Advertisement

     “என்ன அனு குட்டி இவ்ளோ நேரம் மேக்கப் போட்டுட்டு இருக்க. இன்னும் எத்தனை கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்போற” என கண்ணாடி முன் நின்றிருந்த அனுவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
     அதில் கடுப்பான அனு “என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. நானே இப்ப தான் கண்ணாடி முன்ன வந்து நிக்கிறேன். காலைல இருந்து இப்படியே அக்கப்போரா பண்றீங்க ஹர்ஷா” என்ற அனுவின் மிரட்டலிலும் சிணுங்களே இருந்தது.
     அனு கூறியது போல் காலை எழுந்ததில் இருந்தே ஹர்ஷா அனுவை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான். அனு எங்கிருந்தாலும் பின்னாலையே அலைந்து கொண்டு, அடிக்கடி அணைத்து கொண்டு சிறு சிறு முத்தங்கள் கொடுத்து கொண்டு என காதல் இம்சை தான் செய்து கொண்டிருந்தான்.
     திருமணம் முடிந்து பரிட்சை நடந்த இந்த ஒரு மாதமும் அமைதியாக இருந்த ஹர்ஷாவா என எண்ணும் அளவு அதிகமாக அனுவை ஒன்றினான் ஹர்ஷா இன்று.
     இப்போதும் அனு பேசி முடித்தவுடன் அவளை பின்னே இருந்து அணைத்த வண்ணம் “அனுமா. நான் இன்னைக்கு உன்கிட்ட ஒன்னு கேப்பேன். அது உனக்கு ஓகேவான்னு சொல்லுவியா?” என்று இழுத்தான் ஹர்ஷா.
     ஹர்ஷா கேட்ட திணுசில் உள்ளுக்குள் பயம் வந்தாலும் “ம்ம்..” என்றாள் அனு‌. ஆனால் அவள் இதயம் வேகமாக துடித்தது. அதை ஹர்ஷாவும் உணரத்தான் செய்தான்.
     எனவே அவள் சம்மதம் கிடைத்தவுடன் புன்னகையுடன் “நமக்கு மேரேஜ் ஆகி ஒன் மன்த்கு மேல ஆகிருச்சு. உனக்கு எக்சாம்னு நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை‌.‌
     உனக்கு தான் எக்சாம் முடிஞ்சிருச்சே நாம இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட்ட செலிபரேட் பண்ணலாமா” என்று காதுக்குள் கிசுகிசுத்தான்.
     ஹர்ஷா கூறியதை கேட்டு அனுவின் முகம் குப்பென்று சிவந்து விட்டது. வெட்கத்தில் அனு தலையை குனிந்து கொள்ள, அவளை தன் புறம் திருப்பிவிட்டு அவள் முகத்தை தன் விரல் கொண்டு நிமிர்த்தினான்.
     “என்னடி உனக்கு சம்மதமா? இல்லைனாலும் சொல்லு. நான் உன்னை கம்பல் பண்ண மாட்டேன்” என்று முடித்த ஹர்ஷா கண்களில் அவ்வளவு காதல்.
     திருமணம் முடிந்து பொதுவாக பலர் தங்கள் வாழ்வை இப்படி தள்ளிப்போட மாட்டார்கள். ஆனால் தனக்காக பார்த்து இவ்வளவு நாள் ஹர்ஷா பொறுத்திருந்தது, மேலும் இன்றும் தன் சம்மதம் வேண்டி நிற்பதும் அனுவை ஹர்ஷாவின் புறம் சாய்த்துவிட்டது.
     ஹர்ஷாவின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க தடுமாறிய அனு கீழே குனிந்தபடி தலையசைத்தாள்‌. அதில் மகிழ்ந்த ஹர்ஷா “அனுக்குட்டி தலை ஆட்டினா பத்தாதுடி. சம்மதம்னு உன் வாயால சொல்லு” என அவளை மேலும் வெட்கமடைய செய்தான்.
