Advertisement

 

 

 

 

 

 

யாவும் நீயாகிப் போனாயே! 1

மார்கழி மாதப் பனி ஆங்காங்கே  பொழிந்து பூமியை  முத்தமிட்டு கொண்டிருந்தது. மஞ்சள் பொன்னிறத்தில் ஆதவன் மெல்ல தன் கதிர்களை பரப்பி பூமியில் ஒளி வீசிக் கொண்டிருக்க, நிலவு மங்கை ஆதவன் வருகையை எதிர்பார்த்து தலைவனை காணாத தலைவி வருந்தி உருகுவது போல இரவெல்லாம் ஆதவனை காணாது ஏங்கி பாதியாக இளைத்து, எதிர்பார்த்த காதலன் தாமதமாக வந்த காரணத்தினால் அவன் மேல் செல்ல ஊடல் கொண்டு வேகமாக தன்னை மேகப் போர்வைக்குள் மறைத்துக் கொண்டது.

  

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு  ஐயாறப்பர் திருக்கோவிலில் மார்கழி மாத பூஜை நடந்துக் கொண்டிருந்தது.  பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஐயாறப்பரிடம் தங்கள் வேண்டுதலை வைத்துச் சென்றனர்.  

 

சம்வர்த்தினி அம்மன் அபிஷேகம் முடிந்து சர்வ அலங்காரத்துடன் பார்ப்பவர் கண்களுக்கு புன்னகை முகத்துடன் அருள்பாளித்துக் கொண்டிருந்தாள்.  சிலர் அந்த அதிகாலை வேளையில் பனியையும் பொருட்படுத்தாது குளித்து விட்டு நடுக்கத்துடன் வந்து சென்றனர்.  கோவிலின் கோபுரங்களில் அமர்ந்திருந்த புறாக்கள் சிறகை அடித்து சத்தத்தை எழுப்பி, வருவோர் போவோர் கவனத்தை ஈர்த்து தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது.  

 

கோவிலின் உள்ளே பாடிக்கொண்டிருந்த பாடல் எட்டு திசைக்கும் ஒலிக்க, அப்பாடலுடனே தானும் பாடிக் கொண்டு பூஜையை முடித்துவிட்டு  கையில் சாம்பிராணியை வைத்துக் கொண்டு வீடு முழுவதும் தெய்வீக மணத்தை  பரப்பிக் கொண்டிருந்தார் வசந்தி.  அவ்வீடே சாம்பிராணி புகையால் கோவில் போல காட்சி அளித்தது.  

 

தன் மனையாளின் தெய்வீகக்குரலில் லயித்துக் கொண்டே செய்தி தாளை பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வீட்டின் தலைவர் சுப்பிரமணி. திருவையாறு அருகே உள்ள நகர்ப்புற பகுதியில் பெரிய அளவில் நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார் சுப்பிரமணி. திருவையாற்றில் மதிக்கத்தக்க பணக்காரர்களில் இவரும் ஒருவர்.  

 

சுப்பிரமணி – வசந்தி தம்பதியினருக்கு இளஞ்செழியன் என்ற மகனும் பாரதி என்ற மகளும் உள்ளனர். சுப்பிரமணி மிகவும் கண்டிப்பானவர். செழியன் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு படித்து முடித்துவிட்டு அவருடன் நூற்பாலை கவனித்து வருகிறான். 

 

பாரதி கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். அந்த பழமை மாறாத வீட்டில் சுப்பிரமணியுடன் சேர்ந்து அவரின் தங்கை கல்யாணி குடும்பமும் வசித்து வருகிறது. 

 

கல்யாணியின் கணவர் ஜெயக்குமார் நிறைய தொழில்களில் முதலீடு செய்து நஷ்டத்தை மட்டுமே கண்டு வருபவர். பிழைக்கத் தெரியாத ஜெயக்குமார் உடன் தங்கையை அனுப்ப மனமின்றி தன்னுடனே வைத்துக் கொண்டார் சுப்பிரமணி. 

