Advertisement

    “என்ன தேவிம்மா! ரொம்பவே வெயிட் பண்ண வச்சிட்டனா? சாரிடா பேபி. நான் சீக்கிரம் வரதான் நினைச்சேன் பட் முடியலைடா. இப்போ தான் வரமுடிஞ்சது. என்னை நீ மறக்கலைலடா தேவிம்மா.
     எனக்கு தெரியும் என் பேபி எப்பவும் என்னை மறக்கவே மாட்டா. ஆனா இவ்ளோ நாள் உன்னை வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப சாரிடா!” என்று தன் காதை பிடித்து கொண்டு மன்னிப்பு கேட்டு அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவன்.
     “ராம்! ராம்” என கனவின் தாக்கத்தால் தூக்கத்தில் இருந்து அலறியபடி எழுந்து அமர்ந்தார் தேவி. “என்னம்மா ஆச்சு?” என அருகில் இருந்த ராமும் பதறி எழுந்தார். அவரின் கேள்வியில் திருதிருவென முழித்த தேவி
     “அ.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. ஒரு கனவு. அதான்…” என இழுத்தார். “ஓ.. கெட்ட கனவா? அதான் பயந்து அலறி எழுந்தியா!” என அவரே அதற்கு ஒரு பதிலையும் கூறிக் கொண்டவர்
     “என் கையை பிடிச்சு படுந்துக்கமா. பயம் இருக்காது. கெட்ட கனவும் வரவே வராது” என தன் கையை நீட்டினார் ராம். அதை பிடித்துக் கொண்ட தேவியும் மீண்டும் உறக்கத்திற்கு சென்றார்.
     ஆனால் ராம் தான் அவர் முகத்தை பார்த்து ‘நீ என்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி இருக்கே தேவி?  நீ மறைக்கிற ஒரு விஷயம்னா அது அவன் சம்மந்தப்பட்டதா தானே இருக்கும். ச்சே’ என மனதில் எண்ணி கையை முறுக்கினார்.
     ‘கவலையேபடாத மை டியர்! ரொம்ப சீக்கிரமாவே அந்த பையனை கொன்னு போட்டரேன். அதுக்கு அப்புறம் உனக்கு எப்பவும் நான் மட்டும் தான். அவன் ஞாபகம் வரேவே வராது!’ என கருவிக்கொண்டே படுத்துவிட்டார் ராம். ஆனால் தூக்கம் தான் தூரம் சென்றிருந்தது.
————————————————-
     விஸ்வநாதனின் இல்லமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அனுவின் திருமண நாள் நெருங்கி விடவே வேலைகள் தலைக்கு மேல் இருந்தது‌. முடிந்தளவு எல்லா வேலைகளையும் விஸ்வநாதனே முன்னின்று பார்த்துக் கொண்டார்.
     முடியாத பட்சத்தில் ஒன்று இரண்டு வேலைகளை அவர் தன் தங்கை வசுந்தராவின் மகனான ஆதர்ஷின் மூலம் நடத்திக் கொண்டார். ஆதர்ஷும் அனுவை தன் சொந்த சகோதரியாகவே எண்ணி தான் இந்த திருமண வேலைகளில் தானும் முழு மனதுடன் இசைந்துக் கொடுக்கிறான்.
     அனுவிற்கு தற்போது கைகளுக்கு மருதாணி வைக்கும் வைபவம் நடந்துக் கொண்டிருக்கிறது. அனுவை சுற்றி அமர்ந்து கொண்டிருந்த சொந்தகார இளைஞர்களின் கேலியும் கிண்டலும் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது.
     அதில் சிவந்த அனுவின் முகத்தை தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். சில நிமிடங்கள் கடந்தப் பின்னே அவரை கண்ட மீனாட்சி
     “என்னங்க! புள்ளைய இப்படி வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க?” என்று புன்னகையுடன் வினவினார். அதற்கு அனுவின் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமலே “ம்ம். நம்ம பொண்ணு எவ்ளோ அழகா இருக்கால்ல மீனா.
     அவளை இப்போ தான் குழந்தையா என் கைல தூக்கின மாதிரி இருக்குமா. இப்போ கல்யாணமே பண்ண போறோம். நாளு எவ்ளோ வேகமா ஓடிருச்சுல” என கூறியபடி விழிகளில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டார்.
     “என்னங்க இது நல்ல காரியம் நடக்கப்போற நேரத்தில கண்ணீர் விட்டுட்டு இருக்கீங்க. கண்ணை துடைங்க. நம்ம பொண்ணு எப்பவும்‌ நல்லா சந்தோஷமா தான் இருப்பா” என விஸ்வநாதனின் கரத்தை பற்றி அழுத்திக் கொடுத்தார் ஆறுதலாக.
