இப்படி இருக்க, முகூர்த்த புடவையே பல லட்சங்கள் என ராம், ஷா போல உதய்க்கும் உள்ளுக்குள் குடைச்சல் தான். பெற்றவர்கள் எப்படி சமாளிப்பார்கள், எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள், காணுமா.. இல்லை பத்தாமல் போய்விடுமா என்று.
கண்ணம்மாவோ, “இந்த கலர்.. இந்த டிசைன்க்கு நல்லா இருக்கும்..” என்று கருத்து சொல்லி கொண்டிருந்தார். அவர் சொன்ன புடவையோ கால் கோடியை நெருங்கும் போல.
“ஒரு புடவைக்கு இவ்வளவு எல்லாம் ரொம்ப அதிகம்..” உதய்யால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. “ம்மா..” என்று கண்ணம்மா கையை சுரண்டினான்.
“என்னடா..” மகனிடம் திரும்ப,
“இது வேண்டாம்..” என்றான்.
“நீ சும்மா இருடா..” மகனை அடக்கி விட்டவர், “நீ சொல்லு ஷா இது உனக்கு ஓகே தானே..” மருமகளிடம் கேட்டார்.
“ம்மா.. இது ரொம்ப அதிகம், ஒரு புடவை வாங்குற பணத்துல நான் ஒரு துணி கடையே ஆரம்பிச்சுடுவேன்..” என்றான் பிஸ்னஸ் மேனாக பதறி போய்.
“உன்னை யார் இப்போ கேட்டா..? நீ சொல்லும்மா..” ஷாவிடம் கேட்க,
“அத்தை.. நான் இவ்வளவு வெய்ட்டா கட்டுறதில்லை, இது வேண்டாம்..” ஷா மறுத்துவிட்டாள்.
“அத்தை.. நான் பார்க்கிறேன் இருங்க..” என்ற ஷா டிசைனரிடம், “உங்ககிட்ட இருக்கிற பட்டு சேரில வெய்ட் கம்மியா, டிசைன் எல்லாம் ரொம்ப இல்லாம கொடுங்க..”
“மேம்.. அது..”
“உங்களுக்கு தான் தெரியும் இல்லை நான் இந்த தங்க சரிகை, வைர கல் எல்லாம் ரொம்ப யூஸ் பண்ண மாட்டேன்னு..” சொல்லிவிட அவரால் மறுக்க முடியவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் ராம், கண்ணம்மாவுடன் சேர்ந்து, ஆராய்ந்து மூன்று புடவைகள் எடுத்தவள், “இதுல எது ஓகேப்பா..” என்று அவளின் வழக்கமான ராமிடம் கேட்க,
“அங்க கேளும்மா..” என்றார் தந்தை. ஷா திரும்பி உதய்யை ஒரு பார்வை பார்க்க, அவனோ மொபைலில் மூழ்கி இருந்தான்.
“இப்போ நீ அதை வைக்கல சிதறு தேங்காய் தான் உன் மொபைல்..” கண்ணம்மா மகனிடம் குனிந்து மிரட்ட, உதய் எதுக்கு வம்பு என்று மொபைலை பாக்கெட்டில் பத்திர படுத்தி கொண்டான்.
“அத்தை எது எடுக்கலாம்..” ஷா கண்ணம்மாவிடம் கேட்க,
“உதய்கிட்ட கேளுமா.. உதய்.. பார்த்து சொல்லு.. உங்க கல்யாணம் தானே..” என்றவர், “என் பொண்ணுக்கு இது போல காட்டும்மா..” அனிதாவிற்கு கேட்டார்.
ஷாரா உதய்யை பார்க்க, அவன் எழுந்து அவளின் அருகில் வந்து நின்றவன், “உனக்கு இதுல எது ரொம்ப பிடிச்சிருக்கு..?” ஷாவிடமே கேட்டான்.
“இது ரெண்டும்..” காட்ட, அதில் அவனுக்கு பிடித்த புடவையை காட்டியவன், “இது ஓகேவா..?” கேட்டான்.
“ம்ம்.. நல்லா இருக்கு..” அதையே ஆர்டர் கொடுத்தாள். விலையும் மிகவும் சரியாக தான் பார்த்து எடுத்திருந்தாள். அந்த விதத்தில் உதய்க்கு அவ்வளவு திருப்தி.
மீதி இருந்த இன்னொரு புடவையையும் ஆர்டர் கொடுத்தவன், “ம்மா.. இது உங்க மருமகளுக்கு நான் எடுத்து கொடுக்கிறது..” என்றவன், அப்படியே கண்ணம்மா, அனிதாவிற்கும் அவன் தான் எடுத்து கொடுப்பேன் என்று சண்டை போட்டு ஆர்டர் கொடுத்தான்.
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” கண்ணம்மா கடுப்பாக நினைத்தவர், அங்கிருந்த புடவைகளை பார்க்க சென்றார். அவரின் முகத்திலே அவரின் மனநிலையை புரிந்து கொண்ட ஷா, தானும் அவருடன் சென்றாள்.
