Advertisement

     அனுக்ஷ்ராவின் நிச்சயத்தில் மாப்பிள்ளை ஹர்ஷா என அறிந்த அந்த தம்பதி மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் அன்று ஹர்ஷாவை துணிக்கடையில் கண்டவர்களே.
     அவர்கள் ராம் மற்றும் தேவி தம்பதி. “என்னங்க நான் அன்னைக்கே சொன்னேன்ல அவன் நம்ம பிள்ளை தான்னு. நீங்க தான் அது வேற யாரோ அப்படின்னீங்க. நாம இத்தனை வருஷம் நினைச்ச மாதிரி நம்ம பையன் சாகலைங்க. அவன் உயிரோட தான் இருக்கான்.
     நீங்க பாத்தீங்கள்ள அவன் அப்படியே அவன் அப்பா மாதிரியே இருக்கான்” என தேவி கூறும் போதே ராமின் முகம் ஒரு நிமிடம் கோபமாக மாறியது. தேவி பார்க்கும் போது நொடியில் அவர் முகம் சாதாரணமாக மாறியது. தேவியே இப்போது மீண்டும் தொடர்ந்தார்.
     “கடவுள் இருக்கார்ங்க. நம்ம இத்தனை வருஷ கஷ்டம் இப்போ தீர போகுது பாருங்க” என்று அவர் தன் போக்கில் பேசிக் கொண்டிருக்க ராம் குறிக்கிட்டார். “இங்க பாருமா இந்த உலகத்துல ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க.
     அதை நீ கேள்விப்பட்டது இல்லையா. அந்த பையன் அருணாச்சலம் ஹாஸ்பிடல்ஸ் எம்.டி.மா. அதுவும் அந்த ராஜசேகரோட பையன். நாம நடந்த எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருந்தோம்.
     கண்டிப்பா அந்த பையன் நம்ம மூத்த பையன் இல்லை. இதை நான் உறுதியா சொல்வேன்‌‌. ஒருவேளை அவன் நம்மளோட பையனா இருந்தா அப்போ இறந்து போன ஒரு குழந்தையை நாம புதைச்சமே அது யாரு?”என்று கேட்டவர்
     “தயவு செஞ்சு புரிஞ்சுக்கோமா. நாம எதாவது பேசி புதுசா எந்த பிரச்சனையும் கொண்டு வரக்கூடாது. ஏனா நம்ம பையன் உயிரோட இல்லை இனி உயிரோட வர போறதும் இல்லை. புரியுதா!” என்றார் சற்று கடுமையாக.
     அவர் கூறுவதில் உள்ள நியாயம் மெதுவாக பிடிபடவே “ம்ம் புரியுதுங்க. நான் இனிமே இதுபோல பேச மாட்டேன். அந்த பையனோட முக சாயல் பார்த்து கொஞ்சம் தடுமாறிட்டேன். எனக்கு இப்போ புரியுதுங்க” என்றார் சோகமான புன்னகையுடன்.
     அவரின் தலையை பரிவாக தடவிய ராம் “உன் ஃபீலிங்ஸ் எனக்கு புரியுதுமா. நம்ம சந்தோஷத்துக்காக நாம மத்தவங்க லைஃப்ல பிராப்ளம் உண்டு பண்ணக் கூடாது இல்லையா. அதான் சொன்னேன்” என்றுவிட்டு “சரிமா ஆபிஸ்ல வேலை இருக்கு நான் கிளம்புறேன்” என சொல்லி கிளம்பிவிட்டார்.
     அங்கிருந்து சென்ற ராம் ஊரை தாண்டி சென்றார். அங்கே அவர் முன் நின்ற சில அடியாட்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தார். “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க. அவனை கொண்ணு புதைக்க சொல்லி தானே கட்டு கட்டா காசை தந்தேன். அவன் எபப்டிடா இப்ப உயிரோட வந்தான்.
     அதுவும் அவன் இனிமே விஸ்வநாதன் வீட்டு மாப்பிள்ளை. அவனுக்கு நடந்தது தெரிஞ்சா அந்த டாக்டர் பையலை தொட கூட முடியாது. அவன் மேல கை வைக்க அந்த விஸ்வநாதன் விடுவானா. நம்ம எல்லாரையும் குழி தோண்டி புதைச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.
     ஏன்டா என்னத்த பண்ணி வச்சு தொலைச்சீங்க” என்று மூச்சு வாங்க பேசிக் கொண்டிருந்தார் ராம். ராம் அன்று துணிக்கடையில் என்ன தான் ஹர்ஷாவை பார்க்காதது போல் நடித்திருந்தாலும் அன்று ஹர்ஷாவை பார்த்து விட்டார்.
     அதுவும் அவர் மனைவி தேவி “நம்ம பையன் சாகலை” என்று சொன்ன போது கொதித்தெழுந்து விட்டார் மனிதர். அவர் அப்படி ஒரு மகன் எப்போதும் தங்கள் வாழ்வில் வரக் கூடாது என்று எண்ணினார்‌.
     அவர் மனக் கண்ணில் அன்று தேவிக்கு முதல் மகன் பிறந்த போதும் அதற்கு முன்பும் நடைப்பெற்ற நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது. மனதினுள் எரிமலையாக கோபம் பொங்கி வந்தது. ஆனால்
அதை தேவியிடம் காட்ட முடியாதே.
     எனவே தேவியை வீட்டில் விட்டு வந்தவர் மீண்டும் துணிக்கடைக்கு வந்து அங்கே பணத்தின் பயனால் ஹர்ஷாவின் வண்டி எண்ணை பெற்று கொண்டு அதை வைத்து அவன் வீட்டு முகவரியை கண்டுப்பிடித்துவிட்டார்.
     அதை வைத்து ஹர்ஷா யார் அவன் என்ன செய்கிறான் என கண்டறிந்து அவனை கொல்ல ஆட்களை ஏற்ப்பாடு செய்துவிட்டே சென்றார். ஏனெனில் அவர் ஹர்ஷாவை கண்ட போது அவர் மனதில் வந்த நபரின் உருவம் அவரை இவ்வாறு செய்ய தூண்டியது.
     ஹர்ஷா தேவியின் மகனோ இல்லையோ ஆனால் அவன் உயிருடன் இருக்க கூடாது என்று திண்ணமாக எண்ணினார் ராம். எனவே அவனை கொல்ல சொன்ன பிறகே நிம்மதி ஆனார்.
     இதில் அவர் அறியாத ஒன்று என்னவென்றால் ஹர்ஷா என்னும் மனிதன் தன் வாழ்வில் தன்னை சுற்றி உள்ள ஆட்களை தன் பாச சக்தியாக உருவாக்கி வைத்திருக்கிறான் என்றும், அவர்கள் தான் அவன் பலம் என்றும். அவர்களின் பொருட்டாவது இவன் மீண்டு வருவான் என்று அவர் அறியவில்லை.
____________________________________________
     ஹர்ஷா களைப்பாக தெரியவே அவனை சாய்வாக அமர வைத்தான் விக்ரம். “என்னடா கண்ணா ரொம்ப வலிக்குதாப்பா” என்று கேட்டார் ராஜசேகர். அவர் கரகர குரலே அவரின் நிலையை விளக்கியது. தன் மகனின் காயத்தை பார்த்து நொந்து விட்டார். எனவே எதுவும் கேட்காது அமைதியாக அமர்ந்து கொண்டார்.
     வேதாசலம் தான் இப்போது ஹர்ஷாவிடம் பேச்சு கொடுத்தார். “எப்படி ஹர்ஷா குட்டி இப்படி ஆச்சு. அன்னைக்கு அப்படி என்ன தான் நடந்தது?” என்றார் வருத்தமான குரலில்.
     அதன்பின்னே தான் ஹர்ஷா அன்று தனக்கு நடந்தவற்றை கூற தொடங்கினான். ஹார்ஷா நேற்று எப்போதும் போல் மருத்துவமனை சென்றவன் மதிய உணவு வேளைக்கு தங்கள் இல்லம் நோக்கி புறப்பட்டான் வழமைபோல்.
