மௌனமதில் யுத்தம் ஏனடி? – 7

இவர் யார் என்று தெரியாத குழப்பம் ஒருபக்கம், என்ன இது என்னென்னவோ சொல்கிறாரே என்ற மிரட்சி ஒரு பக்கமுமாய் ஜீவனா நின்றிருக்க,

“அப்பா… ரிலாக்ஸ்…” என்று கௌதமன் தான் அவளின் நிலை புரிந்து தந்தையின் அருகில் வந்து அவரை கலைக்க முயற்சி செய்தான்.

அவன் தலையிட்டதும் மங்கையவளுக்குத் தலையே வெடிக்காத குறை தான்! ‘என்னது இவர் இவனோட அப்பாவா?’ என்று வாயை மீன்குஞ்சு போல பிளந்தாள்.

தேவராஜன் மகன் குறுக்கிட்டதைக் கூட உணரும் நிலையில் இல்லை. அவர் வெகு நாட்களாகக் காண வேண்டும் என ஏங்கிய பொக்கிஷம் அவர் கண் முன்னால் என்னும்பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.

மேலும் ஏதோ அவளிடம் பேசப் போனவரை, ‘ஐயோ! இவரு என்ன இன்னைக்குன்னு பார்த்து ஏதேதோ பேசிட்டு இருக்காரு…’ என திணறிய கௌதமன், “அப்பா…” என அழுத்தமாக அழைத்து அவரை வலுக்கட்டாயமாகத் திசை திருப்ப முயற்சி செய்தான்..

அவனை கொஞ்சம் எரிச்சலாக பார்த்தவர், “உனக்கு என்னடா இப்ப? என்னை என் மருமக கிட்ட பேச விடமாட்டியா என்ன?” என்று இடியைத் தூக்கி இறக்க, இருவரும் பேயறைந்தது போல ஆகிவிட்டனர்.

கௌதமன் சுத்தமாகத் தன்னிலை மறந்தான். இத்தனை நேரம் தந்தை ஜீவனாவிடம் பேசியதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்… அவன் காதல் சொன்னதை மட்டும் மனதில் எடுத்துக்கொண்டு அவசர வாக்குமூலமாக, “ஐயோ! அப்பா நானே இப்பதான் அவகிட்ட லவ்வை சொல்லி இருக்கேன். நீங்க வேற மருமக அது இதுன்னு அவகிட்ட பேசி வைக்கறீங்க. நான் சொன்னதுக்கே புயல் மாதிரி கிளம்பிட்டா… நீங்க இப்படி சொன்னீங்க அப்பறம் அவ சூராவளி தான் பார்த்துக்கங்க…” என்று படபடப்புடன் சொல்ல,

‘அடேய்! லூசு…’ என்றிருந்தது ஜீவனாவிற்கு. ‘அவரே ஏதேதோ பேசிட்டு இருக்காரு… இவன் வேற சம்பந்தமே இல்லாம எனக்கு பிரபோஸ் பண்ணினதை எல்லாம் சொல்லிட்டு இருக்கான். சரியான அவசரக்குடுக்கை… இப்ப இவனை யாரு குறுக்க கூப்பிட்டா…’ என நொந்து போனாள்.

இப்பொழுது மகன் பேசியதைக் கேட்டதும் தேவராஜனுக்கு முழுவதும் தெளிந்து விட்டது. “என்ன சொன்ன? என்ன சொன்ன?” என அதிகப்படி ஆர்வத்துடன் கேட்க, கௌதமன் தான் உளறிவிட்டதை எண்ணி திருதிருத்தான்.

அவனுக்கு அப்பாவிடம் அவனது காதலைச் சொல்வதில் எந்த தயக்கமோ பயமோ இல்லை தான். ஆனால், இன்னும் ஜீவனாவின் காதலைப் பெறாமல்… அதுவும் அவளின் முன்னிலையிலேயே தந்தையிடம் விஷயத்தைச் சொன்னால் அவளின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்றிருந்தது. கொஞ்சம் அவளுக்கு, அவளின் மௌனத்திற்கு பயந்தான் என்று சொல்லலாம். அந்தளவிற்கு அவளின் தொடர் மௌனம் அவனை அசைத்துப் பார்த்திருந்தது.

“அது… அப்பறம் பேசிக்கலாம் விடுங்கப்பா…” என சமாளிப்பாகக் கூற, அவருக்கு இருக்கும் பரவச நிலையில் அதெல்லாம் கவனத்தில் பதிந்தால் தானே!

