யுகம் சுகம் தானே 15 1 16605 யுகம் சுகம் தானே 15 “இன்னும் என்ன பண்ற அனி..? நேரம் ஆச்சு.. சீக்கிரம்..” அனிதாவின் கணவர் ராகுல் பிள்ளைகளை தயார் செய்து கொண்டே மனைவிக்கு குரல் கொடுத்து கொண்டிருந்தான். “இதோ வந்துட்டேங்க.. ரொம்ப நாள் ஆச்சு இல்லை புடவை கட்டி, அதுவும் இந்த காட்டன் சேரி சரியாவே நிக்க மாட்டேங்குது..” சலிப்பாக மடிப்பை சரி செய்தவாறே அனிதா வந்தாள். “சரி இரு..” மனைவிக்கு கண் காட்டியவன், “குட்டீஸ் நீங்க பாட்டிகிட்ட ஒடுங்க, அப்பா கிளம்பி வந்துடுறேன்..” பிள்ளைகளை வெளியே அனுப்பி வைத்தவன், முட்டி போட்டு மனைவியின் மடிப்பை நீவி விட செய்தான். “சூப்பர்ங்க.. தேங்க் யூ..” கணவனுக்கு கிள்ளி முத்தம் கொடுத்தவள், அவனுக்கான உடை எடத்து கொடுக்க, அவனும் கிளம்பி இருவருமாக வெளியே வந்தனர். ஹாலில் கண்ணம்மா பிள்ளைகளுடன் ரெடியாக இருக்க, “கிளம்பலாமாத்தை..” மருமகன் கேட்டான். “போலாம் மாப்பிள்ளை.. வள்ளி உதய் அப்பா வந்தா மறக்காம காபி, ஸ்னேக்ஸ் கொடுத்துடு..” அவருக்கும் சொல்லி கொண்டு காருக்கு சென்றனர். “அத்தை.. xxx மால் தானே..?” ராகுல் மேப் போட்டு காரை எடுத்தான். சென்னையில் கார் ஒட்டி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கவனமாக வழிய பார்த்து கார் ஓட்டி கொண்டே, “உதய்.. வந்துடுவார் இல்லை..” என்று கேட்டான். “வந்துடுறேன் தான் சொல்லியிருக்கான் மாப்பிள்ளை, அப்படியே லேட் ஆனாலும் பிரச்சனை இல்லை பவ்யா அங்க தான் இருப்பான்னு சொன்னான்..” கண்ணம்மா தகவல் சொன்னார். “அந்த மால் ஷாராங்கிறது எனக்கு இன்னிக்கு நீங்க சொல்லி தான் தெரியும்த்தை.. அவங்க பிக் ஷார்ட்ன்னு தெரியும், ஆனா இந்தளவுன்னு நினைக்கல.. இனி உதய் ரேஞ்சே வேற..” ராகுல் ஆச்சரியத்துடன் சொல்ல, “இப்போ மட்டும் என் அண்ணன் ரேஞ்ச் என்ன குறைஞ்சு போச்சு, அவன் இன்னும் இன்னும் வளருவான் பாருங்க..” அனிதா அண்ணனுக்காக ரோஷத்துடன் பேசினாள். “நான் அப்படி சொல்லலை அனி.. இன்னாருடைய மருமகங்கிற அடையாளம் உங்க அண்ணனுக்கு கிடைக்கும் இல்லை அதை சொன்னேன்..” சமாளிப்பாக சொன்னான். கணவனால் மனைவியிடம் முட்ட முடியுமா..? அதுவும் பிறந்த வீடு என்று வரும் போது..? “அதை தான் நானும் சொல்றேன், என் அண்ணன் தனியா நின்னாலே கெத்து தான், இத்தனை வருஷத்துல அவன் அவனுக்காக உருவாகியிருக்கிற அடையாளமே பெருசு, இதெல்லாம் எங்க அண்ணனுக்கு தேவைப்படாது..” விடுவேனா என்று நின்றாள் தங்கை. “ஆத்தி.. இவளை