     அவன் சிறிது தூரம் சென்ற பின் வழியில் ஒரு சிறுவன் அவன் காரை தேக்கினான். அந்த சிறுவன் தன் அன்னைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி ஹர்ஷாவை மருத்துவம் பார்க்க அழைத்தான்.
     “நான் டாக்டர்னு உனக்கு எப்படி தம்பி தெரியும்?” என்று ஹர்ஷா கேட்ட போது “நான் நீங்க அந்த பெரிய ஆஸ்பத்திரிக்குள்ள போறப்ப பாத்திருக்கேன் ண்ணா. நீங்க அங்க தான் பெரிய டாக்டரா இருக்கீங்கன்னு என் பிரண்டு கூட சொன்னான். நாங்க உங்க ஆஸபத்திரிய தாண்டி தான் ஸ்கூல் போவோம் அதுனால தெரியும்” என்றான் நீண்டதொரு விளக்கமாய்.
     அவனை பார்த்தால் சந்தேகம் வரும்படி இல்லாமல் மிகவும் பாவமாக இருக்கவே ஹர்ஷாவும் சிறுவனுக்கு உதவ முன்வந்தான். எனவே அவனை தன் காரில் ஏற்றி அந்த சிறுவன் சொன்ன இடத்திற்கு அழைத்து சென்றான்.
     அந்த இடம் ஊரைவிட்டு சற்று ஒதுங்கி இருந்தது. அங்கே இறங்கிய அந்த சிறுவன் “இதோ வருகிறேன்” என சொல்லி ஓடியவன் தான். அவன் வரவே இல்லை. அதற்கு பதில் ஐந்து ஆறு ஆட்கள் வந்து ஹர்ஷாவிடம் பேச்சு கொடுத்தனர்.
     முதலில் இருந்தே வம்பு வளர்ப்பது போல் பேசியவர்கள் ஹர்ஷாவை தாக்க வரவும் சுதாரித்த ஹர்ஷா அவர்களிடம் இருந்து தப்பிக்க பார்த்தான். அங்கே இருப்பது உசித்தம் இல்லை என அவன் காரை நோக்கி செல்லும் வேளை அவனை தாக்கினர் அந்த ஆட்கள்.
     ஹர்ஷாவும் தன்னால் முடிந்த அளவு அவர்களுடன் சண்டையிட்டு தன் காரை அடைந்தான். அவன் காரின் கதவை திறக்கும் நேரம் தான் ஒரு அரிவாளை அந்த ஆட்களுள் ஒருவன் வீசினான். அது சரியாக ஹர்ஷாவின் தோளை காயப்படுத்தி விழ அந்த காயத்தோடு காரில் ஏறி அவசர அவசரமாக கிளப்பி விட்டான்.
     அதன்பின் தன் மருத்துவமனையை அடைந்தவன் மயக்கம் அடையும் வரை கூட தன் நிலையை பற்றி வீட்டினருக்கு தகவல் கூற வேண்டாம் என்று சொல்லி விட்டான். அதனால் அவர்களும் கூறாது மறைத்தனர்‌.
     “அந்த பையன நம்பி தான் அப்பா நான் போனேன். பட் அந்த ஆளுங்க ஏன் இப்படி செஞ்சாங்கன்னு ஒன்னும் புரியல ப்பா” என்றான் ஹர்ஷாவும் யோசனையாக. “பேசாம நாம போலீஸ் போனா என்ன மாமா. ஹர்ஷாக்கு இப்படி நடந்ததை தெரிஞ்சும் நாம‌ பேசாம இருந்தா ஹர்ஷாக்கு தான் ரிஸ்க்.
     ஒன்ஸ் கொல்ல டிரை பண்ணுனவங்க மறுபடியும் வர மாட்டாங்கன்னு என்ன நிச்சயம். சோ நாம எதாவது சேப்டி மெஷர் எடுக்கனும் மாமா” என்றான் விக்ரம். அதை ஆமோதித்தவாறு அபியும் “ஆமா ப்பா விக்ரம் சொல்றதும் கரெக்ட். அண்ணாவோட உயிர் நமக்கு முக்கியம்.
