Advertisement

     ராமிடம் மகிழ்ச்சியாக பேசிய மோகனிடம் அவன் உடன் இருந்த மற்றொரு அடியாள் ‘அப்படி என்ன பிளான். இவ்ளோ சந்தோஷமா இருக்க’ என்று வினவிட மோகன் அகிலன் கூறியவற்றை பகிர்ந்தான்.
     “டேய் என்ன தான் இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்க தான்டா. அந்த டாக்டரு சொன்னதை நாம சரியா செஞ்சா விஸ்வநாதனே இந்த கல்யாணத்தை நிறுத்திருவான். அப்படி ஒரு பிளானுடா” என்று சிலாகித்து சொல்ல ஆரம்பித்தான்.
     அகிலன் “இங்க பாரு அவசரபடாம ரிஷப்ஷன் முடியரவரை வெயிட் பண்ணு. நான் உன்கிட்ட ஒரு டேப்லட் தரேன்.
      அதை மட்டும் பால் இல்ல ஜுஸ்னு ஹர்ஷா குடிக்கிற எதாவது டிரிங்க்ஸ் இல்ல புட்ல கலந்து குடுத்திரு. அப்புறம் தானா கல்யாணம் நின்னிடும்” என்று தன் திட்டத்தை கூறிட மோகன் சற்று பயந்து விட்டான்.
     “ஐயோ டாக்டர். எதாவது விஷ மாத்திரையா. அதை குடிச்சு ஹர்ஷா செத்துட்டா நாம என்ன பண்றது?” என பயந்து போய் வினவினான். அதற்கு அகிலன்
     “ஏய் மோகன்! லூசா நீ. அப்படிலாம் அந்த ஹர்ஷாவ அவ்வளவு ஈசியா சாக விடமாட்டேன். அவன் கொஞ்சம் கொஞ்சமா மனசு நொந்து போகனும். வாழவும் முடியாம சாகவும் முடியாம அனு அனுவா சித்திரவதைய அனுபவிக்கனும்.
     சோ நீ தைரியமா அந்த மாத்திரைய கலந்து குடு. அது விஷ மாத்திரைலா ஒன்னும் இல்ல. அது ஒரு புல் டோஸ் போதை மாத்திரை. அதை எடுத்துக்கிட்டா தன்னால போதை தலைக்கு ஏறிடும். அப்புறம் என்ன பயங்கரமா ரகளை பண்ண ஆரம்பிச்சிருவாங்க.
     அப்புறம் இதை எல்லாம் பார்த்தா விஸ்வநாதன் என்ன பண்ணுவாரு? அந்த ஹர்ஷாவ சும்மாவா விடுவாரு” என நக்கலாக கேட்டவன் அவனே பதிலாக “அவனை கழுத்த பிடிச்சு வெளியே தள்ளி இந்த ஒழுக்கம் இல்லாதவனுக்கு பொண்ணு குடுக்க முடியாதுனு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாரு.
     அந்த ஹர்ஷாவுக்கு விஸ்வநாதன் பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு போல. அப்போ அந்த பொண்ணு அவனுக்கு இல்லைனா அவன் உடம்பு இருந்தும் உயிர் இல்லாம தானே இருப்பான். அது தான் நமக்கும் வேணும்” என்றான்.
     அவன் குரல் அப்பட்டமாக வன்மத்தை காட்டியது.‌ அதை கைப்பேசியின்‌ வழி கேட்ட மோகன் நன்றாகவே உணர்ந்தான். இதை கேட்டே ராமும் அங்கே மண்டபத்தில் ஹர்ஷாவின் திருமணம் நின்று விடும் என மகிழ்ச்சியுடன் இருந்தான்‌.
     இங்கு அகிலன் மனது இதை எல்லாம் பேசியபின் ‘நீ என்ன டாக்டர். உன் ஒழுக்கம் எங்க போச்சுன்னு டையலாக் பேசினியே ஹர்ஷா.
      நாளைக்கு பாரு ஊரே உன்னை ஒழுக்கம் இல்லாதவன்னு சொல்ல போகுது. அதை பார்த்து நான் சந்தோஷப்பட போறேன்டா’ என்று எண்ணி மகிழ்ந்து போனது. அதையே மோகனும் கூறி இன்னும் அகிலனை ஏற்றிவிட்டு குளிர் காய்ந்தான்.
