கண்டிப்பா கூடிய சீக்கிரமே மீட் பண்ணலாம் பிரசாத்..”  உதய் ஒரு வித தீவிரத்துடன் தான் சொன்னான்

சார்.. நீங்க கொஞ்சம்  உஷாரா..”  ஜின்னா அவனிடம் சொல்ல வர

கண்டிப்பா உஷாரா தான் இருப்பேன் ஜின்னா, நான் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவுவோ இருக்கு..”  என்றுவிட்டவன், “நீ கொஞ்சம் பொறுமையா RK சார் சொல்றதை கேட்டு நடப்பா..”  என்றான் ஷாவிடம்

அவளோ கோவம் குறையாமல் நின்றிருந்தவள்இவனின் பேச்சில் இன்னும் கோவம் கொண்டு, “அவர் சொல்றதை கேட்டு நடக்கிறதால தான் எனக்கு இவ்வளவு பிரச்சனையே..?” என்றாள்.

“அவருக்கும் ஏதாவது காரணம் இருக்கும், பேசி பார்..”  என்றவன் விடை பெற்று, நேரே தன் ஆபிஸிற்கு தான் சென்றான். அவனின் ஆட்கள் அவனுக்காக காத்திருக்க, நாளை சீக்கிரம் வாங்க.. என்று எல்லோரையும் கிளம்ப சொல்லிவிட்டான்

அவனுள்  பிரசாத்தின் பேச்சே  ஓடி கொண்டிருந்தது. உள்ளுக்குள் ஒரு கோவம் கங்காக  கனன்று கொண்டே தான் இருந்தது. கண்ணம்மா அவனை வீட்டிற்கு  கூப்பிட்ட போதும், “ம்மா.. நான் வரல, நம்ம ஆபிஸ்ல தான் இருக்கேன்..”  என்று போனை வைத்துவிட்டான்

அவனின் பேச்சிலே வித்தியாசத்தை கண்டு கொண்ட கண்ணம்மா, கையில் உணவுடன், கணவனை அழைத்து கொண்டு ஆபிஸிற்கே வந்துவிட்டார்

ம்மா.. இப்போ எதுக்கு அலையுறீங்க..”  அவன் கோபத்துடன் கடிந்து கொள்ள, அவர் அவனின் கோவத்தை கண்டு கொள்ளவே இல்லை

முதல்ல உட்கார்ந்து சாப்பிடு..” அவனை பிடித்து சாப்பிட வைக்க, “நீங்க சாப்பிட்டீங்களா..?” கேட்டான்

அதெல்லாம் அப்பா சாப்பிட வைச்சாச்சு.. நீ சாப்பிடு..”  வயிறு நிறைய சாப்பிட  வைத்தவர், மகனின் முகம் கொஞ்சம் தெளியவும் தான் கிளம்பினார்

எதாவது பிரச்சனையா..?” கணபதி கிளம்பும் போது கேட்க

இல்லைப்பா.. ப்ராஜெக்ட் வேலைக்காக தான்..” என்றான்

சரிப்பா.. நைட் முழுசும் வேலை பார்த்திட்டு இருக்காத, தூங்கு..”  பெற்றவர்கள் விடைபெற, உதய் மனம் அமைதி கொஞ்சம் அடைந்தது. நிதானமாக யோசித்தான். பல யோசனைகள். நேரம் பார்த்தான். நடு இரவு. போன் எடுத்து மெசேஜ் போட்டான். அடுத்த சில நொடிகளிலே கால் வந்தது.

“சிட்டுண்ணா.. நான் ஆபிஸ்ல தான் இருக்கேன்.. இங்க வேண்டாம்ண்ணா.. உங்க ப்ரண்ட் ஹோட்டல்க்கே வந்துடுறேன்..” வைத்துவிட்டவன், அடுத்த சில நிமிடங்களில் அந்த ஹோட்டலில் இருந்தான்

அவர் முன்னமே வந்து காத்திருக்க இவன் பக்கத்து டேபிளில் அமர்ந்தான். “சொல்லு தம்பி.. என்ன ஆச்சு..? அவனுங்களுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை..?”  சிதம்பரம் என்று சிட்டு  கேட்க

முதல்ல ரொம்ப நன்றிண்ணா.. விஷயம் என்னன்னே தெரியாம எனக்காக நான் சொன்னதை செஞ்சு முடிச்சீங்க..” அவரிடம் நன்றி சொன்னான்

நன்றி எல்லாம் எதுக்கு தம்பி.. எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க.. அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீங்க இதை சொல்லுங்க அந்த பிரசாத், கலாதரனோட என்ன பிரச்சனை..? உனக்கு எதுக்கு அவங்க குடைச்சல் கொடுக்கிறாங்க..?” கேட்க, உதய் ஓரளவிற்கு எல்லாம் சொன்னான்

என்ன தம்பி நீங்க இவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப சாதாரணமா சொல்றீங்க..? இது தான் விஷயம்ன்னு நீங்க முன்னமே சொல்லியிருந்தால் இன்னும் நல்லா செஞ்சு விட்டிருப்பேன்..” என்றார் கோவத்துடன்

