Advertisement

     தன் முன்னே பதற்றமாக நின்றிருந்த அபிமன்யுவை ‘என்ன’ என கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா. “அண்ணா நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்கூட. ஒரு பெரிய பிரச்சினை” என்று கையோடு ஹர்ஷாவை இழுத்து சென்றான் அபி.
     “என்னடா அபி என்னாச்சு?” என்ற ஹர்ஷாவின் கேள்விகளுக்கு பதில் தராது அவனை இழுத்து போன அபி சென்று நின்ற இடம் விக்ரம் முன்னரே.
     இன்னும் விட்டத்தை பார்த்து படுத்திருந்த விக்ரம் என்ன நினைத்தானோ திடீரென புன்னகை புரிந்தான். அதை காண்பித்த அபி ‘அவனை பாரு’ என சைகை செய்தான்.
     விக்ரமையும் அபியையும் புரியாது பார்த்த ஹர்ஷா “என்னடா சைகை! கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு” என்றான் கடுப்பாக.
     “ஐயோ! ண்ணா உனக்கு இன்னுமா புரியலை. நம்ம விக்ரம்க்கு ஏதோ ஆகிப்போச்சு. அங்க பாரு விட்டத்தை பார்த்து படுத்துருக்கான். அதோட காத்துல கைய விட்டு தானா சிரிக்கிறான்” என அபி வேகமாக பாயிண்டுகளை எடுத்துவிட அதை ஆமோதிப்பது போல் “ஆமாடா அதுக்கு என்ன இப்போ?” என்றான் ஹர்ஷா புரியாது.
     இவர்கள் இங்கே நின்றிருப்பதை கண்ட பார்வதியும் அருகே வர, அப்போது அபி “என்ன ண்ணா உனக்கு இன்னும் புரியலையா? நம்ம விக்ரம் பண்றதெல்லாம் பார்த்தா எதுவும் சரியா படலை. எனக்கு என்னமோ நம்ம விக்ரமுக்கு பேய் பிடிச்சிருக்கோன்னு தோனுது ண்ணா” என முடிக்கவும் தான் அபி எங்கே வருகிறான் என்று ஹர்ஷாவிற்கு புரிந்தது.
     ஹர்ஷாவிற்கு சிரிப்பு வந்து விட்டது அபியின் விளையாட்டு தனத்தில். அவனுக்கு புரிந்தது அபி விக்ரமை கிண்டல் செய்ய தான் இவ்வாறெல்லாம் பேசுகிறான் என. ஆனால் இவர்களின் பேச்சை கேட்ட பார்வதி அது புரியாமல் “என்ன அபி குட்டி சொல்ற?” என்றார் அதிர்ச்சியாக.
     அப்போது தான் பார்வதியை கண்ட அபி தான் விளையாட நல்ல இடம் கிடைத்த மகிழ்ச்சியில் “ஆமா அத்த! பாருங்க நம்ம விக்ரம எப்படி தானா பேசி தானா சிரிக்கிறான்னு” என கூற அதே நேரம் விக்ரமும் ஏதோ நினைத்தே சிரிக்க அபி சொன்னவற்றை எல்லாம் அப்படியே நம்பினார் பார்வதி.
     பாவம் தலைவர் கவியின் நினைவில் சிரித்தது இப்போது அவருக்கே ஆப்பாக அமைந்தது. அதற்கு ஹர்ஷா “ஏய் அபி கொஞ்சம் சும்மா இருடா” என அவனை அடக்க பார்க்க
     “அட ஆமா ஹர்ஷா குட்டி. இந்த விக்ரம் பய கொஞ்ச நாளா இப்படி தான் இருக்கான். நேத்து ரூம்ல கூட தனியா பேசிட்டு இருந்தான். நான் பார்த்தேன்” என சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்ய அபிக்கு தான் கொண்டாட்டமாய் போனது.
