Advertisement

     நாட்களுக்கு தான் எவ்வளவு சக்தி, அதுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறதே. சுபத்ரா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.
     அருணாசலத்தின் வீடே உயிர்ப்பு இன்றி காணப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் ஒரு வித கட்டாயத்தில் தான் இயங்குவது போல் இருந்தது. இந்த ஒரு வாரமும் அருணாசலத்தின் மூத்த மகள் கோமதி தான் அனைவரையும் பார்த்து கொண்டார்.
     அவரும் இன்று கிளம்பி விட்டார் தன் கணவருடன். இதில் ராஜசேகரின் நிலை தான் கவலைக்கிடமாக இருந்தது. சுபத்ரா இறந்த செய்தி கேட்டு சுவற்றை பார்த்து வெறித்தவர் தான்.
     இன்னும் அதே போல் தான் இருக்கிறார். அவர் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. ஒரு வாரம் கோமதி தான் அவரை பார்த்து கொண்டார்.
     பார்வதிக்கு பிறந்த அந்த சிறு குழந்தை மற்றும் வீட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. அவரும் சோகத்தில் இருந்ததால் மற்றவற்றை கவனிக்கவில்லை.
     இப்போது தான் தன் அண்ணனின் நிலையை கவனித்த பார்வதிக்கு திக்கென்று இருந்தது. என்ன செய்தும் ராஜசேகர் தன் நிலை திரும்பவில்லை.
     வீட்டில் இருந்தவர்களுக்கு சுபத்ராவின் இறப்போடு சேர்த்து ராஜசேகர் நிலை அவர்களை சிந்திக்க விடாது செய்தது. 
     பார்வதி தன் அண்ணனிடம் சென்றார் இப்போது. “ப்ளீஸ் அண்ணா நீ இப்படி இருக்காத. தயவு செஞ்சு அழுதுரு ண்ணா. இங்க பாரு உன் இரண்டாவது பையன் அப்படியே உன்னையே உரிச்சு வச்சிருக்கான்.
     நம்ம ஹர்ஷாவ பாரு அம்மாவும் இல்லாம நீயும் இப்படி இருக்கறத பாத்து பயப்படுறான் பாரு. அண்ணா எதாவது பேசு ண்ணா‌‌. அழுதுரு ண்ணா ப்ளீஸ்” என்றார் அழுகுரலில் தன் அண்ணனிடம் கெஞ்சலாக.
     இதில் பார்வதி கையில் இருந்த அந்த சிறு சிசுவும் அழுக தொடங்கியது. ஆனாலும் ராஜசேகர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.
     இதை அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அருணாசலத்திற்கு மனதில் சொல்லொணா வலி ஏற்பட்டது. மொத்தத்தில் அந்த வீடே ஏதோ சூன்யம் நிறைந்தது போல் தெரிந்தது.
     இதையெல்லாம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவிற்கு தன் அன்னை தன்னிடம் கடைசியாக சொன்ன அந்த வரிகள் ஞாபகம் வந்தது.
     “யாரையும் அழ விடாத கண்ணா. சந்தோஷமா வச்சுக்கனும்” என்ற சுபத்ராவின் வரிகள் அந்த சிறுவனை அந்த நொடியில் இருந்து செயல்பட வைத்தது.
     ஒரு முடிவு எடுத்தவனாய் தன் அத்தயை நோக்கி சென்ற ஹர்ஷா “அத்தை அழாத. நீ அழற அதான் என் தம்பியும் அழறான். அம்மாட்ட நான் தம்பிய அழாம பாத்துப்பேன்னு பிராமிஸ் பண்ணிருக்கேன்” என்றான்.
     மீண்டும் அழுகேயோடு பார்த்த பார்வதியிடம் ” நீ அழாத சொல்றேன்ல” என்ற ஹர்ஷாவின் சத்தமான குரல் பார்வதியின் அழுகையை நிறுத்தியது.
     ‘ஒரு சிறுவன் குரல் இவ்வளவு சத்தமாக கேட்குமா’ என்ற அளவு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தன் அத்தையை தாத்தா அருணாசலத்தின் அருகே அழைத்து வந்து அமர வைத்தான்.
     “அத்தை என் தம்பிய நீ அழ வைக்கிற. நீ அவன இப்படி அழ வச்சா நான் அவன உன்கிட்ட தரமாட்டேன் பாத்துக்க” என்றான் தன் மழலை மொழியில்.
