Advertisement

அத்தியாயம் – 3

அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

விமானத்தில் அவந்திகா, கார்திக் இருவரும் ஒரு வரிசையிலும், ரோஷனும் பாவனாவும் ஒரு வரிசையிலும் மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும் அமர்ந்திருந்தனர்.

அவந்திகா சாளர(Window) இருக்கையிலும் அவள் அருகில் கார்திக்கும் அமர்ந்தனர். அவந்திகாவின் சிந்தனை இன்னமும் நடப்புக்கு வரவில்லை. அதனால் பாவனா அவள் அருகில் இல்லை என்பதும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

அவந்திகாவின் முகம் வெளுப்புற்று இருப்பதை விமானத்தில் ஏறுமுன்பே அறிந்துவிட்ட பாவனா, அவளிடம் அதுகுறித்து பேச எண்ணினாள். ஆனால் அதற்குத் தடங்களாக ‘இந்தக் கார்திக் இப்படி எங்களைப் பிரித்து இருக்கையைப் பதிவு செய்து வைத்திருக்கிறாரே.’ என்ற பொருமலுடன் அவனிடம் இடம் மாற்றி அமரப் பேசினாள்.

“கார்திக் நான் சாளர இருக்கையில் அமர வேண்டும். ரோஷன் எனக்கு வழி விடமாட்டேன் என்கிறான். நீங்கப் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்கிறீர்களா? நானும் அவந்தியும் இங்கே இடம் மாற்றி அமர்ந்துக் கொள்கிறோம்”என்று கேட்டுக்குக் கொண்டு வந்து நின்றாள்.

அவந்திகாவின் அருகில் அமர்வதற்கும் அவளிடம் தனியாகப் பேசுவதற்கும் வசதியாக இருக்கவே கார்திக் விமான இருக்கைகளை மிகவும் கவனமாகத் தேர்வு செய்திருந்தான். ஆனால் இப்படி பாவனா வந்து இடையூறு செய்யக்கூடுமென்று அவன் எண்ணவில்லை. பாவனாவே புரிந்துக் கொள்ள கூடுமென்று எண்ணிய அவன் எண்ணத்தில் மண் விழுந்தாற் போல இப்போது பாவனா வந்து கேட்டாள்.

அவளைத் திரும்பிப்ப் பார்த்தவன் கண் சைகையில் அவளுக்குப் புரிய வைக்க முயன்றான் கார்திக். ஆனால் பாவனாவிற்கு எதுவும் புரியவில்லையா? அல்லது புரிந்தும் சிறுப்பிள்ளைப் போலச் சாளர இருக்கைக்கு அடம்பிடிக்கிராளா என்று அவனால் யூகிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் வாய்விட்டே, “பாவனா. 3 மணி நேர பயணம்தானே எந்த இருக்கையில் இருந்தால் என்ன? போ… போய் அங்கேயே அமர்.” என்றான் கார்திக்.

“இல்லை. இல்லை. இது என்னுடைய முதல் விமான பயணம். எனக்குச் சாளர இருக்கையில் தான் அமர வேண்டும்.” என்று பிடிவாதமாக நின்றாள் பாவனா.

யார் அருகில் இருந்தாலும் அக்கறை இல்லாமல் இருந்த அவந்திகா பாவனா வந்து பேசிய பிறகே தன் அருகில் அமர்ந்திருப்பது கார்திக் என்பதை உணர்ந்தாள். அதுவரை அமைதியாக இருந்த அவந்திகா, மீண்டும் மறுத்துப் பேச முயன்ற கார்திக்கின் கைப்பற்றி நிறுத்தினாள். அவளது தொடுகையில் முகம் திருப்பி அவளைப் பார்த்த கார்திக் மேலும் எதுவும் பேசவில்லை. ஆனால் அவந்திகா அவனிடம், “கார்திக் நான் வேண்டுமென்றால், பின் இருக்கைக்குப் போகிறேன். நீங்க இருவரும் இங்கு அமர்ந்துக் கொள்ளுங்க. பவி… வா. வந்து என் இருக்கையில் உட்கார்”என்று எழுந்தாள்.