விடுங்கண்ணா.. எங்க போயிற போறாங்க.. பார்த்துக்கலாம்..” என்ற உதய், “நீங்க கேட்டுட்டே இருப்பீங்க இல்லை, அதை எனக்கு இப்போ கொடுங்க..” என்றான்

இப்போ தான் தம்பி நீ என் லைனுக்கு வந்திருக்க, பிஸ்னஸ்ல  இதெல்லாம் இல்லைன்னா பொழைக்கவே விட மாட்டானுங்க.. யார் யார் வேணும்ன்னு மட்டும் கேளுங்க.. கொண்டு வந்து நிறுத்திடுறேன்.. நீயே  வச்சுக்கோ..” என்றார்

ண்ணா.. உங்களுக்கு தெரியாதது இல்லை, நீங்களே பார்த்து அனுப்புங்க.. முடிஞ்சா இப்போல இருந்தே கூட ஓகே தான்..”  என, அவர் அவரிடம் இருக்கும் ஆட்களில் பொறுக்கி எடுத்து உதய்க்கு கொடுத்தார்

தம்பி.. இப்போதைக்கு இருபது பேர் கொடுத்திருக்கேன், இன்னும் வேணும்ன்னா கேளுங்க..” அப்போதே அவரின் ஆட்களில் உதய்க்கு ஏத்தது போல கொடுத்தார்

முதல் வேலையாக பிரசாத்தை கண்காணிக்க தான் ஆள் அனுப்பினான். அடுத்து வீட்டிற்கு  காவல் வைத்தான். அடுத்து மிக முக்கியமாக ஆபிஸிற்கு ஆட்கள் வைத்தான். அதுவும் வெளியே தெரியாத படி. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தான். முதலில் ப்ராஜெக்டை முடிக்க வேண்டும்.

அதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே. ப்ராஜெக்ட் வேலையும் முடிந்து வந்துவிட்டது. இன்னும் ஓரிரண்டு நாட்களிலே முழுதும்  முடித்துவிடலாம். முடித்து விடவும் வேண்டும். அவன் முடிவு படி அடுத்த நாட்கள் முழுதும் தீயாக வேலை பார்த்தான். ஆபிஸ் ஆட்கள் இரவு பகல் வேலை பார்த்தனர். அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தான். இரண்டு நாட்கள் குளிக்க மட்டுமே வீட்டிற்கு சென்றான்

ப்பா.. கொஞ்ச நாளுக்கு மட்டும் கன்ஸ்டரக்ஷன் ஆபிஸ் நீங்க பார்த்துக்கோங்க, சைட் எல்லாம் போகாதீங்க, அதுக்கு ஆள் அனுப்புறேன்..”  கண்டிப்புடன் சொல்லி அவரையும் இடையிடையே பார்த்து கொண்டான். அவர் உடல் நிலை நலிவடைந்ததே சைட் ஒர்க்கில் தான். அதனாலே அதில் அவரை கவனித்து கொண்டான்

கண்ணம்மாவிற்கு மகனின் செயல் புரியவில்லை, கவலையை கொடுத்தது. ஓடி கொண்டிருப்பவனிடம் நிறுத்தி பேச முடியவில்லைஉணவு, தூக்கம் மட்டும் பார்த்து கொண்டார்

நாளை ப்ராஜெக்ட் ப்ரசண்ட் செய்ய வேண்டிய நாள். ஆட்கள் வேலை முடித்து அனுப்பி வைத்தான். அவனும்  வீட்டிற்கு சென்று குளித்து, சாப்பிட்டு திரும்பவும் ஆபிஸ் வந்தான். சிட்டு கொடுத்த ஆட்கள் முழுதும் அங்கு தான். இரவு மணி பதினொன்று. அவனின் போன் ஒலிக்க, பார்த்தால் ஷா. முதல் போன் அழைப்பு

சொல்லுப்பா..” என்றான் அழைப்பை ஏற்று

ஈஸ் எவெரிதிங் ஓகே..?”  குரலில் கண்டிப்பாக பதட்டம் தான்

எல்லாம் ஓகே.. நீ தூங்குப்பா..”  உடனே வைத்துவிட்டான். ஷாவின் முகம் சுருங்கி போனது

இங்கு உதய் கவனம் முழுதும் தன் முன்னால் இருக்கும் லேப்பில் தான் இருந்தது. அவன் எதிர்பார்த்தது போல ஸ்க்ரீன் அதிர்ந்து, புரோகிராம் எல்லாம் தாறுமாறாக ஓடியது. வைரஸ் முழுவதையும் பாதித்து  விட்டது.  

