யுகம்  சுகம் தானே 12

இன்னும் இரண்டு நாட்களில் பவ்யாஷாரா.. உதய்  திருமணம். நாளை மாலை  மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் முகூர்த்தம். இரு வீட்டிலும் கல்யாண வேலைகள் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தது

உதய் வீட்டில் பாதி உறவினர்கள் வெளியூர் என்பதால் இன்று, நாளை போல வீட்டிற்கே வந்துடுவார்கள். வரத்தான் வேண்டும். இல்லை என்றால் கண்ணம்மா..  காளியம்மா தான். பம்பை, வேப்பிலை அடிக்காமலே ஆடி தீர்த்துவிடுவார்

உங்களுக்கு மட்டும் எல்லாத்துக்கும் வந்து நான் முறைவாசல் செய்யணும், எனக்கு வரமாட்டிங்களோ..?”  என்று பஞ்சாயத்து தான். அதனாலே அங்காளி, பங்காளி பெண்கள் நிச்சயம் வந்துடுவார்கள்

அதுவும் இல்லாமல் அவர்கள் வீட்டிலே கண்ணம்மாவிற்கு தான் அவர்களின் சடங்கு முறை எல்லாம் நன்றாக தெரியும். இப்போது வந்த பங்காளி வீட்டு மருமகள்களுக்கு அந்தளவு தெரியாது என்பதால் ஏதாக இருந்தாலும் கண்ணம்மா தான். அவர்தான் பாரபட்சம் பார்க்காமல் எல்லோர்க்கும்  முன் நின்று எடுத்தும்  செய்வார்.  

அப்படி  நேரில் செல்ல முடியவில்லை என்றாலும் போனில் இப்படி இப்படி என்று சொல்லி கொடுத்துடுவார். அதற்கே  எல்லாம் வந்துவிட, கண்ணம்மா வீட்டில் கல்யாண களை கட்டியது

அத்தை.. மண்டபத்துக்கு எடுத்துட்டு போக திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டோம்..” அவரின் ஒன்றுவிட்ட மாமனாரின் மருமகள்கள் வந்து நிற்க, 

“சரிம்மா.. இந்தாங்க பூவை கட் பண்ணி எல்லோருக்கும் கொடுத்துட்டு நீங்களும் வச்சுக்கோங்க..” பண்டில் முல்லை பூவை எடுத்து கொடுத்தார். 

“சரிங்கத்தை.. வாங்கி கொண்டவர்கள், அண்ணன் கல்யாணத்துக்கு அனிதா வரலையா..?” என்று ஆரம்பித்தனர். 

“நீ காலையிலே கேட்டப்போவே நான் என்ன சொன்னேன், இன்னிக்கு ஈவினிங் வந்துடுவான்னு தானே.. திரும்ப என்ன..?” கண்ணம்மா வேலை பார்த்துக்கொண்டே கேட்க, 

“இல்லைத்தை.. என்ன இருந்தாலும் ஒரு அண்ணன், அவர் கல்யாணத்துக்கு இப்படி விருந்தாளி மாதிரி வந்தா எப்படி..?”

“அப்படி சொல்லு, அவதான் முன்ன  நின்னு எங்க கொழுந்தன் கல்யாணத்தை எடுத்து செஞ்சிருக்கணும்..” இன்னொருத்தி சொல்ல, கண்ணம்மா திரும்பி இருவரையும் பார்த்தவர், 

“என் மருமகள்ங்க  நீங்க தங்கமாட்டம் இருக்கும் போது  அவ எனக்கு செஞ்சா என்ன செய்யாட்டி என்ன..? என்ன இருந்தாலும் அவ இன்னொரு வீட்டுக்கு போயிட்டா,  பங்காளிங்க நாம தானே ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்துக்கணும்..”

“ஏன் போன மாசம் உன் பொண்ணு வயசுக்கு வந்தப்போ உன் பொறந்த வீடா முன்ன நின்னு செஞ்சுச்சு, நாங்க தானே எடுத்து போட்டு செஞ்சோம், எல்லாம் அப்படி தான்..”  என்றுவிட, திரும்ப வாய் திறப்பார்களா என்ன..? 