அவந்திகாவின் தொடுகையிலே மன குளிர்ந்த கார்திக், “இல்லை இல்லை. நீங்க இருவுரும் இங்கே அமருங்கள். நான்பின் இருக்கைக்குப் போகிறேன். தோழிகள் இருவரும் பேசிக் கொண்டு வருவீர்கள்”என்று பெருந்தன்மையாகவே வழிவிட்டான்.

அவன் எழுந்து செல்வதை பார்த்தவண்ணம் வந்து அவந்திகாவின் அருகிலும் சாளரத்தின் அருகிலும் அமர்ந்த பாவனா, “ஹப்பா. உன் அருகில் அமர்வதற்குள் என்ன என்னமோ சொல்ல வேண்டி இருக்கு. சம்மதம் சொல்லும் முன்பே இந்தக் கார்திக் உன்னை இப்படி அடைக்காக்கிறார். நீ சம்மதம் மட்டும் சொல்லிவிட்டால் எனக்கு வணக்கம் சொல்லி விரட்டிவிடுவார் போல”என்று புலம்பினாள்.

இப்படி பாவனா எப்போதும் பேசுவது இயல்பு என்பதால் அதற்குப் பதிலாக அவந்திகா புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.

அது மூவர் அமரும் வரிசை. அவந்திகாவின் அருகிலிருந்த இருக்கையில் இன்னமும் யாரும் வந்து அமரவில்லை. ஒரு வேளை யாரும் வரவில்லையென்றால் வந்து அவந்திகாவின் அருகில் அமர்ந்துக் கொள்ளலாம் என்று எண்ணிய வண்ணம் முன் இருக்கையை அவ்வப்போது எட்டி பார்த்துக்கொண்டிருந்தான் கார்திக். ஆனால் சிறிது நேரதிலே ஒருவன் வந்து அவந்திகாவின் அருகில் அமரவும் கார்திக் சோர்ந்து இருக்கையில் சாய்ந்துக் கொண்டான்.

இவை எதுவும் பொருட்படுத்தாமல், கண் மூடி ஓவியப் போட்டிகுறித்து யோசித்துக் கொண்டிருந்தாள் அவந்திகா.

சிறிது நேரம் சாளரம் வழியாக வெளியில் பார்த்திருந்த பாவனா, விமான கிளம்பி சிறிது தூரம் சென்றதும் அவந்திகாவின் புறம் திரும்பிப் பேச நினைத்ததைக் அவள் முகம்பற்றி, “ஏய், என்னடி… விமான நிலையத்தில் முகம் வெளுத்துத் தெரிந்தாய். இது நாள்வரை நான் உன்னை அப்படி பார்த்ததே இல்லையே. எங்கு யோயிருந்தாய்? என்ன நடந்தது?” என்று நேரிடையாகக் கேட்டாள்.

பாவனா இப்படி கேட்கக் கூடுமென்று எண்ணாத அவந்திகா ஒரு நொடி விழித்து அவளைப் பார்த்துவிட்டு, அவளுடைய தலையினை அன்பாகக் கலைத்துவிட்டு, “பெரிதாக ஒன்றுமில்லை பவி. பழை நண்பர்போல ஒருவரை அங்குப் பார்த்தேன். அவரிடம் பேச முயன்று அவர்பின் சென்று அவரைத் தவறவிட்டுவிட்டேன். அதனோடு காலதாமதத்தால் கொஞ்சம் படப்படத்திருப்பேன். அதனால் முகம் வெளுத்திருக்கும்”என்றாள்.

அவளது பதிலில் விழி கூர்மையுடன் அவந்திகாவை பார்த்த பாவனா, பின் தொடர்ந்து “எனக்குத் தெரியாத உன்னுடைய நண்பர் யார்? அதனோடு ஓய்வறைச் சென்றபின் என்ன என்ன செய்தாய்? ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்லு. மறைக்க முயலாதே. உன்னை எனக்கு நன்றாகத் தெரியும்.” என்றாள் விடாப்பிடியாக.

