Advertisement

       விக்ரமும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்த நேரம் அங்கே வந்த அருணாசலம் “என்ன பசங்கலா, என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்றவாறு அமர்ந்தார்.
     “அது ஒன்னும் இல்லை தாத்தா! நம்ம அபி குட்டி அப்படியே எங்க அப்பா மாதிரின்னு சொல்லிட்டு இருந்தேன்” என்ற ஹர்ஷா அங்கே அம்முவோடு சீரியசாக கடலை வறுத்துக் கொண்டிருந்த அபியை பார்த்து கூறினான். அதை கண்ட ராஜசேகர் “இதுக்கு ஏன்டா என்னை இழுக்குற?” என்றார் பாவம் போல்.
     “இல்லையா பின்ன. உங்களை மாதிரி தான் ப்பா அபி‌. உங்க லவ் ஜீன் அப்படியே அவனுக்கு இருக்கு. சும்மா எப்படி பெர்பார்ம் பண்றான் பாருங்க” என்று ராஜசேகரையும் சேர்த்து வம்பிழுத்து வைத்தான் அவன்.
     அவன் பேச்சை கேட்ட வேதாசலம் கூட வாய்க்குள் சிரித்துக் கொண்டார். எதையோ சிந்தித்த ஹர்ஷா “ஆமா ப்பா! நான் யார் மாதிரி. கண்டிப்பா உங்களை மாதிரி இல்லை. அது எனக்கே தெரியும். ஒருவேளை அம்மா மாதிரியா?” என்றான். ராஜசேகர் முகம் சட்டென பதற்றம் கொண்டது ஹர்ஷாவின் இந்த கேள்வியில்.
     ஆனால் ஹர்ஷாவின் கேள்விக்கு பதில் அருணாசலமிடம் இருந்து வந்தது. “நீ அப்படியே என் அம்மா மாதிரிடா குட்டி! அப்படியே அதே இரக்க சுபாவம், அதே ஆளுமை, அதே உருவம். இப்படி எல்லாமே என் அம்மா தான்டா கண்ணா” என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.
     “அப்போ பாட்டிக்கு அப்புறம் இந்த வீட்ல நான் தானா?” என்றான் சிரிப்புடன். அவன் தலையை தடவிக் கொடுத்த அருணாசலத்தின் எண்ணங்கள் சில வருடங்களுக்கு முன் சென்றது. மனதிலே அந்த காயம் அப்படியே இன்னும் இருப்பதை அவர் யாரிடம் சொல்வார்.
     ‘இல்லடா கண்ணா! உன்ன மாதிரியே. இல்லை இல்ல அவனை மாதிரி தான்டா நீ இருக்க. அவன் தான் என்னை ஏமாத்திட்டு ரொம்ப தூரம் போய்ட்டானே! நீயாவது காலம் பூரா என் கூடவே இருக்கனும்’ என மனதோடு பேசிக்கொண்டார். அனைவரும் இவர்களையே பார்த்திருந்ததில் ராஜசேகரின் பதறிய முகத்தை பார்க்க தவறினர்.
     “என்னை விட்டு எப்பவும் போக மாட்டல்ல ஹர்ஷா குட்டி?” என்று கடைசியாக நினைத்ததை மட்டும் தழுதழுக் குரலில் கேட்டுவிட்டார் அருணாசலம். அவர் குரலில் பதறிய ஹர்ஷா “ஐயோ தாத்தா! என்ன இது. நான் எதுக்கு உங்களை விட்டு போகப் போறேன் சொல்லுங்க. உங்க கூட கடைசி வரைக்கும் நான் இருப்பேன்” என்று அவர் கண்ணத்தை பிடித்து ஆட்டிக் கொண்டே கூறினான் ஹர்ஷா.
     பல வருடங்களுக்கு முன்பாக கேட்ட இதே அர்த்தம் தந்த சொற்கள் தான் நினைவு வந்தது. “ஐயோ! என்ன டார்லிங். உங்களை விட்டுட்டு நான் எங்க போய்டுவேன். நீங்க நினைக்கிற நேரம் சிட்டா பறந்து வந்திடுவேன். உங்க கூட யார் இருந்தாலும் இல்லைனாலும் நான் கடைசி வரை இருப்பேன். இப்ப ஹேப்பியா!!” என்று முத்தம் தந்துவிட்டு புன்னகை முகமாய் கிளம்பி சென்ற அந்த முகம் இன்னும் அவர் கண்ணுக்குள் இருக்கிறதே!
