Advertisement

     ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ரா இருவரின் நிச்சயதார்த்தம் சில மணி நேர பதற்றம் மற்றும் சில மணி நேர மகிழ்ச்சி என இருவித மனநிலையை கொடுத்து ஒருவழியாக சிறப்பாக நடைப்பெற்றது.
     அதே போல் இன்னும் நாற்பது நாட்களில் ஒரு நல்ல முகூர்த்த நாள் வருவதாக அன்றைய நாளை இருவரது திருமண நாளாக முடிவு செய்தனர் இருவீட்டு மனிதர்களும்.
     இதில் ஹர்ஷா ஏன் அவ்வளவு நேரம் கழித்து தாமதமாக வந்தான்‌ எனும் விஷயம் இந்த பேச்சின் பொருட்டு பின்னுக்கு சென்று விட்டது. இதில் ஹர்ஷாவிற்கு தான் மனதில் பெரும் நிம்மதி. இனி யார் என்ன கேட்டாலும் பார்த்து கொள்ளலாம் என்று தைரியம் வந்திருந்தது.
     ஆனால் ஹர்ஷா அறியவில்லை தன்னுடைய கேள்விகளை மனதில் அடுக்கி வைத்திருக்கும் ராஜசேகர் வீட்டிற்கு சென்ற உடன் ஹர்ஷாவிடம் அதை எல்லாம் கேட்டு தெளிவு பெற காத்திருப்பதை. அதே போல் காத்திருந்தனர் இன்னும் இரண்டு நபர்கள்.
      அவர்கள் வேறு யாரும் இல்லை விக்ரம் மற்றும் பார்வதியின் கணவர் வேதாசலமும் தான். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பின் ஹர்ஷாவின் வீட்டினர் சாப்பிட்டு கிளம்பினர்.
     அப்போது எதிர்பாராத விதமாக ஹர்ஷாவிடம் வந்த விஸ்வநாதன் அவனை தனியே அழைத்து “மாப்பிள்ளை இது ஷராவோட போன் நம்பர்” என அனுவின் எண்ணை கொடுத்தார்.
     இதில் ஆச்சரிமடைந்த ஹர்ஷா ‘எதற்கு’ என்னும் விதமாய் அவரை ஏறிட, அவனின் கேள்வியை புரிந்தவர் போல் “இல்லை உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயமே முடிஞ்சிருச்சு. இப்பவே ஷரா பாதி உங்க வீட்டு பொண்ணு தான்.
     கல்யாணம் வரைக்கும் பேசினா‌ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க உதவும். அதான் நிச்சயம் முடிஞ்ச உடனே நான் ஷரா நம்பரை உங்களுக்கு தரேன்” என்று கூறி மனிதர் ஹர்ஷாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்‌.
     ‘இந்த மனுஷன புரிஞ்சுக்கவே முடியலையே!!’ என மைன்ட் வாய்ஸில் பேசியவன் அதை சிறிதும் தன் முகபாவனையில் காட்டாமல் “தேங்க்ஸ் மாமா!” என சிறு புன்னகையுடன் கூறி அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.
     ஹர்ஷா வீட்டின் பெரியவர்கள் ஒரு காரில் கிளம்ப ஹர்ஷா விக்ரம் அபி அம்மு இவர்கள் நால்வரும் ஒரு காரில் புறப்பட்டனர். புறப்பட்ட பின் எதையோ யோசித்த விக்ரம் ஹர்ஷாவின் புறம் திரும்பி மெதுவாக ஆரம்பித்தான்‌.
     “ஹர்ஷா மச்சான்! ஒரு சின்ன டவுட்டு!!” என இழுத்து “அது நாம கிளம்பும் போது உன் மாமனார் உன்னை தனியா கூப்பிட்டு எதுவோ சொன்னாரே, என்ன ரகசியம் மச்சான்?” என்று கண் சிமிட்டினான் விக்ரம்.
     அதை கேட்ட ஹர்ஷா சிரித்து விட்டான். அதே சிரிப்புடன் விக்ரமை ஏறிட்ட ஹர்ஷா “அது ஒன்னும் இல்ல மச்சான். என் மாமனார் அனுவோட நம்பரை என்கிட்ட ஷேர் பண்ண தான் கூப்டாரு” என்றான்.
     இந்த பதிலில் திரும்பிய அபி “என்ன ண்ணா சொல்ற! உன் மாமனாரா!!” என அதிர்வது போல் பாவனை செய்து “அவர் அவ்ளோ ஒன்னும் நல்லவர்லாம் கிடையாதே!” என்றான் விளையாட்டாக.