“நாங்க இந்த பூவை எல்லோருக்கும் கொடுத்துடுறோம்த்தை..” என்று ஓடிவிட, கண்ணம்மா பெரு மூச்சுடன் விட்ட வேலையை தொடர்ந்தார். 

“இந்த பொண்ணு ஒழுங்கா டிக்கெட் புக் பண்ணாம கோட்டை விட்டுட்டு எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கு..” மகளை  மனதில் கடிந்து கொண்டவர், நலங்குக்கான ஏற்பாட்டை பார்க்க ஆரம்பித்தார்.

ரூமில் இருந்த உதய்யோ ஷாவிடம் எப்படி பேசுவது என்ற யோசனையில். திருமணம் முடிந்து முதலில் அவர்கள் வீட்டுக்கு தான் வர வேண்டும், அடுத்து பெண் வீடு செல்வார்கள். ஆனால் உதய் தான், திருமணம் முடிந்து உன் வீட்லே இருந்துக்கோ என்று சொல்லியிருக்க, அவனுக்கே மண்டையிடி

“அதுக்காக சம்பிரதாயத்துக்காக  கூட வரமாட்டாளா என்ன..? வராம கிளம்பிட்டா..? எதுக்கு அவகிட்டேயே பேசிடுவோம்..”  என்று கடந்த சில நாட்களாக முயற்சிக்க, ம்ஹூம்.. பேச முடியவில்லை. ஷா பேச விடவில்லை

இடையில் ஜின்னா திருமணம் வேற இருக்க, ஷாவை பிடிக்க முடியவில்லை. சரி திருமணத்தில் பேசலாம் என்றால் மேடம் பயங்கர பிசி. அப்படி காட்டி கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவள் சொன்னதை செய்ய பல பேர் இருக்க, இவள் உதய் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டி கொண்டிருக்க, பொறுமை இழந்த உதய் கிளம்பிவிட்டான்

அவனுடன் சென்ற கண்ணம்மா, கணபதி மட்டும் மாலை வரை அங்கு இருந்தே வந்தனர். சரி என்று அதற்கு பிறகாவது பேசலாம் என்றால், ஆபிஸ் வேலை, கல்யாண ஷாப்பிங்.. என்றுவிட்டாள். இருக்க இருக்க உதய்க்கு பொறுமை காணாமல் போனது

“அட்லீஸ்ட் திருமண சடங்கு எல்லாம் முடியற வரைக்குமாவது என்கூட இருந்தா போதும், அப்பறம் என்னென்னு அப்பறம் பார்த்துக்கலாம்..” நினைத்தவன் திரும்ப  போன் எடுத்து அவளுக்கு அழைக்க, அவளின் போன் ஸ்விட்ச் ஆப்

என்னடா இது..? அப்படி எல்லாம் போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்காதே..?” உடனே ஜின்னாவிற்கு அழைக்க போக, ஞாபகம் வந்தது அவன் புது மாப்பிள்ளை என்று. சில நாட்கள் முன்பு தான் திருமணம் முடிந்திருக்க, இப்போது ஹனிமூனில் புதுமண தம்பதி

சரி என்று வீட்டின் லேண்ட் லைனுக்கு அழைத்துவிட்டான். ஜோதி தான் எடுத்தவர், உதய் என்று தெரிய, “நல்லா இருக்கீங்களா தம்பி..?”  நலம் விசாரித்தார்

நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி, ஷா எங்க..?” கேட்க

ராம் அண்ணாவோட இருக்காங்க தம்பி, இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம் முடிஞ்சு போயிடும் இல்லைஅதான்..”  என, புரிந்தது

சரி ஆன்ட்டி.. வந்தா எனக்கு கால் பண்ண சொல்லுங்க..” வைத்துவிட, ஷா கூப்பிடவே இல்லை அவனை. இரவு வரை பொறுத்து பார்த்தவன் திரும்ப வீட்டின் எண்ணிற்கு அழைக்க, எடுத்த ஜோதியை ஷாவிடம் கொடுக்க சொன்னான். அவர் ராம் ரூமிற்கு கனெக்ட் செய்துவிட, எடுத்தது ஷா

உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் உதய்

ப்பா.. டூ மினிட்ஸ்..” ராமிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவள்,
ம்ம்.. சொல்லுங்க..” என்றாள்

கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டிருக்கு..” பார்முலாக  பேச ஆரம்பிக்க

நீங்க பேச வந்ததை பேசுங்க.. இல்லை நான் அப்பாகிட்ட போறேன்..” என்றாள் அவள்

ரொம்ப கிராக்கி பண்ணாதடி.. நானும் ஒரு வாரமா உன்கிட்ட பேச ட்ரை பண்ணிட்டே இருக்கேன், அப்படியே கட் பண்ணிட்டே இருக்க..” உதய் பொறுமை இழந்து பேசிவிட்டான்.