“இது செம ஐடியாடா மகனே… இதையே தான் நானும் யோசிச்சு வெச்சிருந்தேன். இந்த சமயத்துல போயி ராதிகா இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கான்னு தெரிஞ்சதும் தான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…” என்று சொன்னவர்,

வேகமாக ஜீவனாவின் புறம் திரும்பி, “என்னடா சின்ன குட்டி இந்த முரட்டு பையனை கட்டிக்கிறியா? என்ன பிரச்சினைன்னாலும் நானும் உங்க அத்தையும் சேர்ந்து இவனை ரெண்டு தட்டு தட்டி வெச்சுடுவோம். இத்தனை நாள் மாமா உன்னைப் பார்க்கக் கூட வரலை… அதுக்கு பிராய்ச்சித்தம் எப்படி பண்ணன்னு கூட புரியலைடா… ஆனா ஒன்னு இனியும் ஒதுங்கி இருக்க மாட்டேன். என் தங்கச்சி அவளை பார்த்துக்குவா தான். அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு. அவளும் அதை நிரூபிச்சுட்டா… ஒரு அண்ணனா தானே அவளைத் தேடி நான் வரக்கூடாது. பொண்ணு எடுக்க போற சம்பந்தியா வரலாம் தானே? நீ உடனே கிளம்பு சேலத்துக்கு இன்னைக்கே கிளம்பறோம்… அதெப்படி தாய்மாமன் நான் இருக்கும்போது என்கிட்ட கலந்தாலோசிக்காம அவ உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்?” என ஏதேதோ பேச,

“ஐயோ சார்! பிளீஸ்…” என்றாள் ஜீவனா பொறுமை இழந்தவளாக.

தேவராஜன் அவளைக் குழப்பமாகப் பார்க்க, “பாருங்க சார் திடீர்ன்னு வந்து ஏதேதோ பேசறீங்க… எனக்கு சுத்தமா எதுவும் புரியலை. பிளீஸ் எனக்கு வேலை இருக்கு. என்னை விடுங்க…” என்று சொல்ல,

“என்னடா குட்டி சார்ன்னு சொல்லற?” என்று கேட்ட தேவராஜனின் முகமே வாடி விட்டது.

கௌதமனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா பேசியதை வைத்து ராதிகா தான் ஜீவனாவின் அம்மா என்பது புரிந்தது. ஆனால், எந்த வழியில் அவர் அப்பாவின் தங்கை என விளங்க மறுத்தது. அதோடு ஜீவனாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள் என்ற விஷயம் அவனுக்குப் பெரிய இடி! அடுத்து என்ன என்பது கூட அவனுக்கு சட்டென்று முடிவெடுக்க முடியவில்லை.

அவன் காதலைச் சொல்லிய அடுத்த சில நிமிடங்களிலேயே இத்தனை பிரச்சினை என்றால் அவனும் தான் என்ன செய்வான் பாவம்!

ஜீவனா தேவராஜனிடம், “உங்களையே நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். இப்ப வந்து என்ன என்னவோ சொன்னீங்கன்னா எப்படி? எனக்கு ஒன்னுமே புரியாம தலையே வெடிக்குது… பிளீஸ் ஏதேதோ பேசி என்னை குழப்பாதீங்க” என்றாள். இரண்டு தோள்களையும் பிடித்திருந்த அவரின் கையை விலக்கும் வழி தெரியவில்லை.

அவள் கேள்வி நியாயமானது தான். அவள் மிகவும் சிறிய வயதில் இருந்தபோது பார்த்தது. பின்பு குடும்ப சூழல், பிரிவு என வந்து இப்பொழுது தான் மீண்டும் பார்க்கிறார். கண்டிப்பாக ராதிகா குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லித்தந்து வளர்த்திருக்க மாட்டாள். அவள் கொண்ட காயம் அதிகம் ஆயிற்றே!

இப்பொழுது நாம் சின்னவளை பார்த்து உணர்ச்சி வசப்படலாம். ஆனால், அவள் பார்வையில் தான் ஒரு அந்நியன் தானே!

ஏனோ இந்த நினைவே அவருக்கு கொடும் வலியைத் தந்தது. அவரது கரங்கள் ஜீவனாவின் தோளிலிருந்து தொய்ந்து விழ, அது விழுந்த விதத்திலேயே ஜீவனா சுதாரித்து விட்டாள்.

