யுகம் சுகம் தானே 16 1 15821 யுகம் சுகம் தானே 16 “இவ்வளவு டென்க்ஷன் எடுத்துக்காத ஷா.. மாமா நல்லா இருக்கார், நீ இப்படி இருந்தா அப்பறம் அவரும் டவுன் ஆக வாய்ப்பிருக்கு, சாதாரணமா இரு..” உதய் மனைவியின் கை பிடித்து சொல்ல, அவளுக்கோ அவனின் வார்த்தைகள் காதில் சென்று சேர்ந்ததா என்றே தெரியவில்லை. மிகவும் பதட்டத்துடன் ராம் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடல் ரூம் கதவையே பார்த்திருந்தாள். இன்று தான் அவருக்கான ஆப்பரேஷன் நடக்க இருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் அவர் ஆப்பரேஷன் தியேட்டர் செல்ல வேண்டும். அதற்காக ராமை தயார் செய்து கொண்டிருந்தனர். வெளியே காத்திருந்த ஷாவிற்கோ கொஞ்சமும் நிதானம் இல்லை. முழுக்க முழுக்க பதட்டம், பயம். “பவ்யா.. இந்த ஜுஸ் கொஞ்சம் குடி, முகத்தை தண்ணில துடை, சாதாரணமா நில்லு, அண்ணா இப்போ வெளியே வந்துடுவார், நீ இப்படி இருந்தா அவருக்கு தான் கஷ்டம்..” கண்ணம்மா கொஞ்சம் அதட்டலுடனே மருமகளை செய்ய வைத்தார். ஷாவிற்குமே தான் செய்வது தவறு என்று புரிய, தந்தை வருவதற்குள் தன்னை நிதானத்திற்கு கொண்டு வர முயன்றாள். கண்ணம்மா சொன்னது போல முகம் கழுவி கணவனின் கையை பிடித்து கொண்டாள். உதய்க்கும் அவளின் நிலை புரியாமல் இருக்குமா..? அம்மா இல்லாமல் அப்பா மட்டும் இருக்க, அவருக்கும் இப்படி என்றால் அவளால் எவ்வாறு சாதாரணமாக இருக்க முடியும்..? புரிதலுடன் அவளின் கையை தட்டி கொடுத்தவன், “உனக்கு பிடிச்ச கடவுளை, இல்லை உன் அம்மாவை நினைச்சுக்கோ, அவங்ககிட்ட உன் ஆசையை, வேண்டுதலை சொல்லிகிட்டே இரு.. மாமா கண்டிப்பா நல்ல படியா மீண்டு வருவார்..” அவளுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுத்து கொண்டிருக்க, அவளின் முகம் கொஞ்சம் தெளிய தான் செய்தது. சிறிது நேரம் சென்று ராம் ரூம் கதவு திறக்க, ஸ்ட்ரெச்சரில் ஆப்பரேஷன் தியேட்டர் செல்ல படுக்க வைக்க பட்டிருந்தார் அவர். பார்த்தவுடன் ஷாவின் பதட்டம், பயம் திரும்ப அவளை பிடித்து கொள்ள, எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்கள் கலங்கி போக, ராம் பார்க்காமல் இருக்க, அவசரமாக முகம் துடைத்து நின்றாள். ராம் மகளையே பார்த்திருந்தவர், அவளின் அருகில் வரவும் ஸ்ட்ரெச்சர் நிப்பாட்டி அவளின் கை பிடித்தார். “ஷாம்மா.. அப்பா உனக்காக வருவேன்.. கலங்க கூடாது சரியா..” குழந்தைக்கு சொல்வது போல சொல்ல, ஷாவிற்கோ அடக்கப்பட்ட கண்ணீர் அவளையும் மீறி கன்னத்தில் வழிந்துவிட்டது. “ஷா.. என்ன இது..?” உதய் கண்டிப்புடன் மனைவியை கடிந்து கொண்டவன், “மாமா.. நான் பார்த்துகிறேன் அவளை, நீங்க ரிலாக்ஸா இருங்க..” அவரை ஆறுதல் படுத்தினான். “அந்த நம்பிக்கை எனக்கு எப்போவும் இருக்கு உதய்..” ராம் ஓர் வரியில் அவனின் மீதான அவரின் நம்பிக்கையை சொன்னவர், அங்கிருந்த மற்ற நண்பர்கள், குடும்ப ஆட்கள் எல்லோரிடமும் தலை அசைப்புடன் விடை பெற்றார். ஷா உள்ளே செல்லும் வரை அவரின் கை பிடித்து வந்தவள், “நான் உங்களுக்காக காத்திருப்பேன்ப்பா..” என்றாள். “ஷாம்மா.. அப்பா வருவேன்டா.. பத்திரமா இரு..” மகளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளே சென்றார் தந்தை. அடுத்த சில பல மணி நேரங்கள் எப்படி சென்றது கேட்டால் ஷாவிற்கு நிச்சயம் தெரியாது. ஒரே இடத்தில் அமர்ந்துவிட்டாள் மனதில் தீவிர வேண்டுதலுடன். இடையிடையே