     பின் தன் தாத்தாவை நோக்கி சென்றவன் “இங்க பாரு தாத்தா இங்க யாரும் அழக்கூடாது. அப்படி யாராவது அழுதீங்க நான் நான்” என்றவன் சிறிது இடைவெளி விட்டு
     “அம்மா கிட்ட போய்ருவேன்” என்றான். இதை கேட்டு அனைவரும் பதறி விட்டனர். சட்டென அருணாசலம் தன் பேரனின் கைப்பற்றி “நாங்க யாரும் அழலை டா கண்ணா.
     இனிமே அழவே மாட்டோம். ஆனா நீ இப்படிலாம் பேசக்கூடாது. எப்பவும் பேசவேக் கூடாது சரியா” என்றார் அவசரமாக. இதை கேட்ட ஹர்ஷாவிற்கு என்ன புரிந்ததோ சரி என்பதாய் தலை அசைத்தான்.
     இப்போது தாத்தாவை விடுத்து தன் தந்தையை கண்ட ஹர்ஷா அவரை நோக்கி சென்றான். ராஜசேகரின் கையை பிடித்து கொண்ட ஹர்ஷா “அப்பா அப்பா என்னை பாருங்க.
     இங்க பாருங்க. ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க அப்பா….” என்றவன் சிறிது நேரம் சென்று “அப்பா நம்ம தம்பி பாப்பாவ பாருங்களேன். இங்க வாங்க வாங்க” என்று தன் தந்தையின் கையை பிடித்து இழுத்தான்.
     அப்போதும் அசையாது அமர்ந்திருந்தார் ராஜசேகர். “அப்பா…. ” என்று அவர் கையை இழுத்தவன் கை வழுக்கி “அம்மாஆஆஆ…….” என்ற சத்தத்துடன் தானாக கீழே விழுந்தான்.
     ஒரு நிமிடத்தில் அனைத்தும் நடந்துவிட்டது. ஹர்ஷாவின் அலறல் குரல் ராஜசேகரின் காதில் சுபத்ராவின் அழுகுரலாய் கேட்க சடாரென திரும்பி பார்த்தார்.
     அங்கே தனது மகன் விழுந்து கிடப்பதை கண்டவர், உடனே அவனிடம் விரைந்தார். “ஹர்ஷா குட்டி கண்ணா! என்ன ஆச்சுப்பா.
     எப்படி கீழே விழுந்த கண்ணா. அம்மா எங்க போய்டாங்க உன்னை விட்டுட்டு” என்றார் படபடப்பாக. அவர் மகனை மட்டுமே கவனித்தவர் இன்னும் சூழ்நிலையை உணரவில்லை.
     அவர் உணர்வுகள் தான் சுபத்ரா இறந்த அன்றே போய்விட்டதே. ஹர்ஷா கீழே விழுந்தது முதல் ராஜசேகர் பேசியது வரை அனைத்தையும் பார்த்த வீட்டினருக்கு நிம்மதியே.
     என்ன தான் இப்போது உணர்வு வர பெற்றாலும்,  ராஜசேகர் விரைவில் தன் நிலை திரும்பி விடுவார் என அவர்கள் ஆசுவாசம் அடைந்தனர்.
     ராஜசேகரின் உணர்வை மீட்ட ஹர்ஷாவின் மீது கொள்ளை பாசம் வந்தது. ஆனால் ராஜசேகர் சுபத்ரா இருப்பதை போல் பேசியது மனதிற்குள் திக்கென்றது இருந்தாலும், அவர் விரைவில் சரி ஆகி விடுவார் என்று நம்பினர்.
     தந்தை தன்னிடம் பேசவும் மகிழ்ந்த ஹர்ஷா “அப்பா நான் தான் விழுந்துட்டேன். நீங்க கவலைப் படாதீங்க. எனக்கு ஒன்னும் இல்லை” என்றபடி எழுந்தவன் தன் தந்தை கையை பிடித்து இழுத்து சென்றான்.
     “வாங்க ப்பா. நம்ம தம்பி பாப்பாவ பாக்கலாம் வாங்க வாங்க” என்று உற்சாகமாக அந்த சிறு குழந்தையை அவரிடம் காட்டினான். ராஜசேகர் பிறந்த அந்த குழந்தையை ஒரு வாரம் சென்று இன்று தான் முதன்முதலில் பார்க்கிறார்.
