Advertisement

     “அப்பா நான் போயே தீருவேன். அண்ணாவ மட்டும் ஹைதராபாத் அனுப்பிப் படிக்க வைச்சீங்க. நான் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு தானே படிக்க போறேன்னு சொல்றேன். அங்க அனுப்ப மாட்டேன்னு சொல்றீங்க.
     எனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்றீங்க. இதுலாம் சரியே இல்லை சொல்லிட்டேன்” என்று அந்த வீட்டின் இளவரசி வசுந்தரா தன் தந்தை ராகவனிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்.
     “என்ன வசும்மா. உன்னை விட்டுட்டு நாங்க எப்படிடா இருப்போம். இப்படி போறேன்னு வந்து நிக்கிறியே” என பாவமாய் கேட்டார் ராகவன். சண்டை என்றால் ராகவன் வசுந்தராவை திட்டுவது அடிப்பது என்றில்லை.
     ராகவன் கெஞ்சுவதும் வசுந்தரா அதை மறுத்து சண்டை இடுவதுமே இவர்களின் சண்டை. இதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்த விஸ்வநாதன் இதற்கு மேல் தன் செல்ல தங்கை கெஞ்சுவதை பார்க்க சகியாது பேசினார்.
     “அப்பா! வசு குட்டி கெஞ்சுறா பாருங்க. பாவம் அவ. அவளை அவ இஷ்டப்பட்டபடியே படிக்க அனுப்பலாம் ப்பா. இங்க இருக்க கோயம்புத்தூர் தானே ப்பா. வசு ஞாபகம் வந்தா உடனே டிரைன் ஏறிருங்க. என்னப்பா ஓகே தானே. சரின்னு சொல்லுங்களேன்” என்று விஸ்வநாதன் தன் செல்ல தங்கைக்காக தன் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
     வசுந்தரா ராகவனின் ஒரே செல்ல மகள். அவள் பிறந்த சில நாட்களிலேயே ராகவனின் மனைவி ஜன்னி கண்டு இறந்து விட தாயின் அரவணைப்பு இன்றியே வளர்ந்தாள் வசுந்தரா.
     ஆனால் தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக என இருப்பவர் ராகவனே. அதோடு விஸ்வநாதனுக்கு செல்ல தங்கை. அப்பா அண்ணன் என இருவரிடமும் எந்த கஷ்டமும் தெரியாமல் செல்லமாய் இளவரசியாக வளர்ந்தவள் தான் வசுந்தரா.
     விஸ்வநாதன் என்னதான் தங்கைக்கு சாதகமாக பேசினாலும் அவருக்கும் வசுந்தராவை பிரிந்திருக்க மனம் இல்லை தான். இருந்தாலும் தங்கையின் ஆசையை நிறைவேற்ற நல்ல அண்ணனாக பேசவும் செய்தார்.
     வசுந்தராவை கோவை அனுப்ப ராகவன் தீவிரமாக மறுக்க வசுந்தரா தான் போயே தீருவேன் என உண்ணாவிரதமே இருந்துவிட அதற்கு மேல் தன் செல்ல மகளின் ஆசைக்கு தடை விதிக்கவில்லை ராகவனும்.
     அறை மனதாகவே ஒத்துக் கொண்டார். அன்று வசுந்தரா கோவை கிளம்பும் நாள். வசுந்தரா தன் உடமைகளை எடுத்து வைத்து ஹாலுக்கு வர அங்கே சோஃபாவின் இரு ஓரத்திலும் ராகவனும் விஸ்வநாதனும் கையை கண்ணத்தில் வைத்து அமர்ந்திருந்தனர்.
     அதை கண்ட வசுந்தராவிற்கு கஷ்டமாக இருந்தாலும் ‘நாம் ஏதாவது பேசினால் போதும் நம்மை பேசி சரிக்கட்டி இங்கேயே இருக்க வைத்து விடுவார்கள் இருவரும்’ என்று எண்ணி அமைதி காத்தாள்.
     “க்கும்!‌’ என்று வசுந்தரா தொண்டையை செறுமி தான் வந்துவிட்டதை அவர்களுக்கு உணர்த்தினாள். ‘ஐயோ கிளம்பிட்டாளே!’ என்று பார்த்த ராகவன் “குட்டிமா போய் தான் ஆகனுமா?” என்றார் ஏக்கமான குரலில்.