அதற்குச் சட்டெனச் சிரித்த அவந்திகா, “வாயாடி. சொன்னால் நம்ப மாட்டாயா?” என்று பாவனாவின் நெற்றிப் பொட்டில் அவளது வலக்கையின் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் மடக்கி சுண்டிவிட்டாள்.

சுண்டிவிட்டதில் லேசாகச் சிவந்த பாவனாவின் நெற்றியை ஒருக்கையால் தடவிய வண்ணம் “இந்தச் சிரித்து மழுப்பும் வேலையெல்லாம் வேறு ஆளிடம் வைத்துக்கொள். எனக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும். என்ன நடந்தது”என்றாள்.

உடனே புன்னகையை நிறுத்திய அவந்திகா, ‘இவளிடம் சொல்லாமல் மீளாது’ என்பதை உணர்ந்து, “பவி. அந்த வெள்ளை நிற ஆளைத் தானியங்கி படியில் பார்த்தேன். படிகளின் விளிம்பில் என் தாவணி மாட்டிக் கொண்டது. அப்போது விழ இருந்த என்னை விழுந்துவிடாமல் பிடித்து நிறுத்தினார்.

ஆனால் அவர் நாம் பேசிக் கொண்டதுப் போல வயதானவராகத் தெரியவில்லை. நான் 15 வருடத்திற்கு பார்த்ததுப் போலவே தான் இருந்தார். என்ன அந்தக் குதிரைவால் தலைகட்டு இல்லை. அந்தத் தாடியும் இல்லை. ஆனால் நிச்சயம் அவர்தான். அந்தக் குழப்பத்திலே இருந்தேன். அப்போதுதான் கார்திக் வந்து என்னை அழைத்து வந்தார்”என்றாள்.

அதற்கு ஆச்சரியமுற்ற பாவனா, “உண்மையாகவாடி? இன்று காலைதானே அவரைப் பற்றிப் பேசினோம். நினைத்ததும் கடவுளைப் போல வந்து நிற்கிறார். இல்லை உன் பிரமையா?” என்று கேட்டாள்.

“பிரமை என்று சொல்ல வாய்ப்பில்லை பவி. பார் என் தாவணியின் நுனி கிழிந்திருக்கிறது”என்று தன் தாவணி தலைப்பைக் காட்டினாள் அவந்திகா. “பின் அவரைப் பற்றிப் பேசி எதுவும் வரப் போவதில்லை. அமைதியாக இரு”என்று உரையாடலை முடிக்க முயன்றாள்.

அவந்திகாவின் மனம் உணராமல், “அப்படி முழுதும் சொல்ல முடியாது. மறுமுறை அவரைப் பார்த்தால் உடனே எனக்குக் கைப்பேசியில் அழை. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது படத்தில் நடிப்பவர்களெல்லாம் 40 வயதிலும் வயதானவர்கள் போலவா தெரிகிறார்கள். தகுந்த உடல் பயிற்சியும் ஒழுங்கான உணவும் இருந்தால் இளமையாக அதிக காலம் இருக்கலாம். எனக்கென்னமோ, அவர் உனக்காகவே இளமையாக உடலைப் பரமாறிக்கிறாரோ என்று தோன்றுகிறது! அவரிடம் பேசினாயா?” என்று அவளையும் அறியாமல் குதுகலத்துடன் கேட்டாள் பாவனா.

அதற்குச் சில நொடிகள் பதிலேதும் சொல்லாமல் நேராக அமர்ந்தாள் அவந்திகா. இன்னமும் ஆர்வம் குறையாமல் அவந்திகாவின் பதிலுக்காக அவளையே பார்த்திருந்த பாவனாவிடம் எந்த அளவு சொல்லலாம் என்று அந்திகாவிற்கு புரியவில்லை. அந்த நிகழ்வுக்குப் பின் அவந்திகாவிற்கு நூறு சதம் அந்த வெள்ளை நிற ஆள் நிச்சயம் மனிதன் இல்லையென்று தெரிந்துவிட்டது. அதனால் இனி அதுகுறித்து பாவனாவிடம் அதிகம் பேசுவது நல்லதில்லை என்று உணர்ந்து, ஒற்றை வார்த்தையாக, “இல்லை”என்றாள்.