     இவர்கள் சலசலப்பில் தன் கனவில் இருந்து வெளியே வந்த விக்ரம் “என்னங்கடா எல்லாரும் என்னைய சுத்தி நின்னுட்டு இருக்கீங்க. என்ன விஷயம்” என சர்வசாதாரணமாக கேட்க பார்வதி இப்போது முடிவே செய்து விட்டார் தன் மகனிற்கு பேய் பிடித்துவிட்டதென.
     எனவே அபியிடம் “அபி நீ சொன்னது சரின்னு தான் தோனுது கண்ணா. பேசாம எதாவது சாமியார்ட்ட கூட்டிட்டு போலாமா?” என்று கேட்டுவிட வந்த சிரிப்பை அடக்கிய அபி “கண்டிப்பா அத்த! எனக்கு இருக்கறது ஒரே ஒரு அத்தான். அவனுக்கு எதாவது ஆக விடுவேனா” என வசனம் பேசினான்.
     இதையெல்லாம் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட ஹர்ஷா “அத்த! விக்ரம்க்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல. அபி சும்மா கிண்டல் பண்ணிட்டு இருக்கான்” என சமாளித்து அனுப்பி வைத்தான்.
     சரியென ஹர்ஷாவிடம் ஒத்துக்கொண்டாலும் மனமே இல்லாமல் பார்வதி விக்ரமை பார்க்க “அவன்கிட்ட என்னாச்சுன்னு நான் கேக்குறேன். நீங்க போங்க அத்த” என ஒரு வழியாக அவரை அனுப்பி வைத்தான்.
     ஹர்ஷாவிற்கு ஏதோ புரிந்து விட “யார் மச்சான் அந்த பொண்ணு?” என விக்ரமிடம் கேட்க அம்முவும் அதே நேரம் வந்துவிட்டாள். ஹர்ஷாவை ஆச்சரியமாக பார்த்த விக்ரம் “எப்படி மச்சான்! நான் ஒரு பொண்ண பத்தி தான் யோசிக்கிறேன்னு கரெக்டா சொல்லிட்ட” என்றான்.
     “அதைவிடு முதல்ல என்னாத்த அப்படி யோசிச்ச அதை முதல்ல சொல்லு” என விக்ரமை இடையில் நிறுத்தி சரியாக எடுத்துக் கொடுத்தான் அபி.
     “அதான் சொன்னேன்லடா என் புது பி.எ கவி. அவளை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என அப்பாவியாக விக்ரம் கூற ஹர்ஷா மற்றும் அபிக்கு விஷயம் பிடிபட்டுவிட்டது. ஆனால் அதை அவனிடம் கேட்காது “அவளை பத்தி என்ன யோசிச்ச?” என்றான் ஹர்ஷா.
     “அதுவா மச்சான்!” என்று ஆரம்பித்தவன் சங்கவியின் இன்றைய செயலை கூறி சிலாகித்தான். “ப்ச் சான்ஸே இல்லடா. அந்த பொண்ணு அவ்ளோ டேலண்டட். ஆனா சரியான திமிர்டா அவளுக்கு” என அதையும் ரசித்து கூறினான்.
     அவன் சங்கவியை பற்றி பேச துவங்கியதும் அவன் முகம் செய்கை எல்லாவற்றையும் பார்த்த அண்ணன் தம்பி இருவருக்கும் தோன்றியது இதுதான் ‘சரி ரைட்டு பையன் காதல்ல விழுந்துட்டான்’ என.
     ‘இவன் தானா தெளிஞ்சு வரட்டும்’ என எண்ணிய ஹர்ஷாவோ “ஆமா மச்சான்! செம டேலண்ட் தான்” என கூறி மானசீகமாக விக்ரமை நினைத்து தலையில் அடித்து கொண்டு சென்றான்.
