Advertisement

     தலையில் கையை வைத்து வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற நிலையில் அமர்ந்திருந்த விக்ரமை நெருங்கிய அபி “அத்தான் என்ன ரொம்ப பீல் ஆகிட்டியா?” என அப்பாவியாக வினவினான்.
     விக்ரம் அபியின் உள்குத்தை அறியாது பாவமாக ‘ஆம்’ என தலை ஆட்டினான். விக்ரமை கண்டு இப்போது நக்கலாக “ச்சுச்சு! இனிமே பீல் பண்ணி ஒன்னும் ஆகப் போறது இல்ல அத்தான். உன்னோட பர்ஸ்ட் கிரஸ் அன்ட் பஸ்ட் லவ்க்கு இன்னைக்கு கல்யாணம்.
     ஏன் அத்தான் கொஞ்ச நாள் முன்னாடியே இந்த மேட்டரை நீ சொல்லிருந்தா என் அண்ணனுக்கு உன்னையே எப்படியாவது செட் பண்ணி வைக்க வீட்டுல பேசிரும்பேன்ல” என்றுவிட்டு
     ” அப்புறம் அத்தான் யாருக்கு யாருன்னு அந்த கடவுள் எழுதியிருப்பான்னு சொல்லுவாங்க. அது மாதிரி அண்ணா லைஃப்ல இனிமே அனு அண்ணி தான்னு கடவுள் எழுதிட்டாரு. சோ பீல் பண்ணாம கிளம்பு விக்ரம் அத்தான்” என அவனை பேசவிடாது அபியே பேசி தள்ளினான்.
     கடுப்பான விக்ரம் “ஏய் அபி வேண்டாம்டா” என்று கத்த, அதற்கும் அபி அசராது “என்னது அபியா! நான் உன் சின்ன மச்சான் இல்லையா அத்தான்” என்று வெட்கப்படுவது போல் விரலை வாயில் வைத்து கொண்டான்.
     இதற்கு மேல் தாங்காது என விக்ரம் அடித்து பிடித்து குளிக்க ஓட அங்கே அப்போது தான் ஹர்ஷாவும் குளித்து முடித்து வெளியே வர கதவை திறந்தான். விக்ரம் வந்த வேகத்தில் இருவரும் நன்றாக ஒருவர் மேல் ஒருவர் மேதிக் கொள்ள
     அபி “தம்தன தம்தன தம்தன…” என மியூசிக்கை தன் கைப்பேசியில் போட்டு விட்டான். அதன் பின்னர் அங்கே நில்லாது ஏன் ஹர்ஷாவை நிமிர்ந்து கூட பார்க்காது வேகமாக குளியல் அறைக்குள் சென்று மறைந்தான் விக்ரம்.
     விக்ரமின் செய்கையில் குழம்பிய ஹர்ஷா அபியிடம் என்ன நடந்தது என கேட்க அபி நடந்தவற்றை சிரித்துக் கொண்டே கூறினான். அதில் தானும் சிரித்த ஹர்ஷா
     “ஏன்டா அவனை இப்படி கிண்டல் செய்ற. பாவம் அவன் ஏதோ நேத்து சுயநினைவே இல்லாம அப்படி நடந்துகிட்டான். அதுக்காக இப்படியா?” என கேட்டு வைத்தான்.
     “ஐயோ ண்ணா! இது ஜஸ்ட் பார் ஃபன். நைட்டு பார்த்தல்ல சாரை, அவர் தங்கச்சிக்கு வேற நல்ல மாப்பிள்ளை பார்க்க போறாராம். அப்போ நாங்க என்ன பண்றது. அதுக்கு தான் அவனை கொஞ்ச நேரமாவது வச்சு செய்யப் போறேன். நீ எதுவும் கேட்க கூடாது. ஓகேவா ண்ணா” என்று தன் நியாயத்தை அபி எடுத்து விட
     “என்னமோ பண்ணுடா. ஆனா பாத்துடா ரொம்ப கிண்டல் பண்ணாத‌. அவனை பார்க்க வேற பாவமா இருக்கு” என்று ஹர்ஷா முடித்துக் கொண்டான்.
