Advertisement

     “என்ன அனு ரெடியா? இன்னும் என்னடி பண்ற. டைம் ஆகுது பாரு” என அனுவை அழைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
     “தட்டுள இருக்கறத புல்லா சாப்பிடாம நீ எழுந்திருக்க கூடாது அனு” என அவளை சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. இருவருக்கும் இடையில் முழித்தபடி உணவு தட்டை நோண்டிக் கொண்டிருந்தாள் அனு.
     “ப்ச் அத்தை! உங்க பொண்ணுக்கு அப்புறமா ஊட்டி விடுங்க‌. இப்போ அவளுக்கு எக்சாம்க்கு டைம் ஆச்சு. அவளை கொஞ்சம் விடுங்க” என ஹர்ஷா பார்வதியிடம் இப்போது உரைக்க
     “ஆமா ம்மா. எனக்கு டைம் ஆகிடுச்சு. நான் இப்போ கிளம்பினா தான் கரெக்டா இருக்கும்” என்று தயங்கியவாறு அனுவும் கூற “நீ சும்மா இருடா. இந்த பையலுக்கு பொறாமை உன்னை மட்டும் கவனிக்கிறேன்னு” என பார்வதி நொடித்துக் கொண்டார்.
     அதை பார்த்து கடுப்பான ஹர்ஷா “ஆமா அப்படியே பொறாமை பட்டுட்டாலும்” என கடுப்பாய் மொழிந்தான். அதில் சிரித்து விட்டாள் அனு. இது தினமும் நடப்பது என்பதால் இவர்களின் அலும்பை பார்த்துக் கொண்டே அனுவை கல்லூரிக்கு ஒருவழியாக கிளம்பிவிட்டான் ஹர்ஷா.
     அனுவிற்கு இப்போது செமெஸ்டர் நடந்துக் கொண்டிருக்கிறது. ஹர்ஷா தான் அவளை கல்லூரியில் இறக்கி விடுவான். ஆனால் அவளை மதியம் கண்டிப்பாக ஆட்டோ அல்லது டாக்ஸி பிடித்து தான் வரவேண்டும் என கறாராக கூறிவிட்டான்.
     விஸ்வநாதன் கூட ‘நான் அழைத்து வந்து விடுகிறேனே. தனியாய் வேண்டாமே. அவ சின்ன பொண்ணு’ என தயக்கமாக கேட்க ஹர்ஷா “சின்ன பொண்ணுக்கு எதுக்கு அப்போ கல்யாணம் பண்ணி வச்சீங்க” என சுருக்கென்று கேட்டுவிட்டான்.
     அதில் திகைத்த விஸ்வநாதன் “மாப்பிள்ளை” என்றார் உள்ளே சென்ற குரலில். அந்த குரல் ஏதோ செய்ய “பின்ன என்ன மாமா, அவ எப்போ தான் நாலு இடம் வெளியே போய் வந்து பழகுறது” என்றான் சற்று சமாதானமாக.
     விஸ்வநாதனும் புரிந்தது போல் “சரி மாப்பிள்ளை” என்று முடித்துக் கொண்டார். ஹர்ஷா சொன்னது போல் அனுவை பரிட்சை முடிந்து தனியே வரவும் வைத்தான். முதல் இரண்டு நாட்கள் சிறிது பயமாக ஏன் அதிகமாகவே இதயம் அடித்து கொண்டது அனுவிற்கு.
     ஆனால் போக போக பழகிக் கொண்டாள். வாழ்வில் முதல் முறை சுதந்திர காற்றை உணரும் அந்த நிமிடம் நிறைவாய் உணர்ந்தாள். அதை தந்த தன் கணவன் ஹர்ஷவர்தன் மேல் இன்னும் பித்தாகினாள் அனு.
     அனு கல்லூரி செல்ல துவங்கிய நாள் முதல் ஹர்ஷா தன் மருத்துவமனைக்கு செல்ல துவங்கிவிட்டான். கிட்டதட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து செல்கிறான்.
     அத்தனை நாட்கள் கடந்து அவன் அறைக்குள் சென்று அமர்ந்த போது மனதிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தான்.‌ அதுவே கூறும் அவனுக்கு அந்த துறை மீதிருக்கும் காதல் எவ்வளவு என்று.