     ஹர்ஷா சென்றவுடன் விக்ரமின் மறுபுறம் இருந்த அபி ‘வாட் எ மெடிக்கல் மிராக்கல்! இவனுக்கு லவ் வந்திருச்சா. அட கிரகமே’ என நினைத்தபடி தானும் கிளம்ப ‘இங்க என்னடா நடக்குது?’ என புரியாமல் பார்த்த அம்மு இதை பற்றி அபியிடம் கேட்க வேகமாக ஓடினாள்.
     “அத்தான்! அத்தான் நில்லுங்க! இப்போ இங்க என்ன நடந்துச்சு? என் அண்ணனுக்கு என்ன பிரச்சினை?” என்றாள் புரியாது. அம்முவின் கேள்வியில் அவளை பார்த்த அபி ‘ம்ஹும் அண்ணன் தங்கச்சி ரெண்டு தத்தி தான் போல’ என்று எண்ணிக் கொண்டான்.
     பின் அம்மு தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருக்கவும் “அடியே! இன்னுமா உனக்கு புரியலை. உங்க நொண்ணன் லவ்ல விழுந்திருக்கான். அது அந்த தண்ட கருமத்துக்கே இன்னும் புரியலை” என்றான் கடுப்பாக.
     “ஐயோ என்ன அத்தான் சொல்றீங்க” என அம்மு சிணுங்கவும் அதில் புன்னகைத்த அபி அம்முவை அணைத்து கொண்டு “ஐயோ செல்லக்குட்டி! இன்னுமா புரியலை. விக்ரம் அந்த பொண்ணு கவிய லவ் பண்றான்.
     அதான் அந்த பொண்ணை நினைச்சு பகல்லையே பல்ல காட்டிட்டு படுத்திருக்கான். ஆனா அது அவனுக்கு தெரியலை. அதனால அவ டேலண்டட் புத்திசாலினு ஒலறிக்கிட்டு திரியிறான். ஆனா இவன் லவ்ல எப்ப உணர்ந்து அதை எப்ப அந்த பொண்ணு கிட்ட சொல்லி..
     ப்பா.. நினைச்சாவே கண்ண கட்டுது. ஆனா ஒன்னுடி அதுவரைக்கும் அந்த பொண்ணு கமிட் ஆகாம இருக்கனும்” என புலம்பி விட்டு “அவன் தேறமாட்டான். சரி நீ வா செல்லம் நாம போவோம்” என அம்முவை அழைத்து சென்றான் அபி.
     இவர்கள் எல்லோரும் இப்படி நினைத்து செல்ல அங்கே விக்ரமோ ‘என்ன ரெண்டு பேரும் ஒரு திணுசா பாத்திட்டு போறானுங்க. சரி என்னவோ. போய் வேலைய பாப்போம்’ என்று தன் அறைக்கு சென்றுவிட்டான்.
——————————————-
     அறையில் இருந்த வசுந்தராவிடம் வந்து “வசும்மா இந்தாடா” என ஒரு கவரை நீட்டினார் கணபதி. “என்னங்க இதுல என்ன இருக்கு?” என்ற வசுந்தராவின் கேள்விக்கு “பிரிச்சு பார்த்தா உனக்கே தெரியப்போகுது” என்று கணபதியும் அவர் அருகில் அமர்ந்து கொண்டார்.
     கவரை பிரித்த வசுந்தராவின் கைகளில் அழகிய புடவை ஒன்று வந்து விழுந்தது. அதன் அழகில் கவரப்பட்ட வசுந்தரா “புடவை ரொம்ப அழகா இருக்குங்க” என்றார் ஆனந்தமாக.
     வசுந்தராவின் சந்தோஷத்தில் தானும் மகிழ்ந்த கணபதி “ம்ம் புடவை தான். என்னோட செல்ல வைப்க்கு. இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா வசு?” என்று கணபதி‌ ஆர்வமாக தன் கேள்வியை முன் வைக்க
     சற்று யோசித்த வசுந்தரா ‘இல்லை’ என்பதாய் உதட்டை சுழித்து தலை அசைத்தார். வசுந்தராவின் பாவனையில் புன்னகைத்த கணபதி “சரி நானே சொல்றேன்‌. வருஷா வருஷம் இந்த நாள் உனக்கு புடவை எடுத்து தருவேன்.
