யுகம் சுகம் தானே 7

“என்ன இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கான்..?”  கண்ணம்மா கணவரிடம் கேட்க

அவரோ   “எனக்கு தெரியல கண்ணு.. வந்தவன் நேரே மேல ரூமுக்கு போயிட்டான்.. முகமும் ஒன்னும் சரியில்லை..”  என்றார்

என்னவா இருக்கும்ங்க.. அந்த ப்ராஜெக்ட் விஷயத்துல ஏதாவது..”

இல்லை கண்ணு, அதை முடிச்சு கொடுத்துட்டேன்னு காலையில தான் சொன்னானே..?” என, கண்ணம்மா கண்கள் மூடியிருந்த உதய் ரூமை பார்த்தது

அது மூடியது மூடியதாகவே இருந்தது. இரவு உணவு நேரம் கடந்தும் கதவு திறக்கவில்லை. போனும் ஸ்விட்ச் ஆப். “தூங்கியிருப்பானோ..?” கணபதி சொல்ல

அப்படி தான் இருக்கும், இருங்க நான் நேர்ல போய் பார்த்துட்டே வரேன்..”  மேலே சென்றவர்அவனின் ரூம் கதவை தட்டினார். எந்த சத்தமும் இல்லை

உதய்.. கதவை திற..” அடுத்த முறை சற்று முறை பலமாகவே தட்டினார்

டேய்.. கதவை திறடா..” இன்னும் பலமாக தட்ட, படாரென கதவை திறந்த உதய்

இப்போ எதுக்கு  கதவை உடைச்சிட்டு இருக்கீங்க..” எரிச்சலாக  கண்கள் சுருக்கி கேட்டான்

இப்போ நீ  கதவை  திறந்திருக்கல கண்டிப்பா உடைச்சு தான் இருப்பேன்..  கதவை தட்டுறது கூட தெரியாம அப்படியென்னடா தூக்கம்..?” அவனுக்கு மேல் பாய்ந்தார்

ம்ப்ச்.. படுத்தேன் தூங்கிட்டேன் போல..”  சென்று கட்டிலில் மல்லாக்க விழுந்தான்

இது ஒரு பதிலா..?” கண்ணம்மா பின்னாலே வந்தவர் கேட்க

இது ஒரு கேள்வியா..? தூக்கம் வரதுக்கு கூட காரணம் இருக்குமா..?”  கண்கள் மூடியே கேட்டான்

இருக்குடா மகனே.. தூக்கம் அதிகமா இருந்தா இப்படி  கண்ட நேரத்துல தூக்கம் வரும், இல்லை  துக்கம் அதிகமா இருந்தாலும் இப்படி கண்ட நேரத்துல தூக்கம் வரும்.. இப்போ நீ எப்படி தூக்கமா..?  துக்கமா..?”

ம்ம்.. ரெண்டும் இல்லை, சந்தோஷத்துல தூங்கிட்டேன்..”

நம்புற மாதிரி இல்லையே..? அப்படியென்ன சந்தோஷம்..?”

அந்த மேடம் என்னை வேண்டாம் சொல்லிட்டாங்க, அதை கொண்டாட தூங்கிட்டேன்..”

பார்த்தா அப்படி தெரியலையே.. குப்புற படுத்து குமுறி குமுறி அழுது  மாதிரி இல்லை இருக்கு..”

ம்ம்ம்மாமாமா..”  

ஏண்டா மாடு மாதிரி கத்துற..?”

உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை சொல்லணும்..”  எழுந்து பாத்ரூம் சென்று ரெப்ரெஷ் செய்து வர, கண்ணம்மா அவனின் ரூமை ஒதுங்க வைத்து கொண்டிருந்தார்

ம்மா.. தயவு செஞ்சு என் திங்க்ஸை எடுத்து வைக்காத, அப்பறம் எருமை மாடு வயசாகியும் இன்னும் நான் தான் உனக்கு எல்லாம் செய்யணும்ன்னு அடுத்த பத்து செகண்டுக்குள்ளே சொல்லி காட்டுவ..”  பிடுங்கி தானே ஒதுங்க வைத்தான்

ஆமா சொல்ல தான் செய்வேன்..  அம்மான்னா சும்மாவா..?”  கண்ணம்மா கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டி கொண்டிருக்க, அவன் எல்லாம் எடுத்து வைத்தவன், 

