாசலம்.
     “அப்பா! என்னை மறந்துட்டீங்களா. ஏன்ப்பா என்னை இவ்வளவு நாளா பட்டினியா போட்டீங்க. இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது ப்பா. சீக்கிரம் எதாவது செய்ங்க ப்பா” என கதறி அழுதவன்,
     கொஞ்ச கொஞ்சமாக காற்றோடு கரைய, “ஐயோ என் கண்ணா!” என்று அலறி அடித்து எழுந்தார் அருணாசலம். அவருக்கு நன்றாக வேர்த்து விட்டிருந்தது.
     திடீரென கனவில் தன் மகன் இப்படி தோன்றவும் என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை அருணாசலத்திற்கு. சிறிது நேரம் அந்த கனவையே யோசித்தபின் எதுவோ அவருக்கு புரிய மறுநாள் அதுகுறித்து தன் மற்ற பிள்ளைகளிடம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.
     அதற்கு பின்னர் எப்போதும் போல் பழைய நினைவுகள் வந்து மேகம் போல் சூழ்ந்து கொள்ள தூக்கம் தூர சென்றது.
     அதே நேரம் ஹர்ஷா அவன் அறையில் அவனுக்கு வந்த கனவில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான். ஹர்ஷாவிற்கு இது எப்போதும் வந்துக் கொண்டிருக்கும் கனவு தான் என்றாலும் இன்று சிறிது வித்தியாசமாக இருந்தது.
     ஆம் ஹர்ஷாவிற்கு அன்று வந்த அதே கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. இன்று சற்று வித்தியாசமாக அந்த குழந்தையை சுவற்றில் அடிக்கும் நேரம் அந்த அறையின் மூலையில் ஹர்ஷாவை போன்ற ஒரு உருவம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது.
     அதை யோசித்த ஹர்ஷா ‘என்னடா இது ஒரே கனவு இத்தனை தடவை வருது. ஒன்னும் புரியலையே’ என குழம்பினான்.
     சில நிமிடங்களில் தன் யோசனையில் இருந்து வெளிவந்த ஹர்ஷா, தன் அருகே சுருண்டு படுத்திருந்த அனுவை கண்டு புன்னகை பூத்தான்.
     அவள் முகத்தை ரசனையான பார்த்தவன், அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு அனுவை அணைத்து படி படுத்து நிம்மதியாக உறங்கினான்.
     காலை நேரம் ஹாலிற்கு வந்த ஹர்ஷா தன் வீட்டு பெரியவர்கள் அனைவரும் அங்கேயே இருப்பதை பார்த்து, காலை வணக்கத்தை பொதுவாக கூறியவன் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டான்.
     “அத்தை அம்மாக்கு திதி பண்ணனும். சோ அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் செய்யனும். அதை எல்லாத்தையும் நீங்க ரெடி பண்ணிடுறீங்களா” என்று பார்வதியை நோக்கி கேட்டான் ஹர்ஷா.
     காலையில் இருந்தே வந்த கனவின் தாக்கத்தில் இருந்த அருணாசலம் ஹர்ஷா திதி கொடுப்பதை பற்றி பேசவும் சட்டென அவருக்குள் ஒரு யோசனை தோன்றியது. பார்வதி எதோ கூற வரும் முன் அருணாசலம் பேசினார்‌.
     “பார்வதி திதி இந்த வருஷம் மருமகளுக்கு செய்யறதோட இன்னொரு ஆளுக்கும் செய்யப்போறோம்னு அந்த ஐயர்க்கிட்ட சொல்லிடுமா.
     ரெண்டு பேருக்கு திதி குடுக்க எல்லா ஏற்ப்பாடையும் செய்ய சொல்லிடு” என்ற அருணாசலத்தின் பேச்சில் அனைவரும் குழம்பினர்‌.