“அத்தை.. இந்த புடவை உங்களுக்கு நல்லா இருக்கும்..” மென் பட்டை காட்டி கேட்க, கண்ணம்மா திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவர்,
“பவ்யா.. உனக்கு உண்மையிலே இந்த கல்யாணத்துல விருப்பம் தானே..?” எந்த பாசாங்கும் இல்லாமல் நேரடியாக கேட்டுவிட்டார்.
அவரிடம் இதை கொஞ்சம் எதிர்பார்த்திருந்த ஷா அதிராமல், “அத்தை.. ஜின்னா அண்ணா கல்யாணம் நெருங்கி வந்துடுச்சு, அவர் கல்யாணம் நம்ம பொறுப்பு, அதோட ஆபிஸ் வேலையும், ஆனாலும் நான் செஞ்சது தப்பு தான், இதுக்கு எல்லாம் நேரம் கண்டிப்பா ஒதுக்கியிருக்கணும்.. இனி இப்படி நடக்காம பார்த்துகிறேன்..” ஷாவும் எந்த பசப்பு இன்றி ஒத்துக்கொண்டாள்.
“பவ்யா.. நான் அதை கேட்கல, ஆனா அதுவும் ஒரு காரணம் தான், சொல்லு உண்மையிலே உனக்கு விருப்பம் தானே, அன்னிக்கு பூ வச்சப்போவும் உன் முகத்துல அந்த உண்மையான சந்தோஷத்தை பார்க்கல..” விடாமல் கேட்டார் மாமியார்.
அன்று என்ன நடந்தது என்று சொல்ல முடியவில்லை. அது அவளுக்கும், உதய்க்குமானது. அவளின் முகத்தில் கண்ணம்மாவிற்கு என்ன புரிந்ததோ,
“பவ்யா.. எல்லா அம்மாக்களை போல தான் நானும், பிள்ளைங்க சந்தோசம் தான் வாழ்க்கையே. அவங்க முகம் வச்சே மனசை படிக்கிற கலை கொஞ்சம் அம்மாவிற்கு வரும், அவங்க எவ்வளவு தான் மறைச்சாலும் எங்களுக்கு தெரிஞ்சுடும்..”
“என் மகன் முதல்ல உன்னை காமிச்சப்போ உண்மையை சொல்லணும்ன்னு எனக்கு அதிர்ச்சி விட பயம் தான் அதிகம். எல்லா விதத்திலும் எங்களை விட நீங்க மேல. அதுக்காக என் மகன் குறைச்சல் இல்லை, அவன் ஒரு சுயம்பு. இன்னும் கொஞ்ச வருஷம் போனா சாத்தியம் இல்லாத உயரம் அவன் எட்டிடுவான். அவ்வளவு திறமை, உழைப்பு என் மகன்கிட்ட இருக்கு..”
“குணத்திலும் அவன் எப்படின்னு அம்மாக்கு தெரியும், கண்டிப்பா என்னை பார்த்து ‘என்ன பிள்ளை வளர்ந்து வச்சிருக்கீங்கன்னு..’ நீ கேட்கிற சூழ்நிலை என்னிக்கும் வராது, இது தற்பெருமை இல்லை. என் வளர்ப்பு மேல, என் மகன் மேல நான் வச்சிருக்கிற நம்பிக்கை..” கண்ணம்மா சொல்லி கொண்டிருக்க, கேட்டு கொண்டே வந்த உதய் அப்படியே நின்றுவிட்டான்.
அம்மாவின் இந்த நம்பிக்கையை எப்படி காப்பாத்த போறேன் என்ற மலைப்பு அந்த நொடி மலை போல உதய் நெஞ்சில் அமர்ந்தது.
“ராம் அண்ணா பார்த்தாலே தெரியுது அவரும் உன்னை இப்படி தான் பெருமையா நினச்சிட்டிருக்கார்ன்னு..” கண்ணம்மா சொல்ல, ஷாவிற்கும் அது தெரிந்தது தானே.
“உங்க கல்யாணம் நீங்க ரெண்டு பேரும் முடிவெடுத்தது தான். யாரோட கட்டாயமும் இதில் இல்லை. உங்களை யாராலும் கட்டாய படுத்தவும் முடியாது, வளர்ந்த தெளிவுள்ள பிள்ளைங்க நீங்க, அப்பறம் என்ன..? ஏன் இப்படி..? உங்களை பார்த்தா விரும்பி கல்யாணம் செஞ்சுகிற மாதிரியா இருக்கு..”
“இதோ இவன் எப்போ பார்த்தாலும் ஏதோ குழப்பத்துல இருக்கிற மாதிரியே இருக்கான், அந்த கல்யாணங்கிற சந்தோஷமே இவன்கிட்ட இல்லை, ஏதோ இப்போதான் அவன் முகத்துல அந்த மலர்ச்சி கொஞ்சம் தெரியுது..” ஷாவை பார்த்தவர், “உன்கிட்டேயும் தான்..” என்றார்.