காலை ஆட்டி முடிச்சிட்டன்னா வா  கீழே போவோம், பசிக்குது..”  டிஷர்ட்டை எடுத்து மாட்டினான்

என்ன பசிக்குதா..? சரிதான், நீங்க எல்லாம் ஸ்டேட்டஸ்ல மட்டும், என்னை மறந்து போனாளே, பறந்து போனாளேன்னு சோக கீதம் வாசிச்சிட்டே   பிளேட் பிளேட்டா பிரியாணி திங்கிற பசங்க தானே..?” மகனை வம்புக்கு இழுத்தவாறே கீழே வந்தார்

நான் ஸ்டேட்டஸ் கூட வைக்க மாட்டேன்..”  உதய் உர்ரென்று சொல்லி சாப்பிட அமர்ந்தான்

நீ வச்சுட்டாலும்.. சாப்பிடுடா மகனே..” சப்பாத்தி, குருமா வைக்க

ம்மா.. என்ன இது குருமா..? மஷ்ரூம், சிக்கன் ஏதாவது செஞ்சிருக்கலாம் இல்லை..”  என்றான் கடுப்பாக

சிக்கனா..? க்கும்.. அந்த ஜிலேபி உன்னை வேணாம் சொன்னது அம்மாக்கு தெரியாது இல்லை, தெரிஞ்சிருந்தா பிரியாணி, தந்தூரின்னு விருந்தே வச்சிருப்பேன்..”  என்றார் கிண்டலாக

ம்மா.. இப்போ எதுக்கு அதை சொல்றீங்க..? போங்க, போய் முட்டை தோசை எடுத்திட்டு வாங்க..” என்றான்

என்னடா அதிகாரமா சொல்ற, அம்மான்ற மரியாதை ரொம்ப முக்கியம்டா மகனே..?”  இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றார்

ஸ்ஸ்.. தெய்வமேபோய் எடுத்துட்டு வாங்க, கொலை பசியில இருக்கேன், ஒரு வாரமா நிம்மதியா சாப்பிடவே முடியல..” என

அடப்பாவி.. கொடுத்துவிட்ட சாப்பாடு எல்லாம் கழுவவே தேவையில்லாத அளவு வழிச்சு சாப்பிட்டுட்டு கதை அடிச்சிட்டு இருக்க..”

இந்தா சொல்லி காட்டிட்ட இல்லை..” 

இதுக்கு பேர் சொல்லி காட்டுறதா, அப்படியே இருந்தாலும் என்ன இப்போ..?” கண்ணம்மா அசால்ட்டாக  கேட்டார்.

எனக்கு முட்டை தோசையே வேணாம்..”

சரி ரொம்ப அழுகாத, இந்தா..”  என்று ஹாட் பேக்கில் இருந்த முட்டை தோசையை எடுத்து வைத்தார்

சுட்டு வச்சுட்டே கெஞ்ச வச்சுட்டே இல்லை..”

சாப்பிட்றா..”  கூடவே இருந்து பரிமாற, கணபதி ஹாலில் டிவி பார்த்தபடியே மனைவி, மகன் பேச்சை கேட்டு கொண்டிருந்தார்

ஏங்க.. பால் எடுத்திட்டு வரவா..? நேரம் ஆச்சு, தூங்கணும்..”  இருவருக்கும் பால் எடுத்து வந்தார்

உனக்கு பிளாஸ்க்ல இருக்கு, கொஞ்ச நேரம் கழிச்சு குடி..” மகனுக்கு சொல்ல

ஏன் நீங்க எங்க போக போறீங்க..?”  என்றான் அவருக்கு அருகில் சோபாவில் விழுந்தவாறே

இந்த ஆட்டத்துக்கு நான் வரல, எனக்கு தூங்கணும்..” கண்ணம்மா அலறலுடன் சொன்னார்.

தூங்கலாம்.. கொஞ்ச நேரம் கழிச்சு தான்..”  ரிமோட் எடுத்து டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டான். கணபதி பால் குடித்து தூங்க சென்றுவிட, கண்ணம்மா கன்னத்தில் கை வைத்து தேமேன்று  அமர்ந்திருந்தார்

ம்மா.. டிவி போரடிக்குது, வா தோட்டத்துல நடக்க போலாம்..” உதய் எழுந்தான்.

டேய்.. நீ நல்லா தூங்கிட்டு என்னை ஏண்டா தூங்க விடாம படுத்துற..” கண்ணம்மா நொந்து போய் கேட்டார்.

