Advertisement

     தங்களையே பார்த்திருந்த ஹர்ஷாவின் முன் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தனர் விக்ரமும் அபிமன்யுவும். அவன் முகத்தை வைத்து அவன் மனதில் என்ன இருக்கிறது என இருவராலும் யூகிக்க முடியவில்லை.
     “உங்ககிட்ட என்னடா சொல்லிட்டு போனேன். ஒரேயொரு போன் நம்பர். அதை உங்களால வாங்கிட்டு வர முடியலையா?” என்று இருவரிடமும் ஆதங்கமாக கேட்டு கொண்டிருந்தான் ஹர்ஷா.
     விக்ரமிற்கு ஹர்ஷாவை பார்க்க பாவமாக இருந்தது. தாங்கள் என்ன கேட்டாலும் ஏன் கேட்காமல் போனாலும் தங்களுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்து கொடுப்பவன் ஹர்ஷா.
     ஆனால் தன்னிடம் முதல் முறை அவன் ஒன்று கேட்டிருக்க அதை செய்துக் கொடுக்க முடியாமல் வந்தது மனதை பிசைந்தது.
     “ண்ணா உன் வருங்கால மாமனார் கொஞ்சம் டெரர் போல‌. நான் அண்ணிக்கிட்ட நம்பர் கேட்ட உடனே அதலாம் தரமுடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. நாங்க என்ன ண்ணா செய்றது” என்றான் அபிமன்யு இடையே.
     அப்போது தான் ஹர்ஷாவும் பெண் வீட்டில் எங்கே தன் குடும்பத்தை அவமானப்படுத்தும்படி ஏதேனும் சொல்லி விட்டார்களோ என சிந்தித்தான்.
     அதன்பொருட்டு “அங்க அப்பா அத்தை மாமாவ இன்சல்ட் பண்ற மாதிரி எதுவும் பேசிடாங்கலா டா” என்றான் பதட்டத்துடன். தனக்காக பெண் பார்க்க சென்று எங்கே தன் குடும்பம் அவமானம் பட்டுவிட்டனரோ என பதறியே கேட்டான் ஹர்ஷா.
     அதற்கு “அவங்களை‌ எல்லாம் ஒன்னும் சொல்லலை ண்ணா.‌ ஆனா அவரு கொஞ்சம் வெரப்பா தான் இருந்தாரு. அண்ணியோட அம்மா கூட தயங்கி தயங்கி தான் பேசுறாங்க.
     இதில‌ அண்ணிய பத்தி சொல்லவே வேணாம். பேசவே காசு கேப்பாங்க போல. ஆனா அவங்ககிட்ட உன்னை பிடிச்சிருக்கான்னு கூட யாருமே கேக்கலை ண்ணா. நான் போன் நம்பர் கேட்ட உடனே டக்குன்னு திரும்பி அவங்க அப்பாவ பார்த்தாங்க பாரு.
     அப்போ கன்பார்ம் பண்ணுனேன் ண்ணா. உன் மாமனார் ஒரு டெடர் பீஸ்னு” என அபிமன்யு தான் ஆராய்ந்தவற்றை சொல்லி முடித்தான்.
     அவன் கூறியவற்றை கேட்டு வியந்த விக்ரம் “ப்பா.. என்னா ஒரு ஆராய்ச்சி. எப்படிடா இப்படி அலசி ஆராஞ்ச” என்றான் நக்கலாக. “என்ன மாமா நக்கலா” என்று தலையில் தட்டினான் அபி.
     இவர்கள் வம்பிழுத்து விளையாடிய போது ஹர்ஷாவின் முகம் தீவரமான சிந்தனைக்கு சென்றது இவர்கள் கருத்தில் பதியவில்லை. “அபி அப்பாகிட்ட போய் மிஸ்டர். விஸ்வநாதன் நம்பர் வாங்கிட்டு வா” என்றான் ஹர்ஷா தீடீரென.
     ஒரு நிமிடம் ஹர்ஷா எதற்கு கேட்கிறான் என்றே புரியவில்லை அபிக்கு. ‘சரி போவோம்’ என எண்ணி “இதோ போறேன் ண்ணா” என கிளம்பி விட்டான். விக்ரம் ‘எதோ முடிவு பண்ணிட்டான் போலையே.
     என்னன்னு ஒன்னும் தெரியலையே. கேட்டாலும் சொல்ல மாட்டான். ம்ஹூம்’ என பெருமூச்சுடன் ஹர்ஷாவின் முகத்தையே பார்த்திருந்தான்.