     இன்றும் அனுவை கல்லூரியில் இறக்கிவிட்டு அதே உள்ள மகிழ்ச்சியோடு மருத்துவமனையை அடைந்தான் ஹர்ஷா. நீண்ட நாட்கள் ஆனதால் மருத்துவமனையை சுற்றி ரவுண்ட்ஸ் செல்ல முடிவெடுத்தவன் வெளியே வந்தான்‌.
     அப்போது மருத்துவனையில் உள்ளே உள்ள மெடிக்கல் வழியாக செல்லும் போது புதிதான இரண்டு நபர்கள் மருந்துகளை கொடுத்து கொண்டிருக்க வழக்கம் போல் அந்த மருந்துகளை எடுத்து பார்த்தான்.
     அதை பார்த்தவன் குழம்பி விட்டான். ஏனெனில் அது அவர்கள் எப்போதும் வாங்கும் மருந்து கம்பெனி மருந்துகள் இல்லை. புதிய கம்பெனியாக ஏன் இதுவரை அவன் கேள்வியேபடாத ஒரு கம்பெனியாக இருக்க “யாரு இந்த மருந்து வாங்க பெர்மிஷன் தந்தா?” என அங்கே இருப்பவர்களிடம் கேட்டான்.
     அதற்கு அங்கே இருந்த அவர்கள் இருவரும் திருதிருவென முழித்துக் விட்டு “நீங்க தான் டாக்டர்” என்றனர் ஒரு குரலில். அதில் அதிர்ந்த ஹர்ஷா “வாட்?” என்று இரைந்தான். அவன் கத்தியதில் அங்கிருந்த அனைவரும் அங்கே வந்துவிட்டனர்.
     ஹர்ஷா சம்மதமே தராத போது எப்படி அவன் பெயரை சொல்லி இதை உபயோகப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிர்ந்தவன் தன் தந்தை ராஜசேகரை அழைத்து விசாரிக்க அவரும் இதற்கு சம்மதம் தரவில்லை என்று கூறிவிட பெரிதும் அதிர்ந்து விட்டான்.
     இது எத்தனை நாட்களாக நடக்கிறது என அந்த மெடிக்கலில் இருக்கும் நபரிடம் கேட்க ‘இரண்டு வாரங்களாகவே வருகிறது’ என கூறவிட இங்கு என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் நின்ற ஹர்ஷா முதலில் அந்த இரண்டு புதிய நபர்களையும் உடனே பிடித்து வைக்க உத்தரவிட்டான்.
     ஹர்ஷா திடீரென அழைத்து கேட்கவும் குழம்பி போன ராஜசேகரும் அங்கே வந்துவிட்டார். என்ன நடந்தது என ஹர்ஷாவிடம் கேட்க அவனும் அங்கே நடந்ததை அப்படியே சொல்லிவிட்டான். ஹர்ஷாவின் முகத்தை பார்க்கவே அவனின் ரௌத்திரம் நன்றாக மற்றவர்களுக்கு புரிந்தது.
     அவனின் கோபம் கண்டு மொத்த மருத்துவமனையுமே நடுங்கிக் கொண்டிருந்தது. ராஜசேரால் கூட ஹர்ஷாவை சமாளிக்க முடியாது போனதில் தான் அவன் கோபத்தின் உச்சத்தை அனைவரும் பார்ந்தனர்.
     ஹர்ஷாவால் இதை சுத்தமாக ஏற்க முடியவில்லை. இது அவன் மருத்துவமனை ஆனால் அவனுக்கு தெரியாமல் என்னவோ நடந்து கொண்டிருக்க கோபம் சுறுசுறுவென ஏறிக் கொண்டே இருந்தது.
     பிடித்து வைத்த இரு நபர்களை விசாரிக்க ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றே அவர்கள் சாதித்தனர். கோபம் தலைக்கு ஏற போலீஸிற்கு தகவல் கொடுத்துவிட்டான் ஹர்ஷா.
     அந்த மெடிக்கல் ஆட்களிடம் “எந்த புரூப் வச்சு மருந்தை வாங்கி வச்சீங்க.‌ அப்படியே அவங்க எதை கொண்டு வந்து காமிச்சிருந்தாலும் என்கிட்ட கேக்கனும்ற பேசிக் சென்ஸ் கூட இல்லயா” என்று காய்ச்சி எடுத்து விட்டான்.