அதற்குப் பதிலாக மேலும் பேச எண்ணிய பாவனாவின் உரையாடல் தடைபடுமாறு, “ஏய். பாவனா. இங்குதான் இருக்கிறீர்களா? உங்களைத் தேடிக் கொண்டு விமானம் முழுதும் உலாவிவிட்டு வருகிறேன். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி”என்றான் விமான நிலையத்தில் பார்த்த நீல நிற சட்டை அணிந்த அந்த இளைஞன்.

“ஏய் குதிரைவால். வாங்க வேண்டிய மருந்து அந்த மருந்தகத்தில் கிடைத்ததா?” என்று கேட்டாள் பாவனா.

தேடி தொலைத்தவன் கண்ணெதிரே வந்து நிற்பதை பார்த்ததும் அவந்திகாவிற்கு சட்டென வியர்த்துவிட்டது. ஆனால் பாவனாவும் அவனும் பல நாள் தோழர்கள்போலப் பேசுவதுது அவந்திகாவிற்கு வியப்பாகவும் இருந்தது. எதுவும் பேசாமல் அவனைக் கூர்ந்து கவனிக்கலானாள் அவந்திகா.

பாவனாவின் குதிரைவால் என்ற அழைப்பில் தன் பின்னந்தலையைச் சொறிந்த வண்ணம், “மருந்தெல்லாம் கிடைத்துவிட்டது. வாங்கியப் பின் ஓட்டமும் நடையுமாக வந்து விமானத்திலும் ஏறிவிட்டேன். என் பெயரைச் சொல்லவில்லைதான். அதற்காகக் குதிரைவால் என்கிறீர்களே. என் பெயர் மேகன்.”என்று புன்னகைத்தான்.

அவனது பதிலில் கிளுக்கி சிரித்த பாவனா, “மன்னித்துவிடுங்க. நான் பொதுவில் ஆண்கள் குதிரைவால் போட்டுப் பார்த்ததில்லை. அதுதான் மனதில் உங்களைக் குதிரைவால் என்று பதித்துவிட்டேன். இனி மேகன் என்றே அழைக்கிறேன்.” என்று தன்னுடையை தலைமுடியை பிடித்திருந்த தலைஊசியை பிரித்துச் சரிசெய்தாள். “பாருங்க. என் கூந்தல் நீளத்தைவிடவும் உங்களது அதிகம். அதனால் பொறாமையில் கேலி செய்யத் தோன்றிவிட்டது.”என்று புன்னகைத்தாள்.

அவளை நோக்கி மேலும் பற்கள் தெரியும் அளவு சிரித்து, “இது எங்க ஊரில் பொதுவில் எல்லோரும் இப்படிதான் சிகை வைத்திருப்போம். வெகுசிலர்தான் குறைவானச் சிகையுடன் இருப்பர்.” என்றான்.

அதன் அர்த்தம் பாவனாவிற்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் அவந்திகாவிற்கு நன்றாகவே புரிந்தது. அவனை முழுதும் கவனித்த அவந்திகாவிற்கு அவனது கைக்காப்பு மகரயாளியின் அடையாள முத்திரை என்பதும் உறுதி பட்டுவிட்டது. ‘மகரன் எதற்காக இங்கு வந்திருக்கிறான். ஒருவேளை என் ஆன்மா இங்கு வந்துவிட்டது தெரிந்து யாளி உலகிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறானோ. யாளியின் உடலில் இருந்தால் எதுவும் செய்யலாம். இந்த மனித உடலில் இவனை எதிர்க்க முடியுமா? அதனோடு யாளி உலகில் என்னை விரும்பி அழைக்க யார் இருக்கிறார்கள்?’ என்று வியர்த்த நெற்றியினை தன் இடது பின்னங்கையால் ஒற்றி எடுத்தாள்.

