Advertisement

     “மீனாட்சி எல்லாம் ரெடியா இல்லையா?” என்ற விஸ்வநாதனின் அதட்டல் குரல் எப்போதும் போல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
     அதற்கு பதிலாக “இதோ ரெடி ஆகிருச்சுங்க” என்ற மீனாட்சியின் குரலும் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தது. அனுவின் அறையில் ரித்து அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.
     “அக்கா உனக்கு மாப்பிள்ளை போட்டோவ மாமா காட்டுனாறா க்கா?” என்றாள் ஆர்வமாக. அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்த அனு இல்லை என்பதாய் தலை அசைத்தாள்.
     “என்ன க்கா சொல்ற. போட்டோ கூட பார்க்காம ஓகே சொல்லிட்டியா. ஏன் க்கா?” என்றாள் புரியாமல். “அதான் அப்பா விசாரிச்சு அவர் நல்லவருனு சொல்லிட்டாரே. அது போதும் ரித்து” என்றாள் அனு நம்பிக்கையாக.
     “ஆனா அக்கா ஒரு வேளை வர மாப்பிள்ளை பார்க்க நல்லா இல்லைனா என்ன செய்றது‌. உனக்கு பிடிச்சு இருக்கா இல்லையா அப்படின்னு ஒருத்தர் கூட கேக்க மாட்டேங்குறாங்க.
     நீயும் எதுவும் சொல்லாம ரெடி ஆகிட்டு இருக்க” என்று ரித்து பொறிந்து தள்ளினாள் ஆதங்கமாக. ரித்துவின் பேச்சை சிரிப்புடன் கேட்டிருந்த அனு
     “ரித்து அழகுனு நீ எதை சொல்ற. முகம் மட்டும் அழகா இருந்து என்ன பயன் சொல்லு. மனசும் அழகா இருப்பது ரொம்ப முக்கியம். அப்பா நம்மகிட்ட ஸ்ரிக்ட்டா தான் இருப்பார்.
     ஆனா நம்ம மேல அவருக்கு அக்கறை இல்லைன்னு சொல்லிடுவியா. அவர் கண்டிப்பா மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சு தான் வர சொல்லி இருப்பார்.
     அதுவும் இல்லாம தாத்தாவும் அவங்க போமிலிய பத்தி நல்ல விதமாக தானே சொன்னார். சோ அதை பத்தி கவலைபடவே வேண்டாம்” என்ற அனு தன்னை தயார் செய்துக் கொண்டாள்.
     வெளியே சத்தம் கேட்கவே ரித்து வேகமாக சென்று பார்த்து வந்தவள் “அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாம் வந்துட்டாங்க” என்றாள் குதூகலமாக.
     என்னதான் வெளியே மௌனமாக புன்னகை சிந்தினாலும் அனுவிற்கு மனதின் உள்ளே சற்று படபடப்பாக இருந்தது அவள் மட்டுமே அறிந்த உண்மை.
     ஆனால் இங்கே எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளையாகிய ஹர்ஷாவை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் தான் வருகை தந்திருந்தனர்.
     விஸ்வநாதன் மட்டுமே ஹர்ஷவர்தனின் புகைப்படத்தை கண்டிருந்ததால் ‘மாப்பிள்ளை எங்கே காணோம்?’ என பார்த்திருந்தார். வீட்டில் இருந்த மற்றவர்கள் அங்கு வந்திருந்த விக்ரம் மற்றும் அபிமன்யுவை ‘இதில் யார் மாப்பிள்ளை?’ என பார்த்திருந்தனர்.
     அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக “மாப்பிள்ளை வரலையா?” என்றார் விஸ்வநாதன் பொதுவாக அனைவரையும் பார்த்து. அந்த கேள்வியில் ஒருவர் மற்றவர் முகத்தை சங்கடமாக பார்த்து கொண்டனர்.
     காலையில் நடந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவு வந்தது. பெண் வீடு செல்ல அனைத்தையும் எடுத்து வைத்து முடித்தார் பார்வதி. ஹர்ஷா தயாராகி வந்த பின் கிளம்பலாம் என காத்திருந்தனர் வீட்டினர்.
     சில நிமிடங்களில் ஹர்ஷாவும் தன் அக்மார்க் புன்னகையுடன் வந்து சேர்ந்தான். படிகளில் இறங்கி வந்த ஹர்ஷாவை கண்ட போது பார்வதிக்கு ஒரு ராஜகுமாரன் இறங்கி வருவது போல் தான் தெரிந்தது.
