Advertisement

     தன்னை பார்க்க வந்த கடைசி நோயாளியை பார்த்து முடித்த அகிலன் தன் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
     டாக்டர் அகிலன் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹர்ஷாவின் மருத்துவனையில் இருந்து வெளியே வந்த சில நாட்கள் பின்னர் இந்த புது மருத்துவமனையில் சேர்ந்து கொண்டான்.
     அந்நேரம் அலறியது அவன் கைப்பேசி. “ஹலோ! டாக்டர் அகிலன் ஹியர்!” என்றான் அகிலன் நடந்துக் கொண்டே. அந்த புறம் மௌனமே நீடித்திட “ப்ச்! யாருங்க அது. போன் பண்ணீட்டு பேசாம இருக்கீங்க” என்று கடுகடுத்தான்.
     அப்போதும் எதிர்ப்புறம் அமைதி நீடிக்கவே கோபமாக அழைப்பை அணைக்க போக “டாக்டர். அகிலன் உங்கள அவமானபடுத்தின ஹர்ஷவர்தனை பழிவாங்க நல்ல ஒரு சான்ஸ் வந்திருக்கு. நான் சொல்றத கேட்டீங்கனா அவனை சாச்சிடலாம். என்ன சொல்றீங்க!” என்றது அக்குரல்.
     முதலில் அகிலனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. “என்னங்க உலறீட்டு இருக்கீங்க. நீங்க யாரு அதை பர்ஸ்ட் சொல்லுங்க” என்றான் கடுமையாக.
     “நான் யாருன்றது முக்கியமில்லை அகிலன்‌. ஹர்ஷவர்தன் உங்களை அவமானபடுத்தினது உண்மை தானே?” என்று கேள்வியாக இழுக்க அகிலன் கேட்டுக்கொண்டானே ஒழிய எதுவும் பேசினால் இல்லை.
     “உங்களை அசிங்கப்படுத்தின அந்த ஹர்ஷவர்தன ஏதாவது செய்யனும்னு உங்க மனசில கோபம் இருக்கு தானே! அதை முதல்ல சொல்லுங்க” என்றவரின் குரலில் இருந்த வன்மம் கேட்போரை பயக்க வைக்கும் வண்ணம் இருந்தது.
     ஆனால் அகிலன் வாயை திறந்து என்னவென்று கேட்கவில்லை. “என்ன டாக்டர் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க. ஓஓ‌… புரியுது புரியுது. திடீர்னு ஒருத்தன் போன் பண்ணி இப்படி பேசுனா உங்களுக்கு எதுவும் தோனாது தான்.
     சோ உங்களுக்கு வேணும்ற அளவு நல்லா யோசிங்க. ஆனா அவனை பழிவாங்கனும்னு நினைச்சீங்கனா உடனே என்னை கான்டாக்ட் பண்ணுங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா உதவி பண்ணுவேன். இதே நம்பர்க்கே கால் பண்ணுங்க. சரி நான் வச்சிடவா டாக்டர்!” என்று அகிலன் பதிலை எதிர்ப்பாராது வைத்துவிட்டது எதிர்புறம்‌.
     அகிலனுக்கு ‘என்னடா இது’ என்றாகிவிட்டது. ஆனால் அதே நேரம் அவனுக்கு ஹர்ஷாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஒரு மூலையில் இருந்தது என்பதும் உண்மையே!
     ‘ம்ம் இந்த ஹர்ஷா ஊர் பூரா பகை சம்பாதிச்சு வச்சிருப்பான் போலையே. நமக்கு என்ன வந்தது. இதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று எண்ணியபடி வீட்டிற்கு நடையை கட்டினான்.
————————————————-
     “ஐயோ அத்தை! முடியலை பிளீஸ் விட்டுடுங்க. என்ன பார்த்தா பாவமா இல்லையா. இந்த ஸ்வீட் எல்லாத்தையும் எடுத்திருங்களே அத்தை” என்று பார்வதியிடம் கெஞ்சி கொண்டிருந்தான் ஹர்ஷா.