     “ம்ஹூம்” என்று சிணுங்கியபடி தன் கை கொண்டு முகத்தை மூடி அனு நிற்க, இப்போது மேலும் அவளை இழுத்து அணைத்த ஹர்ஷா “ஹேய் பொண்டாட்டி! சொல்லுடி. ஓகேவா இல்லையா” என்று அவள் சம்மதம் தெரிந்தே கேட்டு வைத்தான்.
     இதற்கு மேல் இங்கே நின்றாள் ஹர்ஷா தன்னை கேலி செய்தே சிவக்க வைப்பான் என்று நினைத்த அனு அவன் அசந்த நேரம் நெஞ்சில் கைவைத்து கட்டிலில் தள்ளிவிட்டு ஓடினாள்.
     சுதாரித்து ஹர்ஷா எழும் நேரம் கதவை தாண்டி ஓடிவிட்டாள் அனு. “ஏய் அனு!” என்று கத்திவிட்டு அவள் பின்னால் போக தன் அறை கதவை திறக்க போன நேரம் அந்த பக்கம் இருந்து யாரோ கதவை திறந்து உள்ளே வந்தனர்.
     வந்தது யாரென்று கூட கவனியாத ஹர்ஷா, அந்த நபரை இழுத்து அணைத்து கண்ணத்தில் முத்தம் இட்டான். முத்தம் இட்ட நபரின் கன்னத்தின் சொரசொரப்பில் “என்ன அனுக்குட்டி உன் கன்னம் ஏன் சொரசொரன்னு இருக்கு?” என்று கேட்டவாறு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.
     ஏனெனில் அவன் கட்டிப்பிடித்து முத்தம் வைத்ததிருந்தது அவன் ஆருயிர் நண்பன் விக்ரமிற்கு. ஹர்ஷாவின் அணைப்பில் அதிர்ச்சியில் நின்றிருந்த விக்ரமை ஒரே தள்ளாக தள்ளிய ஹர்ஷா
     “ஏன்டா எருமா. உன் கைய புடிச்சி இழுக்கும் போதே நான் அனு இல்லைன்னு சொல்ல வேண்டியது தானேடா‌. அப்படியே நான் கிஸ் அடிக்கிற வரைக்கும் நிக்கிற. கருமம் கருமம்” என தன் போக்கில் திட்டிக் கொண்டே கீழே சென்றுவிட்டான்.
     “நான் என்னடா பண்ணுனேன். உன்னை கூப்பிட தானடா வந்தேன்‌. சும்மா வந்தவன ஒரு செகன்ட்ல கைய பிடிச்சு இழுத்து கிஸ் அடிச்சிட்டு, என்னமோ நானே வந்து வாங்கிக்கிட்ட மாதிரி பேசிட்டு போறான். காலக் கொடுமைடா” என அங்கே நின்ற விக்ரம் தான் புலம்பி விட்டு சென்றான்.
     கீழே ஹர்ஷா செல்லும் நேரம் விருந்துக்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, ஹர்ஷாவின் கண்களோ அனுவை‌ தான் முதலில் தேடியது‌. அவனவளோ பார்வதியின் பின்னால் வால் பிடித்து கொண்டு சுற்றி அவனை வெறுப்பேற்றியபடி இருந்தாள். ஹர்ஷா கண்களால் செய்கை செய்து ‘ரூமுக்கு வா’ என அழைத்து கொண்டிருந்தாள்.
     ஆனால் அனுவோ அவனை கண்டும் காணாமல் சுற்ற, கடுப்பான ஹர்ஷா ‘எப்படி இருந்தாலும் ரூமுக்கு வந்து தானே ஆகனும். அப்போ பாத்துக்குறேன்டி’ என எண்ணி பெருமூச்சை விட்டபடி சோஃபாவில் சென்று அமர்ந்தான்.
     ஹர்ஷா முத்தமிட்ட விக்ரம் அதிர்ச்சி நீங்கி கீழே வரும் போது கண்ட காட்சியும் இதுவே. எனவே அவனை முறைத்து பார்க்க அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத ஹர்ஷா சிறப்பாக அனுவை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
     எப்போதடா அனு தன்னிடம் தனியாக சிக்குவாள் என எதிர்பார்த்தவன் அம்முவை அழைத்து காதில் ஏதோ முணுமுணுத்தான். அதேபோல் அனுவை அழைத்த அம்மு
     “அக்கா என் போன் ரூம்லையே இருக்கு. கொஞ்சம் எடுத்துட்டு வறீங்களா” என பாவம் போல் கேட்க அனுவும் அம்முவின் கைப்பேசியை எடுத்து வர சென்றாள்.