     அந்த எண்ணங்கள் தந்த அழுத்தத்தில் “ராம்!” என முனங்கியவர் ஹர்ஷாவின் கண்ணத்தை தடவியவாறே மயங்கி சரிந்தார் அருணாசலம். வீட்டு நபர்கள் அனைவரும் பதறி போயினர். சரிந்திருந்த அருணாசலத்தை தன் கைகைளில் ஏந்திக் கொள்ள நினைத்த போது தான் ஹர்ஷாவிற்கு தன் கை காயமே ஞாபகம் வந்தது.
     எனவே விக்ரமை தூக்க சொல்ல அந்த மயக்க நிலையிலும் அருணாசலம் ஹர்ஷாவின் கையை இறுக்கமாக பிடித்திருந்தார். அவரை பரிசோதித்த ஹர்ஷா “லோ பிபி தான். கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டார் போல. ஆனா ஏன்னு தான் புரியலை. நாம சாதாரணமா தானே பேசிட்டு இருந்தோம்” என்று விக்ரமை பார்த்து கேட்க அவனும் “எனக்கும் ஒன்னும் புரியல மச்சான்!” என்றான்‌.
     அருணாசலத்திற்கு ஒரு ஊசியை செலுத்திவிட்டு அவரை விட்டு வெளியே வந்து அவரவர் அறையை நோக்கி நகர்ந்தனர்.
     அனைவரும் சென்றபின் ராஜசேகரை அழைத்த பார்வதி “அண்ணா! அப்பா மயங்கறதுக்கு முன்ன என்ன பேர் சொன்னாருன்னு கவனிச்சியா?” என்றாள் பரிதவிப்புடன். “ம்ம்” என்று அவர் தலை அசைக்கவும்
     “அவரு மனசுக்குள்ளையே எல்லாத்தையும் போட்டுட்டு புழுங்கிட்டு இருக்காரு போல ண்ணே‌. நம்மக்கிட்ட கூட சொல்லுல பார்த்தியா?” என்றார் வருத்தமாக.
     “இல்லமா அப்பா நம்ம கஷ்டப்படக் கூடாதுனு நினைச்சி இருக்கலாம். அவரு என்ன நினைக்கிறார்னு அவர் சொன்னா தானே தெரியும். விடுமா பாத்துக்கலாம்” என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றி சென்றார்.
     தன் அறைக்கு வந்த ராஜசேகர் ‘எதுக்கு ராம்னு சொல்லி ஹர்ஷாவை அப்பா கூப்பிட்டாரு? அவன் எப்படி பாட்டி மாதிரி இருக்கான்னு அப்பா சொல்லுறாரு?’ என யோசித்தவர்‌ ஏதோ தோன்ற தன் சிறு வயது ஆல்பம் ஒன்றை அரை மணி நேரம் தேடி எடுத்தார்.
     அதை திறந்து பார்த்தவர் அங்கே தன் அருகே தன் வயதொத்த ஒரு வாலிபன் முகம் முழுவதும் புன்னகை பூசி கம்பீரமாக நின்றிருப்பதை ஆசையாக கண்டார். ஹர்ஷாவின் தற்போதைய புகைப்படம் ஒன்றை கையில் எடுத்தவர் இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்து அதிர்ந்து விட்டார்.
     “இது எப்படி சாத்தியம்?” என குழம்பியவர் மனதில் “ஹர்ஷா என் பையன் மட்டும் தான்” என தோன்றிய கணமே அமைதி கொண்டு படுக்க சென்றார்.
     மயக்கம் தெளிந்து எழுந்த அருணாசலமோ “ராம்! ராம்!” என தன் கையில் இருந்த புகைப்படத்தை கண்டு கண்ணீர் விட, அதில் ஹர்ஷாவை உரித்து வைத்த உருவத்தில் ஒரு வாலிபன் சிரித்துக் கொண்டிருந்தான்.
