யுகம் சுகம் தானே 17 1 15669 யுகம் சுகம் தானே 17 நிச்சயமாய் ஷாவிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை உதய் எதிர்பார்த்திருக்கவில்லை. கேட்டவுடன் முதலில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான். பின்னே தான் கோவம். அந்த கோவத்தையும் வெளிக்காட்ட கூடாது என்று வெகுவாக முயன்று வெளியே வந்துவிட்டான் ராமின் உடல் நிலை முன்னிட்டு. அப்படியும் ஷா பின்னாலே வந்து பேச கட்டுப்படுத்த முடியவில்லை. “எங்களை பத்தி என்ன நினைச்சிருக்கா..?” மனதே ஆறவில்லை. கைகளில் கார் இன்னும் வேகமாக பறந்தது. “எவ்வளவு ஆசையா அவளை பார்க்க போனேன்..? ச்சே..” கார் நேரே ஆபிஸிற்கு தான் சென்றது. எல்லாம் கிளம்பியிருந்தனர். அவனின் சீட்டில் கண் மூடி சாய்ந்திருந்தவன் போன் அடிக்க பார்த்தால் கண்ணம்மா, மகன் எப்போதும் போன் செய்யும் நேரம் கடந்துவிட அவரே கூப்பிட்டுவிட்டார். “சொல்லும்மா..” “நீ தான் சொல்லணும், பவ்யா வீட்டுக்கு போறேன்னு சொன்னியே போயிட்டியா..?” “போய்ட்டு ஆபிஸ் வந்துட்டேன்.. ஒரு முக்கியமான வேலை..” “சாப்பாடு என்ன செய்ய போற..?” “ஆன்லைன்ல போட்டுட்டேன்..” என்றுவிட்டான். “சரி.. முடிச்சிட்டு சீக்கிரம் வா..” “நான் வர லேட் ஆகும், தயவு செஞ்சு தூங்குங்கம்மா..” “வாடா..” அவர் வைத்துவிட, உதய்க்கு உண்மையிலே கடுப்பு வந்தது. “நான் என்ன இன்னும் சின்ன பிள்ளையா..? இல்லை எங்கேயாவது ஓடிடுவேனா..? எதுக்கு டெய்லியும் நான் வர வரைக்கும் வெய்ட் பண்ணனும்..” கண்ணம்மா மேல் அவன் கோபம் திரும்ப, “உதய் என்னடா பண்ற..?” அவனை அவனே கடிந்து கொண்டான். நேரம் பார்த்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவன், ரெப்ரெஷ் செய்து வந்தான். கேட்டில் செக்கியூரிட்டி இருக்க, ஜன்னல் வழியே பார்த்தவன், திரும்பி வந்து போன் எடுக்க, மனைவியிடம் இருந்து மிஸ்ட் கால் இருந்தது. “போடி..” மொபைலை சைலண்ட்டில் போட்டுவிட்டவன், தன்னை திசை திருப்ப, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டான். உணவு வரவும் செக்கியூரிட்டி வாங்கி வந்து கொடுத்து செல்ல, அவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்திருந்த உணவை எடுத்து கொடுத்தான். அவன் இருக்கும் நேரங்களில் இது வழக்கம் என்பதால் அவரும் மறுக்காமல் வாங்கி கொண்டு சென்றார். உணவை முடித்தவன், திரும்பவும் வேலையில் மூழ்கிவிட்டான். அவனுக்கு அது கஷ்டமாகவும் இல்லை. அவன் எடுக்க போகும் புது ப்ராஜெக்டிற்கான வேலை என்பதால் முழு மனதுடனே செய்து கொண்டிருந்தான். நாளை மறுநாள் இதற்கான டெண்டர் விடப்பட, நாளை இரவிற்குள் அனுப்ப வேண்டும். உதய் அவனின் ஆட்களை வைத்து மாலையே