கைத்தாங்கியில் இருந்த அவளது மற்றொரு கை இருப்புக் கொள்ளாமல் லேசாகப் படபடப்பதை அவளால் தடுக்கமுடியவில்லை. அதுவரை அவள் அருகில் அமர்ந்திருந்த வெள்ளை நிற சட்டையணிந்த ஆள் தன் முகத்தை ஏதோ ஒரு புத்தகத்தைக் கொண்டு மறைத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனை யாரும் பெரிதாக எண்ணவில்லை.

தொடர்ந்து பாவனாவும் மேகனும் பேசிக் கொண்டிருந்ததில் தொந்தரவாக உணர்ந்தோ என்னமோ, தன் முகத்தின் மீதிருந்த புத்தகத்தைத் தன் வலது க்கையினால் எடுத்து, தன் இடது க்கையை ஏற்கனவே கைத்தாங்கியில் இருந்த அவந்திகாவின் கைமீது இதமாகப் பதித்து, மேகனை நோக்கி முறைத்தான் அந்த வெள்ளை ஆடை ஆள்.

அந்தப் பார்வையில் உடல் முழுதும் குளிர் பரவுவதுப் போல உணர்ந்த மேகன், சட்டென, “ச… ரி பாவனா. பிறகு வாய்ப்பிருந்தால் பார்ப்போம். நான் வருகிறேன்.”என்று கைசைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.

அவன் போவதையே பார்த்திருந்த அவந்திகா அவன் செல்லுமுன்னே பதட்டம் குறைந்திருப்பதையும், ஏதோ ஒரு பாதுகாப்பு போன்ற உணர்வையும் உணர்ந்தாள். என்னவென்று அதிகம் யோசிக்குமுன்னே அவள் கைப்பற்றியிருந்த தன் கையை விலக்கி, மீண்டும் புத்தகத்தை முகம் மறைக்குமாறு வைத்து, தன் கைக்களை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக்க் கொண்டு இருக்கையில் இயல்பாகச் சாய்ந்துக்க் கொண்டான் அந்த வெள்ளை நிற ஆள். இப்போது நடந்ததெல்லாம் பிரமைப் போல அவந்திகா நினைத்தாள்.

இவை எதையும் உணராத பாவனா அவந்திகாவிற்கு மேகன் குறித்து விளக்கமாக, “பாவம்டி அந்தக் குதிரைவால். விமானதில் போனால் எப்போதும் வாந்தி வந்துவிடுமாம். மருந்தகம் எங்காவது பார்தீர்களா என்று வந்து நின்றார். பார்த்தால் மருந்து வாங்கிவிட்டார் போல”என்று புன்னகைத்த வண்ணம் சொன்னாள்.

அதற்குப் பதிலாக, “ம்ம்…” என்றாள் அவந்திகா.

“சரி நாம் எதுவோ பேசிக் கொண்டிருந்தோமே. ஆமாம் அந்த வெள்ளை நிற ஆள்”என்று ஆர்வமாகத் தொடர்ந்து பேச முயன்ற பாவனாவின் பேச்சு, அருகிலிருந்த வெள்ளை நிற சட்டைக்காரனின், “ப்ச்…” என்ற ஓசையில் தடைப்பட்டது.

அதனை அவந்திகாவும் உணர்ந்து, “பவி. நாம் இதுப்பற்றிப் பிறகு பேசலாம். அருகில் இருப்பவருக்குத் தொந்தரவாக இருக்கும் போல இருக்கிறது”என்று பதில் சொல்வதிலிருந்து தப்பிக்க பற்றுக்கோலாக அருகிலிருந்தவனை இழுத்து பாவனாவை அமைதியாக்கினாள்.