     அது ஏன்னு சொல்லுவேன். நீதான் மறந்து மறந்து போய்டுற” என செல்லமாக அலுத்துக் கொண்டவர் “இன்னைய நாள் முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னை பர்ஸ்ட் டைம் பார்த்தேன். நம்ம காலேஜ்ல நீ என்டர் ஆனப்ப நான் உன்னை பார்த்த நாள்மா இது” என கண்களில் கனவு மின்ன கூறினார்‌.
     இந்த வயதிலும் அவர் முகம் அவ்வளவு அழகாக அவர் காதலை காட்டியது. “அப்போ எப்படி இருந்தியே அப்படியே இப்பவும் இருக்கமா” என்றார் புன்னகைத்து.
     கணபதியின் வார்த்தைகளில் அழகாய் வெட்கப்பட்ட வசுந்தரா “ம்ம் நல்லா ஞாபகம் இருக்குங்க. அப்போ எல்லாம் எவ்ளோ ஜாலியா இருந்தோம்ல” என்று தானும் அந்த நாட்களை மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார்.
     இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்த நேரம் திடீரென வசுந்தரா “ஆனா சில நினைவுகள் மனசுல இன்னும் ரணமா இருக்கத்தான் செய்யுதுங்க” என சோகமாக கூறினார். அதன்பின் வசுந்தராவின் கண்கள் தானாக கண்ணீர் சொறிந்தன.
     வசுந்தராவின் அழுகையை கண்டு கணபதி ‘ச்சே பழசை நாமளே ஞாபகப்படுத்திட்டோம். வசுவ அழவச்சிட்டேன்’ என தன்னையே நொந்தவர் பேச்சை மாற்றும் பொருட்டு “ஏம்மா கேக்கனும்னு நினைச்சேன். அனுகிட்ட பேசுனியா? எப்படி இருக்கா?” என்றார்.
     அதில் மீண்ட வசுந்தரா “ஹான் பேசுனேங்க. மாப்பிள்ளை அவங்க வீட்ல இருக்க எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா” என மகிழ்ச்சியாய் பேச துவங்கி விட்டார் வசுந்தரா.
     வசுந்தராவின் மனநிலை மாறிய பின்னே நிம்மதியடைந்த கணபதி “சரிமா! ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. சோ நான் போய்ட்டு வரேன்” என கிளம்பிவிட்டார்.
     கணபதி கிளம்பிய பின்னர் இதுவரை அவர் அடக்கி வைத்திருந்த அழுகையை அழுக துவங்கினார் வசுந்தரா. தன் மனதில் உள்ளதை என்னதான் அவர் மறைத்தாலும் அதை கணபதி சென்றபின் தன் தலையணையை நனைப்பதின் மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.
     பெரும்பாலான நாட்கள் அவர் சோகத்தை தாங்கும் அந்த தலையணை என்றும் போல் இன்றும் அவர் கண்ணீர் கரைகளை வாங்கிக் கொண்டது.
     ‘சாரிங்க! ரொம்ப சாரி. நீங்க இவ்ளோ காதல் வைக்கற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கா இல்லையான்னு தெரியலை‌. ஆனா நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டம் தானே தந்திருக்கேன். எப்படி என்னை மன்னிச்சு இவ்ளோ நாள் அதே அளவு காதலை காட்டிட்டு இருக்கீங்க.
     ஆனா நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டம் தானே தந்துட்டு இருக்கேன்’ என மனதில் புலம்பியபடி அழுதுக் கொண்டிருந்தார் வசுந்தரா. வசுந்தராவின் நினைவுகள் முப்பது வருடங்களுக்கு முன்னே சென்றது.
-மீண்டும் வருவான்

Advertisement