Advertisement

ரகுக் குல கர்ணா 1(a)
     நிலவு மகள் நட்சத்திரங்களை தோழிகளென கொண்டு தன் இணையாம் வானோடு வீதி உலா வரும் நேரம். அந்த இரவு வேளையிலே ஒரு பெண்ணின் அலறல் சத்தம் வீரிட்டு கேட்டது.
      அது ஒரு தனியார் மருத்துவமனை. அதில் பிரசவ அறை ஒன்றில் இருந்து வந்த ஒரு பெண்ணின் அலறல் சத்தம் தான் அது. அந்த அலறலுக்கு சொந்தகாரர் சுபத்ரா.
     சர்வ சாதாரணமாக பிற பெண்களுக்கு பிரசவம் பார்ப்பவர் தான் சுபத்ரா. ஆம் அவர் மகப்பேறு மருத்துவர்.
     இன்று தன் பிரசவ வலியில் உயிர் வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அவருக்கு இது தன்னுடைய கடைசி நிமிடங்கள் என தெரிந்தே இருந்தது.
       அவரின் அலறல் சத்தத்தை கேட்டு வெளியே பயத்தில் முகம் வேர்க்க கை கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தார் ராஜசேகர் அருணாசலம், பொதுநல மருத்துவர். சுபத்ராவின் கணவர்.
      அவரின் சொந்த மருத்துவமனையே அது. ராஜசேகர் மற்றும் அவர் மனைவி சுபத்ரா இருவரின் கடின உழைப்பால் உருவானது தான் அருணாசலம் மருத்துவமனை.
      அப்போது வந்து அவரின் காலை கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்த ஹர்ஷவர்தன், அவரின் ஐந்து வயது மகனை கூட பார்க்க திறனற்று நின்றிருந்தார்.
     அவனை தூக்கி சென்று சமாதானம் செய்து கொண்டிருந்தார் பார்வதி, ராஜசேகரின் தங்கை. என்றும் சிரித்த முகத்துடன் வளைய வரும் தன் சுபத்ரா அண்ணியை பார்வதிக்கு மிகவும் பிடிக்கும்.
      அவருக்கும் இப்போது மனம் முழுவதும் வேதைனையே‌. மேலும் அவன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதட்டத்துடன் தான் வெளியே காத்திருந்தனர்.
      அவர்களின் நிலமை இப்படி ஆகும் என எள்ளளவும் அவர்கள் எண்ணவில்லை. இதுநாள் வரை தன்னிடம் எதையும் கூறாது மறைத்த தன் மனைவியை எண்ணி அழுகை தான் வந்தது ராஜசேகருக்கு.
      ராஜசேகரும் சுபத்ராவும் காதல் மணம் புரிந்து கொண்டவர்கள். அதனால் பல வருடங்களாக குடும்பத்தில் இருந்து தனித்தே வாழ்ந்து வந்தனர்.
      இரு வருடத்திற்கு முன் தான் அவர்களை ராஜசேகரின் தந்தை அருணாசலம் ஏற்று கொண்டார். எனவே இப்போது ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
      அருணாசலம், இவரின் மனைவி இறந்து விட்டார். அவரின் மூத்த மகன் தான் ராஜசேகர். அவர் மனைவி சுபத்ரா, மகன் ஹர்ஷவர்தன்.
       அருணாசலத்தின் இளைய மகள் பார்வதி, கணவர் வேதாசலம், அவரின் மூன்று வயது மகன் விக்ரம் என கூட்டு குடும்பம். அருணாசலத்தின் மூத்த மகள் தன் கணவன் குழந்தைகளோடு ஊட்டியில் வசித்து வருகிறார்.
     இவர்கள் வசிப்பது சென்னையில் தான். தன் குடும்பத்தோடு சேர்ந்த பின்னர் ராஜசேகர் வாழ்க்கை இன்னும் வண்ணமயமானது.
     அப்போது தான் சுபத்ரா கருவுற்றார். அதில் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. குடும்பமே கொண்டாடி தீர்த்தது.
     தங்கள் மருத்துவமனையிலே வேறொரு பெண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டனர். எல்லாம் நன்றாக தான் சென்றது என்று நினைத்திருந்தார் ராஜசேகர்.
     ஆனால் அப்படி இல்லை. தன் மனைவியே அவ்வளவு பெரிய உண்மையை தன்னிடம் மறைந்திருப்பார் என கனவிலும் அவர் எண்ணவில்லை.