     திருமண மண்டபத்தில் இன்னும் வரவேற்பு நடந்து கொண்டிருக்க விஸ்வநாதன் கணபதியை முறைத்துக் கொண்டே அலைந்திட, கணபதியும் பதிலுக்கு முறைத்தபடி தான் சுற்றினார்‌.
     எப்போதும் விஸ்வநாதன் தான் கோபம் கொண்டு கணபதி மற்றும் வசுந்தாராவை முறைத்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் திரிவார்.
     ஆனால் இப்போது எல்லாம் கணபதியும் எதிர்த்து பேச இருவரும் அடிக்கடி முட்டி கொள்கின்றனர். காரணம் வேறு ஒன்றும் இல்லை கணபதி வசுந்தரா மற்றும் தன் பிள்ளைகளுடன் அவர் சொந்த ஊரான கோயம்புத்தூர்க்கே செல்கிறேன் என கூறுகிறார்.
     விஸ்வநாதன் தான் அவர் தங்கை எங்கும் வர மாட்டார், தன்னோடு இங்கே தான் இருப்பார் என அனுப்ப மறுக்கிறார். இவர்கள் இருவரால் வீட்டில் இருப்பவர்களின் இதயம் தான் தினம் தினம் பக்பக்கென்று அடித்து கொள்கிறது.
     அனுவின் திருமண வேலைகளிலும் அவரை விஸ்வநாதன் சேர்த்துக் கொள்ளாதது மேலும் கணபதியை கோபப்படுத்துக்கிறது. எனவே இப்போது மண்டபத்திலும் இருவரும் முறைத்து பார்க்க வசுந்தரா தான் யாரை சாமாளிக்க என பரிதவித்தார்.
     “என்ன அப்படி பாக்குற, நீ நினைக்கிற எதுவும் நடக்காது. நான் நடக்கவும் விடமாட்டேன். என் தங்கச்சி எப்பவும் என் தங்கச்சி தான். நான் சொல்ற வார்த்தையை மீறமாட்டா. அதனால உன் எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் வேற வேலை இருந்தா பாரு” என்று விஸ்வநாதன் போகிற போக்கில் நக்கலடித்து செல்ல
     கணபதி இங்கே பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்தி நின்றிருந்தார். அவரும் வசுந்தாராவிடம் எவ்வளவோ எடுத்துரைத்து பார்த்தும் அவர் தன் அண்ணனின் பேச்சை மீறவே மாட்டேன் என வசனம் பேசி வருகிறார்.
     இதில் இவர்கள் பிள்ளைகள் இருவரும் ஒருசேர ‘நாங்கள் இந்த ஊரை விட்டு வேறு எங்கும் வர மாட்டோம்’ என கூறிவிட இப்போது கணபதி அதீத கடுப்பில் சுற்றி கொண்டிருக்கிறார்.
     மண்டபத்தில் நுழைந்ததில் இருந்து ராம் சரியான சந்தர்ப்பத்துக்காய் காத்துக் கொண்டிருக்க அவர் அருகில் அமர்ந்திருந்த அவர் மனைவி தேவியோ ஹர்ஷாவை பூரித்துப் போய் பார்த்திருந்தார்.
     “என்னங்க அங்க பாருங்களே! அப்படியே ராஜா மாதிரி இருக்கான்ல. அவன் நம்ப பிள்ளை இல்லைன்னு நீங்க சொன்னாலும் என்னமோ அவனை பார்த்தாலே மனசுக்கு ரொம்ப குளோஸா பீல் ஆகுதுங்க” என்று ஏக்கமாக தேவி பேசி கண் கலங்க
     “ஐயோ! என்னமா இது. சின்ன பிள்ளை மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்க. அதான் நான் நல்லா விசாரிச்சு பார்த்தேனு சொன்னனே. அவன் நம்ம பிள்ளை இல்லடா” என தேவியின் தலையை கோதியவாறே பரிவுடன் கூறினார். அதற்கு மாறாக அவரின் முகம் ஹர்ஷாவையும் விஸ்வநாதனையும் வன்மையாக பார்த்து வைத்தது.
     இங்கே ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு நிலையில் இருக்க ராமின் அடியாள் மோகன் அகிலனை சந்தித்து அவன் தந்த போதை மாத்திரையையும் கையோடு வாங்கி கொண்டு மண்டபத்திற்கு வந்தடைந்தான்‌.