     சும்மாவே அபியை கையில் பிடிக்க முடியாது இதில் ஹர்ஷாவிடமே ஒப்புதல் வாங்கியபின் சும்மா இருப்பானா. விக்ரம் கதற கதற விடாது அவனை ஓட்டி தள்ளி விட்டான்.
     ஆனால் அவன் வீட்டு ஆட்கள் மற்றும் அனு வீட்டு ஆட்கள் என மற்றவர்கள் யாரும் விக்ரமை எதுவும் கேட்கவில்லை. அதே போல் அவனிடம் எப்போதும் போல் சிரித்து பேசி சென்றனர்.
     அபிக்கு விக்ரம் அம்முவிடம் அப்படி பேசியது இன்னும் தாளவில்லை. அதனாலே அவன் வரும் நேரம் முன்னைவிட அம்முவிடம் இன்னும் நெருக்கமாக பழகினான்.
     பார்த்த விக்ரம் மெல்லவும் முடியாது முழுங்கவும் முடியாது அவஸ்தையில் இருந்தான். பின் முகூர்த்த நேரம் நெருங்க மாப்பிள்ளை பெண் இருவரும் மேடையை வந்தடைந்தனர்.
     விக்ரம் பாவம் போல் மேடையில் நிற்க இது போதும் என எண்ணிய அபி “உன்னை பாவம் பார்த்து இதோட விடுறேன்‌ அத்தான். இனிமே உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க போறேன்‌, மாங்கா பறிக்க போறேன்னு டயாலாக் விடாத. அப்படி எதாவது பண்ண அப்புறம் அவ்வளவு தான் என்ன வர்டா” என விக்ரமின் கண்ணத்தில் தட்டி கிளம்பினான்.
     அங்கே அக்னியின் முன்னே அமர்ந்திருந்த அனு பதற்றத்தின் உச்சத்தில் இருந்தாள். திருமணம் பெண்களுக்கு வாழ்வில் பெரிய‌ திருப்பம் அன்றோ. இனி வாழ்க்கை ஹர்ஷாவோடு எப்படி இருக்கும் என பல எண்ணங்கள் மனதின் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.
     அனுவின் அலைப்புறுதலை அவள் முகத்தை பார்த்தே கண்டுக் கொண்ட ஹர்ஷா யாரும் அறியாமல் அனுவின் கையை பிடித்து ஆறுதலாக அழுத்திக் கொடுத்தான். அதுவே ‘உனக்காக என்றும் நான் இருப்பேன்’ என சொல்லாமல் சொல்லியது.
     இப்போது சற்று தைரியம் வந்த அனு தானும் ஹர்ஷாவின் எண்ணத்தை புரிந்து கொண்டதின் அடையாளமாக இமைகளை மூடி திறந்தாள்.
     அதை கண்டு நிறைவான ஒரு புன்னகையை சிந்திய ஹர்ஷா தன் வாழ்க்கை துணையை ஆதூரமாக பார்த்து வைத்தான். அதன்பின் ஐயரின் சொல்படி ஒவ்வொன்றையும் செய்தனர் தம்பதிகள்.
     இவ்வளவு நேரம் அவர்கள் எதிர்ப்பார்த்த நேரமும் வந்தது. ஐயர் “கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்றிட அனுவை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டே “லவ் யூடா” என்றவாறு மூன்று முடிச்சிட்டான்.
     அந்த நிமிடங்களின் தாக்கத்தில் அனுவின் கண்களில் இருந்து தானாக இரு சொட்டு கண்ணீர் கீழ விழ அதற்கு மாறாக அவள் இதழ்களே அழகாக புன்னகையை சிந்தி நின்றன.
     இந்த தருணத்தை புகைப்பட கருவிகளும் அழகாக தனக்குள் உள்வாங்கி கொண்டன. இரு குடும்பத்தினரும் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் நிம்மதியாய் மூச்சு விட்டுக் கொண்டனர்.