     அவ்வளவு மிடுக்கோடும் கம்பீரத்துடனும் வந்த ஹர்ஷாவின் அந்த புன்னகை அவன் முகத்திற்கு இன்னும் அதிக தேஜஸை தான் தந்தது. ஹர்ஷா அருகே வந்தவுடன் நெட்டி முறித்த பார்வதி “அப்படியே சும்மா ஜம்முன்னு இருக்க குட்டி.
     என் கண்ணே பட்டுரும் போல‌” என்றவர் தன் கைகளால் திருஷ்டி கழித்தார் பார்வதி. இதை வீட்டினர் சிரிப்புடன் பார்த்திருந்தனர்.
     அப்போது ஹர்ஷாவின் அருகே வந்து அவனை கட்டிக் கொண்ட அபிமன்யு “சூப்பர் ண்ணா‌. செமையா இருக்க. பொண்ணு வீட்ல உன்னை பார்த்த உடனே ஓகே சொல்லி கல்யாண தேதிய குறிக்க போறாங்க பாரு” என்றான் ஆர்ப்பாட்டமாக.
     அப்படியே ஆதிராவும் தன் வாழ்த்துக்களை பகிர ஹர்ஷா தாத்தா தந்தை அத்தை மாமா என பெரியவர்களிடம் ஆசி பெற்று கொண்டான்.
     விக்ரம் மற்றும் அபியின் கேலி கிண்டலோடு உண்டு முடித்த வீட்டினர் ஒருவழியாக வீட்டை விட்டு கிளம்ப வெளியே வந்தனர். அந்நேரம் பார்த்து ஹர்ஷாவின் கைப்பேசி அலறி தள்ளியது.
     அதை எடுத்த ஹர்ஷாவின் முகமோ அந்தப்பக்கம் சொல்லப்பட்ட செய்தியினால் முற்றிலும் மாறியது. இவ்வளவு நேரம் இருந்த குறும்பு புன்னகை மாறி ஒருவித தீவிரம் வந்து ஒட்டிக் கொண்டது.
     பேசிக்கொண்டே மணியை பார்த்து “ம்ம்… ம்ம்.‌.. இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என்று கைப்பேசியை அனைத்தான் ஹர்ஷா.
     அவன் முகத்தை பார்த்திருந்த பார்வதி “என்ன ஆச்சு ஹர்ஷா குட்டி?” என்றார் பதட்டமாக. அவரின் பதட்டத்தை தணிக்கும் விதமாக அவர் கையை ஆதூரமாக பிடித்தான் ஹர்ஷா.
     “ஒரு எமர்ஜென்சி அத்தை. டூ டேஸ் முன்னாடி தான் ஆபரேஷன் செஞ்சேன்.‌ என்னோட பேஷன்ட். சோ டீட்டெயில்ஸ் எனக்கு தான் தெரியும். பிட்ஸ் வந்திருச்சாம்.
     நான் போயே ஆகனும் அத்தை” என்றான் தயக்கமாக. “ரொம்ப சீரியசா இருந்த கேஸா பா” என்ற ராஜசேகரின் கேள்விக்கு “இல்லை பா நல்லா தான் இருந்தார்.
     ஹெல்த் நல்லாவே ரெக்கவர் ஆகிட்டு தான் இருந்துது. எனக்கும் ஒன்னும் புரியல பா. போய் தான் பாக்கனும். ஓகே ப்பா நான் கிளம்பறேன்” என்று முடித்தவன் தன் காரை நோக்கி சென்றான்.
     பின் ஏதோ மனதில் சட்டென்று தோன்ற பார்வதியிடம் வந்தவன் “அத்தை அனுவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போ பொண்ணு பார்க்க நீங்க போய்ட்டு ஓகே சொல்லிட்டு வாங்க அத்தை” என்றான் கொஞ்சலாக.
     இவ்வளவு நேரம் பொறுப்பாக பேசிய ஹர்ஷாவா இது என யோசிக்கும் அளவு கொஞ்சலாக பேசிய ஹர்ஷாவின் கண்ணத்தை கையில் ஏந்திய பார்வதி
     “சரி ஹர்ஷா குட்டி. உனக்கு பிடிச்சு போச்சுல. அந்த பொண்ணு தான் உனக்கு சரியா. நாங்க பேசிட்டு நிச்சயத்துக்கு நாள‌ குறிச்சுட்டே வந்துடுறோம்” என்றார் வாஞ்சையாக.
     பார்வதியின் பதிலில் முகம் மலர்ந்த ஹர்ஷா “யூ ஆர் சோ சுவீட் அத்தை” என அவரின் கண்ணத்தில் முத்தம் இட்டு மருத்துவமனை நோக்கி அவன் காரில் பறந்தான்.
