ஜீவனா ஏன் தான் இந்த விருந்துக்கு வந்தோமோ என நொந்து போனாள்.
அவளை இதுவரை ஒருவரும் அடித்ததில்லை. வளர்ந்து விட்ட பெண்ணல்லவா… அவளைப் போய் ஒருவன் அடிப்பதா? அதுவும் அவள் மேல் தவறில்லாத நிலையில், முன்பின் அறியாத ஒருத்தியைக் கொஞ்சமும் யோசிக்காமல் அடிக்க அவனுக்கு எப்படி தான் மனம் வந்ததோ?
சின்ன வயதில் பெற்றோரின் பிரிவு அவளுக்கு நிறைய பக்குவங்களைத் தந்து விட்டிருந்த காரணத்தினால் அவள் மிகவும் பொறுப்பானவளாகத் தான் வளர்ந்தாள். பள்ளியிலும் மிகவும் ஒழுக்கமான பிள்ளை. அப்படி கண்டிக்க வேண்டிய அவசியமே இல்லாமல்… யாரிடமும் திட்டோ அடியோ வாங்காமல் வளர்ந்த ஒரு பிள்ளையை முன்பின் தெரியாத ஒருவன் அடித்திருக்கிறான். அவளால் அந்த நொடிகளை கடக்கவே முடியவில்லை.
இத்தனை கூட்டத்தில் யாரேனும் ஒருவர் பார்வையில் பட்டிருந்தாலும் அது எத்தனை கேவலம்?
யாரேனும் பார்த்திருப்பார்களோ என்ற காரணமில்லாத அச்சம் வேறு மனதைச் சூழ்ந்து கொண்டு திணற வைத்தது. அந்த இடம் சற்று இருளாக இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆனாலும் மனம் படபடத்தது.
அவளின் விழிகள் முறைப்புடன் மீண்டுமொருமுறை அவனை நோக்கியது.
என்ன நினைத்துக் கொண்டிருந்தானோ அவனும் இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். மிகவும் கூர்மையாக. அவளின் செயல்களை அவதானிப்பவன் போல! அடிப்பதையும் அடித்து விட்டு, எப்படி பார்க்கிறான் பார் என பொரிந்தது அவளின் உள்ளம்.
‘அவனை ஒரு முறையேனும் திருப்பி அறைய முடிந்தால்?’ அந்த நேரம் அவளின் எண்ணவோட்டம் அதுவாகத்தான் இருந்தது. பழிக்குப் பழி தவறான விஷயம் தான்! ஆனால், இங்கே அவளின் மனம் பட்ட காயத்திற்கும், அவமானத்திற்கும் இதைவிட சிறந்த மருந்து எதுவுமே இருக்காது என்று ஆணித்தரமாகத் தோன்றியது.
‘ம்ப்ச்… ஏன் கண்டதையும் யோசிக்கிற… அவனை பார்த்தாலே தெரியலை. பணத்திலேயே பிறந்து வளர்ந்திருப்பான். அவனுக்கு எல்லாம் மத்தவங்களோட உணர்வு புரியுமா என்ன? அவசரக்காரன், ஆத்திரக்காரன்… மேலே வந்து விழுந்தவங்களை கண்டிக்க துப்பில்லை… தெரியாம மோதினவ கிட்ட கையை நீட்டி இருக்கான்… அவன் லெவலுக்கு நாமளும் இறங்கணுமா? ஜஸ்ட் இக்னோர் ஹிம்… இந்த மாதிரி ஒருத்தன் உன் வாழ்க்கையில் எதிராளியா கூட இருக்க வேண்டாம்…’ என அவளின் மனம் அவளை அமைதிப்படுத்த முனைந்தது. மனம் ஆறினால் தானே!
கண்ணில் காரணமே இல்லாமல் கண்ணீர் கரைக்கட்டி நின்றது. நோகடிக்கப்பட்ட உள்ளம் ஆறுதலுக்காகத் தாயின் மடியைத் தேடியது. ஒருவன் அவளை அடித்தும் பதிலுக்கு எதுவும் செய்யாமல் வந்து விட்டிருக்கிறாள். ஏன் இத்தனை தூரம் ஒதுங்கிப் போக வேண்டும்? அப்படி ஒன்றும் தைரியமற்றவளும் இல்லையே! எது அவளை தடுக்கிறது என புரியவில்லை.
அமைதியாகக் கடந்து போகவும் முடியாமல், ஆத்திரப்படவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்துக் கொண்டிருந்தாள்.
இந்த சிந்தனையில் நேரம் கரைவதை உணர மறந்தாளோ?
அங்கு நிலைமையும் கைமீறித் தான் போய்க்கொண்டு இருந்தது. திருமூர்த்தி, சுபத்ரா இருவரும் தங்கள் சுயத்திலேயே இல்லை. மதுவின் கோரப்பிடியில் தங்களை மறந்த மயக்க நிலையில் இருந்தனர்.
இவர்கள் மூவரும் தான் இந்த பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். டிரைவர் யாரும் கூட வராத காரணத்தினால், இருவரில் ஒருவரேனும் எல்லைக் கோட்டிற்குள் நிற்பார்கள் போல என ஜீவனா தவறாக கணித்து விட்டாள்.
அவளது கணிப்பைப் பொய்யாக்கி அங்கே அவர்கள் தன்னிலையைக் கூட மறந்த நிலையில் இருந்தனர். இதில் எங்கே அவர்களை நம்பி வந்த வயதுப்பெண்ணின் நினைவு இருக்கப் போகிறது?
ஜீவனாவின் ஆத்திரத்துக்குக் காரணமான கௌதமன் தான் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
அவன் வேறு யாருமல்ல சுபத்ராவின் சொந்த அண்ணன் தேவராஜின் மகன்.