     அதை ஆமோதித்தபடி விக்ரமும் “அபி சொல்றதுலயும் ஒரு பாயின்ட் இருக்கு மச்சான். உன் மாமனார் காரணம் இல்லாம ஒரு விஷயம் செய்ய மாட்டாருடா” என்று தன் கருத்தை கூறினான்.
     ஹர்ஷா சிரித்தானே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. ஆனால் விக்ரம் கூறியது போல் விஸ்வநாதன் மனதில் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தான் அனுவின் எண்ணை தந்திருந்தார்.
     காலை ஹர்ஷா வர தாமதம் ஆன ஒவ்வொரு நிமிடமும் விஸ்வநாதன் மனம் எப்படி திக் திக்கென்றது அடித்தது என அவர் மட்டுமே அறிவார். அதுமட்டும் இல்லாது ஹர்ஷா கேட்டும் தான் அவர் அனுவின் எண்ணை தராமல் விட்டது, நிச்சய புடவை எடுக்க அனுவை அனுப்பாதது. என்பது போன்ற காரணங்கள் தான் ஹர்ஷாவை கோபத்தில் தள்ளி, அதனால் அவன்‌ நேரம் தாழ்த்தி வந்தானோ என்றும் ஒரு எண்ணம் தோன்றியது.
     அது போக ஹர்ஷாவின் எண் அனுவிடம் இருந்திருந்தால் அவன் எங்கே இருக்கிறான் என்ன எதுவென அறிந்து கொண்டிருக்கலாம் என எண்ணினார். பாவம் அவன் எண் ஏற்கனவே அனுவிடம் உள்ளது என்பதை அறியாமல்.
     இந்த காரணங்கள் வரிசையாக அவர் மூலையில் உதிக்க இனி ஹர்ஷாவின் மனம் நோகாமல் பார்த்து கொள்ள எண்ணியே அவனிடம் இன்று அனுவின் எண்ணை தந்திருந்தார் மனிதர். இது எங்கே இவர்களுக்கு புரிய போகிறது.
____________________________________________
     காரில் இருந்து இறங்கி வந்த ஹர்ஷா மற்றும் அபியை ஹாலிலே தடுத்து நிறுத்திய வேதாசலம் “ஹர்ஷா அபி உங்க ரெண்டு பேரையும் மாமா கூப்பிடுறாரு வாங்க” என ராஜசேகரின் அறைக்கு அழைத்தார்.
     ஹர்ஷாவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் “தோ வரோம் மாமா!” என்றனர் ஒன்றாக. அதன்பின் வேதாசலம் பின்னால் தங்கள் தந்தையின் அறையை நோக்கி சென்றனர். இதை பார்த்த விக்ரமும் அவர்களின் பின்னால் சென்றான்.
     இவர்கள் வந்தவுடன் கதைவை தாழிட்ட ராஜசேகர் தன் இரு மகன்களின் முகங்களையும் குறுகுறுவென பார்த்தார். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் ‘எந்த கேள்வி வருவதாக இருந்தாலும் அது முதலில் தந்தையின் வாயில் இருந்தே வரட்டும்’ என மௌனம் சாதித்தனர்.
     இதை கண்ட விக்ரமிற்கு கடுப்பாக இருந்தது. ‘என்னடா இது யாருமே பேச ஆரம்பிக்க மாட்டேங்குறாங்க. இந்த மாமாவும் எதாவது கேட்டா தான் என்ன’ என பார்த்தவன் எதுவும் பேசவில்லை.
     சிறிது நேர அமைதிக்கு பின் “ஹர்ஷா நேத்து உனக்கு எந்த ஹாஸ்பிடல்ல பா ஆப்பரேஷன் இருந்தது?” என்ற கேள்வியை கேட்க ஹர்ஷா எதுவும் கூறவில்லை. ஆனால் அபி தான் திறு திறுவென முழித்துக் கொண்டு நின்றான்.
     ஹர்ஷாவின் அமைதியை பார்த்த ராஜசேகர் “‌இப்படி சைலண்ட்டாவே இருந்தா எப்படி ஹர்ஷா. நேத்து உனக்கு எந்த கமிட்மென்ட்டோ ஆப்பரேஷனோ இல்லை. இது எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு தெரியும்னு உனக்கும் தெரியும்.