      ஏனெனில் சுபத்ராவின் கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது மற்றும் குழந்தை பிறக்கும் சமயம் அது உயிருக்கே ஆபத்தாகவும் வாய்ப்புள்ளது என மருத்துவர் எச்சரித்து இருந்தார்.
     ஆனால் அதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்லாது மறைத்து விட்டார்‌.
      தான் இல்லாது போனாலும் தன் குழந்தை வாழ வேண்டும் என்ற சராசரி தாயின் மனநிலை கொண்டது விதியா? அல்லது தாயின் மனதா?
     இதில் அந்த பெண் மருத்துவரையும் தனக்கு எதுவும் நேராது எனவே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
     தன் நாட்கள் இன்னும் சொற்பம் தான் இவ்வுலகில் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்த சுபத்ரா, தன் குடும்பத்தை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தார்.
      இச்சமயத்தில் சுபத்ராவிற்கு பிரசவ வலி வந்தது. தங்களின் மருத்துவமனையிலே சுபத்ராவை அனுமதித்தனர் குடும்பத்தினர்.
     அதுவரை சிறிய பயம் இருந்தும் பெரிதாக கலங்கவில்லை ராஜசேகர் ஏனெனில் அவர் இது போல் பல பிரசவத்தை நேரில் கண்டவரே.
      தைரியமாக இருந்த ராஜசேகருக்கு தலையில் பெரிய இடியை இறக்கினார் சுபத்ராவை பரிசோதித்த மருத்துவர்.
      அறையில் இருந்து வெளியே வந்தார் அந்த மருத்துவர். “சாரி டாக்டர் ராஜசேகர் இதை எப்படி சொல்றதுனு எனக்கு தெரியலை” என்றவர் சிறிது இடைவெளி விட்டு
     “அவங்க இப்ப ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ் ல இருக்காங்க. அவங்க கர்பப்பை ரொம்ப வீக். அதுக்கு குழந்தைய தாங்குற அளவு சக்தி இல்லை.
      ஆனா அவங்க இந்த குழந்தைய பெத்துக்கனும்னு ரொம்ப அடமென்டா இருந்தாங்க. சுபத்ரா டாக்டர் இதை உங்ககிட்ட சொல்லிருப்பாங்கனு தான் நான் நினைச்சேன்.
      ஆனா அவங்க சொல்லலை போல” என்றவர் மேலும் தபங்கவே முன்னே வந்த பார்வதி ” இப்ப என் அண்ணி எப்படி இருக்காங்க டாக்டர்.
      அவங்களுக்கு ஒன்னும் இல்லை தானே. பிளீஸ் சொல்லுங்க. ஏன் அமைதியா இருக்கீங்க” என்றார் அழும் குரலில்.
     தன் முன்னே இருக்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்த மருத்துவர் ” சாரி மேடம் அவங்கல காப்பாத்த சான்ஸ் ரொம்ப கம்மி தான்.
     அம்மா இல்லை குழந்தை ரெண்டு பேருல ஒருத்தர தான் காப்பாத்த முடியும்” என்றதும் தான் சுற்றி இருந்தவர்களுக்கு சுபத்ராவின் உண்மை நிலவரம் புரிந்தது.
     புரிந்த உண்மை அவர்களை நிலைகுலைய செய்தது. ராஜசேகருக்கு தன் மனைவி தன்னிடம் கூட கூறாது மறைத்து விட்டதை இன்னும் நம்ப முடியவில்லை.
     இதை கேட்டதும் நொருங்கிப் போய் சுவற்றை வெறித்தவர் தான் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட காணும் நிலையை தாண்டி இருந்தார்.
     அவரின் மனது பலவற்றை யோசித்தது. ‘என்னால் தானா, கடைசியில் எல்லாம் என்னால் தானா. நான் எவ்வளவு சொன்னே ஹர்ஷா மட்டும் போதும்னு.
     இப்படி பண்ணிட்டியே சுபா. என்னை விட்டுட்டு போக முடிவு பண்ணிட்டியா. ஏன் சுபா’ என மனதோடு மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
     அண்ணனின் நிலை கண்டு பார்வதியின் “அண்ணா. என்ன இது நீங்களே இப்படி உக்காந்துட்டா எப்படி. இங்க பாருங்க அண்ணிக்கு எதுவும் ஆகாது” என்ற சொற்களோ,
     “அப்பா! அப்பா!! அம்மா” என்ற ஹர்ஷாவின் அழுகுரலோ எதுவும் அவரை எட்டவில்லை. இதை கண்ட குடும்பத்தினருக்கு எப்படி இச்சூழ்நிலையை சமாளிக்க என்று தெரியவில்லை.