பத்தி தெரிஞ்சும் வாய் விட்டது உன் தப்புடா ராகுல்..” மனதுள் தன்னை தானே கடிந்து கொண்டவன், “அதென்னமோ சரி தான் அனி.. உதய்யோட உழைப்பு, திறமை வேற தான்..” மனதார உணர்ந்து தான் சொன்னான் ராகுல். “அஃது..” அனிதா கெத்தான பார்வை பார்த்தவள் திரும்பி கொள்ள, ராகுல் நிம்மதி பெரு மூச்சு விட்டு கொண்டான். இதில் எதுவும் தலையிடாமல் குழந்தைகளுடன் ஒன்றிவிட்டார் கண்ணம்மா. அவரின் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு மட்டுமே. இது போல பேச்சுக்களை இந்த ஒரு வாரத்திலே பல முறை கேட்டுவிட்டார் அல்லவா..? அவருக்கு யாரிடமும் தன் மகனை நிரூபிக்கும் அவசியம் இருப்பதாக தெரியவில்லை. அவன் வளர்ச்சியே அவனை நிரூபிக்கும் என்று நினைத்து மௌனம் காத்தார் அன்னை. “ம்மா.. அண்ணா, அண்ணி நம்மளோட கோவிலுக்கு வருவாங்க இல்லை, நீ கேட்டியா..?” காரை நிறுத்திவிட்டு செல்லும் போது அனிதா கேட்க, “உதய்கிட்ட மட்டும் இப்படின்னு சொல்லியிருக்கேன் அனி, பார்க்கலாம் அவங்க வேலை பொறுத்து கேட்டுக்கலாம்..” என்றுவிட்டார் கண்ணம்மா. மகன், மருமகள் இருவரின் வேலை பளுவும் ஓரளவுக்கு தெரிந்தவர் என்பதால் மகளிடம் மேம்போக்காக சொல்லிவிட்டார். அப்படி அவர்கள் உடன் வரவில்லை என்றால் மகள் எதுவும் நினைத்துவிட கூடாது என்பதற்காக. “அதுவும் சரிதான்ம்மா.. பாவம் நிறைய வேலை ரெண்டு பேருக்கும்..” அம்மாவும் மகளும் பேசி கொண்டே மாலுக்குள் சென்றனர். ஷாவின் செகரட்டரி இவர்களுக்காக காத்திருந்து மேலே அழைத்து செல்ல, ஷா இன்னும் வந்திருக்கவில்லை. உதய் கிளம்பிட்டேன் என்று போன் செய்ய, எல்லோரும் அங்கேயே காத்திருந்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான காபி, ஜுஸ், ஸ்னேக்ஸ் என்று எல்லாம் வரவைத்து கொடுக்கப்பட்டது. “ம்மா.. அவங்க வரதுக்கு நேரம் ஆகும் போல, அதுக்குள்ள நாம ஷாப்பிங் முடிச்சிடலாமா..?” அனிதா கேட்க, “அதுவும் நல்லது தான் அனி, வாங்க போலாம்..” என்று அவர்கள் எப்போதும் எடுக்கும் ஸ்டோர்க்கு சென்றனர். அனிதா திரும்ப லண்டன் செல்லும் போது அங்கு எடுத்து செல்வதற்கான உடைகளை வாங்க ஆரம்பித்தனர். உதய் வந்துவிட்டவன் கண்ணம்மாவிற்கு போன் செய்து எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு அங்கு சென்றான். “சாரி மாமா.. டிராபிக்ல மாட்டிகிட்டேன்..” உதய் முதலில் ராகுலிடம் சென்று மன்னிப்பு கேட்டான். “இருக்கட்டும் உதய்.. அப்படி