 

ஜெயக்குமார் – கல்யாணி தம்பதியினருக்கு ஆகாஷ் என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். ஆகாஷ் படித்து முடித்து விட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறான். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம். ஆனால் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்களது நட்பு நெருக்கமானது. 

 

தாரணிக்கும் பாரதிக்கும் சம வயது தான். ஒரே கல்லூரியில் தான் பயில்கின்றனர். கல்யாணி வந்த புதிதில் அமைதியாக தான் இருந்தார். பின் தாய் தந்தையின் பேச்சைக் கேட்டு, தன் தாய் வீட்டில் சட்டமாக அமர்ந்து அதிகாரம் செய்யத் தொடங்கி விட்டார். 

 

அவரின் தாய் தந்தையர் இறந்த பிறகும் இது தொடர்கிறது. வசந்தி வாயில்லா பூச்சி, வெளியுலகம் தெரியாத வீட்டுப் பறவை. கல்யாணி தனது அண்ணன் வீட்டில் இருக்கும் போது மட்டும் பதுவிசாக நடந்து கொள்பவர், அவர் தலை மறைந்ததும் தனது அதிகாரத்தை தொடங்கி விடுவார். 

 

சில சமயங்களில் கல்யாணியின் செயலைப் பார்த்து செழியனுக்கு கோபம் வந்து வார்த்தை வாய் வரை வந்து விடும். தாயின்‌ கெஞ்சலான பார்வையினால் அமைதியாகி விடுவான். 

 

செழியன் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டவன் தான். அவர் வார்த்தைக்காக தான் தனது படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத அவர்களது நூற்பாலையை கவனித்து வருகிறான்.  

 

சுப்பிரமணி கல்யாணிக்கு ஆதரவாக பேசி வார்த்தைகளால் காயப்படுத்தும் போது செழியனுக்கு கோபம் எக்குத்தப்பாக வரும். அப்போதும் அவன் பேசாமல் இருப்பதற்கு இரண்டு காரணம், ஒன்று சுப்பிரமணி மீது வைத்துள்ள மரியாதை. மற்றொன்று தான் எது பேசினாலும் அது மீண்டும் வார்த்தை என்று கூறிய அம்பின் வழியாக தன் தாய் மீது பாயும் என்றதாலும் மட்டுமே…

 

கல்யாணியின் மகள் தாரணியும் தாய்க்கு தப்பாமல் அப்படியே கல்யாணியின் குணத்தை கொண்டிருப்பவள். அதிகாரம் செய்வதில் தாயையே மிஞ்சி விடுவாள். 

 

ஆகாஷ் இவர்களுக்கு எதிர்மாறான குணமுடையவன். மாமாவின் வீட்டில் இப்படி தங்கி உள்ளோம் என்ற வருத்தம் உண்டு. ஊதாரியான தன் தந்தையின் மீதும் தாய் வீட்டில் அதிகாரம் செய்யும் தன் அன்னயையும் தமக்கையும் கண்டு கோபம் வரும் தான்.  விரைவாக இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என அடிக்கடி நினைத்து கொள்வான்.

 

வசந்தி பூஜையை முடித்து விட்டு காபி போட்டுக் கொண்டு வந்து சுப்பிரமணியிடம் நீட்ட, இவ்வளவு நேரம் அவரது இனிமையான குரலை ரசித்துக் கொண்டிருந்தவர், முகத்தில் எதையுமே காட்டாமல் காபியை எடுத்துக் கொண்டார். 

 

சுப்பிரமணி எப்போதுமே இப்படி தான். வசந்தி நன்றாகவே செய்தாலும் அதைப் பாராட்ட மனம் வராது. எங்கே பாராட்டினால் உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து கொள்வார் என்பது அவரது எண்ணம். இது தானாக வந்தது அல்ல. கல்யாணி போட்ட தூபத்தினால் வந்தது. வசந்தியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறி வசந்தியின் மீது அவருக்கு இருந்த எண்ணத்தை இவ்வாறு மாற்றிவிட்டாள். 