     அந்த குரல் வசுந்தராவை அசைத்தாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. அந்த நிமிடத்தை கடக்க “அண்ணா!” என்று விஸ்வநாதனை அழைக்க அவன் இருந்த நிலைக்கு ராகவனே தேவலாம் போல் இருந்தது.
     ‘இது வேலைக்கு ஆகாது’ என எண்ணிய வசுந்தரா “அப்போ நான் கிளம்பறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கையே உங்காந்துட்டு இருங்க” என நகர பார்க்க “ஏய்! ஏய் வசு குட்டி. இருடா நாங்க‌ வந்து விட்டுட்டு வரோம்” என்று அவசரமாக அவர்களும் உடன் கிளம்பினர்.
     ரயில் நிலையம் வரை உடன் வந்த ராகவனும் விஸ்வநாதனும் மனமே இன்றி வசுந்தராவை அனுப்பி வைத்தனர். அது கஷ்டத்தை தந்தாலும் “வாங்க ப்பா! அவளும் வெளி உலக அனுபவத்தை எல்லாம் கத்துகட்டும்” என்று விஸ்வநாதன் சமாதானம் செய்து ராகவனை அழைத்து வந்தான்.
     அங்கே ரயிலில் சென்றுக் கொண்டிருந்த வசுந்தராவிற்கும் மனது வலிக்க தான் செய்தது. ஆனால் உலகத்தை அறிய வேண்டும் எனற் ஆவலில் படிக்க கிளம்பி விட்டாள் வசுந்தரா.
     அதுவே அவள் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அந்த மாற்றத்தால் வாழ்வு முழுவதும் மனதிற்குள் அழுக போகிறேம் என்றும் வசுந்தராவிற்கு தெரிந்திருந்தாள் தன் தந்தை தமையனோடே இருந்திருப்பாளோ!
     அந்த பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரி நன்றாக பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த கல்லூரி துவங்கி சில வருடங்கள் தான் ஆகி இருந்தது. அதனால் இன்னும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்க ஆங்காங்கே புதிய கட்டிடங்களும் தென்பட்டன.
     ஆனால் பல பணக்கார பிள்ளைகளின் படிப்பை கற்றுக் கொடுக்கும் இடமும் அதுவே. அந்த கல்லூரியின் ஒரு மரத்தின் அடியில் சோகத்தின் மொத்த உருவாக அமர்ந்திருந்தாள் வசுந்தரா.
     “என்ன வசு என்னாச்சு. ஏன்டி இவ்ளோ சோகமா உக்காந்திருக்க?” என அவள் அருகில் இருந்த அவள் தோழி கேட்க “ஏன்டி உனக்கு தெரியாதா” என்று பாவமாக எதிர் கேள்வி கேட்டாள் வசுந்தரா.
     “ம்க்கு! ஏன் தெரியாம! உன் அப்பாவையும் அண்ணாவையும் நினைச்சு தானே இப்படி உக்காந்திட்டு இருக்க. அதானே!” என்று கிண்டல் செய்தாள் அவள் தோழி ராகினி.
     வசுந்தரா இந்த கல்லூரியில் வந்து சேர்ந்ததும் ரெக்கை முளைத்தது போல் உணர்ந்தாள். இங்கே நிறைய நண்பர்களை சேர்த்து கொண்டாள். ஆனால் ராகினி மட்டுமே அவளின் நெருங்கிய தோழி ஆனாள்.
     ராகினியின் கிண்டலில் “போடி கிண்டல் பண்ணாத. நானே எப்படா அப்பா அண்ணா ரெண்டு பேரும் வருவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று சோகமாக கூறியவள் ஹாஸ்டல் வாசலையே பார்த்திருந்தாள்‌.
     “அடியே இது உனக்கே ஓவரா இல்ல. இந்த காலேஜ்ல நீ சேந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள எல்லா வார வீக்கெண்டும் உன் அப்பா அண்ணா உன்னை கரெக்டா பாக்க வந்திடுறாங்க. இதுல நீ சோகமா உக்காந்திருக்கறத தான்டி பாக்க முடியலை” என்று அங்கலாயித்தால் ராகினி.