ஒன்னும் லேட் ஆகல..” என்றுவிட்ட ராகுல்க்கு மைத்துனன் தன்னை மதித்து சாரி கேட்டதில் மகிழ்ச்சி தான். “வந்துட்டியா.. இந்த ஷார்ட் எப்படி இருக்கு, அப்பாக்கு சரியா இருக்கும் இல்லை..” கண்ணம்மா மகன் வரவும் அவனிடம் கேட்க, அவனோ இது நல்லா இல்லை.. என்றான். “என்னடா நல்லா இல்லை.. இதை தான் எடுப்பேன் போடா..” என்று சிலிர்த்து கொண்டார் அவர். “அப்பறம் எதுக்கு கேட்டீங்க..” மகன் உர்ரென்று கேட்க, “அது தான் தப்பு..” என்றார் அம்மா உடனடியாக. “ண்ணா.. வந்துட்டியா, இவங்களை கொஞ்சம் அவர்கிட்ட விட்டுடு, என்னை துணி எடுக்கவே விட மாட்டுறாங்க, அங்கங்க ஓடிட்டே இருக்காங்க..” அனிதா வர, “என்கிட்ட விடு நான் பார்த்துகிறேன்..” பிள்ளகளை தன்னுடன் அழைத்து கொண்டவன், கண்ணம்மாவிடம் சென்று அவன் கார்டை கொடுத்தான் பணம் கட்ட. “என் பொண்ணுக்கு எடுத்து கொடுக்க என்கிட்ட பணம் இருக்கு..” கண்ணம்மா எப்போதும் போல சொன்னார். உதய்யின் குணம் எல்லாம் அவரிடம் இருந்து வந்திருக்கும் போல.. “என் தங்கச்சிக்கு நான் செய்றேன், கல்யாணத்துக்கு கூட என்னை எதுவும் செய்ய விடல, இப்போவவாவது செய்றேன் விடுங்கம்மா..” கார்டை அவரின் கையில் திணித்துவிட்டான். அனிதாவிற்கு அண்ணன் திருமணத்திற்கான பிறந்த வீடு சீர் கண்ணம்மா, கணபதி தான் செய்திருந்தனர். அப்போதும் உதய் விடாமல் நால்வருக்கும் கழுத்து செயின் எடுத்து கொடுக்கவே செய்திருந்தான். “மாமா.. நான் இவங்களை பிளே ஸ்டார் கூட்டிட்டு போறேன்.. நீங்க இங்க பார்த்துக்கோங்க..” அம்மா, தங்கையை அவனின் பொறுப்பில் விட்டு பிள்ளைகளுடன் பிளே ஸ்டார் சென்றுவிட்டான். இரண்டு மணி நேரம் அவனின் பெண்டை கழட்டிவிட்டனர் இருவரும். இருக்கும் எல்லா விளையாட்டையும் விளையாடியே ஓய்ந்தனர். இதில் இடையிடையே வயிற்றுக்கும் கவனிப்பு. “மாமா.. செகண்ட் ரவுண்ட்..” என்று திரும்பவும் நிற்க, “என்ன..? இதுக்கு மேல மாமாகிட்ட காசு கிடையாது.. என்ன விலைடா சாமி.. எனக்கு எல்லாம் கட்டுபடியாகாது.. கிளம்புங்க போலாம்..” பிள்ளைகளுடன் செல்ல, ஷா அப்போது தான் வந்திருந்தாள் போல. “ரொம்ப லேட் ஆகிடுச்சு, சாரி..” என்று மூன்று பேரிடமும் சொல்லி கொண்டிருக்க, இவன் சென்று நின்றான். “ஹாய் அத்தை..” பிள்ளைகள் சொல்ல, ஷா இருவருக்கும் எதுவும் வாங்கவில்லை என்று தோன்றியது. “முடிஞ்சுதா..?” உதய் கேட்க, “இல்லைண்ணா, பசங்களுக்கு பார்க்கணும், அப்பறம் அம்மாக்கும் எடுக்க இன்னொரு