     ஏனெனில் அருணாசலம் மருத்துவமனையில் மருந்துகளை விற்க அனுமதியை அந்த மருத்துவமனையின் எம்.டியிடம் எழுத்து பூர்வமாக வாங்க வேண்டும். அப்படி வாங்கி இருந்தாலும் ஒரு முறை அழைத்து சரி பார்க்க வேண்டும் என்பது ஹர்ஷா கூறிய சட்டம்.
     அதை அவர்கள் செய்திருந்தால் இந்த அளவு வந்திருக்காது என்பது அவனின் கோபம். ஆனால் முதலில் இதை ஹர்ஷாவிடம் அவர்கள் தெரிவிக்க முயன்ற போது அது ஒவ்வொரு முறையும் தடங்களாகி விட்டது என்பதும் உண்மையே.
     இப்போது ராஜசேகர் “என்னப்பா இது இவ்ளோ டென்ஷன். அதான் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சே. அப்புறம் என்னடா! அவங்க வந்து எல்லாத்தையும் விசாரிச்சு உண்மைய கண்டுப்பிடிச்சிருவாங்க. நீ டென்ஷன் ஆகாத ஹர்ஷா” என்று சமாதானம் பேசிட,
     “எப்படி ப்பா. எப்படி டென்ஷன் ஆகாம இருக்க சொல்றீங்க. இந்த மெடிசின் கம்பெனிக்கு நான் அப்ரூவல் குடுக்கவே இல்லை. நீங்களும் குடுக்கலை. அப்போ நமக்கு தெரியாம இங்க எதுவோ நடக்குதுன்னு தானே மீனிங்.
     சப்போஸ் பேஷன்ட்க்கு இதனால எதாவது இஸ்யூஸ் வந்தா என்ன ஆகறது. நமக்கு தான் பெரிய பிராப்ளம் வரும். மோர் ஓவர் ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் இல்லையா ப்பா. யாருக்காவது எதாவது ஆச்சுன்னா அந்த கில்டே நம்மல கொன்னுடாதா ப்பா” என தன் மனதில் இருந்தவற்றை அப்படியே இறக்கி வைத்தான் ஹர்ஷா.
     அவன் கூறுவதில் உள்ள நியாயம் புரியவே ‘ஆம்’ என ஓத்துக் கொண்ட ராஜசேகரும் அமைதி காத்தார். சிறிது நேரத்தில் போலீஸும் வந்துவிட ஹர்ஷா நடந்த எல்லாவற்றையும் சொல்லி எழுத்து மூலமாக ஒரு புகாரும் கொடுத்து அந்த இரண்டு நபர்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தான்.
     அதுவரை சற்று தெனாவட்டாக இருந்த அந்த இருவரும் இப்போது உண்மையாகவே பயந்து போய் ஹர்ஷாவை பார்க்க அவன் இன்னும் எதோ தீவிர யோசனையிலே இருந்தான்.
     அந்த இருவரையும் போலீஸ் இழுத்த சென்றுவிட தன் லேப் ஆட்களை அழைத்து உடனடியாக அந்த மருந்துகளை பரிசோதிக்க உத்தரவிட்டான். அதன் பின்னே தான் சற்று தனிந்தான்.
     “இந்த மருந்தை எல்லாம் இனி சேல் பண்ணாதீங்க. இந்த கம்பெனி மெடிசின் சேம்பில் எல்லாத்தையும் போலீஸ் ஸ்டேஷன்க்கு அனுப்பிடுங்க. அன்ட் மீதி மெடிசினை வேற ரூம்ல வச்சிருங்க
     அப்புறம் இனிமே நீங்க எந்த கம்பெனியாவது மெடிசின் அப்ரூவல் பேப்பர மட்டும் தூக்கிட்டு வந்து நீட்டுனா அதோட எனக்கும் போன் பண்ணி கிராஸ் செக் பண்ணிட்டு தான் எடுத்துக்கனும்.
     என்னை கான்டேக்ட் பண்ண முடியலைனா என்கிட்ட பேசி அப்ரூவலை ஓகே பண்ற வரை மெடிசினை வாங்கிக்க கூடாது காட் இட்!!” என்று கடுமையான எச்சரித்து அனுப்பினான் அந்த மெடிக்கல் இன்சார்ஜ்ஜை.