     “அது யாரு ப்பா இன்னொருத்தர்?” என்று ராஜசேகர் கேட்டுவிட்டார். ஒரு பெருமூச்சை வெளியிட்டு “எல்லாம் என்னோட மூத்த பிள்ளைக்கு தான்டா ராஜா. அவன் என் கனவுல வந்து அழுகுறான்டா” என்ற அருணாசலம் இரவு தனக்கு வந்த கனவை கூறி
     “அவனுக்கு இதுவரை திதி குடுத்ததே இல்லைடா. என் புள்ளை பசியோட அலையுறான். அவன் அழுவறத பார்க்குற சக்தி எனக்கும் இல்லடா” என்ற அருணாச்சலத்தின் குரல் தழுதழுத்தது.
     அதை கேட்ட ராஜசேகர் வருத்தமாக கண்ணை மூடி அமர்ந்துவிட்டார். பார்வதியின் விழியில் இருந்து கண்ணீர் தானாக வழிந்தது.
     அவர் மூத்த அண்ணன் அப்படியே ஹர்ஷாவை போல். யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்காமலே செய்வார். அவ்வளவு பாசம் குறும்பு மரியாதை இரக்கம் என அவரின் அத்தனை அம்சங்களும் ஹர்ஷாவை ஒத்தது.
     அதுவும் அந்த புன்னகை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை கண்டால் அனைத்தும் பறந்து சென்றது போல் தோன்றும்.
     அப்படிப்பட்ட நல்ல உள்ளம் இன்று பசியால் அழுகிறது என கேட்கவும் உடன் பிறந்தவர்கள் இருவராலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
     “அத்தை அப்பா உங்க கஷ்டம் எனக்கு புரியுது. கவலைப்படாதீங்க. பெரியப்பாக்கும் அம்மாக்கு திதி பண்ற அதே நாள் நம்ம வீட்ல திதி குடுத்திடலாம்.
     சோ ஐயர்கிட்ட சொல்லி எல்லாத்தையும் செஞ்சிடுங்க அத்தை” என்று ஹர்ஷா அவரிடம் ஆறுதலாக பேசி தன் தந்தையின் தோளையும் அழுத்திக் கொடுத்தான்.
     ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்தபின்னரே ஹர்ஷா மருத்துவமனைக்கு கிளம்ப சென்றான். அதன்பின் பார்வதியும் ஒரு நல்ல நாளை பார்த்து தன் மூத்த அண்ணன் மற்றும் அண்ணி என இருவருக்குமான திதி ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
——————————————
     “குட் மார்னிங் சார்” என்ற சங்கவியின் வாழ்த்துக்கு “ம்ம்” என்று முணகினான் விக்ரம். இப்படி தான் ஒரு வாரமாக அபி வந்து சென்ற பிறகு முகத்தை தூக்கி வைத்துபடி சுற்றிக் கொண்டிருக்கிறான் விக்ரம்.
     அதோடு சங்கவி செய்யும் வேலைகளில் இது குறை அது குறை என அவளையும் போட்டு பாடாய்ப் படுத்துகிறான். அவன் எங்கே சென்றாலும் அவளையும் எங்கேயும் விடாது கங்காரு குட்டியை போல் தன் அருகிலே வைத்துக் கொண்டு சுற்றி வருகிறான். அவன் மாற்றம் அப்பட்டமாக தெரிய சங்கவி மனதிற்குள் சிரித்து கொள்வாள்.
     அதே போல் இப்போதும் சிரித்தபடி தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்திலே அவள் கைப்பேசி அலறியது. அழைத்தது அபிமன்யு தான். அன்றே எண்ணை வாங்கிக் கொண்டிருந்தான்.
     ஒரு வாரம் கழித்து இப்போது அழைப்பு விடுத்துள்ளான். விக்ரமை ஓர விழியில் ஒரு பார்வை பார்த்தவள், அவன் கணினியில் மும்முரமாக எதுவோ வேலை செய்வதை உறுதிப்படுத்திவிட்டு அழைப்பை ஏற்றாள்.
     ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகிறது, விக்ரம் பார்வை மட்டுமே கணினி மேல். மற்றபடி அவனின் முழு உடலும் காதை தீட்டிக் கொண்டு சங்கவி பேசப்போவதை கேட்க தயாராகி இருப்பதை.
     “ஹலோ சிஸ்டா! நான் அபி பேசுறேன்” என்று அபி கத்தியது விக்ரம் காதில் துல்லியமாக போய் விழுந்தது. அதை கேட்டவுடன்
     ‘இவன் எதுக்கு என் கவிக்கு போன் பன்றான்’ என்று உள்ளுக்குள் புகைந்த விக்ரம் அவர்கள் பேசுவதை மேலும் கேட்க கவனம் ஆனான்.
     “சொல்லுங்க ண்ணா” என்றாள் சங்கவி மெதுவாக. “விக்ரம் பக்கத்தில தானே இருக்க சிஸ்டா?” என்று அபியின் கேள்விக்கு ஆம் என்றாள்‌.
     “அப்போ என்னை அபின்னு மட்டும் கூப்பிடு. அண்ணாவ கட் பண்ணிடு ஓகேவா” என்று அபி கூறவும் விக்ரமை லேசாக திரும்பி பார்த்தாள் கவி. அவன் கண்கள் மட்டும் கணினி திரையில் இருக்க முழு உடலும் மனதும் இங்கே இருப்பது புரிந்தது.
     அதை பார்த்து வந்த சிரிப்பை அடிக்கிய கவி “ஓகே அபி” என்றாள் சத்தமாக. இங்கே விக்ரமிற்கோ ‘எதுக்கு அவனுக்கு இவ ஓகே சொல்றா’ என இதயம் தாறுமாறாக அடித்து கொண்டது.
     “என்ன சார் நீ என்ன பேசறன்னு காதை தீட்டி வச்சிட்டு உக்காந்திட்டு இருக்கானா?” என்று அபி கிண்டலாக கேட்க, “ஆமாம் அபி” என்று சிரித்தாள் கவி.
     “சூப்பர் சிஸ்டா! இப்படியே இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசுற, அவனை வெறி ஏத்துற” என்று அபி கூற அருகில் அமர்ந்திருந்த அம்மு அபியை முதுகில் அடித்து
     “என்ன அத்தான் இப்படியெல்லாம் என் அண்ணன டார்ச்சர் பண்ற. அவன் பாவம்ல” என்று சண்டைக்கு வர,
     “ஏன்டி அவனா பாவம். ஒரு பொண்ண லவ் பண்ண துப்பில்ல இவனை எல்லாம் என்னன்னு தான் எங்க அத்தை வளர்த்து விட்டாங்களோ. என்னையும் அவங்க தான் வளத்தாங்க. நான்லாம் எப்படி உன்கிட்ட லவ்வ சொன்னேன்‌. அவனும் தான் இருக்கானே. சரியான டூயுப் லைட் டூயுப் லைட்” என்று அம்முவிடம் எகிறினான்.
     “இங்க பாருங்க அத்தான் நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. என்னதான் இருந்தாலும் அவன் என்னோட ஒன் அன்ட் ஒன்லி அண்ணன். அவனை நீங்க கிண்டல் பண்ணக்கூடாது” என தன் பங்கிற்கு எகிறினாள் அம்மு.
     இப்படி இவர்கள் இங்கே மள்ளுக்கட்ட, இதை கேட்டு சங்கவி அங்கே வாய்விட்டு சிரித்து கொண்டிருக்க, விக்ரம் காதில் புகை வராத குறைதான். இப்போது நேராகவே திரும்பி அமர்ந்து சங்கவியை முறைத்துக் கொண்டிருந்தான்.
     ஆனால் சங்கவி தான் அவனை பார்க்கவில்லை. இவர்கள் சண்டையை கேட்டு “ஐயோ அபி என்னதிது” என சங்கவி கேட்க அதை எங்கே அந்த பக்கம் உள்ள இருவரும் கேட்டனர். அவர்கள் சண்டை இட்டுக் கொள்வதிலே தீவிரமாக இருந்தனர்‌.