     இதில் பார்வதியின் கணவர் வேதாசலம் தான் அனைவரையும் தேற்றிக் கொண்டும், மருத்துவரிடம் பேசிக் கொண்டும் என நிலைமையை கையாண்டு வந்தார்.
     ஆனால் ‘அவ்வளவு பெரிய மருத்துவர்கள், சொந்த மருத்துவமனை என இவ்வளவு இருந்தும் என்ன பயன்’ என்ற எண்ணம் குடும்பத்தில் அனைவரும் தோன்றியே வேதனையை தந்தது.
     அப்போது அங்கே வந்த செவிலியர் சுபத்ரா அனைவரையும் காண விரும்புவதாக கூறினார்‌. ஆனால் அதை கூட உணரும் நிலையில் இல்லை ராஜசேகர்.
     அவரை அழைத்து பார்த்து பலன் இல்லை என்ற பின்னே பார்வதி மட்டும் செல்ல முயன்றார். இதுவரை நடந்தது அனைத்தையும் பார்த்து அழுது கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
     அவன் வயதிற்கு புரிந்த வரை தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்பது வரை புரிந்தது. எப்போது தாயை பார்ப்போம் என்று இருந்தவனுக்கு பார்வதி உள்ளே செல்வது தெரிந்தது.
     அவரிடம் ஓடியவன் “அத்தை என்ன அம்மாட்ட கூட்டி போ. நானும் வரேன் நானும்..” என்று அழ துவங்கினான். எனவே அவனையும் உடன் அழைத்துச் சென்றார் பார்வதி.
     உள்ளே வலியின் மிகுதியில் இருந்த சுபத்ரா தன் மகனை கண்டதும் மனம் முழுவதும் ரணம் ஆனதை போல் உணர்ந்தார்.
     அழுதுக் கொண்டிருந்த ஹர்ஷாவை அருகே அழைத்தவர் “ஹர்ஷா குட்டி அழக் கூடாது டா கண்ணா‌. அம்மாக்கு ஒன்னும் இல்லை….ஆ..ஆ
     அம்மா கொஞ்சம் நாள் சாமிய பார்க்க போறேன். ஆனா சீக்கிரம் உன்கிட்ட வந்துருவேன்” என்று கூறும் போதே “உங்களுக்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணி” என்றார் பார்வதி அழுகையுடன்.
     அவரை பார்த்து வலி மிகுந்த சிரிப்பை தந்தவர் “என்னோட நிலைமை எனக்கு தெரியும் பார்வதி” என்றார். பின் மீண்டும் மகனிடம் “இங்க பாரு கண்ணா. அம்மா கொஞ்ச நாள் இருக்க மாட்டேன்.
     அதனால அம்மா வேனும்னு சொல்லி அப்பா அத்தை தாத்தானு யாரையும் தொந்தரவு தரக்கூடாது. சரியா. சமத்தா இருக்கனும்.ஆஆஆ….
     அப்புறம் நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு தம்பி பாப்பா வரப்போறான். உன் அப்பா உன் தம்பி பாப்பா அப்புறம் தாத்தா அத்தைனு எல்லாத்தையும் நீதான் பாத்துக்கணும்.
     அம்மா உனக்காக கண்டிப்பா வருவேன் கண்ணா…” என்றார் தன் வலி நிறைந்த குரலில். பின் பார்வதியை நோக்கி ” பார்வதி என் ரெண்டு பசங்களையும் நீதான் பாத்துக்கணும்.
      எனக்காக செய்வியா” என்றார் இறைஞ்சலாக. “ஐயோ அண்ணி நீங்க இதை சொல்லனுமா. விக்ரமோட சேர்ந்து எனக்கு மூனு பிள்ளைங்க தான் எப்பவும்.
     நான் நல்லா பாத்துப்பேன். ஆனா உங்களுக்கு ஒன்னும் ஆகாது அண்ணி. நீங்க நல்லபடியா குட்டி பையனோட வருவீங்க பாருங்க” என்றார் பார்வதி.
      அப்போது நன்கு அழுதுக் கொண்டிருந்த ஹர்ஷாவின் அழுகையை தாளாது அவனை மீண்டும் அழைத்த சுபத்ரா,
     “அழக்கூடாது குட்டி. இங்க பாரு குட்டி. உன் பேர் மீனிங் அம்மா சொல்லிருக்கேன்ல ஹர்ஷவர்தன் அப்படினா ‘சந்தோஷத்தை உருவாக்கறவன்’னு.