பாவனாவும் அருகில் இருக்கும் அசௌகரியத்தை உணர்ந்து, “சரிதான். பிறகு பேசலாம்”என்று பேச்சை நிறுத்திவிட்டு, சாளரத்தில் மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

அதன்பிறகு மும்பை வந்தவர்கள் அவர்களுக்கான தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தனர். அடுத்த நாள் போட்டி நடக்கும் கல்லூரிக்குச் சென்று அங்கிருந்த அறிக்கை பலகையையும், விதிமுறைகளைப் பார்த்தனர்.

விதிமுறைப்படி, ஒவ்வொரு போட்டியிலும், இருவர் சேர்ந்து ஒரு குழுவாகப் பங்கேற்கலாம் என்றும், குழுவின் நபர்களைத் தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், குழுவிலிருப்பவர்கள் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என்றும் இருந்தது. தொடர்ந்து 4 நாட்கள் போட்டி நடக்கும் என்றும், யார் இறுதி நாள்வரை போட்டியில் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்றும் இருந்தது.

ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறு கட்டிடத்தில் இருந்ததால் கார்திக் இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தார். முதலில் அவந்திகாவிடம் நன்றாகச் செய்யும்படி சொல்லிவிட்டு, பிறகு மற்றவர்களைப் பார்த்துவிட்டு வரச் சென்றான்.

பாவனாவையும், அவந்திகாவையும் தவிர மற்றவர்கள் ஏற்கனவே ஒரே கல்லூரியைச் சேர்ந்த்த குழுமமாக இருக்க அவர்களுக்குப் பிரச்சனையில்லை. பாவனா ‘யாரை தேர்வு செய்யலாம்’என்று போட்டியாளர்கள் பலகையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் அருகில் அவளைப் போலவே பலரும அந்தப் பலகையைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அப்போது பெயர் பலகையில் மேகன் என்ற பெயரைப் பார்த்ததும் ‘இது அந்தக் குதிரைவாலாக இருக்குமோ. அவனும் அவன் கல்லூரியிலிருந்து தனியாக இருப்பதுப் போலத் தான் தெரிகிறது. சரி பொறுத்து பார்ப்போம்.’ என்று அங்கிருந்த ஆடவர்களில் குதிரைவால் தெரிகிறதா என்று தேடினாள்.

அவள் எண்ணம் போலவே விமானத்தில் பார்த்த மேகன் அங்கு வந்து நின்றான். “ஏ… பாவனா. நீங்களும் இந்தப் போட்டிக்குதான் வந்திருக்கிறீர்களா? அதுவும் இயக்குனர் பிரிவிற்கே! உங்களுடன் உங்கள் குழுவில் யார் கலந்துக் கொள்கிறார்கள்?” என்று அவள் அருகில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று அவளைச் சுற்றிப் பார்த்தான்.

அவனது கேள்வியில் மேகன் ஏற்கனவே ஒரு ஜோடியுடன் வந்திருப்பான் போல என்று நினைத்து அவன்மீதான ஆர்வத்தை மறைத்து, “எங்க குதிரைவால்? நான் என்னுடைய குழுவிற்கு தகுந்த ஆள் தேடிக் கொண்டிருக்கிறேன். உங்க ஜோடி எங்கே?” என்று சலிப்புடன் கேட்டாள்.

அவளது பதிலில் குதுகலம் அடைந்த மேகன், “ஐ… அப்போ எனக்கு அதிர்ஷ்டம்னு சொல்லுங்க. நானும் எனக்கான ஜோடியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்க என்னுடன் பங்கேற்கிறீர்களா?” என்று ஆர்வமாகக் கேட்டு அவள் முன் தன் வலது கை நீட்டி அவளிடம் அனுமதி கேட்டான்.

