யுகம் சுகம் தானே 10 2 17679 “க்கும்..” இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. மனதில் நொடித்து கொண்டவன் அதில் அமர, ஷா போன் செய்து மூவருக்கும் ஸ்னேக்ஸ் எடுத்து வர செய்து கொடுத்தாள். சில நிமிடங்கள் அதில் செல்ல, ஷா முழுதும் மொபைலில் இருந்தவள் முகம் சுருங்கி தான் போனது. நிமிர்ந்து உதய், ராம் இருவரையும் பார்த்தவள், அப்பாவிடம், “ப்பா.. உங்களுக்கும் என் மேல நம்பிக்கை இல்லையா..?” கேட்டு விட்டாள். தன்னை இவர்கள் நம்பவில்லையோ என்ற சந்தேகம், ஆதங்கமே இந்த கேள்வி. உதய் அவளை அமைதியாக பார்க்க, “என்னடா இப்படி கேட்டுட்ட..? உன் மேல நம்பிக்கை இல்லாம தான் அப்பா உன்கிட்ட முழு பொறுப்பையும் கொடுத்திருக்கேனா..?” ராம் கேட்டார். “அப்பறம் ஏன்ப்பா போர்ட் மீட்டிங் வந்திருக்கீங்க..?” “உதய்யை எல்லோருக்கும் அறிமுக படுத்ததான் ஷா, வேறெந்த காரணமும் இல்லை..” “நீங்க தான் அப்படி நினைச்சிட்டு இருக்கீங்க, ஆனா இவர் குணா அங்கிள் மூலமா அஞ்சு பர்சன்ட் ஷேர் வாங்கி ஷேர் ஹோல்டேரா தான் போர்ட் மீட்டிங் வந்திருக்காரு..” மொபைல் எடுத்து காட்ட, ராம் உதய் பார்த்தார். அப்போது தான் அவருக்குமே குணா சார்பாக யாரும் மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்று புரிந்தது. “உதய்..” ராம் கூப்பிட, “சார்.. என்னால இவங்களை அப்படி தனியா விட முடியல, அதான் இவங்க என்னை வேண்டாம்ன்னு துரத்தினத்துக்கு அப்புறமும் வெட்கம் கேட்டு போய் உங்க ஷேர் வாங்கி வந்திருக்கேன்..” என்றுவிட, ஷாராவின் உதடுகள் விரிந்தது. “சிரிச்சா அவ்வளவு தான்..” பல்லை கடித்து மிரட்ட, ஷாவிற்கு அதுவரை இருந்த வருத்தம், ஆதங்கம் எல்லாம் உதய் பேச்சில் வடிந்துவிட, அவளின் முகத்தில் சிரிப்பு. ராமிற்கும் மகளின் சிரிப்பில் நிம்மதியாக, “சரி.. வாங்க மீட்டிங் ஹால் போவோம்.. எல்லாம் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க..” என, மூவரும் திரும்ப மீட்டிங் கிளம்பினர். ஜித்தன் இப்போது ஷா சேர் பக்கத்திலே இன்னொரு சேர் போட்டிருக்க, உதய் அதிலே அமர போனான். “இல்லை நீங்க இதுல உட்காருங்க..” ஷா அவளின் சேரை காட்ட, “நீ உட்காருப்பா.. இப்போதான் இன்னொரு சேர் இருக்கு இல்லை..” என்றுவிட, ஷா அமர்ந்து கொண்டாள். முதலில் ராம் எழுந்தவர், முகமன் கூறிவிட்டு, “இப்போ நான் ஏன் வந்திருக்கேன்னா உங்களுக்கு எல்லாம் ஒரு முக்கியமான ஆளை அறிமுகம் செய்ய தான். ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ஷா மேரேஜ் பத்தி. அவளுடைய வருங்கால கணவர், என்னோட மாப்பிள்ளை.. மீட் மிஸ்டர் உதய்.. உதய் கிருஷ்ணா..” என்று உதய்யை கை காட்ட, உதய் எழுந்து நின்று எல்லோருக்கு வணக்கம் வைக்க, கை தட்டல் ஹாலை நிறைத்தது. பிரசாத், கலாதரன் இருவரும் வேண்டா வெறுப்பாக கை தட்ட, உதய் அவர்களை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. “மகனே இவனை எதாவது செஞ்சே ஆகணும்டா..” கலாதரன் கிசுகிசுக்க, “இப்போ ஒன்னும் செய்ய முடியாது, ராம் அங்கிள் இருக்கார், இன்னொரு சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்..” என்றுவிட, கலாதரன் உதய்யை ஆத்திரத்துடன் பார்த்து முகம் திருப்பி கொண்டார். “அதோட உதய் நம்ம RK குரூப் ஷேர் ஹோல்டர் கூட..” என்று ராம் சொல்ல, எல்லோரின் முகத்தில் ஆச்சரியம், அதிர்ச்சி, ஏன் சிறிது நக்கலும் இல்லாமல் இல்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட உதய்க்கு கோவம் வந்தாலும், இவர்களின் எண்ணத்தை மாத்த முடியாது என்று புரிந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான். “அவரோட UK கன்சல்டன்சி லாஸ்ட் மந்த் தான் ஒரு பெரிய ப்ராஜெக்ட் முடிச்சு கொடுத்திருக்காங்க, அதுல இருந்த வந்த பணத்தை தான் நம்ம குரூப்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கார், அவரோட அந்த நம்பிக்கையை நாம தான் காப்பாத்தணும், அவரோட இன்வஸ்ட்மெண்டை மேலும் உயர்த்தனும்..” ராம் சொல்ல, சிலர் அதை ஏத்து கொண்டாலும் பலர் நம்ப வில்லை என்று அவர்கள் பார்த்த பார்வையிலே புரிந்தது. ஷாவிற்கு இதை பார்க்க கோவம் தான். திரும்பி உதய்யை பார்க்க, இதை எதிர்பார்த்தது என்ற பாவனை தான் அவனிடம். “ஓகே.. நீங்க மீட்டிங் கன்டினியூ பண்ணுங்க..” ராம் சொல்லி அமர்ந்துவிட, முதலில் எழுந்தது பிரசாத் தான். முதல் சில நொடிகள் பார்முலாக பேசியவன், “ஷா சொன்ன வருங்கால திட்டங்கள் எனக்கு ஓகே தான், ஆனால் இதுக்கான வரைமுறைகள், ரூல்ஸ், அப்ரூவ் எல்லாம் எந்தளவு சாத்தியபடும்ன்னு தெரியல, சோ.. ஷா எது செய்றதா இருந்தாலும் போர்ட் மெம்பர்ஸ்கிட்ட சொல்லி செய்றது தான் சரியா இருக்கும்..” என்று அவளின் திறமையை கேள்விக்குறியாக்கி பேச, மற்றவர்கள் அதை ஆமோதிப்பது போல பார்த்தனர். உதய், ராம் இருவருக்கும் பிரசாத்தின் எண்ணம் புரிந்தது. இங்கு அவன் ஷாராவின் திறமை மட்டும் கேள்வி குறியாக்கவில்லை. அவளின் முழு செயல்பாட்டையும் அவனின் கண்ட்ரோலுக்கு கொண்டு வர நினைக்கிறான் என்பது. இருவரும் திரும்பி ஷாராவை பார்க்க, அவளின் முகத்திலே தெரிந்தது அவளுக்கும் இது புரிந்தது என்று. எழுந்து நின்றவள், “பிரசாத் சொல்ற மாதிரி என்னால செய்ய முடியாது, ஏன்னா என் அப்கமிங் ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் என் கண்ட்ரோல் மட்டும் தான் வரும், யாரோட அப்ரூவும் எனக்கு தேவையில்லை..” என, “அப்படி முடியாதே ஷா, உன் ப்ராஜெக்ட் எல்லாம் RK குரூப் பேனர்க்குள்ள வரும் போது நாங்க கேட்க தான் செய்வோம்..” பிரசாத் சொல்ல, நக்கலாக சிரித்த ஷாரா, “RK குரூப்ல என் அம்மா கம்பெனி ஷாக்க்ஷி இண்டஸ்ட்ரீஸ் இருக்குன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும், ஆனா எத்தனை பேருக்கு இது தெரியும் அந்த கம்பெனி புல் அண்ட் புல் என் கண்ட்ரோல்ல இருக்குன்னு, அந்த கம்பெனி RK குரூப் பேனர்ல வரணும்ன்னு RK சார் ஆசைப்பட்டதால மட்டும் தான் உள்ள இருக்கு, மத்தபடி அந்த கம்பெனியோட