     அதன்பின் நேரம் அசுர வேகத்தில் ஓடியது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு புறம் உணவு பந்தி கலைக்கட்ட இங்கே மேடையில் புதுமண தம்பதிகளுடன் வரிசையில் நின்று பலர் பரிசு பொருட்களை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
     கீழ் வரிசையில் அமர்ந்திருந்த ராமோ ஏகத்துக்கும் கடுப்பில் இருந்தார். அவர் திட்டம் எல்லாம் தவிடு பொடி ஆனதை எண்ணி எண்ணி நொந்து கொண்டார். இனி ஹர்ஷாவை எப்படி சாய்ப்பது அது நம்மால் முடியுமா என்று கூட தோன்றியது.
     ஆனால் மனதில் இருந்த வன்மம் அவரை அதற்கு மேல் யோசிக்க விடாது தடுத்து ஹர்ஷாவை அழிக்க வேறு திட்டம் தீட்ட தூண்டிக் கொண்டிருந்தது.
     அதனால் ‘சரி இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்.‌ அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று மனதிலே அவர் பகைக்கு இன்னும் தூபம் போட்டுக் கொண்டு காத்திருக்க முடிவு செய்தார் நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக.
     மதிய உணவு நேரம் கடந்த பின்னே அனுவை அழைத்துக் கொண்டு ஹர்ஷாவின் வீட்டிற்கு அனைவரும் கிளம்பினர். மண்டபத்தை விட்டு கிளம்பும் முன் தன் தாய் மீனாட்சி, அத்தை வசுந்தரா மற்றும் ரித்து மூவரையும் கட்டிக் கொண்டு அழுக ஹர்ஷாவிற்கே அனுவை பார்க்க பாவமாய் போய்விட்டது.
     இதில் விஸ்வநாதனும் தன் மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டதை பார்த்து அவர் குடும்பத்தினரே ஆச்சரியப்பட்டனர்.
     அவர் ஹர்ஷாவின் கையை பிடித்து “மாப்பிள்ளை அவ சின்ன பொண்ணு. எதாவது தப்பு செஞ்சா கூட மன்னிச்சிருங்க. அவளை நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை” என தொண்டை அடைக்கப் பேசிவிட்டார் விஸ்வநாதன்.
     அந்த நிலையில் அவரை பார்க்கவே பாவமாக இருக்க “நீங்க இதை சொல்லனும்னு இல்ல மாமா‌. நான் அவளை கண்டிப்பா நல்லா பாத்துப்பேன். நீங்க கவலைப்படாதீங்க” என்று அவர் கையை ஆறுதலாக பிடித்து விட்டான்.
     அதில் நம்பிக்கை வரப் பெற்ற விஸ்வநாதன் மகிழ்ச்சியாய் அவர்களை ஹர்ஷாவின் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தார்.
     பெரியவர்கள் ஒரு காரில் சென்றுவிட விக்ரம் அபி அம்மு ஹர்ஷா அனு என இவர்கள் ஐவரும் வேறொரு காரில் வந்தனர். அனு கண்களை துடைத்துக் கொண்டே வருவதை பார்த்த அபி
     “ஹயோ! என்ன அண்ணி இப்படி அழறீங்க. எங்க வீட்ல ஜூல இருக்க ஒரு அனிமல் இருக்கு தான்” என விக்ரமை ஓரப்பார்வை பார்த்து கூறியவன் தொடர்ந்தான்.
     “அதை நினைச்சு நீங்க பயப்படவே வேணாம். அண்ணா நான் அம்மு இப்படி உங்களுக்கு துணைக்கு நிறைய பேர் இருக்கோம். சோ பயப்படாம வாங்க” என்றிட “தங்கச்சி முன்னாடியே சொல்றேன் நீ கோச்சிக்காத” என்ற முன்னறிவிப்பாய் உரைத்த விக்ரம் அபியின் முதுகில் சப்பென்று ஒரு அடியை வைத்தான்.
     பின் “ஏன்டே காட்டெருமை! என்னை பார்த்தா ஜூல இருக்க அனிமல் மாதிரி இருக்கா. நீதான்டா அது. அம்மு பாருடா இவன் உன் அண்ணனையே என்ன சொல்றான்னு. அப்போ என் தங்கச்சி உன்னையும் சேர்த்து தானே அப்படி சொல்றான்” என அபியிடம் ஆரம்பித்து அம்முவிடம் அவனை வசமாக கோர்த்து விட்டான் விக்ரம்.