 

வசந்தியும் இயல்பான அமைதியான குணத்தினால் எதுவும் பேசுவதில்லை. வசந்தி சமையல் வேலை முடித்து விட்டு எல்லோரையும் உணவு உண்ண அழைக்க, ஆனால் தாரணி எப்போதும் போல தாமதமாக எழுந்து, “செல்வி, காபி கொண்டு வா..” என்று அதிகாரத் தொனியில் கூறிக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள். 

 

வசந்தி, “தாரணி, குளிச்சிட்டு வா….” என்க, 

 

கல்யாணி, “காலைல எழுந்தவுடனே என் மகளை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டிங்களா? இதுவே என் வீடா இருந்தா என் மகளை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. நாங்க உங்க வீட்ல உக்காந்து சாப்பிடுறோம்னு எங்களை கேள்வி கேக்குறீங்களா?” என்று கண்ணை கசக்கினாள். 

 

இப்போது தான் என்ன சொல்லி விட்டோம் என்று வசந்தி அதிர்ந்து பார்க்க, அப்போது குளித்துவிட்டு வந்த சுப்பிரமணி நடந்த எதையும் அறியாமல் தங்கையின் நீலிக்கண்ணீர் உண்மை என நம்பி வசந்தியை முறைத்து, “காலையிலேயே என் தங்கையை ஏதாவது குத்தம் சொல்ல ஆரம்பிச்சுட்ட.. போ போய் வேலையப் பாரு..” என அதட்டினார்.

 

எப்போதும் போலவே அவர் மனதில் உண்டான வேதனையை மறைத்து உள்ளே செல்ல எத்தனிக்க, குளித்து முடித்து புன்னகை முகமாக கீழே இறங்கி வரும் பாரதியைப் பார்த்தவுடன், மனதில் உள்ள வேதனை நீங்கி சிறு கீற்றாக புன்னகை தோன்றியது. 

 

வசந்தி, “செழியன் எங்க மா?” என கேட்க, 

 

பாரதி, “இதோ 30 நிமிஷத்துல வரேன்னு சொன்னான்மா..” என்று கூறினாள். செழியன் வருகிறான் என கேட்டவுடன் தாரணி வேகமாக குளியல் அறைக்குள் ஓடினாள். மற்றவர்கள் அமர, வசந்தி உணவை பரிமாறிக் கொண்டே, “ஆகாஷ்…” என அழைக்க, 

 

“இதோ வந்துட்டேன் அத்தை…” என குரல் கொடுத்துக் கொண்டே வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான். இவ்வளவு நேரம் தலை குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாரதி நிமிர்ந்து பார்க்க, அவள் பார்வைக்காக காத்திருந்த ஆகாஷ், யாரும் பார்க்கா வண்ணம் அவளைப் பார்த்து கண்ணடித்தான். 

 

அவனது திடீர் செயலால் உண்டான படபடப்பை மறைத்தபடி வேகமாக குனிந்து கொண்டாள். அவளது படபடப்பை ரசித்தவன் உதட்டுக்குள் புன்னகைத்து கொண்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினான். இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பல நாட்களாகவே இவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது. 

 

செழியன் வருவதற்குள் தயாராகி விட வேண்டும் என நினைத்து வேகமாக குளித்து கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்தாள் தாரணி. 

 

வசந்தி தாரணிக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் போதே, அழுத்தமான காலடிகளுடன் இறங்கி வந்தான் செழியன் என்கின்ற இளஞ்செழியன். இருபத்தியேழு வயது ஆண்மகன், ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம். மாநிறத்திற்கும் சற்று மேம்பட்ட நிறம். எப்போதும் புன்னகை சிந்தும் அவனது இதழ்கள். பாரதியாரின் தீவிற விசிறி. அன்று அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டை அவனை மேலும் அழகாக காட்டியது. 

