Advertisement

     அந்த திருமண மண்டபம் அதிக சலசலப்பு இன்றி காணப்பட்டது. ஏனெனில் ஹர்ஷாவிற்கும் அனுவிற்கும் திருமணம் நடைப்பெற போகிறது. எனவே அனைவரின் பார்வையும் அங்கே மேடையில் அக்னி முன் அமர்ந்திருந்த ஹர்ஷாவின் மேல் தான் விழுந்தது.
     வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக முகத்தில் படர்ந்த  சிரிப்புடன் ஐயர் கூறும் மந்திரத்தை திரும்பி சொல்லிக் கொண்டு மணமகளான அனுவின் வரவிற்காக காத்திருந்தான் ஹர்ஷா.
     சில நிமிடங்கள் கழித்து ஐயர் “பொண்ண அலச்சிட்டு வாங்கோ” என்று கூறிட அனுவை அழைத்து வந்தனர். அழகிய குங்கும நிற புடவையில் பார்லர் பெண்கள் சேர்த்த சில ஒப்பனைகளோடு,
     ஏற்கனவே அழகாய் இருக்கும் அனு மேலும் அழகு கூடி தேவதையாக மேடையை வந்தடைந்தாள். அனுவின் வருகையை உணர்ந்த ஹர்ஷா தன் தலையை திருப்பி அனுவை பார்க்க சில நிமிடங்கள் அவள் அழகில் உறைந்து விட்டான்.
     அந்த கோலி குண்டு கண்களை இதயத்தில் எழுந்த படபடப்பால் முட்ட முட்ட விரித்து முழித்துக் கொண்டே வந்து சேர்ந்தாள் அனு. எப்போதும் போல் அந்த பார்வையில் சொக்கி தான் போனான் ஹர்ஷவர்தன்.
     பார்வையில் மையல் கூட அருகில் அனு அமர்ந்த பின்னும் அவளையே பார்த்து வைக்க அனுவிற்கு வந்த பதற்றம் எல்லாம் எங்கோ ஓடிப்போக அந்த இடத்தை இப்போது வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
     இவர்கள் காதல் நாடகம் மேடையிலே அற்புதமாக அறங்கேற, அதோடு பக்கத்தில் இருந்த அபியும் ஹர்ஷாவிற்கு சலைக்காது அம்முவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
     இதையெல்லாம் மேடையில் ஒரு ஓரத்தில் நின்று பார்த்த விக்ரமிற்கு தான்‌ நெஞ்சில் பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் இருந்தது. அவன் நினைவுகள் நேற்று நடந்த நிகழ்வுகளை எண்ண தொடங்கியது.
     அந்த டம்ளரில் இருந்த பாலை யார் குடிப்பது என போட்டி போட்டுக் கொண்டு இருந்த வேளையில் அபி அதை ஹர்ஷா கையில் திணிக்க, அவன் குடிக்கும் முன் அதை லாவகமாக கைப்பற்றிய விக்ரம் சடாரென தன் வாயில் கவிழ்த்து கொண்டான்.
     விதியோ விக்ரமை பார்த்து ‘யார் பெத்த புள்ளையோ மத்தவங்களுக்கு வர எல்லாத்தையும் இதே ஏத்துக்குதே! பாவம்டா விக்ரம் நீ’ என்று நினைத்தாலும் அதுவும் விக்ரம் என்ன செய்ய போகிறான் என ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தது.
     ஒரே மூச்சில் குடித்து முடித்தவனை முதுகில் ஓங்கி ஒரு போடு போட்ட அபி “ஏய் எருமைமாடே! அது என் அண்ணனுக்கு கொடுத்துவிட்ட பாலு அத்தான். எல்லாத்தையும் நீயே வாயில் ஊத்திக்கிட்ட. சரியான பானை வயிறு போல‌ உனக்கு. இப்ப தானே அத்தான் புல்லா தின்னுட்டு வந்த” என அவனை கிண்டல் செய்தான்.
     “போடா டேய்! நான்‌ எல்லாம் எங்க எப்படி இருக்க வேண்டியவன். என்னை ஒரு டம்ளர் பாலுக்கு இந்த ஓட்டு ஓட்டுறீங்களேடா பாவிகளா” என்று சுகமாய் அலுத்துக் கொண்டாலும் அவனும் அவர்கள் கிண்டலில் இணைந்து கொண்டான்.