     ஒரு பெருமூச்சோடு இதை பார்த்திருந்த பார்வதிக்கு மனதுக்குள் ஏதோ உறுத்தினாலும் தான் பெறாத மகன் ஹர்ஷாவிற்கு பிடித்து போன இந்த பெண்ணை அவனுக்கு கட்டி வைத்தே ஆக வேண்டும் என குடும்பத்தினருடன் கிளம்பி விட்டார்.
     நடந்தவற்றை எண்ணி பார்த்த ஹர்ஷாவின் வீட்டினர் யார் சொல்வது ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொள்ள முடிவில் அனைவரும் ஒருசேர பார்வதியை பார்க்க ‘சரி நாமலே சொல்லுவோம்’ என்ற முடிவு செய்த பார்வதியும் மேலோட்டமாக அனைத்தையும் சொல்லி முடித்தார்.
     அதை கேட்ட விஸ்வநாதன் “ஓஓ.. ஒரு உயிரை தான காப்பாத்த போய் இருக்கார். அதனால‌ என்ன இப்போ” என்றவர் சிறிது யோசித்து “ஆனா அவருக்கு என் பொண்ண புடிச்சிருக்கா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கறது” என்று கேள்வியுடன் முடித்தார்.
     அவர் கேட்டவுடன் மகிழ்ந்த முகமாய் “அதுலாம் போட்டோ பார்த்த உடனே எனக்கு ஓகேன்னு சொல்லிட்டான். இப்பக்கூட போறதுக்கு முன்ன ‘எனக்கு ஓகே. நீங்க பொண்ண பார்த்துட்டு மேற்கொண்டு பேசுங்க’ அப்படின்னு சொல்லிட்டு தான் போனான்” என்றார் பார்வதி.
     “ஓஓ.. சரிங்க சரிங்க” என்று மகிழ்ந்தார் விஸ்வநாதன். ‘என்னடா இது சும்மா பேசிக்கிட்டே இருக்காங்க’ என கடுப்புடன் எண்ணிய அம்மு “பொண்ணு எங்க இருக்காங்க” என்று கேட்டுவிட்டாள் ஆர்வத்தில்.
     அவளை அழைத்த மீனாட்சி அனு இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார். வெளியே பார்வதி தான் அவர் குடும்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த தொடங்கினார்.
     உள்ளே நுழைந்த அம்மு அனுவை கண்டு “நீங்க தான் அனுவா?” என்று கேள்வியாக இழுக்க ஆம் என தலை அசைத்தாள் அனு. “வாவ்! சூப்பரா இருக்கீங்க.
     அதான் அத்தான் உங்கள‌ போட்டோல பாத்தே பிளாட் ஆகி ஓகே சொல்லிட்டாரு. உங்களுக்கு எங்க அத்தான‌ புடிச்சாருக்கா?” என்றாள் படபட பட்டாசாய்.
      “ஆனா என்ன பண்றது அத்தான் ஒரு எமர்ஜென்சி கேஸ்னு ஹாஸ்பிடல் போய்ட்டாரு. வீட்ல இருக்க மத்தவங்க தான் வந்திருக்கோம்” என சோகமாக முடித்தாள் அம்மு.
     ரித்து அம்முவிடம் “என்ன சொல்றீங்க. மாப்பிள்ளை வரலையா?” என்றாள் கேள்வியாக. அதன்பின் அம்மு வீட்டில் நடந்த நிகழ்வை கூறி ஹர்ஷா தனக்கு பெண்ணை பிடித்துவிட்டது என கூறியதையும் சேர்த்தே கூறி முடித்தாள்.
     அனுவிற்கு அம்முவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அதுவும் அவள் பேச்சு அவளை மேலும் கவர்ந்து விட்டது. ஏன் கூட இருந்த ரித்துவுக்கே அம்முவை பிடித்து போனது.
     அதன் பின் அனுவை மீனாட்சி வந்து அழைத்து சென்றார். பார்வதி அவளை தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டார். கூடவே அம்மு விக்ரம் அபி என இளையவர் பட்டாளமும் அமர்ந்து கொண்டனர்.
     ஆண்கள் தனியாக தொழில் நாட்டு நட்பபு என பேச இங்க பார்வதியோ ஹர்ஷாவின் புராணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். இதில் விக்ரம் அபி அம்மு என அவர்களும் ஹர்ஷா புராணம் பாட அனு கேட்டுக் கொண்டிருந்தாள்.
     அம்முவை எப்படி பார்த்தவுடன் அனுவிற்கு பிடித்ததோ அதே போல் “அண்ணி அண்ணி” என பேசிய அபியையும், தங்கை போல் எண்ணி “அனு தங்கச்சி” என உரிமையாய் பேசிய விக்ரமையும் பிடித்து விட்டது.