வாம்மா..”  கை பிடித்து தோட்டத்துக்கு சென்று மெல்ல நடக்க ஆரம்பித்தனர். சில அடிகள் நடந்தனர், “என்ன ஆச்சுன்னு கேட்க மாட்டியா..?” உதய்  நின்று கேட்டான்

நீ முதல்ல  என்ன பண்ணன்னு சொல்லு..” என்றார் அவர் கேள்வியை மாற்றி

இந்த முறை நான் எதுவும் பண்ணல.. அவ நல்லதுக்கு தான் கேட்டேன், அதுக்கு போய் என்னென்னமோ பேசிட்டா..”

உதய்.. நானே  உன் மேல  பயங்கர கோவத்துல இருக்கேன், நீ முதல்ல எனக்கு பதில் சொல்லு..”

ம்மா.. என் மேல  எதுக்கு கோவம்..?”

பின்ன திடீர்னு நீ பாட்டுக்கு கூட்டிட்டு போய் ஒரு பொண்ணை காட்டி இதுதான் உன் மருமக சொல்ற, அப்போ ஒரு அப்பா, அம்மாவா எங்களுக்கென்ன மரியாதை  இருக்கு..?”

ம்மா.. அது கண்டிப்பா தப்பு தான், ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை.. உனக்கு நான் முதல்ல இருந்து சொல்றேன், அப்போ தான் உனக்கு எல்லாம் புரியும்..” என்று நான்கு வருடத்திற்கு முன்பு நடந்ததில் இருந்து இப்போது வரை ஓரளவுக்கு எல்லாம் சொல்லி முடித்தான்

இதுல பவ்யா பேசுனது சரி தானே..? உனக்கு ஏன் இவ்வளவு கோவம்..?”  கண்ணம்மா நிதானமாக சொன்னார்

எனக்கு தெரியும் நீ இப்படித்தான் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு.. நீங்க தான் பெமினிஸ்ட ஆச்சே..”  உதய் கடுப்பாக சொன்னான்

இதுக்கு பெமினிஸ்ட்டா இருக்கனும்ன்னு அவசியம் இல்லை உதய், கொஞ்சம் பொறுமை இருந்தாலே போதும், நீயே சொல்லேன், நாலு வருஷத்துக்கு முன்னாடி அவங்க உன்னை கேட்டப்போ நீ  முடியாது சொல்லிட்ட, அதுக்கு காரணமா உன் தன்மானம், அடையாளம், சுயகௌரவம் இதெல்லாம் சொன்ன, உன் பக்கம் இருந்து யோசிச்சு பார்க்கிறப்போ நீ சொன்னது நூறு பர்சன்ட் ரைட், அவங்களும் அதை ஏத்துக்கிட்டு  விலகி போயிட்டாங்க தானே..” 

அப்போ இப்போ நான் தான் அவங்களை தொல்லை பண்றேன்னு சொல்றியா..?”  உதய் இடையிட்டு எகிறினான்

தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்க கூடாதுன்னு சொல்வாங்க, ஆனா நீ உன் பத்து வயசுலே என் தலைக்கு மேல வளர்ந்துட்ட, அதுக்காக உன்னை நான் அடிக்காமலாவா இருந்தேன்..” உதய் இடையிட்டு பேசவும் கண்ணம்மா மகனை முறைத்து கண்டிப்புடன்  கேட்டார்.

அது உங்க தப்பு, மனுஷனா பிறந்தா கொஞ்சமாவது வளரனும், முட்டை கோஸ்க்கு  கைகால் முளைச்ச மாதிரி இன்னும் மண்ணோடே வாழ்ந்துட்டு இருந்தா எப்படி, மேல வாங்க..” உதய் நக்கலாக சொல்ல,

டேய்.. நீ எதுக்கு முட்டை கோஸ்  சொன்ன எனக்கு தெரியும், அதுக்காகவே வெய்ட் குறைச்சிட்டு இருக்கேன்டா.. பாரு உன் கல்யாணத்துக்குள்ள வெய்ட் குறைச்சி ஸ்லீவ்லஸ் பிளவுஸ் போடுறேண்டா..” சவால் விட்டார் மகனிடம்.

எது இந்த படத்துல எல்லாம் காட்டுவாங்க இல்லை, கிழவி ஸ்லீவ்லஸ், கூலிங் கிளாஸ், ஓரடி மேக் அப் போட்டுக்கிட்டு நாங்க லேடிஸ் கிளப்ல இருந்து வரோம்ன்னு வருவாங்களே அந்த மாதிரியா..?”