உதய் தான் வற்புறுத்தி ஜுஸ் குடிக்க வைத்து கொண்டிருந்தான். “ம்மா.. அண்ணி இப்படின்னு நான் நினைக்கவே இல்லை, எப்போவும் ரொம்ப போல்டா, மெச்சூர்ட்டா பார்த்திருக்கேன்..” அனிதா அம்மாவிடம் ஆச்சரியத்துடன் சொன்னாள். “அனி.. அவளுக்கு இருக்க ஒரே சொந்தம் அவங்க அப்பா மட்டும் தான், அவங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் ரெண்டு பேரா இருந்துட்டாங்க இல்லை.. அதான் அவரோட ரொம்ப அட்டேச்மென்ட் போல..” கண்ணம்மா குரலில் ஏதோ ஒன்று இருக்க தான் செய்தது. “ம்ம்.. கஷ்டம் தான், என்னம்மா..?” மகள் கேட்க, அம்மாவோ மகன், மருமகளையே பார்த்திருந்தார். மிகவும் அழுத்தமாக உணர்ந்தார் மாமியார். ரிசப்ஷன் அன்று பிரசாத் இவரிடம் பேசி சென்றதே ஓடியது. அவன் சொன்னது அவரை பாதிக்கவில்லை ஆனால் பாதித்தது நிலை தான். மிகவும் யோசித்து தன்னை தானே குழப்பி கொண்டார். கணபதி முகிலுடன் கேன்டீன் சென்று எல்லோருக்கும் காபி வாங்கி வந்திருந்தார். “பவ்யாக்கு வேண்டாம்..” முகில் சென்று கொடுக்க, ஜின்னா உடனே மறுத்தான். ஜோதி அவளுக்காக வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த காபியை ஊற்றி உதய் கையில் கொடுத்தார். அவனுக்கு இது தெரிந்த விஷயம் தான் என்பதால் நண்பன் கொடுத்த காபியை தான் எடுத்து கொண்டவன், மனைவிக்கு அவள் காபியை குடிக்க வைத்தான். பார்த்திருந்த கண்ணம்மா மனம் இன்னும் இன்னும் குழம்பி தவிக்கவே செய்தது. “ம்மா.. காபி ஆறுது, குடி..” அனிதா சொல்ல, கண்ணம்மா விழுங்கி வைத்தார். “வீட்டுக்கு போன் போடும்மா.. பசங்ககிட்ட பேசலாம்..” பிள்ளைகள் ராகுல் பொறுப்பில் வீட்டில் இருக்க, போன் எடுத்து மக்களை விசாரித்தாள் அனிதா. இன்னும் சில மணி நேரங்கள் சென்றே ஆப்பரேஷன் தியேட்டர் வாசல் திறந்தது. ஷா முதல் ஆளாக ஓடினாள். “சக்ஸஸ்..” டாக்டர் முத்துக்கள் உதிர்க்க, எல்லோருக்கும் அப்படி ஒரு ஆசுவாசம், நிம்மதி, மகிழ்ச்சி. ஷா தோய்ந்து போய் கணவன் தோள் சாய்ந்துவிட்டாள். அப்படியே தோளோடு அணைத்து கொண்ட உதய், “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர், அவரை எப்போ பார்க்கலாம்..?” கேட்டான். “நைட் வரை மயக்கத்துல தான் இருப்பார்.. நாளைக்கு நீங்க பார்க்கலாம், அதுவரை நல்லதே நினைப்போம்..” அவர் செல்ல, ஷாவை சேரில் அமரவைத்தான். அவர் கண்விழிக்கும் வரை மனம் அமைதியடையாது மகளுக்கு. தொடர்ந்தது அவளின் வேண்டுதல் அப்பா கண் விழிக்கும் வரை. “அனிதா நீ கிளம்பு.. பிள்ளைங்க கஷ்டபடுவாங்க.. ம்மா, ப்பா நீங்களும் கிளம்புங்க, சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, நான் போன் பண்றேன்..” உதய் சென்று சொல்ல, “நான் மட்டும் இருக்கேன் உதய், இவங்க கிளம்பட்டும்..” என்றுவிட்டார் கண்ணம்மா. அவசர தேவைக்கு என்று. மற்றவர்களும் சிலர் கிளம்ப, சிலர் அங்கேயே நின்றனர். இரவு வெகு நேரம் சென்றே கண் விழித்தார் ராம். டாக்டர் உடனடியாக செக் அப் செய்து, “உங்க அப்பா பெர்பெக்ட்லி ஆல்ரைட்..” என, ஷா கண்களில் கண்ணீர் வழிய, முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. “கடவுளுக்கு நன்றி..” அதுவரை ஓரமாக அமர்ந்திருந்த ராமின் அண்ணா கண்ணீருடன் கை தூக்கினார் மேல் பார்த்து. என்ன இருந்தாலும் அவரின் உடன்பிறப்பு. அவர் மேல் பல வருத்தம், கோவம், ஏன் பொறாமை இருந்த போதும் ரத்த பாசம் ஒட்டியிருந்தது போல. அதனாலே