     ஆனால் அனு அறையில் நுழைந்த போது உள்ளே ஹர்ஷா இருக்க அவனை கண்டு அதிர்ந்து நின்றாள். சிரித்தபடி அவள் அருகே வந்த ஹர்ஷாவோ அவளிடம் அவர்கள் அறையில் பேசியவற்றை நினைவுபடுத்தி பேசி பேசியே அவளை சிவக்க வைத்தான்.
     அவ்வளவு அலும்பு செய்து ஒருவழியாக அனு வாயாலையே ‘சரி’ என கூற வைத்தபின் அனுவை வெளியே விட்டான். இவர்களின் அலப்பறைகளை வீட்டில் இருந்த பெரியவர்கள் கண்டும் காணாதது போல் பார்த்து சிரித்து கொண்டனர்.
     அதே நேரம் விருந்துக்கு சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர் அனுவின் வீட்டினர். அவர்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தனர்‌ ஹர்ஷாவின் வீட்டினர்.
      அனுவின் முகத்தை வைத்தே அவள் ஹர்ஷாவின் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என அறிந்துக் கொண்டனர். எனவே விருந்து நிகழ்ச்சி மகிழ்வுடன் ஆரம்பித்தது.
     “ஷராமா எப்படிடா இருக்க?” என்று பாசத்தோடு கேட்ட விஸ்வநாதன் குரலில் அனுவிற்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. இத்தனை நாட்கள் தந்தை எப்படி தன்னிடம் பாசமாக இருக்க வேண்டும் என கனவு கண்டிருந்தாளோ அதேபோல் இப்போது மாறியிருக்கும் தந்தையை காணவும் மனது முழுக்க நிறைவாய் இருந்தது‌.
     அது முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க “ம்ம் எனக்கு என்னப்பா. நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்” என்றாள் நிறைவாக. என்னதான் அனுவின் முகத்தை கண்டே  அனுவின் வாழ்வை எல்லோரும் அறிந்திருந்தாலும், அதை வாய்வழியாக கேட்ட பெற்றோர் மனங்களும் நிறைந்து போனது.
     பின் உணவு நேரம் வரவே விருந்து பரிமாரப்பட அனைவரும் மகிழ்வுடன் பேசி சிரித்தபடி உண்டு அந்த நேரத்தை அழகானதாக்கினர். ஆனால் என்ன நடந்தாலும் நான் உன்னை பார்ப்பதை விடமாட்டேன் என்பதை போல் பார்த்து வைத்த ஹர்ஷாவின் பார்வை தான் பெண்ணை நாணம் கொள்ள செய்தது.
     ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்ததில் இருந்து வசுந்தரா ஹர்ஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அதை காணும் போதெல்லாம் பல்லை கடித்தார் கணபதி.
     எல்லோரும் இப்போது சாப்பிட்டு முடித்துவிட்டு பேசியபடி இருக்க தயங்கி தயங்கி கணபதியை பார்த்து “என்னங்க நாம நம்ம ஷராவோட மாமனார்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா. அந்த பையன் நிஜமாவே அவர் பையன் தானானு?” என கேட்டுவிட,
     பதறிப்போன கணபதி தாங்கள் பேசியதை யாராவது கேட்டனரா என சுற்றி பார்த்தார். அனைவரின் கவனமும் ஹர்ஷா வீட்டினரிடம் இருக்க நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
     இதை இப்படியே விடக்கூடாது என எண்ணிய கணபதி வசுந்தராவை தனியே அழைத்து சென்று “இங்க பாரு வசுமா. நான் வரும்போதே உன்கிட்ட சொல்லி தானேமா கூட்டிட்டு வந்தேன்.