     “ம்ம்” என்று தலை அசைத்தவரின் பார்வை அனுவின் அருகே அமர்ந்திருந்த வசுந்தராவின் புறம் இப்போது நகர்ந்தது. அங்கே அனுவிற்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார் வசுந்தரா.
     “வசு சாப்பிட்டாளாமா?” என்று வாஞ்சையாய் கேட்டவரிடம் “ம்ம் அண்ணி அப்போவே சாப்பிடாங்க. அண்ணா தான் கரெக்டா டைமுக்கு எல்லாத்தையும் சாப்பிட தந்துடராரே. அப்புறம் என்ன. ஆனாலும் நீங்க ஏங்க உங்க பாசத்தை எல்லாம் மனசுக்குள்ள வச்சிட்டு வெளியே காட்டிக்க மாட்டேங்குறீங்க” என்றார் மீனாட்சி ஆற்றமையுடன்.
     விஸ்வநாதன் திரும்பி மீனாட்சியை பார்த்த பார்வையில் அத்தனை வேதனை. அந்த பார்வை சொன்னது ‘நான் என்ன வேண்டும் என்றா செய்கிறேன்’ என. கேட்ட மீனாட்சிக்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது அவர் பார்வையில்.
     “ஏங்க அந்த மண்டப‌ டெக்கரேஷன் ஆளுங்களுக்கு அட்வான்ஸ் தரனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே. கொடுத்துட்டீங்களா?” என அவரின் பேச்சை திசைத் திருப்ப முயன்றார். அதை விஸ்வநாதனும் உணர்ந்தாரோ என்னவோ
     “நல்ல வேளை ஞாபகப்படுத்தின மீனா. இன்னைக்கு பேமென்ட் பண்ணலைன்னா அவன் மண்டபத்துல வந்து பிரச்சினை பண்ணுவான்‌. நான் போய் அதை பார்க்குறேன்” என கூறி சென்றார்.
    போகும் விஸ்வநாதனை பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மீனாட்சி ‘இவர் எப்பதான் மனசுல இருக்கிறத மனசு விட்டு பேசுவாறோ?’ என நினைத்தவாறு நகர்ந்து சென்றார்.
     இங்கே அனுவை சுற்றி இருந்த அனைவரும் அவளை நன்றாக கிண்டல் செய்து அவளின் கண்ணத்தை சிவக்க வைத்துக் கொண்டிருந்தனர்‌. “அத்தை போதும் த்தை. வயிறு புல்” என்று வசுந்தராவிடம் உணவை அனு மறுக்க அவர் “அவ்ளோதான் இன்னும் ஒரு வாய்” என அனைத்து உணவையும் ஊட்டி முடித்தார்.
     “ஹே ஷரா! இதையெல்லாம் இங்கவே நல்லா அனுபவிச்சுக்கோ. அங்க உனக்கு உன் ஹப்பிய தான் இனிமே பார்த்துக்க நேரம் இருக்கும்” என ஒரு பெண் கிண்டல் செய்யவே
      “ஏ..‌ என்ன விஜி இப்படி சொல்லிட்ட. நம்ம ஷராவுக்கு அவ ஹப்பியே ஊட்டி விடுவாரு. இவ அவருக்கு ஊட்டி விடுவா. அப்படியே அவளை சும்மா அப்படி கைல வச்சு பாத்துக்க போறாரு பாரேன்” என கூறி கண்ணடித்தாள் இன்னொரு பெண்.
     “வாலு பொண்ணுங்க” என அந்த பெண்களின் காதை விளையாட்டாய் திருகிய வசுந்தரா தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார். அந்த நேரம் அனுவின் கைப்பேசி சத்தம் செய்யவே அந்த விஜி என்று அழைக்கப்பட்ட பெண் கைப்பேசியை வேகமாக தன் கையில் எடுத்தாள்.
     அழைப்பு ஹர்ஷாவிடம் இருந்து தான் வந்திருந்தது. “ஹே ஷரா உன் ஹப்பி தான்டா” என்ற அந்த பெண் அனு வேண்டாம் வேண்டாம் என மறுத்தும் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு விட்டாள்.
     அங்கே அழைத்த ஹர்ஷாவும் பேசுவது அனுவென நம்பி “அனு குட்டி. என்னடா‌ செய்ற?” என்றான் காதலாக. அதை கேட்ட அந்த பெண்கள் வாயை கையால் மூடிக்கொண்டு சிரித்தவாறு பேசு என சைகை செய்தனர்.
