யுகம் சுகம் தானே 8

“அங்க ஏதோ பிரச்சனை போல மேம்..” ஜின்னா உடனே கவனித்து ஷாவிடம் சொல்ல, திரும்பி பார்த்தவளுக்கு புரிந்து போனது இது பிரசாத் வேலை என்று

என்ன ஆச்சு மேடம்..?” மினிஸ்டர் கவனித்து கேட்க

ஹா சார் இது உங்க வீட்டு பங்க்ஷன்..” என்றாள் ஷா ஓட்ட வைத்த சிரிப்புடன்

ஆமாம்மா.. என்னன்னு தெரியலையே..” அவர் கலாதரனிடம் ஓடினார்

ண்ணா.. நாம என்ன செய்ய முடியும் பாருங்க, கலாதரன் அங்கிள் ட்ரிங் பண்ணியிருக்கார்..” ஷா வேகமாக ஜின்னாவிடம் சொல்ல,

அவர் பிரச்சனை பண்ணனும் தான் ட்ரிங்கே பண்ணியிருக்கார் பவ்யா.. இப்போ நாம உள்ள போனா சரி வராது, உதய் சார் பார்த்துப்பார்..” என்றான் ஜித்தன்

ஷாராவிற்கும் இது புரியஉதய்யை பார்த்தாள்காலதரன் முன் நின்று கத்தி கொண்டிருக்க, கைகள் கட்டி நின்றிருந்த உதய்யிடம்  ஒரு வித தீவிரம். அவனின் முகத்தில் என்ன பேசணுமோ பேசிக்கோ என்ற பாவனை தென்பட்டாலும், கண்களில் விபரீத ஒளி நிச்சயம் இருந்தது

கலாதரன்  தான்  எடுத்தவுடனே, “உதய்.. உதய் கிருஷ்ணா.. UK கன்சல்டன்ஸி.. இப்போ தான் முளைக்க ஆரம்பிச்சிருக்க  செடி.. லேசா ஒரு மிதி மிதிச்சாலே திரும்ப மண்ணோடு போயிடும் இல்லை..” என்று சொல்லியிருக்க, உதய்க்கு சுர்ரென்று பாய்ந்ததுஇவர்களுடைய நோக்கமே அவனை அழிப்பதாகவே இருக்க கண்டு கொண்டவன் முகத்தில் அவ்வளவு கோவம்.  

என்னடா.. அப்படி பார்க்கிற..?” கலாதரன் சீறி பக்கத்தில் இருந்த கண்ணாடி டம்ளரை ஓங்கி டேபிளில் அடிக்க, மொத்த இடமும் அமைதியானது

வந்திருந்த கெஸ்டுகள் எல்லாம் ஓரளவுக்கு கிளம்பியிருக்க, ட்ரிங்ஸ் பார்ட்டியில் இருந்தவர்கள், மினிஸ்டர் குடும்பம், உறவினர்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். எல்லோரும் அந்த இடத்தை நெருங்கியும் இருந்தனர்

மினிஸ்டரும் அவ்விடம் சென்று, “சார்.. என்ன ஆச்சு..?” என்று கலாதரனிடம் கேட்க

பாருங்க சார்.. நேத்து முளைச்ச காளான்  எவ்வளவு திமிரா பார்க்குதுன்னு..” அவரிடம் நக்கலாக சொன்னார் மனிதர்

சார்.. என் வீட்டு பங்க்ஷனுக்கு வந்திட்டு நீங்க இப்படி என் கெஸ்ட்கிட்ட நடத்துகிறது சரியில்லை..” மினிஸ்டர் கண்டிப்புடன் சொன்னார்

என்ன சார் பெரிய கெஸ்ட்.. இவன் எல்லாம் ஒரு ஆளா..? ஏதோ ஒரு தம்மாத்துண்டு ப்ராஜெக்ட் முடிச்சு கொடுத்துட்டா பெரிய பிஸ்தாவாகிடுவானா இவன்..”  கலாதரன் எகத்தாளமாக பேச, ஷாவிற்கு முகம் சிவந்து போனது கோவத்தில்.  

