Advertisement

    அந்த வகுப்பில் இருந்த அனைவரும் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தனர். ஆசிரியர் நடத்தும் பாடத்தை தான் அனைவரும் மும்முரமாக குறிப்பு எடுக்கின்றனர் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
     ஆசிரியர் போடும் மொக்கையை தாங்க முடியாது கீழே தங்கள் கைப்பேசியை நோண்டி கொண்டிருந்தனர். அதே நேரம் அதையெல்லாம் செய்தே பழக்கம் இல்லாத அனுவோ ஆசிரியர் சொல்வதை கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
     நீ பார்க்கவில்லை என்றாள் நான் விட்டுவிடுவேனா என்பதை போல் அவள் கைப்பேசி அலறி தொல்லை செய்து கொண்டிருந்தது. நல்ல வேளை வைப்ரேட்டர் மோடில் தான் வைத்திருந்தாள்.
     அதனால் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. வாட்சப்பில் செய்தி தான் வந்திருந்தது. ‘அப்பாடி’ என மனம் நிம்மதி அடைந்தவள் எடுத்து பார்த்தாள்.
     செய்தி அனுப்பியது யார் என அவளுக்கு நன்றாக தெரிந்தது. எதற்காக என்றும் புரிந்தது. “அனு நல்லா பார்த்து சொல்லுடா! இதுல எது உனக்கு ஓகேன்னு?” என்று கேட்டு ஒரு பத்து புடவையின் புகைப்படங்கள் வந்திருந்தது.
     “இவரை..” என மனது செல்லமாக சலித்து கொண்டாலும் அனுவிற்கு ஹர்ஷா தன் மனம் அறிந்து செயல்படுவது மிகவும் பிடித்து தான் இருந்தது. ஆம் இந்த புகைப்படங்களை அனுப்பி கொண்டிருப்வன் ஹர்ஷவர்தனே.
     இவர்கள் இருவரின் நிச்சயம் இன்னும் பத்து நாட்களில் வர இருக்க புடவை எடுக்க அனுவை உடன் அனுப்பும் படி பார்வதி விஸ்வநாதனிடம் கேட்க அவர் ஒரேயடியாக மறுத்து விட்டார்.
     கல்யாண புடவை எடுக்கன்னா கூட நாங்க வந்துருவோம். அப்பவும் கல்யாண பொண்ணை கூட்டிட்டு வரது எல்லாம் எங்க பழக்கம் இல்லை. இது நிச்சய புடவை தானே உங்க விருப்பப்படியே எடுங்க என்று சொல்லிவிட ஹர்ஷவர்தன் தான் கோபமாகி விட்டான்.
     அன்று கல்லூரிக்கு வந்து ஹர்ஷா அனுவின் கைப்பேசி எண்ணை வாங்கி சென்றதை மாலை வந்து தன் தாய் மீனாட்சியிடம் அப்படியே கூறி விட மீனாட்சி “பேசு ஷரா” என்றுவிட்டார் ஒரே வார்த்தையில்.
     தன் அன்னை தன்னை கிண்டல் தான் செய்கிறாரோ என்று நினைத்தாலும் அவர் முகத்தில் அதற்கான எந்த பாவமும் இல்லை. அனு நின்று மீனாட்சி முகத்தை குறுகுறுவென பார்க்கவும் “என்னடி?” என்றவர் சிரித்துவிட்டார்‌.
     “அம்மா நான் எதுவும் பண்ணலை. அவரா தான் என்னை பார்க்க வந்தாரு‌. நான் அவர் போன் செஞ்சாலும் பேசலை மா. அப்பாட்ட சொல்லிராதீங்க” என்றாள் திகிலான குரலில்.
     இப்போது வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்ட மீனாட்சி “ஏன் நீயே போய் உங்க அப்பாகிட்ட சொல்லேன்” என்று கடிந்தவர் “ஏன்டி அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா?
     அந்த மனுஷன் தான் மாப்பிள்ளை கிட்ட பேசக்கூடாது அப்படின்னு புத்தியே இல்லாம சொல்லிட்டு இருக்காருனா. நீ ஏன்டி இப்படி இருக்க.