     “ஹர்ஷா குட்டி இலைல வச்சதை எடுக்க கூடாதுடா கண்ணா. இதை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டிருடா” என வாஞ்சையாய் அவன் தலையை தடவி சென்றார்.
     இன்று ஹர்ஷாவின் நலக்கு நிகழ்ச்சி. அதில் தான் ஹர்ஷாவை உண்ண வைத்தே அவன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
     இதையெல்லாம் அருகில் அமர்ந்து பார்த்த விக்ரம் “ஹாஹாஹா மச்சான். இந்த மாதிரி நலங்கு எல்லாம் வாழ்க்கைல ஒரு முறை தான் வைப்பாங்க. சோ எஞ்சாய்!” என்றான்‌.
     அவனை பாவமாக பார்த்த ஹர்ஷா “அதுக்கு இப்படியாடா சாப்பிட வச்சே கொல்லுறது” என்றான். ஹர்ஷாவின் காதை நோக்கி குனிந்த விக்ரம் “மச்சான்! இப்பவே நல்லா சாப்டு எனர்ஜி ஏத்திக்கோ. ஆப்டர் மேரேஜ் எல்லா எனர்ஜியும் தேவைப்படும்” என்று கூறி விசமமாக கண் அடித்தான்.
     விக்ரம் முதுகில் நான்கு அடி வைத்த ஹர்ஷா “உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சுடா. உன் வாயை அடக்க ஒருத்தி வரதான் போறா பாரு. அவக்கிட்ட நீ சிக்கி சிங்கி அடிக்க போறத நான் பார்க்க தானே போறேன்.
     அப்போ நான் பேசிக்கிறேன்டா உன்கிட்ட. இது என் சாபம்டா இந்தா பிடி!” என அவனை வாரினான். இதை கேட்ட அபியும் “ஆமாமா விக்ரம் அத்தான்! உனக்கு வரப்போற எங்க சிஸ்டர் சும்மா ஜாக்கி சான் சிஸ்டர் மாதிரி உன்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிறதை நாங்களும் பார்க்க தானே போறோம்” என்றான் சிரித்தபடியே.
“அடேய் பப்பல்லோ மண்டையாஸ்! ஏன்டா ஏன்டா இப்படி சாபம்லாம் தரீங்க. என்னை பார்த்த பாவமா இல்லையா” என அப்பாவியாக வினவ
     அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த ஹர்ஷாவும் அபியும் “இல்லை” என கோரசாக கூற “கலிகாலம்டா! கடவுளே என்னை மாதிரி அப்பாவி இந்த விஷக் கிருமிகளுக்கு மத்தியில‌ உயிரோட இருக்கிறதே பெரிய சாதனை தான் போல‌. ம்ஹூம்” என வானத்தை பார்த்து கையை ஏந்தி புலம்பிட,
     அந்த இடைவெளியில் ஹர்ஷா தன் இலையில் இருந்த இனிப்புகள் உணவு என கொஞ்சத்தை எடுத்து விக்ரம் கவனிக்காத வண்ணம் அவன் இலையில் வைத்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் சாப்பிட்டு எழுந்து விட்டான்.
     “ஆத்தா! மாரியாத்தா! இந்த பக்கி‌ பைலுங்க சாபம் எல்லாம் என்னைய எதுவும் பண்ணவிடாம உன் புள்ளைய பார்த்துக்க ஆத்தா!” என ஒருவழியாக வாய்விட்டு புலம்பி தள்ளிவிட்டு இலையை பார்த்தவன் திகைத்தான்.
     “எம்மோவ்!” என ஹைப்பிச்சில் கத்தி பார்வதியை அழைத்து “எதுக்கு மறுபடியும் சாப்பாடு ஸ்வீட் எல்லாம் வச்சிருக்கீங்க. என்னை கேட்டுட்டு வைக்க மாட்டிங்கிளா” என கத்த அவனை புரியாது பார்த்த பார்வதி “டேய் மடையா! நான் எங்கடா வச்சேன். கேனத்தனமா பேசிக்கிட்டு. சாப்பிட்டு இடத்தை காலி பண்ணுடா முதல்ல” என திட்டிவிட்டு சென்றார்.