“உங்களுக்குள்ள ஏதோ போகுதுன்னு தெரியுது, அதை நீங்க சொல்ல போறதும் இல்லை, நான் கேட்க போறதும் இல்லை, அது உங்க விஷயம்..”
“ஒன்ஸ் நம்ம வாழ்க்கையில நடக்குற வைபோகத்தையே நம்மால கொண்டாட முடியாத அளவு உங்க இஷ்ஷியூ இருக்குன்னா அது எங்களுக்கு கண்டிப்பா வருத்தம், பயம் தான்..”
“எனக்கே இப்படின்னா ராம்ண்ணா.. அம்மாவா, அப்பாவா உனக்கு இருக்கிற ஒரு ஜீவன். அவருக்கும் நடக்கிறது ஓரளவு புரிஞ்சிருக்கும்..”
“அப்பா, அம்மாக்கு பிள்ளைங்களா மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன செய்வோம், அவங்களை சந்தோஷமா வச்சுக்கிறதை தவிர, அதை தான் நாங்களும் கேட்கிறோம், கொடுங்க, எங்களுக்கு அந்த சந்தோஷத்தை, நிம்மதியை கொடுங்க.. உங்க கல்யாணத்தை அனுபவிக்க விடுங்க..” கண்ணம்மா பட்டு பட்டென்று உடைத்து பேசிவிட, உதய், ஷா இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. அப்படியே நேராக பார்த்து நின்றனர்.
ராம், கணபதி இருவரும் என்னவோ ஏதொன்று வந்தவர்கள் கண்ணம்மா பேச்சு கேட்டு அப்படியே நின்றனர். ராம் முகத்தில் அவ்வளவு நெகிழ்ச்சி. இதை தான் மகளிடம் பேச முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
முன்னைவிட ஷாக்ஷியை மிகவும் தேடினார். என்ன இருந்தாலும் அம்மா.. அம்மாதான்.. அவர் பேச முடியாததை இன்று கண்ணம்மா சிறிதும் தயங்காமல் தேங்காய் உடைத்தது போல பேசிவிட, மகளையும், மருமகனையும் பார்த்தார். கண்டிப்பா யோசிப்பார்கள் என்று புரிந்தது.
“மேம்.. உங்க பொண்ணுக்கு இந்த கலர் ஓகே வா பாருங்க..” டிஸைனர் வர, கண்ணம்மா அங்கிருந்து நகர, மற்றவர்களும் சென்றுவிட, உதய்.. ஷா மட்டுமே.
இருவரும் அவர்களை பற்றி மட்டுமே யோசித்திருக்க, பெற்றவர்களின் ஆதங்கம் புரிய நிச்சயம் வருந்தினர்.
“இனியாவது சரியா நடந்துக்கணும்..” நினைத்த உதய்க்கு திடீரென ஞாபகம் வந்தது அது.
“அச்சோ.. போச்சு.. மாட்டினேன்.. தெரிஞ்சா நான் காலி..” வேகமாக திரும்பி ஷாவை பார்க்க, அவனின் பார்வை உணர்ந்து பார்த்தவளுக்கு முதலில் என்ன என்று புரியவில்லை.
சில கணங்கள் சென்றே புரிய, முகத்தை அநியாயத்திற்கு கெத்தாக தூக்கி வைத்தாள். “அன்னிக்கு என்ன பேச்சு..? வார்த்தை மாற மாட்டிங்களோ..?” உதட்டோரத்தில் சிரிப்பு மின்னியது.
“நேரம் பார்த்து பழி வாங்க பிளான் பண்றாளோ..?” உதய் அவளை முறைக்க முடியமால் நின்றான்.
பின்னே இதற்கே கண்ணம்மா இந்த பேச்சு பேசியிருக்க, இவன் ஷாவிடம் சொன்னது தெரிந்தால்..???
“கல்யாணம் முடிஞ்சும் நீ உன் வீட்லே இருந்துக்கலாம்..” அவனின் வார்த்தைகள் பூமரங்காய் திருப்பி தாக்கியது.
இவள் வரவில்லை என்றால் அவனும் கண்டிப்பா வீட்டினுள் நுழைய முடியாது, திருமணம் செய்யாமல் சுத்தும் போதே, வீட்டை விட்டு வெளியே போடா என்றவர் கண்ணம்மா, இப்போது சொல்லவே வேண்டாம், துரத்தி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்.
“இப்போ என்ன செய்ய..? இவகிட்ட தான் பேசணுமா..? மேடம் பார்க்கிறதா பார்த்தா சுத்தல்ல விடுவா போலயே..? ஒரு அளவுக்கு மேல இறங்கி கெஞ்சவும் நம்ம தன்மானம் இடம் கொடுக்காதே, எப்படி இவளை மடக்க..?” யோசிக்க, ஷாரா கெத்தாக பார்த்தப்படி கடந்தாள்.