      அப்பா புள்ளை எல்லாம் எந்த காலத்துலடி இருக்கீங்க. பாவம் மாப்பிள்ளை உன்கிட்ட பேச ஆசைப்படுராரு. பேசிட்டு தான் போயேன்டி. உன் அப்பா தான் பழைய பஞ்சாங்கம் பேசிட்டு இருக்காருனா,
     நீயும் அதையே சொல்லாத” என்றவர் இப்போது தீவிரத்தை உணர்த்தும் வகையில் “அவர் தான் இனிமே உன் வாழ்க்கை ஷரா. நாங்களாம் இனி எவ்ளோ நாள் உன் கூட வரப்போறோம் டா.
     மாப்பிள்ளை தான் இனி உன்னோட காலம் பூரா வரவரு. அவர்காக இல்லைனாலும் நீ அவரை பத்தி தெரிஞ்சிக்க இதை நல்ல வாய்ப்பா எடுத்துக்கடா” என்று முடித்தார்.
     அனுவிற்கு தன் அன்னை கூறியது ஒருவிதத்தில் சரியென தோன்றியதால் அதன்பின் ஹர்ஷாவின் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்து விட்டாள்.
     ‘தயங்கி தயங்கி பேசினாலும் தன் அழைப்பை எடுத்து பேச செய்கிறாளே!’ என எண்ணிய ஹர்ஷாவும் அவளிடம் உரையாடுவான்.
     அதே நேரம் அவள் வாயிலிருந்து சில வார்த்தைகளையும் வர வைத்து தான் அழைப்பை வைப்பான். இதில் அவள் வீட்டினர் அவளை ஷரா என அழைக்க, ஹர்ஷா அனுவென்று அழைப்பது வேறு பிடித்து போனது அனுவிற்கு.
     எனவே ஹர்ஷாவின் குணத்திற்கு ஏற்றவாறு சிறிது சிறிதாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி கூட செய்கிறாள் அனு. இப்படி போய்க் கொண்டிருக்கும் போது, நேற்றைய இரவில் அனுவிற்கு அழைத்தான் ஹர்ஷா.
     “அனு நாளைக்கு நம்ம எங்கேஜ்மெண்ட்க்கு உனக்கு ஸாரி எடுக்க போறோம். நீயும் கிளம்பி வா” என்றான் அதிரடியாக. அவள் தந்தை ஏற்கனவே மறுத்தும் அவளை ஹர்ஷா அழைத்தது அனுவிற்கு மனதினுள் உதறலை தான் தந்தது.
     அதனால் ஹர்ஷாவிடம் கெஞ்சி போராடி தான் நாளை வர முடியாது என கூற ஹர்ஷா பெரிதும் கோபித்துக் கொண்டான். பின் அவனிடம் சமசரம் பேசினாள் அனு.
     கடைசியில் “நான் புடவை போட்டோஸ் அனுப்பி வைப்பேன். அன்ட் அந்த போட்டோவை பார்த்து செலக்ட் பண்ணு. யார்க்கிட்ட வேணா ஒப்பீனியன் கேட்டுக்கோ. பட் பைனலா உனக்கு பிடிச்சதை தான் செலக்ட் பண்ற” என்றான் முடிவாக.
     அவன் சொன்ன முடிவை கேட்டு அவள் மனதும் ‘இந்த வரையிலாவது ஒத்துக் கொண்டானே” என சரி என்று விட்டாள். அனு கல்லூரி செல்லும் நேரம் ஹர்ஷா அவளுக்கு அழைப்பு விடுத்து என்றும் தொல்லை செய்யமாட்டான்.
     ஆனால் இன்று இவர்களின் நிச்சய புடவையை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அவனுக்கு பிடித்த புடவைகளின் புகைப்படங்கள் எல்லாம் அனுப்பிய வண்ணம் இருந்தான்.
     அதை கண்ட அனுவும் மகிழ்ச்சியாக அந்த புடவைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்க்க துவங்கினாள்.
     ஆனால் அங்கே கடையிலோ தன் கையில் இருந்த கைப்பேசியை முறைத்து கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அவனை நமட்டு சிரிப்புடன் பார்த்தான் விக்ரம்.