     பார்த்த பின் தான் அவர்க்கு தன் மனைவி இப்போது இந்த பூமியில் இல்லை என்பதே உறைத்தது‌. குழந்தையை அவர் கையில் தந்தார் பார்வதி.
     அதுவரை அடங்கியிருந்த அவரின் உணர்வுகள் இதற்கு மேல் தாளாது என்று கண்ணில் கண்ணீராய் இறங்க தொடங்கியது. இதை பார்த்த அனைவருக்கும் வருத்தமாக இருந்தாலும் இது நல்லது என்றே தோன்றியது.
     கண்ணில் விழுந்த நீரை ஒரு கை துடைத்து விட்டது. வேறு யார் ஹர்ஷா தான். தன் தந்தையின் கண்ணீரை கண்டவன் எதுவும் சொல்லவில்லை. அவரை சிறிது நேரம் அழ விட்டான்.
      பின் தந்தையை நோக்கி “ப்பா போதும் ப்பா அழுதது. இனிமே அழக் கூடாது சரியா” என்றவன் தன் அத்தையை பார்த்து
     “அத்தை அப்பா அழாம இருந்தா அவருக்கு உடம்பு சரியில்லாம போயிரும்னு சொன்னீங்க. இப்ப அப்பா அழுதுட்டாரு. இனிமே ஒன்னும் ஆகாது தானே” என்ற ஹர்ஷாவை வியப்புடன் தான் பார்த்தனர் அனைவரும்.
     “ம்ம் ம்ம். சரி ஆகிருவார் கண்ணா. உங்க அப்பாக்கு ஒன்னும் இல்லை” என்றவாறு அவனை அணைத்து கொண்டார் பார்வதி.
     ஹர்ஷாவிடன் இதை யார் சொன்னது என்று கேட்ட பார்வதியிடம் கோமதி கிளம்பும் போது அவரிடம் பேசியதை கேட்டதாக சொன்னான்.
     ஹர்ஷவர்தன் இயல்பிலே புத்திசாலியான குழந்தை என்பதால் அவன் சட்டென்று சூழ்நிலையை புரிந்து செயல்பட்டு விட்டான்.
     அனைவரும் மீண்டும் அமைதியாக அமர்ந்திருக்கவும் “தாத்தா அப்பா அத்தை வாங்க எனக்கு பசிக்குது சாப்டலாம்” என்றான்.
     “ஐயோ கண்ணா பசிக்குதா! வாடா அத்தை ஊட்டி விடுறேன் சாப்பிடு” என்றவர் சமையலறை செல்ல திரும்பவும் “இல்ல நான் தனியா சாப்ட மாத்தேன். எல்லாம் வாங்க.
     அப்பா தாத்தா அத்தை தம்பி பாப்பா எல்லாம் சாப்டலாம். எல்லாக்கும் பசிக்கும்ல” என்றான் நியாயமாக தன் மழலை குரலில்.
     ஒருவரும் அசைவதை காணோம் என பார்த்தவன், அந்த வீட்டில் வேலை செய்யும் ராணி அம்மாவை உணவை எடுத்து வைக்க சொன்னான்.
     பின் ஒவ்வொருவரையும் இழுத்து சென்று அமர வைத்தான். ஆம் இழுத்து தான் சென்றான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
     தங்கள் முன்னே உள்ள சாப்பாட்டை யாரும் தொடாது தன் தந்தையை காணவும் என்ன நினைத்தானே உடனே தன் கை நிறைய உணவை எடுத்து அவர் வாய் அருகே கொண்டு சென்றான்.
      “அப்பா ஆஆ… காட்டு இந்தா சாப்பிடு” என்றான். தன் மகனின் செயலை கண்ட ராஜசேகர் கண்களில் மீண்டும் கண்ணீர்; ஆனால் வாயை திறந்து உணவை வாங்கி கொண்டார்.
     பார்வதி தான் ஊட்டுவதாக கூறியும் “இல்ல த்தை நான் பிக் பாய்ல நான் தான் சாப்டனும். நீங்க ஊட்டி விடவேண்டாம்” என்றான். கேட்ட பார்வதிக்கு விழிகளில் நீர்க் கோர்த்தது.