     கொஞ்ச நேரம் ஆக ஆக அந்த போதை மாத்திரை தன் வேலையை சிறப்பாய் செய்ய ஆரம்பிக்க விக்ரம் ஒரு மாதிரி நெளிய துவங்கினான்‌. அவன் நெளிவதை கண்ட அபி “என்ன விக்ரம் அத்தான் தூக்கம் எதுவும் வருதா? இந்த நெளி நெளியற” என்றான் அவனின்‌ வித்தியாசமான செய்கையை பார்த்து.
     “அது… அபி உள்ள என்னமோ என்னன்மோ பண்ணுதுடா” என்றவனின் பேச்சு வரவர குலறலாக மாற போதை மருந்து தாக்கத்தில் இன்னும் புலம்ப துவங்கினான் விக்ரம்.
     “டேய் ஹர்ஷா மச்சான்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. யூ ஆர் மை வெரி வெரி பெஸ்ட் பிரண்ட்டா. அப்புறம் என்னோட பெரிய இன்ஸ்பிரேஷன் ரோல் மாடல் எல்லாம் நீதான்.” என்று சத்தாமாக சொல்லியவன் இப்போது குரலை தாழ்த்திக் கொண்டு ஹஸ்கி வாய்சில்
    “அன்ட் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லட்டா. நீ.. நீ.. நீ தான் என்னோட பர்ஸ்ட் கிரஸ்டா” என கூறி நகத்தை வாயில் வைத்து கடிக்க ஹர்ஷா விக்ரமை முறைத்து பார்த்து நின்றான்.
     அருகில் நின்று விக்ரமின் செய்கையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அபியோ தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டான். அவனை முறைத்த ஹர்ஷா “மொதல்ல இவனை பிடிடா. அப்புறம் வீடியோ எடுக்கலாம்” என்று போதையில் தள்ளாடியபடி தன்னை நோக்கி வந்த விக்ரமை ஒரு கையால் பிடிக்க
     விக்ரமோ “மச்சான்! யூ ஆர் மை லவ்டா. நீ என் ஹர்ஷாடா” என கூறி ஹர்ஷாவின் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட இப்போது ஹர்ஷா அதிர்ந்து நின்று விட்டான்.
     ஹர்ஷாவின் மனமோ ‘டேய் இன்னும் என் பொண்டாட்டி கூட எனக்கு ஒரு முத்தம் கொடுத்தது இல்லைடா பாவிபயலே. என்ன காரியம் பண்ணிட்ட’ என எண்ணி அவன் பிடியை விட்டுவிட்டான்.
     அபியோ இதற்கு மேல் தாங்கிது என வயிற்றை பிடித்தபடி சிரிக்க, அவன் சிரிப்பு சத்தத்தில் அவனை நோக்கி திரும்பிய விக்ரம் “டேய் என் சின்ன மச்சான்!” என அழைத்தான்.
     இப்போது அபியோ “என்னாது சின்ன மச்சானா!” என வாயை பிளந்தவன் அருகில் வரும் விக்ரமை கண்டு “ஏய் என்னை பார்த்து எதுக்கு இப்போ வர விக்ரம் அத்தான் வேணாம். என்னால உன் தங்கச்சிக்கு துரோகம் பண்ண முடியாது.
     ஒழுங்கா ஓடி போயிரு. அதான் உன் லவ்வு கிரஸு எல்லாம் என அண்ணன் தானே அவன் அங்க இருக்கான் பாரு நீ அங்க போ இங்க வராதடா” என கத்தியும் விக்ரம் மேலும் முன்னேற
     “ஐயோ..! நான் இல்லை‌. அம்மு குட்டி உன் அத்தானை காப்பாத்துமா” என்று அலறியபடி அறையை விட்டு வெளியே ஓடியே விட்டான். ஆனால் அவன் வீடியோ எடுப்பதை மட்டும் விடவில்லை.
