Advertisement

     ஹர்ஷாவின் வீட்டில் விருந்து நிகழ்வு நல்லபடியாக முடிய, ஹர்ஷா எதிர்ப்பார்த்த இரவு நேரமும் வந்தது. முடிந்தளவு நேரத்தை பார்வதியோடு கழித்த அனு அறைக்கு செல்லாது நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.
     பார்வதியே இதை கவனித்து “இன்னும் கீழ என்ன பண்ற அனுமா. நீ மாடிக்கு போகலை?” என்ற கேள்வியை கேட்டிட, இதற்கு மேல் இங்கே இருக்கமுடியாது என தங்கள் அறை நோக்கி மெல்ல நகர்ந்தாள் அனு.
     தயங்கி தயங்கி வந்து அறை கதவை திறந்து உள்ளே வந்த அனு கட்டிலில் அமர்ந்திருந்த ஹர்ஷாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
     உள்ளே வந்தவள் நேராக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். அனு வந்ததில் இருந்து அவளின் நடவடிக்கைகளை பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
     குளியல் அறைக்கு சென்று வெகு நேரம் கழித்து வெளியே வந்த அனுவை “அனுமா!” என்ற ஹர்ஷாவின் அழைப்பு பதற்றமடைய செய்ய, “ஹே என்னம்மா இது என்னை பாத்து இப்படி பயப்படுற. நான் பார்க்க அவ்ளோ கொடூரமாவா இருக்கேன்” என்று சிரித்தவன்,
     “இங்க வா இங்க வந்து உக்காரு” என்று அவளை தன் அருகே அமர்த்திக் கொண்டான். “இங்க பாருடா அனு நான் உன்னை ஹர்ட் பண்ணிடுவேன்னு பயப்படுரியா?” என்று அது தான் காரணமோ என்று எண்ணி கேட்டான் ஹர்ஷா.
     அதற்கு ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்த அனுவை பார்த்து புன்னகை சிந்திய ஹர்ஷா “அப்புறம் என்னடா நாம நம்ம லைப்ப ஸ்டார்ட் பண்ணலாம். நீ என் மேல முழுசா நம்பிக்கை வச்சிருந்தா மட்டும் ஓகே சொல்லு” என்றவாறு அவளிடம் தன் கையை நீட்டியபடி அமர்ந்தான்.
     சிறிது தயங்கிய அனுவும் மெதுவாக அவன் கையை பிடித்துக் கொண்டு சம்மதம் என கூறும் வகையில் தலை அசைக்க மகிழ்ந்த ஹர்ஷா அவள் கையை நன்றாக பற்றிக் கொண்டான்‌. அதுவே கூறியது ‘என்றும் உன்னை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்’ என.
     மெதுவாக அனுவை அணைத்த ஹர்ஷா தன் முத்தங்களை நெற்றியில் பதித்தான். பூவிலும் மென்மையாய் ஹர்ஷா அவளை கையாள,  நிதானமாக அழகாக அங்கே ஒரு இல்லறம் இனிதே நிகழ்ந்தேறியது.
     பகலவன் தன் கதிர்களை பரப்பும் நேரம் இங்கே இவர்களின் கண்களும் மூடி தூக்கத்தை தழுவிட, அனு தற்போது ஹர்ஷாவின் அனுவாகவும் ஹர்ஷா அனுவின் ஹர்ஷாவாகவும் முழுதாக மாறி இருந்தனர்.
———————————-
     காலை நேர பரபரப்பில் அடித்து பிடித்து அலுவலகத்தை அடைந்த சங்கவி, அவளுக்கு முன்னரே அங்கே இருக்கையில் இருந்த விக்ரமை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாள்.
     ‘இவரு சீக்கிரமே வந்து உக்காந்திருக்காருன்னா இது அவரு ஆபிஸ். நாமளும் அதே மாதிரி வரனுமா என்ன. நான் சரியான நேரத்திற்கு வந்துட்டேன்ல அது போதும்’ என மனதிற்குள் சொல்லி கொண்டபடி காலை வணக்கத்தை சொல்லிவிட்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்து வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
     சங்கவி வேலையை பார்க்க ஆரம்பித்தவுடன் அவளை திரும்பி பார்த்தான் விக்ரம். அவன் பார்வை அவ்வளவு ரசனையை தாங்கி இருந்தது.