 

புன்னகை தவழும் முகத்துடன் இறங்கிவரும் தன் புதல்வனை வசந்தி கனிவுடன் பார்க்க, சுப்பிரமணி இவன் எனது மகன் என்ற கர்வத்துடன் பார்த்தார். தாரணி அவனை ஆசையுடன் பார்த்தாள். இவன் எனக்கு சொந்தமானவன் என்ற எண்ணம் எப்போதும் அவளுக்கு உண்டு. காரணம் கல்யாணி, ‘செழியனை உனக்கு தான் திருமணம் செய்து வைக்கப் போகிறோம்’ என்று சிறு வயதிலிருந்தே அவள் மனதில் விதைத்து வைத்திருந்தார்.

 

அவன் அழகையும் திறமை கண்டு வியந்தவள், தன் மனதில் அவனுக்காக ஒரு மனக் கோட்டையை கட்டி வைத்திருந்தாள். தான் தான் இந்த வீட்டின் மகாராணி என்ற எண்ணத்தின் விளைவாகவே அவள் தனது அதிகாரத்தை அந்த வீட்டில் நிலைநாட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். 

 

சுப்பிரமணி அவ்வப்போது மருமகளே என அழைத்து அவளது ஆசையை வளர்த்து விட்டிருந்தார்.  

 

தன் தாயிடம் புன்னகை சிந்தியவன், ஆகாஷ் அருகில் அமர்ந்தான். ஆகாஷ் செழியன் தன் அருகில் அமர்ந்தது கூட அறியாமல், ஓரக்கண்ணால் பாரதியை தீண்டிக் கொண்டிருக்க, செழியன் அவன் காதில், “மச்சான், நானும் பக்கத்துல தான் இருக்கேன்..” என்றான். 

 

ஆகாஷ், “அதான் நீயே மச்சான்னு சொல்லிட்டேல்ல.. அப்புறம் என்ன சாப்பிடுற வேலைய பாருடா..” என்றான். 

 

செழியன், “அப்பா…” என்று ஆரம்பிக்க, 

 

ஆகாஷ், ‘ஐயோ! மாமா வா?’ என்று நினைத்து விட்டு தலையை குனிந்து கொண்டான். செழியன் அவனது செயலை பார்த்து சிரித்துக்கொண்டே உணவருந்தினான்.  

 

தாரணி செழியன் வந்ததிலிருந்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு விட்டு செழியனும் ஆகாஷூம் வேலைக்கு கிளம்ப, ஆகாஷின் கண்களில் தானாக பாரதியைப் பார்க்க, அவள் கண்களால் அவனுக்கு விடை கொடுத்தாள். 

 

இதை கண்ட தாரணி செழியனை பார்க்க, அவன் அவளை கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை. இது அவளுக்கு எரிச்சலை எழுப்ப, பொறாமையுடன் அவளது பார்வை பாரதியின் மீது படிந்தது. 

 

இந்த விஷயத்தில் மட்டுமல்ல! நிறைய விஷயங்களில் தாரணிக்கு பாரதியின் மீது பொறாமை. பாரதி அழகிலும் படிப்பிலும் தாரணியை விட கெட்டிக்காரி. பாரதி பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம் படிக்க ஆசைப்பட, தாரணி அவள் மட்டும் மருத்துவம் படிப்பதா என்ற கெட்ட எண்ணத்தை கல்யாணியிடம் கூற, 

 

கல்யாணி, “பெண் பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்தால் கைமீறி சென்று விடுவாள்..” என்று சுப்ரமணியிடம் கூறி அவளது ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டாள். 

 

பாரதி தன் விதி இது தான் என நினைத்துக்கொண்டு கலைக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். செழியன் கேட்டதற்கு கூட தனக்கு கலைக் கல்லூரியில் படிக்க தான் விருப்பம் என கூறிவிட்டாள்.

