Advertisement

     ரம்மியமான இளங்காலை வேளை. ஆதவன் அழகாய் தன் செந்நிற கதிர்களை பூமி மகள் மீது வீசும் நேரம். அந்த திருமண மண்டபம் பதற்றத்திற்க்கு பஞ்சம் இல்லாமல் ஒரு சீரான வேகத்தில் இயங்கி கொண்டிருந்தது.
     என்ன தான் சந்தோஷ நிகழ்வு ஒன்று நடக்க போனாலும் அங்கே இருந்த விஷேஷ குடும்பத்தினர் முகங்கள் சற்று பதற்றத்தை தான் வெளிப்படுத்தியது. “என்னவாயிற்று?” என கேட்போரிடம் சிரித்து சமாளித்துக் கொண்டிருந்தனர்.
     இங்கே அனைவரையும் பதற்றத்தில் தள்ளிய நம் நாயகன் ஹர்ஷவர்தனோ அவன் தம்பி அபிமன்யுவுடன் மண்டபத்தை நோக்கி காரில் சீறி பாய்ந்து வந்துக் கொண்டிருந்தான்.
     “சம்மந்தி! என்னங்க ஆச்சு? மாப்பிள்ளைய இன்னும் காணோம். வந்திருவாருள்ள?” என்று கேட்ட விஸ்வநாதனிடம் “இதோ பக்கத்தில‌ வந்திட்டான் சம்மந்தி‌. கொஞ்ச நேரத்தில வந்திருவான்” என பத்தாவது முறை அதே பதிலை அசராமல் தந்தார் ராஜசேகர்.
     அதை கேட்டு அரை மனதுடன் “சரி சம்மந்தி! நான் போய் மற்ற ஏற்பாடு எல்லாம் செய்ய சொல்றேன். மாப்பிள்ளை வந்த உடனை நிச்சியத்தை ஆரம்பிச்சிடலாம்” என்றவாறு விஸ்வநாதன் நகர்ந்தார்.
     இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்திருந்த பார்வதி அவர் அண்ணனை முறைத்து “ஏன் ண்ணே! என்ன இது‌. ஹர்ஷா குட்டி எங்க தான் வந்துட்டு இருக்கான். இந்த அபி பையலும் போன் எடுக்க மாட்டேங்கிறான்.
     அபப்டி என்ன நிச்சயதார்த்தம் அன்னைக்கு கூட ஹாஸ்பிடலே கதின்னு கெடக்குறான். சம்மந்தி வீட்ல எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாச்சும் தோனுதா? அவன் வரட்டும் இன்னைக்கு இருக்கு‌ அவனுக்கு” என திட்டிக் கொண்டிருந்தார்.
     ஆம் ஹர்ஷா நேற்று மருத்துவமனை சென்றவன். காலை வரை வீட்டிற்கு வரவில்லை. அவன் ஒரு அறுவை சிகிச்சையை அன்று மேற்கொள்ள ஒரு மாதம் முன்பே ஒத்து கொண்டதால் போக வேண்டிய கட்டாயம். எனவே சென்றானாம்.
     இரவுக்குள் வந்துவிடலாம் என எண்ணியே ஹர்ஷா சென்றது. ஆனால் அங்கே அந்த அறுவை சிகிச்சை செய்யப்போகும் நபருக்கு சில சோதனைகள் மேற்கொள்ள நேரம் எடுத்தது.
     அது மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை நடக்கும் போது சிலபல சிக்கல்கள் வந்து விடவே அந்த நபரின் உடல் நிலையை சரியாக்கி அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்து வெளியே வர அடுத்து நாள் விடிந்தே விட்டது.
     இது எல்லாம் ஹர்ஷா கூறவில்லை. எல்லாமே அபி கூறிய தகவல்கள் தான். நேற்று வெளியே சென்ற ஹர்ஷா காலை வரை வரவில்லை என அபி ஹர்ஷாவிற்கு அழைக்க மருத்துவமனையில் இருந்து தான் எடுத்தார்கள்.
     அங்கே சென்ற அபி தான் இப்படி என சொல்லி வீட்டில் இருந்த அனைவரையும் கிளம்ப சொல்லிவிட்டான் ஹர்ஷாவை தான் அழைத்து வருவதாக சொல்லி. ஆனால் யாரும் ஹர்ஷாவிடம் நேற்றிலிருந்து பேசவில்லை என்பதே உண்மை!