ஸ்டார் போகணும்..” என்றாள் அனிதா. “பசங்களுக்கு மட்டும் பாரு அனி, அம்மாக்கு இன்னொரு நாள் பார்த்துக்கலாம்..” உதய் வேகமாக சொல்ல, உன்னை யார் கேட்டா பார்வை பார்த்தார் அம்மா. “ம்மா.. நேரா ஆபிசில் இருந்து வந்திருக்கேன், செம டையார்ட், ஒரு காபியாவது வாங்கி கொடு..” மகன் கேட்க, “என்னடா இன்னும் சொல்லலை பார்த்தேன்..” கண்ணம்மா கேலியாக சொன்னார். “இருங்க எடுத்துட்டு வரச்சொல்றேன்..” என்றாள் ஷா அவசரமாக. “வேண்டாம் ஷா, அம்மா வாங்கி கொடுப்பாங்க..” என்றுவிட்டவன், “நீயும் வா.. ரொம்ப டையர்டா தெரியுற..” மனைவியை கூப்பிட்டான். “சார் மேல நம்ம இடத்துக்கு போயிடலாம்..” என்றான் ஜின்னா அதுவரை அமைதியாக இருந்தவன். அவளின் பாதுகாப்பை, ஹெல்த்தை பார்க்கிறான் என்று புரிய, “சரி.. ஷா நீ மேல போய்ட்டு ரெப்ரெஷ் ஆகிட்டு வா.. நான் அம்மா கூட புட் கோர்ட் போறேன்..” என, ஷா முகம் கொஞ்சம் வாடிதான் போனது. உதய்க்கோ கண்ணம்மாவுடன் சிறிது நேரம் செலவழிக்க ஆசை. இந்த ஒரு வாரமாக அவன் ஷா வீட்டில் தான் இருக்கிறான். இடையிடையே நேரம் கிடைக்கும் மட்டும் தான் தன் வீடு சென்று இவர்களை பார்த்துவிட்டு வருவான். அதனாலே என்னமோ அம்மா உடன் இருக்க ஆசை மகனுக்கு. ஷாவிற்கும் அது புரிய தான் செய்தது. சரி என்றுவிட்டு ஜின்னாவுடன் மேலே சென்றாள். “அனி.. நீ பசங்களுக்கு பாரு, நாங்க இதோ வந்துடுறோம்..” உதய் அம்மாவுடன் புட் கோர்ட் சென்றான். கண்ணம்மா நேரே காபி வாங்க செல்ல, “ம்மா.. காபின்னா காபி மட்டுமா..? பசிக்குது, வேற ஏதாவது வாங்கி கொடு..” உதய் இருக்கும் டையார்டில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். வெஜ் ரோல், சமோசா வாங்கி கொடுக்க, “ம்மா.. சிக்கன் பர்கர் வாங்கியிருக்கலாம் இல்லை..” என்றான் மகன். “டேய்.. கோவிலுக்கு போக வேண்டாமா..?” “ஓஹ்.. மறந்துட்டேன்..” அதையே சாப்பிட்டு முடித்தவன், தானே சென்று இருவருக்கும் காபி வாங்கி வந்தான். “நான் முன்னே குடிச்சிட்டேன், பவ்யா செகரட்டரி பொண்ணு கொடுத்துச்சு..” என, உதய்க்கு சிரிப்பு. “பரவாயில்லை குடி..” என்றவன், “அந்த பொண்ணு உன்னை அன்னிக்கு என்ன நினச்சுச்சோ..” என்றான் சீண்டலாக. “என்ன லூசு நினைச்சிருக்கும் சொல்றியா..?” கண்ணம்மா புரிந்து கோவமாக கேட்டார். “இருக்கலாம்..” மகன் இன்னும் சிரிப்புடன் சொல்ல, “உனக்கு போய் வாங்கி கொடுத்தேன் பாரு என்னை சொல்லணும், ஒழுங்கு மரியாதையா முந்நூறு ரூபா எடுத்து வைடா..”