 

செழியன் காரை ஓட்ட, ஆகாஷ் அவளருகில் அமர்ந்து கொண்டிருந்தான். ஆகாஷ், “மச்சான், இப்ப எல்லாம் நீ ஏன் ஆபீஸ் பக்கம் அடிக்கடி வர்ற? என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

 

தனது செவிகளில் விழுந்த வார்த்தைகளில் விளைவால் செழியன் இதழ்கள் குறுநகை பூத்தது. உடனே அதை மறைத்துக் கொண்டவன், “நீ வேலையை ஒழுங்கா பார்க்குறியா, ஆர்டர் எல்லாம் டெலிவரி பண்ணியாச்சான்னு பார்க்க வர்றேன். என்னதான் இருந்தாலும் நீ இந்த தொழிலுக்கு புதுசு இல்ல… அதான் உனக்கு இதுல இருக்குற நுணுக்கத்தை எல்லாம் சொல்லிக் கொடுக்கத்தான் வர்றேன்…” என்றான்.

 

ஆகாஷ், ‘நல்லா சமாளிக்கிறடா!’ நினைத்தவன், “ஓ..என் மேல இருக்கிற அக்கறையில் தான் நீ வர்றீயா? உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்குடா மச்சான்…” என்றான். 

 

செழியன் அவனைப் பார்த்து புன்னகைத்தான். ஆகாஷ், “ஆனால் ஒன்னு மட்டும் எனக்கு புரியலைடா…” என்க, செழியன் அவனை அவனை கேள்வியாக பார்த்தான்.

 

ஆகாஷ், “நீ வச்சிருக்கிறது ஸ்பின்னிங் மில். நான் வச்சிருக்கது கார்மெண்ட்ஸ். ரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தும் நீ எனக்கு உதவி பண்ற… உன் அறிவைப் பார்த்து வியக்குறேன்டா….” என்றான் சிரிக்காமல். 

 

அவனது கேள்வியில் சிறிது தடுமாறிய செழியன், மறு நொடியே சமாளித்துக்கொண்டு, “எல்லாம் உனக்காக தான் செய்றேன்டா.. சம்பந்தமே இல்லாத பிசினஸ் பத்தி தெரிஞ்சுக்கிட்டு உனக்கு சொல்லி தர்றேன்…” என்றான் சிறிதும் பதட்டப்படாமல். 

 

ஆகாஷ், ‘என்ன நடந்தாலும் கெத்தவிடாம சமாளிச்சுடுவானே!’ என நினைத்தவன், ‘எப்படியும் ஆபீஸ் போனா தெரிஞ்சுடும்…’ என்று நினைத்துக்கொண்டான். 

 

செழியன் அவன் பதில் பேசாததை கண்டு இதழில் உறைந்த புன்னகையுடனே காரை இயக்கினான். இருவரும் சிறிது நேரத்திலேயே ஆகாஷின் அலுவலகத்தை அடைந்தனர். 

 

செழியன் ஆகாஷிற்கு முன்பாக இறங்கி ஆபீசுக்குள் நுழைந்தான். அவனது செயலை பார்த்து வியந்த ஆகாஷ் பின்னோடு சென்றான். 

 

காலையில் வந்தவுடன் வீட்டில் நடந்த கதைகளை பேசிக் கொண்டிருந்த ஊழியர்கள், செழியனையும் ஆகாஷையும் பார்த்ததும் அமைதியாகி விட்டனர். உள்ளே நுழைந்ததும் செழியன் கண்கள் அலை பாய்ந்து தன்னவளை தேடியது. அந்தோ பரிதாபம் அவள் இல்லை. 

 

ஏமாற்றம் சுமந்த விழிகளோடு செழியன் திரும்ப எத்தனித்தான். அவனது முகத்தில் இருந்த வருத்தத்தை காண பொறுக்காமல் ஆகாஷ், “வா உள்ளே போகலாம்…” என கை பிடித்து அவனை தனது அறைக்கு அழைத்துச் சென்றான். 