எல்லாம் முடித்து தான் மனைவியை பார்க்க சென்றிருந்தான். இந்த வேலையில் அவளை சென்று சரிவர பார்க்க முடியாமல் இருந்தவன், இன்று வேலை நல்ல படியாக, அவன் நினைத்த படி முடிந்துவிடவும் உல்லாசத்துடன் தான் மனைவியை பார்க்க சென்றான் புது மாப்பிள்ளை. முடிந்தால் இரவு அங்கு தங்க வேண்டும் என்று ரகசிய ஆசையும் உள்ளுக்குள் ஊற்றெடுக்க கிளம்பி சென்றவனை மனைவி பேச்சாலே அடித்துவிட்டாள். “ம்ப்ச்.. இப்போ எதுக்கு அதை நினைக்கிற, இது கரெக்ஷன் பார்த்துட்டு இப்போவே அனுப்பிடலாம்..” என்று தீவிரமாக செய்து கொண்டிருக்க, அவனின் இன்டர்காம் ஒலித்தது. “சொல்லுங்கண்ணா..” அவன் எடுத்து பேச, “சார்.. உங்களை பார்க்க சிதம்பரம் வந்திருக்கார்..” என்றார் செக்கியூரிட்டி. “சிட்டுண்ணாவா.. இந்த நேரத்தில..” யோசித்தவன், “உள்ள அனுப்புங்கண்ணா, அப்படியே காபி கிடைக்குமா பாருங்க..” என்று வைத்துவிட்டான். சிட்டு அவரின் ஆட்களுடன் உள்ளே வர, “உட்காருங்கண்ணா..” என்றான் உதய். “தம்பி.. இப்போ பொறுமையா உட்கார்ந்து பேச நேரமில்லை, டேய்.. சொல்லுங்டா..” அவரின் ஆளை ஏவினார். “சார்.. நாங்க தான் இன்னிக்கு பிரசாத்தை கண் காணிச்சிக்கிட்டு இருந்தோம், கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவர் எப்போவும் போற பார்க்கு போனார். அண்ணாவும் இன்னிக்கு அங்க தான் இருக்க, அவரை பார்க்க நாங்களும் உள்ளே போனோம்..” “அப்போ அந்த பிரசாத்கிட்ட ஒருத்தன் எதோ கொடுத்துகிட்டு இருந்தான். அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம். இருட்டுல ஒன்னும் பெருசா தெரியல, சந்தேகப்பட்டு அவன் வெளியே வந்தப்போ பார்த்தா அது உங்க ஆபிசில்ல வேலை பார்க்கிற பையன். பேர் தெரியல..” சொல்ல, உதய்க்கு அதிர்ச்சி. எதோ புரிவது போல இருந்தது. “நீங்க கூட ஏதோ ப்ராஜெக்ட் எடுக்க பார்த்திட்டு இருக்கிறதா அன்னிக்கு சொன்னீங்க இல்லை, அந்த பிரசாத்தும் அதுக்காக முயற்சி எடுத்துட்டு இருக்கான்னு கேள்விப்பட்டேன், அதான் நேரா உங்ககிட்ட வந்துட்டோம்..” சொன்ன சிட்டு, “இதான் அவன்..” மொபைலில் எடுத்த போட்டோவை காட்டினார். “கவின்.. இவனா..? துரோகி, ச்சீ..” என்றானது. “நம்ம ஆளுங்க அவன் பின்னாடி தான் போய்ட்டு இருக்காங்க, தூக்கிடலாமா..?” சிட்டு கேட்க, “வேண்டாம்..” என்றான் உதய். “நாளைக்கு ஒரு நாள் தான்ண்ணா, எனக்கு இந்த விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாம், அவன் கொடுத்தது கொடுத்ததாவே இருக்கட்டும்.. அதை வச்சே பிரசாத் டெண்டர் போடட்டும்.. பார்த்துக்கலாம்..” என்றுவிட்டான். “புரியுது தம்பி..” சிட்டு மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, காபி குடித்து