“சார்… எனக்கு உங்களை யாருன்னு தெரியலை. அதுதான் மனசுல இருக்கிறதை கேட்டுட்டேன்” என சமாளிப்பாகச் சொன்னபடி அவர் அருகே வருவதற்குள் பிரஷர் அதிகமாகி விட்டதன் பயனாக தேவராஜன் மயங்கி சரியப்போக, “அப்பா…” என வேகமாக தாங்கிக் கொண்டான் கௌதமன்.

ஜீவனாவும் வந்து தேவராஜனை ஒருபுறம் தாங்கிக்கொள்ள, “இவருக்கு இருக்க ஹெல்த் கண்டிஷன்ல இவரு எதுக்கு இப்படி உணர்ச்சி வசப்படறாருடி…” ஏதோ குடும்ப விஷயம் மொத்தமும் அவளுக்கு அத்துபடி என்பது போல கௌதமன் அவளிடம் புலம்பினான்.

‘இவருக்கு என்ன ஹெல்த் இஸ்யூஸ்?’ என அவள் புரியாமல் விழிக்க, கெளதம் தன் தந்தையின் கார் கீயை அவருடைய பாக்கெட்டிலிருந்து தேடி எடுத்தவன், காரை அன்லாக் செய்துவிட்டு, அவரை கைத்தாங்கலாக அழைத்துப் போனான். இவள் அவசரம் புரிந்து வேகமாகச் சென்று பின்பக்க கதவைத் திறந்து பிடித்தாள்.

பின் பக்க சீட்டில் தந்தையைப் படுக்க வைத்தவன், “ஜீவி நீயும் கூட வாயேன்… கொஞ்சம் உதவியா இருக்கும்…” என்றான் பாவமாக. அவன் தந்தைக்கு பிரஷர் அதிகமானால் இதுபோல அடிக்கடி மயக்கம் வரும் தான். ட்ரிப்ஸ் ஏற்றினால் சரியாகி விடுவார். அவர் உடலுக்கு பெரிதாக எதுவும் இல்லை என்று தெரிந்தாலும் அவளை உடன் வரவழைக்கத் தான் கொஞ்சம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினான்.

ஒன்றும் புரியாத இந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் சமயம் தன்னோடு ஜீவனாவும் நிற்கட்டுமே என்று தோன்றியது. அதோடு அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள் என்னும் விஷயம் கொஞ்சம் கலவரத்தைத் தூண்டவே ஜீவனாவிடமும் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற படபடப்பு.

அவள் மௌனம் காத்தாள். அவளுக்கு அவனோடு செல்ல விருப்பம் இல்லை. அதுவும் அவனின் தந்தை வேறு தாய் மாமா அது இதுவென்று ஏதேதோ சொல்லியிருக்க அவளுக்கு எப்படி இருக்குமாம்? வேறு யாரையேனும் அழைத்துப் போக வேண்டியது தானே என மனம் முரண்டியது.

கெளதம், “பிளீஸ்டி…” என்றான் கண்களை சுருக்கி. அருகிலும் துணைக்கு அனுப்ப ஆட்கள் யாரும் இல்லை. இவர் வேறு மயங்கிக் கிடக்கிறார். இந்த சூழலில் எப்படி மறுக்க என வேறு வழியில்லாமல் காரில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளே ஏறியவளிடம் மருத்துவரிடம் பேசும் பொறுப்பையும், அவனின் அன்னை தாமரைக்கு தகவல் தரும் பொறுப்பையும் தர, கொஞ்சம் கடுப்போடே தான் செய்தாள்.

“ஜீவி… அப்பா ஏதேதோ சொன்னாங்களே… உன் முக பாவனையை வெச்சு உனக்கும் அவர் பேசின எதுவும் புரியலைன்னு தெரிஞ்சது… ஆனா, அவர் பேசினதை வெச்சு உனக்கு வேற ஏதாவது விஷயம் தெரியுமா…” என்று கேட்க, அவள் இருந்த கடுப்பில் முறைத்தாள்.

“சரி சரி… முறைக்காத… எனக்கும் புரிஞ்சு தான் இருந்தது… ஒருவேளை உனக்கு வேற எதுவும் தெரியுமோன்னு தான்…” என இழுத்தவன், “ஜீவி… அது… என்னடி திடீர்ன்னு கல்யாணம் அது இதுன்னு அப்பா பயம் காட்டறாரு… உன் வீட்டுல நிஜமாவே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களா என்ன?” என்றான் தவிப்பும், அச்சமுமாக.