 

செழியன் வாடிய முகத்துடன் இருக்க, அவன் எதிரில் அமர்ந்து ஆகாஷ், “செழியா, திகழ் இன்னைக்கு ஒன் அவர் பெர்மிஷன் கேட்டு இருக்காங்க. அவங்க வர லேட்டாகும்…” என்றது தான் தாமதம், செழியன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம், “உண்மையாவா?” என்று கேட்க, ஆகாஷ் அவனை கேலிப் புன்னகையுடன் பார்க்க, செழியன் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான். 

 

“நீ அடிக்கடி ஆபீஸ் பக்கம் வரும் போதே நினைச்சேன், இது மாதிரி தான் ஏதாவது இருக்கும்னு…” 

 

செழியன், “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை….” என்று மறுக்க, 

 

ஆகாஷ், “சமாளிக்காதடா… நீ ஒவ்வொரு தடவையும் இங்கே வரும்போது உன் கண் அந்தப் பெண்ணையே சுத்தி சுத்தி வர்றதை நான் கவனிச்சிருக்கேன்… ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த பொண்ணு ரொம்ப அமைதி, தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசி நான் பார்த்தது இல்லை…” என்றான்.  

 

செழியன் எதுவும் பேசாமல் அவள் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்தான். ஆகாஷ் பேசி முடித்து விட்டு அவனை கேள்வியாக பார்க்க, செழியன் தனது வாட்சைப் பார்த்தான். 

 

ஆகாஷ், “மச்சான், பொறுமை! பொறுமை! இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க…” என்க, செழியனுக்கு தன்னவளை முதன்முதலில் சந்தித்த நிகழ்வு கண்முன் வந்து போனது.

 

அன்று ஆகாஷின் ஆபிஸில் ஒரு முக்கியமான கிளையண்ட் மீட்டிங். ஒரு பெரிய டெக்ஸ்டைல்ஸில் ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கான மீட்டிங் அது. செழியன், ஆகாஷ் வர முடியாத காரணத்தினால் தானே அட்டெண்ட் செய்வதாகக் கூறினான். 

 

அன்று சிறிது தாமதமாகி விட்டதால் அசுர வேகத்தில் காரை ஓட்டியவன், வேகமாக அலுவலகத்திற்குள் நுழைந்தான். அவன் வேகமாக கதவை திறக்க, எதிர் புறத்திலிருந்து அவளும் கதவை திறந்தாள். 

 

அவன் வேகமாக கதவை திறக்க, இதை எதிர்பார்க்காதவள் கால் தடுக்கி கீழே விழப் போனாள். உள்ளே நுழைந்த செழியன் அவள் இடையில் கைகோர்த்து தாங்கி விட்டான். 

 

எதிரில் இருந்தவளோ கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். செழியன் அவளை இப்போது தான் முதல் முறை பார்க்கிறான். தனக்கு அருகில் இருந்த அவளது கள்ளம் கபடமற்ற குழந்தை தனமான முகம் அவனை ஏதோ செய்தது. உள்ளுக்குள் ஏதோ நழுவியது போன்ற உணர்வு. சொல்ல தெரியவில்லை! அவளை பார்த்த அந்த நொடி அவன் மனதில் தோன்றியது பாரதியின் வரிகள் மட்டுமே..

 

“எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நோக்கும்

எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதனவிற்கள் 

திங்களை மூடிய பாம்பினைப் போல

செரிக்குழல்; இவள் நாசி எட்பூ.”

 

 

                                     தொடரும்…

 

மக்களே! படிச்சுட்டு மறக்காமல் உங்களுடைய கருத்துக்களை பகிரந்துக்கோங்க.. ?? தென் வார்த்துக்கு ஒரே அப்டேடீ தான் சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்.. 

Advertisement