எல்லாம் ரைட்ஸும் எனக்கு மட்டும் தான் சொந்தம், அங்க யார் இன்வெஸ்ட் பண்ணனும், பண்ண கூடாதுன்னு நான் தான் முடிவெடுப்பேன், சோ..” என்று தோளை குலுக்க, பிரசாத் இதை எதிர்பார்க்கவில்லை. “ஷா உன் ப்ராஜெக்ட்ல என்னோட ஷேர் இருக்கனும்ன்னு நான் ஆசைப்படுறேன்..” ராம் கேட்க, உதய் அவளை பார்த்தான். “நீங்க இன்வெஸ்ட் பண்ணறீங்களா என்னை நம்பி..” அவனின் பார்வையை உணர்ந்து ஷா தானாகவே அவனிடம் கேட்க, அவனுக்கு வேறென்ன வேண்டும். “கண்டிப்பா..” உடனே ஒத்துக்கொள்ள, மற்றவர்கள், “நாங்களும் இன்வெஸ்ட் பண்றோம்..” என்றனர். “எப்போவும் போல ஷேர் ஹோல்டருக்கு, இன்வெஸ்ட்டாருக்கு முழு டீடைல் கொடுத்துதான் ப்ராஜெக்ட் வேலை நடக்கும், உங்க பணத்துக்கு நான் பொறுப்பு, ஆனா எனக்கு எந்த குடைச்சலும் கொடுக்காம இருக்கிறதுன்னா இன்வெஸ்ட் பண்ணுங்க, இல்லை யாரும் வேண்டாம்.. முடிவு உங்க கையில..” ஷா ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல, “இல்லை.. இல்லை நாங்க அப்படி பண்ண மாட்டோம்..” உடனே ஒப்புதல் கொடுத்து பிரசாத் மூக்கை உடைத்தனர். “இது முடிஞ்சது, அடுத்து..” என, பிரசாத்திற்கு வாங்கிய அடியில் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவனை ஒதுக்க ஷாரா முடிவெடுத்துவிட்டாள் என்பது புரிந்து போக, இப்போது எதுவும் பேச கூடாது என்று கணக்கு போட்டவன், அமைதியாக இருந்துவிட, போர்ட் மீட்டிங்க முடிவுக்கு வந்தது. “சார்.. நான் கிளம்புறேன்..” உதய் விடைபெற, “லன்ச் சாப்பிட்டு போலாம்..” ஷா அவனை அழைத்தாள். நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் இருவரும் கொஞ்சம் சாதாரண மனநிலையில் இருக்க, அவனுடனான இருப்பை விரும்பினாள். “இல்லை.. கிளையண்ட் கூட லன்ச் மீட்டிங்க இருக்கு, அதுக்கு போகணும்..” என்றுவிட, ஷா முகம் கொஞ்சம் வாடித்தான் போனது. மீட்டிங் செல்லும் அவசரத்தில் இருந்த உதய் ஷாவின் வாட்டத்தை கவனிக்கவில்லை. “ஓகே உதய்.. நீங்க பாருங்க..” ராம் விடை கொடுக்க, “வரேன்ப்பா..” உதய் ஷாவிடம் சொல்ல, அவளோ வாங்க என்று அவனுடனே நடந்தாள். என்னடா இது அதிசயம்.. உதய் அவளுடன் லிப்டிற்குள் சென்றான். பார்க்கிங் பட்டன் அழுத்தியவள் உதய்யை பார்க்க, அவன் மொபைல் எடுத்து மீட்டிங் நடக்கும் இடம் பார்த்தான். அங்கு போகும் வழியை மனதில் ஒட்டி பார்த்து கொண்டிருந்தவன், லிப்ட் நிற்கவும் வெளியே வந்த பின் தான் ஞாபகம் வந்தது போல ஷாவை பார்க்க, அவள் முகத்தில் கோவம் வெளிப்படையாக தெரிந்தது. “ஏய்.. சாரி..” திரும்ப லிப்ட் அருகில் செல்ல, “நீங்க உங்க வேலையை பாருங்க..” கோவமாக லிப்ட் பட்டனை அழுத்திவிட, லிப்ட் மேலேற ஆரம்பித்தது. “ச்சு.. என்னடா உதய் இப்படி பண்ணிட்ட.. உனக்காக தானே வந்தா, திரும்ப மேல போலாமா..?” நினைக்க, அவனின் PA அழைத்துவிட்டான். மீட்டிங் நேரம் ஆச்சு என்று. வேறு வழி இல்லாமல் உதய் கிளம்பிவிட, அந்நாள் அவர்களின் தூரத்தை சற்று குறைத்திருந்தது உண்மை. அதே மனநிலையில் இன்று