     இங்கே வீட்டிலோ உறவினர்கள் வந்தவர்கள் எல்லாம் “என்ன ஹர்ஷாக்கு பொண்ணை பிடிக்கலையா. அதான் இன்னும் வீட்டுக்கு வராம இருக்கானா?” என்று ஏகத்துக்கும் அனைவரின் பிபியையும் ஏற்றி விட்டு கொண்டு இருந்தனர்.
     எல்லாரின் கேள்விகளும் பார்வதியை தான் சுற்றி வந்தது. எனவே அவர் மிகவும் நொந்து போய் விட்டார்.‌ ‘ஏற்கனவே பெண் பார்க்க சென்ற போதே ஹர்ஷாவால் வரமுடியாது தடங்கள் போல் நடந்துவிட்டது.
     இப்போது என்ன இன்றும் இப்படி ஆகிறதே’ என யோசித்த பார்வதிக்கு மனதுக்குள் ‘நாம் சரியான வழியில் தான்‌ செல்கிறோமா?’ என தோன்றிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் ஹர்ஷாவிற்கு அனுவை பிடித்திருந்த காரணத்தால் பார்வதி இப்போது வரை அமைதியாக உள்ளார்.
     இங்கே இவர்கள் மனநிலை இப்படி இருக்க பெண்ணை பெற்ற விஸ்வநாதன் மீனாட்சி தம்பதிக்கோ ஹர்ஷாவின் நிலை புரிந்தாலும் ‘உறவினர் வந்த நண்பர்கள் என அனைவரும் என்ன பேசுவார்களோ’ என்று மனது திக் திக் என்றே அடித்து கொண்டது.
     அவர்கள் பயந்தது போல தான் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஹர்ஷா இன்னும் வராததால் சிலர் நேரடியாகவே வந்து “என்ன விஸ்வநாதா! மாப்பிள்ளை பையனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் ஏதும் இல்லையா?
     ஏன் இன்னும் வரல? நல்லா விசாரிச்சிங்க தானே” என கேட்க உள்ளுக்குள் பயந்து போய் தான் இருந்தனர். மீனாட்சி வேறு அனுவிடம் “மாப்பிள்ளைக்கு ஒரு போன போட்டு பாரு பாப்பா. எங்க வந்திட்டு இருக்காருனு கேளு” என ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கூற,
     ஏற்கனவே பல முறை அழைத்து பார்த்து சோர்ந்து போய் இருந்த அனு “ஆமா நான் போன் பண்ணுன உடனே உன் மாப்பிள்ளை எடுக்கிற மாதிரி தான். ஏன் மா நீயும் டென்ஷன் பண்ற” என கத்திவிட்டாள்.
     ஆனால் அங்கே அவளின் அழைப்புகள் எல்லாம் அணைந்து வைக்கப்பட்டிருந்த ஹர்ஷாவின் கைப்பேசிக்கு தான் சென்று கொண்டிருந்தது. ஹர்ஷாவின் வீட்டினர் அபிமன்யுவிடன் பேசியதால் அவர்களுக்கு சரியான நிலவரம் தெரிந்திருந்தது.
     “என்ன அண்ணே! பசங்க கிட்ட வந்துட்டதா சொன்னாங்க. ஆனா இன்னும் காணோம்” என்ற பார்வதி பதட்டத்தின் உச்சியில் இருந்தார். அவர் சொல்வது உண்மையே. அபி சொன்ன இடம் நேரத்தை கணக்கிட்டால் ஹர்ஷா இந்நேரம் மண்டபத்திற்கு வந்து பத்து நிமிடம் ஆகியிருக்க வேண்டும்.
      இதே பயம் தான் ராஜசேகர் மனதிலும் இருக்கிறது. அபி வேறு கைப்பேசியை எடுத்து பேசாமல் இருக்க அவருக்கும் உள்ளே தன் மகன்களுக்கு என்னவானதோ என உதறிக் கொண்டிருந்தது.
     இதை எதையும் அறியாத விஸ்வநாதன் வீட்டினரும் பயந்து போய் தான் இருந்தனர்‌. அவர்கள் மகளின் வாழ்க்கை ஆயிற்றே. ஹர்ஷா வரும் போது வரட்டும் என அவனுடைய நிச்சயத்தை நிகழ்த்தி விடலாம் என இப்போது முடிவெடுத்தார் பார்வதி.