     நீ எப்பவும் உன்னை சுத்தி இருக்க எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கனும். உன் தம்பியை அப்பாவ எல்லாரையும் பாத்துக்கனும்.
      குட்டி அழுதா அம்மாக்கு பிடிக்காதுல்ல. எப்பவும் என் ஹர்ஷா குட்டி சிரிச்சுட்டே இருக்கனும். அழாதடா கண்ணா.
     அதே மாதிரி யாரையும் அழ விடாத கண்ணா சரியா… ஆஆஆஆஆ….” என பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு தாங்க முடியாத வலி வரவே பார்வதியையும் ஹர்ஷாவையும் வெளியே அனுப்பி விட்டனர்.
     அன்னை சுபத்ரா சமாதானத்திற்கு கூறிய வார்த்தைகள் தான் அது. ஆனால் அது பசுமரத்தானி போல் ஹர்ஷா நெஞ்சில் பதிந்ததை அவர் அறிய மாட்டார்.
     அதை இருந்து பார்க்கவும் இருக்க மாட்டார். தன் அன்னை கூறியதை வேதவாக்காக எடுத்து வாழ்நாள் முழுவதையும் கடைபிடிக்க போகிறான் அவரின் அன்பு மகன் ஹர்ஷா.
      சுபத்ரா இங்கு தன் இறுதி நொடிகளில் இருந்தார். கடைசியாக வந்த ஒரு பெரும் வலியால் தன் இரண்டாம் மகனை ஈன்றவர் அவனின் முகத்தை தன் கண்களில் நிரப்பியபடி தன் உயிர் நீத்தார்.
      இத்தனை ஆண்டுகளாக தன் உயிரோடு கலந்து வாழ்ந்த கணவனின் முகத்தை கூட காணாது மண்ணுலகிலிருந்து தன் இன்னுயிரை பிரிந்து பறந்து சென்றார்.
     வெளியே அமர்ந்திருந்தார்கள் காதில் சுபத்ராவின் உச்ச சத்தம் கேட்டது உடன் குழந்தையின் அழுகுரலும். அப்போது தான் ராஜசேகர் தன் சுயம் பெற்றார்.
     மருத்துவர் வரவும் கடைசி நம்பிக்கை என வந்த அவரை ஆர்வமாய் பார்த்தனர். வந்தவர் “உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் டாக்டர்” என ஆரம்பித்தார்,
     பின் “அன்ட் வெரி சாரி டாக்டர். எவ்ளோ முயற்சி செஞ்சும் சுபத்ரா மேடம எங்களால காப்பாத்த முடியலை” என்று வருத்தத்தோடு முடித்தார்.
      அதை கேட்ட பின் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது ராஜசேகருக்கு. அவர் அப்படியே அமர்ந்து விட்டார்.
     அதன்பின் அவர் குழந்தையை அவரிடம் காட்டியதோ, அவர் மனைவியின் உடலோடு அவர்கள் இல்லம் வந்ததோ, மேற்கொண்டு நடைபெற்ற காரியங்களோ எதுவும் அவர் மூலைக்கு செல்லவில்லை.
     ஒரு மாதிரி பித்து பிடித்த நிலையில் தான் இருந்தார் ராஜசேகர். அவர் மனம் முழுவதும் தன் காதல் மனைவியின் நினைவுகளே.
     அவரை முதன் முதலில் சந்தித்தது. அவரிடம் தன் காதலை சொல்லியது. முதலில் மறுத்தவரிடம் மீண்டும் மீண்டும் சென்று தன்னை ஏற்க வைத்தது.
     இவ்வளவு நாட்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என ஒவ்வொரு நிகழ்வையும் மூலை அதுபோல் ஓட்டிக் கொண்டிருந்தது.
     யாருக்கு விதி என்ன வைத்திருக்கிறது என யார் அறிவார். அவன் சொல்லும் திசையில் பயணிக்கும் நாம் நம் பாதை முடிந்தவுடன் செல்ல வேண்டியது இயற்கை தானே!!
விதிர்த்து எழுகிறேன் தினமும்
நான் கண்ட கனவு கனவாய்
இருந்திடாதா எனும் ஏக்கத்தில்!!
மறந்திட்டேன் நீ என்றும் என் கனவாய்
சென்று வெகு தினம் ஆகியதை!!

Advertisement