மற்ற சிஸ்டமும்  பார்த்தான். எல்லாம் அதே நிலை. உதய் முகத்தில் ஒரு இறுக்கமான சிரிப்பு. ஒலித்த போனை பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போல கலாதரன்  தான்

என்ன உதய் சார் மீட் பண்ணலாமா..?” கேட்டார் எகத்தாளமாக

மீட் பண்ணலாம் சார்.. ஆனா இப்போ இல்லை.. கூடிய சீக்கிரம்.. நானே வரேன்..” என்றான் உதய்

என்ன பேசுற நீ..? உனக்கு அவ்வளவு நேரம் இல்லை..”  அவர் குழப்பமாக சொல்ல

அதை நான் பார்த்துகிறேன் சார்..” வைத்துவிட்டான்

என்ன சித்தப்பா சொல்றீங்க.. அதெப்படி அவன் அவ்வளவு கூலா இருக்கான்..?” பிரசாத் தலையை பிய்த்து கொண்டான். என்ன செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை

மறுநாள் உதய் எங்கும் போகவில்லை. ஆட்களை வரவைத்து எல்லாம் சரி செய்யும் வேலையை ஆரம்பித்தான்

உன்னால அதை பண்ண முடியாது, அதுக்கான ஆன்ட்டி வைரஸ் எங்ககிட்ட தான் இருக்கு.. என்ன சொல்ற..?” கலாதரன் திரும்ப போன் செய்து கேட்க

உங்க ஆன்ட்டியை நீங்களே வச்சுக்கோங்க.. எனக்கு வேண்டாம்..”  கிண்டலாக சொல்லி வைத்துவிட்டான்

விஷயம் கேள்விப்பட்டு ஷா அவனுக்கு அழைக்க, “நான் அப்பறமா பேசுறேன்..” என்று வைத்துவிட்டான். அப்போது மட்டுமில்லை அடுத்த வாரம் முழுதும் அப்படி தான் இருந்தான்

ஆபிஸே தான் வீடாகி போனது. அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. குணா, முகில் தவிர, அவன் பேசும் ஆட்கள் இவர்கள் மட்டுமே.

அப்படி அவன் என்ன செய்தான் என்று ஷாவிற்கு தெரியும் நாளும் வந்தது. RK மகளை கூப்பிட்டு விஷயத்தை சொல்ல, “கொடுக்காதீங்க..”  என்றாள் மகள் அடுத்த நொடி

ஏன் ஷா..?” ராம் கேட்க பதில் இல்லை. விஷயம் குணா வழியே உதய்க்கு சென்றது. அவன் நேரே அவள் ஆபிஸிற்கே சென்றுவிட்டான்.

“வாங்க..”  ஷா அவனை வரவேற்று உபசரிக்க,  

குணா அங்கிள் சொன்னார்.. ஏன்..?” கேட்டான். குரலில் கோவம் அதிர்ந்தது. உட்கார கூட இல்லை

உங்களுக்கு எதுக்கு..?” ஷா கேட்க

எனக்கு வேணும்.. அவ்வளவு தான்..” முடிவாக சொன்னான் உதய்

முதல்ல இதுக்கான பணம் உங்களுக்கு எப்படி வந்தது..?”

நான் ப்ராஜெக்ட் முடிச்சு கொடுத்துட்டேன்.. அதுல வந்த பணம் தான்..” ஷா எப்படி என்று கேள்வியாக பார்க்க

அவங்க கொடுத்த டைம்க்கு மூணு நாள் முன்னாடியே முடிச்சு  ப்ரசண்ட் பண்ணிட்டேன்..” இப்போது சொன்னான்.

இதை என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம் தானே..”  ஆதங்கத்துடன் கேட்டாள்

உனக்கு மட்டுமில்லை, யாருக்கும் தெரியாது..” முடித்துவிட்டவன், “நீ சொல்லு, ஏன் RK குரூப் ஷேர் கொடுக்க மாட்டேன்னு  சொல்ற..?” கேட்டான்

திடீர்ன்னு உங்களுக்கு ஏன் இந்த ஷேர்..?”

காரணம் சொன்னா தான் கொடுப்பியா..? நான் ஒன்னும் சும்மா கேட்கல, உங்க மார்கெட் வேல்வியூக்கு தான் கேட்கிறேன்..”

என்கிட்ட பிஸ்னஸ் பேசுறீங்க..” ஷா அவனை அமைதியாக பார்த்தாள்

நீ தான்ப்பா என்னை பேச வைக்கிற..” கொஞ்சம் நிதானத்துக்கு  வந்தான்

முதல்ல உட்காருங்க..” அவன் நிற்கவும் தானும் நின்று பேசி கொண்டிருந்தவள் சொல்ல

ம்ஹூம்.. இல்லை ஷா.. நீ உன் முடிவு சொல்லு..” அதிலே நின்றான்

ம்ப்ச்.. புரிஞ்சுக்கோங்க, அது வேண்டாம்..”

பவ்யஷாரா  எனக்கு ஷேர் வேணும்ன்னு தான்  நான் கேட்கிறேன்.. உன் விருப்பத்தை கேட்கல..”  நேரடியாக பேசிவிட்டான்

கொடுக்க முடியாது..” ஷாவும் நேருக்கு நேராக சொல்ல, இருவரும் அந்த நேரம் ஒருவரை எதிர்த்து தான் நின்றனர்.