     “அ.. அது மெஹந்தி! நான் என் சொந்தகார பொண்ணுங்க எல்லாரும் வச்சிட்டு இங்கே பேசிட்டு உக்காந்திருக்கோம் ஹர்ஷா” என திணறியவாறு பேசி ஹர்ஷாவிற்கு லேசாக ஹின்ட் கொடுத்தாள் அனு.
     அனு திணறவும் அதை புரிந்து கொண்ட ஹர்ஷா “ஓஓ.. ஓகேமா! தென் யூ கேரியான். நான் அப்புறம் கால் பண்றேன். அன்ட் எல்லாரையும் நான் கேட்டேன்னும் சொல்லிடு” என கூறி வைத்து விட்டான்.
     ஹர்ஷா அழைக்கவும் பெரிதாக இருவரையும் கிண்டல் செய்யலாம் என எண்ணிய அந்த பெண்களுக்கு புஸ் என்று ஆனது. “போடி! எதுக்குடி நாங்க உன் கூட இருக்கோம்னு சொன்ன. அண்ணா வச்சிட்டாங்க பாரு” என்றாள் பொய் கோபத்துடன்‌.
     “எதுக்குமா நான் பேசனும். என்னையும் அவரையும் வச்சு கிண்டல் பண்றதுக்கா? அதான் வச்சிட்டேன்” என்றாள் அனு உசாராக.
     “அடியே எங்களுக்கு வந்த ஒரு நல்லா என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆக வச்சிட்டியே. ச்சே அண்ணா பேசிருந்தா உங்க ரெண்டு பேரையும் வச்சு ஓட்டிருக்கலாம். நல்ல சீன இப்படி பாழாக்கிட்டியே அனு” வருத்தம் போல் அவளிடம் மேலும் வம்பு வளர்த்தனர் அந்த பெண்கள்.
     “ஹய்யடா! உங்க என்டர்டெயின்மென்ட்குலா என்னால கன்டென்ட் தரமுடியாதுபா. நான் கிளம்பறேன் ஆள விடுங்க” என அனு அடித்து பிடித்து எழுந்து கைப்பேசியுடன் தன் அறையை தஞ்சம் அடைந்தாள். அவள் சென்ற வேகத்தை பார்த்து வெளிய இருந்தவர்கள் சிரித்துக் கொண்டனர்.
     அறையின் உள்ளே வந்த அனு ஹர்ஷாவிற்கு அழைத்தாள். “ஹே அனுமா! என்னடி இப்பதான் பிசின்னு சொன்ன. அதுக்குள்ள கால் பண்ணிட்ட. எதாவது கேக்கனுமா?” என்றான் படபடவென.
     “பிசிலா இல்லை ஹர்ஷா. நீங்க கால் பண்ணப்ப என் ரிலேட்டிவ் பொண்ணுங்க போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டாங்க. அதான் அப்படி சொன்னேன். இப்ப தான் போனை பிடிங்கீட்டு ரூம் உள்ள வந்தேன்” என்று நடந்ததை அப்படியே ஒப்பித்தாள் அனு.
     “ஓகே ஓகே! அதான் பிசின்னு சொல்லிட்டியா. சரிடா பேபி கைல மெஹந்தி போட்டுருக்காங்கனு சொன்னியே, அதை பாக்கனும்டி வீடியோ கால் வா” என்று கூறி வைத்துவிட்டான்‌.
     ‘வீடியோ கால் பேச இவருக்கு இது ஒரு சாக்கு! சரியான கேடி’ என முனகியவாறே அவன் அழைப்பை ஏற்றாள். அனுவின் வாய் ‘கேடி’ என அசைவதை பார்த்துவிட்ட ஹர்ஷா “குட்டிம்மா என்னடி முனகுற?” என்றான் விழிகளை கூர்மையாக்கி.
     “ஐயையோ பார்த்துட்டாரா! சொன்னா திட்டுவாறோ?’ என எண்ணியவள் “அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சும்மா தான்” என மழுப்ப பார்க்க “மழுப்பாதடி நீ கடைசியா கேடின்னு எதோ சொன்ன. யாரை சொன்ன?” என்று பாயின்டை பிடித்தான் ஹர்ஷா.
     “அதெல்லாம் நான் ஒன்னும் சொல்லலையே.‌ அதைவிடுங்க நீங்க எதுக்கு சும்மா சும்மா வீடியோ கால்க்கு வர சொல்றீங்க. இன்னும் டூ டேஸ்ல மேரேஜ். வீடு புல்லா ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க. எனக்கு தனியா உக்கார கூட டைம் தரமாட்டேங்குறாங்க. இதுல நீங்க வேற வீடியோ கால் பண்ணா எப்படிப்பா” என்றாள் அனு பாவமாக.