     ஏனெனில் ஹர்ஷா அடம் பிடிக்கும் போது சுபத்ரா எப்போதும் கூறும் வார்த்தைகள் இது. அதுவும் சுபத்ரா பார்வதியை மரியாதையாக அழைக்க சொல்வார்.
     ஆனால் ஹர்ஷா கேட்டதில்லை. இப்போது தானாகவே பார்வதியை மரியாதையாக அழைக்கிறான். அதையும் உணர்ந்தார் அவர்.
     தன் அன்னைக்கு பிடித்தது போல் நடந்தால் அவர் சீக்கிரம் தன்னிடம் வந்திடுவார் என்று முழுமையாக நம்பிய ஹர்ஷா இப்போது இப்படி கூறினான்.
     ஆனால் அதை அவன் ஒருவரிடமும் கூறவில்லை. தினமும் கடவுள் முன் நின்று வேண்டுதல் வைத்து கொண்டிருக்கிறான் இந்த ஒரு வாரமும் தன் தாயை சீக்கிரம் அனுப்பி வைக்க சொல்லி.
     ஆனால் இருந்த நிலையில் யாரும் அவனை கவனிக்கவில்லை. இப்போது தன் தந்தையுடன் தானும் ஏதோ பேசிக் கொண்டு அவருக்கு இடையில் ஊட்டிக் கொண்டு என தன் உணவை உண்டான் ஹர்ஷா.
     அதன்பின் தான் அனைவரும் தங்கள் உணவை பாதி என்றாலும் வயிற்றில் நிறைத்துக் கொண்டனர். தன் தம்பியை பார்த்த ஹர்ஷா “த்தை தம்பிக்கு சாப்பாடு?” என்றான் கேள்வியாக.
     அவனின் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு “தம்பி பால் மட்டும் தான் கண்ணா குடிக்கணும். அவன் உன்னை மாதிரி வளர்ந்த அப்புறம் சாப்பாடு சாப்டுவான்” என்றார் அவனுக்கு புரியும் விதத்தில்.
     ஹர்ஷாவும் தலையை எல்லா புறமும் ஆட்டிவிட்டு சாப்பிட தொடங்கினான். இதையெல்லாம் பார்த்த வேதாசலம் தான் ஒரு வாரமாக இவர்களுடன் போராடி செய்ய வைத்ததை சில மணி நேரத்தில் செய்ய வைத்த ஹர்ஷாவை கண்டு ஆச்சரியமாக இருந்தது.
     எப்படியோ வீட்டில் உள்ளவர்கள் இயல்பானால் அதுவே போதும் என்றிருந்தது அந்த நல்ல உள்ளத்திற்கு. அதன் பின் வந்த நாட்களில் இயல்பு நிலை திரும்ப துவக்கியது அந்த வீட்டில்.
     அதே போல் ஹர்ஷாவின் அழகான ஆளுமையும் அதிகரிக்க துவங்கியது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவனின் சொல்படி நடந்தனர்.
     எனவே அவர்கள் நேராநேரம் உணவு சரியாக எடுத்து கொண்டனர். “இரவில் தந்தையோடு தான் நானும் தம்பியும் தூங்குவோம்” என்ற ஹர்ஷாவின் திட்டவட்டமான முடிவால் ராஜசேகர் மனைவியின் நினைவை தற்காலிகமாக ஒதுக்க வேண்டியதானது.
     சிறிய சிறிய மாற்றங்களே வாழ்வில் பெரிய மாற்றத்திற்கான படிகள். அது போல் சிறிது சிறிதாக அந்த வீடு மீள தொடங்கி விட்டது.
     ஒரு மாதம் சென்ற நிலையில் மீண்டும் ஹர்ஷா பஞ்சாயத்து ஒன்றை கூட்டி வீட்டின் ஹாலில் அனைவரையும் கூட செய்தான்.
     அவன் குற்றச்சாட்டை கேட்ட வீட்டினருக்கு சிரிப்பே பிரதானமாக வந்தது‌. ஆனால் தங்களுக்கு கூட தோன்றாததை இவன் யோசித்து உள்ளானே என்று ஆச்சரியமாகவும் இருந்தது.
வர்ணங்களாய் நீ வந்தாய் கண்ணா;
ஜாலங்கள் நீ புரிந்தே நின்றாய்!
மாயனாக உன் கார்குலலோடு;
வசந்தங்கள் நீ வீசி சென்றாய்!!
-மீண்டும் வருவான்

Advertisement