     “அதானே!” என்ற அம்மு “என்ன அபி அத்தான் என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. எப்படி நீங்க இப்படி சொல்லலாம்” என அவளும் சேர்ந்து கொள்ள அந்த இடமே கலை கட்டியது.
     இவர்கள் அலம்பலை சிறிது நேரம் பொறுத்த அபி விக்ரமை பார்த்து கொண்டே “அண்ணி உங்களுக்கு ஒரு சக்காலத்தான் இருக்கான் தெரியுமா?” என மெதுவாக ஆரம்பிக்க “என்ன சொல்றீங்க?” என்றாள் அனு புரியாமல்.
     பேச்சு செல்லும் திசையை கண்டு பதறிப்போன விக்ரம் “ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லமா தங்கச்சி. அவன் ஏதோ சும்மா விளையாடுறான்மா” என சமாளித்து விட்டு அபியை பார்த்து “வாய மூடுடா” என்று அடிக்குரலில் சீற சிரித்துக் கொண்டே அபியும் அமைதி ஆகிவிட்டான்.
     இப்படி ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டும் ஓட்டிக் கொண்டும் அழுத அனுவை சிரிக்க வைத்து விட்டே வீட்டை சென்றடைந்தனர்.
——————————————–
     வசுந்தரா கணபதி இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பிள்ளைகள் இருவரும் விஸ்வநாதன் வீட்டில் இருக்க வசுந்தராவிடம் ஏதோ பேச வேண்டும் என அவரை அழைத்து வந்திருந்தார் கணபதி.
     “வசும்மா! நான் சொல்றதை கேளுடா. நாம இங்க இருக்க வேணாம். உன் அண்ணன் நம்மகிட்ட எப்பவுமே கோபமா தான் நடந்துக்கறாரு. உன் மனசையும் பேசியே ஹர்ட் பண்றாரு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. நம்ம போய்டலாமே” என வசுந்தராவின் கைகளை பிடித்து கொண்டு உறுக்கமாய் பேசினார்‌ கணபதி.
     அவர் அன்பில் என்றும் போல் இன்றும் நெகிழ்ந்த வசு “எனக்கு நீங்க சொல்றது புரியுதுங்க. ஆனா அண்ணா இப்படி ஆகவும் நாம தானே காரணம். அப்போ அவர் என்ன சொன்னாலும் நாம ஏத்துக்கிட்டி தானே ஆகனும்.
     அதுமட்டும் இல்லாம இப்போ தான் அனுக்கு கல்யாணம் ஆச்சு. நாம இங்க இருந்து கிளம்பிட்டோம்னா அண்ணா அண்ணி தனியா இருப்பாங்களே. அவங்களும் பாவம் தானேங்க” என்றார் நியாயமாக.
     அவர் கூறுவதை கேட்டு விட்டு “புரியுது வசுமா. உன் அண்ணா இப்போ இப்படி இருக்க நாம ஒரு விதத்தில காரணம் அப்படின்றதால தான் நானும் இவ்ளோ நாள் அமைதியா இருக்கேன்மா. ஆனா…” என்று இழுத்தவர்
     “உன்னோட விருப்பம் உன் அண்ணன் கூட இருக்கிறது தான்னா எனக்கும் அதே தான். ஏன்னா நீ வேற நான் வேற இல்லடா” என்று அவரை தோளோடு அணைத்து விடுவித்தார் கணபதி.
     என்னதான் விஸ்வநாதன் திட்டினாலும் வசுந்தரா மேல் அவர் கொள்ளை பாசம் வைத்திருப்பார் என அறிந்தவர் தான் கணபதி. எனவே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தன் கணவனின் இந்த பூரிதலில் பூரித்து போன வசுந்தராவும் மகிழ்ச்சியாக தன் அண்ணன் வீட்டை நோக்கி சென்றார்.
-மீண்டும் வருவான்

Advertisement