சித்தப்பா என்ன இது..?” பிரசாத் அப்போது தான் பார்ப்பது போல வந்து அவரை தடுத்தான்

விடு பிரசாத், இவனுக்கு மனசுல என்னமோ பெரிய இதுன்னு நினைப்பு, எப்போ பார்த்தாலும் அலட்சியமா, திமிரா தான் பார்க்கிறது, நம்ம ஸ்டேட்டஸ் என்ன இவன் ஸ்டேட்டஸ் என்ன..? நமக்கு முன்னாடி இவன் இப்படி நிக்கலாமா..?”  மேலும் பேச, உதய்யிடம் அப்போதும் எந்த மாற்றமும் இல்லை. அவன் பார்வை முழுதும் கலாதரன், பிரசாத் மட்டுமே

சார்.. என்ன பேசிட்டு இருக்கீங்க, வார்த்தை மாறுது, அப்பறம் வேற மாதிரி ஆகிடும்..”  உதய்யை  பேசின கோவத்தில் முகில் சண்டைக்கு போனான்

என்னடா வேற மாதிரி ஆகிடும்..? என்னை போய் என்னடா பண்ண முடியும் உங்களால.. பச்சா பசங்களா..?” கலாதரன் எகிறி முகில் முன் வந்து நின்றார்

ஏய் யாரை பார்த்து என்ன பேசுற..? ஏதோ வயசுக்கு மரியாதை கொடுத்தா என்ன வேணா பேசுவியா..?”  முகில் அவரிடம் ஏறி கொண்டே சென்றான்

முகில்.. என்ன இது..? அவர்தான் ஏதோ ட்ரிங் பண்ணிட்டு பேசுறார்ன்னா நாமளும் பேச முடியுமா..?” பிரசாத் சொல்ல

ஓஹ்.. ட்ரிங் பண்ணிட்டா எது வேணும்னாலும் பேசலாமா..?” முகில் பிரசாத்திடம் பேச

முகில்.. நீ அமைதியாயிரு..”  என்றான் உதய் அழுத்தமாக

“அட இதோ பார்றா..? சார் சொல்லிட்டார்..” கலாதரன் திரும்ப திரும்ப உதய்யிடம் ஏறி கொண்டு போக

சார்.. உங்க சித்தப்பாவை கூட்டிட்டு போங்க, ரொம்ப தப்பா இருக்கு..” புரிந்து கொண்ட  மினிஸ்டர் பிரசாத்திடம் சொன்னார்

அட மினிஸ்டரே.. என்ன இவனுக்காக எல்லாம் பார்க்கறீங்க, இவனுக்கு அவ்வளவு ஸீன் எல்லாம் கிடையாது, ஏதோ ராம் அவரோட பொண்ணை..”  சொல்லி கொண்டிருக்கும் போதே அவரின் வாயில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது

ஆஆஆஆ..” கலாதரன் வலியில் கத்த, எல்லோரின் கண்களும் உதய் மேலே. கண் இமைக்கும் நொடியில் அவன் கை கலாதரன் வாய்க்கு பூட்டு போட்டு விட்டது

உதய் இப்படி அடித்துவிடுவான் என்று அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதே நேரம் கலாதரன் ஷா  விஷயத்தை பேசுவார் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன்  பிரசாத்துமே தான். அவன் அவரிடம் சொன்னது வேறு

ஆனால் அவரோ போதையில் ஷா பற்றி பேச வர உதய் அவரின் வாயை அடைத்து.. ம்ஹூம்.. உடைத்துவிட்டான். அவனை பற்றி பேசிய போதெல்லாம் இருந்த நிதானம், ஷா பற்றி பேச வரும் போது இல்லாமல் போக அவரின் வாயை பேத்துவிட்டான்