________________________________________________
      அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நகர ஆரம்பித்தது. ஹர்ஷாவின் திருமணத்தின் வேலைகளும் துவங்கியது. தோளில் உள்ள காயம் ஆறும் பொருட்டு ஹர்ஷா அதிகம் அலையாது விக்ரம் அபியே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர்.
      இதில் ஹர்ஷா வேதாசலத்தோடு சென்று ஏ.சி அலுவகத்தில் ஒரு கம்ப்லைன்ட்டும் கொடுத்து வந்திருந்தான். அவர்கள் ஒருபுறம் ஹர்ஷாவை கொலை செய்ய முயற்சி செய்தது யார் என தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் அறியாமல் ஹர்ஷா தன் தனியார் டிடெக்டிவ் நண்பர் ஒருவரிடம் இதை ஒப்படைத்தும் இருந்தான்.
      மருத்துவமனைக்கு ஹர்ஷா செல்லாத நாட்கள் ராஜசேகர் பொறுப்பெடுக்க ஹர்ஷா முழு ஓய்வில் இருக்கிறான் இப்போது. பார்வதியிடமும் அருணாசலத்திடமும் சின்ன விபத்து என்று மட்டும் சொல்லிட அதற்கே பார்வதி அழுது ஆர்ப்பாட்டம் செய்து திட்டி தீர்த்துவிட்டார் அனைவரையும் ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று.
     அதே நேரம் அவர் மனதில் பல நாட்களாக இந்த திருமணத்தில் இருக்கும் நெருடல் பலமானது. அதற்காக அவர் அனு வந்த நேரம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என எண்ணவில்லை. மாறாக இந்த திருமணம் நடந்தால் இந்த வீட்டில் ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று தான் அஞ்சினார்.
      அருணாசலமும் பதறியவர் அதன்பின் அவனை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை காயம் ஆறும் வரை. இது தான் சமயம் என ஹர்ஷாவிடம் தன் சமையல் யுக்திகளையும் இறக்கி கொண்டிருக்கிறார் பார்வதி.
      ஹர்ஷாவிற்கு வேலையே இல்லாததால் தன் வருங்கால மனைவியோடு தினமும் கடலை வறுக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறான். அதேபோல் குடும்பத்தில் உள்ளவர்கள் தன் மீது கொண்ட பாசம் எப்போதும் போல் இப்போதும் அவனை பூரிக்க தான் வைக்கிறது.
      ஹர்ஷாவின் காயம் ஒரு மாதத்தில் ஆறிவிட நேரே மருத்துவமனை கிளம்ப சென்றவனை அழைத்து “இன்னும் பத்து நாள்ல உனக்கு மேரேஜ். பங்ஷன் முடிஞ்சு பத்து நாள் கழிச்சு நீ ஹாஸ்பிடல் வந்தா போதும். புரியுதா! போ போய் ரெஸ்ட் எடு. இல்லனா என் மருமகக் கிட்ட பேசு. போடா” என்றார் ராஜசேகர்.
     “என்னப்பா நீங்க!” என செல்லமாக அலுத்துக் கொண்டாலும் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வீட்டிலே இருந்துவிட்டான்.
      ஹாலில் அமர்ந்திருந்த ஹர்ஷாவிற்கு போரடிக்க அனுவிற்கு செய்தி அனுப்பும் வேலையை தொடங்கினான். “அனு ஆன்லைன் வாடி!” என செய்தியை அனுப்பிவிட்டு வாட்ஸ்அப் சென்றான்‌.
      “ப்ச்! நான் காலேஜ்ல இருக்கேன் ஹர்ஷா. பிளீஸ்பா அப்புறம் சேட் பண்ணலாம்” என்ற அனுவை “என்னடி இது உனக்கு இன்னுமா ஸ்டடி ஹாலிடே விடலை. டென் டேஸ்ல நமக்கு மேரேஜ், ஆனா கொஞ்சம் டைம் கூட நீ எனக்காக ஸ்பெண்ட் பண்ண மாட்டியா?” என்று கோபம் போல் எமோஜி ஒன்றை தட்டிவிட அனு சேட் செய்ய வந்துவிட்டாள்.