கிளம்ப, உதய்க்கு கோபத்துடன், ஆசுவாசமும் உண்டானது. அவர்கள் வர சில நிமிடங்கள் சென்றிருந்தாலும் டெண்டர் அப்ளை செய்து விட்டிருப்பான். திரும்ப மாற்ற முடியும் என்றாலும், அது தனக்கான மதிப்பை குறைக்கும் என்பது அவனின் எண்ணம். அடுத்து என்ன..? என்று தீவிரமாக யோசித்தவன், உடனே டெண்டருக்கான அனைத்து வேலைகளையும் திரும்ப பார்த்து, சில பல மாற்றங்கள் செய்தான். டெண்டருக்கான அமவுண்ட் மட்டும் போடாமல், மீதி எல்லாம் முடித்து சேவ் செய்து பேக் அப்பும் எடுத்து கொண்டவன், சிஸ்டத்தில் அதை அழித்து, பழையதையே விட்டுவிட்டான். இவ்வளவு நேரம் தெரியாமல் இருந்த ஷோல்டர் பெயின் வேலை எல்லாம் முடிக்கவும் தெரிந்தது. நேரம் பார்க்க, இரண்டு மணி. எப்படியும் அப்பா, அம்மாவை தூங்க வச்சிருப்பாங்க நினைத்து கொண்டே வீடு செல்ல, கண்ணம்மா சோபாவில் குறுகி படுத்திருந்தார். இவனிடம் உள்ள சாவியில் கதவு திறக்க, அந்த சத்தத்தில் அவர் வேகமாக எழுந்தார். மகன் என்றவுடன் நேரம் பார்த்தவர், “ஏண்டா இவ்வளவு லேட்..?” கேட்க, “நான் தான் லேட் ஆகும்ன்னு சொன்னேன் இல்லை, உங்களை யார் வெய்ட் பண்ண சொன்னா..? நீங்க தூங்க வேண்டியது தானே..” அவன் அம்மா மேல் பாய்ந்தான். “அதை நீ சொல்லாத..? நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..” அம்மா அவனுக்கு மேல் காய்ந்தார். “நான் என்ன சின்ன பிள்ளையா..? எதுக்கு இப்படி படுத்துறீங்க..?” “என்னடா லேட் வந்ததும் இல்லாமல் கத்துற..?” “நான் என்ன ஜாலியாவா ஊர் சுத்திட்டு வந்தேன்..? அவன் அவன் பிரச்சனை அவனவனுக்கு தான் தெரியும்..” “அதுக்கு என்கிட்ட சத்தம் போடுவியா நீ..?” “நீ எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ற..? என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாரு..” கண்ணம்மாவிடம் அமைதி. ம்ப்ச்.. உதய்க்கு தான் பேசியது அதிகப்படி புரிந்தது. இருக்கும் கோவம் எல்லாம் அம்மாவிடம் காட்டியாகிவிட்டது. “ம்மா..” அவர் அருகே போக, “கிட்ட வந்தா அவ்வளவு தான், ஓடி போயிடு..” கொதித்தார் அன்னை. “ம்மா.. சாரி, இந்த நைட் எனக்கு ரொம்ப மோசமா இருக்கு, நிறைய டென்க்ஷன், அதான்..” “அதுக்கு நான் தான் கிடைச்சேனா உதய்..” “அப்படி இல்லைம்மா, நீ இப்படி தினமும் எனக்காக வெய்ட் பண்றேன்னு தூக்கம் கெடுத்துகிற, அந்த கோவத்தோட.