ஷா அமைதியாக இருக்க, உதய்யிடம் சீறல் மூச்சு. “உனக்கு நல்லா தெரியும் நான் உன்கிட்ட என்ன பேச போறேன்னு, அப்பறம் என்ன..?” மேலும் கேட்க

தெரிஞ்சா பேசணுமா..? ஏன் பேசணும்..? நீங்க தானே சொன்னீங்க கல்யாணம் முடிச்சி என் வீட்டுல நான் இருந்துக்கலாம்ன்னு.. இப்போ என்ன..?”

ம்ப்ச்.. அது அப்போ உன்னை சம்மதம் சொல்ல வைக்க சொன்னது, அதுக்காக அதையே பிடிச்சுக்குவியா..?”

ஆமா.. நான் அப்படி தான், நீங்க சொன்னது சொன்னது தான், நான் என் வீட்ல தான் இருப்பேன்..”

எதுடி உன் வீடு, அது மிஸ்டர் RK சார் வீடு, நான் இருக்கிறது தான் உன் வீடு.. இங்க தான் நீ இருக்கணும்..”

செய்றதையும் செஞ்சுட்டு இவ்வளவு அதிகாரமா பேசுவீங்களா..? வர முடியாது போங்க..”

ஸ்ஸ்.. நீ என்கிட்ட முதல்லே பேசியிருந்தா நானும் பொறுமையா பேசியிருப்பேன், ஆனா நீ தான் என்னை சுத்தல்ல விட்ட இல்லை..”

ஓஹ்.. அப்படியே இருக்கட்டும், விடுங்க.. பை..”

ஏய்.. வைக்காத.. ம்ப்ச்.. நிஜமாவே ரொம்ப பண்றடி.. என்னால நிம்மதியாவே இருக்க முடியல, அம்மா.. அவங்க ரொம்ப சென்சிடிவ், இதெல்லாம் தெரிஞ்சா அவ்வளவு தான். கல்யாணம் எனக்கு கச்சேரியா மாறிடும்..”  புலம்பலாக சொல்லஷா சிரித்தேவிட்டாள்

அத்தைக்கு மகனா  இருந்துகிட்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா..?”

என்னடி நக்கலா..?”

பின்ன இல்லையா..? கொஞ்ச நாள் பழகின எனக்கே அத்தை எப்படின்னு தெரியுது, நீங்க எப்படி அவங்களை சமாளிப்பீங்க..?”

ச்சு.. அம்மாவை சமாளிக்க முடியாம எல்லாம் இல்லை, ஆனா அவங்களுக்கு வீண் டென்க்ஷன் கொடுக்க இஷ்டம் இல்லை, தி பெஸ்ட் அம்மாவா அவங்க இருக்கும் போது, ஒரு சுமாரான மகனாவது நான் இருக்கணும் இல்லை..”  ஷாவிற்கு டக்கென அவளின் அம்மா நினைவு

கண்டிப்பா இருக்கணும்..”  என்றாள் அடைத்த தொண்டையுடன்

அதுக்காக தான்  கேட்கிறேன், கல்யாணம் முடிச்சுட்டு இங்க நம்ம வீட்டுக்கு வா, அப்பறம் என்னன்னு பேசலாம், ப்ளீஸ்..” என, ஷாவால் அந்த நொடி மறுக்க முடியவில்லை

சரி..” என்றுவிட்டவள், சில நிமிடங்கள் சென்றே ராமிடம் சென்றாள்

“என்னடா உதய் என்ன சொல்றார்..?” ராம் கேட்க

கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது கேட்டார்ப்பா..” என்றாள் மகள்