     அபிமன்யு வரும் வரை அங்கு அமைதியே நிலவியது‌. “அண்ணா இந்த நம்பர் தான்” என விஸ்வநாதனின் எண்ணை தந்த அபி “ஆமா எதுக்கு ண்ணா அவர் நம்பர்?” என்றான் கேள்வியாய்.
     அதை கண்டுகொள்ளாத ஹர்ஷா தன் வருங்கால மாமனாரான விஸ்வநாதனை கைப்பேசியில் அழைத்தான். அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது.
     “வணக்கம் சார். நான் ஹர்ஷவர்தன் பேசுறேன்” என ஹர்ஷாவே உரையாடலை துவங்கினான். திடீரென மாப்பிள்ளை அழைத்து பேசவும் சட்டென அலெர்ட் மோட் போன விஸ்வநாதன் “சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை” என்றார் பவ்யமாக.
     “சார் நான் உங்க பொண்ணு கிட்ட பேசனும். கொஞ்சம் போனை குடுக்க முடியுமா” என்றான் எந்த தயக்கமும் இல்லாமல் நேரடியாக. “எதுக்கு மாப்பிள்ளை?” என்ற விஸ்வநாதன் மனதில் எதற்கு தர வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் இருந்தார்.
     “அது ஒன்னும் இல்ல சார். உங்க பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க தான். பிகாஸ் இப்ப இருக்க காலத்தில‌ யாரையும் நம்ப முடியாது பாருங்க.
     அதான் உங்க பொண்ணு வாயாலையே அவங்களுக்கு இந்த மேரேஜ்க்கு ஓகேன்னு சொல்லிட்டா பிராப்லம் வராதுல. அதுக்கு தான் நம்பர் கேட்டேன்” என்றான் வெட்டும் குரலில்.
     ஹர்ஷா வேண்டும் என்றே தான் இப்படி குதர்கமாக பேசினான்.‌ அதற்கு விஸ்வநாதனை பற்றி அவனுக்கு அபி சொன்ன தகவல்கள் ஒரு காரணம். அதற்கு மேல் முக்கிய காரணம் ஒன்று உண்டு.
     அது என்ன என்றால் அவனின் அனு அவனை உண்மையிலே பிடித்து தான் திருமணம் செய்ய சம்மதித்து இருக்கிறாளா என்று அறியவிடாது என் வளர்ப்பு அது இதுவென விஸ்வநாதன் பேசி வைத்தது தான்.
     அதிலும் ஆண் பெண் என எந்த பேதமும் இன்றி வளர்ந்து அனைவருடனும் நன்றாக பழகும் ஹர்ஷாவிற்கு விஸ்வநாதனின் செயல் எரிச்சலை தான் கிளப்பியது‌.
     எந்த ஒரு ஆணும் தான் திருமணம் செய்ய போகும் பெண் தன்னை பிடித்து அந்த திருமணத்தில் உடன்பட வேண்டும் என்று எண்ணுவது உண்டு. அதற்கு ஹர்ஷா மட்டும் விதிவிலக்கா என்ன.
    ஆனால் இதை புரியாத விஸ்வநாதன் மீண்டும் ஹர்ஷாவுடைய கோபத்தை ஏற்றினார். “என்னோட பொண்ணை நான் அப்படி எல்லாம் வளர்க்கலை மாப்பிள்ளை. அதுலாம் அவ நான் சொல்றத மீற மாட்டா” என்றார் பெருமிதமான குரலில்.
      “சார் எனக்கு ஒன்னு புரியலை. ஒரு போன் கால் உங்க பொண்ணு கிட்ட பேச விடாம செய்றீங்கலே. அப்போ என்‌ மேல நம்பிக்கை இல்லாம தான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தர சம்மதம் சொன்னீங்கலா என்ன?” என்றான் வேண்டும் என்றே குரலில் ஆச்சரியம் காட்டி.
     அப்போது தான் பேச்சு போகும் திசையை உணர்ந்த விஸ்வநாதனுக்கு திக்கென்றது. சரி ஒரு முறை தானே பேசிவிட்டு போகட்டும் என அனுவை அழைத்து விட்டார் விஸ்வநாதன்.
     அனு அருகில் வரவும் கைப்பேசியை தந்த விஸ்வநாதன் பேசு என்று விட்டு அவள் அருகிலே நின்றுக் கொண்டார். அனுவிற்கு என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை.