     விக்ரமின் தொடர் குறுகுறு பார்வையில் சங்கவிக்கு ஏதோ தோன்ற சட்டென்று திரும்பி விக்ரமை பார்த்தாள். சங்கவி இப்படி திடீரென தன்னை பார்ப்பாள் என நினைக்கவில்லை விக்ரம். எனவே சங்கவியை நோக்கி திருதிருவென முழித்து வைத்தான்.
     “என்ன சார். எதாவது வேணுமா?” என்று சங்கவி கேட்டேவிட “அது.. அது ஒன்னுமில்லை கவி, விஸ் பண்ண தான் பார்த்தேன். குட் மார்னிங் டா” என உளறிக்கொட்டி விட்டு திரும்பிக் கொண்டான்.
     சங்கவிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏனெனில் அவள் உள்ளே நுழைந்த உடன், ஏதோ காண கிடைக்காததை கண்டது போல் பார்த்து வைத்த விக்ரம் காலை வணக்கத்தை அவன் தான் முதலில் சொல்லி இருந்தான்.
     அதை நினைத்து சிரித்த கவி, சிறிது நாட்களாகவே விக்ரமின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
     அலுவலகத்தில் மற்றவரிடம் எல்லாம் விரைப்பாக பேசி சுற்றும் விக்ரம் தன்னிடம் மட்டும் அப்பட்டமாக வழிந்துக் கொண்டிருந்தால் அவன் மனது தெரியாதா என்ன.
     அதேபோல் விக்ரமின் பார்வை வீச்சிலே சில நாட்களாக கவர்ந்து இழுக்கப்பட்டு கொண்டு இருக்கிறாள் கவி. எனவே அவன் தன்னை ரசனையுடன் பார்ப்பதை அவனுக்கு தெரியாமல் மனதிற்குள் ரசித்து கொள்வாள்.
     இப்படி அவன் பார்க்கும் போது இடையே அவனை திரும்பி பார்த்து வேண்டும் என்றே திணறவும் வைப்பாள்‌. அதே நேரம் விக்ரம் அவன் மனதில் இருப்பதை எப்போது தன்னிடம் கூறுவான் என்றும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.
     ஆனால் பாவம் சங்கவி அறியவில்லை, விக்ரம் தன் மனதை உணர்ந்து வந்து அவன் காதலை கூற வேண்டும் என்றால் இவர்களுக்கு அறுபதாவது திருமணம் தான் நடக்க வாய்ப்பு உள்ளது என.
     இவளின் மன ஓட்டம் புரிந்தோ என்னவோ விக்ரமையும் சங்கவியையும் ஒன்று சேர்த்து வைத்தே தீருவேன் என முடிவு செய்து அபி அம்முவை அழைத்துக் கொண்டு விக்ரமின் அலுவலகத்தை வந்தடைந்தான்.
     இப்போது கணினியின் புறம் திரும்பியிருந்த விக்ரமை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்ட கவி தன் வேலையை தொடரும் நேரம் அதிரடியாக “அத்தான்!” என கத்திக் கொண்டே உள்ளே அம்முவுடன் நுழைந்தான் அபிமன்யு.
     அபி திடீரென கத்தியதிய அதிர்வில் தூக்கிவாரிப் போட்டது விக்ரமிற்கு. அதில் நெஞ்சில் கை வைத்து தன்னை சமன் செய்த விக்ரம் “எருமை ஏன்டா இப்படி கத்துற?” என பதிலுக்கு கத்தினான் விக்ரம்.
     அதை கிஞ்சித்தும் கண்டுக் கொள்ளாத அபி நேராக வந்து விக்ரம் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அருகில் அம்முவையும் அமர்த்திக் கொண்டான்.