     ஆனால் அனைத்தையும் புரியாது பார்த்த விக்ரம் தான் சங்கவியின் கடைசி வரிகளில் “கவி” என கத்தி பொங்கி எழுந்து விட்டான்.
     விக்ரமின் குரலில் தூக்கிவாரி போட திரும்பிய சங்கவி “என்ன சார்?” என கேட்பதிற்குள்ளையே அவளை நெருங்கி விட்டான்.
     “போன்ல யாரு?” என்றான் உறுமலாக. “அ..‌து அது உங்க கசின் அபிமன்யு சார்” என்று திணறலாக கூறினாள் சங்கவி. அதில் கடுப்பான விக்ரம் “அவன்கிட்ட உனக்கு என்னடி இவ்ளோ நேரம் பேச்சு” என்று அதே கோபத்தோடு கேட்டான் விக்ரம்.
     அவன் டி என்று அழைத்ததை அவன் உணர்ந்தானா என்று தெரியவில்லை. ஆனால் சங்கவி அதில் அதிர்ச்சியாக ஆச்சரியமாக அவனை பார்த்து எழுந்து நின்றாள்.
     அவள் எழுந்து நிற்கவும் வசதியாக அவளின் தோளை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்த விக்ரம்
     “என்னடி அவன்ட்ட பேசறப்ப சிரிச்சு சிரிச்சு பேசுன. என்னை பார்க்கவும் இப்புடி முழிக்கிற. என்ன என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது ஹான்” என்று கத்தியவன் அவளை மேலும் உலுக்கி
     “அவன் கூட இனிமே நீ பேசக் கூடாது புரியுதா. அதை மீறி பேசு அப்புறம் தெரியும் இந்த விக்ரம் யாருன்னு” என்று முடித்தவன் அவன் இருக்கைக்கு சென்றான்.
     சங்கவி தான் பேய் அடித்தது போல் அதிர்ச்சியாகி நின்று விட்டாள். அவனிடம் இப்படி ஒரு மாறுதல் உடனே தெரியும் என அவள் எண்ணவில்லை. அபி வந்து சொன்னபோது கூட அவள் பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.
     விக்ரம் தன்னை காதலிப்பான் என்று அவள் சிறிதும் எண்ணவில்லை. ஏதோ அபி கூறியதால் கேட்டுக் கொண்டு வந்துவிட்டாள்.
     அபி பேசியதால் விக்ரம் நடந்துக் கொண்டவற்றை நினைக்கையில் அபி கூறியது உண்மை தான் போல் என்று எண்ணம் இப்போது வந்தது சங்கவிக்கு.
     அதே அதிர்வோடு அமர்ந்து விட்டாள் கவி. சிறிது நேரம் கழித்தே தெளிந்தவள் அவள் வேலைகளை பார்க்க துவங்கினாள்.
     அபி பேசிக் கொண்டிருக்கும் போதே விக்ரம் இப்படி நடந்துவிட, அழைப்பில் இருந்த அபியும் அம்முவும் விக்ரம் பேசியதை எல்லாம் கேட்டு விட்டனர்.
     “அம்மு என் பிளான் கண்டிப்பா சக்சஸ்டி. உன் அண்ணன் இதே ஸ்பீட்ல போனானா அடுத்த மாசமே நம்ம வீட்ல இன்னொரு கல்யாணம் தான்” என்று புன்னகையுடன் கூறிய அபி “செல்லக்குட்டி” என்று அம்முவை அணைத்துக் கொண்டான்.
     அபியை தள்ளிவிட்ட அம்மு “எதாவது சாக்கு வச்சு இப்படி சும்மா கட்டிப்பிடிக்க வேண்டியது” என அவனை திட்டிக் கொண்டே ஓடிவிட்டாள். போகும் அவளை சிரிப்புடன் பார்த்திருத்தான் அபி.

Advertisement