     அப்புறம் ஏன்டா இப்படி பண்ற. நேத்து அப்படி எங்க தான் போன. அபி உன்னை பத்தி சொல்ற வரை இங்க யாருக்கும் உடம்புல உயிரே இல்லை தெரியுமா! என்னாச்சு டா குட்டி. உனக்கு ஒன்னும் இல்லைல.
     சொல்லுடா! உங்க அம்மா போனப்ப தாங்க நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்கபா. இப்ப உங்களுக்கு ஒன்னுன்னா நான் ஒரேதா போக வேண்டியது தான்!” என்று இதுவரை வேகமாக பேசியவர் இப்போது ஓய்ந்து போய் அமர்ந்து கொண்டார்.
     அவர் இப்படி பேசிவிட்டு அமரவும் “ஐயோ அப்பா!” “என்னப்பா நீங்க!” என அவர் அருகே சென்று தாங்கி கொண்டனர் மகன்கள் இருவரும். “அப்படிலாம் உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அவ்ளோ சீக்கிரம் போக மாட்டேன்டா” என்றவர் இப்போது அபியை பார்த்து “காலைல நீ இவனை எங்க தான்டா பார்த்த? என்னாச்சு?” என்றார்.
     தன் அண்ணனை திரும்பி ஒரு பார்வை பார்த்து கண்களால் சம்மதம் கேட்டான் அபி. இதை பார்த்த ராஜசேகருக்கே சிரிப்பு வந்துவிட்டது. “என்னமோ எல்லாத்துக்கும் அண்ணனை கேட்டுட்டு தான் செய்றவன் மாதிரி. என்ன பார்த்து சொல்லுடா” என்றார்.
     அபி “அப்பா நானும் மார்னிங் நீங்க சொன்ன அப்புறம் தான் அண்ணனை காணாமேன்னு அவன் நம்பர்க்கு கால் பண்ணி பார்த்தேன். ஆனா சுவிட்ச் ஆப்னு தான் வந்தது. என்ன பண்ணன்னு தெரியாம ஒருவேளை ஹாஸ்பிடல்ல எதுவும் இருப்பான்னு நம்ம ஹாஸ்பிடல்க்கு கால் செஞ்சேன்” என்றவன் காலையில் நடந்ததை தனக்கு தெரிந்ததை சொல்ல தொடங்கினான்.
     அபி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து ஹர்ஷா அங்கே இருக்கிறானா என கேட்க முதலில் இல்லை என சாதித்தனர். நேற்று எதுவும் வந்தானா என கேட்க ஆம் இல்லை என மழுப்ப அபியிற்கு சந்தேகம் வந்தது. எனவே அவன் வீட்டினரை மண்டபத்திற்கு கிளம்ப சொல்லிவிட்டு இவன் தங்கள் மருத்துவமனைக்கு சென்றான்.
     அங்கே போனால் அப்போதும் ஹர்ஷா வரவில்லை என கூற கடுப்பான அபி “இன்னைக்கு அவனுக்கு எங்கேஜ்மென்ட். அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அவன‌ எங்க மறைச்சு வச்சிருக்கீங்க. ஒழுங்கா சொல்லிடுங்க இல்லைனா நான் போலீஸ்ல கம்ப்லைன் பண்ணுற மாதிரி ஆகிடும்” என அது இதுவென மிரட்ட தொடங்கினான்.
     அதன்பின் தான் ஹர்ஷா இருந்த அறையை அவனிடம் காட்டினார்கள். அங்கு ஹர்ஷா இருந்த நிலையை கண்டு அப்படியே அதிர்ந்து நின்று விட்டான் அபி. வலது தோள்பட்டையில் பெரிய கட்டு போடப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஹர்ஷா.
     அவனை பார்த்த போதே தெரிந்தது அவனுக்கு ஏதோ விபத்து நடந்துள்ளது என்று. என்ன நடந்தது என மருத்துவமனையில் விசாரித்த போது அவர்கள் கூறியது ‘ஹர்ஷா நேற்று மருத்துவமனை வரும் போதே தடுமாறியபடி தான் வந்திருக்கிறான்.
     மருத்துவமனையை அடைந்து மயங்கியவன் இப்போது வரை கண்விழிக்கவில்லை’ என்று. அவனை பரிசோதனை செய்த மருத்துவர் ‘இது ஆக்சிடென்ட் போல‌ இல்லை. ஏனெனில் அவன் தோள்பட்டையில் அரிவாள் வெட்டுக்கான காயம் இருக்கிறது.