     மனதில் இருந்த பயத்தை மறைத்தவாறு “அண்ணா நாம‌ நிச்சயத்தை நடத்தலாம். ஹர்ஷா குட்டி வந்திருவான் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்ற பார்வதி அவரையும் தேற்றி அனுவின் வீட்டிலும் பேசிவிட்டார்.
     அதன்பின் வேலைகள் வேகமாக நடைபெற ஆரம்பித்தது. சரியாக லக்ன பத்திரிகை வாசிக்கும் நேரம் அபியும் ஹர்ஷாவும் ஒருவழியாக வந்து சேர்ந்தனர். இப்போது தான் இரு வீட்டினர் முகமும் சீரானது.
     “என்ன ஹர்ஷா குட்டி இது. இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு வரீங்க ரெண்டு பேரும்” என கடிந்து கொண்டார் பார்வதி. பின் தான் ஹர்ஷாவின் கசங்கிய சட்டையை பார்த்தவர்
     “என்னப்பா உன் ஷர்ட் எல்லாம் இப்படி இருக்கு. ரூம்க்கு போ. அங்க டிரஸ் இருக்கு. போ போய் அந்த டிரஸ்ச சேஞ்ச் பண்ணிட்டு சீக்கிரம் வா. பொண்ணுக்கு சேரி குடுத்தாச்சு உனக்கும் டிரஸ் கொடுத்தாங்க.
     நான் அதை தான் வாங்கி ரூம் உள்ள வச்சிருக்கேன். அதை சேஞ்ச் பண்ணிட்டு வாப்பா. லக்ன பத்திரிகை வேற வாசிக்க போறாங்க. அப்போ நீயும் அனுவும் ஒன்னா உக்கார்ந்து இருக்கனும்.
     அதனால் கொஞ்சம் வேகமா வாப்பா” என ஒரே மூச்சாக சொல்லி முடித்தார் பார்வதி ஹர்ஷாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது. பார்வதி தன் நிலையை பற்றி கேட்காது போக சொன்னதை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஹர்ஷா.
     எதோ சொல்ல வந்த அபியை அறையை நோக்கி இழுத்து சென்ற ஹர்ஷா “வேணாம் அபி. அத்தை பயந்திருவாங்க. அது மட்டும் இல்ல. நாம பேசறத வேற யாராவது கேட்டு அது பிரச்சினைல கொண்டு போய் விட்ர போகுது.
     வீட்டுக்கு போனதும் நாம‌ என்ன நடந்துதுன்னு சொல்லிக்கலாம். அதை தான் நம்ம வீட்ல இருக்க எல்லாரும் கூட நினைப்பாங்க. சோ ஸ்டே காம்.
     உனக்கு இவ்ளோ நேரம் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல. வா இப்போ வேற டிரஸ் பண்ணிட்டு போய் பங்ஷன நல்லபடியா முடிக்க பார்ப்போம்” என முடித்தான்.
     ஹர்ஷா கூறியதில் இருந்த உண்மை புரிய “சரி ண்ணா. நான் யார்கிட்டேயும் இதை சொல்லலை. நீங்க சொல்ற மாதிரி வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்” என்று அபியும் ஒத்துக் கொண்டான்.
     ஆனால் தான் பெற்ற மகன்களை பற்றி முழுதாக தெரிந்த ராஜசேகர் அபியின் முகத்தில் இருந்த பதட்டத்தையும், ஹர்ஷாவின் முகத்தில் இருந்த அதீத களைப்பையும் யோசனையுடன் பார்த்தார்.
     ஏனெனில் ஹர்ஷாவிற்கு நேற்று எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லை என்பதை அவர் அறிவாரே! அப்படி இருக்கையில் என்ன நடந்தது என அவரும் யோசித்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மகன்கள் வாயை திறந்து எதாவது சொன்னால் தான் தெரியும். எனவே வீட்டிற்கு சென்றபின் கேட்டுக் கொள்ளலாம் என அமைதி காத்தார்.
