மௌனமதில் யுத்தம் ஏனடி? – 9

தாமரைக்கும் ராதிகாவுக்கமான புரிதல் மிகவும் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் வேலை சரியாக நடந்தால் சரி, மருமகள் தனக்கு அடங்கி இருந்தால் சரி என்று இருந்த வேதவல்லிக்கு இவர்களின் ஒற்றுமை போகப்போக எரிச்சலை கொடுக்கத் தொடங்கியது.

தாமரையின் அம்மா, அப்பா மகளைப் பார்க்க சம்பந்தி வீட்டிற்கு வந்து பார்த்து விட்டுச் செல்லும்போது எல்லாம் அவர்களுக்கு வீட்டின் நிலவரம் கொஞ்சம் புரிபட்டது. கூடவே ராதிகா நல்ல படிப்பு, நல்ல குணம் என்றிருக்க அவர்களுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது.

அதனால் மகளிடம் பேசும்போது, “ராதிகாவை உன் தம்பி ராஜேஷ்க்கு கட்டி வெச்சுட்டா என்ன?” என தாமரையின் அன்னை பேச்சுவாக்கில் கேட்டு வைக்க, அதை எதேச்சையாகக் கேட்க நேர்ந்த வேதவல்லிக்கு உள்ளுக்குள் எரிமலை வெடிக்காதது தான் குறை! ராஜேஷ் மருத்துவம் படித்திருப்பவன் ஆயிற்றே! அப்பேர்ப்பட்ட வரன் ராதிகாவிற்கு என்றால் புகைச்சல் இல்லாமல் இருக்குமா?

இதற்கும் தாமரை உடனே ஒப்புதல் கூட தரவில்லை. “ராதிகா டீச்சர் டிரைனிங் முடிக்கட்டும் மா… நானும் என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி வைக்கிறேன். அவர் எங்க மாமனார் கிட்டயும், சின்ன மாமனார் கிட்டயும் கலந்து பேசிட்டு சொல்லட்டும். இப்பவே இந்த பேச்சு எடுக்க வேண்டாம். இங்கே என்ன யோசிக்கிறாங்க தெரிஞ்சுட்டு பேசிக்கலாம் மா” என்று மட்டும் முடித்துக் கொண்டாலும் தன் தம்பிக்கு ராதிகா நல்ல பொருத்தம் என்று தான் தாமரைக்கும் தோன்றியது.

வேதவல்லிக்கு இதை நடக்கவே விடக்கூடாது என்கிற புகைச்சல்! இந்த பேச்சை ஆரம்பிக்கும் முன்பே ஏதாவது செய்து தடுக்க வேண்டுமே என பலமாக யோசித்ததில் அவருக்குக் கிடைத்த பதில் தான் திருமூர்த்தி.

திருமூர்த்தி சமீபத்தில் தான் லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸில் வேலைக்கு சேர்ந்திருந்தான். ‘அவன் மீது நல்ல அபிப்ராயம் இன்னும் வரவில்லை. வேலைக்கு வேண்டாம் என சொல்லி விடலாம்’ என்பது போல தான் செல்வம் பேசிக்கொண்டிருந்தார்.

அதை வைத்து ஒரு திட்டம் போட்டவர், அன்று இரவு ராதிகாவிடம் பிரச்சினையைக் கூட்டி விட்டார். “ஏன் ராதிகா அம்மா இல்லாத பிள்ளை ஒழுக்கமா இருக்க வேண்டாமா? அப்பறம் உன் பேரு கெட்டு போயிட்டா நாளை பின்ன என் வளர்ப்பை தான குத்தம் சொல்லுவாங்க…” என்று வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் அவளைத் திட்ட, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்லறீங்க பெரியம்மா? எனக்கு ஒன்னுமே புரியலை. நான் என்ன தப்பு செஞ்சேன்?” என ராதிகா குழப்பமாகக் கேட்க,

அவரோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஏதேதோ இது போலத் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருக்க, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. யார் என்ன பேச வந்தாலும் தடுத்து வாய்க்கு வந்ததைத் திட்டி ராதிகாவை மனதளவில் பலவீனப்படுத்தினார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் செல்வம் எரிச்சலான குரலில், “இப்ப எதுக்கு புள்ளையை போயி திட்டிட்டே இருக்க…” என கோபத்துடன் கேட்டார்.

அப்பொழுது வேதவல்லி, “அன்னைக்கு கம்பெனியில ஆயுத பூஜை கொண்டாட கூட்டிட்டு போனீங்களே அப்ப இவ அந்த புதுசா சேர்ந்த இன்ஜினியர் கூட சேர்ந்து கூத்தடிக்கிறாங்க…” என வாய் கூசாமல் பேசினார்.

ராதிகாவுக்கு பெரியம்மா சொல்லும் அந்த இன்ஜினியர் யார் என்று கூட தெரியவில்லை.

“அப்படியே ஓங்கி அறைஞ்சேனா வெச்சுக்க… புள்ளை நம்ம கண்ணு முன்னாடியே தான் இருந்தா. தாமரையும் அவளும் தான் சாமி கும்பிட எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செஞ்சாங்க… எவனோ ஒருத்தன் கூட காரணமே இல்லாம இணை சேர்த்து பேசிட்டு இருக்க…” என செல்வம் திட்டி விட்டார்.

தேவராஜனும், “ராதிகா எவ்வளவு கண்ணியமா, கட்டுப்பாடா இருப்பா. அவளை போயி இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா…” என்று அதிருப்தி காட்டினான்.