நமக்கு தான் எந்த வேலையும் இல்லையே..? நம்ம சொந்தம் சிலர் நாளைக்கு வருவாங்க, சிலர் மட்டும்  நைட் வருவாங்க, அவங்களை பிக் அப் பண்ண  ஜித்தன்கிட்ட சொல்லிடு, அப்பறம் ஜின்னாவும் நைட் வந்துடுவான் நினைக்கிறேன்.. ஜின்னா வைப்க்கு நம்ம வீட்ல கூப்பிட்டு விருந்தது வைக்கணும், அது உங்க கல்யாணம் முடிச்சு வச்சுக்கலாம்..”  மகளின் கல்யாண சந்தோஷத்தில் பேசி கொண்டே போக ஷா அவரின் கை பிடித்து அமர்ந்திருந்தாள்

ப்பா..” ஜித்தன் குரல் வெளியே கேட்க,     “உள்ள வாடா..”  என்றார் ராம்

ஜித்தன் உள்ளே வந்தவன், “ப்பா.. அது.. அந்த பிரசாத், கலாதரன் சேர்ந்து பவ்யா கல்யாணத்துல ஏதோ பண்ண பிளான் பண்றாங்கன்னு முகுந்த் சார் தகவல் அனுப்பி இருக்கார்..” என, ராம் முகத்தில் அவ்வளவு கோவம்

ஏதோ என் நண்பனுக்காகன்னு பார்த்தா என் பொண்ணு கல்யாணத்துல பிரச்சனை பண்ண பார்ப்பானுங்களா..?” கொதித்து போனவர், போன் எடுத்தார். அதன்படி அடுத்த சில நிமிடங்களில், காரில் சென்று கொண்டிருந்த பிரசாத், கலாதரனை இருவரும்  காரோடு தூக்கபட்டனர்

ப்பா.. கொஞ்சம் பொறுமையா..” ஷா பேச

நோ ஷா.. இதில யாரும் தலையிட வேண்டாம்..”  முடித்துவிட்டார். அதற்கு மேல் பேசி அவரைய டென்ஷன் செய்ய வேண்டாம் என்ற நினைத்த ஷா

பெரியப்பா வீட்ல எல்லாம் தூங்கிட்டாங்கப்பா, நாளைக்கு என்ன செய்யணும்ன்னு பெரியம்மா சொல்லியிருக்காங்க..” பேச்சை மாற்றிவிட ராம் கொஞ்சம் அமைதியானார்

அண்ணி சொன்னதை எல்லாம் ஜோதி பார்த்துக்கட்டும், ஜித்தா நீ கொஞ்சம் பாத்துக்கோ..” அவனிடம் சொல்ல

சரிப்பா.. நீங்க ரெஸ்ட் எடுங்க..”  அவன் கிளம்பிவிட, அப்பா மகள் மட்டும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தனர்

அப்பறம் ஷா..” ராம் பேசி கொண்டே போக, நேரம் பார்த்தவள்

போதும்ப்பா.. நீங்க தூங்குங்க, காலையில பேசிக்கலாம்..” என, அவராலும் டேப்லெட்டின் விளைவால் முழிக்க முடியவில்லை. சரி.. என்றவர் சில நொடிகளிலே தூங்கிவிட, ஷா அவரின் கைய பிடித்து அமர்ந்திருந்தாள்.

இன்றோடு ராம் மகளாக அவளின் வீட்டில்  கடைசி இரவு. நாளை மண்டபம், அடுத்த நாள் உதய் மனைவி. “இனி அப்பா எப்படி தனியா..?” முடியவே இல்லை. உதய் அன்று கோவத்தில் சொன்னதை ஷா விடாமல் பிடித்து கொண்டதுக்கு காரணம் ராம். அவரின் உடல் நிலை, தனிமை. என்ன தான் ஜின்னா, ஜித்தன் இருப்பார்கள் என்றாலும்.. கண்ணீர் வழிய துடைத்து அமர்ந்திருந்தாள்.

அதே நேரம் அங்கு உதய் வீட்டில் அனிதா வந்துவிட, இன்னும் கல்யாண களை கட்டியது. வந்த நேரமே தங்கையாக அண்ணன் திருமண பொறுப்பை தன் கையில் எடுத்து கொண்டாள். கண்ணம்மா மகள் மேல் கோவமாக இருந்த போதும் அவளை முன் நிறுத்தியே எல்லாம் செய்தார்