எவ்வளவு தைரியம் இருந்தா அந்த விஷயத்தை இங்க பேச பார்ப்பாரு, அதுவும் இத்தனை பேர், வெளியே மீடியா எல்லாம் இருக்க..”  இன்னும் கோவம் அடங்காமல் நின்றவன், மறந்தும்  ஷாரா வை பார்க்கவில்லை

கலாதரன் வேறு ராம் பொண்ணு என்று சொல்லிவிட்டிருக்க, எல்லோரும் என்னவாக இருக்கும் என்று இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருக்க,  பிரசாத் உச்ச கட்ட கடுப்பில் நின்றிருந்தான். அவன் நினைத்தது வேறு நடப்பது வேறு

இவர் எதுக்கு இப்போ ஷா பத்தி  பேசணும்.. ஒரு வேலை ஒழுங்கா செய்றதில்லை. ச்சே..” என்று கலாதரனை உள்ளுக்குள் தாளித்தவன், “உதய்.. இப்போ எதுக்கு அவரை அடிச்ச..?” என்று அவனிடம் கேட்கவே  செய்தான்

என்ன பிரசாத் நீங்க தானே சொன்னீங்க அவர் ட்ரிங்ஸ் பண்ணிட்டு பேசுறார்ன்னா  நாமளும் பேசலாமான்னு, அதான் உதய் வாய் பேசவே இல்லை.. கை தான் பேசியிருக்கு..”  என்றான் முகில் கேலியாக

டேய்.. என் மேலயா கை வச்ச, உன்னை என்ன பண்றேன் பாரு..”  கலாதரன் ரத்தத்தை துடைத்து உதய் மேல் பாய போக, பின்னால் அவரை மிகவும் வலுவாக பிடித்திருந்தான் ஜின்னா. அவரால் ஒரு அடி கூட அசைய முடியவில்லை.   

டேய்.. எவன்டா அது.. என்னை விடுடா..” கலாதரன் திரும்பி பார்க்க முடியாமல் குதித்தார்

சார்.. நாங்க தான், பேசுனது போதும்கிளம்புங்க போலாம்..”  ஜித்தன் வர

நீங்களாடா..? என்ன அவனுக்கு சப்போர்ட்டா  என்னையே லாக் பண்றீங்களா..?” கலாதரன் திமிறி கொண்டு கத்தினார்

என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க, நாங்க ஏன் அவருக்கு சப்போர்ட் பண்ண போறோம், அவருக்கு அவரே போதும், உங்களுக்கு தான் எங்க சப்போர்ட் தேவை..” ஜித்தன் சீரியசாக நக்கல் பேசினான்

என்னடா என்னையே நக்கல் பேசுறியா..? நீங்க யாருக்கு சப்போர்ட்ன்னு எனக்கு தெரியாது நினைச்சீங்களா..? விட்றா என்னை..”  என்று திமிற, ஜின்னா மேலும் தான் பிடியை இறுக்கினான். அவர்களுக்கு ஷா பற்றி அவர் பேச வந்ததில் கடுமையான கோவம். பிடி வலிக்கும் படியே தான் இருந்தது.

“டேய்.. என்னை விடுடா, வலிக்குது, வெளியே இருக்க என் ஆளுங்க வந்தா அவ்வளவு தான் உங்களை.. பிரசாத்.. நம்ம ஆளுங்களை வர சொல்லு, என்னை அடிச்ச இவன் கையை உடைக்காம விட கூடாது.. வரச்சொல்லு..” என்று அவனிடம் கத்தினார் கலாதரன்

உதய்யோ.. வர சொல்லி தான் பாரேன்.. என்ற பார்வை பார்த்தான் பிரசாத்தை

அவனுக்கு அடுத்த என்ன மனதில் ஓடினாலும், உதய்யை விட கூடாது என்று தோன்ற, “உதய்.. என்ன இருந்தாலும் நீங்க என் சித்தப்பாவை அடிச்சிருக்க கூடாது, அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்க..”   என