     அவன் அமர்ந்தவுடன் “வாடா அபி. வா அம்முமா” என முறையாக வரவேற்ற விக்ரம் “என்ன திடீர்னு வந்திருக்க. என்ன விஷயம். என்னால எதுவும் வேலை ஆக வேண்டியது இருக்கா?” என கேள்வியாய் கேட்க,
     “ஏன் அத்தான். இருந்திருந்து உன் ஆபிஸ்க்கு கெஸ்ட்டா வந்திருக்கோம், ஒரு கர்டசிகாவது என்ன சாப்பிடுறன்னு கேக்க மாட்டியா. அதை விட்டுட்டு ஏன் வந்த எதுக்கு வந்தன்னு கேள்வியா கேக்குற அத்தான்” என்று பெர்பார்மென்ஸை போட தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம்.
     “உன்னோட.. ஏன்டா காலைல பூரிய எனக்கு கூட தராம நல்லா மொக்கிட்டு தானே வந்த. இதுல நான் உனக்கு விருந்தாடா வைக்க முடியும். ஏன்டா காலங்காத்தால வந்து இப்படி இம்சைய கூட்ற. சரி இரு ரெண்டு பேருக்கும் ஜூஸ் சொல்றேன்” என போனை எடுக்க செல்ல,
     “டேய் அத்தான்! நீ இப்படி சலிச்சிக்கிட்டு எல்லாம் எங்களுக்கு ஒன்னும் தர வேண்டாம். அப்படி நீ குடுக்குற அந்த இத்துப்போன ஜூஸ்க்கு நாங்க இங்க வரலைடா” என்று சலித்துக் கொண்டான் அபி.
     பின் அம்முவிடம் திரும்பி “இங்க பாருடி உங்க அண்ணனை, நாம ரெண்டு பேரும் வந்தது இவனுக்கு புடிக்கலை போல. எப்படி பேசறான் பாரு” என்று ஏத்தி விட விக்ரமை கண்டு முறைத்த அம்மு
     “என்ன ண்ணா நீ இப்படி பண்ற. உன்னை பார்க்க ஆசையா நாங்க வந்தா நீ ஏன் வந்தேங்குற” என்று அவள் பங்கிற்கு பேச நொந்து விட்டான் விக்ரம்.
     “சாமி நான் ஒன்னும் சொல்லுலடா. நீ வா இங்கையே பாய விரிச்சு படு. யாரு வேணாம்னு சொன்னா. இது எனக்கு மட்டும் இல்ல ராசா உனக்கும் தாத்தா ஆபிஸ் தான்.
     அதனால உனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணு. என்னை ஆள விடுடா” என்று கையெடுத்து கும்பிட இதை பார்த்திருந்த சங்கவி சத்தமாக சிரித்து விட்டாள்.
     விக்ரம் கூறியதை கேட்டு ‘இதுதானே எனக்கு வேணும். இப்ப பாருடா என் பர்பார்மென்ஸ்ச’ என மனதிற்குள் சொல்லிக் கொண்ட அபி சிரிப்பு வந்த திசையை திரும்பி பார்த்தான்.
     அ‌ங்கே விக்ரம் இருந்த அறையிலே மறு மூலையில் இருந்த சங்கவியை கண்டு அபியின் மனத்திற்குள் பல்ப் எரிந்தது. தன் திட்டத்தை செயல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டதை உணர்ந்த அபி அம்முவிற்கு கண்ணை காட்டிவிட்டு விக்ரமிடம் பேச ஆரம்பித்தான்.
     “அத்தான்! அது உன் பி.ஏ கவி தானே” என்று ஆரம்பிக்க “ஆமாடா” என்றான் மிருதுவாக. அதை உணர்ந்த அபி தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்
     “ஓகேடா. நீ அவங்கல அனுப்பு. எனக்கும் அம்முக்கும் என்ன வேணுமோ நான் அவங்கல வச்சு வாங்கிக்கிறேன்” என்று விக்ரம் சம்மதிக்கும் முன்,
     “மிஸ்.கவி வாங்க. நீங்க தான் வந்து எனக்கு என்ன வேணுமோ அதை வாங்கி தரனும் ஓகே. கம் கம்” என கவியை அழைத்துவிட்டு “அம்முமா நாங்க போய்ட்டு வந்திடுறோம்டா” என பரபரவென்று கவியை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
     அபியின் அதிரடியில் கவியை அவன் வெளியே அழைத்து சென்ற பின்னே அதை முழுமையாக உணர்ந்த விக்ரமிற்கு சுறுசுறுவென கோபம் ஏறியது. அம்மு இதை கண்டபடி அமர்ந்திருந்தாள். அபியின் திட்டமும் இதுவே.