     இப்ப வந்து இப்படி பேசிட்டு இருக்க. நம்ம மூத்த பையன் செத்து போய் இருபத்தி ஒன்பது வருஷம் ஆச்சு புரியுதா. நீ பாட்டுக்கு அங்க அத்தனை பேரு இருக்க இடத்தில வச்சு இப்படி பேசுறியேமா. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க.
     அதோட அந்த பையன் ஹர்ஷாவ பார்த்தா உனக்கு இப்படி தான் தோனுதுன்னா சொல்லு, நாம இப்பவே எங்க சொந்த ஊரை பாத்து கிளம்பிடுவோம்” என்று தன் எண்ணத்தை கூறி முடித்தார்.
     அவர் இவ்வளவு பேசியும் தலையை குனிந்தபடி நின்ற வசுந்தரா “இருந்தாலும் என் உள் மனசுல எங்கையோ ஒரு பக்கம் தோனுதுங்க அவன் நம்ம பிள்ளையா இருப்பானோன்னு.
     நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது. ஆனா ஒரு தாயா என்னோட மனசு அவன் என் பிள்ளை தான்னு அடிச்சு சொல்லுது. இத்தனை வருஷம் கழிச்சு என்கிட்ட வந்திருக்கான்னு எனக்கு தோனிட்டே இருக்கு” என்று முடித்தார் பாவமாக.
     வசுந்தராவின் பதிலில் கணபதிக்கு கோபம் சுள்ளென்று ஏற அதை முகத்தில் காட்டாதவாறு “அப்போ சரி வசுமா. இனியும் இங்க இருந்தா சரிவராது. நாம உடனே வீட்டுக்கு கிளம்பலாம்‌. ஆபிஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு.
     ஒரு பைல் பாஸ் ஆகனும் அதுக்கு உன் சைன் வேணும்னு சொல்லி நாம கிளம்பிடலாம்” என ஒரே போடாக போட அதிர்ந்துவிட்டார் வசுந்தரா தேவி. “என்னங்க…” என்று பரிதவிப்பாக பார்த்த வசுந்தராவை கொஞ்சமும் இளக்கம் இல்லாது பார்த்த கணபதி தன் முடிவில் உறுதியாய் நின்றார்.
     அதன்பின் கொஞ்சமும் தாமதிக்காமல் வீட்டின் உள்ளே சென்று அதே காரணத்தை அச்சு பிசகாமல் சொன்ன கணபதி விஸ்வநானின் முறைப்பையும் பொருட்படுத்தாது வசுந்தராவை அழைத்து கொண்டு சென்று விட்டார்.
      இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மற்றவர்களும் மீண்டும் தங்கள் பேச்சை தொடர்ந்தனர். ஆனால் இவர்கள் முதலில் பேச வெளியே செல்லும் நேரம் ஒரு கைப்பேசி அழைப்பை பேசிக் கொண்டிருந்த ராஜசேகரும் அங்கே அருகில் இருந்த தூணின் மறைவில் நின்றதை இருவரும் பார்க்கவில்லை.
     இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்த நிமிடம் அநாகரிகமாக மற்றவர் பேச்சை கேட்கக் கூடாது என எண்ணி நகர நினைத்த ராஜசேகர் இடையில் ஹர்ஷாவின் பேர் அடிபடவும் நின்று கேட்டார்.
     கேட்டவருக்கு மாரடைப்பு வராமல் இருந்ததே ஆச்சரியமே. அவருக்குள் பல எண்ணங்கள் மனதை தாக்க வேறோடிய மரமாய் அங்கையே நின்றுவிட்டார்‌. பின் ஒரு முடிவுக்கு வந்தவராக
     ‘ஹர்ஷா என் பையன். அவன் எனக்கு மட்டும் தான் பையன். அவனை யாருக்கும் நான் விட்டு தரமாட்டேன். அவன் எனக்கும் இந்த குடும்பத்துக்கும் மட்டும் தான்’ என மனதிற்குள் இதையே சொல்லி கொண்டவர் திகைத்த முகமாய் தன் அறைக்குள் தஞ்சம் அடைந்தார்.
-மீண்டும் வருவான்

Advertisement