     அதை அவனிடம் இருந்து பெற்ற ராம் ஹர்ஷாவிற்கு கொடுக்க நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பார்த்துக் காத்திருந்தார்.
     “ஹப்பாடா ஒரு வழியா பங்சன் முடிஞ்சதுடா. நின்னு நின்னு எனக்கு கால் வழியே வந்திருச்சு. எப்படா ஸ்டேஞ் விட்டு இறங்குவோம்னு ஆகிருச்சு” என்று அலுத்தப்படி அமர்ந்தது ஹர்ஷா அல்ல விக்ரம்.
     வரவேற்பு முடிந்த பின் உணவை முடித்துக் கொண்டு அறைக்கு இப்போது தான் திரும்பினர் மூவரும். விக்ரம் அலுத்துக் கொள்வதை கேட்ட அபி
     “ஏன் ஹர்ஷா ண்ணா, உனக்கு தானே இப்போ ரிஷப்ஷன் வச்சாங்க. இங்க என்னடான்னா நம்ம விக்ரம் அத்தான் அவருக்கே பங்சன் வச்ச மாதிரி ரொம்ப தான் அலுத்துகுறாரு” என்றான் கிண்டலாக.
     அபி கிண்டல் செய்வதில் கடுப்பான விக்ரம் “நீ எல்லாம் பேசாதடா. இன்னைக்கு உங்க அண்ணனுக்கு பங்கனா இல்ல உனக்கு பங்சனான்னு எனக்கு டௌட்டே வந்திருச்சுடா. நீ என் தங்கச்சிய பார்த்து ஊத்துன ஜொல்லுல மண்டபத்துல வெள்ளம் வராம இருந்ததே அதிசயம் தான்” என்றான் வயிற்றெரிச்சலால்.
     விக்ரமை இப்போது நக்கலாக பார்த்த அபி “ண்ணா உனக்கு இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது தெரியுமா?” என்று கேள்வியாய் இழுக்க “என்னடா நடந்துச்சு?” என்று ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டே கேட்டான்.
     “அது ண்ணா‌. இன்னைக்கு மண்டபத்துல ஒரு ரோமியா நுழைஞ்சிட்டான். அவன் பொண்ணுங்கள பாத்து ஊத்துன ஜொல்லுல அவன் நின்ன இடத்துக்கு பக்கத்துல சின்னதா குளமே வந்திருச்சாம்” என்று கதை போல் அபி இழுத்து கூறியவன் இப்போது விக்ரமை பார்த்து
     “அதுல ஹைலைட் என்னன்னா அவன் தொறத்தி தொறத்தி சைட் அடிச்ச பொண்ணுக்கு ஏற்கனவே குழந்தையே இருந்ததுன பாரேன்” என ஏதோ அதிசயத்தை கண்டது போல் வாயில் கைவைத்து கூறி நிறுத்தினான்.
     விக்ரமிற்கு புரிந்து விட்டது ‘ஐயோ நம்மல தான் சொல்றான்‌. ஆனா இவன் என் தங்கச்சி பின்னாடில சுத்திட்டு இருந்தான். எப்போ நம்மல பார்த்திருப்பான்?
     சரி நைஸா நாம இப்படியே கழண்டுக்க வேண்டியது தான். இன்னும் இங்க இருந்தா அண்ணனும் தம்பியும் நம்மல ஒட்டியே கொண்டுவானுங்க’ என மனதிற்குள் எண்ணிய விக்ரம்
     “மச்சான் அப்பா கூப்பிட்டாருடா. எதோ இம்பார்ட்டன்ரட் வொர்க்‌ இருக்காம். நான் மறந்தே போய்ட்டேன். இப்போ போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்டா” என்று விக்ரம் வெளியே செல்ல எத்தனிக்க
     அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்த ஹர்ஷா “அப்படி என்ன மச்சான் முக்கியமான வேலை மாமா எங்களுக்கு தெரியாம உனக்கு தந்திருக்காரு” என்றான்.