     நாம பர்ஸ்ட் கம்ப்ளைன் பண்ணுவோம்” என்றான். அதே எண்ணத்தில் இருப்பது போல் தான் ராஜசேகரிம் முகமும் விஸ்வநாதனிம் முகமும் காட்டியது. ஆனால் இதை எல்லாவற்றையும் ஒரேயடியாக மறுத்தான் ஹர்ஷா.
     “நோ‌ விக்ரம்! இதுக்கு போலிஸ் கிட்ட போக வேண்டாம்” என்று ஹர்ஷா சொல்ல “ஏன் ண்ணா?” என்றான் அபி. “இல்லை அபி நம்ம எங்கேஜ்மெண்ட் அப்போவே பார்த்தோமே எல்லாரும் எப்படி பேசிட்டு இருந்தாங்கன்னு.
     இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா எல்லாம் அனுவை தான் பேசுவாங்க. என்னமோ அவ வந்த டைம் தான் சரியில்லை அப்படின்னு யோசிக்காம பேச சான்ஸ் இருக்கு. சோ நோ அபி” என்றான் ஸ்திரமாக.
     தன் வருங்கால மருமகள் மீது ஹர்ஷா கொண்ட காதல் அப்பட்டமாக அவன் வரிகளில் தெரிய அவருக்கு மனநிறைவான புன்னகை வந்தது அந்நிலையிலும்.
     அவன் கூறியதும் சரியென ராஜசேகருக்கு தோன்ற “புரியுது ஹர்ஷா. நீ வரதுக்கு டைம் ஆனதுக்கே எல்லாரும் வந்து கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுல இந்த விஷயம் தெரிஞ்சா வாய்க்கு வந்த படி எல்லாம் பேச ஆரம்பிப்பாங்க தான்.
     ஆனா இந்த விஷயத்தை இப்படியேவும் விட முடியாதுல. என்னப்பா பண்ணலாம்?” என்றார் முடிவை அவன் கையில் விடுத்தே. “நான் இதுக்கு ஒரு சொல்யூஷன் சொல்றேன் மச்சான்” என்றார் வேதாசலம்.
     “நம்ம ரிலேட்டிவ் பையன் தான் இப்ப புதுசா வந்திருக்கிற ஏ.சி. அவன்கிட்ட கம்ப்ளைன்ட் தருவோம். அபீசியலா இல்லாம பெர்சனலா விசாரிக்க சொல்லுவோம்‌. யாருக்கும் தெரியாத மாதிரியும் ஆச்சு, நமக்கு வேலை ஆன மாதிரியும் ஆச்சு. என்ன சொல்றீங்க” என்றார் வேதாசலம்.
     அதுவே அனைவருக்கும் சரியென பட ஒருமனதாக அந்த ஏ.சியிடம் கம்ப்ளைன் பண்ணலாம் என்று முடிவு செய்தனர்‌. அனைவரும் வெளியே வரும் முன் வேதாசலம் “அப்புறம் பசங்களா பார்வதிக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க.
     ஹர்ஷாக்கு ஒன்னுனா அவ தாங்க மாட்டா. சரியா?” என்க புரிந்தது எனும் விதமாய் தலையை ஆட்டினர் மூவரும். ராஜசேகர் அறையில் இருந்து விக்ரம் அபி ஹர்ஷா மூவரும் சேர்ந்து வெளியே வருவதை கண்ட பார்வதி என்ன ஏதுவென கேட்க அவரை சமாளித்து அறையை அடைவதற்குள் ஹர்ஷாவிற்கு போதும் போதும் என்றானது.
     அப்படி உள்ளே வந்த ஹர்ஷா ‘ஹப்பாடா’ என பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி அமரும் நேரம் அவன் கைப்பேசி அழைப்பு விடுக்க “இப்ப யாருடா அது?” என சலிப்புடன் எடுத்து பார்க்க திரையில் அது அனுவின் அழைப்பு என தெரிய மகிழ்ச்சியுடன் கைப்பேசியை எடுத்தான். ஆனால் அனு கேட்ட கேள்வியில் என்ன சொல்வதென முழிக்க தொடங்கிவிட்டான் ஹர்ஷா.

Advertisement