உதய் முகத்தில் கேலி சிரிப்பு. “முடியாது..” வார்த்தை பட்டென வந்து விழுந்தது

என்ன முடியாதா..? என்ன மினிஸ்டர் சார் உங்க கெஸ்ட் என் சித்தப்பாவை அடிச்சிட்டு மன்னிப்பு கேட்க மாட்டேன் சொல்றார்..”  அவரிடம் கேட்க, அவரோ யாருக்கு பேசுவது என்று பார்த்தவர்

சார்.. உங்க சித்தப்பா தானே முதல்ல பேசுனார்..” என்றார்

அவர் பேசினா இவர் அடிப்பாரா..? மன்னிப்பு கேட்க சொல்லுங்க..”  அதிலே நின்றான். எப்படியாவது உதய்யை தலை குனிய வைத்துவிட வேண்டும் என்று குறிக்கோளுடன் செயல் பட்டான்

பிரசாத் நீ என்னடா இவர்கிட்ட பேசிட்டிருக்க, நம்ம ஆளுங்களை வச்சு இவன் கை காலை உடைக்காம..” கலாதரன் பேச, 

“சார்.. நீங்க  கொஞ்சம் சும்மா இருங்க, நீங்க தேவை இல்லாம பேசினதால தான் இவ்வளவு பிரச்சனையும்..” மினிஸ்டர் அவரிடம் எரிந்து விழுந்தார். 

“நான் என்ன தேவை இல்லாம பேசினேன், நடந்த உண்மையை தான் சொன்னேன், அதுக்கு போய் என்னை அடிப்பானா..?” கலாதரன் சொல்ல, 

“சித்தப்பா.. நீங்க சும்ம இருங்க, நான் பேசிக்கிறேன்..” அவரை அடக்கினான்  பிரசாத். 

“என்ன பேசுற நீ..? எதுக்கு பேசணும் முதல்ல, என்னை அடிச்ச இவனை ஒருவழி பண்ணாம என்ன பேச்சு வேண்டி கிடக்கு.. விடுடா என்னை முதல்ல, இவனை என்ன பண்றேன் பாரு..” என குதிக்க, ஜின்னா அவரை சட்டென விட்டுவிட்டான். 

குதித்து கொண்டிருந்த மனிதர் போதையில் நிற்க முடியாமல் கீழே விழுந்துவிட்டார். ஏற்கனவே உதய்யின் உபயத்தால் வாய் உடைந்திருக்க, இப்போது மூக்கும் உடைந்து போனது. ரத்தம் வழிய தள்ளாடி எழுந்து நின்றவரை பார்த்து அங்கிருந்த குழந்தைகள் சிரித்துவிட, கலாதரன்  சுற்றி இருந்த எல்லோரையும் பார்த்தார். 

உதய்யை அவமானப்படுத்த நினைத்து அவர் அசிங்க பட்டு போனதை புரிந்து கொண்ட கலாதரனுக்கு மனதில் அவ்வளவு வன்மம். திரும்பி உதய், ஜின்னாவை பார்த்த பார்வையில் ஷா வும் விழுக, இவளால் தானே இவ்வளவும் என்று நினைத்தவர், 

“என்ன அவனுக்கு சப்போர்ட்டா என்னையே ஆள் வச்சு அடிக்கிறயா..? ஏன் நாலு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீயும் உன் அப்பாவும் அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டு அவன் முடியாதுன்னு உங்க மூஞ்சில கரி பூசினது மறைந்து போச்சா..? அவனுக்கு போய் சப்போர்ட் பண்ற, அந்தளவு அவன் பைத்தியமா  உனக்கு..? என்ன பொண்ணு..”  கத்தி கொண்டே சென்றவர், ஜின்னாவின் அடியில் திரும்ப கீழே விழுந்திருந்தார்.  