     கைப்பேசியை வாங்கி காதில் வைத்து “ஹலோ” என்றாள். அதன்பின் தான் ஹர்ஷாவின் முகத்தில் புன்னகையே வந்தது. அவனும் “ஹலோ” என்றான்.
     பின் “அனு நான் ஹர்ஷவர்தன் பேசுறேன்” என்றான்.‌ இப்போது அனுவிற்கு மனதிற்குள் படபடவென வந்தது. இடையில் விஸ்வநாதன் வேறு “பேசுமா பேசு” என்க அதுவும் அச்சுரம் பிசகாமல் ஹர்ஷாவின் காதில் விழுந்தது.
     ‘போன் தான் தந்திட்டாரே. அப்புறம் என்ன பக்கத்திலே நிக்கிறாரு’ என எண்ணினாலும் அனுவிடம் “என்ன கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?” என்றான் சுற்றி வளைக்காமல்.
     “புடிச்சிருக்குன்னு சொல்லு” என்ற விஸ்வநாதன் குரல் தான் முதலில் கேட்டது. அதன் பின் தான் அனுவின் குரலில் “ம்ம் சம்மதம்” என்ற சொல் தயங்கி தயங்கி வந்தது‌.
     ‘இவ்ளோ பேசி எதுக்குடா சம்மதம் கேட்டோம்’ என்றாகிவிட்டது ஹர்ஷாவிற்கு. பின் அவள் என்ன படிக்கிறாள் என்ன கல்லூரி என கேட்டு விட்டு வைத்துவிட்டான் ஹர்ஷா.
     ஏனோ விஸ்வநாதனை முதலில் இருந்தே பிடிக்காமல் போக ஆரம்பித்தது ஹர்ஷாவிற்கு. எப்போதும் அனைவரின் பக்கமும் இருந்து யோசிக்கும் ஹர்ஷா இவரின் விஷயத்தில் மட்டும் பிசகுவது தான் அவனுக்கும் தெரியவில்லை.
     ஒருவேளை அவர் செய்த கர்மவினை தற்போது திரும்பி தாக்க தயாராகிறதோ? அதை அவரும் உணரும் தருணம் கூடிய சீக்கிரம் வரப்போவதை அவரும் அறியவில்லை.
     என்றும் இல்லாமல் இன்று காலையில் எழுந்தது முதல் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தாள் அனு. அது நேற்று ஹர்ஷா அவளிடம் பேசியதற்கு பின் ஏற்ப்பட்டு விட்டது.
     வீட்டில் இருந்த எல்லோரும் ஏன் அவள் அன்னை உட்பட அவளிடம் மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
     அவளுக்கு அது பழகிய ஒன்று என்றதாலே ரித்து கேட்டபோதும் சமாளித்து இருந்தாள். ஆனால் இனி காலம் முழுவதும் வாழப்போவது தான் தன்னிடம் ஒன்றும் கேட்கவில்லையே என மனதில் ஒரு சிறு சுணக்கம் இருக்கவே செய்தது.
     நேற்று ஹர்ஷா அழைத்து அவள் விருப்பத்தை மதித்து கேட்டது அவளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவனோடு தன் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என இப்போது திடமாக நம்பினாள் அனு.
     எனவே மனது தெளிவாக இருக்க அதுவே முகத்துக்கு நல்ல தேஜசை தந்தது. அதே மகிழ்ச்சியோடு கல்லூரி சென்றாள். அதே நேரம் வகுப்புகள் முடிந்து வந்த இடைவெளியின் போது ஹர்ஷாவே நேராக அவளை பார்க்க வந்தது அவளின் இதயத்துடிப்பை ஏகத்துக்கும் ஏற்றி வைத்தது.
     திடீரென வந்து நின்ற நபர் தன்னிடம் தனியே பேச வேண்டும் என கூற புரியாது விழித்தாள் அனு. ஏனெனில் அவளுக்கு தான் ஹர்ஷாவை புகைப்படத்தில் கூட யாரும் காட்டவில்லையே.
     அவளிடம் தான் ஹர்ஷவர்தன் என அந்த நபர் அறிமுகம் செய்து கொண்ட பின் அவளுக்கு உள்ளே உதறல் எடுக்க ஆரம்பித்தது. பின் கல்லூரி கேன்டீனிலே அமர்ந்து பேச அழைத்து சென்றான். ஒருவித பயத்திலே அனுவும் சென்றாள்.