தம்பியின் ஆப்ரேஷன் முடியும் வரை மகனுடன் வெளிநாடு செல்லவில்லை அவரும், அவரின் மனைவியும். கடைசி கால ஞானதோயம் போல. அடுத்த ஒரு வாரம் ஹாஸ்பிடல் வாசம். ராம் உடல் முழுதும் தேறிய பிறகே வீட்டிற்கு திரும்பினார். அந்த மாதம் முழுதும் கூட முழு ஓய்வு. மகள் அப்பா உடனே இருந்தாள். முதலிலே அவருடன் இருக்க வேண்டும் என்று வேலைகளை பிரித்து கொடுத்து விட்டிருந்ததால், மிக முக்கிய வேலைகளுக்கு மட்டும் ஆபிஸ் சென்று வந்தாள். அவருக்கான உணவு, நடை பயிற்சி நேரம், தூக்கம், வார செக் அப் என்று எல்லாம் அவளே பார்த்து கொண்டாள். எல்லாம் நல்ல படியாக சென்று கொண்டிருக்க அப்பா மகிழ்ச்சியுடன் இருந்தார் மகளுடன். ஆனால் மகளோ கணவனை பிரிந்து உள்ளுக்குள் கரைந்து கொண்டிருந்தாள். ஆமாம் உதய் அவர்கள் வீட்டில் இல்லை. ராம் ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு வந்த இரண்டாம் வாரத்திலே அவன் வீட்டிற்கு போகிறேன் என்று நின்றான் “ஷா.. நான் இங்க வந்து ஒரு மாசம் ஆக போகுது, மறுவீடு, ரிசப்ஷன், மாமா ஆப்பரேஷன்னு கிளம்பவே முடியல, இப்போ ஓரளவுக்கு எல்லாம் செட் ஆயுடுச்சு இல்லை, நான் நம்ம வீட்டுக்கு போறேன், நீ மாமாவோட இரு, அப்பப்போ வந்து பார்த்துகிறேன்..” என, ஷா இதை எதிர்பார்க்கவில்லை போல. “ஏன்ங்க..? இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்லை..” கேட்டுவிட்டாள். “கஷ்டம் ஷா..” “ஏன் என்ன ஆச்சுங்க, எதாவது பிரச்சனையா..?” “ச்சே.. எனக்கு என்ன பிரச்சனை..? அனிதா இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருப்பா, அவளோட இருக்கனும் தானே..” என, அதற்கு மேல் ஷாவால் என்ன பேச முடியும்..? சம்மதமாக தலை ஆட்டிவிட்டாள். “தேங்ஸ்டி.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரேன்..” கிளம்பிவிட்டான். உண்மைக்கும் அவனுக்கு இங்கு அந்தளவு கம்பர்ட் இல்லை. சொன்னால் மனைவி வருத்தப்படுவாள் என்று சொல்லவில்லை. உதய் சொன்னது போல இடையில் வந்து பார்த்து செல்கிறான் தான். ஆனால் தங்குவதில்லை. ஷாவும் கேட்கவில்லை. கேட்டாலும் தங்கியிருப்பானோ தெரியவில்லை. மாலை.. அல்லது காலை போல வருவான். சில நிமிடங்கள் இருப்பான், சில நேரம் இவர்களுடன் உணவு உண்பான், பேசுவான், கிளம்பிவிடுவான். ராம் இவர்களுக்கு தனிமை கொடுக்க நினத்தாலும், உதய் அங்கிருக்கும் சொற்ப நிமிடத்தில் அதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விடும். கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்த போதே ஒரு இடைவெளியை உணர்ந்த ஷாவிற்குள் இந்த பிரிவு மேலும் தாக்கத்தை கொடுத்தது. உதய்யிடம் உரிமை எடுத்து எது கேட்கவும் தயங்கினாள். இங்கு இரு என்று சொல்லவும் முடியவில்லை. கணவன் நினைத்து ஏக்கம் கொண்ட பெண்ணுக்கு அதை அவனிடம் வெளிப்படுத்த முடியவில்லை என்றால் என்ன செய்வது..? தனக்குள் மருக வேண்டியது தான். ஷாவும் இப்போது அப்படித்தான் இருந்தாள். என்ன வெளியே காண்பித்து விட கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்க, அவளின் அந்த ஏக்கம் கணவனுக்கும் புரியவில்லை, தந்தைக்கும் தெரியவில்லை. மகளும், மருமகனும் நன்றாக தான் இருக்கின்றனர் என்று நினைத்து கொண்டவர், கூடிய சீக்கிரம் மகளை புகுந்த வீடு அனுப்ப வேண்டும் என்றும் நினைத்து கொண்டார். என்ன தான் மகள் அவருக்காக பார்த்தாலும், புது தம்பதியை வெகு நாள் பிரித்து வைத்திருக்க முடியாதே.