படபடவென பேசிவிட உணர்ந்து அவரை தடுப்பதிற்குள் எல்லாம் பேசிவிட்டிருந்தார் மனிதர். அவரின் பேச்சில் எல்லோரும் அதிர்ந்து போய்விட, ஷாரா முகத்தில் இருந்து எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. அமைதியாக அவரை பார்த்திருந்தவள் கை விரல் நகங்கள்  உள்ளங்கையை குத்தி புண்ணாக்கி கொண்டிருந்தது. 

“ஜின்னா அவரை விடு..”  ஜித்தன் அவனை தடுக்க, ஜின்னா அவரை புரட்டி எடுத்து கொண்டிருந்தான். 

“ஷா மேடம் என்ன இது..?” மினிஸ்டர் அவளிடமே சென்று கேட்க, கண் மூடி திறந்த உதய்க்கு, இப்போது இந்த நொடி எதாவது செய்தே ஆக வேண்டும் என்று புரிந்தது.  

ஷாராவை பேசிவிட்ட கலாதரன் பேச்சு மிகவும் அதிகப்படி. உணர்ந்திருந்தவன் ஷாராவின் முன் சென்று நின்றான். அவள் அவனை வெறித்து தான் பார்த்தாள்.  

“சார்.. ஒரு நிமிஷம்..” மினிஸ்டரிடம் சொல்ல, அவர் கேள்வியாக பார்த்து விலகினார். 

ஷாவின்  கண்களை நேருக்கு நேர் பார்த்த உதய், “நான் ஏதாவது செய்ய வாய்ப்பு எனக்கு கொடுக்கிறியா..?”  கேட்டான். ஷா வெறித்த பார்வை மாறவில்லை. 

“ப்ளீஸ்ப்பா..”  குரலில் கண்டிப்பாக பொறுமை, கனவு, காதல் இருந்தது. பரிபூரணமாக அதை உணர்ந்து கொண்ட ஷாவிற்கு கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் மனது கலங்கி போனது. அதன் விளைவு அவளின் உடலில் ஒரு தளர்வு. 

“நோ.. நோ ஷாரா.. நீ எதுவும் தப்பு செய்யல.. பி ஸ்டார்ங்..”  தன்னை தானே மீட்டு திரும்ப நிமிர்ந்து நின்றவள், “நீங்க எனக்கு செய்ய எதுவும் இல்லை..” என்றுவிட்டாள் உதய்யிடம். 

அவளையே பார்த்திருந்த உதய்க்கு அவளின் உணர்வுகள் புரிந்தது. அவளின் கோவம் புரிந்தது. ஆனால் இதில் தன் தவறும் ஏதும் இல்லையே. 

முதல் இவன் மறுப்பு. பிறகு இவள் மறுப்பு. இரண்டில் இருவருக்கும் அவரவர் நியாயங்கள். ஆனால் இப்போது யோசுக்க வேண்டியது வேறு ஆச்சே. காலதரன் பேச்சு.. அதை தவறு என்று இந்த உலகிற்கு சொல்லியே ஆக வேண்டும். 

“ம்ப்ச்..”  தங்களையே பார்த்து கொண்டிருந்தவர்களை பார்த்தான். அதிலும் பிரசாத்தின் பார்வை அவனின் முடிவை உறுதி படுத்தியது.  

“எனக்கு வேற வழி இல்லை..” ஷாவிடம் சொன்னவன், மேடைக்கு தாவி மைக்கை கையில் எடுத்து கொண்டான். என்ன செய்ய போகிறான்.. என்று எல்லோரும் பார்க்க, ஷாவிற்கு புரிந்து போனது. அங்கிருந்த திரும்பி நடக்க ஆரம்பித்தவளின் கை பற்ற, திரும்பி பார்க்க, உதய் தான் கையில் மைக்குடன் அவளிடம் குதித்திருந்தான். 