     அதை கேட்டு “என்னடா இது நமக்கு வந்த சோதனை!” என முழித்துக் கொண்டு சாப்பிட முடியாமல் சாப்பிட்டு எழுந்து சென்றான் விக்ரம்‌. இதையெல்லாம் பார்த்திருந்த அபியும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
     ஹர்ஷாவின் முகத்தில் இருந்த சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்த அருணாசலம் “நீ எப்பவும் இதே சிரிப்போட நூறு வயசு இருக்கனும் குட்டி” என்றிட “நூறு வயசு போதுமா தாத்தா நான் ஒரு இருநூறு வயசுல பிளான் பண்ணிருக்கேன்” என கிண்டல் செய்ய
     “அப்போ நானு” என தலையை நீட்டினான் அபி. அவன் தலையிலும் கைவைக்க “நீயும் சந்தோஷமா நூறு வயசு வாழ்வடா கண்ணா” இதை தானே தாத்தா சொல்ல போறீங்க என அருணாசலத்தின் குரலில் பேசி அவரை பார்த்து கண்ணடித்தான் அபி.
     இருவரின் கிண்டலை கண்டு அபி ஹர்ஷாவின் காதை திருகிய ராஜசேகர் “சேட்டை கூடிப் போச்சுல இரண்டு பேருக்கும். தாத்தாவையே கிண்டல் செய்றீங்க. அவர் என் அப்பாடா நானே அவரை கிண்டல் செஞ்சது இல்லை‌. நீங்க பண்றீங்களா” என்ற அவரின் கூற்றை கேட்ட பார்வதி
     “என்ன ண்ணா! பசங்களோட சேந்து நீயும் இப்படி ஆகிட்ட. இப்ப பசங்க அப்பாவ கிண்டல் பண்ணது தப்புங்கிறியா இல்ல நீ கிண்டலே பண்ணலைன்னு வருத்தப்படுறியா?” என்றார் மேலும் வம்பிழுக்கும் பொருட்டு.
     “அத்தை ரொம்ப பீல் பண்ணுனீங்கனா நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க. ஏன் எங்க அப்பாவ வாருறீங்க” என அவரையும் சேர்த்து வம்பு செய்துக் கொண்டிருந்தான் அபி.
     இப்படி ஹர்ஷாவின் வீடு மகிழ்ச்சி நிறைந்து காணப்பட்டது. தன் குடும்பத்தினரின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மனநிறைவுடன் பார்த்த அருணாசலம் இவர்கள் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.
     ஆனால் அதற்கு இடையூறு விளைவிக்கும் முனைப்பில் ஒருவன் அங்கே தீவிரமாக திட்டம் தீ‌ட்டிக் கொண்டிருப்பதை அறியாமல் போயினர் அருணாசலம் குடும்பத்தார்.
————————————————
     “என்னடா ஆச்சு?” என்று உறுமலாக சீறினார் ராம் தன் முன்னால் நின்று கையை பிசைந்து நின்றிருந்த இரண்டு தடியன்களை கண்டு.
     “அது ண்ணே! அது…” என அந்த இருவரும் திணற “என்னன்னு சொல்லி தொலைங்கடா” என்று மீண்டும் சீறினார்‌. அதை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கிய அவர்கள் இருவரும் “அது அந்த டாக்டர் இன்னும் போன் பண்ணல ண்ணே” என்றனர் திணறலாக.
     “என்னடா இன்னுமா அவன் போன் பண்ணலை. நீங்க ஒழுங்கா பேசுனீங்களா இல்லையாடா?” என கேட்க “என்ன ண்ணே இப்படி சொல்லிட்டீங்க. நாங்க பேசுன பேச்சுக்கு அவன் இன்னேரம் உங்க கூட கூட்டணி வச்சிருக்கனும்.
     ஏன் இன்னும் போன் போடலைன்னு தான் ஒன்னும் விளங்க மாட்டேங்குது” என்ற அந்த இருவரில் ஒருவன் கூறி தாங்கள் பேசியதை அப்படியே சொல்லிவிட்டான்.