இதையே எதிர்பார்த்திருந்த பாவனாவிற்கு இது கசக்கவா போகிறது, அவன் கைப்பற்றி உடன் நடந்த போதும், பெண்களுக்கே இருக்கும் விறைப்புடன் “உண்மையாகவா? நீங்க வேறு யாரையும் ஏற்கனவே உங்க ஜோடியாக முடிவு செய்யவில்லையா? எனக்காகப் பார்க்க வேண்டாம். இரட்டைபடையாகத் தான் மொத்த நபர்கள் எண்ணிக்கை இருக்கிறது. அதனால் கண்டிப்பாக நான் தனித்துவிடப்படமாட்டேன்.”என்றாள்.

எங்குப் பாவனா வேண்டாமென்று சொல்லிவிடப் போகிறாளோ என்று அவசரமாக, “சே… சே… உங்களுடன் போட்டியில் கலந்துக் கொள்வது எனக்குக் கிடைத்த அருமருந்த வாய்ப்புஅதைத் தவறவிட்டால் நான் முட்டாள். அதனோடு நான் இன்னமும் யாரையும் முடிவு செய்யவில்லை.”என்றான் மேகன்.

மேகன் தேவை இல்லாமல் முகதுதி செய்கிறான் என்று தெரிந்த போதும் பாவனாவிற்கு அது பிடித்திருக்க அவனிடம், “சரி… சேர்ந்து போட்டியில் கலந்துக் கொள்வோம். வெற்றியும் பெருவோம்”என்று கிளுக்கி சிரித்தாள். அதன் பிறகு இருவரும் போட்டியில் எப்படி தங்களது யுக்திகளை கையால்வது என்பதை பற்றியும், இருவரும் எதில் சிறந்தவர்கள் என்பது குறித்தும், எந்தப் பகுதியை யார் எடுத்துச் செய்வது என்பதை குறித்தும் ஆலோசனைச் செய்துக் கொண்டிருந்தனர்.

ரோஷன், காயத்ரி, கவிப்பிரியன், மாலதி நால்வரும் இப்படி ஜோடியாகப் போட்டியில் கலந்துக் கொள்வது தெரிந்ததும் அதிக உத்வேகத்துடன் போட்டியில் ஈடுபட்டனர்.

இவர்கள் எல்லோருக்கும் எதிர்மறையாக அவந்திகா, விதிமுறையைப் பார்த்து விட்டு எந்த ஜோடியைத் தேடியும் செல்லாமல் அங்கு இருந்தக் காத்திருப்பவர்களான இருக்கையில் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். எப்படியும் என்னைப் போல யாரேனும் ஒருவர் இறுதியில் தனித்து இருக்கக்கூடும். அதன் பிறகு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளலாம் என்று ஆர்வமே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.

அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் எல்லா குழுவும் சேர்ந்து கட்டிடத்தின் உள்ளே ஜோடி ஜோடியாகச் சென்றது. ஒவ்வொருவர் சென்றதும் அவர்களின் பெயர் அறிக்கை(digital) பலகையிலிருந்து மறைந்தது. கடைசியாக அவள் பெயரும் மற்றொருவன் பெயரும் மட்டுமே பலகையில் இருந்தது.

பெருமூச்சுவிட்டு, இனி தன் முறை என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது அமைதியாக அவள் பின்னே வந்து, “அவந்திகா? “ என்றான் வெள்ளை நிற மேல்சட்டையும் நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்த ஒரு ஆடவன்.

அந்தக் குரலில் திரும்பிய அவந்திகா, “ஆமாம். பவளன்?” என்று அவளும் ஒற்றை சொல்லால் கேட்டாள்.

“ஆமாம். போட்டியில் கலந்துக் கொள்ளலாமா?” என்று முகத்தில் உணர்ச்சி காட்டாமலும் அவந்திகாவின் முகத்தை நேராகப் பார்க்காமல் பெயர் பலகையைப் பார்த்த வண்ணமும் கேட்டான்.

அவந்திகாவிற்கும் அவனிடம் தேவை இல்லாமல் பேசத் தோன்றாமல், “ம்ம்…” என்றாள்.

இருவரும் இணைந்து போட்டிக்கான கட்டிடத்தில் ஒன்றாக நுழைந்து அவர்களுக்கான பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

Advertisement