     அனுவின் பாவமான முகத்தை பார்த்து கொண்டே “என்னால உன் முகத்தை பாக்காம இருக்க முடியலைடா பேபி. அதான் உனக்கு வீடியோ கால் பண்றேன். ஆனா நீ ரொம்ப பண்றடி.
     போ போய் அந்த உன் ரிலேட்டிவ் பொண்ணுங்களையே கட்டிட்டு அழு. என்கிட்ட அப்படி ஒன்னும் நீ கஷ்டபட்டு பேச வேணாம்டி. நான் வைக்கிறேன்” என கோவம் போல் ஹர்ஷா பேசி வைக்க போக
     “ஐயோ ஹர்ஷா சாரி சாரிபா! நான் தெரியாம சொல்லிட்டேன். இனிமே இப்படி பண்ணமாட்டேன். பிளீஸ் பேசுங்களே!” என்றாள் வேகமாக. அனுவின் முகத்தில் வழியும் பாவத்தை ரசித்துக் கொண்டே “என்ன செல்லம் பயந்துட்டியா. சும்மா உன்னை கிண்டல் பண்ணுனேன்டி” என்று கண்ணடித்து சிரித்தான் ஹர்ஷா.
     “என்ன கிண்டல் செஞ்சீங்களா? போங்க போங்க எப்பவும் இதே வேலையா போச்சு உங்களுக்கு” என்று சிணுங்கினாள் அனு. “ஓகே பேபி உன் கைய கேமரா கிட்ட காட்டு. மெஹந்தி எப்படி சிவந்திருக்குன்னு நானும் பார்க்குறேன்” என கேட்க அனுவும் தன் கையை தூக்கி காட்டினாள்.
      அனுவின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தது. அதை கைப்பேசி வழியாகவே ரசித்த ஹர்ஷா “ரொம்ப அழகா இருக்குடி குட்டிம்மா” என்றான் ரசனையான பார்வையில்.
     அந்த பார்வை அனுவை ஏதோ செய்ய “பிளீஸ் அப்படி பார்க்காதீங்க” என்று சிணுங்கினாள் அனு. அதற்கு “சிணுங்காத செல்லம் அப்புறம் நான் சொல்லவந்தத மறந்துடுவேன்” என ஹர்ஷா எதோ ஞாபகம் வந்தது போல் கூறவும் ‘என்ன’ என பார்த்தாள் அனு.
     “அது வேற ஒன்னும் இல்லடா. நான் முன்னையே சொல்லனும்னு நினைச்சேன். உன் முகத்தை பார்த்து எல்லாத்தையும் மறந்துட்டேன் டி. சரி நான் என்ன கேக்கனும்னு வந்தன்னா நம்ம ஹனிமூன் டிரிப் எங்க போகலாம்னு தான்.
     உனக்கு எதாவது ஆசை இருக்கா? சொன்னன்னா நான் டிக்கெட்ஸ் புக் பண்ணிடுவேன். சொல்லு எங்க போலாம்?” என ஹர்ஷா அனுவிடம் கேடட்வுடம் அவள் முகம் நன்கு சிவந்து விட்டது.
     “இ.. இதெல்லாம் எதுக்கு ஹர்ஷா என்கிட்ட கேக்குறீங்க” என்று அனு திணறிட “நீ தானே என் பொண்டாட்டி. உன்கிட்ட கேக்காம வேற யாருட்டடி கேக்குறது” என ஹர்ஷா பேச பேச இன்னும் வெட்கி சிவந்தாள் அனு.
     “நீ.‌. நீங்களே ஒரு பிளேஸ டி.. டிசைட் பண்ணுங்க” என்றாள் சிறு குரலில் அனு‌. அவள் முக சிவப்பை ரசித்து படி “அப்படியா செல்லம்! அப்போ எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்” என கூறி கண்ணை சிமிட்டி சிரித்தான் ஹர்ஷா.
     “சரிடா பேபி. நான் வைக்கிறேன். நாளைக்கு ரிஷப்ஷன்ல மீட் பண்ணலாம் பாய்டி. உம்மா…” என கடைசியாக அவளை இன்னும் சிவக்க வைத்தே கைப்பேசியை அணைத்தான் ஹர்ஷா. ஹர்ஷாவோடு பேசிய வார்த்தைகளை மனதில் சுமந்து கொண்டே அனு படுக்கையில் விழுந்தாள்.
     இரு நெஞ்சம் இங்கே மகிழ்ச்சியில் திளைத்து திருமண நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்க, அங்கோ ராம் ஹர்ஷாவை வீழ்த்த ஒரு பெரிய திட்டத்தோடு அவனின் திருமண நாளை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.
-மீண்டும் வருவான்

Advertisement