     ராகினி பேசியதை கேட்டு அவளை முறைத்த வசுந்தரா “போடி! நான் என் அப்பா அண்ணா ரெண்டு பேரையும் எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா! இவ்ளோ நாள் நான் என் அப்பாவ பிரிஞ்சு இருந்ததே இல்லை தெரியுமா!” என பாவம் போல் முடிக்க
     “அது எப்படிடி வாரா வாரம் இதே டையலாக்கை ஸ்பெல்லிங் மாறாம சொல்ற” என போலியாக ஆச்சரியப்பட்ட ராகினி “இவ்ளோ தூரம் மிஸ் பண்றவ எதுக்கு இங்க படிக்க வந்தியாம். உங்க ஊர்லையே படிக்க வேண்டியது தானே” என்று வினவினாள்.
     “அது நிறைய தெரிஞ்சுக்கனும்னு வந்த இன்ட்ரஸ்ட். அது வேற டிபார்ட்மெண்ட். அதெல்லாம் நீ கேக்காத போடி” என்றுவிட “உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி. என்னவோ பண்ணி தொலை” என்ற ராகினி ஹாஸ்டலின் உள்ளே சென்று விட்டாள்.
     உள்ளே சென்ற ராகினி போன வேகத்தில் வெளியே ஓடி வர “என்னடி இப்ப தான் போன உடனே வந்துட்ட? என்ன விஷயம்” என்று கேட்டாள் வசு.
     “ஏய் உன் அண்ணா ஹாஸ்டலுக்கு கால் பண்ணிருக்காங்கடி. அதான் வந்தேன். உன்னை கூப்பிட்டாங்க. சீக்கிரம் வா” என்று வசுந்தாவை இழுத்து சென்றாள் ராகினி.
     வேகமாக ஓடிய வசுந்தரா அந்த அலைப்பேசியை எடுத்து “ஹலோ அண்ணா! எங்க வந்திட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். ஏன் இப்போ போன் பண்ணிருக்க” என்று கேள்விகளை சரசரவென தொடுத்தாள்.
     வசுந்தராவின் படபட பேச்சில் அவளுக்கு தங்களை பார்ப்பதில் உள்ள ஆர்வம், தங்களை பார்க்காததால் வந்த ஏக்கம் அனைத்தும் தெரிந்தது.
     அதை உணர்ந்து ‘அவ்ளோ தூரம் எங்களை விட்டுட்டு போய் இப்படி தவிச்சு போறாளே. இங்கையே படிக்க சொன்னா அதுவும் முடியாதுன்றா. ஆண்டவா தங்கச்சி இருக்கிற எல்லா அண்ணனும் பாவம்டா’ என்று மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது விஸ்வநாதனால்.
     ஆனால் அதை அவரின் அருமை தங்கையிடம் சொன்னால் அவள் ‘அங்கேயே என்னால இருக்க முடியும்’ என வரட்டு பிடிவாதம் செய்கிறாள். எனவே அவள் போக்கில் விட்டு பிடிக்கலாம் என எண்ணிய விஸ்வநாதன் எதுவும் பேசுவதில்லை இப்போது எல்லாம்.
     அவர் தங்கையே ‘நான் வரேன்’ என சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறார். ஆனால் அந்த வார்த்தைகளை வசுந்தரா கூறும் போது எல்லாவற்றையும் ஏன் வசுந்தராவையே விஸ்வநாதன் வெறுத்து ஒதுக்க போகிறார் என அப்போது அவர் அறியவில்லை.
     அலைப்பேசியின் அந்த புறம் தன் தங்கையிடம் இருந்து வந்த கேள்வியில் திணறி விட்டார் விஸ்வநாதன். ‘ஐயையோ! ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறா போலையே! இப்போ நாம வரலைன்னு சொன்னா என்ன பண்ண போறாளோ!’ என்று உள்ளுக்குள் பயந்தார் அவர்.
     அதற்குள் இங்கே வசுந்தரா பல முறை அவரை அலைப்பேசியில் அழைத்து விட்டாள். பின் சுதாரித்த விஸ்வநாதன் “அது ஒன்னும் இல்ல குட்டிமா. நம்ம ஒரு பெரிய கம்பெனிக்கு டென்டர் அனுப்பி இருந்தோம்லடா. அது நமக்கே கிடைச்சிருக்குடா” என்றதும்
     “வாவ் சூப்பர் அண்ணா. கங்கிரேட்ஸ்! நீ வந்து பர்ஸ்ட் எடுக்க போற வேலைல. நீ கண்டிப்பா ரொம்ப பெருசா வளருவ அண்ணா” என்று பாசமாக பேசினாள் வசு.