     மொத்தத்தில் தனக்கு வரப்போகும் கணவனை பிடிக்கும் முன் அவன் மொத்த குடும்பத்தையும் அனுவிற்கு பிடித்து போனது. இதையெல்லாம் மீனாட்சி மனநிறைவுடன் பார்த்திருந்தார்.
     ஹர்ஷா குடும்பம் வந்ததில் இருந்து இவர்கள் வீடு கலகலவென இருக்க அதுவே இவர்கள் குடும்பத்தை பிடிக்க ஒரு பெரிய காரணமாக அமைந்து விட்டது.
     பேச்சுவாக்கில் “ஆமா இந்த பொண்ணு யாரு?” என ரித்துவை ராஜசேகர் கேக்கவே அப்போது தான் விஸ்வநாதனும் தன் குடும்பத்தை பற்றி பேசினார். மேலும் அவர் தங்கை தங்கை கணவர் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றிருப்பதையும் கூறி முடித்தார்.
     ஒருவாறு எல்லாம் சுமூகமாக செல்லவே நிச்சய நாளை குறிப்பது பற்றிய பேச்சை எடுத்தார் பார்வதி. அதன்பின் தான் விஸ்வநாதனும் இதை குறித்து பேச ஆரம்பித்தார்.
     விஸ்வநாதன் தங்கள் ஜோசியரை அழைத்து நல்ல நாளை குறித்து தர வேண்டினார். பதினைந்து நாட்கள் கழித்து ஒரு நல்ல நாள் இருப்பதாக அவர் சொல்ல அன்றே நிச்சயம் செய்யும் நாளாக முடிவு செய்தனர்.
     இதற்கிடையில் விக்ரம் எதோ கேட்க வருவதும் தயங்கவுமாக இருக்க அவனை பார்த்த அபிமன்யு ‘என்ன’ என கண்களால் வினவினான். விக்ரமும் ஹர்ஷா அனுப்பிய செய்தியை காட்டினான்.
     ‘நான் பாத்துக்கிறேன்’ என ஜாடை செய்த அபி அனுவிடம் சென்று மெதுவாக “அண்ணி உங்க போன் நம்பர் தரீங்களா” என தயங்கியபடி கைப்பேசி எண்ணை கேட்டான்.
     ஆம் ஹர்ஷவர்தன் அனைவரின் முன்னும் கேட்க தயங்கியவன் விக்ரமிற்கு ஒரு செய்தியாக ‘பெண்ணின் எண்ணை பெற்று வரவும்’ என அனுப்பி வைத்திருந்தான்.
     அபியின் கேள்வியில் அனு சட்டென திருப்பி விஸ்வநாதனை தான் பார்த்தாள். இதை கேட்ட விஸ்வநாதன் “தம்பி நிச்சயம் கூட முடியலை. கல்யாணம் முடியாம என் பொண்ணு போன்ல எல்லாம் பேச மாட்டா. நாங்க அவள‌ அப்படி தான் வளர்த்து இருக்கோம்” என்றார் கடுமையான குரலில்.
     கேட்ட அனைவருக்கும் முகமே விழுந்து விட்டது. அபியோ ‘எந்த காலத்துல இருக்காரு இந்த ஆளு. போன்ல பேசறதுக்கும் பிள்ளைங்களை வளர்க்கறதுக்கும் என்னடா சம்மந்தம்’ என மனதினுள் திட்டிக் கொண்டிருந்தான்.
     ஹர்ஷா கேட்டு ஒரு விஷயத்தை செய்யாமல் செல்வது மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது.
      ஆனால் அதற்கு மேல் வருத்தி கேட்க யாருக்கும் மனது வராது போகவே சிறிது நேரத்தில் சொல்லிக் கொண்டு கிளம்பி எண்ணினர்.
     விக்ரமும் அபிமன்யுவும் தான் ‘ஹர்ஷா கேட்டால் என்ன சொல்ல போறோமோ’ என யோசித்தவாறு இருந்தனர்.
      நிச்சயதார்த்தத்திற்கு பதினைந்து நாட்கள் இருக்கவே இன்றே மாப்பிள்ளை வீட்டையும் பார்க்க முடிவு செய்த விஸ்வநாதன் அருணாசலம் குடும்பத்தினரோடு மீனாட்சி மற்றும் ஆதர்ஷை அழைத்து கொண்டு பார்த்து வர சென்றார்.
     அப்போது மீனாட்சி பூஜை அறையில் இருந்த சுபத்ராவின் புகைப்படத்தை காண விஸ்வநாதன் அதை பெரிதாக எடுக்காது வீட்டை மட்டும் பார்த்து சென்றது விதியின் செயலோ?

Advertisement