     திறந்த கதவை பார்த்து விக்ரமும் வெளியேறினான். சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் இருந்து சிறிது வெளியே வந்த ஹர்ஷா “ஹையையோ இவன் வெளியே போய்ட்டானே. என்ன ஏழரைய கூட்ட போறானே!” என பயந்தபடி அறையை விட்டு வெளியே வந்தான்.
     ஆனால் அவன் வரும் முன்னே அங்கே எல்லாம் எல்லை மீறி சென்றுவிட்டது. விக்ரம் இப்போது பார்வதியின் கண்ணத்தை பற்றி “என் செல்ல மம்மி! ஐ லவ் யூ…!” என கொஞ்சிக் கொண்டிருந்தான். சுற்றி இவர்கள் குடும்பமே அவனை குழப்பத்துடன் பார்த்திருந்தார்கள்.
     அதை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்டு விக்ரம் அருகில் சென்றான் ஹர்ஷா. இப்போது பார்வதியை விட்டு தன் தங்கை ஆதிரை இருந்த பக்கம் நகர்ந்த விக்ரம் அவள் கையை பிடித்து
     “அம்மு குட்டி எப்படிடா இருக்க?” என்று அன்பொழுக கேட்க இங்கே அபி “ஆமா பத்து வருசம் கழிச்சு பார்க்குறாரு. அதான் நலன் விசாரிக்கிறாரு” என கவுண்டர் கொடுத்தான்.
     அதில் அபியை திரும்பி பார்த்துவிட்டு அம்முவை நோக்கி “அம்முமா உனக்கு அண்ணன் நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன்டா. ஆனா இந்தா இருக்கான் பாரு இந்தா இவன்” என அபியை காட்டி
     “இவன் உனக்கு வேணாம்மா. அவனை விட்டுருடா. இவன் வெரி வெரி பேட் பாய். நான் உனக்கு சூப்பரா வேற பையன பார்க்குறேன் சரியாடா?” என முடித்தான். இங்கே அபியோ விக்ரமை வெறிக் கொண்டு முறைத்து பார்த்தான்.
     அடுத்ததாக “டேடி.. மை நைநா!” என வேதாசலத்தை அவன் நெருங்க, இதற்கு மேல் விட்டால் அவ்வளவு தான் என் எண்ணிய ஹர்ஷா “போதும் மச்சான். வா நாம ரூம்குள்ள போகலாம்” என விக்ரம் கையை பிடித்து இழுக்க “மச்சான்! மை டாடிடா” என்று கூறி பாவமாக பார்த்து வைத்தான்.
     “முடியலடா உன்ன வச்சிக்கிட்டு” என வெளிப்படையாக அலுத்தவன் “அதெல்லாம் உன் டாடி இங்கையே தான் இருப்பாரு. நாம காலையில வந்து பார்க்கலாம்” என கஷ்ட்டப்பட்டு அவனை இழுத்துக் கொண்டு போய் அறையில் தள்ளி கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.
     இங்கே விக்ரம் பண்ண அலம்பலில் ஹர்ஷாவின் குடும்பம் மட்டும் இல்லாது அனுவின் குடும்பத்தாரும் வந்துவிட்டனர்.
     ஹர்ஷா வந்தவுடன் ராஜசேகர் தான் “என்ன கண்ணா இது. விக்ரம்க்கு என்னாச்சு? ஏன் இப்படி நடந்துக்குறான்?” என்று அனைவரின் மனதில் இருந்த கேள்வியை கேட்டு வைத்தார்.
     அதற்கு அபி “ப்பா அத்தான் நல்லா தான் இருந்தான் ப்பா. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் வந்து ஹர்ஷாவுக்கு அத்தை பால் தந்ததா கொடுத்துட்டு போனாரு. அதை தான் அவன் குடிச்சான் ப்பா. அதுக்கு அப்புறம் தான் இப்படி நடந்துக்குறான்” என்று கூறிவிட்டான்.
     அனைவரும் பார்வதியை பார்க்க அவரோ அதிர்ந்து போய் இருந்தவர் “நான் யார்க்கிட்டயும் பால் கொடுத்து விடலையே அபி குட்டி” என்றார். அதில் மற்றவர்கள் அதிர்ந்து விட்டனர்.