     அதை எப்படி சொல்வது என தயங்கிய விஸ்வநாதன் “அதுனால குட்டிமா! நம்ம கூட அவங்க பேசனும்னு சொன்னாங்கடா! அதுக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருகாங்கலாம்!” என்று ராகம் பாட
     தன் அண்ணன் எதுவோ சொல்ல வருவதற்கே இப்படி சுத்தி வளைக்கிறான் என்று உணர்ந்த வசு “நீ எதுக்கு இப்படி மாவாட்டுற. என்ன சொல்ல வந்தியோ அதை சீக்கிரம் சொல்லு. அப்புறம் நீங்க எங்க இருக்கீங்க. அதை முதல்ல சொல்லு” என்று கறாராக கேட்டாள்.
     இப்போது எச்சிலை கூட்டி விழுங்கிய விஸ்வநாதன் “அது வந்து குட்டிமா. அந்த மீட்டிங் இன்னைக்கு தான் வச்சிருக்காங்கடா. நானும் அப்பாவும் அங்க தான் கிளம்பிட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு உன்னை பார்க்க வர முடியலைடா” என்று படபடவென சொல்லி முடித்தான் விஸ்வநாதன்.
     விஸ்வநாதன் கூறியதை கேட்டு அதிர்ந்த வசுந்தரா “ஓஓ…” என்று ஒரு மார்க்கமாய் இழுத்தவள் “ஓகே! அப்போ நீங்க ரெண்டு பேரும் அங்க கிளம்புங்க. போய்ட்டு வந்து கால் பண்ணு. பாய்” என்று மட்டும் கூறி அலைப்பேசியை வைத்து விட்டாள்.
     விஸ்வநாதனிற்கோ கஷ்டமாய் போய் விட்டது. தங்கையை காண வேண்டும் என்று மனதில் தோன்றினாலும் வாழ்வில் அவருக்கு முக்கியமான ஒரு சந்தர்ப்பம் இது. இதை விடவும் மனதில்லை. எனவே போகும் போது வசுவிடம் பேசலாம் என்றே இவ்வளவு நேரம் அவர் அழைக்கவில்லை.
     வசுந்தராவிற்கு புரிந்தது தன் அண்ணனின் நிலை. அதனால் தான் அப்புறம் பேசறேன் என்று வைத்து விட்டாள். ஆனால் அவர்கள் அவளை பார்க்க வரவில்லை என்பதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கண்களில் நீரே வந்துவிட்டது.
     அப்படி விழி நீருடன் அவள் சென்று மீண்டும் அந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டாள். தூரத்தில் இருந்த ஒரு உருவம் வசுந்தராவின் செய்கைகளை பார்த்துக் கொண்டே இருந்தது‌.
     அவள் காலையில் இருந்து அங்கேயே அமர்ந்திருந்தது. பின் சென்று போன் பேசியது. இப்போது கண்கள் கலங்கி வந்து அமர்வது என எல்லாவற்றையும் பார்த்தது. ஏனோ வசுவின் கண்ணீர் அந்த உருவத்தை பாதிக்கவே தானாகவே வந்து அவளிடம் பேசியது.
     “ஹாய் ஏஞ்சல்! என்ன இங்க உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க. என்னாச்சு எனி பிராப்ளம்?” என்று அக்கறையாக வினவ ‘யார் நீ?’ என்று பார்த்து வைத்தாள் வசு.
     அந்த பார்வை புரிந்தது போல் “ஹே ஏஞ்சல்! ஐம் ராம்! உன் பேர் என்ன?” என்றான் அந்த உருவத்திற்கு சொந்தகாரன். ஏனோ அந்த நிமிடம் ஒரு ஆடவனிடம் பேச பயந்து எழுந்து உள்ளே ஓடினாள் வசந்தரா.
     அவளை கண்டு புன்னகை புரிந்த ராம் “அப்புறம் பார்க்கலாம் ஏஞ்சல்!” என்று கத்த அதில் அவனை திரும்பி பயப்பார்வை பார்த்த வசு நிற்காமல் ஓடிவிட்டாள்.
     “வசுந்தரா!” என்ற மீனாட்சியின் அழைப்பில் நிகழ்காலத்திற்கு மீண்ட வசுந்தரா “சொல்லுங்க அண்ணி” என்று அவரை காண செல்ல எப்போதும் போல் தன் மகள் அனுவை பற்றி கதை பேச ஆரம்பித்தார் மீனாட்சி.

Advertisement