டிரைவரை அழைத்து திருமூர்த்தியின் கோர்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து அவரிடம் நீட்டி, “இவங்களை வீட்டுல சேர்த்துடு” என்று சொன்ன கௌதமனின் பார்வை வெறுப்பாக இருவர் மீதும் படிந்தது.
“ஓகே சார்…” என்ற டிரைவர் கைத்தாங்கலாக முதலில் திருமூர்த்தியை அழைத்துக் கொண்டு அவர்கள் கார் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார்.
ஓர் இடத்தில் அனைவரும் குடித்துக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருக்க, கூட்டத்தோடு இருக்க வேண்டுமே என்கிற கட்டாயத்திற்காக அவர்கள் அருகே தலையில் கை தாங்கி வேண்டா வெறுப்பாக ஜீவனா அமர்ந்திருந்தாள்.
அவளை நெருங்கிய கௌதமன், “நீ அவரோட தான வந்த?” என்றான்.
அவள் முதலில் கவனிக்கவில்லை. யாரோ யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் போல என்ற எண்ணத்தில் என்னவோ யோசனையில் இருந்தாள்.
“ஜீவனா… உன்னைத்தான்…” என்றொரு அழுத்தமான குரல்.
அவளது பெயரினை உச்சரித்ததும் யார் என நிமிர்ந்து பார்க்க, எதிரில் அவளின் கோபத்திற்கும், மூட் அவுட்டிற்கும் காரணமான அவசரக்காரன். அவனைக் கண்டதும் எரிமலையின் சீற்றம் அவளின் முகத்தினில். கோபத்தில் மூச்சுக்காற்றின் ஸ்வரம் தப்பி ஏகத்துக்கும் வேகமாக உள்ளேயும் வெளியேயும் போய்க்கொண்டிருந்தது.
இம்மியும் சட்டை செய்யவில்லை அவன். “நீ அவங்களோட தான வந்த?” என்றவன் சுட்டிக்காட்டிய திசையில் திருமூர்த்தியை கைத்தாங்கலாக அழைத்துப் போய்க் கொண்டிருந்தார் டிரைவர் சீருடையில் இருந்த ஒருவர்.
பதறி எழுந்தவள், அவரை நோக்கி செல்லப் பார்க்க, “ம்ப்ச்… நம்ம டிரைவர் தான்… அவரை காரில் ஏத்த கூட்டிட்டு போறாங்க…” என்று கௌதமன் கடுப்புடன் சொல்ல, ‘நம்ம டிரைவரா? நமக்கேது டிரைவர் மூணு பேரும் தனியா தானே வந்தோம்?’ என குழம்பினாள். பார்வை இன்னமும் தந்தையிடத்தில் தான்.
அவளின் முகபாவனை புரிந்து, “ஐ மீன்… அவங்க ரெண்டு பேரும் பிளாட்… இனி அவங்களால டிரைவ் பண்ண முடியாது. நான் தான் அவங்களை வீட்டுல விடறதுக்கு டிரைவர் அரேஞ் பண்ணியிருக்கேன்” என்றான்.
‘இவன் ஒருவேளை இங்க இருக்க ஹோட்டல் மேனேஜர்… இல்லை இந்த ஈவண்ட் ஆர்கனைசரா இருப்பானோ…’ அவளால் அந்த அளவிற்குத் தான் யோசிக்க முடிந்தது.
‘ஐயோ! இனி நாம எப்படி போறது?’ பதறியபடி நேரத்தைப் பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டி அல்லவா போய்க்கொண்டிருக்கிறது.
‘தெரியாத ஊர். இன்னும் எந்த இடங்களும் பழக்கப்படவில்லை. நேரமும் மிகவும் தாமதமாகி விட்டது. நம்பி வந்த அப்பாவும் சிற்றன்னையுமே மற்றவர் உதவியில் தான் வீடு போய் சேரும் நிலையில் இருக்கிறார்கள்… இதில் நாம் எப்படி ஹாஸ்டல் போய் சேர்வது?’ இனம்புரியாத அச்சம் மனதில் சூழ, பயத்தில் வியர்த்துக் கொட்டியது.
நெஞ்சம் படபடக்க, அதனை அழுத்திப் பிடித்தபடி யோசித்தவளுக்கு, எந்த யோசனையும் வர மறுத்தது.
அதற்குள் திருமூர்த்தியை காரில் விட்டுவிட்டு வந்த டிரைவர் மீண்டும் வந்து சுபத்ராவை போராடி அழைத்துப் போகப் பார்க்க… அவர் எழ மறுத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த சத்தத்தில் ஜீவனா வேகமாக அவ்விடம் போக, அதற்குள் அந்த டிரைவரே இன்னொரு வேலையாளின் துணையுடன் சுபத்ராவை அழைத்துப் போகத் தொடங்கி விட்டார். அந்த காட்சியே அவளுக்கு முகம் சுழிக்கும் அளவிற்கு இருந்தது.
தன்னிலை முற்றிலும் மறந்த நிலையில் அந்த அம்மா… அவரை வலுக்கட்டாயமாக இருபுறமும் தாங்கி அழைத்துப் போக இரண்டு நபர்கள்… நாகரீக தோற்றத்தில் அவர் உடை இருந்திருந்தாலாவது பரவாயில்லை, கவர்ச்சியின் எல்லைக்கோட்டைத் தாராளமாகத் தாண்டி குதித்தபடி அவரின் புடவை இருக்க இவளுக்கு அந்த நேரத்தில் என்ன செய்ய என்று கூட புரியவில்லை. முகமே சுருங்கி போய்விட்டது.