“நான் சொல்லறதை நம்பாம என்கிட்டயே சண்டைக்கு வாங்க. சரி அன்னைக்கு தான் வயசு கோளாறுல ஏதோ பண்ணறான்னு விட்டா… இன்னைக்கும் வர வழியில எவனோ ஒருத்தன் கிட்ட நின்னு பேசிட்டு வந்திருக்கா… எனக்கு ரொம்ப வேண்டியவங்க இவளை பார்த்துட்டு போன் பண்ணி சொன்னாங்க” என இஷ்டத்திற்கு அளந்து விட,

“நான் யார்கிட்டயும் நின்னு எங்கேயும் பேசலை. இப்படி யாரோ போன் பண்ணினாங்கன்னு சொல்லி தான் அதை நம்பிட்டு என்னை இவ்வளவு நேரமும் பேசுனீங்களா?” என ராதிகா கோபமாகக் கேட்டாள்.

“யார் போன் பண்ணினாங்கன்னு சொல்லு. நானும் அவங்ககிட்ட என்ன பார்த்தாங்கன்னு விசாரிக்கிறேன்” என செல்வமும் மனைவியைத் தான் அதட்டினார்.

மொத்தத்தில் அவர் சொன்ன குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை.

‘இதென்ன இந்தம்மா இப்படி அபாண்டமா பேசறாங்க?’ என தாமரை கூட வேதவல்லியின் இந்த பரிமாணத்தில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள்.

ராதிகா வேறு பெரியம்மா இவ்வளவு மட்டமாகப் பேசுகிறாரே என கலங்கி நிற்க அவளையும் தாமரை தான் சமாதானம் செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த களேபரத்தில் தாமரை அம்மா சொல்லிவிட்டுச் சென்ற திருமண விஷயத்தைக் கணவனிடம் சொல்ல மறந்து விட்டாள். ஒருவேளை சொல்லியிருக்க வேண்டுமோ?

ஆனால், வேதவல்லி அதைத் தடுக்கத் தான் இப்படி ஒரு பேச்சைத் தொடங்கி சகுனி வேலை பார்த்தார்.

வேதவல்லி எப்படி இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கினாரோ தெரியவில்லை. திருமூர்த்தியும் ராதிகாவும் காதலிக்கிறார்கள் என கதை பரப்பி விட்டு விட்டார். இது போன்ற தகவல்கள் தான் எளிதில் பரவி விடுமே! ஒன்றுமே செய்யாமல் ராதிகா தான் இதில் பாதிக்கப்பட்டாள்.

அக்கம், பக்கம், சொந்த பந்தம் எல்லாம் “ராதிகாவுக்கு அதுக்குள்ள உங்க கம்பெனியில வேலை செய்யற பையனோட கல்யாணம் பேசிட்டீங்களாமே… எங்க மகனுக்கு கேட்கலாம்ன்னு இருந்தோம்” என்று சொல்ல, செல்வத்திற்கும், மாணிக்கத்துக்கும் ஒன்றும் புரியவில்லை.

செல்வத்திற்கு இது மனைவியின் வேலையாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது. ஆனால் ஆதாரம் இல்லை. வீட்டிற்கு வந்தாலே அவரோடு சண்டை தான்! வேதவல்லி, “அவ குணம் கெட்டு திரிஞ்சா என்னை கரிச்சு கொட்டுவீங்களா?” என ஒரே ஒப்பாரி தான்!

வீட்டில் நிம்மதியே போனது. திருமூர்த்தி வேறு கிடைத்த வரை லாபம் என நினைத்தவன், “ராதிகா மேல எந்த தப்பும் இல்லைங்க சார். எனக்கு அவங்களை பிடிச்சிருந்தது. அதை இன்னும் அவங்க கிட்ட கூட சொல்லலை. வேலையில நல்ல இடத்துக்கு வந்துட்டு அம்மா, அப்பாவை கூட்டிட்டு வந்து உங்ககிட்ட முறைப்படி பொண்ணு கேட்கணும்ன்னு தான் நினைச்சேன்… அது ஏன் இப்படி ஒரு செய்தி பரவுச்சுன்னு தெரியலை…” என அப்பாவி வேஷம் போட்டான்.

இதற்கும் அவனுக்கு ராதிகா மேல் அப்படி எந்த அபிப்பிராயமும் இல்லை. முதலாளி வீட்டு மகள், பார்க்கவும் அழகாக இருக்கிறாள். படிப்பும் இருக்கிறது. அரசாங்க வேலை வாங்க வேண்டும் என்ற முனைப்புடன் அதற்காகவும் தயாராகி வருகிறாள் என்பதை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். சொத்தும் கொஞ்சம் தேறும் என கணக்குப் போட்டு அங்கே சுற்றி வரும் வதந்தியை தனக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்டான்.

ராதிகாவுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மறுத்து மறுத்து ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனாள்.

தாமரைக்கு ராதிகா மீது பெரும் நம்பிக்கை இருந்தது. அவள் இந்த போலி கதைகளை எல்லாம் நம்பவில்லை. வீட்டிலும், “அதுவே தொடங்கின மாதிரி இந்த பேச்சு அதுவே அடங்கிடும். நம்ம எதுவும் பண்ண வேண்டாம் மாமா. இதை பெருசாக்காம விட்டுடுங்க” என்று தெளிவாகத் தான் பெரியவர்களிடம் சமாதானமாகச் சொன்னாள்.