     “நாளைல இருந்து லீவ் தான் ஹர்ஷா. சாரி சாரி!!” என பாவமான எமோஜி ஒன்றை பதிலுக்கு அனுப்ப “ஓகே ஓகே! லீவ் இட்” என்றவன் “அப்புறம் முகத்துக்கு பெயிண்ட் பண்ண போகனும்னு சொன்னியே எப்போ போற?” என்று வழக்கம் போல் வம்பிழுக்க ஆரம்பித்தான்.
     அது என்னவோ அனுவிடம் பேச ஆரம்பித்தால் வம்பிழுக்க தான் வந்தது ஹர்ஷாவிற்கு. “ப்ச்! அது ஃபேசியல். ரொம்ப ஓட்டாதீங்க இன்னும் டென் டேஸ் தான் முகம் பளிச்சுன இருக்க வேண்டாமா?” என்றாள் நியாயமாக.
     “இதைவிட முகத்தை பிரைட் ஆக்க நான் ஒரு ஐடியா சொல்லட்டா?” என்று விஷமமாக கேட்டான். அதை புரியாத அனு “என்ன எதுவும் நேச்சுரல் மெத்தெட் சொல்ல போறீங்களா?” என பதிலுக்கு அப்பாவியாக கேட்டு வைக்க
     “ஆமா ஆமா நேச்சுரல் மெத்தெட் தான் பேபிமா! ஆனா அதுக்கு நான் பக்கத்தில இருக்கனுமே” என்றவனின் பேச்சு இப்போதும் அனுவிற்கு புரியவில்லை. “நீங்க பண்ணிவிட போறீங்களா என்ன? இது கூட உங்களுக்கு தெரியுமா? அப்ப ஓகே நீங்க சொல்லுங்க அதையே பண்ணிடலாம்” என்று ஒரு ஆர்வத்தில் அனுப்பி வைத்து விட்டாள்.
     அதை படித்த ஹர்ஷாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஹையோ!! நீ பேபி தான்டி” என மனதில் நினைத்தவன் “நைட் வீடியோ கால் வா சொல்றேன். இப்போ பாய்” என சேட்டை முடித்துக் கொண்டான்.
     சிரிப்புடன் நிமிர்ந்த ஹர்ஷாவிற்கு தன்னை மூச்சு வாங்க நின்று பார்த்திருந்த விக்ரமை கண்டு திக்கென்றது.”ஏன்டா எருமை! வந்தா கூப்ட மாட்டியா? இப்படி தான் பேய் மாதிரி நின்னு மனுஷன் பிபிய ஏத்துவியா?” என ஏகத்துக்கும் எகிற
     “ஏன்டா கொற மாசத்துல பிறந்த மலை கொரங்கே! இப்படி தான் நின்னு என் அண்ணா ஹார்ட் பீட்ட ஏத்துவியா” என்று ஹர்ஷாவிற்கு பரிந்து பேசி இன்னும் விக்ரமை ஏத்தி விட்டான் அபிமன்யு.
     “அண்ணனுக்கும் தம்பிக்கும் என்னை பார்த்தா எப்படிடா தெரியிது பேக்கு மாதிரியா” என மூச்சு வாங்கியபடி விக்ரம் கேட்க “ஆமா!” என்றான் அபி வேகமாக. “டேய்..! நீ பேசாத.. நீ பேசாத” என்று அபியிடம் பல்லை கடித்தான் விக்ரம்.
     “என்னதான்டா உன் பிரச்சினை சொல்லி தொலை. அதை விட்டுவிட்டு ஏன் கத்திட்டு நிக்கிற” என்ற ஹர்ஷாவிடம் “ஏன்டா பேசமாட்ட! உனக்கு என் தங்கச்சி கிட்ட கடலை போடவே நேரம் பத்துல‌. இதுல என் புலம்பல் உனக்கு கத்துர மாதிரி தான் கேக்கும்” என்று வராத நீரை கண்ணில் இருந்து துடைக்க,
     ‘பெரிய ஆக்டிங் கிங்ன்னு மனசு நினைப்பு! என்னமா நடிக்கிறான். இவன் ஆக்டிங்கு தாங்க முடியலைடா எப்பா!’ என்று மனதில் நினைத்த அபி வெளியில் முறைத்து வைத்தான்.

Advertisement