     இங்கே உள்ளே வந்த விக்ரம் இருவரையும் ஒரு மார்கமாய் பார்த்து விட்டு “ஹர்ஷா அம்மா கூப்பிடுறாங்க. ஷர்ட் சேஞ்ச் பண்ணிட்டா சொல்லு போலாம்” என்றவன் சிறிது யோசித்து விட்டு
     “ஒரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுக்கோ ஹர்ஷா. உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் உன் கூட அபி மட்டும் இல்ல நானும் இருக்கேன். என்ன புரியுதா?” என்றான்.
      விக்ரம் கூறியதை கேட்டு புன்னகை புரிந்த ஹர்ஷா “எனக்கு தெரியும் டா” என கூறி விக்ரம் மற்றும் அபியை இருபுறமும் தோளோடு லேசாக அணைத்து விட்டு “ம்ம் நான் ரெடி போகலாம் டா” என அழைத்து வெளியே வந்தான்.
    பின்னர் ஹர்ஷாவையும் அனுவையும் ஒருங்கே அமர வைத்து நிச்சய பத்திரிகை வாசித்து அவர்கள் உறவை உறுதி செய்து முடித்தனர்‌. இதை கண்ட பிறகு தான் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் மனதிற்குள் “ஹப்பாடி” என பெரும் நிம்மதி வந்தது.
     இவ்வளவு நேரம் ஒரு இறுக்கத்தில் இருந்த ஹர்ஷாவின் முகம் கூட இப்போது சிறிது தெளிந்து சாந்தமாகி பழைய புன்னகை வந்திருந்தது. மனம் லேசான‌ பின்னரே அருகில் இருந்த அனுவே ஹர்ஷாவின் கண்ணிற்கு தெரிந்தாள்.
     “ஹே அனுமா என்னடா இப்படி பார்க்குற?” என்று புன்னகைத்தான் ஹர்ஷா. ஆனால் அனுவோ அவனுக்கு மாறாக அவனை முறைத்து கொண்டிருந்தாள்‌. “என்னடா முறைக்கிற. என்மேல கோபமாடா?” என்றான் ஹர்ஷா பாவமாக.
     அதற்கும் பேசாத அனுவிடம் “என்னடா செல்லம்! என் சிட்டுவேஷன கொஞ்சம் புரிஞ்சுக்கோ டா. நம்ம பங்ஷன். நானே லேட்டா வர்றேனா, நான் அங்க வரமுடியாத ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டேன்னு புரியலையாடா” என தன்னிலை விளக்கம் தர,
     ஹர்ஷாவின் விளக்கம் அனுவின் மனதை சற்று இலக்க இப்போது வாய் திறந்தாள் அனு. “சாரிங்க. நீங்க போன் வேற எடுக்கலை, எல்லாரும் மாத்தி மாத்தி வந்து கேட்டு டென்ஷன் பண்ணிட்டாங்க. அதுமட்டும் இல்லாம” என்றவளின் குரல் கரகரத்தது.
     “அதுமட்டும் இல்லாம ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதான் கோபம் அழுகை எல்லாம் வந்திருச்சு” என்றாள் பாவமாக. அவள் நிலை புரிந்தது போல் “சாரிடா! ஐ நோ நான் லேட்டா வந்தது இட்ஸ் மை மிஸ்டேக். வெரி வெரி சாரிடா” என்றான் உண்மையாக.
     அதன்பின் சற்று சமாதானம் அடைந்து விட்ட அனு  “சாரிங்க எனக்கு உங்களை புரியிது. யார் என்ன சொன்னாலும் இனிமே நான் கவலைபடமாட்டேன்” என்றாள் புரிதலுடன்.
     இப்போது இருவரும் தங்களே தங்களுக்கான நிகழ்வை மகிழ்வுடன் அனுபவிக்க தொடங்கினர். அதை கண்ட விஸ்வநாதன் மீனாட்சி மட்டும் அன்றி ராஜசேகர் பார்வதி என அனைவரும் மனநிறைவுடன் நின்றிருந்தனர்.
     ஆனால் ஹர்ஷா வந்ததில் இருந்து அவனை கண்ட ஒரு ஜோடி கண்கள் ஆனந்தமாய் அதிர்ந்து என்றால் மற்றொரு ஜோடி கண்களோ அவனை வன்மத்துடன் பார்த்தது. அதோடு “ஐயோ! இவனா மாப்பிள்ளை. இவன் எப்படி உயிரோட வந்தான்?” என்றும் யோசித்திருந்தது.

Advertisement