     இப்போது விக்ரம் தான் பாவமாய் முழிக்க ஆரம்பித்தான். ஆனால் அதை எல்லாம் கணக்கில் எடுக்காது அண்ணன் தம்பி இருவரும் இணைந்து ஓட்டி தள்ளி கொண்டிருந்தனர் விக்ரமை. அந்த அறை முழுவதும் இவர்கள் மூவரின் சிரிப்பு சத்தமே நிறைந்திருந்தது.
     அப்போது ஹர்ஷாவின் அறை கதவை யாரோ தட்ட அபி சென்று கதவை திறந்தான். அங்கே புதியதாக ஒரு நபர் நிற்கவும் அவரை யோசைனையாக பார்த்த அபி “நீங்க யாரு?” என்றான்.
     அதற்கு அந்த நபர் சமையல் வேலை செய்பவர் என்று கூறி அபியிடம் ஒரு பால் டம்ப்ளரை நீட்டி “இந்த பாலை கல்யாண மாப்பிள்ளைக்கு தர சொன்னாங்க சார். அதான் எடுத்துட்டு வந்தேன்” என்றார்.
     ‘யார் தர சொல்லியது?’ என்று அபி கேட்டிட அவர் ஒரு திசையில் கை காட்டினார். அங்கே நின்றிருந்ததோ பார்வதி. அவரை கண்ட அபியும் எதுவும் சொல்லாது பாலை வாங்கி கொண்டு உள்ளே வந்தான். ஆனால் அந்த நபர் கை காட்டிய இடத்தில் இருந்ததோ ராம் தான்.
     என்ன அவர் பார்வதியின் அருகில் நின்றிருந்தார். சமையல் நபர் அங்கே ராமை காட்ட அபி தான் தவறாக புரிந்து கொண்டான். ஏன் ராமே அதற்காக தான் முன்னேற்பாடாக பார்வதியின் அருகில் நின்றதும் கூட.
     இது எதுவும் அறியாத அபியோ உள்ளே பாலை ஹர்ஷாவிற்கு எடுத்து சென்று விட்டான். இதை வெளியே இருந்து பார்த்த ராம் மனதிற்குள் குரூரமாய் புன்னகைத்து கொண்டார்.
     “என்னடா அபி பால் கொண்டு வர யாருக்கு இது?” என்று கேள்வியாய் ஹர்ஷா நிறுத்த சிரித்துக் கொண்டே வந்த அபி “ம்ம் கல்யாண மாப்பிள்ளைகாம். எங்க அருமை பார்வதி அத்தை தான் கொடுத்து விட்டுருக்காங்க” என்றான்.
     அதை கேட்ட விக்ரம் “இதென்னடா அநியாயமா இருக்கு. உங்க பார்வதி அத்தைக்கு அப்போ நம்மல பார்ந்தாலாம் மனுஷனா தெரியலையா.‌ ஒரு ஒப்புகாவது நமக்கு எதாவது கொடுத்து விட கூடாது. சரியான ஓரவஞ்சனைடா இது” என்று பொறுமி தள்ளினான்.
     அதற்கு “சரி தான் விக்ரம் அத்தான். நமக்கு ஏன் கொடுத்து விடல?” என்று அபி கேட்க “ஓகே அப்போ இந்த பாலு எனக்கு தான்” என டம்ப்ளரை பிடிங்கிக் கொண்டான் விக்ரம் சிறுப்பிள்ளை போல்.
     “ஹே என்ன தான் இருந்தாலும் என் அண்ணனுக்கு குடிக்க தான் கொடுத்து விட்டாங்க. இதை அவன் தான் குடிக்கனும் ஒழுங்கா இதை அண்ணன்ட தந்திரு விக்ரம் அத்தான்” என இப்போது அந்த டம்ப்ளரை அபி பிடிங்கி கொண்டான்.
     இவர்கள் ரகளையை ஹர்ஷா ரசித்து சிரித்து கொண்டிருக்க சில நிமிடங்கள் அந்த பால் டம்ளர் அபி விக்ரம் கைகளில் மாறி மாறி போக கடைசியாக ஹர்ஷாவின் கைகளில் அது அபியால் திணிக்கப்பட்டது. பின் சில நிமிடங்களில் அது காலியும் ஆகிவிட்டது.
     இங்கே இன்னும் மண்டபத்தில் இருந்த ராம் எப்போதுடா பிரச்சினை ஆரம்பமாகும் என ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்க தொடங்கினார்.
-மீண்டும் வருவான்

Advertisement