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ..” “அவ்வளவு ஈஸியா போய்ட்டேன் இல்லை, அம்மா தானே, டேக் இட் பார் கிராண்டட்..” “அம்மா.. ஏன் இப்படி..?” “இல்லைன்னு சொல்ல முடியுமா உதய்..?” மகன் மௌனம் காக்க, “அம்மா மேல பாசம் வைக்கிறது மட்டும் போதாது உதய், கொஞ்சம் மரியாதையும் இருக்கணும், இருந்தா இப்படி எடுத்தெறிஞ்சு பேச வராது..” எழுந்து ரூமிற்கு சென்றுவிட, உதய் தலை பிடித்து அமர்ந்துவிட்டான். இதற்கு முன்னும் இருவருக்கும் சண்டைகள் பல வந்திருக்கிறது தான். ஆனால் இது வேற, அவரின் மனதை காயப்படுத்திவிட்டான். மறுநாள் இருவருமே தாமதமாக தான் எழுந்தனர். உதய் ஜிம் சென்று யோகா முடித்து கிளம்பி கீழே வர, கண்ணம்மா சாப்பிட்டு கொண்டிருந்தார். “உட்காருங்க தம்பி..” வள்ளி உணவு வைக்க, அம்மாவோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை மகனை. மிகவும் அமைதியாக முடிந்தது உணவு நேரம். காபியுடன் கண்ணம்மா சோபாவில் அமர, அவரின் பக்கத்தில் அமர்ந்த மகன் அவரின் காபியை எடுத்து குடிக்க, கண்ணம்மா திட்ட ஆரம்பித்த வாயை இறுக்க மூடி கொண்டார். “காபி சூப்பர் வள்ளிக்கா..” கிட்சன் நோக்கி குரல் கொடுத்தவன், “ம்மா.. காபி வேணுமா..?” புறா தூதுவிட்டான். உன்னை கேட்டேனா பார்வை பார்த்தவர், டிவி போட, ரிமோட் பிடுங்கி தான் பார்த்தான். இவனை.. பல்லை கடித்தார். “ம்மா.. நைட் நான் மும்பை கிளம்புறேன், ஒரு ப்ராஜெக்ட் எடுக்க பார்க்கிறேன் சொன்னேன் இல்லை அதுக்கு தான் நேர்லே போறேன்..” என, “எருமை மாடு எங்க மேய போனா எனக்கென்ன..?” முணுமுணுத்தார் கண்ணம்மா. “ம்மா.. இது ரொம்ப ஓவர்..” “நேத்து நீ பேசினதை விடவா..?” “ம்ப்ச்.. அதான் சொன்னேன் இல்லை, மூட் ஆப், கோவம்..” “அதை என்கிட்ட கொட்ட நான் என்ன டஸ்ட்பின்னா..?” “ இதை விடவே மாட்டியா நீ..?” “மாட்டேன்டா..” ரிமோட் பிடுங்கி அவர் டிவி பார்க்க, “கண்ணு.. ரொம்ப தான் பண்ணாத..” “டேய் என் புருஷன் மட்டும் தான் என்னை கண்ணு கூப்பிடனும்.. நீ கூப்பிடாத..” “ஏன்..? நான் ஏன் கூப்பிட கூடாது..? கூப்பிடுவேன், கண்ணு, பொண்ணு, என் ஸ்வீட் பண்ணு..” “கேவலமா இருக்கு..” “ஆமா உன்னை பொண்ணு சொல்லியிருக்க கூடாது, பாட்டி தானே நீ..?” சமாதானத்திலும் அடித்து கொண்டனர் அம்மாவும், மகனும். “எழுந்து போடா முதல்ல..” “நான் ஏன் எழுந்து போகணும்..? இது எங்க அப்பா வீடு கண்ணு, உங்க அப்பா வீடு இல்லை..” “அடிங்க..” கண்ணம்மா ஏறி கொண்டு போக, உதய் மொபைல் ஒலித்தது. எடுத்து சைலென்டில் போட்டான். கண்ணம்மா முகம் சுருங்கியது. கூப்பிட்டது பவ்யா. “ஏன் எடுக்க மாட்டேங்கிறான்..?” அதுவும் மூன்று மிஸ்ட் கால் என்று ரிங் முடிந்ததும் காட்டியது. பார்த்தவர் மகனை பார்க்க, அவனோ ரிமோட் எடுத்து மாத்தி கொண்டிருந்தான். “எதுவும் சண்டையா இருக்குமோ, நேத்து கூட அங்க போய்ட்டு உடனே ஆபிஸ் போயிட்டான் தானே.. அப்போ எதுவும் பிரச்சனை ஆகியிருக்குமோ..?” “ம்மா.. அனி எப்போ வரா..?” மாமியார் வீடு சென்றிருந்த தங்கையை கேட்டான்.