     காலை விக்ரமின் அலுவலகம் கிளம்பும் போதே அம்முவிடம் சொல்லி தான் அழைத்து வந்தான். “இங்க பாரு அம்மு. உன் அண்ணன்காரனுக்கு லவ்வு செட்டாவனும்னா அவன் எதுவும் பண்ண மாட்டான். நாம தான் பண்ணி ஆகனும்.
     அதுக்கு உன் அண்ணனோட பொசஸிவ்நெஸ்ஸ தூண்டி விட்டே ஆகனும். நான் உள்ள போய் போட போற சீன்ல விக்ரமே அவன் லவ்வ அவன் ஆள்கிட்ட சொல்லனும். இதுதான் நம்ம பிளான். சோ நாம போனவுடனே கவிய நான் வெளியே கூட்டிட்டு போயிடுவேன்.
     அங்க வச்சு நான் அவங்ககிட்ட விக்ரம பத்தி பேசிடுறேன். அன்ட் நான் வெளியே போன கேப்ல உன் அண்ணன் வாய கிளறுற. அவன் மனசுல என்ன இருக்குன்னு அவனை உணர வைக்கிற என்ன” என்று அரை மணி நேரம் அம்முவிற்கு லெக்சர் எடுத்து தான் அழைத்து வந்திருந்தான்.
     கவியை அபி வெளியே இழுத்து சென்ற நேரம் புசுபுசுவென மூச்சு வாங்க பார்த்த விக்ரமை எண்ணி வந்த சிரிப்பை அடக்கிய அம்மு
     “ண்ணா என்னாச்சு. ஏன் கதவையே முறைச்சு பார்க்குற. அபி அத்தான் கொஞ்ச நேரத்தில வந்திருவாரு” என்று அவன் கவனத்தை தன்னை நோக்கி திரும்பினாள்.
     பின் மெதுவாக தன் பேச்சை தொடங்கினாள் “ண்ணா! அவங்க உன் பி.ஏ கவி தானே” என்றவுடன் விக்ரமின் முகம் பல்ப் போட்டது போல் பிரகாசமாக மாற ‘ஆம்’ என தலை அசைக்க மேலே தொடர்ந்தாள் அம்மு.
     “ரொம்ப அழகா இருக்காங்கல ண்ணா” என்று இழுத்தவள் “ஆனா ண்ணா நீ அந்த பொண்ணை பத்தி சொன்னல்ல. சரியான சண்டைகாரியா இருப்பா போலையே.
     நீ எப்படி ண்ணா ஆபிஸ்ல பக்கத்துலையே வச்சு சமாளிக்கிற. பேசாம அவங்கல வேற செஷன் அனுப்பிட்டு நீ வேற ஒரு நல்ல பி.ஏவா பார்த்து அப்பாயின்ட் பண்ணிக்கவே” என்று அபி சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசி முடித்தாள் அம்மு.
     அம்மு எதிர்ப்பார்த்தது போலவே அவளை முறைத்த விக்ரம் “எனக்கு தெரியும் அம்மு யாரை எந்த போஸ்டிங்ல போடனும்னு. கவி ஒன்னும் அவ்ளோ பேசற பொண்ணுலா இல்ல.
     ஒருத்தரை பத்தி தெரியாம அவங்கல தப்பா பேசக்கூடாது அம்மு” என கண்டிப்புடன் கூறிய விக்ரம் பட்டென்று தன் முகத்தை மிருதுவாக மாற்றிக் கொண்டு “கவி எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா அம்மு. அது மட்டும் இல்ல அவ ரொம்ப டேலன்டட்டா.
     அதுமட்டும் இல்ல அவ என்னோட பக்கத்தில இருந்தா தான் அந்த நாளே ரொம்ப நிறைவா இருக்குடா” என கனவு உலகில் மிதந்து கொண்டு பிதற்றினான் விக்ரம்‌. விக்ரமை பார்த்து மகிழ்ந்த அம்மு அபியின் திட்டம் வெற்றிப்பெறும் என முழுமையாக நம்பி அபியின் நகர்வுக்காக காத்திருந்தாள்.

Advertisement