உதய் ஷாவிற்கு அழைத்து முகூர்த்த பட்டு எடுக்க கடைக்கு கூப்பிட, அவள் உர்ரென்று தான் பேசினாள். கோவம் போகல போல மேடம்க்கு.. கண்ணாடி பார்த்து தலை கோதி கொண்டவாறே, “கடைக்கு வரலையா மேடம்..?” கேட்டான். “இல்லை..” ஒற்றை வார்த்தையில் பதில் வர, “ஏன்..? கிளம்பி வா..” என்றான். அவளோ, “நான் ஏன் வரணும்..?” என்று கேட்டாள். “ஏன்னா..? ஏய் இது நம்ம கல்யாணம்..” “ஆமா.. ஆனா நீங்கதானே சொன்னீங்க, தாலி மட்டும் வாங்கிக்கோன்னு..” “அடிப்பாவி.. அதுக்காக இப்படியா..?” மனதில் நொந்து போனவன், “ஷாரா.. கிளம்பி வா, நீ வரல அம்மா முகூர்த்த பட்டு எடுக்க மாட்டாங்க..” என்றான். “ஓஹ்.. அதுக்காக தான் இந்த போனா..?” மனதின் ஏமாற்றத்தை அவளே அறியாமல் ஷா கேட்டுவிட, “அப்போ நான் உன்னை கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தியா..?” உதய் டக்கென்று புரிந்து அவளின் கேள்விக்கான பதிலை கேள்வியாக கேட்டுவிட்டான். அங்கு உதடு கடித்து கொண்டிருந்த ஷாரா, உதய் இப்படி கேட்கவும் அமைதியாகவே இருந்துவிட்டாள். உடனே மறுத்து பேச முடியவில்லை. “நான் உன்னை கூப்பிடணும்ன்னு எதிர்பார்த்தியா..?” திரும்ப கேட்ட உதய் குரல் துள்ளலாக தான் இருந்தது. “அதுதானே முறை..” ஷா கெத்தாக சொல்வது போல சொல்ல, அவளை கண்டு கொண்ட உதய்க்கு கொஞ்சம் ஜில்லென்று தான் இருந்தது. “நான் வரவா உன்னை கூப்பிட..?” “வேண்டாம், நான் வரல, நீங்களே பாருங்க..” மறுப்பின் பலம் குறைந்திருந்தது. “நான் வரேன் இரு..” உதய் காரை திரும்ப ஸ்டார்ட் செய்தான். “இல்லை.. இல்லை.. நானே வரேன், பக்கத்தில தானே..” என்றுவிட்டாள். “பார்க்கிங்லே வெய்ட் பண்றேன்..” என்று வைத்துவிட்டவன் அப்படியே சீட்டில் சாய்ந்து கொண்டான். ஒரு நிம்மதியான தளர்வு. இத்தனை நாள் இருந்த டென்க்ஷன் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது. போன் எடுத்து கண்ணம்மாவிற்கு தகவல் சொன்னவன் அங்கேயே இருக்க, அடுத்த சில நிமிடங்களில் ஷாரா கார் வந்தது. உதய் அவளின் காரை கண்டு கொண்டு கீழிறங்க, ஷாரா இவனை பார்த்தபடி இவனிடம் வந்தாள். “ஹலோ சார்..” என்ற ஜித்தன், “நீங்க மேல போங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..” என்று காருடன் வெளியே சென்றுவிட, இருவர் மட்டும் பார்க்கிங்கில். ஷாராவிடம் எப்போதும் இருக்கும் அந்த இறுக்கம் இல்லை. கண்கள் அங்கும் இங்கும் ஓட, கைகள் மொபைலை இறுக பிடித்தது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இருந்த ஷாரா நினைவில் வர, அன்று செய்ய முடியாததை இன்று செய்தான். அவளின் கை பற்றினான். லேசான அழுத்தம் கொடுத்து அவளை ஆறுதல் படுத்தினான். ஷாரா கண்கள் விரிய, இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்றவன், “அன்னிக்கு இப்படி தானே பதட்டத்தோட என்னை பார்க்காம பார்த்துகிட்டு இருந்த, அப்போ உன்கிட்ட வந்து சொல்ல தோணுச்சு ஏன் இவ்வளவு பதட்டம், நான் தானேன்னு..” என, ஷாரா முகம் சிவந்து தான் போனது.