     இப்போது சுதாரித்த ராஜசேகர் அந்த பால் கொண்டு வந்த ஆளை அழைத்து வர கூற அபியும் சமையல் அறையில் இருந்து தேடி பிடித்து அந்த நபரை அழைத்து வந்தான்.
     அவரிடம் விசாரித்தால் அவர் அந்த பாலை தந்தது பார்வதி இல்லை வேறு ஒரு நபர் என கூற அவரை யார் என காட்ட பணித்தனர்.
     அவர் மண்டபம் முழுவதும் தேடிய பின் அந்த ஆள் இங்கே எங்கும் இல்லை என கூறி சென்றார். எப்படி இருப்பார். ராம் தான் ஹர்ஷாவிற்கு பதில் விக்ரம் ரகளையில் இறங்கிய போதே மண்டபத்தை காலி செய்திருந்தாரே.
     எனவே அனைவரின் மனதிலும் இப்போது ‘யார் இதை செய்திருப்பார்கள்?’ என்றே ஓடியது. சட்டென எதுவோ யோசித்த ஹர்ஷா தன் அறைக்கு சென்று அந்த பால் டம்ளரை எடுத்து வந்து அபியிடம் தந்து
     “அபி நீ நம்ம ஹாஸ்பிடல் போ. அங்க லேப்ல இந்த டம்ளரை கொடுத்து இதுல என்ன கலந்திருக்குன்னு டெஸ்ட் பண்ண சொல்லுடா. போ” என அபியை அனுப்பியவன் விஸ்வநாதனின் புறம் திரும்பி
     “சாரி மாமா! இதை வேணும்னே யாரே செஞ்சிருக்காங்க. விக்ரம் மேல எந்த தப்பும் இல்லை. சோ அவனை எதுவும் நீங்க நினைச்சிக்காதீங்க” என்றவன் குரல் எங்கே அவர் விக்ரமை தப்பாக நினைத்து விடுவாரோ என்றே தவிப்பாய் வந்தது.
     விஸ்வநாதனும் புரிந்தது போல் “இட்ஸ் ஓகே மாப்பிள்ளை எனக்கு புரியுது. நீங்க அவரை பாருங்க. நான் எதுவும் நினைச்சுக்கில” என்று ஆதரவாய் பேசி சென்றார். அப்போதே ஹர்ஷாவின் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
——————————————–
     எங்கோ முணுமுணுவென பேச்சு சத்தம் கேட்பது போல் இருக்க தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்தான்‌ விக்ரம். தலை எல்லாம் பாரமாக இருக்க “எனக்கு என்னாச்சு. ஏன் இப்படி தலை வலிக்குது?” என தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
     என்ன யோசித்து பார்த்தும் அவனுக்கு இரவு பால் குடித்த வரை தான் நினைவு வந்தது. அப்போது தான் அருகில் இருக்கும் அபியை பார்த்தவன் “அபி நேத்து நைட் என்ன ஆச்சு?” என்று அவனை நோக்கி செல்ல போக,
     விக்ரம் விழித்தது முதல் அவனையே பார்த்திருந்த அபி அவன் தன்னை பார்த்து வர எத்தனிக்கவும் “விக்ரம் அத்தான் எதுவா இருந்தாலும் அங்கையே நின்னு பேசு. கிட்ட வராத” என்றான் பொய்யான பதற்றத்துடன்.
     அவன் செய்கையை புரியாது பார்த்த விக்ரம் “டேய் என்னாச்சுன்னு ஒழுங்கா சொல்லுடா” என்று கத்தினான்.
     அதற்கு அபி “நான் சொல்றதை விட நீ என்ன செஞ்சன்னு பார்த்தா உனக்கு நல்லா புரியும் அத்தான்” என்று உள்ளுக்குள் சிரித்தபடி வெளியே அப்பாவியாக முகத்தை வைத்து தன் கைப்பேசியை எடுத்து விக்ரமிடன் நீட்டினான்.
     அபி கூறியதை கேட்டு குழப்பத்துடன் கைப்பேசியை வாங்கி அந்த வீடியோவை முழுதாய் பார்த்த விக்ரம் அதிர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.‌
     அவன் மனமோ ‘போச்சே! போச்சே! எல்லாம் போச்சே!’ என்று அலறியது.

Advertisement