     தன் முன்னால் தலையை கவிழ்ந்தவாறு நகத்தை நோண்டி கொண்டிருந்த அனுவை கண்டு சத்தம் வராமல் சிரித்த ஹர்ஷா “அனு” என்றான் மெல்லிய குரலில்.
     அவள் நிமிரவில்லை எனவும் “அனு அனுக்ஷ்ரா கொஞ்சம் என்னை பாரேன்” என்றான் ஆசையாய். சிறிது தயங்கிய அனு மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
     இப்போது விரிந்த புன்னகையுடன் “ம்ம் இப்போ சொல்லு. உனக்கு உண்மையாவே இந்த மேரேஜ்ல சம்மதம் தானே. இல்லை வீட்ல சொன்னதால ஓகே சொன்னியா?” என்றான்.
     ‘நேத்தும் கேட்டீங்களே?’ என்று தான் பார்த்தாள். ஆனால் பேசவில்லை. அவள் நினைதத்து புரிந்ததோ இல்லையோ அவனாகவே தொடர்ந்தான்.
     “அது நேத்து நீ போன்ல பேசினப்போ பாதி உன் அப்பா பேசினது தான் என் காதுல விழுந்துச்சு. இதுல உனக்கு ஓகேவா இல்லையான்னு எனக்கு ஒன்னும் புரியல.
     சோ அதான் நேர்லையே கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்துட்டேன். சரி சொல்லு சொல்லு” என்று சிரித்தான் ஹர்ஷா. ஆனால் அனுவோ வெட்கத்தால் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
     சிறிது நேரம் பார்த்த ஹர்ஷா “ஓஓ… அப்போ என்னை பிடிக்கலையா?” என்றான் சிறிது வருத்தமான குரலில். அவனின் வருத்தம் அனுவை ஏதோ செய்ய “இல்ல எனக்கு உங்கள‌ புடிச்சிருக்கு” என்றாள் தயங்கியபடி.
     இப்போது “என்ன சொன்ன. எனக்கு ஒன்னும் கேக்கல” என்றான் ஹர்ஷா அவளை வம்பிழுக்கும் நோக்கத்தில். அவன் தன்னை வம்பு செய்கிறான் என புரிந்த அனுவின் முகம் சிவந்து விட்டது.
     “என்ன சொல்ல மாட்டியா?” என்றான் மீண்டும். ‘ஆண்டவா! ஏன் இப்படி செய்றாரு’ என எண்ணிய அனு “பிளீஸ்” என்றாள் மெதுவாக. அவளின் முகம் கண்டு பாவம் பார்த்து அவளை விட்ட ஹர்ஷா அவளின் கைப்பேசியை அடுத்து கேட்டான்.
     “எதுக்கு?” என்றாள் தயக்கமாக. “ஏன் நான் கேட்டா தரமாட்டியா?” என்றான்‌ சற்று கோபம் போல். அவன் கோபப்படுகிறான் போல என பயந்துவிட்ட அனு சட்டென்று எடுத்து தந்துவிட்டாள்.
     அவளை புன்சிரிப்புடன் பார்த்த ஹர்ஷா முதலில் அவளின் எண்ணை தன் கைப்பேசியில் சேமித்து கொண்டான். “இனிமே நான் பிரீயா இருக்கப்போ நான் கால் இல்ல மெசேஜ் பண்ணுவேன்.
     நீ ரிப்ளை பண்ணனும் புரியுதா” என்றவாறு அவளிடம் கைப்பேசியை தந்துவிட்டு கிளம்பி விட்டான். அனு தான் அவன் வந்ததில் இருந்து நடந்தவற்றை நினைத்துக் கொண்டு ஒருவித மோன நிலையிலே வகுப்பிற்குள் நுழைந்தாள்.
     வகுப்பில் கவனம் இல்லாது ஏதோ போல் இருந்த அனுவை வகுப்பே விசித்திரமாக பார்த்து வைத்தது. எப்போதும் படிப்பு படிப்பு என இருப்பவள் இன்று இப்படி இருந்தால் அவர்களும் தான் என்னவென்று நினைப்பர்.
     அனுவை பார்த்து விட்டு சென்ற ஹர்ஷாவின் நிலையும் அதே போல் தான் இருந்தது. இருந்த மகிழ்ச்சியில் அவன் வாகனம் சாலையில் அழகிய ரிதத்தில் பயணித்தது.
-மீண்டும் வருவான்

Advertisement