     ‘ஒரு புடவை செலக்ட் பண்ண என்ன இவ்ளோ நேரம் ஆகுது. நான் போட்டோஸ் அனுப்பி டென் மினிட்ஸ் ஆச்சு. பத்து புடவைல ஒரு புடவை செலக்ட் பண்ண சொன்னா இன்னும் என்னதான் செய்றாளோ?’ என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
     அவனை பார்த்து “என்ன ஹர்ஷா குட்டி போனை பார்த்துட்டு இருக்க. சீக்கிரம் ஒரு புடவையை செலக்ட் பண்ணுப்பா. இந்த புடவை எடுத்த அப்புறம் நமக்கு இன்னும் பர்சேஸ் பண்ற வேலை நிறைய இருக்கு.
     எது உனக்கு ஓகேன்னு சொல்லு” என்ற பார்வதியின் கேள்விக்கு பதில் விக்ரமிடம் இருந்து வந்தது. “ஐயோ அம்மா! இன்னும் அவனுக்கு மேலிடத்தில இருந்து உத்தரவு வரலை.
     அதான் சார் அந்த உத்தரவுக்காக போனை பார்த்து தவம் செஞ்சிட்டு இருக்கார்” என்றான் நக்கலாக. அவனை நிமிர்ந்து முறைத்த ஹர்ஷாவும் எதுவும் சொல்லாது மீண்டும் கைப்பேசியை பார்த்தான்.
     விக்ரம் பதிலில் குழம்பிய பார்வதி தான் “என்னடா சொல்ற” என்றார் கடுப்பாக. “அது ஒன்னும் இல்லை மா. அங்க என் சகோதரி அனுக்கு என் மச்சான் புடவை போட்டோவை அனுப்பி இருக்கான்.
     அவங்க எது ஓகேன்னு சொல்றாங்களோ அதை செலக்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டான். அதான் என் தங்கச்சி பதிலுக்கு ஐயா வெய்ட்டிங்” என ஹர்ஷாவின் மனநிலையையும் கிண்டல் கலந்து தெரிவித்தான் விக்ரம்.
     இப்போது புரிய “ஓஓ.. அதுதான் விஷயமா! சரி ஹர்ஷா நம்ம‌ அனு சொல்ற புடவையை எடுத்து பில் பண்ண அனுப்பிடுப்பா. நாங்க போய் மத்தவங்களுக்கு டிரஸ் கொஞ்சம் பர்சேஸ் பண்ணிட்டு வந்திடுறோம்” என்று கிளம்பி விட்டார்.
     இங்கே அனுக்ஷ்ராவிற்கோ எந்த புடவையை தேர்வு செய்வது என புரியவில்லை. “என்னடா இது எல்லா ஸாரியும் ரொம்ப நல்லா இருக்கு. இதுல எதை எடுக்க. ஒன்னும் புரியலையே!!” என வாய்விட்டே புலம்பினாள்.
     அவள் அருகில் இருந்த மாணவியோ அனு தானாக பேசியதில் ‘இவளுக்கு என்ன ஆச்சு? தானா பேசிட்டு இருக்கா?’ என ஒரு மாதிரி பார்த்து வைத்தாள்.
     ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத அனுவோ புகைப்படங்களில் கவனம் வைத்தாள். ஒருவழியாக பச்சை நிறத்தில் ஊதா பார்டர் வைத்து அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த ஒரு புடவையை தேர்வு செய்து முடித்தாள்.
     அவள் அதை ஹர்ஷாவிற்கு அனுப்பியபோது அரை மணி நேரம் முடிந்திருந்தது. அந்த அரைமணி நேரமும் ஹர்ஷா கைப்பேசியையே வெறித்தானே ஒளிய அவளை சீக்கிரம் பதில் அனுப்ப சொல்லி தொல்லை செய்யவே இல்லை.
     இவ்வளவு நேரமும் அவன் எப்படி பொறுமையாக இருந்தான் என ஹர்ஷாவே உணரவில்லை. அனு அந்த அளவு அவன் மனதில் நங்கூரம் இட்டு அமர்ந்து விட்டாள் என்றாள் அது மிகையாகாது.