     பின் ஹாஸ்பிடலில் இருந்த டாக்டர்களை பார்த்து “அன்ட் எந்த பேஷன்ட்டுக்காவது இதை கொடுத்துட்டு இருக்கோம்னா உடனே ஸ்டாப் பண்ணிடுங்க ஓகே!” என்று முடித்தான்.
     அதன்பின் ஹர்ஷாவை அவன் அறைக்கு அழைத்து வந்த ராஜசேகர் “என்னப்பா இது தப்பு நடந்திடுச்சு தான் அதுக்கு டென்ஷன் ஆனா எல்லாம் சரியா போய்டுமா?” என பேசி செல்ல ஹர்ஷாவின் எண்ணம் முழுவதும் வேறெங்கோ சென்றுவிட்டது.
     ஹர்ஷாவின் எண்ணம் இங்கில்லை என்று உணர்ந்த ராஜசேகர் அவன் தோலை உலுக்கி “என்னடா ஹர்ஷா குட்டி. என்ன யோசிக்கிற?” என்று வினவினார்.
     ராஜசேகர் உலுக்கலில் தன்னிலை அடைந்த ஹர்ஷா “இல்ல ப்பா. இப்போ ரீசென்டா நடந்த எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தேன். பர்ஸ்ட் என்ன கொலை பண்ண டிரை பண்ணுனாங்க. பட் நான் தப்பிச்சிட்டேன்.
     நெக்ஸ்ட் அன்னைக்கு என் மேரேஜ்க்கு முதல் நாள் எனக்கு தான் டிரக் குடுக்க டிரை பண்ணினாங்க. அதுவும் எனக்கு என்னவோ இவங்க பண்ண வேலைன்னு தான் மனசுல தோனிட்டே இருந்தது.
     இதுல இன்னைக்கு இந்த இன்சிடென்ட். என்னோட சைன் போட்டே என்னை சிக்க வைக்க பார்த்திருக்காங்க. டோட்டலா யாருக்கோ என் மேல‌ அவ்ளோ வென்ஜென்ஸ்னு தோனுது ப்பா” என்று தன் மனதில் தோன்றியதை எல்லாம் கோர்த்து கூறியவன்
     ஒரு பெருமூச்சை வெளியிட்டு “பட் அப்படி யாருக்கு என் மேல‌ இவ்ளோ வென்ஜென்ஸ் அப்படின்னு தான் எனக்கு புரியல ப்பா” என்று கூறி முடித்தான் ஹர்ஷா.
     ஹர்ஷா கூறியவுடன் தானும் யோசித்த ராஜசேகருக்கும் அப்போது தான் புரிந்தது. “ஆமா ஹர்ஷா! யாரோ உன்னை தான் டார்கெட் பண்ற மாதிரி இருக்குடா. இப்போ என்ன பண்றது ஹர்ஷா. உன்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம் இப்போ வருது கண்ணா” என்றவரின் குரல் சிறிது நடுங்கியும் போனது.
     தன் சந்தேகத்தை கூறி தந்தையை பயம் கொள்ள செய்து விட்டோம் என பதறிய ஹர்ஷா “ஐயோ ப்பா! அப்படி எல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க எல்லாரும் இருக்கப்ப எனக்கு எதாவது ஆக விட்டுருவீங்களா என்ன?” என்று சமாதானம் செய்தான்.
     இங்கு எல்லாவற்றையும் ஓரளவு சரி செய்தபின் மீண்டும் அனைத்து மருத்துவமனை ஊழியர்களையும் கடுமையாக எச்சரித்து விட்டே அங்கிருந்து அகன்றான் ஹர்ஷா தன் தந்தையுடம்.
     வீட்டிற்கு சென்றபின் நடந்தவற்றை வேதாசலம் அபி மற்றும் விக்ரமிடம் மட்டும் கூறிவிட்டு இதற்கு சீக்கிரம் ஒரு தீர்வை பார்க்க வேண்டும் என கலந்து ஆலோசனை நடத்தினார் ராஜசேகர்.
     சிறிது நேரம் இவர்கள் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்க ஹர்ஷாவிற்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிய ஹர்ஷா அதிர்ந்து எழுந்து நின்று விட்டான்.

Advertisement