     அவர்கள் கூறியதை கேட்டு யோசித்த ராம் ‘ஏன் இன்னும் அவன் போன் பண்ணலை. அவனை வச்சு காய நகத்தலான்னு எல்லா பிளானையும் போட்டா இப்படி ஆகுதே!
     கல்யாண நாள் வேற நெருங்குது. என்ன பண்ண போற ராம். அந்த ஹர்ஷா தனியா இருக்கும் போதே அவனை ஒன்னும் பண்ண முடியலை. இதுல அந்த விஸ்வநாதன் கூட சேர்ந்துட்டா அவ்ளோ தானே.
     இப்ப என்ன பண்றது. ஒன்னும் புரியலையே. ச்சோ!’ என்று கடுப்பில் சுவற்றில் குத்திக் கொண்டான். ராம் ஹர்ஷா அவன் நினைத்த நபரின் சாயலை கொண்டிருந்ததாலே முதலில் கொல்ல முயன்றார்.
     ஆனால் என்று ஹர்ஷா விஸ்வநாதனின் மருமகனாக ஆகப் போகின்றான் என அறிந்தாரோ அப்போதில் இருந்து கொஞ்சம் அடக்கி தான் வாசித்தார். ஏன் அவனை இனி தொடக்கூடுது என்று கூட முடிவு எடுத்தார்.
     ஆனாலும் ஹர்ஷாவிற்கும் அவர் நினைத்த நபருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது என அவரின் உள்மனம் அடித்து கூறிவிட சில விஷயங்களை தேடி பிடித்து ஆராய ஆரம்பித்தார்.
     தன் செல்வாக்கை பயன்படுத்தி ஹர்ஷா யாரென அறிய முயன்றார். ஆனால் அவருக்கு அவ்வளவு சுலபமாக எந்த தகவலும் கிட்டிவிடவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக அலைந்து திரிந்து ஹர்ஷாவின் பூர்விகத்தை கண்டறிந்து விட்டார் ராம்.
     அதில் கிடைத்த விடை என்னமோ அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடையாக இல்லாது பெரும் வன்மத்தை கிளப்பிவிட போதுமானதாக இருந்ததால் மீண்டும் ஹர்ஷாவை கொல்லும் நோக்கில் இறங்கிவிட்டார் ராம்.
     அதன்பின்னர் ஹர்ஷாவின் வாழ்க்கை அன்றாடம் என முழு விவரங்களையும் திரட்டியவர் ஹர்ஷாவிற்கும் அகிலனுக்குமான சண்டையை நுகர்ந்துவிட
     அந்த அகிலனை வைத்தே ஹர்ஷாவை கொல்லும் தன் திட்டத்தை தீட்டினார் ராம். அதன் முதல் படியாக தன் ஆட்களை வைத்து அகிலனிடம் பேசி தன்னோடு சேர்ந்து ஹர்ஷாவை வீழ்த்த அழைப்பு விடுத்தார்.
     தனக்கான முழு ஆதாயத்தை தான் மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்திட்டார் ராம். ஆம் ஹர்ஷாவை கொல்ல போய் அதில் இவர் சிக்கி விட்டால் என்ன செய்வது. இதில் விஸ்வநாதன் இடையில் வருவது வேறு அவர் மூலையை சூடேற்றி விடுகிறது.
     எனவே நன்கு யோசித்து பின் தனக்கு பதிலாய் ஒரு பலியாடை மாட்டிவிடவே ஹர்ஷாவின் எதிரிகள் யாரென விசாரிக்க அகிலனின் விஷயம் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. எனவே தான் அகிலனை தேர்வு செய்தார்.
     எங்கே அந்த பிளானில் ஓட்டை விழுந்திடுமோ என்னும் பதட்டத்தில் தான் இப்போது இந்த குதி குதித்து கொண்டிருக்கிறார் ராம். அந்த நேரம் சரியாக அடியாள் ஒருவன் கைப்பேசி அடித்து அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

———————————————————————–

Advertisement