இந்தளவுக்கு பேசிட்டியா..? எனக்கு தூக்கம் வருது, போ..”   அவர் முறுக்கி கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டார்.  

க்கும்.. உண்மையை சொன்னா உடனே கிளம்பிடுவீங்களே..? வாங்கம்மா..”  கை பிடித்து இழுத்து வந்து தோட்ட கல்லில் உட்காரவைத்தான்.  

அப்போ நீ  இடையில் எதுவும் பேச கூடாது, எங்க விட்டேன்..?”

ரொம்ப நடிக்காதீங்க, அவங்க என்னை விட்டு ஓடிட்டாங்கன்னு சொல்லிட்டிருந்தீங்க..”

கரெக்ட்டா அம்மாவை கேட்ச் பண்ணிட்டடா மகனே, உண்மைக்குமே அவங்க தான் நீ வேணாம் சொல்லவும், ஒதுங்கிட்டாங்க இல்லை, இப்போ நீ எதுக்கு திரும்ப ஆரம்பிக்கிற..?”

நான் ஒன்னும்  திரும்ப ஆரம்பிக்கல, அந்த மேடம் தான் அந்த ராஜமாணிக்கம்கிட்ட சொல்லி எனக்கு உதவி பண்ண சொல்லியிருக்காங்க..”

“சரி  அதுக்கு உடனே என்னை   கல்யாணம் பண்ணிக்கோன்னு அவகிட்ட போய் கேட்பியா..?”

“அப்போ அந்த பிரசாத் அவளை இப்படியே டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கட்டுமா..?”

“அது அவ பிரச்சனைடா, உனக்கென்ன..?”

“எனக்கென்னவா..? என்னமா பேசுற நீ..? அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் போகாம வேற யார் போவா..?”

“அது தான் நானும் கேட்கிறேன், நீ ஏன் செய்யணும்..?”

“ஏன் செய்யணுமா..? அவளுக்கு.. அவ..”

“ம்ம்.. சொல்லு..” கண்ணம்மா மேலே ஊக்க, உதய் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் தடுமாறி நின்றான். 

“என்ன உதய் சொல்ல முடியலையா..? மனசுல இருக்கிறதை  வாய் திறந்து வெளியே சொல்ல முடியாத அளவு பெரிய தப்பா பண்ணிட்டிருக்க..?”

“இதிலென்ன தப்பு இருக்கு, நான் வேற, அவ வேற கிடையாது, அவளுக்கு ஒன்னுன்னா நான் அவகூட நிக்க தான் செய்வேன்..” 

“இதை அவகிட்ட சொன்னியா..?”

“ஏன் சொல்லணும், அவ தான் என்னை வேண்டாம் சொல்லிட்டாளே..?” முகம் இறுக சொன்னான். 

“உதய் நீ பேசுறது உனக்கே லாஜிக்கா தெரியுதா..? நீ உன் மனசை சொன்னா தானே அவளுக்கு புரியும்..”

“ம்மா.. அவளுக்கு என் மனசு இன்னுமா புரியாம இருக்கும்..?”

“இதுக்கு என்ன தான் வழி..”

“ஒரு வழியும் இல்லை, எல்லாம் முடிஞ்சது..” கை கட்டி நின்றிருந்த மகனை அண்ணார்ந்து பார்த்த கண்ணம்மா. 

“இருக்கு உதய், நீ கொஞ்சம் பொறுமையா அவகிட்ட உட்கார்ந்து பேசினா..” என,

“அது முடியாதும்மா, எப்போ அவ என்கிட்ட நேராவே என்னை வேண்டாம் சொல்லிட்டாளோ அப்போவே எல்லாம் முடிஞ்சது, இனி அவகிட்ட போய் நான் நிக்கிறதா இல்லை..”  மிகவும் உறுதியுடன் சொன்னான்.

கண்ணம்மா மகனின் முகத்தை பார்த்தார். இறுகி போய் இருந்தாலும், ஷாராவின் மறுப்பு அவனை மிகவும் பாதித்திருப்பது புரிந்தது. எங்கோ பார்த்து நின்றவன், கண்ணம்மாவின் பார்வையில் அவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். 

“என்னை இப்படி பார்க்காத..?”  வார்த்தைகள் காரமாக விழுந்தாலும், அவனின் கைகள் அவரின் கைகளை தேடி பிடித்து கொண்டது.