     மேலும் அதனால் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் தான் அவனுக்கு மயக்கம் வந்துள்ளது’ என கூறியவர் ‘எப்படியும் வெட்டுப்பட்ட கையை வைத்து வண்டியை செலுத்தி வந்திருக்கிறார் போல். ஏனெனில் காயம் பட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையை அடைந்திருக்கிறார்’ என கூற ஹர்ஷாவின் நிலை எண்ணி அபியின் கண்கள் கலங்கி விட்டது.
     அதே நேரம் ‘அண்ணாவுக்கு எதிரின்னு யார் இருக்கா? யார் இப்படி செஞ்சிருப்பா? கொல்லுற அளவுக்கு யாருக்கு அண்ணாவோட பகை?’ என பல கேள்விகள் மனதில் முளைத்தது. இந்த சூழலில் வீட்டில் இருந்து அழைத்தவர்களுக்கு எல்லாம் அபிமன்யு தன் வாயில் வந்த கதையை எடுத்து விட்டான்.
     அதை நம்பிய குடும்பத்தினரும் அபியிடம் தொடர்பில் இருந்ததால் ஹர்ஷா பேசாததை கருத்தில் கொள்ளவில்லை. காலை ஒன்பது மணிக்கு மேல் கண்விழித்த ஹர்ஷாவிடம் அபி ‘என்ன நடந்தது?’ என கேட்க அவன் எதுவும் சொல்லவில்லை.
     அது போக அன்றைய நாளையும் நேரத்தையும் கண்டு “இன்னைக்கு என்னோட எங்கேஜ்மெண்ட் அபி. பங்ஷன் முடியவும் நான் எல்லா விஷயத்தையும் டீட்டெய்லா சொல்றேன். இப்போ கிளம்பலாம்டா. நான் அங்க இல்லைனா தப்பா பேசுவாங்கடா.
     அது மட்டும் இல்லாம எனக்கு இப்படி ஆனது தெரிஞ்சா எல்லாரும் அனுவை தான் பேசுவாங்க. என்ன நடந்தாலும் பொண்ணுங்கள தான் பேசுற ஊர் இது. உன் அண்ணியை மட்டும் பேசாம விட்டுவைப்பாங்களா. அதுக்கு நாம இடம் கொடுக்க வேணாம் கிளம்பலாம்டா” என்று அவசரப்படுத்தி கிளம்பிவிட்டான்.
    அவன் அவ்வளவு நேரம் வராமல் இருந்ததற்கே வந்திருந்த சொந்த பந்தங்கள் அவ்வளவு பேசியிருக்க அதை பார்த்த அபிமன்யுவிற்கும் அப்போது தான் அண்ணன் அவ்வளவு வலியிலும் எதற்கு கிளம்பி வந்தான் என புரிந்தது.
    “இவ்ளோ தான் ப்பா எனக்கு தெரியும். ஆனா அண்ணாவோட இந்த நிலைமைக்கு யார் காரணம் அப்படின்னு அவன் சொன்னா தான் ப்பா எனக்கும் தெரியும்” என்று முடித்தான்.
     அபி ஹர்ஷாவிற்கு வெட்டு காயம் என்பதை கூறியதுமே எல்லாரும் பதறி விட்டனர். ராஜசேகர் ஹர்ஷாவின் அருகே வந்து “காயத்தை காட்டுடா” என்று கூறும் போதே பதறியது. அவன் காயத்தை பார்க்க உடன் அவர் கண்களில் இருந்து நீரே வழிந்தது.
     “என்ன குட்டி இவ்ளோ பெரிய காயம். என்னப்பா ஆச்சு?” என்று பதறி துடித்துவிட்டார். அவரை பேசி பேசியே சமாதானம் செய்யவதற்குள் ஹர்ஷா தான் சோர்ந்து விட்டான். அவனின் சோர்ந்த முகம் கண்டே தன்னை தேற்றினார் ராஜசேகர்.
     “சாரிபா டையர்டா இருக்கா. சாரி சாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் முகத்தை பார்க்கவே அனைவருக்கும் பாவமாக போனது. “அப்பா ஒன்னும் இல்லை! ஒன்னும் இல்லை!” என அபியும் இப்போது சமாதானம் செய்தான். அதன்பின் மெதுவாக ஹர்ஷா தனக்கு என்ன நடந்தது என கூற தொடங்கினான்.
– மீண்டும் வருவான்

Advertisement