     இங்கே அனுவிற்கு ஹர்ஷா தன் முடிவுக்கு அவ்வளவு மதிப்பு கொடுத்து பொறுமையாக இருந்து அவளுக்கு பிடித்த உடையை தேர்வு செய்ய வைத்தது என ஒவ்வொன்றும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது‌.
     இதில் இந்த அரை மணி நேரம் அந்த வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியே சென்று அடுத்த வகுப்பின் ஆசிரியர் உள்ளே வந்தது என எதுவும் அனுவின் கருத்தில் பதியாது செல்ல,
     அனுவோ ஹர்ஷாவின் நினைவில் அவனை பற்றியே யோசித்து இப்போது கனவு காண சென்றுவிட்டாள்.
     அங்கே அனு அனுப்பிய புடவை ஹர்ஷாவிற்கு மிகவும் பிடித்துப் போகவே அதை எடுத்து கொண்டான். பின் அவனுக்கும் சில உடைகளை எடுத்து முடிக்க அனைத்தையும் வாங்கிக் கொண்டு அனைவரும் கடையை விட்டு கிளம்பினர்.
     விக்ரமுடன் பேசிக் கொண்டே வந்த ஹர்ஷா அப்போது எதிரே வந்த ஒரு நடுத்தர வயது தம்பதியை கவனிக்காமல் அந்த பெண்மணியின் மீது மோதி விட்டான். அதில் அவன் கைகளில் இருந்த பைகள் கீழே விழுந்தது.
     “சாரி.. சாரி மேடம்!!” என்றவாறு தன் கைகளில் இருந்து விழுந்த பைகளை எடுத்துக் கொண்டு ஹர்ஷா மன்னிப்பை வேண்டியவாறு சென்று விட்டான். ஆனால் அந்த பெண்மணியோ ஹர்ஷாவின் முகத்தை கண்டு அதிர்ந்து அங்கேயே நின்றுவிட்டார்.
     அந்த பெண்மணியின் கணவர் அசையாது நின்ற தன் மனைவியை “என்னமா என்ன எங்கையோ பார்த்து நின்னுட்ட? என்னாச்சு” என்றார் கேள்வியாய்.
     அப்போது தான் அதிர்வில் இருந்து மீண்டு வந்திருந்த அந்த பெண்மணி “நம்ம புள்ளங்க! நம்ம புள்ள” என்றவர் அவசரமாக அவன் சென்ற திசை நோக்கி கிட்டத்தட்ட ஓடினார்.
      அவர் பின்னே சென்ற‌ அவரின் கணவரோ “என்னமா சொல்ற?” என்றார் புரியாது. “ஐயோ நம்ம மூத்த பையன்ங்க. நான் பார்த்தேன். அது நிச்சயமா அவன் தான்” என்றார் தவிப்பாக.
     அவர் முகத்தை வேதனையாக பார்த்த கணவர் “அதெல்லாம் இல்லைமா. நம்ம மூத்த பையன் இப்போ உயிரோட இல்லைடாமா. அந்த உண்மையை புரிஞ்சுக்க மா.
     நீ தேவையில்லாம மனசை குழப்பிக்காத” என்று ஆறுதலாக பேச “அவன் கண்டிப்பா நம்ம பையன் தான். அப்படியே சின்ன வயசுல அப்பாவ பார்த்த மாதிரியே இருந்தது.
     நான் சொல்றது உண்மை தாங்க. என்னை நம்புங்க. நான் உளறலாம் இல்லை. பிளீஸ் வாங்க போய் பார்க்கலாம்” என்றார் தவிப்பாக.
     அவர் மனைவியின் வருத்தம் அவரையும் பாதிக்க அந்த பெண்மணியை முயன்று சமாதானம் செய்து அழைத்துச் சென்றார் அந்த பாசமான கணவர்‌.
     மனிதன் ஒரு செயலை செய்ய மனதில் பல திட்டம் தீட்டினாலும் அங்கே கடவுள் விதியென என்ன எழுதி இருக்கிறான் என இந்த மனித இனத்தால் என்றும் அறிந்து கொள்ள முடிவது இல்லையே!!

Advertisement