அவளின் கையை விடாமல், மைக் எடுத்தவன், “சார்.. உங்க பங்க்ஷன்ல எங்களுக்காக சில நிமிஷங்கள்..” மினிஸ்டரிடம் கேட்டான். அவர் தலை அசைக்கவும், 

“ஹலோ எவெரிஒன்.. நான் உதய்.. உதய் கிருஷ்ணா.. என்னை சில பேருக்கு தெரிஞ்சிருக்கும், பல பேருக்கு தெரிஞ்சிருக்காது.. இவங்க மிஸ்.. பவ்யாஷாரா.. மிஸ்.. பவ்யாஷாரா ராம்குமார்..  இன்னும் கொஞ்ச நாள்ல மிஸர்ஸ் பவ்யாஷாரா உதய் கிருஷ்ணாவா மாற போறவங்க..” என அறிவித்துவிட, சில நொடிகள் கடந்து கை தட்டல். 

“எஸ்.. கூடிய சீக்கிரம் எங்க கல்யாணம் நடக்க போகுது.. அதுவும் ரெண்டு குடும்பத்தோட சம்மதத்துல தான்..” என, 

கூட்டத்தில் இருந்த ஒருவர் “லவ் மேரேஜ்ஜா..”  என்றார் சத்தமாக. 

“ஆமா..” என்றுவிட்டான் நொடியும் தாமதிக்காமல். 

“அப்போ காலதரன் சார் சொன்னது..”  இன்னொருவர் கேட்க, இதற்கு தான் காத்திருந்தேன்.. நினைத்தவன், 

“அவர் சொன்னதுல சிலது சரி.. பலது தப்பு.. மிஸ்டர் RK சார் தான் அவர் பெண்ணுக்காக என்னை செலக்ட் பண்ணார், என்னை கேட்கவும் செஞ்சாங்க, எனக்கு அப்போ அதுக்கான வயசும் இல்லை, சொல்லி கொள்ளும் படி அடையாளமும் இல்லை, சோ நான் வேண்டாம் சொன்னேன், அவரும் அதை சரியா புரிஞ்சிக்கிட்டார்..”

“ஆனா விஷயம் அதோட முடியல, அதுக்கு அப்பறம் எங்களுக்கான கோல்டன் டேஸ் ஸ்டார்ட் ஆனது. எங்களுடைய காதலை நாங்க உணர்ந்த.. அனுபவிச்ச நாட்கள். என்ன எங்க காதல் மற்ற காதல் போல இல்லை. கொஞ்சம் வித்தியாசமானது..  நிறைய கமிட்மென்ட் நிறைஞ்சது..”  உதய் உண்மையை தான் சொன்னான். 

ஆனால் சொன்ன வார்த்தைகள்.. கலாதரன், பிரசாத் யாராலும் மறுக்க முடியாதபடி. 

“நாங்களே இதை பிரெஸ் மீட் வச்சு சொல்ற முடிவுல தான் இருந்தோம், ஆனா கலாதரன் சார் அதுக்கான நேரத்தை எங்களுக்கு கொடுக்கல.. இங்கேயே சொல்லிட்டேன், அபிஷியல் அனோன்ஸ்மென்ட் வரும்..” முடித்து மைக்கை வைத்துவிட்டான்.

தங்களுக்குள்ளே தங்களின் உறவை மறுத்த இருவருமே..  இன்று ஒட்டு மொத்த உலகிற்கு தங்களின் உறவை சொல்லி விட்டனர். 

உறவுகளின் நெளிவு சுளிவுகளில் வளையாத இரண்டு கல் தூண்களும் எப்படி ஒன்றோடு ஒன்று பிணைய முடியும்..?

 இனிதான் இருவருக்குமான சவால்கள், அவஸ்தைகள் இருக்க போகின்றது.